ஊதிப்பெருக்கவைத்தல்

ப்ரியமுள்ள ஜெ,

உபயகுசலோபரி.

அகில லோகமும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த ஊரடங்கு காலத்தில் சாக்ஷாத் இதே போன்றதொரு நாவல் எழுதினால் உங்கள் ஆப்தர்களுக்கு எத்தனை ஸௌகரியமாய் இருக்கும் . சீக்ரமாக விக்ஞாபனம் விடுக்கவேணும் என்று அபேக்ஷை.

நமஸ்காரங்களுடன்

ஶ்ரீனிவாஸன்

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

சமீபத்தில் இந்த புத்தக அட்டையை பார்த்தேன். இறந்தவர்கள் எப்படி பேசமுடியும்? பழைய புத்தகங்கள் வழியாகத்தான், வேறெப்படி? அவர்கள் வாழும் நிலை என்ன? பழைய கதைகளில்தான். புதிய உலகம் மாறிவிட்டதை தெரியாமல் இருந்துகொண்டே இருக்கலாம். முடிவில்லாமல் காதலிக்கவேண்டுமென்றால் புத்தகத்தில் கதாபாத்திரமாக ஆகவேண்டும். ஆனால் ஜானகிராமன் மாதிரியானவர்களிடம் சிக்கலாகாது. கடைசிப்பக்கத்தில் இதுக்காகத்தானா என முடித்து எஞ்சிய நாள் முதல் இதுக்குத்தானா என அமரவைத்துவிடுவார்கள்.

அந்தக்காலத்திலேயே புத்தகங்களுக்கு சந்தோஷ சாகரத்தில் மூழ்குதல், கவலைகளை மறக்கடித்தல், ஓய்வுக்காலத்தை ஸுகமாக கழித்தல் போன்ற பயன்கள் இருந்திருப்பது ரோமாஞ்சத்தை  உண்டுபண்ணுகிறது. ஆனால் காதலர்கள் உத்ஸாகமாக இருப்பதற்கும் மேற்படி வஸ்து பயன்பட்டிருக்கிறது என்பது ரோமஹர்ஷத்தை அளிக்கிறது. அப்படி உத்ஸாகமாக இருந்த காதலர்களைப் பற்றி மேலதிகச் செய்திகள் ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. பாவம், கிழடுகட்டைகளாகி மண்டையைப்போட்டிருக்கவே வாய்ப்பு.

எவ்வளவு கலைச்சொற்கள்! இது ஓர் அனுபவ ஆசிரியரால் எழுதப்பட்டது. இப்படிச் சொல்லும் துணிவு தமிழில் சாரு நிவேதிதாவுக்கும் இருக்கிறதா? நவரசாலங்கிர்தம். ஓர் அற்புதமான கலைச்சொல். இனிமேல் இலக்கியவிமர்சனங்களில் பயன்படுத்தப்படலாம்.நாவலபிமானியும் நல்ல சொல்தான். தட்பவெப்பமானி மாதிரி.

சிறந்த கலவை. காதற்சொற்பொழிவுகளுடன் கூடிய துப்பறியும் நாவல்.ஊணுறக்கம் முதலிய எவ்வித தேகபாதைகளும் இல்லாமல் படிக்கலாம். வேறுவகை தேகபாதைகளுக்கு கேரண்டி உண்டு.ஒருமுறை படிப்பின் சதா மகிழ்ந்து மகிழ்ந்து உள்ளம் நெகிழத்தக்கது!

அந்தக்கால புத்தகங்களை பார்க்கையில் வியப்பு. மூலிகைஜாலரத்தினம் நூலுக்கு ஆசிரியர் பெயர் இருந்த அதே பாணியில் நவீன இலக்கியத்திற்கு ஆசிரியர் பெயர் இருந்தால் எப்படி இருக்கும்? புதுமைப்பித்தன் என்கிற திருநெல்வேலி சொ.விருத்தாஜலம் பிள்ளை மரபில் வந்த கந்தாடை நாராயணஸ்வாமி ஸுப்ரஹ்மணிய அய்யரவர்களிடமிருந்து கற்றுக்கொண்டு நாகர்கோயில் வேப்பமூடுவாஸி ஸ்ரீ ஸுந்தரராமஸ்வாமி அய்யரவர்கள் எழுதிய மனோரஞ்சிதமான கல்பனாகிரந்தம்ஜே.ஜே.சிலகுறிப்புகள்’. அபூர்வமான கதாபாத்ரவிசேஷங்களும் ஹாஸ்யங்களும் அனேக ஜீவிததத்வரஹஸ்யங்களுமடங்கியது”.

அந்தக்காலத்தில் அமெரிக்காவில் புத்தக விளம்பரங்கள் பரவலாகவே இருந்திருக்கின்றன. எழுத்தாளர்களின் நினைவகங்களில் அவர்களின் புத்தகங்களின் விளம்பரங்களின் நகல்களைக் கண்டேன்.  “Almost everyone has read!!!” என்று ஒரு விளம்பரம். பஞ்சாங்கமோ பாடப்புத்தகமோ அல்ல. நாவல்! ஜான் ஸ்டைன்பக்கின் The Grapes of Wrath பற்றியது என்று ஞாபகம். அத்தனைபேரும் படித்தபின் நான் ஏன் படிக்கவேண்டும், நாலுபேரிடம் விசாரித்துக் கொள்கிறேன் என்றுதான் நினைக்கத் தோன்றும்.

நினைவிருக்கட்டும் இந்த பெயர்!

மை நேம் இஸ் மெய்லர், நார்மன் மெய்லர்

அந்த பொற்காலம் நீடிக்கவில்லை. நீடித்திருந்தால் இன்றைக்கெல்லாம் எப்படியெல்லாம் விளம்பரம் செய்திருக்கலாம். “உங்கள் வீட்டை தலைகீழாகப் புரட்டிப்போட்டு மறுபடி அடுக்கவே முடியாதபடிச் செய்யும் டிரான்கிரேஸிவ் எழுத்து!!!”. எழுத்தாளர்கள் கூட ‘வழங்கும்’ போட்டுக்கொள்ளலாம். புரட்சிக்கதிர் ‘சு.வெங்கடேசன் வழங்கும் வேள்பாரி” நெல்லைப் பக்கம் இந்நாவலை வேய் பாரி என அழைக்கிறார்கள் என்பது உண்மையல்ல.

நார்மன் மெய்லரின் புத்தகத்தின் அடியில் மலச்சிக்கல் வந்த முகத்துடன் இருக்கும் கோட்டுச்சித்திரம் யாருடையது? படித்து கருத்து தெரிவித்த ஃபிலடெல்பியா இன்குயரர் இதழின் விமர்சகராக இருக்குமோ? அவர் நேக்கட் ஆக இல்லை. ஆகவே டெட் ஆக இருக்க வாய்ப்புண்டு. ஆலீஸ் இன் ஒண்டர்லேண்டை பிரட் ஜாமுடன் படிக்கவேண்டும் என விளம்பரம் செய்திருக்கிறார்கள். பிரட் ஜாம் இலவச இணைப்பு. ஊசிப்போனால் திரும்ப பெற மாட்டாது.

சில விளம்பரங்களைப் பார்த்தால் என்ன இது மொக்கையாக இருக்கிறது என்று தோன்றுகிறதுஏர்னஸ்ட் ஹெமிங்வே என்றாலே ஸ்பானிஷ் எருதை பச்சைகுத்திக் கொண்ட ஒரு stud என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. நியூயார்க்கில் ஒரு  ‘பொம்மை’க் கடையில் வெவ்வேறு மெய்யான ஸ்டார் ஆண்களின் ஆண்குறிகளை மாடலாக கொண்டு உருவாக்கப்பட்ட டில்டோக்களை வைத்திருந்தார்கள். [குறியீட்டியல்].ஒரு நண்பர் சொன்னார், முன்பொருநாள் ஒரு அதிதீவிர இலக்கியவாசகி வந்து ஹெமிங்வேயின் மாடல் இருக்குமா என்று கேட்டாள் என்று.அப்பேற்பட்ட ஹெமிங்வேயின் நாவலின் விளம்பரத்தின் லட்சணம் இது. படியவாரிய தலை,டையெல்லாம் கட்டி, பொட்டுவைத்து பொங்கல் சாப்பிடுகிற மாதிரி. விளங்குமா அந்தப்புத்தகம்?

மேலே சொன்ன ரமாமணி புத்தக விளம்பரத்தின் முன்னோடியாக சில விளம்பரங்களைச் சொல்லலாம். இப்போதுகூட இந்த விளம்பரத்தின் பாணியில் நம் நாவல்களை விளம்பரம் செய்யலாம். “உங்கள் பார்வை சமூக யதார்த்தங்களை ஊடுருவட்டும்! எக்ஸ்ரே கண்களை அடைய  வாசியுங்கள் செஞ்சோற்று செந்தோழர் எழுதிய ரத்தப்பூக்கள்!”

மேற்கண்ட எக்ஸ்ரே கண்ணாடி மிகப்பெரிய வியாபாரமாக இருந்திருக்கிறது. தொடர்ச்சியாக நிறைய விளம்பரங்கள் கண்ணுக்கு தட்டுப்பட்டுக்கொண்டெ இருக்கின்றன.ஆனால் எதிர்ப்படுபவர்களை எலும்புக்கூடுகளாகப் பார்ப்பதில் என்ன இன்பம் என்று தெரியவில்லை. எலும்புக்கூடுகளை தசைகளுடன் பார்க்கும் கண்ணாடி இருந்தாலாவது திரிஷாவையெல்லாம் ரசிக்கமுயலமுடியும். ஆனால் ஒன்று, எக்ஸ்ரேயில் எல்லாரும் சிரித்த முகமாக இருப்பார்கள்.

ஆனால் இலக்கியவிளம்பரத்திற்குச் சிறந்த மாடல் என்பது இதுதான். ”ஊதிப்பெருக்கப்பட்ட கன்னிகள்!” அதுவே ஒரு நல்ல தலைப்பு. ஆனால் பின்னாளில் அந்த எழுத்தாளர் காலத்திரைக்குள் மறையும்போது “அன்னாரின் எழுத்து ஊதிப்பெருக்கப்பட்டது” என்று எவராவது அஞ்சலிக்குறிப்பு எழுதவும் நேரும்

ஆனால் ஒன்று, அந்த ரமாமணி நாவலை எழுதிய ஆசிரியர் யார்? ஆவியாக இருக்குமோ?

ஜெ

முந்தைய கட்டுரைஉரையாடுதல்
அடுத்த கட்டுரைடேனியல் லாபெல்