இன்று- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நண்பர் சக்திவேல் என் மனதில் இருந்ததையே அப்பட்டமாக சொல்லிவிட்டார். அவருடைய கடிதத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் இதைக்கூட எழுதி இருக்கமாட்டேன். எனக்குக் கூட உங்களோடு பேச ஆசை தான். ஆனால் என்ன பேசுவது என்று தெரியவில்லை. பயம். சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் zoom சந்திப்பில் இணைய முயற்சித்தேன். இடம் கிடைக்கவில்லை. அப்படிக் கூட்டத்தில் இருந்தபடி உங்களைப் பார்ப்பது வசதியானது.
ஆறு வருடங்கள் முன்பு வாசக நண்பர் த. ராஜனோடு பா. வெங்கடேசன் அவர்களைச் சந்தித்து தாண்டவராயன் கதை புத்தகம் வாங்கச் சென்றிருந்தேன். ராஜனும், அவர் நண்பரும், பா. வெ.வும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு வார்த்தை பேசாமல் அவர்களோடு நடந்து சென்று வந்தேன். அங்கிருந்து கிளம்பும்போது இரக்கத்தோடு பா.வெ. சொன்னார் “நீங்கள் நன்றாக கவனிக்கிறீர்கள்”. உண்மையில் அவர் பேசியதைக் கூட ஒழுங்காக கவனிக்கவில்லை. ராஜன் மகள், நீல வீதி போன்ற கதைகள் எழுதிய மனிதர் இவர் என்ற பிரம்மிப்பு தான் மனம் முழுக்க இருந்தது. என்னை அழைத்துச் சென்ற வாசக நண்பர்களின் உடல் மொழியையும் பேசும் விதத்தையும் தான் கவனித்துக் கொண்டிருந்தேன். ‘ஓ.. இப்படித்தான் ஒரு எழுத்தாளரோடு பேச வேண்டுமா’ என..
இது மேடைப்பயம் இல்லை என்று தோன்றுகிறது. அரசுப் பணித் தேர்வுக்குப் படிப்பவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். அப்போது வராத தயக்கமும் பயமும் இப்போது வருகிறது. இந்த இடத்தில் என் தகுதி என்ன என்ற கேள்வியில், சந்தேகத்தில் வரும் தயக்கம்.
பேசுவதில் மட்டும் இல்லை. வாசிப்பிலும் அந்தத் தயக்கம் உண்டு. Godel, Escher and Bach புத்தகம் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தீர்கள். ‘இதெல்லாம் ஆசான் படிக்கும் பெரிய புஸ்தகம்’ என்று எண்ணிக் கடந்துவிட்டேன். பிறகு வாசக நண்பர் ஒருவர் உங்களுக்கு எழுதிய கடிதத்திலும் அந்தப் புத்தகத்தைக் குறிப்பிட்டிருந்தார். இப்போது அதைப் படிக்கும்போது தான் தெரிகிறது கல்லூரிக் காலத்தில் இப்படி ஒரு புத்தகத்தைத் தான் தேடிக் கொண்டிருந்தேன் என.
ஏதோ ஒரு தைரியத்தில் எழுதிவிட்டேன். கொஞ்சநேரம் கழித்து அனுப்பலாம் என்று ஒத்திப்போட்டால் அனுப்பாமலே விட்டுவிடுவேன். அதனால் பிழை திருத்தம் கூட செய்யவில்லை. கடிதத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்,
பன்னீர் செல்வம்.
அன்புள்ள பன்னீர்செல்வம்,
பா.வெங்கடேசன் எழுத்தாளர்களில் சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், கோணங்கி, யுவன் சந்திரசேகர் என நீளும் ஒரு பட்டியலில் வருபவர். அதாவது அவரிடம் எவரும் எந்த தயக்கமும் கொள்ளவேண்டியதில்லை. எழுத்தை வாசிக்காமல் முருங்கைக்காய் பற்றியோ சைக்கிள் ரிப்பேர் பற்றியோகூட பேசலாம். மிகச்சுவாரசியமாக உரையாடுவார்கள். நாம் எப்படி எதை வெளிப்படுத்தினாலும் எரிச்சலடைய மாட்டார்கள், நாம் எரிச்சலடையாமல் இருக்க அவர்கள் கவனம் எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் அதற்கப்பால் சென்று உரையாடினால் அவர்கள் எழுத்தில் இருப்பதை விட கூடுதலாக உரையாடலில் சொல்வார்கள். நாஞ்சிலிடம் பழந்தமிழ் இலக்கியம் பற்றியோ பா.வெங்கடேசனிடம் நவீன அறிவியலின் கணிதம் சார்ந்த கொள்கைகள் பற்றியோ, அழகியல்கொள்கைகள் பற்றியோ யுவன் சந்திரசேகரிடம் நவீன இயற்பியலின் கொள்கைகளைப் பற்றியோ, இந்துஸ்தானி இசை பற்றியோகூட உரையாடலாம்.கோணங்கிக்கு தெரிந்த தமிழகச் சமூகவியல் ஓர் ஆய்வாளனால் நினைத்தே பார்க்கமுடியாதது.
ஏன் உரையாடவேண்டும்? முதன்மையாக அது நல்ல நினைவு. நான் என் இளமையில் எல்லாரையும் தயங்காமல் சென்று சந்தித்திருக்கிறேன். இன்று அனைவருமே வரலாற்றின் அடையாளங்கள் ஆகிவிட்டனர். அந்நினைவுகள் பெரும் செல்வமாக உள்ளன. க.நா.சு, சி.சு செல்லப்பா போன்றவர்களை நான் சந்தித்திருக்கிறேன். பஷீர், தகழி,சிவராமகாரந்த் ஆகியோரைச் சந்தித்திருக்கிறேன். இதெல்லாமே ஒருவகை வாழ்நாள் சாதனைகள்தான்.
அதற்கு அப்பால் உரையாடல்கள் வழியாக நம்மில் பல விஷயங்கள் தொடங்கப்படும். பல விஷயங்கள் திறக்கும். அது அப்போது தெரியாது, பின்னாளில் அங்கிருந்தே அதன் தொடக்கம் என்பது தெரியவரும். நான் அடைந்த உண்மையான அறிதல்கள் நேரில் கேட்டறிந்தவையே. அவை என்னில் வளர்ந்தன. முப்பதாண்டுகளுக்குப் பின்னரே கோவிந்தனும் நித்யாவும் என்ன கற்பித்தார்கள் என்பது புரிகிறது.
எழுத்தாளர்களில் ஒரு சாரார் அவர்களின் ஓர் அகவையில் ஆசிரியர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். ஆசிரியர்களாக எண்ணி அவர்களை அணுகுபவர்களுக்கு அவர்கள் உதவியானவர்கள். நூல்களின் வழியாக மிகச்சுற்றிச்சென்று நாம் அறிவன பலவற்றை அவர்கள் எளிதாக உணர்த்திவிடமுடியும். அதைவிட நாம் நூல்கள் வழியாக அடைந்திருக்கும் பல பிழையான புரிதல்களை நீக்கக்கூடும். நாம் தட்டித்தட்டி தளர்ந்திருக்கும் பல வாசல்களை அவர்கள் திறக்கக் கூடும். இப்போது கி.ரா ஏன் இத்தனை கொண்டாடப்படுகிறார்? ஏனென்றால் அவர் எழுத்தாளர் மட்டும் அல்ல, ஆசிரியரும்கூட. அவரிடம் அமர்ந்து பயின்றவர்களின் மூன்று தலைமுறை இங்குள்ளது. கோணங்கி அதனாலேயே அவரை முன்னத்தி ஏர் என்றான்.
ஆனால் தன்னை கருவிலேயே திரு என எண்ணி ஆணவத்தை ஆசிரியர்களை நோக்கி திருப்பி வைப்பவர்களுக்கு எதுவும் கிடைக்காது. எந்த எழுத்தாளனும் அவர்களை கையாள கற்றிருப்பான். சிரித்துவிட்டு அப்படியே சென்றுவிடுவார்கள். யுவனிடம் பேசினால் அவன் அந்த ஆணவத்தை அப்படியே பணிவுடன் ஏற்று கும்பிட்டு உபசரித்து அனுப்பிவிடுவான். ஆணவத்துடன் செல்பவன் யுவன் சந்திரசேகரை வென்றுவிட்டேன் என நிறைவுடன் திரும்பிச் செல்வான். பத்தாண்டுகள் யுவனுடன் நெருக்கமாக இருந்து, ஆனால் அவன் என்ன நினைக்கிறான் என்பதையே தெரிந்துகொள்ளாமல் தன் கருத்துக்களை அவனிடம் வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தவர்களை எனக்குத் தெரியும்.
நம் தோரணைகளை அகற்றிவிட்டு அணுகவேண்டும். நம்மைப்பற்றிய மிகையான பொய்யான பாவனைகளைக் காட்டக்கூடாது. முடிந்தவரை அச்சந்திப்புக்கு தயாரித்துச் செல்லவேண்டும். வேண்டுமென்றே எந்த தயாரிப்பும் இன்றி செல்லக்கூடாது. கூடுமானவரை கூரிய கவனத்துடன் ’கேட்க’ வேண்டும். அதுபோதும். நாமும் ‘ஒரு ஆள்’ என ஆனபிறகுதான் எழுத்தாளரைச் சந்திக்கவேண்டும், இல்லாவிட்டால் மதிக்க மாட்டார்கள் என எண்ணிக்கொள்வதெல்லாம் நம்முடைய அகந்தை மட்டுமே. நாம் இருக்கும் இடத்தை நாமே மதிப்பிட்டு, அதை ஏற்றுக்கொள்ளாமல் எப்படி அடுத்த அடியை எடுத்து வைக்க முடியும்?
இது இயல்பான சந்திப்புக்கு. அடுத்த நிலை என்பது இயல்பான கண்டனங்களுக்கும், சிலதருணங்களில் அவமதிப்புகளுக்கும் தயாராக இருப்பது. நம்மை சிறுமைகொள்ளச் செய்யாத, அதன் வழியாக நம்மை ஆழமாகப் புண்படுத்தாத நல்ல ஆசிரியர் இருக்க முடியாது. ஏனென்றால் நாம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் அத்தருணத்திற்குரிய தர்க்கநிலைபாடுகள், நம்பிக்கைகள், உணர்ச்சிநிலைகளை உருவாக்கி கொண்டிருப்போம். அது ஓர் உறைநிலை. அந்த கான்கிரீடை உடைக்காமல் அடுத்த நகர்வு சாத்தியமில்லை.
அந்த உடைவை நிகழ்த்தி அதன் வழியாகவே ஒர் ஆசிரியர் மெய்யான கல்வியை அளிப்பார். அந்த கான்கிரீட்டின் ‘சிமிண்ட்’ என்பது நம் ஆணவமே. ஆகவே மெய்யான ஆசிரியர்கள் ஆணவத்தின்மேலேயே தாக்குவார்கள். ஆகவே புண்படுத்தல் இருக்கும். பத்துக்கு ஒன்பதுபேர் ஆணவமே பெரிது என எண்ணி ஆசிரியரை விலக்கிவிட்டுச் செல்வார்கள். ஆசிரியரை நிராகரிக்கத் தேவையான எல்லா தர்க்கங்களையும் உருவாக்கிக் கொள்வார்கள். நித்ய சைதன்ய யதிக்கே இதுதான் நிலைமை.
ஆகவே பிரச்சினை என்பது உண்மையில் நம் தாழ்வுணர்சியா அல்லது ரகசிய ஆணவமா என்றுதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இப்படித்தான் பேசவேண்டும் என்ற எந்த வழிமுறையும் இல்லை. எப்படியும் பேசலாம், மெய்யாக பேசினால் போதுமானது. நீங்கள் பா.வெங்கடேசனைச் சந்திக்கும் வாய்ப்பிருப்பவர் என்றால் அதை பயன்படுத்திக்கொள்ளவும். அது உங்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமையும்.
*
எழுத்தாளர் அல்லது அறிவுஜீவிகளைச் சந்திப்பதற்கான சில நெறிகளை வகுத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒன்றுமில்லை, இப்படி வகுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்கும் என்பதனால்.
அ.எல்லா துறை அறிவியக்கவாதிகளையும் சந்திக்கவேண்டும். ஒரு பொது அறிவுஜீவிக்கு, இலக்கியவாசகனுக்கு, ஒரு தொல்லியலாளரைச் சந்திப்பதும் இதழ்சேகரிப்பாளரைச் சந்திப்பதும் எல்லாமே பயன்தருவதுதான். தனக்கு ஆர்வமிருக்கக்கூடிய துறையில் உள்ளவர்களை மேலதிகமாகச் சந்திக்கலாம்.
ஆ. நீண்ட கால உறவு தேவை. ஓர் அறிவியக்கவாதியுடனான நீண்டகால உறவே நமக்கு உண்மையில் உதவுவது. அவர் இயல்பாகி, எளிதாகி பேச ஆரம்பிக்கவேண்டும். உண்மையில் உரையாடல் அல்ல உடனிருத்தலே முக்கியமானது. நித்ய சைதன்ய யதியிடம் ‘நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்’ என்று நான் கேட்டேன். ’எதையும் கற்பிப்பதில்லை, அவர்களை உடனிருக்க அனுமதிக்கிறேன்’ என்று சொன்னார்.
ஓர் அறிவியக்கவாதி சிந்திக்கும்போது உடனிருந்தால் நம்மையறியாமலேயே அந்தச் சிந்திக்கும் முறையை கற்றுக்கொள்கிறோம். கற்கவேண்டியது அதுதான். சிந்தனைகள் நூல்களில் குவிந்திருக்கின்றன, சிந்தனைமுறையே ஆசிரியரிடமிருந்து கற்கவேண்டியது. ஆகவே கூடுமானவரை அடிக்கடி ஆசிரியரைச் சந்திக்கவேண்டும். நம்மில் அவருடைய முந்தைய சந்திப்பின் அலை அடங்குவதற்குள் மீண்டும் சந்திக்கவேண்டும்
இ. விவாதங்களை தவிர்க்கவும். ஆசிரியர் நிலையிலுள்ள முன்னோடியான அறிவியக்கவாதியுடன் ஆரம்பத்திலேயே விவாதிக்கக் கூடாது. என்ன ஆகுமென்றால் நாம் நம்மை முன்வைக்கும்பொருட்டு விவாதிப்போம். அது ஒரு பாவனைதான். ஆழமாக விவாதிப்பதாகக் காட்டிக்கொள்வோம். அல்லது அவர் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் நாம் அதுவரை அறிந்த அனைத்தைக் கொண்டும் எதிர்வினை ஆற்றுவோம். அதற்காக அறிந்த அனைத்தையும் அங்கே இழுத்துவருவோம்.
இதன் விளைவாக நிகழும் ஒரு பெரும் சிக்கல் உண்டு. நாம் எங்கோ நம் ஆணவத்தை வளர்த்துக் கொள்வோம். புண்படுவோம். புண்பட்டால் நம் தரப்பை இறுக்கிக்கொள்வோம். அது ஒரு கோட்டையாக ஆகி நம்மை சிறையிடும். நம்மைநோக்கி எதுவும் வராமலும் தடுக்கும். நம் கருத்துக்கள் நம்முடைய சொந்த தேடலால், நம் கண்டடைதல்களால் உருவாகவேண்டும். எதற்கும் எதிர்வினையாக உருவாகக்கூடாது.
விவாதம் நம்மையறியாமலேயே நாம் எடுக்கும் தரப்பை நம்முடைய் தரப்பாக நாம் நம்பச் செய்கிறது. உண்மையில் அது நம் தரப்பே அல்ல. நாம் ஒரு விவாதத்தில் நிற்கும்பொருட்டு எடுத்ததாக இருக்கும். விவாதித்துக் கற்கலாம், விவாதிக்கும் இடத்தை நாம் அடைந்துவிட்டோமா என்பதை அந்த ஆசிரியர்தான் முடிவுசெய்யவேண்டும், நாமல்ல.
சில ஆசிரியர்கள் விவாதத்தையே விரும்பாதவர்கள். சுந்தர ராமசாமியிடம் விவாதிக்கலாம், ஜெயகாந்தனிடம் விவாதிக்கவே முடியாது. எம்.கோவிந்தனிடம் விவாதிக்கலாம், ஆற்றூர் ரவிவர்மாவிடம் விவாதிக்கமுடியாது. விவாதிக்க முயன்றால் அவர்களை முழுக்கவே இழந்துவிடுவோம்.
ஈ.பின்னணி வாசிப்பு தேவை. ஓர் ஆசிரியருடன் பேசினால் அவர் சொல்வனவற்றை உடனே பிறநூல்களில் தேடி வாசிப்பவனே அந்த உரையாடலால் பயனுறுகிறான். அந்த் வாசிப்பு இல்லாமல் அவர் சொல்வதை மட்டும் கேட்டுக்கொண்டிருப்பவன் அருவி விழும் கல் போன்றவன் ஆயிரம் ஆண்டு ஆனாலும் அப்படியே அமர்ந்திருப்பான்.
ஓர் ஆசிரியரிடம் நாம் கற்கவேண்டியது அகவயமான கல்வியை. அதை வெளியே நூல்களில் கற்கமுடியாது. நூற்கல்வியும் உடனிருந்தால் அதில் எது விடுபடுகிறதோ அதை ஆசிரியரிடம் கற்போம். பொதுவாக கற்பதில் உள்ள பிழைபுரிதல்களை [fallacy]களை களைவதைத்தான் ஆசிரியர்களிடம் கற்றுக்கொள்கிறோம். எஞ்சிய கல்வி நாமே அடைவதே.
உ.அரசியல்வாதிகள் அறிவியக்கத்தின் ஆசிரியர்களாக முடியாது. இது சட்டென்று எதிர்க்கத்தோன்றும் கருத்து. ஆனால் அனுபவ உண்மை. நான் மகத்தான அரசியலியக்கத்தவரைச் சந்தித்து அடைந்த மெய்மை இது.
அரசியலைக் கற்க எவருடனும் பழக வேண்டியதில்லை.அது புறவயமாக பொதுவெளியில் உள்ள கருத்துநிலைபாடு மட்டுமே.அந்தரங்கமாக, நுட்பமாக, கற்றுக்கொள்ளவேண்டிய ஒன்றும் அதில் இல்லை. நான்கு புத்தகங்களே போதும். அந்தரங்கமாக கற்கவேண்டியவை கலை, இலக்கியம், தத்துவம், மெய்யியல் போன்றவை. இவற்றில்தான் புறவயமாகக் கற்கவேண்டியவற்றை விட கூடுதலாக அகவயமாகக் கற்கவேண்டியவை உள்ளன. ஒருவர் கற்றது இன்னொருவருக்கு பயன்படாது என்னும் அளவுக்கு அகவயமானவை அவை.
எத்தனை மகத்தானவராக இருந்தாலும் அரசியலில் மூழ்கியிருப்பவர் எவ்வகையிலும் அறிவியக்கத்திற்கான ஆசிரியர் அல்ல. அவர் முன்வைக்கும் அந்த அரசியலுக்கே கூட அவர் ஆசிரியர் அல்ல. அவர் மூர்க்கமான வேகத்துடன் ஓர் அரசியலை முன்வைக்கிறார். நாம் எதிர்க்கமுடியாத நிலையில் இருக்கிறோம், ஆகவே அவருக்கு அடிப்படுகிறோம். நம்மையும் ஒற்றைப்படையானவர்களாக ஆக்கிக் கொள்கிறோம்.
அத்துடன் அவர் நம்மை கடுமையான விருப்பு வெறுப்புகளுக்குள் தள்ளுகிறார். அந்த விருப்புவெறுப்புகள் கற்கோட்டையாக மாறி நாம் எதையுமே கற்கமுடியாமல் ஆக்குகின்றன. நமக்கு வளர்ச்சியோ மாற்றமோ நிகழமுடியாது. நாம் சட்டென்று அந்த அரசியல்கருத்தின் தளம் வரை வளர்கிறோம். அடுத்து வாழ்நாள் முழுக்க அங்கேயே நிற்கிறோம். கற்சிலை போல.
அத்துடன், என்றேனும் நம் சொந்த அனுபவத்தால் நாம் மாற ஆரம்பித்தால், வளர்ந்தால் துரோகிப் பட்டம் சூட்டப்படுவோம். அதுவரையிலான நண்பர்களை இழப்போம். கசப்புகளால் சூழப்பட்டு அவற்றுக்கு எதிர்வினையாற்றி நாமும் கசப்பு நிறைந்தவராவோம்.
அரசியல் நிலைபாடு என்பது நமக்கு ஒருவேளை நாமே கண்டடைந்து வரலாம். ஆனால் அரசியலை நம்பி ஏற்று அதன்வழியே சிந்திப்பவன் அறிவியக்கவாதி அல்ல, அரசியல்வாதி மட்டுமே. அவனுக்கு என்றாவது அதிகாரம் கிடைத்தால் அது அவனுக்கு லாபம். கிடைக்காவிட்டால் அவனுக்கும் லாபமில்லை, மற்றவர்களுக்கும் நன்மை இல்லை.
ஊ. பொதுவெளியில் விவாதிக்காதீர். ஓர் ஆசிரியருடனான உரையாடல்களை பொதுவெளியில், குறிப்பாக சமூக வலைத்தளத்தில் விவாதிப்பது பெரும்பிழை. அவை தனி உரையாடல்கள். உங்களுக்காகச் சொல்லப்பட்டவை. அவற்றை நீங்கள் தகுதியற்றவர்களுடன் பகிர்கிறீர்கள். அவர்களில் ஒருசாரார் வேண்டுமென்றே உளச்சிக்கல்களை உருவாக்கலாம். உங்கள் ஆணவத்தை தூண்டிவிட்டு கசப்பை உருவாக்கலாம். நீங்கள் புரிந்துகொண்டவற்றை திரித்து குழப்பங்களை உருவாக்கலாம்
நித்யாவின் சொற்கள்- ‘சரஸ்வதிக்குத்தான் எதிரிகள் மிகுதி’ ஒருவன் மெய்யான கல்வியில் ஈடுபட்டான் என்றால் அவனுக்கு தடையாக குடும்பம், நண்பர்கள், சமூகம், அரசு என எல்லாமே அணிவகுப்பதைக் காணலாம்.
ஜெ