கி.ரா- கடிதங்கள்

அஞ்சலி:கி.ரா

கி.ரா- அரசுமரியாதை, சிலை.

அன்புள்ள ஜெ,

கி.ரா பற்றி அவர் மறைவுக்குப் பின் எழுதப்பட்டவற்றை வாசித்தேன். முகநூலில் பேசப்பட்டவற்றைப் பார்க்கையில் இப்படி தோன்றியது.  பெரும்பாலான முகநூல்வாசிகள் இன்னொரு முகநூல் பதிவை மட்டும்தான் படிக்கிறார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்பவர்களை வெளிப்படையாக வாசிக்கிறார்கள். எதிர்ப்பவர்களை ரகசியமாக வாசிக்கிறார்கள். அவ்வளவுதான். இலக்கியம் பற்றிப் பேசுகிறார்கள். ஆனால் இலக்கிய விமர்சனக் கருத்துக்கள் எதையும் தெரிந்துகொண்டிருப்பதில்லை. அடிப்படையாக பேசப்பட்டவற்றைப் பற்றியே தெரிந்துகொண்டிருப்பதில்லை.

கதைசொல்லி என்பதைப் பற்றி நிறைய விவாதம் நடந்திருக்கிறது. நெரேட்டர் என்பதற்குச் சமானமான வார்த்தையாக அதை அக்காலத்தில் உருவாக்கினார்கள். கதையாடல் – கதைசொல்லி. ஆனால் பின்னர் அந்தச் சொல்லுக்கு இன்னொரு வெர்ஷன் வந்தது. எடுத்துரைப்பாளர். அதை வேறு சில இடங்ககளுக்குப் பயன்படுத்தினார்கள். அந்த வார்த்தை பின்நவீனத்துவத்தில் முக்கியமானது. எழுத்தாளர், படைப்பாளி போன்ற வார்த்தைகள் சரியானது அல்ல என்பது அவர்களின் எண்ணம். எழுத்தாளர் என்றால் எழுத்துவடிவ இலக்கியம்- கலை ஆகியவற்றை ஒரு படி மேலே தூக்குவதாக ஆகிறது. அதோடு புனைவு எழுதுபவரை மட்டும் குறிப்பிடும் வார்த்தை அல்ல அது. போலீஸ்ரிப்போர்ட் எழுதுபவரும் எழுதுபவர்தான். அதேபோல படைப்பாளி. அதுவும் ஏற்புடையது அல்ல. படைப்பு என ஏதும் இல்லை. படைப்பு என்பது தொடர்ச்சிதான். முன்பிருந்ததின் மறு வடிவம்தான்.

நான் 1999 ல் கி.ராவை பார்த்தபோது இதைப்பற்றி பேசினேன். அவர் கதைசொல்லி என்ற இதழை நடத்திவந்தார். அவர் சொன்னார் கதைசொல்லிதான் சரியான வார்த்தை. எழுத்தாளன் என்று சொன்னால் தொல்காப்பியன், வான்மீகி ஆகியோரிடமிருந்து தொடங்கவேண்டும். கதைசொல்லி என்று சொன்னால் அதற்கும் முன்னாலுள்ள எல்லா கதைசொல்லிகளிடம் இருந்தும் நமக்கான பாரம்பரியம் தொடங்குகிறது என்று. நான் அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட்  தன்னை bard என்றே சொல்லிக்கொண்டார் என்று அவரிடம் சொன்னேன். கதைசொல்லி என்ற சொல்லை மிக விரிவான அர்த்ததில்தான் இலக்கியவிமர்சனம் பயன்படுத்தியது.

ஆனால் எதையுமே தெரிந்துகொள்ளாமல் திடீரென்று தொடக்கத்திலிருந்தே ஒரு விமர்சனம் முகநூலில் ஆரம்பமாகியது திகைப்பாக இருந்தது. அதில் சாதிச்சாயம் பூசியதெல்லாம் அசட்டுத்தனத்தின் உச்சம். வண்ணநிலவன் எழுதினார் என்றால் அவர் என்றைக்குமே தமிழின் தீவிர இலக்கியத்தைச் சேர்ந்தவர் அல்ல. சுமாரான ஒரு  எழுத்தாளர் அவர். அவர் வணிக எழுத்தின் பின்னால் போனவர். சிற்றிதழ்ச்சூழலில் என்ன நடக்கிறதென்றே தெரியாதவர். அந்த திகைப்பை அவ்வப்போது எழுதிவிடுபவர். இளைஞர்கள் எழுதியதுதான் ஆச்சரியம்.

1984 ல் நாஞ்சில்நாடனின் நாவல் [தலைகீழ் விகிதங்கள் என்று ஞாபகம்] பற்றி ஒரு விவாதம் வந்தது. அதை வட்டாரவழக்கு நாவல் என்று சொன்னார்கள். அப்போது பாளையங்கோட்டையில் நாட்டார் வழக்காற்றியல் மையம் அமைந்து நாட்டாரியல் பற்றிய பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தன. வட்டாரவழக்கு என்றால் என்ன நாட்டாரியல் என்றால் என்ன என்று பெரிய சர்ச்சை நடந்தது. அதில்தான் நாட்டாரியல் பற்றிய ஒரு தெளிவும் வந்தது. அதுவரை நாட்டாரியலைப் பார்த்துவந்த பார்வை மாறியது. அது ஒரு வேர்நிலம் என்ற எண்ணமும் அதன்மேல்தான் கிளாஸிக்குகளே நிலைகொள்கின்றன என்ற சிந்தனையும் வந்தது.

நாட்டாரியலில் ஒரு அம்சம் வட்டாரவழக்கு. வட்டார மனநிலையை அதுதான் காட்டமுடியும். ஆகவே அதெல்லாம் வட்டார வழக்கு நாவல்கள் அல்ல. அந்த வார்த்தை மையவழக்கு என்ற ஒன்றை வரையறைசெய்தபிறகு பிறவற்றை விளிம்புக்கு தள்ளுவது. ஆனால் அந்த மையவழக்குதான் சிறுபான்மையின் மொழி. பிறமொழிகள்தான் உண்மையான மொழிகள். அந்தப்பார்வைதான் நாட்டாரியல் எழுத்து என்ற கோணத்தை உருவாக்கியது. குளோட் லெவிஸ்ட்ராஸ் முதல் ஆலன் டண்டிஸ் வரை பல நாட்டாரியல் அறிஞர்கள் இங்கே பேசப்பட்டார்கள்.

நாட்டாரியலில்தான் ஒரு பண்பாட்டின் உண்மையான சிந்தனையும் அழகும் இருக்கமுடியும். செவ்வியல் என்பது ஆர்ட்டிக்குலேட்டட் ஆகவே இருக்கமுடியும். நாட்டாரியலில் நேரடியாகவே ஆர்க்கிடைப்புகள் இருக்கின்றன. அதன் ஆற்றல் உள்ளது. அந்த ஆற்றலை இலக்கியத்துக்குக் கொண்டுவரவேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்தன. அந்தப் பின்னணியில்தான் கோணங்கியின் கதைகள், உங்களுடைய படுகை, எஸ்.ராமகிருஷ்ணனின் காட்டின் உருவம் போன்ற கதைகள் எல்லாம் வந்தன. அந்தப்போக்கின் முன்னோடியாகவே கி.ரா கருதப்பட்டார் The Regional Is Universal என்ற வரி பிரபலமாக இருந்தது. அந்த பார்வையிலேயே கி.ராவை கரிசல் எழுத்தாளர் என்றார்கள். அந்த வரியை இணையத்தில் அடித்துப் பார்த்தாலே அந்த கான்செப்ட் முழுசாக தெரிந்துவிடும்.

நான் இருபத்தெட்டு ஆண்டுகள் ஒன்றும் படிக்கவில்லை. வேலைச்சுமை. இப்போது ஓய்வுபெற்றபின் இணையம் வழியாக படிக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றையும் வம்புப்பேச்சாக ஆக்குவதும் அதைவைத்து கொஞ்சம் சண்டையும், அப்படியே அடுத்த விஷயத்துக்குப் போவதும் என்று அடுத்த தலைமுறை மாறியிருக்கிறது. அந்த கூட்டத்தில் புகுந்துகொண்டு மூத்த எழுத்தாளர்களும் அடையாளம் தேட முயல்கிறார்கள்.

எஸ்.கே.ராம்

அன்புமிக்க ஜெ,

நானும் சந்தோஷும் கி. ரா வை சந்திக்க சென்றோம்… அதை இங்கு எழுதியிருக்கிறேன்.

100 வயது இளைஞர் 

தமிழ் நாட்டின் மிக மூத்த மனிதர், இந்தியாவின் மிக மூத்த எழுத்தாளர் சிந்தனையாளர் தமிழில் பண்டித எழுத்து இல்லாமல் சாதாரண மனிதர்கள் பேசும் வட்டார வழக்கிலேயே இலக்கியத்தைப் படைத்து அதன் வழியாக தன்னுடைய இருப்பை இருத்தி கொண்டவர். அதுவும் இலக்கியம் தான் என்று தமிழ் உலகிற்கு காட்டியவர். இலக்கிய உலகில் கடித இலக்கியம் என்ற ஒரு புது வகையை உருவாக்கியவர், நூற்றாண்டை தொட இருக்கும் கி.ரா வை சந்தித்த போதும்..

நானும் சந்தோஷ்ம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு டீக்கடையில் நின்று கொண்டு இருக்கும் போது தான் நான் அவனிடம் சொன்னேன், சந்தோஷ் கிரா வ பாக்க போனும் னு தோணுது, இளவெனில் ட ேபசிட்டேன்.

Address எல்லாம் வாங்கிட்டேன். எப்ப ேவனாலும் வரலாம் னு சொல்லிட்டார். எப்ப எப்படி போக னு யோசிட்டு இருக்கேன்.

அப்படியா, அந்த Address சொல்லு

நா No.10…..

ok, அப்ப ஞாயிற்றுக்கிழமை காலைல சீக்கிரம் போய்டுவோம். நீ ரெடியா இரு….

நா அவனிடம் ” ஏ நீ நெஞமா தான் சொல்றியா ” னு கேட்டேன்.

ஆமா 120 Km தான் வண்டிலே போய்டுவோம்..

அன்று காலையில் மிக அழகான சீதோஷனம், வெயிலே இல்லை. முழுவதும் சிறு சிறு தூரல் தான்.

நல்லா இருக்கிங்கலா ? கிரா என்று நாங்கள் விளித்த போது இருங்க இந்தா வரேன் என்று தன் மெலிந்த தேகத்தோடு, கையில் தடி கொண்டு எங்கள நோக்கி வரார். அவரின் சாய்ந்த நாற்காலியில் காலை நீட்டி உட்கார்ந்து கொண்டு…

என்ன கேட்டீங்க?

நல்லா இருக்கிங்களா, கிரா

இந்தா நானே சாப்பிட்ரேன், நடந்து வர்ரேன், உங்க முன்னாடி இப்படி கால நீட்டி உக்கார்ரேன். இதுக்கெல்லாம் நல்லா இல்லாம இருந்தா செய்ய முடியுமா? என்று முகம் முழுவதும் சிரித்துக் கொண்டே சொன்னார். எங்களுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

நான் அவரிடம் வாங்கி வந்த சிகப்புக் கொய்யா பழங்களை தந்தேன்.

என்னது இது,

சிகப்புக் கொய்யா…

ஓ.. ஆனா ரொம்ப சிறுசா இருக்கு. இப்ப வர்ர பழங்கள் ல எல்லாம் மருந்து. பின்ன எப்படி பெருக்கும். கல்யாணம் ஆன உடனே குழந்தை பெத்துக்க முடியுமா, பத்து மாசம் பொருக்க வேண்டாமா…. என்றார் சிரித்துக் கொண்டே…

சாப்பிட்களோ .. ஏன்னா நா இப்பதான் சாப்டேன்,

சாப்பாடாச்சு……

“ராகங்களை ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணபெருமாள் ராமானுஜம்” இதுதான் உன் பேரு… என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே பரவாயில்லையே…. ஆமா அதா என் முழு பேரு,

நாங்குநேரி வானமாமலை ஜீயர் தெரியுமா உங்களுக்கு அவரு என்னை இப்படித் தான் கூப்பிடுவார்….

பொதுவாக வைஷ்ணவர்கள்  பெரும்பாலான பேரு,  பெருசு பெருசா தான் வப்பாங்க….

எங்க குடும்பத்துல இராமானுஜர ரொம்ப பிடிக்கும் அதனால இராமானுசர் னு முடியிர மாதிரி பெயர் வைத்து இருக்கு எனக்கு….

அப்போ உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?

என்ன! நம்பித் தான் பார்ப்போமே இப்ப என்ன வந்துச்சா…

வாழ்க்கையில் எதையாவது நம்பிக்கை நல்ல ஒரு பிடிமானம் வேண்டுமா இல்லையா, நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கு னு எல்லாரும் சொல்றாங்க நாமளும் நம்பி ைவப்போம்…. கடவுள் இருக்கா இல்லையா அப்படின்னு எனக்கு தெரியாது… நீங்க பார்த்தீங்கன்னா புத்தர்ட்ட ஒருத்தன் இந்த கேள்விய கேட்டான். கடவுள் இருக்கிறாரா அவர் ஒண்ணுமே சொல்லல… பேசாம இருந்தார். புத்தரே  கடவுள் இருக்காரா சொல்லுங்க… அவர் தியானத்தில் இருந்தார். ரொம்ப நேரமாச்சு. கடவுள் இருக்காறா இல்லையா இப்படி ஏதாவது சொல்லுங்க. அதுக்கு அவர் ஒண்ணுமே சொல்லல. கேட்டவன் பொறுமை இழந்து போய் விட்டான். இப்ப புத்தர் கண்ண தொறந்து போய்டானா…

சீடர்கள் எல்லாரும் ஏன் நீங்க பதிலே சொல்லல.. னு கேட்டாங்களா அதுக்கு அவர் தெருஞ்சா சொல்ல மாட்டேனா..

இப்ப அவன்ட இருக்கு அப்படி இப்படி சொல்லிட்டா காமிங்க அப்படிம்பான். சரி இல்ல அப்படின்னு சொல்லிட்டா எப்படி நீங்க இல்லைன்னு சொல்றீங்க அப்படிப்பான்.  எனக்கே தெரியல அவன்கிட்ட என்ன சொல்லிக்கிட்டு அதான் ஒன்னும் சொல்லல … அப்படின்னா ரா …. கேட்டேளா…. சிரித்துக் கொண்டே….

உங்களுக்கு இசை மேல ரொம்ப பிரியம் ல…

எனக்கு அது மேல பிரியம் தான் ஆனா அதுக்கு ஏன் மேல பிரியம் இல்லாம போச்சே எனக்கு பாடவே வராது….

விளாத்திகுளம் சாமிகள் தானே உங்க குரு ?

குரு தான் ஆனா நீங்க என்கிட்ட வந்து அவர்ட என்ன படிச்சிருக்க அப்படின்னு கேட்டா என எனக்கு தெரியாது நான் அவருட படிக்கவே இல்ல நான் எப்படி குருன்னு சொல்ல முடியும் மரியாதை, மிகப்பெரிய மரியாதை அவர் மேல எனக்கு இருக்கு ஒரு பெரிய ஆளு….

இங்க ஒருத்தர் இருந்தாரு அவரு ஆக்சிடெண்ட்ல செத்து போயிட்டாரு அவர் பெயர் என்ன இப்ப ரொம்ப மறந்து போயிடுது…. என்ன அவர் பேரு ?

“மகாராஜபுரம் சந்தானம்” என்றேன்.

ஆ மகாராஜபுரம் சந்தானம் அவர்தான்…. அப்ப பெரிய ஆள் அவர். எங்க ஊருல சிலோன் ரேடியோ கேட்கும் நான் போய் ரேடியோ பக்கத்துல நின்னு கெடுக்க அப்ப எனக்கு ஒரு பதினேழு 20 வயசு இருக்கும் அப்படி பாடுவாரு தியாகராஜ கீர்த்தனை எல்லாம் அவருக்கு அத்துப்படி அவரை தில்லானா பாடுவாரு நான் அவரைப் பார்த்தது கிடையாது, ஆனா அவர் குரல் எனக்கு ரொம்ப பழக்கமாயிடுச்சு…..ரொம்ப நாளுக்கு அப்புறம் டிவி வந்தது. அதுலயும் சிலோன் சேனல் உண்டு. அப்போ ஒருத்தர்  பாடிக்கிட்டு இருக்காரு….நான் கேட்கிறேன், யாருய்யா இவரு அப்படின்னு கேட்டா இவர்தான் சந்தானம் அப்படின்னாங்க. எனக்கு அதிர்ச்சியா போச்சு (சிரிப்பு)

இவர் எப்படி சந்தானமா இருப்பாறு.. ஆள் அப்படி ஒன்றும் சரியில்லையே.

ஆளு சரியில்லைன்னா சந்தானம் இவறு இல்ல னு ஆகிடும்மா? அப்படின்னாங்க.

எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. ஆளு என்ன இப்படி இருக்கார்… சரி தான் போ…விட்டுட்டேன். ஆனா பிரமாதமா பாடுவாரு….

அவரு கார்ல போய்டு இருக்கும் போது முன்னாடி ஒரு லாரில கம்பி நீட்டிட்டு இருந்தது. இவர் மேல குத்திருச்சு. அப்படியே செத்துப் போய்டார்….. அவர் பாடின தியாக ராஜ கீர்த்தனை எனக்கு பிடிக்கும்.

உங்களுக்கு பிடிச்ச கீர்த்தனை சொல்லுங்களேன்?

கீர்த்தனையா…. அப்படி எப்படி சொல்றது.

பஞ்ச ரத்ன கீர்த்தன ல கடைசி பாட்டு இருக்கே… அது ???

எந்த ரோ மாகானுபாவலு, .,, என்றேன்.

ஆ….. அந்த பாட்டு தான். அந்த பாட்டு பிடிக்கும். மரு கேலரா ஓ ராகவா ன்னு ஒரு பாட்டு மகாராஜபுரம் பாடியிருப்பார், அது என்னமோ ஒரு ராகமே?

ஜெயந்தி ஸ்ரீ ராகம் என்றேன்.

அந்த பாட்டு எனக்கு பிடிக்கும்.

இப்ப கேப்பீங்களா?

அப்ப அப்ப கேட்பேன்…. இந்த Whats app, facebook எல்லாம் படிக்கனும் னு ஆசை… அப்பப்ப பாபுட்ட கேப்பேன். (அவர் இளவெனில சொல்றார்)

காரு குறிச்சி நாதஸ்வரத்த நேர்ல கேட்டிருங்கங்களா ?

அவர்னா எனக்கு உசிரு…. எங்க வீட்டு பக்கத்து வீட்டு பெண்ண தான் அவரு கல்யாணம் முடுச்சுருக்கார். பெரிய ஆளு…

தஞ்சாவுர் இசை மட்டும் தான் எல்லாருக்கும் தெரிந்தது. அப்பயும் அப்படித்தான். அதுல இருந்து மாத்தி காரு குறிச்சி வந்தாரு. ரொம்ப பெரிய மேதை. கலைஞர் கருணாநிதி யோட அப்பா முத்துவேலர், அவரும் ஒரு இசை மேதை, அவர்ட்ட TNR லாம் படிச்சிருக்கார். அவர்ட்டயும் காரு குறிச்சி படிச்சார். அது ஒரு காலம். வானம் பார்த்த பூமில அப்பப்ப தூறலா அவர் இருந்தாரு.

நீங்க அவர் பாட்ட கேட்டிருக்கீங்களா? என்றார். youtube ல கேட்டிருக்கேன்…

இப்ப நீங்க என்ன எழுதிட்டு இருக்கீங்க?

நா மிச்சக் கதைகள் அப்படி னு எழுதிகிட்டு இருக்கேன். நா எழுதின பழைய கதைகள்ள சொல்லாதத இப்ப எழுதுரேன்.

நீங்க தான் வட்டார வழக்க மொதல்ல எழுதுனது?

ஆமா… அப்ப இதெல்லா ஒரு எழுத்தா அப்படின்னாங்க… இப்ப முன்னோடி ங்காறாங்க…. என்ன செய்ய. மொழி என்ன பெரிய மொழி. நானும் கு.அழகிரிசாமியும் பக்கது வீடு. ரெண்டு பேரும் தெலுங்கு. அவன் வீட்ல மோருக்கு வேற பேரு, எங்க வீட்ல வேற பேரு… அவன் தான் சொல்றது  சரினு சொல்வான். நா நான் சொல்றது தான் சரினு நா ெசால்லுவேன். என்ன பெரிய மொழி… நா இங்க பல்கலை கழகம் வந்தபோது கூட பல பேரு இது வட்டார வழக்கு னு கூப்பாடு போட்டாங்க. இப்ப தூக்கி கொண்டாடுகிறாங்க….

கடித இலக்கியமும் நீங்க தான் அறிமுக படுத்தியது ?

நாங்க மொத்தம் எட்டு பேர். நா ஒரு நோட்ல கடிதம் எழுதுவேன். அத அழகிரிசாமிட்ட கொடுப்பேன். அவன் எழுதி தி.க.சி ட  கொடுப்பான். அவரு சுந்தர ராமசாமிட்ட இப்படி ஒரு சுத்து… கடைசில ஏன்ட வரும். ஒரு செலவு இல்ல பாத்தீங்களா !!!

அரை நூற்றாண்டுக்கு மேல இடைசெவல் வாழ்க்க! இப்ப ஒரு முழுமையான நகர வாழ்க்க! எப்படி ?

அது ஒரு தினுசு இது ஒரு தினுசு ….. இடைசவல்ல இப்ப யாரு இருக்கா… எல்லா மாறிருச்சு… நா பாத்த வீடு இப்ப இல்ல… மனுச பயலுக இப்ப இல்ல. முக்கியமா அழகிரிசாமி இல்ல. ( முகம் சோர்வாகிறது, கொஞ்சம் மெளனம்) அவன் கடைசில யாரும் இல்லாம செத்தான். கையெல்லாம் சொறி மாதிரி வந்துருச்சு… ரொம்ப கஷ்டம் அப்பல்லாம், என்ன செய்ய வாழ்க்க பல பேத்துக்கு வித்தியாசப்படுது.

இன்னும் ஒங்களுக்கு சொல்ல, எழுத நிறையா இருக்கா?

ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் ஒரு கத இருக்கு கேட்டேளா. எங்க ஊர்ல ஒருத்தன் இருந்தான். அவன் ஒரு நாள் இந்த நிலா சில நாள் வராம இருக்கு அது ஏன் தெரியுமா? அதுக்கு பின்னாடி ஒரு கத இருக்கு. இந்த ஊர்ல ஒரு கொடுமைக்கார மாமியா ஒருத்தி இருந்தா. அவ மருமகள விடிய விடிய வேல வாங்குவா. அதான் நிலா வெளிச்சம் இருக்குல டீ , வேல பாரு அப்படிம்பா. இந்த மருமகளால சுத்தமா முடியல. அப்ப இந்த நிலாட்ட இவ சொன்னாலா என்னன்னா, நீ தெனம் வர்ர தாலத்தான நா வேல பாக்க கிடக்கு. நீ வராம இருக்க மாட்டியா அப்படீனாள்ளா. ஒடனே அது மாசத்துல சில நாள் வராம ேபாய் ருச்சா…. (சிரிப்பு) இப்படி ஒரு கத அவேன் சொல்றான். இதுக்கு நம்ம என்ன சொல்ல முடியும்.

இப்படி எல்லார்ட்டயும் ஒரு கத இருக்கு.

அண்டரண்டபட்சி முடுச்சுச்சா ?

ஆமா. அவர் ப்ரபி என்று தன் பையனை அழச்சு அவங்களுக்கு கூடு. என்றார்.

வெளிநாட்டுல பைரன் ன்னு ஒரு கவிஞர் இருந்தாரு. அவரு ஒன்னு எழுதினாரு. அதை எழுதிட்டு பார்த்தார். இதை வெளியே விட்டால் அப்புறம் சண்டைக்கு வருவாங்க. ஆனா வெளியே விடணும்னு ஆசையா இருக்கு. என்ன பண்ண அப்படின்னு யோசிச்சிட்டு,இதை கையெழுத்துப் பிரதியாகவே கொடுத்துருவோம்.யார் யார் கேட்கிறார்களோ அவர்களுக்கு. இப்படியே கொடுத்துருவோம் னு அப்படியே கொடுத்தார். அதே மாதிரிதான் இதையும் கொடுக்கப் போறேன். இது புத்தகமா வராது. என் கையெழுத்து அப்படியே இருக்கும் யாராவது தேவை பட்டவங்க வந்து ஜெராக்ஸ் போட்டு வாங்கிடனும். இத வெளியை புத்தகமா வித்தா ரொம்ப பரபரப்பா விற்க்கும். ஏன்னா இதுல நான் சொன்னது காமத்தை பத்தி சொல்லி இருக்கேன்.ஆனா எனக்கு வெளியே விட வேண்டும் ஆசை இல்லை இப்படியே இருந்துட்டு போகட்டுமே இப்ப என்ன…

நான் அவர்ட்ட கடைசியில் ஒன்று கேட்டேன்.

கி.ரா உங்களுக்கு மரணத்தைப் பார்த்து பயம் இருக்கா?

இப்ப பாத்துக்கிட்டீங்கனா யமன் வர்ரான்னு வச்சுக்குவோம். நாம தீவிரமா ஏதாவது வேல பாத்துட்டு இருந்தோம் னா போய்ருவான். நா இப்ப எழுதிக் கிட்டு இருக்கேன். அதுனால வரமாட்டான். நா முடுச்சா வருவான். என்றார்.

ஒன்னு சொல்றேன் கல்யாணம் முடிக்காதீங்க. முக்கியமா கொழந்த பெத்துக்காதீங்க. பெரிய அலப்பற அது. இது என்னோட அனுபவம் கேட்டேளா!!! இதெல்லாம் சொன்னா சண்டைக்கு வருவாங்க. ரெண்டாவது பாலியல் சிக்கல பத்தி இதுல எழுதியிருக்கேன். படிச்சுட்டு பதில் கண்டிபா போடுங்க.

நாங்கள் கிழம்பும் போது “அப்புறம் வெளிய எங்கயும் சாப்டாதிங்க. ஒரு அவல் பாக்கேட், தண்ணி வச்சுக்கோங்க, கொஞ்சம் நாட்டு வெல்லம். போதும். அளவா சாப்டுடுங்க.

என்று எங்களுக்கு விடை கொடுத்தார்.

உங்களுக்குள்ள ஒரு குழந்த இருக்கு கிரா என்று சொன்னபோது, ஆமா அத நான் கொல்லாம இருக்கேன் என்று சிரிப்போடு சொன்னார். நாள் முழுவதும் கேலியும் கிண்டலும் சிரிப்புமாக நிறைந்து இருந்தது. வீட்டிற்கு வந்து தூங்கும் போது கடலைப் பார்த்து கால் நனைத்து சிளிர்த்த அனுபவம் எப்படி இருக்குமோ அப்படி நினைப்போடு கண் அயர்ந்தேன்,அந்த நாளை அர்த்தப் படுத்திய 100 வயது இளைஞன் நினைப்போடு……

(உடன்  நண்பர்கள் சந்தோஷ், கவிஞர் திரைப்பட இயக்குனருமான சாம்ராஜ், விவேக், இதில் சாம்ராஜ் மற்றும் அவரது நண்பர் விவேக் எதிர்பாரா விதமாக வந்தார்கள். அவர்கள் சந்தித்துப் பேசியதும், அவர்களும் கி.ரா விடம் உரையாடியதும் மனம் நிறைவுகொள்கிறது)

(இது அவரோடு பேசியதில் இருந்து சுருக்கி எழுதியுள்ளேன்.)

உ. முத்துமாணிக்கம் 

கி.ரா.அஞ்சலிகள்

முந்தைய கட்டுரைகண்ணீரும் கனவும்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 14