பகடை பன்னிரண்டு

”பத்து பவுண்ட் ஏறின பிறகு ஆம்புளைங்க வரிசையிலே நிக்கிறாங்க” விளம்பரம்.

”பத்து பவுண்ட் ஏறின பிறகு ஆம்புளைங்க வரிசையிலே நிக்கிறாங்க” ஒரு விளம்பரம்.

என் அண்ணாவுக்குப் பெண்பார்த்த கதையை நாற்பதாண்டுகளுக்கு முன் பெரியம்மா சொன்னார். பெண்ணுக்கு கழுத்தில் நெக்லஸ் போட்டால் பதிந்து நிற்கவில்லை. கழுத்தெலும்பின்மேல் குழித்துறை பாலம் போல நெக்லஸ் நின்றது.வேண்டாம் என்று சொல்லிவிட்டார். நினைத்ததுபோல குண்டான அண்ணிதான் வந்தார்.

“நெக்லஸ் போட்டா வரைஞ்சு வச்சது மாதிரி பதிஞ்சிருக்கணும்…”என்றார் பெரியம்மா. அப்படித்தானே அத்தனை கோயில்சிலைகளிலும் இருக்கிறது?. கழுத்தெலும்பை எந்த கோயில்சிலையிலாவது செதுக்கியிருக்கிறதா என்ன? எந்தக் கவிஞனாவது பாடியிருக்கிறானா?

கழுத்தெலும்புக்கு தமிழ்ப்பண்பாட்டிலேயே இடம்கிடையாது. அக்காலப் பெண்களுக்கு கழுத்தெலும்பு உடைந்தால் சிகிழ்ச்சையே கிடையாது, ஏனென்றால் சித்தமருத்துவப்படி அப்படி ஒரு எலும்பே கிடையாது.

என்னது குண்டாயிட்டியா? இருபது பவுண்டு குறைச்சிரு கண்ணம்மா” இன்னொரு விளம்பரம்

ஆனால் பத்தாண்டுகளுக்கு முன் ஓர் அண்ணா புலம்பினார். அவர் மகளுக்கு பையன்பார்த்தபோது. “பெண் கொஞ்சம் குண்டு. அதனாலே வேண்டாம்கிறாங்க. நாயர் பெண் குண்டாத்தானே இருக்கும்? என்ன அநியாயம் பண்றானுங்க” அவர் அம்மா சட்டையில் பித்தான் போலத்தான் வாசல்களுக்குள் நுழைவார்.

சம்பா அரிசிச்சோறில் தேங்காய் கறிவிட்டு சாப்பிட்டால் வேறுவழியே இல்லை. ஆயுர்வேத மருந்துகள் எல்லாமே நெய்யில் செய்பவை. மானசீகமாக மோகன்லாலுக்கு இணையாக நினைத்துக்கொண்டாலும் எடை ஏறும்.ஏஷியாநெட் பார்ப்பதும் குண்டாக்குகிறது என்பது பொதுக்கூற்று.

அக்காலத்தில் கல்யாணத்திற்கு முன்பு கல்லாயணரக்ஷை என்னும் ஆயுர்வேத சிகிழ்ச்சை உண்டு. பெண்ணுக்கு பத்துகிலோ கூட்டும் சடங்கு. அதன்பின் பிரசவரக்ஷை. மேலும் பத்துகிலோ. பதினான்கு பதினைந்து பெற்றுக்கொள்வார்கள். கல்யாணரக்ஷை தொடங்கும்போதே எழுபதுகிலோ இருப்பார்கள். குண்டான பெண்களை மேலும் குண்டாக்கிக் காட்டுவது பழைய முண்டும்நேரியதும் என்னும் ஆடை. அதை அணிந்தால் கதகளி வேடத்துக்கு உகந்த பின்னழகு அமையும்.

”என்னது எளைச்சிட்டியா? ரப்பர் வச்சுக்கோ செல்லம்” விளம்பரம்

இப்படி அழகியல் மதிப்பீடுகள் மாறுவது எப்படி? அதை எங்கோ எவரோ முடிவுசெய்கிறார்கள். இலுமினாட்டிகளாக இருக்கலாம். வேற்றுலகவாசிகளாக இருக்கலாம்.எகிப்திய பிரமிடுகளுக்குள் உறையும் மர்மமான சக்திகளாக இருக்கலாம். ஆனால் ஏதோ நடந்துகொண்டிருக்கிறது. பத்துப்பதினைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எல்லாமே மாறிவிடுகின்றன.மாற்றிவிடுகிறார்கள்.

ஆண்களுக்காவது சட்டைதான் மாறுகிறது. மிஞ்சிப்போனால் மயிர் மாறுகிறது. நானெல்லாம் ஆட்டுக்காது சட்டைபோட்டு கேரா வைத்து ஸ்டெப் கட்டிங் அடித்து திரிந்தவன்தான். ஆனால் மூக்கு குத்திக்கொள்ளுதல், அலகுகுத்திக்கொள்ளுதல் போன்ற பேஷன்கள் இல்லை. பதினாறுவயதினிலே வெற்றிபெற்றபோது எவரும் ஒற்றைக்காலை உடைத்துக்கொள்ளவில்லை. பெண்களுக்குத்தான் ஆளே மாறவேண்டியிருக்கிறது. மாறாத பெண்களுக்கு கெடுபிடிகள், ஏளனங்கள். வெளியே நடமாட முடியாது.

”வெக்கவேண்டிய எடத்திலே வைக்கணும்” விளம்பரம்

அந்த முடிவுகளை அவர்கள் எப்படிச் செயல்படுத்துகிறார்கள்? பாடநூல்கள், அரசியல், மதம் வழியாக அல்ல. விளம்பரங்கள் வழியாகத்தான். சென்ற நூறாண்டுகளில் விளம்பரங்கள் வழியாக பெண்களிடம் அவர்களின் உடல் எப்படி இருக்கவேண்டும், அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். பெண்ணை நோக்கிச் சொல்லப்படுவனவற்றில் பெரும்பகுதி இதுதான். அரசியலோ தத்துவமோ அல்ல. இப்படி இரு…

”வீரமா இருக்கணும் கண்ணம்மா” விளம்பரம்

சரி, அதை ஏன் பெண்கள் கேட்கிறார்கள். மிக எளிமையானது. அதை பெண்ணுரிமை என்றபேரில் சொன்னால்போதும். திருப்பூரில் பனியன் துணி விற்பனையில் ஒரு சரிவு வந்தபோது லெக்கிங்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது, ஆமாம், பெண்ணுரிமையின் பேரில். அதை பழையபாணி ஆண்கள் கண்டிக்க புதுமைப்பெண்கள் அணிய, நவீன ஆண்களுக்கு நல்ல லாபம். அதற்கு முன் நைட்டி என்னும் இரவுடைகள்.

இதற்கு இட்லி டெக்னிக் என்று பெயர். சின்னப்பிள்ளைகள் இட்லி சாப்பிடாது. ஊட்டிவிட்டால் துப்பிவிடும். சைதன்யாவின் முன் இட்லியை வைத்து “தொட்டா கைய முறிச்சிருவேன். பேசாம இரு” என்று சொல்லிவிட்டு அரைமணிநேரம் கழித்து வந்து பார்த்தால் இட்லி காலியாக இருக்கும். சவால்விடும் முகத்துடன் செல்லம் அமர்ந்திருக்கும். நாலைந்து இட்லி கூட ஊட்டிவிட முடியும். “மறுபடியும் சொல்றேன் பாப்பு, இட்லி மேலே கையை வைக்காதே. ஆமா”

”பொறியிலே மாட்டிக்காதடா மாப்ள” விளம்பரம்

பெண்களை போட்டு சுழற்றி விளையாடியிருக்கிறார்கள் மன்னன்கள். பழைய விளம்பரங்களில் ’குண்டாக இருந்தால் நீ எவ்ளவு அழகி தெரியுமா? நீ மட்டும் குண்டாக இருந்து பாரு, அவனவன் செத்திருவான்”. அதன்பின் அடுத்த விளம்பரம் “குண்டாக இருக்கியா? அழகே இல்லியா? சீச்சீ பைத்தியம், இதுக்கா கவலைப்படுறே? இந்தா மெலியுறதுக்கான வழிகள்”

சரி என மெலிந்தால் “என்ன ஒட்டுமொத்தமா மெலிஞ்சுட்டே? நல்லாவே இல்லியே.ஒரு பேச்சுக்குச் சொன்னா அப்டியே மெலிஞ்சுடறதா? ஆம்புளைங்க உன்னை பாக்கவேண்டாமா? இந்தா பஞ்சு வச்சு பெரிசாக்கிக்கோ”.

ஆனா சாயங்காலம் ரெண்டு பெக்குக்கு மேலே நாலு சாத்து சாத்தினா அவள்களுக்கு புடிக்கும்” விளம்பரம்

கூந்தலை சுருட்டும் எந்திரங்கள் விற்பனை உச்சமடைந்தபின் சுருண்ட கூந்தலை இஸ்திரிபோட்டு தேய்த்து குச்சியாக்கும் இயந்திரங்கள். பெண் என்றால் மெல்லியலாள் என ஒரு விளம்பரம், கொஞ்சநாள் கழித்து “பொம்புளைன்னா ரஃப்பா இருக்கவேணாம்? என்ன நீ?”என்று இன்னொரு விளம்பரம்.

இந்தியாவில் “மின்னும் சிவப்பழகை உமதாக்கும்” கிரீம். அமெரிக்காவில் “வெயிலில் அழகாக கருமையை அடையும்” பொருட்டு பூசப்படும் கிரீம். இரண்டும் ஒரே கம்பெனியின் ஒரே கிரீம் என்பது புரிந்துகொள்ளத் தக்கதுதான்.எங்களூரில் அக்காலத்தில் அரசு மருத்துவமனையில் வயிற்றுப்போக்கு காய்ச்சல் எல்லாவற்றுக்கும் ஒரே மிக்சர்தான் மருந்து. மனச்சள்ளைக்குக்கூட கிழவிகள் அதை வாங்கிக்குடிக்கும்.

 பொம்புளைங்கள்லாம் திறந்துகிடவே முடியாது, அவ்ளோ ஸ்ட்ராங்!- விளம்பரம்

இப்போதெல்லாம் “பெண்ணுரிமை பேசுங்க தோழி. அதான் இப்ப பேஷன். ஒரு சின்ன புக்கு அனுப்பிச்சிருக்கேன், படியுங்க. பெண் ஏன் அடிமையானாள். பைத வே, உங்க லிப்ஸ்டிக் நல்லாருக்கு” என்பது ஒரு மரபு

கொஞ்சநாள் கழித்து “அடிமைப்பெண்ணே அழகு. ஆனல் ஆலன் தொந்திஸ் என்னும் என்னும் ஆய்வாளரின் அரிய கருத்து” சந்தைக்கு வரலாம்.அதை நம்மூர் ஆய்வாளர்கள் கட்டுரைகளாக எழுத, ஓய்வாளர்கள் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களாக பரப்ப, அவை கல்ட்களாக ஆகி, ஃபேஷன்களாக உருமாறி ,டாபூக்களாக நிலைகொள்ளலாம்.

உன்னாலே முடியும் தங்கச்சி- விளம்பரம்

“டேய், நான் என் பாட்டுக்கு இருக்கேன், இப்ப இன்னாங்கிறே?”என்று வரலாற்றில் எந்தப் பெண்ணும் இதுவரை கேட்கவில்லை. கேட்டால் அந்தக் கேள்விக்கு ஏற்ற பொருட்களை தயாரித்து விற்கவேண்டியதுதான்.

“நீ உன் பாட்டுக்கு இரு தாயி. ஆனா இந்த ஸ்டாக்கிங்ஸை இப்டி போட்டா நீ உன் பாட்டுக்கு இருக்கிற டைப்புன்னு நாலுபேருக்கு தெரியுமே? அதுக்குச் சொன்னேன்”.

முந்தைய கட்டுரைரிஷிமூலம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி எஸ்.என்.நாகராஜன்