அஞ்சலி: சுந்தர்லால் பகுகுணா

இந்தியாவின் சூழியல் இயக்கங்களின் தந்தை எனப்படும் சுந்தர் லால் பகுகுணா மறைந்தார். 1927 ல் பிறந்து ஏறத்தாழ நூறாண்டை நெருங்கிக் கொண்டிருந்தவர்.இமையமலைக் காடுகளில் மரம்வெட்டுதலுக்கு எதிரான சிப்கோ போராட்டம் வழியாக உலக அளவில் அறிமுகமானார்.

இமையமலைச் சாரலில் கண்மூடித்தனமான மரம்வெட்டுதல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே தொடங்கிவிட்டது. இமையமலைப்பகுதி இன்று பெரும்பாலும் மொட்டைமண் குன்றுகளாக இருப்பதற்கு அந்த காடழிப்பே காரணம்.இந்திரா காந்தி அமைச்சரவையில் பெரும்பொறுப்புகளில் இருந்த சிலர் உத்தரகண்ட் பகுதியின் மரங்களை வெட்டுவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருந்தார்கள். எச்.என்.பகுகுணா முதல் என்.டி.திவாரி வரை பெரும்பாலான அக்கால அரசியல்வாதிகள் மேல் மரம்வெட்டிகள் என்னும் குற்றச்சாட்டு உண்டு.

அரசாங்க அனுமதியுடன், அரசு அமைப்பின் துணையுடன், திட்டமிட்டு மாபெரும் அளவில் காடழிப்பு நடைபெற்றது. எண்பதுகள் வரைக்கும்கூட காடழிப்பு என்பது மாபெரும் பொருளியல் அழிவு, ஒரு பொதுச்சொத்துச் சூறையாடல் என்பது மக்களுக்குத் தெரியாது, அரசுக்கும் தெரியாஅது. தமிழகத்திலும் பெரும்பான்மையான காடுகள் அந்தக் காலகட்டத்தில் அரசு அனுமதியுடன் மறைந்தன. அரசு காடுகளை வெட்டி அழிக்க ஏலத்தில் குத்தகை விட்டுக்கொண்டிருந்தது.என் இளமையில் நானே காடுகளை வெட்ட பேச்சிப்பாறை, கோதையாறெல்லாம் சென்றிருக்கிறேன்.

அக்காலத்தில்தான் காடுகளை அழிப்பதற்கு எதிரான சிப்கோ என்ற இயக்கம் ஆரம்பித்தது. உலக அளவிலேயேகூட தொடக்ககாலச் சூழியல் போராட்டங்களில் ஒன்று அது. மார்ச் 26, 1974ல் உத்தரகண்ட் மாநிலத்தில் இமையமலை அடிவாரத்தில் தொடங்கியது அந்த இயக்கம். மக்களால் புனிதமாக கருதப்பட்டு தலைமுறை தலைமுறையாகப் பேணப்பட்ட காடுகளின் மரங்களை வெட்டி அழிக்க அரசு குத்தகைதாரர்களுக்கு அனுமதி அளித்தது. அதற்கு எதிராக கிராம மக்கள் திரண்டு மரங்களை கட்டிப்பிடித்துக்கொண்டு நின்று போராடினர். அதுதான் சிப்கோ இயக்கம். சிப்கோ என்றால் தழுவிக்கொள் என்று பொருள்.

தன்னெழுச்சியாக தோன்றிய இவ்வியக்கம் அரசாலும் குத்தகைதாரர்களாலும் மூர்க்கமாக ஒடுக்கப்பட்டது. அப்போது அதை தலைமைதாங்கி நடத்தியவர் காந்தியவாதியான சுந்தர்லால் பகுகுணா. “நிரந்தரப் பொருளியல்’ என்று அவர் முன்வைத்த பொருளியல்திட்டம் இயற்கையைச் சூறையாடாத பொருளியலுக்கான விரிவான திட்டங்கள் கொண்டது.

1981ல் இமையமலையின் அடிவாரக் காடுகள் வழியாக ஏறத்தாழ 5000 கிலோமீட்டர் தூரம் அவர் நடத்திய நடைபயணம் புகழ்பெற்றது. இறுதியில் போராட்டம் வென்றது. சுந்தர் லால் பகுகுணா இந்திரா காந்தியுடனான நேரடிப் பேச்சுவார்த்தையில் இமையமலைக் காடுகளைப் பேணுவதன் முக்கியத்துவத்தை அவருக்கு உணர்த்தினார். இந்தியாவில் சூழியல் சட்டங்கள் உருவாகவும் அச்சந்திப்பே வழிவகுத்தது. இன்று இந்தியாவெங்கும் எஞ்சியிருக்கும் காடுகள் சுந்தர்லால் பகுகுணாவின் கொடை என்றே சொல்லலாம்.

சுந்தர் லால் பகுகுணா இந்தியாவின் சூழியல் போராளிகளில் முன்னோடியானவர், முதன்மையானவர். காந்தியவாதியான சுந்தர்லால் பகுகுணா தீண்டாமை ஒழிப்புப் போராளியாக பொதுக்களத்திற்கு வந்தார். அதன்பின் உழைக்கும் பெண்களின் உரிமைக்காகவும், பழங்குடியினர் நலனுக்காகவும் கடைசிவரை களத்தில் இருந்தார். 2001ல் கூட பெரிய அணைக்கட்டுகளின்பொருட்டு மக்கள் குடிபெயர்க்கப்படுவதற்கு எதிராகப் போராடிச் சிறைசென்றார்.

சுந்தர்லால் பகுகுணாவை நான் அறிந்துகொள்வது ஒரு கசப்பு வழியாக. 1984ல் மலையாள நவீன இலக்கிய விமர்சகரான எம்.கிருஷ்ணன் நாயர் ஒரு கட்டுரையில் ஒரு படத்தை போட்டு, ’இந்தப் படத்தில் ஒருவன் ஒரு மரத்தைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறான். இதெல்லாம் ஹிப்போக்கிரஸி. மரத்தை கட்டிப்பிடித்தால் என்ன ஆகும்? போட்டோவுக்கு போஸ் கொடுக்கலாம். கட்டிப்பிடிப்பதற்கு பின்னாலுள்ளது என்ன உணர்வு?” என எழுதி அக்கால இருத்தலிய, ஃபிராய்டியக் கருத்துக்களை கக்கியிருந்தார்.

ஆனால் அந்தப் படம் என்னை கவர்ந்தது. நான் அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் சுந்தர்லால் பகுகுணா என தெரிந்துகொண்டேன். அவர் அன்று நடந்துகொண்டிருந்த சைலண்ட் வாலி சூழியல் பாதுகாப்புப் போராட்டத்தின்பொருட்டு கேரளத்திற்கும் வந்திருக்கிறார்.

எம்.கிருஷ்ணன் நாயருக்குத் தெரிந்தது அவ்வளவுதான். அதில் பிழையில்லை, அறியாமை பாவம் அல்ல. ஆனால் புரட்டிப்பார்த்த நூல்கள் வழியாக ஆணவம் அடைந்து அந்த அறியாமையை ஒரு கவசமாக மாற்றிக்கொண்டு அனைத்தைப் பற்றியும் அலட்சியமாகக் கருத்துரைத்து கேலிசெய்து ஆராய்ந்து பீராயும் அந்த மனநிலைமேல் ஆழ்ந்த அருவருப்பு அடைந்தேன். அந்தக் கருத்தைச் சொல்ல தனக்கு என்ன தகுதி என எண்ணத் தெரியவில்லை என்றால் என்ன வாசித்து என்ன?

பின்னர் எம்.கிருஷ்ணன் நாயரை பலமுறை சந்தித்திருக்கிறேன். ஒரேமேடையில் இருந்திருக்கிறோம். என் எழுத்துக்களை அவர் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவரிடம் ஒரு வார்த்தை பேசவோ, அவர் புன்னகைத்தபோது மறுபுன்னகை பூக்கவோ என்னால் முடியவில்லை. அவர் மறைந்தபோது ஒரு அஞ்சலிக்குறிப்பு கேட்டார்கள், ‘அவர் ஒரு முட்டாள், வாசிப்பால் இன்னும் பெரிய முட்டாளாக ஆனவர்’ என்று சொன்னேன். அஞ்சலிக்குறிப்பு வெளியாகவில்லை.

இன்று என்றால் அத்தனை சீற்றம் அடைந்திருக்க மாட்டேன். புன்னகையுடன் ‘நோ கமெண்ட்ஸ்’ என்று கடந்து சென்றிருப்பேன். ஏனென்றால் இன்றும் எம்.கிருஷ்ணன்நாயர் வகை பீராய்ச்சியாளர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அந்தவகைமையில் மூன்றாம் தலைமுறையினர் இன்று தமிழ்ச்சூழலில் ’லாந்திக்’கொண்டிருக்கிறார்கள். அவர்கள்மேல் எந்த மதிப்பும் இல்லை. ஆனால் அவமதிக்க மாட்டேன், அவர்களும் உயிர்க்குலத்தில் ஒரு துளிதான். இருந்துவிட்டுப் போகட்டும்.

அதன்பின் சுந்தர்லால் பகுகுணாவை, அவருடைய சாதனைகளைப் பற்றி காந்தியப் போராளிகளிடமிருந்தும் சூழியல் செயல்பாட்டாளர்களிடமிருந்தும் அறிந்தேன். அவருடைய பேட்டிகளை வாசித்தேன்.

சுந்தர்லால் பகுகுணா 1988ல் சென்னை வந்தார். கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன் ஒருங்கிணைத்த இறால்பண்ணை ஒழிப்புப் போரின்போது. அவரைப் பார்ப்பதற்காகவே சென்னை வந்தேன். அன்று அவர் மேடையில் மற்றவர்கள் பேசும்போது ஓரமாக அமர்ந்து சர்க்காவில் நூல் நூற்றுக்கொண்டிருந்தார்.சட்டென்று எனக்கு அக்காட்சி ஓர் ஒவ்வாமையை உருவாக்கியது. அது போலித்தனம் என்றும் ‘தன்னை முன்வைத்தல்’ என்றும் தோன்றியது. அரங்கிலிருந்து வெளியேறி என் விடுதியறைக்கு வந்துவிட்டேன்.

ஆனால் வந்ததும் எம்.கிருஷ்ணன் நாயர் நினைவுக்கு வந்தார். அவருக்கும் எனக்கும் என்ன வேறுபாடு? நான் ஓருசில புத்தகங்களை படித்திருக்கிறேன். அதைவைத்து மற்றவர்களை மதிப்பிட எனக்கேது தகுதி? அதிலும் செய்துகாட்டிய சாதனையாளர்களைப் பற்றி அப்படி ஒரு மதிப்பீட்டை உருவாக்கிக் கொண்டேன் என்றால் நான் எவ்வளவு பெரிய அற்பன்! அவர்களை புரிந்துகொள்ளவே என் அறிவு பயன்படவேண்டும், அவர்கள்மேல் ஏறிநின்று என்னைக் காட்டிக்கொள்ளும் சிறுமை என்னை அணுகலாகாது.

அது ஒரு பெரிய திறப்பு. அறம் கதைகள் வரை வந்துசேரும் ஒரு ஆழ்ந்த புரிதல் அன்று தொடங்கியது. நவீன எழுத்தாளனின் பெரிய உளச்சிக்கல் என்பது தன்னை முன்வைத்து உலகை மதிப்பிடுவது. எதையும் மதிப்பிடும் மையமாக தன்னை கருதிக்கொள்வது. ’இதுபோலித்தனம்’ என அவன் எதையும் சொல்வான். எதையும் ‘பகுப்பாய்வு’ செய்வான்.  ‘அதுக்கு நீ யாருடா வெண்ண?’ என்று கேட்கும் ஒரு குரல் உண்டு. அக்குரலும் அவனுக்குள் இருந்தே எழுமென்றால்தான் அவன் மெய்யான எழுத்தாளன். முப்பது வயதுக்குள் ஒருவன் அப்படி தன்மைய நோக்கில் ’ஆய்வு’களை உதிர்த்துக்கொண்டிருந்தால் பரவாயில்லை, அதற்குமேலும் அதே மனநிலை நீடித்தால் அவனிடம் ஒன்றும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. அவனிடமிருக்கும் அந்த அற்பத்தனம் எந்த பெரியவிஷயமும் அவனிடம் நிகழாமல் தடுத்துவிடும்.

அவ்வுணர்வுடன் அன்று மேடைக்குத் திரும்பிச் சென்றேன். கருத்தரங்கு முடிந்து பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்தது.  சுந்தர்லால் பகுகுணா இருந்தார்.அவரிடம் ஒரு பேட்டி எடுத்தேன். நாலைந்து கேள்விகளை எழுதிக்கொடுத்தேன். அவர் பதில் சொன்னார். அது அப்போது பிரசுரமாகியது. அந்தச் சிறுசந்திப்பு, அவரை அருகில் நின்று பார்த்தது பெரிய நிறைவை அளிக்கிறது. அவர் ஆங்கிலத்தில் எழுதித்தந்த பதில்களை நெடுநாட்கள் கையில் வைத்திருந்தேன்.

சுந்தர்லால் பகுகுணாவைப் போன்றவர்கள் வரலாற்று நாயகர்கள். அவர்களின் எதிர்ப்பு என்பது ஆழ்ந்த அற அடிப்படையில் இருந்து எழுவது. தாக்குப்பிடிக்கும் பொருளியல் அவருடைய கொள்கை. இயற்கையை அழிக்காத, உற்பத்திமேல் கட்டுப்பாடுள்ள பொருளியல் அது. பெரும்கட்டுமானங்கள், பெருந்திட்டங்களுக்குப் பதிலாக சிறிய அளவிலான விரிவான திட்டங்களை முன்வைப்பது. மையப்படுத்தப்படாத பலமுனைகள் கொண்ட நிர்வாகத்தை கொண்டது.

சென்ற முப்பதாண்டுகளில் சுந்தர்லால் பகுகுணாவை பெருந்திட்டங்களை ஆதரிப்பவர்கள், இடதுசாரிகள் பேசிய கடுமையான வசைகளையும் அவதூறுகளையும் கேட்டிருக்கிறேன். சிலவற்றுக்குப் பதிலும் எழுதியிருக்கிறேன். அரசியலாளர்களுக்கு அவர்களின் அரசியலை ஏற்காத எவருமே கீழ்த்தரமாக எதிர்க்கப்படவேண்டிய எதிரிகள்தான். சுந்தர் லால் பகுகுணாவைப் போன்றவர்கள் அந்தச் சிறியமனிதர்களின் தலைக்குமேல் கால்வைத்துக் கடந்து செல்லும் விராடபுருஷர்கள்.

அவர்கள் நம்மை நாமே அளந்துகொள்ளும் அளவுகோல்களாக வேண்டும். நம் சிறுமைகளை அதனூடாக நம்மால் மதிப்பிட்டுக்கொள்ள முடியும். நம் இலக்குகளை தொலைதூரத்தில் வகுத்துக்கொள்ளவும் முடியும்.

பிகு: சுந்தர்லால் பகுகுணாவிற்கு தமிழில் ஒரு நல்ல விக்கிபக்கம்கூட இல்லை. எவரேனும் ஆங்கில விக்கி பக்கத்தையாவது மொழியாக்கம் செய்து போடலாம்.

https://en.wikipedia.org/wiki/Sunderlal_Bahuguna

 

முந்தைய கட்டுரைசுந்தர்லால் பகுகுணா நினைவுகள்- சிவராஜ்
அடுத்த கட்டுரைஇமைக்கணம் வாசிப்பு