சுந்தர்லால் பகுகுணா நினைவுகள்- சிவராஜ்

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சிபெறாமல் தோல்வியடைந்து, விரக்திமனதோடு ஊர்ஊராக வெவ்வேறு சூழ்நிலைகளில் அலைந்துகொண்டிருந்த சமயம் அது. வாராவாரம் பிசிக்ஸ் மாஸ்டரை சந்திப்பது மட்டுமே மனதுக்கு ஒரே ஆறுதல். அப்பொழுது அவர் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார். ஒருநாள் வீட்டுக்கு அழைத்துச்சென்று ஆவணப்படம் ஒன்றை திரையிட்டுக்காட்டினார். அதன் பெயர் ‘நர்மதா டைரி’ என்றிருந்தது. நர்மதா நதியில் அணைகட்டப்படுவதன் பின்னான அரசியல் சூழ்நிலை மற்றும் அதனால் பாதிப்படையும் மக்களின் வாழ்நிலை இவையிரண்டையும் மையப்படுத்தி 1995ல் எடுக்கப்பட்ட ஆவணப்படம். அதன் இயக்குநர் பெயர் ஆனந்த் பட்டவர்தன் என நினைக்கிறேன்.

அந்த ஆவணப்படம் ஓடிக்கொண்டே இருக்கும்பொழுது, அதில் ஒரு காட்சி வந்தது. அணைகட்டும் திட்டத்துக்கு உலகவங்கி பணம் வழங்கியிருந்தது. அதைத் தருவதற்காக ஒரு அதிகாரி அங்கு வந்திருப்பார். காங்கிரஸ் எம்.பி ஒருவரிடம் மக்கள் எல்லோரும் சேர்த்து செல்வார்கள். அவர் ஏதோ சொல்ல, மக்களெல்லோரும் அவ்வதிகாரியிடம் நேராகச்சென்று கோரிக்கை வைக்க முயல்வார்கள். ஆனால் அவரோ ‘எனக்கு முக்கியமான அவசர வேலையிருக்கு. உங்ககிட்ட இப்ப பேசமுடியாது’ என்று சொல்லி அவ்விடத்தைவிட்டு கிளம்பிவிடுவார். அந்தக்காட்சி முடிந்து அடுத்த காட்சி துவங்கும்.

கேமிரா பின்னாலேயே தொடர்ந்து நகர்ந்தால், அது ஒரு காட்சியைக் காட்டும். எந்த அதிகாரி முக்கியமான வேலையிருப்பதாகச் சொல்லி கிளம்பிவந்தாரோ அவர் ‘ஃபேஷன் ஷோ’ நிகழ்ச்சியொன்றை நிதானமாக அமர்ந்து ரசித்துக்கொண்டிருப்பார். மக்கள் திரண்டு அந்த சொகுசு உணவகத்து அரங்குக்குள் செல்ல முற்படுகையில், எல்லோரையும் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே வீசுவார்கள் காவலர்கள். அப்படி வீசப்பட்டவர்களில் மேதா பட்கரும் ஒருவர். அங்கு கூடியிருக்கும் அந்த மக்கள் கூட்டத்துக்கிடையில் அழுதுகொண்டே மேதா பட்கர் உணர்ச்சியோடு ஒரு உரைநிகழ்த்துவார். அந்தக்காட்சி மனதில் அப்படியே உறைந்துவிட்டது.

அன்றையநாள் முழுக்க மனதில் அக்காட்சியைப்பற்றிய நினைவோட்டம்தான். பிசிக்ஸ் சாரிடம் அக்காட்சியைப்பற்றி கேட்க அவரும் ஏதேதோ நிறைய தகவல்களைச் சொன்னார். அந்த இரவு அவ்வீட்டிலேயே தங்கிப்போனோம். மனதுமுழுக்க பாரம் மட்டும் நிலைத்திருந்தது. மறுநாள் காலை பிசிக்ஸ் சார் ‘ப்ரன்ட் லைன்’ புத்தகத்தை கையில் தந்தார். அதில், வெள்ளைநிற பனியனும் குல்லாவும் அணிந்திருந்த ஒரு முதியவர், நர்மதா நதியைப்பார்த்து சம்மணமிட்டமர்ந்து தனது உண்ணாவிரதத்தை துவங்கும் புகைப்படம் ஒன்றை பிரசுரித்திருந்தார்கள். அம்முதியவர் ‘சுந்தர்லால் பகுகுணா’.

ஆவணப்படத்தில் கண்ணுற்ற அந்தக்காட்சியும், அதன்நீட்சியாக பத்திரிக்கையில் அச்சாகியிருந்த சுந்தர்லால் பகுகுணா அவர்களின் புகைப்படமும் மனதுக்குள் கற்சித்திரமாகப் பதிந்துகொண்டன.அது ஆங்கிலப்புத்தகம், ஆதலால் சுந்தர்லால் பகுகுணாவின் படத்தைமட்டும் கத்திரித்து எனது வீட்டிலிருக்கும் சிறிய அறையின் சுவர்மீது ஒட்டிவைத்துக் கொண்டேன். விரைவாகவும் மெதுவாகவும் காலம் பல்வேறாக நகர்ந்தது. ஆனாலும் நர்மதா டைரிக் காட்சியும், சுந்தர்லால் பகுகுணாவின் உண்ணாவிரதச்சித்திரமும் மனதுக்குள் வந்துகொண்டே இருந்தன.காலம் செல்லச்செல்ல அகத்தைவிட்டு சிற்றளவும் அகலவில்லை.

அதன்பிறகு சிறிதும்பெரியதுமாக நிறைய தகவல்கள் நர்மதா பற்றியும் சிப்கோ இயக்கம் பற்றியும் வந்துசேர்ந்தன. சுற்றுச்சூழலுக்கு ஆதாரமான காடுகளை பயன்படுத்துவது மட்டுமல்ல பாதுகாப்பதும் நமது சுயக்கடமையே என்று பெண்கள் முன்னெடுப்பில் மாபெரும் சமூகப்போராட்டமாக மாறிய அறப்போராட்ட வழிமிறைகள் ஒன்றிணைந்து சிப்கோ இயக்கம் ஆகியிருக்கிறது.இராஜஸ்தானில் 18ம் நூற்றாண்டுவாக்கில் மன்னராட்சி காலத்திலேயே இப்போராட்டத்துக்கான விதையிடப்பட்டிருக்கிறது. அதன் வழித்தோன்றலாக 1970களில் இமயமலைப்பகுதியின் காடுகளை சிப்கோ போராட்டம் மூலம் காப்பாற்றியிருக்கிறார் சுந்தர்லால் பகுகுணா.

காலவயது நகர, நம்மாழ்வாரோடு பழகிப்பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆழ்வாருடனான ஒரு உரையாடல் சமயத்தில் ஆர்வந்தாங்காமல் நான் கேட்டேன், ‘அய்யா, சுந்தர்லால் பகுகுணாவபத்தி…?’ என. அதற்கு ஆழ்வார்,’அய்யா, அவர ஒரே ஒருதடவ டெல்லியில பாத்திருக்கேன். அவரு கொஞ்ச தூரத்திலயிருந்து நடந்துவந்தாரு. அது எனக்கு, ரொம்பகாலமா… பழங்களா காச்சு பழுத்துத்தொங்குற கிழமரம் ஒன்னு அசஞ்சு அசஞ்சு நடந்துவரமாதிரி இருந்துச்சுய்யா’ என முகம்கனியச் சொன்னார்.

அது ஒரு சர்வதேசக் கருத்தரங்கு. மூன்றுநாள் நிகழ்ந்திருக்கிறது. தென்னிந்தியாவின் சார்பாக ஆழ்வார் அதில் கலந்துகொண்டிருந்தார். ஒருநாள் முழுக்க சுந்தர்லால் பகுகுணாவுக்கு பக்கத்திலேயே அய்யா அமர்ந்திருந்திருக்கிறார். ஆனால் ஒருவார்த்தைகூட அய்யா அவரிடம் பேசவில்லை. எல்லோரையும் பார்த்துச்சிரிப்பதும், அருகில் வருபவர்களை அரவணைத்துக்கொள்பவராகவும் சுந்தர்லால் பகுகுணா இருக்கிறார். ஆனால் ஆழ்வாரால் ஒரு வார்த்தைகூட அவரிடம் பேசமுடியவில்லை. ‘ஏனுங்கய்யா?’ என ஆழ்வாரிடம் நான் கேட்டபொழுது, ‘இல்லைய்யா… அவர்கிட்ட பேசுறதுக்கு எனக்கு தைரியமே வரலய்யா. என்னோட ஒட்டுமொத்த செயல்பாடுகளையுமே கேள்விக்குறியாக்குச்சு அந்த நிமிசம். நான் காந்திய புரிஞ்சுக்க தொடங்குனநாள் அன்னைக்குதான்ய்யா’ என கலங்கியகண்களோடு ஆழ்வார் சொல்லிமுடித்தார்.

யோசித்துப்பார்த்தால், அவ்வளவு மக்களை தொடர்ச்சியாகச் சென்று சந்தித்த ஆழ்வாரை, இத்தனை ஆண்டுகளாக அவர் திரட்டிவைத்திருந்த நம்பிக்கையை…ஒட்டுமொத்தமான ஒரு சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியது சுந்தர்லால் பகுகுணாவின் மெளனம்கலந்த செயல்பாடாகத்தான் இருந்திருக்கிறது. ஆக, தன்னை வருத்திக்கொள்வதும் பிறிதொன்றின் நலனுக்காக தன்னை ஒப்படைப்பதும்தான் தனித்தவொன்றாக உயிர்பெறுகிறது. சுயக்கீழ்மைகளை அறுத்தெறியும் ஒரு கூர்கத்தியை ஒவ்வொரும் தங்களுக்குள் தாங்களே அழுத்தவேண்டியுள்ளது. மானுடவிடுதலைக்கு இச்சுயசுத்தம் சாத்தியவாசலை திறக்கிறது.

அதன்பிறகு, சுந்தர்லால் பகுகுணா அய்யாவை சந்திக்க வேண்டுமென்பதும், அவர் காலலலைந்த இடங்களுக்குச் சென்றுவர வேண்டுமென்பதும், அவருடைய கண்படுதலோ கைத்தொடுதலோ கிடைத்துவிடாதா என்கிற ஏக்கத்தவிப்பும் தீவிரப்பாடும் எப்பொழுதும் இருந்தது. சிறிதுசிறிதான வெவ்வேறு காலகட்டங்களில் அதற்கான சூழ்நிலை அமையும்போதெல்லாம், ஒன்று அவர் உடல்நிலை குன்றிவிடும் இல்லையேல் நம்முடைய நிகழ்வாழ்வுப்போக்கு அதை திசைமாற்றி விட்டுவிடும். நற்சூழலின் கனிவென்பது எப்போதுமே காலங்கள் தள்ளித்தான் நிகழும் போல.

பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்பாக அலைபேசிக்கு ஒரு அழைப்பு. செரின் ஏஞ்சலாவிடமிருந்து. குக்கூவின் துவக்ககாலங்களின் அதன் உள்ளார்ந்த ஆன்மாவோடு பிணைந்திருந்து ஜீவனாக மாறிப்போன ஒரு உள்ளம் ‘செரீன் ஏஞ்சலா’. அழைப்பை எடுத்துப்பேச, ‘ அண்ணா, என்னன்னே தெரியல.திடீர்னு சுந்தர்லால் பகுகுணா அய்யாபத்தியே ஞாபகமா இருக்கு. நான் டெல்லி கிளம்பி போகப்போறேன்’ என் செரீன் சொன்னார். அன்றிரவே தும்பி புத்தகம், நூற்பு கைத்தறி சேலைகள், கிராமப்பெண்கள் தைத்த துவம் விதைப்பைகள், குக்கூ குழந்தைகள் செய்து நிழலில் உலர்ந்த களிமண்பொம்மைகள் என எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு குமரன் சென்னைக்கு கிளம்பிப்போய் செரீனிடம் ஒப்படைத்தார்.

நேற்று முன்தினம் (ஜனவரி 9) சுந்தர்லால் பகுகுணா அய்யாவுடைய பிறந்த தினம். அவருடைய பிறந்தநாள் அன்பளிப்பாக, அவரும் அவரது மனைவியும் உள்ள புகைப்படத்தை முகப்பாகத் தாங்கிவந்த தும்பி இதழ்கள் அவர் கைகளில் சேர்ந்திருக்கிறது. சுந்தர்லால் பகுகுணாவின் முதிய கைகள், தும்பி இதழை தொட்டுப்பார்க்கும் புகைப்படங்களை அங்கிருந்தபொழுதுகளிலேயே செரீன் நமக்கனுப்பியவுடன், வெறும் கண்ணீர் மட்டும்தான் எனது ஒற்றை பதிலீடாக இருந்தது.

குரல்வளையைத் தாண்டக்கூட வலுவில்லாமல் குரல்களுடைந்து நெஞ்சுக்குள் விழுந்தன. இரவெல்லாம் விம்மிக்கொண்டே இருந்தேன்.

தொடர்ந்து நிகழக்கூடிய விமர்சனக்கேள்விகளும், வெவ்வேறு பார்வைக்கோண ஊசியேற்றல்களும், செல்லும் இலக்கு குறித்த சுயத்தடுமாற்றங்களும் ஊடும்பாவுமாக உள்ளத்திலிருந்த நேரத்தில் ‘அப்படியெதுவும் இல்லை. தக்கதே இப்பாதை நீ செல்’ என்பதற்கான நிகழ்கால சாட்சியாகவே இந்த நிகழ்தலைக் காண்கிறோம்.

எல்லாக்கேள்விகளையும் தாண்டியும் நாங்கள் நம்பும் நிஜமொன்று இருக்கிறது. நடுநிசி இரவில் வலிப்புவந்து துடித்தழுகிற ஒரு குழந்தையின் கடைவாய் எச்சிலும் கண்ணோரத்துச் சுடுகண்ணீரும்தான் தும்பிக்கு உயிரூற்றுகிறது. அத்தகு குழந்தைகளின் நோய்மையைத் தீர்க்கிற ஒரு சொல்லை எப்படியாவது தேடியடையும் வாழ்நாள் வேட்கையை சுந்தர்லால் பகுகுணா அய்யாவின் இச்சாட்சியம் எங்களுக்குள் தந்திருக்கிறது.

செரீனிடம் சுந்தர்லால் பகுகுணா அய்யாவும் அவருடைய மனைவியும் ‘உன்னுடைய குழந்தையின் பெயர் என்ன?’ என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு செரீன், சிப்கோ இயக்கம் முதன்முதலாக நிகழ்ந்த இமயமலைக்கிராமத்தின் பெயரை உச்சரித்திருக்கிறார் (ரெனி என நினைக்கிறேன்). கண்கள்மகிழச் சிரித்த சுந்தர்லால் பகுகுணா அய்யா, ‘ ஓ… அப்படியா, ரொம்ப மகிழ்ச்சி. நீ அவளையும் குக்கூ குழந்தைகளையும் கூட்டிட்டு வா. நாம அந்த கிராமத்துக்கு மீண்டும்போய்ட்டு வருவோம். அங்க இருக்க மரங்கள் கட்டியணச்சுட்டு திரும்புவோம்’ என தன் பாஷையில் சொல்லியிருக்கிறார்.

செரீன், அவருடைய குழந்தைகள், செரீனுடைய அம்மா, குமரன் என எல்லோரையும் கண்ணீர்மல்க கைகூப்புகிறோம். அனைத்துமான இவ்வான்வெளியை நோக்கி மனம்கசியும் பிரார்த்தனையொன்றை உள்ளத்துக்குள் உச்சரித்துக்கொள்கிறோம். கருவே, சினையாகி உயிர்பெறு. சுந்தர்லால் பகுகுணா அய்யா சொன்ன வார்த்தைகளையே மீண்டும்மீண்டும் நினைவேற்றிக்கொள்கிறோம்,

“ஒரு மரத்தினுடைய இலைகள் எல்லாமே தனித்தனியான பிரசவம் தான். அதற்கான பாரத்தோடும் அப்பாரத்தைத் தாங்கும் விதைகளைத்தான் அம்மரம் பிரசவிக்கிறது”.

கனியேந்திய முதுமரமாய் அன்பில் உயிரியங்கும் அந்த காந்தியவிழுதை தாழ்பணிகிறோம். இருளெல்லாம் யாரோ, ஒளி நீயே…

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 14
அடுத்த கட்டுரைஅஞ்சலி: சுந்தர்லால் பகுகுணா