வெண்முரசு ஆவணப்படம் – அனுபவம்

வெண்முரசு ஆவணப்படம் – கடிதம்
வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு – பதிவு

அன்புள்ள ஜெமோ,

பொதுவாகவே ஆவணப்படங்கள் பார்ப்பது என்பது அந்தரங்கமான அனுபவம். ஒரு புத்தகம் வாசிப்பது போல், அந்தி வானில் ஒழுகும் ஒளிகளை  விழி வழியாக உள்ளம் ஏந்துவது போல், ஓடும் நதியில் நின்றிருப்பதை போல், மலையின்  உச்சியில் மேகத்தில் மறைவது போல்.

திரையரங்கில் வெண்முரசு சிறப்பு காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று ராஜன் அழைத்தபோது ஒரு நிமிடம் புரியவில்லை. அந்த எண்ணம் விளைந்த நிலம் எதுவென்று தெரியாது ஆனால் அது விஸ்வரூபம் எடுத்து விருட்சமாய் தெரிந்தது அப்படத்தை அங்கே கண்ட போது. கோயிலை சுற்றி இருக்கும் மாடவீதிகள் போன்று ராலேக்கு பக்கத்தில் சார்லட் இருப்பது ஒரு சுக சௌகரியம்.

திரையிடல் நாள் காலையிலே உங்கள் ஓஷோ உரையோடு கிளம்பிவிட்டேன். தனியாக செல்லும் நீண்ட பயணங்களில் பாடல்கள் தான் உற்ற தோழமை. மாறுதலுக்கு இந்த புதிய முயற்சி நல்ல பலனை கொடுத்தது என்றே சொல்லவேண்டும். மதியம் ராஜன் வீட்டில் உணவோடு ஒட்டிய உரையாடலில் பெரும் ஆர்வத்தை பரிசோதிக்கும் தருணங்களைப் பகிர்கையில் – கடைசி இரு தினங்களில் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய நண்பர்கள் கூடி இறுதியில் திரையரங்கில் தங்கி சரி செய்ததை நகைச்சுவையோடு தெளித்து கொண்டிருந்தார். கடும் உழைப்பை கோரும் நிகழ்வுகள் சிறிது நாட்களுக்கு பிறகு கேளிக்கையாய் தான் நினைவில் தங்கும்.

அரங்கிற்கு சென்றதுமே விழா மனநிலை பற்றிக் கொண்டது. நண்பர்கள் சூழ இருத்தலே இனிமை சேர்க்கும். இதில் வெண்முரசிற்காக என்பது இன்னும் இனிமையை கூட்டியது. இந்த கோவிட் காலத்தில் இணைய வழி கூடுகை தொடர்ச்சியாக நிகழ்ந்திருந்தாலும் நேரில் காண்பது என்பது தனிச்சுவை தான். ஆவணப்படத்திற்காக மொழியால், இசையால், காட்சியால் உதவி நல்கிய நண்பர்கள் மூவருக்கு மலர் நன்றியுடன் திரையிடல் தொடங்கியது.

ஒரு பாடல், நாவலை பற்றி பலரின் பதிவு என 90 நிமிடங்கள் நீளும் இப்படத்தை நாவலை பற்றி முழுவதும் அறிமுகம் இல்லாதவர்கள்,  சிறிது தெரிந்து தெரியாது இருப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்ற சிறு சந்தேகம் இருந்தது. ஆனால் மிக சிறந்த வணிக சினிமாக்களின் நேர்த்தியும், கலையின் ஆழத்தை அழகை சிறிதும் சமரசம் இல்லாது படைக்கப்பட்ட உன்னத படைப்பு. தொடக்கத்தில் வரும் அந்த title card பெரிய திரைக்கு உரியது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் எழுதிய இப்படைப்பை குறித்து உலகம்  முழுவதும் சேகரித்த நன்மணிகளில்  நயமானதை  பார்த்து பார்த்து எடுத்து செய்த அணிகலன். சக எழுத்தாளர்கள், கலைத்துறையை சேர்ந்தவர்கள் மத்தியில்  வாசக நண்பர்களுக்கு பெரும் இடத்தை இப்படம் அளித்திருக்கிறது.

வெற்று புகழுரை எல்லாம் இல்லை, தான் புரிந்து கொண்டது, பிறவற்றோடு உண்டாக்கும் தொடர்பு, தன்னளவில்  அது எப்படி ஒரு பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறது, தன் சுற்றத்தில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் என ஒவ்வொருவரின் பதிவுகளும் இயல்பான நெருக்கத்தை அளித்தது. இருபது மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாய் சுருக்குவது என்ற  சவாலை எதிர்கொண்ட உழைப்பை படத்தொகுப்பு எஞ்ஞான்றும் பறைசாற்றும். விட்டுப்  போனவைகளை  சிறிது நாட்கள் கழித்து பகுதி பகுதிகளாய் வலையேற்றம் செய்யலாம்.

நிறைவாய் முழு நாவலையும் ஐந்து நிமிட இசைக்கோர்வை மொத்தமாக அள்ளி அனைத்திருக்கிறது. அஸ்தினாபுர வாயில், அம்பையின் அனல், தன்னோடு சமர் செய்யும் பீஷ்மர், துவாரகையின் அலைகள், இளநாகனின் மீட்டல், கள்வனின் குழல், பகடைகள் வஞ்சினம், எல்லாம் தின்றும் தீரா தழல் என்று 26 நாவல் வரிசையை மின்னல் ஒளியில் ஒரு கணம் தெரியும் மலை முகிடு என  கொண்டு வந்திருக்கிறார்.

ஆவணப்படங்களுக்கான நல்லதொருஅளவுக்கோலை நிறுவியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது இருக்கும் இருள் முடிந்து இயல்பு திரும்பியதும் அங்கே ஒரு திரையிடல் இருக்கும் என்றே நம்புகிறேன்.கொண்டாட்டத்தோடு கூடுகை மீண்டும் தொடரட்டும்.

இத்தகைய ஒரு கருத்தை  முன்னெடுத்து, தன் எல்லையின் முனை வரை சென்று, மிக சிறப்பான ஆவணப்படத்தை உருவாக்கி  பெரும் அனுபவத்தை அளித்த  ராஜன், சௌந்தர் மற்றும் திரைமறைவில் இவர்களுக்கு உறுதுணையாய் இருந்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். –

வி.வெங்கட பிரசாத்

வெண்முரசு விவாதங்கள் இணையதளம்

முந்தைய கட்டுரைவெண்முரசு ஆவணப்படம் திரையிடல்- நியூஜெர்ஸி
அடுத்த கட்டுரைஇரவு- ஒரு வாசிப்பு