ஒரு மலையாளப் படத்தில் சர்ச் உதவியாளரான இன்னொசெண்ட் ஒரு கிறிஸ்து சிலையை தூக்க முயல அது சரிந்துவிடும். அவர் தூக்கியபடியே முனகுவார். “ஆசாரியானா அந்த வேலையச் செஞ்சுட்டு பேசாம இருந்திருக்கணும்…”.
அத்தகைய ஏராளமான வேடிக்கைகள் மலையாள சினிமாவிலுண்டு. பாதிரியாராக வந்து காமெடி செய்தால்தான் நல்ல நகைச்சுவை நடிகர் என்றே பெயர் அமையும். ஜெகதி ஸ்ரீகுமார் மட்டும் பத்துப்பதினைந்து முறை பாதிரியாராக வந்திருக்கிறார். அடுத்தபடியாக நெடுமுடி வேணு.
”இரு இந்த புக்க படிச்சுட்டு வந்துடறேன்”
ஒருமுறை ஒரு சினிமாவைப் பார்த்துவிட்டு நண்பர் அலெக்ஸ் கேட்டார், கிறிஸ்து மற்றும் பாதிரியார் பற்றிய ஜோக்குகள் மலையாள சினிமாவில் மலிந்துகிடக்கின்றன. ஏன் தமிழில் இல்லை? ஏன் சாத்தியமே இல்லை என்ற நிலை இருக்கிறது?
நான் சொன்னேன், அங்கே கிறித்தவம் வந்து பல தலைமுறைகளாகிறது. பெரும்பாலானவர்கள் பத்து தலைமுறை கிறித்தவர்கள். ஆகவே அவர்களுக்கு ஒரு வகையான இயல்புநிலை உள்ளது. இங்கே அது புதியமதம். ஆகவே ஆவேசமாக உள்ளது. அத்துடன் இங்குள்ள முற்போக்காளர்கள் பொதுவாக மரமண்டையர்கள், நகைச்சுவையை மதவன்மம் என்று அவர்களிடம் சொல்லி தூண்டிவிட்டுக்கொண்டே இருப்பார்கள்.
நேர்ப்பேச்சில்கூட அங்கே கிறிஸ்தவர்கள் ஏசுவையும் கிறிஸ்தவக் கொள்கைகளையும் நக்கலடிப்பார்கள். இரண்டுநாட்களுக்கு முன் ஒரு மலையாள இதழாளர் என்னை அழைத்தார். என் எண்ணை அளித்தேன். “save செய்தாச்சா?”என்றேன். “You are saved. இனி நீ கிறித்தவன்” என்றார்.
”சொர்க்கத்திலேதான் இனிமே நிரந்தரமா இருக்கப்போறான்னு பலமுறை சொல்லிட்டேன். இருந்தாலும் ஒரு செல்பி எடுத்து வைச்சுக்கிடறேன்னு சொல்றான்”
என்றும் நான் அகத்தே கிறிஸ்தவனும்கூட. இணையத்தில் கிறிஸ்துவச் செய்திகளைப் பார்ப்பது, பாடல்களைக் கேட்பதும் எனக்குப் பிடித்தமானவை. கிறிஸ்துவும் புத்தரும் அணுக்கமானவர்கள். வேண்டிக்கொள்வதும் உண்டு. அதிலும் கொரோனா நாட்களில் வேறுவழியில்லை.
கிறிஸ்துவை மேலும் அணுக்கமாக ஆக்குவது அவர் பற்றிய நகைச்சுவைகள். இணையத்தில் கிடைக்கும் கிறிஸ்து பற்றிய நகைச்சுவைகள் இரண்டுவகை. நாத்திகர்களால் உருவாக்கப்பட்ட எதிர்மறைத்தன்மையும் கசப்பும் கொண்ட நகைச்சுவைகள். கிறிஸ்துவின் மேல் பிரியத்துடன், அவரை சாமானியர் எதிர்கொள்ளும் முறைமீதான நையாண்டியுடன் வரையப்பட்டவை.
”என்னை யாரும் சிலையா வடிக்கக்கூடாதுன்னு நானும் சொல்லியிருக்கணும். எல்லா இடத்திலயும் என்னை குண்டா செஞ்சு வச்சிருக்கானுக’
“இதச் சொல்றீங்க ரெண்டாயிரம் வருசமா என்னைய வெள்ளக்காரனா மாத்தி வச்சிருக்கானுக”
முதல்வகை வேடிக்கைகளில் எனக்கு ஈடுபாடில்லை. அப்படி எதையும் வேடிக்கையாக்கலாம். அப்படி அரியவற்றை உடைத்துக் கொண்டுவிட்டோமென்றால் எஞ்சுவது ஏதுமில்லை. அப்படி சிலையுடைக்க அலைபவர்கள் தங்கள் சிலைகளை ஆவேசமாக பொத்திப்பிடித்துக் கொண்டிருப்பதையும் காணலாம்.
உதாரணமாக ஓஷோ எல்லா சிலைகளையும் உடைத்தார் என பொங்கிப் பரவசமாகும் கூட்டம் ஓஷோ பற்றி ஒரு சிறு விமர்சனத்துக்கே பொங்கி கண்ணீர் மல்குவதைச் சமீபத்தில் கண்டேன்.
உயிர்த்தெழுந்து குகையிலிருந்து கிறிஸ்து வெளியே வருகிறார்- கொஞ்சம் காலம் பிந்திவிட்டது.
நான் விரும்பும் நகைச்சுவை என்பது மென்மையானது, சிரிக்க வைக்காமல் புன்னகைக்க வைப்பது. கிறித்தவ மெய்யியலை அறிந்தவர்களுக்கு மேலும் புன்னகையை கொண்டுவருவது. ஒரு கோணலான பார்வை வழியாக அந்த மெய்யியல் கொள்கையை மேலும் துலங்கவைக்கவும் அந்நகைச்சுவையால் இயலும். அத்தகைய நகைச்சுவைகள் எப்போதுமே தத்துவ – ஆன்மிகக் கல்வியில் முக்கியமானவை.
அவை நினைவில் நின்றிருக்கின்றன. ஏனென்றால் அவை மிகமென்மையாக நம்முடைய இயலாமையையும் சிறுமையையும்தான் சுட்டிக்காட்டுகின்றன. நாம் சிக்கிக்கொண்டிருக்கும் உலகியலை.
ஷ்ரோடிங்கரின் கிறிஸ்து. “உள்ள இருக்கிறவரை கிறிஸ்து ஒரேசமயம் செத்துட்டார் , இருக்கார்ங்கிற ரெண்டு நிலையிலேயும் இருக்கார்”
சில கிறிஸ்தவ அமைப்புகளின் தியான மையங்களில்கூட இயல்பாக இத்தகைய நகைச்சுவைகளை பரிமாறிக் கொள்கிறார்கள். மலையாள இறையியலாளர் ·பாதர் ஜோசஃப் புலிக்குந்நேல் அவர்களின் உரையில் அத்தகைய நகைச்சுவைகள் நிறைந்திருக்கும். அவருக்கும் நித்ய சைதன்ய யதிக்குமான உரையாடல்களும் நையாண்டிகள் நிறைந்தவை.
கோவாவின் இறையியலாளர் ஆண்டனி டி மெல்லோவின் நகைச்சுவைகளும் ஆன்மிகத்தின் புன்னகை எனச் சொல்லத்தக்கவை. அவருடைய தவளையின் பிரார்த்தனை ஒரு முக்கியமான நூல்.
”ஆளு யார்னு தெரியல. தண்ணிதான் கேக்குறார். ஒயினா மாத்தி குடிச்சுகிட்டே இருக்காரு”
நண்பர் காட்சன் சாமுவேல் அளித்த கிறிஸ்துவைப்பற்றிய ஒரு ஓவிய நூலை நான் முன்பு எழுதியிருந்தேன். ஏசுவை கறுப்பராகவும், திராவிடச் சாயலிலும் வரைந்த பல அரிய ஓவியங்கள் அதில் இருந்தன. மிகமுக்கியமான ஓர் ஓவிய முயற்சி. பெங்களூர் பதிப்பாளர் ஒருவர் பெருஞ்செலவில் அதை வெளியிட்டார்
ஆனால் மரபான கிறிஸ்தவர்களால் அந்நூல் விரும்பப்படவில்லை. அவற்றை விற்க நானும் சிறு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது. நம்பிக்கையின் வழி பலசமயம் சிரிப்புக்கு மாற்றுக்கு இடமற்றது.
மோசஸ்: மேலேருந்து விழுறது கடவுள் குடுக்கிற மன்னாங்கிற சாப்பாடு. ஒண்ணு மட்டும் காக்கா எச்சம், ஜாக்ரதை”
கிறிஸ்து நகைச்சுவைகளுடன் இணைந்து எப்போதுமே நினைவுக்கு வருபவர் மறைந்த ஜான் ஆபிரகாம். “நான் கிறிஸ்து. கார்ட்டூன் கிறிஸ்து. கிறிஸ்து தண்ணியிலே நடந்தார். நானும் ஃபுல்டைம் தண்ணியிலேதான் நடப்பேன்”. அவருக்கு கிறிஸ்துவுடனான உறவென்ன என்பது சிக்கலானதுதான். பெரும்பிரியமும் நையாண்டியும் கலந்த ஓர் உறவு
பால் ஸகரியாவும் கிறிஸ்துவின் ஆள்தான். ஏசுகதைகள் என அவர் எழுதிய ஒரு தொகுதியே தமிழில் வெளிவந்துள்ளது. அவர் எழுதிய ஏசுகதைகளிலேயே சிறந்தது ’அன்னம்ம டீச்சர் ஒரு நினைவுக்குறிப்பு’ ஆனால் சகரியா எழுத்தில் கிறிஸ்துவை பகடி செய்ததில்லை.
உலகிலேயே சுருக்கமான வம்சாவளி
கிறிஸ்தவ இறையியல் இங்கே பொதுவாக எவருக்கும் தெரியாதது என நினைக்கிறேன். நான் கிறிஸ்தவ இறையியல் கொள்கைகளைக் கொண்டு எழுதிய கதைகளுக்கு பொதுவாசகர்களிடமிருந்து எதிர்வினைகள் இருக்காது. ஏசுகிறிஸ்துவின் ரத்தம், பலிநிறைவேற்றம் போன்ற கருத்துக்கள்கூட பொதுவாக எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
கடல்படம் வெளிவந்தபோது எழுதப்பட்ட விமர்சனங்களிலிருந்து நான் அறிந்துகொண்டது பெரும்பாலும் எவருக்குமே அடிப்படை கிறிஸ்தவ தொன்மங்கள் அறிமுகம் இல்லை என்பதே. ஆகவே அவற்றைப்பற்றிய வேடிக்கைகள் மேலும் குறைவாகவே புரியுமென நினைக்கிறேன்.
இந்தச் சட்டைய போட்டுக்கிட்டா எனக்கு பஸ்லே ஃபுல் சீட்டும் கிடைச்சிரும்
சிரிக்கும் ஏசுவின் படம் எனக்கு எப்போதுமே பிரியமானது. மிக அரிதானது அது. ஏசு தியாகத்தின் கனிவின் முகம். அம்மா முகம் போல. சிரிக்கும் அம்மா சிலர் நினைவில்தான் இருப்பார்.
ஆனால் எனக்கு மேலும் பிடித்தமான கார்ட்டூன் இதுதான். பல்முளைக்க ஆரம்பிக்கும் குழந்தை ஏசு உலகையே கரம்பிப் பார்க்கும் ஆவலுடன் மேரியின் இடையில் அமர்ந்திருக்கிறார். ஒரு வழிபடு சிற்பத்தின் தரத்துக்கு கார்ட்டூன் சென்றுவிடும் நிலை அது. குழந்தை அளவில்லாத பசிதாகம் கொண்டது. அன்பும் அப்படித்தான்.