தென்னாட்டுப்போர்க்களங்கள் விக்கி
தென்னாட்டுப் போர்க்களங்கள் வாங்க
‘மங்கலஇசை மன்னர்கள்’ என்ற நூலில் ஒரு புகழ்பெற்ற நாகஸ்வரவித்வானுக்கு குழந்தை பிறக்கிறது. அவருக்கு வீட்டிற்கு வந்து குழந்தையைக் காண நேரமில்லாத அளவிற்கு தொடர் கச்சேரிகள். ஒரு நாள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு ரயிலில் கச்சேரிக்கு சென்று கொண்டிருக்கும்போது நாகஸ்வரவித்வானின் ஊரில் ரயில் நிற்கும் அந்தச் சிறியஇடைவெளியில் குழந்தையைக் கொண்டுவந்து காட்டுகிறார்கள்.
அநேகமாக இது போன்ற காட்சிகள் அன்று போர்க்களத்தில் நடந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று ‘அமைதிப்பூங்கா’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் தமிழகத்தைப் பெரும்போர்களால் அன்று உழுது போட்டிருக்கிறார்கள் மன்னர்கள். வெண்ணிப் பறந்தலை, வாகைப் பறந்தலை, கூடற் பறந்தலை என்று போருக்காகப் பறந்தலைந்திருக்கிறார்கள். எதிரி நாடுகளைக் கைப்பற்ற, எதிரியிடமிருந்து நாட்டைக் காத்துக்கொள்ள, குலப்பழி தீர்க்க என்று பலகாரணங்களால் பெரும்போர்கள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இதுபோக பெண்கொடுத்த வகையிலும், எடுத்தவகையிலும் நேர்ந்த குடும்பத் தகராறுகளை வைத்து மன்னர்கள் செய்த ஆணவப்போர்கள் வேறு.
சங்ககாலப் போர்களில் இருந்து ஆங்கிலேயர்கள் நடத்திய போர்கள் வரை நூற்றுக்கணக்கான போர்களையும், அதன் பின்னணியையும் விரித்துச் சொல்கிறார் ஆசிரியர் கா.அப்பாத்துரை தன்னுடைய ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ என்னும் நூலில். மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு. ஏதோ இன்றைய ஐபிஎல் விளையாட்டுப்போட்டிகள் போல, பிக்பாஸ் போல சேவூர் போர் ஒன்று, இரண்டு, மூன்று…….எனவும், பாண்டிய சாளுக்கியப்போர் ஒன்று, இரண்டு…பத்து.. வரை வரிசையாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். இத்தகைய பெரும்போர்ச் சமூகத்தின் நடுவே முகிழ்ந்தெழுந்தவைதான் இன்று நாம் காணும் கலைப்பொக்கிஷங்கள் என்பது மிக ஆச்சரியமான ஒன்று.
இதுவரை நாம் அறிந்திராத பல பழம்பெரும் மன்னர்களின் வரலாற்றினை விரித்துரைக்கிறது இந்நூல். பாரதப்போரில் பாண்டவர்கள் சார்பாக கலந்துகொண்ட தமிழக மன்னன் பெருஞ்சோற்றுதியன் சேரலாதனைப் பற்றிய முரஞ்சியூர் முடிநாகராயர் என்ற புலவர் பாடிய புறநானூற்றுப் பாடலை குறிப்பிடுகிறார் ஆசிரியர்.
அலங்குளைப் புரவி ஐயரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
‘அலைந்தாடுகிற பிடரி மயிரினை உடைய குதிரைகளைக் கொண்ட ஐவருடன் (பாண்டவருடன்) சினம்கொண்டெழுந்து, அவரிடமிருந்து நாட்டைக் கைக்கொண்டு அழகிய தும்பை மலர் சூடிப் போருக்கெழுந்த நூற்றுவரும் (கௌரவரும்) களத்தில் போரிட்டு அழிவுற்ற சமயத்தில் இருசாராருக்கும் பெருவிருந்து கொடுத்த அரசனே!’ எனபது இதன் பொருள். பாரதப்போரில் பெருஞ்சோறு அளித்ததாலேயே ‘பெருஞ்சோற்றுதியன்’ என்று வழங்கப்படுகிறான் இம்மன்னன். இது குறித்த மேலதிகச் செய்திகள் நூலில் இல்லை.
பஃறுளியாறு கடல் கொள்ளுமுன் அவ்வாற்றின் கரையிலே இருந்து ஆண்ட முதல் சங்ககாலத்துப் பாண்டியன் நெடியோன். பஃறுளியாறு கடல் கோளால் அழிந்த பின் புதிதாகத் தோன்றிய இமயம், கங்கைச் சமவெளியையும் கையகப்படுத்தி ‘இந்தியா’ என்று இன்றழைக்கப்படும் பகுதியை ஒரே அரசாக ஆண்டிருக்கிறான் நெடியோன் . அப்படி ஆண்ட ஒரே பேரரசனும் அவன்தான் என்கிறார் ஆசிரியர். கடலிலிருந்து தோன்றிய புதுநிலப் பகுதியாகிய சிந்து, கங்கை, யமுனைச் சமவெளி, இமயம் போன்றவற்றைத் தமிழகத்திற்குத் தந்ததாலேயே ‘நிலந்தரு திருவிற்பாண்டியன்’ என்று பெயர் பெற்றவன் நெடியோன் . இதையே
‘பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன்’
என்று சிலப்பதிகாரமும்
‘தென்குமரி வடபெருங்கல்
குணகுட கடலா வெல்லைத்
தொன்று மொழிந்து தொழில்கேட்ப’
என்று ‘மதுரைக் காஞ்சி’யில் மாங்குடி மருதனாரும் கூறியுள்ளனர்.
கடல்கோளால் தப்பி வந்த அகதிகளை இமயம்வரை குடியமர்த்தி இந்திய நிலப் பகுதி முழுதும் தமிழ் ஒலிக்கச் செய்திருக்கிறான் பாண்டியன் நெடியோன். பாரதம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆண்டதாக இதிகாச புராணங்களில் கூறப்படும் ‘பரதன்’ இவனே என்றும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர். இந்தியப் புராணங்களில் காணப்படும் ‘ஆதி மனு’ வரலாறு மட்டுமின்றி, விவிலியத்தில் கூறப்படும் ‘நோவா’ வரலாறும், அது போன்ற பிற இனங்களின் ஊழி வெள்ளக் கதைகளும் இவனுடைய பழம்பெரும் புகழ் மரபில் வந்தவையே என்று உலகப்பெரும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் என்கிறார் ஆசிரியர்.
மேலும் அவன் மன்னன் மட்டுமல்ல, கடல் மறவன், பரதவன். முதன்முதலாக கடல் கடந்து படை செலுத்தி கடாரம் கொண்டது இவனே.
‘வானியைந்த இருமுந்நீர்ப்
பேஎநிலைஇய இரும்பெளவத்துக்
கொடும்புணரி விலங்கு போழ–
சீர்சான்ற உயர்நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ!’
என்று தம்முடைய காலத்திலும் பழம்பெரும் செய்திகளாக விரித்துரைக்கிறார் மாங்குடி மருதனார்.
‘உயர் நெல்லின் ஊர்’ சாவகம் அல்லது சுமத்ராத் தீவிலுள்ள சாலியூர் என்கிறார் ஆசிரியர். சீர்விசயப் பேரரசின் (Srivijaya Empire) தலைநகரான ‘பாலம்பாங்’ (மலேசியா) கின் அருகில் உள்ளது இந்த ‘சாரி’ என்றழைக்கப்படும் சாலியூர். முதலாம் இராசேந்திரசோழன் கடாரம் கொண்டபோது அவன் எதிர்கொண்ட சீர்விசய மன்னன் சீர்மாற சீர்விஜயோத்துங்கன். ‘மாற’ என்பதிலிருந்து அவன் பாண்டியர் வழி வந்தவன் என்று தெரிந்து கொள்ளலாம். அவர்கள் கொடியும் மரபுக்கேற்ப மீன்கொடியாகவே இருந்தது. வடிம்பலம்ப பாண்டியன், முந்நீர் விழவின் நெடியோன் போன்ற பெயர்கள் கடற்பேரரசன் என்ற முறையில் கடல் கடந்த நாடுகளில் அவன் நடத்திய கடல் விழாக்களைக் குறிக்கின்றன. அதில் பாறையில் அவன் தன் அடிகளைப் பொறித்து அதன் மீது கடலலைகள் வந்து அலம்புமாறு செய்ததாக அறிகிறோம். அந்நாட்டில் இன்றும் முடிசூட்டுவிழா மரபாக உள்ள ஆற்றின் நடுவே உள்ள பாறையில் நீர் தொட்டுச் செல்வதுபோல் கால்தடம் பதிக்கும் விழா இதன் தொடர்ச்சியே என்கிறார் ஆசிரியர். நெடியோன் மற்றும் தொல்காப்பியர் காலங்கள் கி.மு.500 க்கும் பல நூற்றாண்டுகள் முன்னதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பின்னாளில் இமயத்தில் தடம் பொறித்த ‘இமயவரம்பன்’ நெடுஞ்சேரலாதனை வாழ்த்திப்பாடும்போதும்,
‘ஏம மாகிய சீர்கெழு விழவின்
நெடியோன் அன்ன நல்லிசை
ஓடியா மைந்த!’
என்று நெடியோனின் புகழை நினைவூட்டி அதற்கு அவன் உரியவனாகட்டும் என்று ‘பத்துப்பாட்’டில் வாழ்த்திப் பாடுகிறார் குமட்டூர்க் கண்ணனார்.
நெடியோன் போன்ற பழங்கால அரசர்களை எதிர்த்துப் போரிட்டவர்கள் யார் என்று நூல் குறிப்பிடவில்லை. அநேகமாக அவர்கள் உதிரி இனக்குழுக்களாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் அது பேரரசுகள் உருவாகியிருக்காத காலம். எனவே புது நிலங்களை ஆக்ரமித்து குடிகளை அமர்த்துவதே ஆகப்பெரும் சவால். அந்த வகையில் புது நிலங்களைப் பண்படுத்தி மக்களை விதைத்து, பின்னாளில் பேரரசுகள் தோன்றக் காரணமாக இருந்தவன் நெடியோன்.
தமிழகம் செய்த முதற்பெரும்போராக ஆசிரியர் கூறுவது செருப்பாழிப் போர். மைசூர் வரை தன்னுடைய எல்லையை விரிவு படுத்தியிருந்த அசோகனின் மௌரியப்பேரரசு தொடர்ந்து சேர,சோழ,பாண்டியர்களை தொல்லை செய்து வந்தது. ஆங்காங்கிருந்த குறுநில மன்னர்களோடு மோதி வெற்றி பெற்றபோதிலும் அதற்கு கடும் எதிர்ப்பும் இருந்திருக்கிறது. இதை உணர்ந்துகொண்ட சோழப்பேரரசன் இளஞ்சேட்சென்னி சோழநாட்டெல்லையிலேயே பெரும்படையோடு எதிர்கொண்டு மௌரியப்படைகளை முறியடித்தான். அதோடு விடாமல், துளுவ (குடகு) நாட்டுக்குள் புகுந்த அவர்களுடைய படையை விடாது துரத்திச்சென்று, அவர்கள் ஒளிந்துகொண்ட பாழிக்கோட்டையையே தரை மட்டமாக்கினான். அசோகன் சமயப்பற்றைக் கைக்கொள்ள, தமிழகத்தைப் போரால் வெல்லமுடியும் என்ற நம்பிக்கை இதன் மூலம் தகர்ந்ததே, முக்கியக் காரணம் என்கிறார் ஆசிரியர். செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியின் வெற்றி இடையன்சேந்தன் கொற்றனாரால் பாடப்பட்டது.
இளஞ்சேட்சென்னியின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு என்றும் சிபி, முசுகுந்தன், காந்தன், தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் முதலியோர் அவனுக்கு முந்தைய சோழ அரசர்கள் என்றும், அவனுக்குப்பின் மனுநீதிச்சோழனும் முதலாம் கரிகாலனும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டினர் என்றும், புகழ்பெற்ற இரண்டாம் கரிகாலன் கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்றும் முனைவர் ராசமாணிக்கனார் கூற்றாகக் கூறுகிறார் ஆசிரியர்.
களப்பிரர் என்போர் கடலோரமாக முத்திசையிலும் வளர்ந்த தமிழ் நாகரிகத்தின் ஒதுங்கிவிட்ட, திருப்பதிக்கு வடக்கேயுள்ள காடுகளில் ஆடு,மாடுகளை மேய்த்து வாழ்ந்த தமிழின மலங்குடி மக்களே என்கிறார் ஆசிரியர். களப்பிரரின் குடியெழுச்சி கி.பி.3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரை. ஒவ்வொரு நூற்றாண்டுக்கு ஒரு பேரரசாக முறையே சோழ,பல்லவ,பாண்டிய அரசுகளை அடிபணியவைத்து தமிழகத்தை முந்நூறாண்டுகள் ஆண்டனர். ஆறாம் நூற்றாண்டில்தான் பல்லவன் சிம்மவிஷ்ணு ஒரு புறமும் பாண்டியன் கடுங்கோன் மறுபுறமுமாக களப்பிரரைத் துரத்தியடித்து தத்தம் பேரரசுகளை நிலைநாட்டிக்கொண்டனர். இச்செயலை இருவரும் ஒன்றுபட்டே செய்திருக்கலாம் என்று கருதப் படுகிறது. அதற்கடுத்த மூன்று நூற்றாண்டுகளும் பாண்டிய பல்லவப் போட்டியாகவே இருந்திருக்கிறது. சிற்றரசர்களாக ஆட்சி செய்த சோழர்களும், வடக்கில் சாளுக்கியரும் தெற்கில் கங்கரும் தவிர கடம்பர்,பாணர்,வைடும்பர், நுளம்பர், தெலுங்கச் சோடர் போன்றோரும் ஒவ்வொரு தரப்பிலும் பங்கு கொண்டனர். சாளுக்கியர்களை வடக்கே சிந்து கங்கைச் சமவெளியில் 4-5 ஆம் நூற்றாண்டுகளில் குப்தப் பேரரசும், 7 ஆம் நூற்றாண்டில் ஹர்ஷரின் தானேஸ்வரப் பேரரசும் இருந்தன. கரிகாலனும், சேரன் செங்குட்டுவனும் வடக்கே சென்று வெற்றிக்கொடி நாட்டியதுபோல வெற்றிஉலாப் புறப்பட்ட சமுத்திரகுப்தனை கி.பி.4 ஆம் நூற்றாண்டிலிருந்த பல்லவமன்னன் விஷ்ணுகோபன் காஞ்சியில் துரத்தியடித்திருக்கிறான். மூன்று முதல் ஏழாம் நூற்றாண்டுவரை களப்பிரர் – சோழர்,களப்பிரர் – பல்லவர், களப்பிரர்-பாண்டியர், ஹர்ஷ-சாளுக்கியர், சாளுக்கியர்-பல்லவர்,பல்லவர்- பாண்டியர் போன்று பலதிசைப் போட்டிகளும், அதனால் ஏற்பட்ட போர்களும், பேரழிவுகளுமாக இருந்திருக்கிறது.
கல்வெட்டுகள் மன்னர்களின் வெற்றிகளைப் பற்றி மட்டுமே பேசுகின்றன. மகேந்திரவர்மனின் கல்வெட்டு புள்ளலூரில் சாளுக்கியர்களை பல்லவர்கள் முறியடித்த வெற்றியை மட்டுமே பேசுகிறது. புலிகேசியின் ‘ஐஹொளே’ கல்வெட்டுகள் பல்லவர்களிடமிருந்து சாளுக்கியர்கள் வேங்கை நாட்டினை (கிருஷ்ணா கோதாவரிக்கு இடைப்பட்ட பகுதி) வெற்றிகொண்ட நிகழ்வைப் பேசுகிறது. நடந்தது என்னவென்றால் சாளுக்கியப் படைகள் கங்க மன்னன் துர்வினீதனோடு கூட்டாக பல்லவ நாட்டைத் தாக்கி சூறையாடியிருக்கிறது. தென்திசையில் சோழ,பாண்டியப் படைகளும் வடக்கே சாளுக்கியப்படைகளும் ஒருங்கே தாக்கியதில் மகேந்திரவர்மன் காஞ்சிக் கோட்டைக்குள் சரணடைய நேர்ந்தது. இதனைப் பயன்படுத்தி சாளுக்கியர்கள் பல்லவர்களின் வடஎல்லையிலிருந்த வேங்கை நாட்டைக் கைப்பற்றினர். ஆனால் முடிவில் கோட்டையை விட்டு வெளியே வந்த மகேந்திரவர்மன் புள்ளலூரில் முகாமிட்டிருந்த சாளுக்கியப்படைகளைப் போரிட்டு துரத்தியடித்தான். துர்வினீதனின் கல்வெட்டு இரண்டுபக்க வெற்றி தோல்விகளையும் காட்டுகிறது.
முதலாம் கரிகாலனும் பெருஞ்சேரலாதனும் மோதிய வெண்ணிப் பறந்தலைப் போரில் பெருஞ்சேரலாதனுக்கு முதுகிலும் காயம் பட்டுவிட்டது. ‘முதுகிற் புண்’ என்பது கோழமையின் சின்னம். ஆனால் உண்மையில் அப்படி அல்ல என்ற போதும் அப்படி ஒரு பேச்சுக்கு இடமேற்பட்டது கண்டு,போரை நிறுத்தி வடக்கிருந்து மானத்துடன் உயிர்விடத் துணிந்தான் சேரன்.
மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப
கரும்பார் தேறல் சுற்றம் மறப்ப
உழவர் ஓதை மறப்ப, விழவும்
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப,–
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன் (புறம் 65)
என்று சேர நாட்டு நிலையையும் மன்னன் விழுமிய நிலையையையும் புறநானூற்றுப் பாடலில் நம் மனக்கண் கொண்டு நிறுத்துகிறார் கழாத்தலையார்.
போர் நடந்த வெண்ணியைச் சேர்ந்த பெண்பாற் புலவர் ஒருவர் கரிகாலனின் வெற்றியைப் பாடி இன்னும் ஒருபடி மேலாக மானம் நாடி மாளத் துணிந்த சேரனின் நிலையையைக் கொண்டாடுகிறார்.
‘நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே,
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகமெய்திப்
புறப் புண் நாணி வடக்கு இருந்தோனே!’ (புறம் 66)
சேரன் வடக்கிருந்து உயிர் விடத்துணிந்த செய்தி தமிழகம் எங்கும் பரவ, மன்னனுடன் வடக்கிருந்து உயிர்விடும் பேற்றினை அடைய சான்றோர் பலர் போர்க்களத்திற்கு வந்து குவிந்தனர் என்று பாடுகிறார் மாமூலனார்.
வேறொரு போரில் கணைக்கால் இரும்பொறை போரில் பிடிபட்டு சிறையிடப்படுகிறான். சிறையில் குடிநீர் கேட்கிறான். காவலர்கள் கொடுக்காமல் தாமதம் செய்கிறார்கள். பட்டினி கிடந்து மானத்தோடு சாக முடிவெடுத்து வரலாற்றில் நிலைபெறுகிறான். இவனும் சேரமன்னனே.
போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடுவதும், பதுங்குவதும் ‘ராஜதந்திரமா’க மனதளவில் கூட ஏற்றுக்கொள்ளப்படாதிருந்த காலம் அது. போரென்றால் ‘வெட்டிமடிந்து வீரசொர்க்கம்’ என்பது இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சோழன் வேம்பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி மற்றும் குடக்கோ நெடுஞ்சேரலாதன் இடையே நடைபெற்ற போரின் முடிவில் ஒரே ஒருவர் கூட மிஞ்சவில்லை. இரண்டு மன்னர்களின் தேவியரும் அவரவர் கணவர் மார்பில் விழுந்து அழுது புலம்பியதே நடந்தது. வெற்றி கூற்றுவனுக்கும் கழுகு,பருந்துகளுக்குமே கிட்டியது என்கிறார் ஆசிரியர்.
எல்லா மன்னர்களுக்கும் காலம் கடந்த புகழ் தேவைப்பட்டிருக்கிறது. தென்நாட்டு மன்னர்களுக்கு வடதிசைப் படையெடுப்பு, இமயத்தில் கால்பதித்தல் முதலியன. வடநாட்டு மன்னர்களுக்கு தென் திசைப் படையெடுப்பு. ‘புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகை வேரொடு சாய்ப்போம்’ போன்ற வரிகளைப் பாடுவதை விட ‘பரணி’ பாடுவது நிறைய பணம் தந்திருக்கிறது புலவர்களுக்கு. மன்னனின் எடைக்கு எடை தங்கம். கிராமங்கள் என்று பெரும் பரிசுகள். எதிரி மன்னன் வாரிசுகள் மீது போர்செய்வதற்காகவே பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மன்னர்கள். எதிரிப் படையினரிடம் தலைகொடுக்கவே பிள்ளை பெற்றிருக்கிறார்கள் மக்கள். போருக்கு நடுவே கொஞ்சம்போல வாழ்வு. அன்றைய போர்ச்சூழலில் மனிதன் நாற்பது வயதுவரை உயிர்வாழ்வதே சாதனைதான். குழந்தை மணம், பலதார மணம் போன்றவற்றை அந்தப் போர்ச்சூழலின் பின்புலத்திலேயேதான் புரிந்துகொள்ளவேண்டும் போல. அறமீறலின் மொத்த உருவமாய்த் திகழ்ந்திருக்கிறார்கள் மன்னர்கள். அவன் வீட்டின் மாமரத்தின் கிளையிலிருந்து ஆற்றினுள் விழுந்த பழம் அடித்துச் செல்லப்படுகிறது. அதை ஒரு சிறுமி எடுத்துத் தின்றுவிட்டாள் என்பதற்காக அவளைக்கொலை செய்திருக்கிறான் ‘பெண் கொலை புரிந்த’ நன்னன். இத்தனைக்கும், ஈடாகப் பெரும் செல்வம் கொடுப்பதற்கு அக்குழந்தையின் பெற்றோர்கள் தயாராக இருந்தும் ஏற்றுக்கொள்ளாமல் புரிந்த கொலை அது. எறிபறந்தெடுத்தல், நீர்நிலை உழந்தெடுத்தல் போக எதிரி நாட்டுப் பெண்டிரின் சிகையினைக் கொண்டு பிரிசெய்து யானையை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். அரிதாக அசோகன், கண்டராதித்தன் போல மெய்மை நாட்டமோ, மகேந்திரவர்மன் போல கலைநாட்டமோ கொண்ட மன்னர்கள் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பின்பற்றியவர்கள்தான் மிகக்குறைவு.
அன்றைய அறமீறலுக்குச் சற்றும் குறைந்தவையா இந்த இருபதாவது நூற்றாண்டில் நடந்த யூதர் இன ஒழிப்பும், ஜப்பான் மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சும், இலங்கை தமிழினப் படுகொலையும், இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாலஸ்தீனப்போரும். இன்றும் ‘பட்ஜெட்’ டில் ராணுவத்திற்கே பெரும் நிதி ஒதுக்கப்படுகிறது. இந்தியக் குடியரசு தினவிழாவில் அண்டை நாட்டுத் தலைவரை சிறப்பு விருந்தினராக அழைத்து நம் ராணுவத் தளவாடங்களைக் காட்டி பயமுறுத்தும் நிகழ்ச்சி வருடம்தோறும் நடந்து வருகிறது. இஸ்ரேல் தருகிற திடக்கழிவு மேலாண்மைத் தொழில் நுட்பத்தை விட, அவர்களுடைய ஏவுகணைத் தொழில் நுட்பத்தை வாங்கவே இன்று பல நாடுகளும் போட்டி போடுகின்றன. கால்பந்து விளையாட்டில் இன்றும் வீரர்கள் ‘கோல’டித்துவிட்டு காட்டுகிற வெறியும், உடல்மொழியும் அன்றைய சோழனின் தலைகொண்டு பந்தாக உதைத்து விளையாடிய வீரபாண்டியனையும், ‘பாண்டியன் தலைகொண்ட கேசரி’யான சோழனையும் நினைவுபடுத்துவதாகவே உள்ளது.
யார் யாருடன் எப்படியெல்லாம் போர்செய்தார்கள் என்று போரின் நுண்விவரணைகளைச் சொல்லும் ‘சஞ்சய’ப் பார்வையோடு எழுதப்பட்ட நூலல்ல. போரின் காரணங்களையும் ஓரளவு பின்புலத்தையும் கூறும் பரந்துபட்ட வரலாற்றுப் பார்வையோடு எழுதப்பட்ட நூல். கே.கே.பிள்ளையின் ‘தென்னிந்திய வரலாறு’ நூலோடு இணையாகப் படிக்கக் கூடியது இந்நூல்.
கிருஷ்ணன் சங்கரன்