கால்நூற்றாண்டுக்கு முந்தைய கதை. சொல்லச்சொல்ல பெருகுவதே உண்மையான கதை. ஏனென்றால் அது வாழ்க்கையின் திருப்பு முனைப்புள்ளி. அங்கிருந்து தொடங்கும் வாழ்க்கையில் அந்தக் கதையின் எல்லா சொற்களும் விதைகள் போல முளைக்கத் தொடங்குகின்றன. அந்தக் கதை நிகழ்ந்தபோது புரிந்திராதவை ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புரிதல்களுடன் எழுந்து வருகின்றன. இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும் நான் அந்த கதையை முற்றிலும் புதியதாகச் சொல்லிக்கொள்கிறேன். இன்னும் ஒருமுறை சொல்வேன் என்றால் சம்பந்தமே இல்லாத புதியகதையாகவே அது இருக்கும்.
காலையில் கோரன் தன் குடிலில் இருந்து இறங்கி வந்தபோது பங்களாவின் கதவு திறந்து கிடப்பதைக் கண்டான். நான் உள்ளே இல்லை. அவன் எல்லா இடங்களுக்கும் சென்று அழைத்தும் தேடியும் பார்த்தான். என் பொருட்கள் எல்லாமே அங்கே இருந்தன. அவன் வெளியே வந்து சேற்றில் காலடிகளுக்காகத் தேடினான். மழைபெய்திருந்தமையால் சுவடுகளே இல்லை. என்னை அழைத்தபடி அவன் புலிமடைக்கும் அங்கிருந்து பள்ளிக்கூடத்திற்கும் சென்றான். என்னைக் காணவில்லை.
கோரன் சென்று செய்தி சொன்னதும் கப்ரியேல் நாடாரும் நான்கு காணிக்காரர்களுமாக வந்து என்னை காட்டில் தேடிக் கண்டடைந்தார்கள். நான் காட்டுக்குள் ஓர் ஓடையின் கரையில் அமர்ந்திருந்தேன். என்னை அவர்கள் கண்டடைந்தபோது அவர்களை என்னால் அடையாளம் காணமுடியவில்லை. என் கண்கள் வெறிப்பு கொண்டிருந்தன. என்னால் பேசமுடியவில்லை. அவர்கள் என்னை அங்கேயே கைப்பிடியாக பற்றி இழுத்து கீழே கொண்டுவந்தனர்.
என்னை கோதையாறு குவார்ட்டர்ஸில் இருந்து ஜீப் வாங்கி அதில் ஏற்றி கொண்டுசென்று என் ஊரை அடைந்தனர். நான் என் அம்மா அப்பா இருவரையும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. தனக்குத்தானே பேசியபடி, தலையை ஆட்டியபடி, அவ்வப்போது அழுதுகொண்டும் சீற்றமடைந்து உறுமிக்கொண்டும் இருந்தேன். ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக ஏதோ சொன்னேன்.
என் அம்மாவும் அப்பாவும் கதறினர். ஏதோ மலைவாதை அடித்துவிட்டது என்று காப்ரியேல் நாடார் அம்மாவிடம் சொன்னார். எனக்கு பூசாரியைக் கூப்பிட்டு மந்திரவாதம் செய்து பார்த்தனர். குலதெய்வக் கோயிலிலும் மனச்சிக்கலுக்காக பூசைகள் செய்யப்படும் மற்ற கோயில்களிலும் வேண்டுதல்கள் நிகழ்த்தினர். நான் அதே நிலையில்தான் இருந்தேன். திடீரென்று எழுந்து வெளியே ஓடினேன். என்னை வயல்வெளிகளில் இருந்தும் தெருக்களில் இருந்தும் கண்டடைந்தனர். என் எதிரே எவரோ இருந்தார்கள் என்று அம்மா சொன்னாள், அவரிடம் நான் பேசிக்கொண்டே இருந்தேன் என்றாள்.
ஊரார் என்னை ஏர்வாடிக்குக் கொண்டுபோகும்படிச் சொன்னார்கள். என் சிற்றப்பா தாணப்பன் பிள்ளையும் அவர் மகன்களும் என்னை கைகளைக் கட்டி இழுத்துக்கொண்டுசென்று திருவனந்தபுரம் ஊளம்பாறையில் இருந்த மனநோய் விடுதியில் சேர்த்தார்கள். அங்கே டாக்டர் சசிகலா மேனோன் எனக்குச் சிகிழ்ச்சை செய்தார். முதல் ஒருவாரம் மருந்துகள் வழியாக மூளையை அமைதிப்படுத்தினார்கள். நான் தூங்கிக்கொண்டே இருந்தேன். அதன்பின் சீரான மருந்துகளும், ஓய்வும், சில பயிற்சிகளும். நான்கு வாரங்களிலேயே நான் மீண்டுவிட்டேன்.
எனக்கிருந்தது மெல்லிய ஸ்கிஸோஃப்ரினியா தாக்குதல்தான் என்றார் டாக்டர் சசிகலா மேனோன். எங்கள் குடும்பத்தில் அந்த பாரம்பரியத் தொடர்ச்சி இருந்தது. ஆகவே என் மூளைக்குள் அதற்கான விதை இருந்தது.அந்தக் காட்டுப் பங்களாவின் தனிமையில் அது முளைத்தது. அந்த வினோதமான புத்தகம் அந்த மனநிலைப் பிறழ்வுக்கு ஒரு வடிவத்தை அளித்தது. என்னை அதற்குள் உலவச்செய்தது.
மூன்றுமாதம் நான் ஊளம்பாறை மருத்துவமனையில் அங்கே இருந்தேன். அந்த தொண்ணூற்றாறு நாட்களும் என் வாழ்க்கையில் கரைந்து கரைந்து நினைவில் இருக்கின்றன. முதல் இருபது நாட்களும் நினைவில் இருந்து மறைந்தே போயின. மொத்தத்தில் கனவுகண்டவைபோல சில மழுங்கிய சித்திரங்கள் மட்டுமே என்னுள் மிஞ்சின. அதன்பின் வீட்டுக்கு வந்து மூன்றுமாதம் மாத்திரைகள் சாப்பிட்டேன். முழுமையாகவே மீண்டு விட்டேன். அதன்பின் எட்டுமாதம் அவ்வப்போது சென்று சசிகலா மேனனிடம் உரையாடல் சிகிழ்ச்சை எடுத்துக்கொண்டேன். என்னுடைய சிகிழ்ச்சை என்பது என் நிலைமையை தெளிவாகப் புரிந்துகொள்வதுதான் என சசிகலா மேனன் நினைத்தார். ஆகவே விரிவாகவே பேசினார்.
நான் அஞ்சியதுபோல என்னுடையது அரிதான நோயெல்லாம் இல்லை. மிகச் சாதாரணமான உளச்சிதைவுதான். பலருக்கும் சர்வசாதாரணமாக வந்துசெல்வதுதான். சொல்லப்போனால் அந்த நிலைக்குச் சென்று மீள்வதற்கான வாய்ப்பு நம்மில் நேர்ப்பாதிபேருக்கு இருந்துகொண்டே இருக்கிறது. அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கவேண்டும், அவ்வளவுதான்
எனக்கு அங்கே நிகழ்ந்ததை வைத்துப்பார்த்தால் அந்த நோயின் படிநிலைகள் எல்லாமே சரியாக இருந்தன. ஒரு நோயறிகுறிகூட தவறவில்லை. முதலில் நிகழ்வது ஒருவகை மிகையான ஆர்வமும், பதற்றமும், தொடர்சியான கிளர்ச்சியும். அப்போது நாம் எதிலாவது அசாதாரணமான ஆர்வத்துடன் ஈடுபட்டு அதிலேயே மூழ்கிவிடுகிறோம். தூக்கம் குறைகிறது. எப்போதும் ஒரே எண்ணம் நீடிக்கிறது.காதல் கொண்டதுபோல, எதையோ முக்கியமானதைச் செய்யப்போவதுபோல ஒரு மனநிலை முழுநேரமும் இருந்துகொண்டிருக்கிறது.
அது ஆரம்பநிலையில் ஒரு தீவிரம் என்றே நமக்குத் தோன்றும். அத்தனை கூர்மையுடனும் ஒருமையுடனும் நாம் எப்போதுமே இருந்திருக்க மாட்டோம். நம் மூளைத்திறனே பலமடங்காகிவிடுகிறது.ஆனால் அது உண்மையில் சிதைவின் தொடக்கம். ஒரு குச்சியை கல்லில் குத்திக்கொண்டே இருப்பதுபோல. அழுத்தம் கூடி மெல்ல குச்சி உடைந்து பக்கவாட்டில் விரிந்து சிதையத் தொடங்குகிறது.நம்மை அறியாமலேயே. நாம் மிக ஆரோக்கியமாக, ஆற்றலுடன், உற்சாகமாக இருக்கிறோம் என உணரும்போது உண்மையில் உள்ளே சிதைந்துகொண்டிருக்கிறோம்.
அச்சிதைவை உள்ளம் வெளியே இருக்கும் ஒரு பொருளின்மேல் ஏற்றிக்கொள்கிறது. அந்தப் பொருளில் நிகழ்வன எல்லாம் உண்மையில் நம் மூளையில் நிகழ்பவைதான். ஆனால் நம்மைப் பொறுத்தவரை அந்தப்பொருள் பெரிதாக ஆரம்பிக்கிறது. நம்மை முழுமையாக உள்ளே இழுத்துக்கொள்கிறது. நான் திருவனந்தபுரத்தில் சந்தித்த கேசவ பிள்ளை என்பவரிடம் அவருடைய வீட்டிலிருந்த ஒரு தூண் உரையாட ஆரம்பித்தது. கம்யூனிசம்கூட பேசியது.
நம் உள்ளம் தன் சிதைவுக்கு எதிராக தானே போராடுகிறது. தப்பிக்கும் பொருட்டு வெளியே உள்ள ஒரு யதார்த்த உலகை அழுத்தமாக அள்ளிப் பற்றிக்கொள்கிறது. அதனால்தான் நான் அந்த காணிக்காரர் பள்ளியில் அத்தனை உற்சாகமாக வேலை செய்தேன். சாதாரணநிலையில் அத்தனை தீவிரமாக நாம் எந்த புறவுலக வாழ்க்கையையும் கவனிப்பதும் ஈடுபடுவதுமில்லை. இந்தப்பக்கம் இருக்கும் உலகின் தர்க்கச்சிதைவுக்கு எதிராக மறுபக்கம் இருக்கும் அந்த அந்த வாழ்க்கையை மிகுந்த தர்க்கபூர்வமான புறவயமான ஒன்றாக ஆக்கிக் கொள்கிறோம். இங்கிருப்பது உயர் அறிவுத்தளம் என்றால் அந்த இன்னொன்று எளிமையானதாக இருக்கும். இரண்டு உலகங்களுக்கும் சம்பந்தமே இருக்காது. அனால் அவை ஒன்றையொன்று சமன் செய்பவை.
உளச்சிதைவின்போது தர்க்கபூர்வமாக நம் உள்ளத்தின் குலைவை அடுக்கி வைக்க முயன்றுகொண்டே இருக்கிறோம். நம் மூளையின் பெரும்பகுதி ஆற்றல் அந்த முயற்சியிலேயே செலவிடப்படுகிறது. உள்ளம் மிகுந்த விசையுடன் செயல்படுகிறது. நினைவின் தொகுப்புகளில் இருந்து தேவையான எல்லாவற்றையும் எடுத்துக் கொள்கிறது. எல்லா தர்க்கமுறைகளையும் வளர்த்துக் கொள்கிறது. அதற்காக தன்னை சவுக்காலடித்து விரட்டி வேகம் கொள்ளச் செய்கிறது.
ஆகவே எல்லா உளச்சிதைவு நோயாளிகளிடமும் மிகத்தெளிவான ஒரு தர்க்கம் இருக்கும். அந்தத் தர்க்கத்தின் ஓரம் சிதைந்து கிடப்பதை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள்.அவர்களிடம் தர்க்கபூர்வமாக விவாதிக்கவே முடியாது. அவர்கள் இணையான இன்னொரு உலகில் மிகமிக தர்க்கபூர்வமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகத்தான் நமக்குத் தோன்றும். உண்மையில் அத்தனை மனிதர்களிடமும் அவருக்கான வாழ்க்கைத் தர்க்கம் ஒன்று இருக்கும், அதில் ஒரு பகுதி தர்க்கமற்றதாகவும் இருக்கும். ஆகவே உளச்சிதைவடைந்துகொண்டிருப்பவர் சாதாரணமானவராகவும் பிறருக்குத் தோன்றுவார்.
இப்படிச் சொல்கிறேனே, உளச்சிதைவின் பிம்பங்களும் பிரமைகளும் உளச்சிதைவால் வருவன அல்ல, அவை உளச்சிதைவை நாம் தர்க்கபூர்வமாக சரிசெய்துகொள்வதற்காக நாம் முயலும்போது உருவாக்கிக் கொள்பவை. தர்க்கபூர்வமாக விளக்கமுடியவில்லை என்றால் தர்க்கத்தை கடந்து கற்பனையை பெருக்குகிறோம். கனவுகளை உண்டுபண்ணிக்கொள்கிறோம்.அதில் உருவாகின்றன பேய்கள், தெய்வங்கள், மாயங்கள்…
அந்த பிரமைகளும் மாயைகளும் நம் உள்ளம் எடுத்தாளும் கருவிகள். நம் அகத்தில் அவை சேமிக்கப்பட்டுள்ளன. தர்க்கத்தைச் சமைக்க துடிக்கும் உள்ளம் அந்த பெரும் கருவூலத்தில் இருந்து கைக்குச் சிக்கியதை எடுத்து வளைத்து ஒடித்து திரித்து இழுத்து பொருத்திக் கொள்கிறது. நான் நிறைய வாசிப்பவன், ஆகவே என் உலகம் புத்தகங்களில் இருந்து உருவாகியது. நான் அதிகம் வாசித்தவை பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எழுத்துக்கள். என் கச்சாப்பொருட்களே அவைதான். அவற்றைக்கொண்டு நான் உருவாக்கிய உலகம் அது. என்னுடன் சிகிழ்ச்சையிலிருந்த ஒருவரின் உலகம் தொலைபேசி நிலையத்திலிருந்து உருவாகியது, திருவனந்தபுரம் நகரமே ஒரு மாபெரும் தொலைபேசிநிலையமாக ஆகிவிட்டது. செகரடரியேட் கட்டிடம் அதன் மைய சர்க்யூட்.
நான் என்னை எனக்கே புரிந்துகொள்ளும்படி வைத்துக் கொள்வதற்காக ஒவ்வொன்றையும் கற்பனையால் விளக்கிக் கொண்டே இருந்திருக்கிறேன், அதுவே என் மாயைகளை உருவாக்கியது. அதை ‘புரஜக்ஷன்’ என்று சசிகலா மேனன் சொன்னார். மலையாளத்தில் ’விக்ஷேபணம்’ என்று விளக்கினார். தமிழில் எனக்கு வார்த்தை தெரியவில்லை. நம்முள் இருப்பவற்றை வெளியுலகின்மேல் ஏற்றி அதை மெய்யெனக் காண்பது அது. நாம் காண்பதும் நாம் உருவகிப்பதும் மெல்லமெல்ல ஒன்றாகக் கலந்துவிடுகின்றன.
நான் விளக்கிவிட்டேனா ? இப்படி மீண்டும் சொல்கிறேனே. உளச்சிதைவில் முதல்நிலை என்பது நம் அன்றாட உலகிலும், நம் பழக்கங்களிலும் சிறிய பிசிறுகள் நமக்கே தென்படுவது. அந்தப் பிசிறுகள் இயல்பானவர்களின் வாழ்க்கையிலேயே உண்டு. ஆனால் நமக்கு அவை கொஞ்சம் மிகுதியாக தெரிய ஆரம்பிக்கும், அதாவது நாமே ‘என்ன இது!’ என வியப்படையும் அளவுக்கு. நான் ஒரு புத்தகத்தில் அதில் இல்லாதவற்றை வாசிக்க ஆரம்பித்ததுபோல.
எப்போதும் நம்மை கூர்ந்து அவதானித்து கொண்டிருக்கும் நமக்கு அந்தப் பிசிறுகள் திகைப்பூட்டுகின்றன, அச்சம் அளிக்கின்றன. மனச்சிக்கலை அஞ்சாதவர்கள் இல்லை. அந்த அச்சத்தால் அந்த பிசிறை மூர்க்கமாக இறுக்கி செருகி முடிச்சு போட்டு நம் உள்ளத்தைச் சரியாக ஆக்கிக்கொள்ள முயல்கிறோம். அதில் மூளையை சலிப்படைய வைக்கிறோம். சலிப்படைந்த மூளை மேலும் தீவிரமாக எதிர்ப்பக்கம் பாய்கிறது. குரல்கள் கேட்கின்றன. அது அடுத்த நிலை.
குரல்கள் காதில் கேட்காத எவருமே இருக்க முட்டியாது. ஒற்றைவரி அல்லது ஒரு சொல் நினைத்திருக்காத நேரத்தில் ஒலித்துவிட்டு மறையும். மேஜையை நகர்த்தும் ஒலி, காரின் ஆரன் ஒலி நம் பெயராக ஒலிக்கலாம். சும்மா இருக்கும்போதே ஒரு கிராங் ஓசை, அல்லது ஒரு வார்த்தை காதில் ஒலித்து மறையலாம். ஓசை மிகுந்த இடத்தில் இருந்து ஓசையே இல்லாத இடத்திற்குச் செல்பவர்களுக்கு இச்சிக்கல் அதிகமாக நிகழ்கிறது. அதிகப்படியான ஓசைகளில் புழங்குபவர்களுக்கும் நிகழ்கிறது. ஆனால் உளச்சிதைவில் இந்த ஓசை என்பது கொஞ்சம் கொஞ்சமாக உரையாடலாகவே மாறிவிடுகிறது.
அது தன்னுள் நிகழும் உரையாடல், அதையும் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். தூங்குவதற்கு முன்புள்ள மயக்கத்தில் அல்லது தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்டே இருக்கையில் நம்முள் சிலசமயம் ஓர் உரையாடல் நடந்து முடிகிறது. ஆழ்ந்த உணர்ச்சிகள் கொண்ட தீவிரமான ஓர் உரையாடல் துணுக்கு. சிலசமயம் நம் வாழ்வுடன் தொடர்புள்ள உரையாடல், நாமறிந்தவர்களால் நடத்தப்படுகிறது. சிலசமயம் என்னவென்றே அறியாத உரையாடல் நிகழ்கிறது.
அந்த உரையாடல் பலசமயம் நல்லது. நாம் குழம்பித் தவிப்பற்றுக்கு அது விடையாக அமையலாம். நம்மை யார் என்று நமக்கே காட்டலாம். அரிதாக மிக இனிதாகவும் இருக்கலாம். காமத்தின் வெளிப்பாடாக அமையும் என்றால் நாம் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் நம்மை நாமே உணர்ந்து மலர்ந்துவிடுகிறோம். அந்த உரையாடல் ஒரு முறையேனும் நிகழாதவர் எவருமே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால், அந்த உரையாடலேகூட ஒருவகையில் உளச்சிதைவுதான் என்று சசிகலா மேனன் சொன்னார். மிகச்சிறிய உளச்சிதைவு, அவ்வளவுதான். உள்ளம் மிகமிக எளிதாக அதைச் சரிசெய்துகொள்கிறது. தன்னைத்தானே கொஞ்சம் சிதைத்து பின் மீட்டுக்கொள்வது வழியாக தன்னை மறுஒழுங்கு செய்துகொள்கிறது உள்ளம். அது மூளையின் ஒரு இயல்பான செயல்பாடு. ஆனால் ஒரு விதை. அது எங்கோ ஒரு புள்ளியில் வளர்கிறது. புறச்சூழல் ஒரு குவளை நீர் அந்த விதைமேல் விழுந்ததுபோல.
ஒலிகளுக்குப் பின்னரே காட்சிகள் தெரிகின்றன. ஒரு காட்சி இன்னொன்றாக மயங்குகிறது. நிழல்கள் மனித உருவங்களாகின்றன. ஒருபொருள் இன்னொன்றாகிறது. அந்த பாதையில் அப்படியே உள்ளம் மேலே சென்றிருந்தால் வெற்றுவெளியிலேயே காட்சிகள் தெரியலாகும். மனிதர்கள், விலங்குகள், தெய்வங்கள், பேய்கள் எல்லாமே நேரில் தோன்றும். அவை நம்முடன் உரையாடும், தொடும், பிடித்து தள்ளும், அழைத்துச் செல்லும். அதுவே உளச்சிதைவின் உச்சநிலை. அதைக் கடந்துவிட்டால் ஸ்கிஸோஃபிர்னியாவை குணப்படுத்துவது கடினம்.
நல்லவேளையாக நான் அந்நிலை வரைச் செல்லவில்லை. ஆனால் உண்மையில் செல்லவில்லையா, சென்று அதை மறந்தேனா? சசிகலா மேனன் ஒரு கணமேனும் எனக்கு அது நிகழ்ந்திருக்கும், அதுதான் என் உடைவுப்புள்ளி என்று சொன்னார். எனக்கு நினைவில்லை. ஆனால் பின்னர் நானே என்னை தோண்டித் தோண்டி யோசித்தேன். அன்று ஏன் காட்டுக்குள் சென்றேன்? சென்ற அந்தக் கணமே எனக்கு ஞாபகமில்லை
அந்த விடியற்காலையில் நான் எப்படிக்கிளம்பிச் சென்றேன். காடு எனக்கு அச்சமூட்டுவதாகவே இருந்தது.கோரன் துணையில்லாமல் பகலில்கூட நான் காட்டுக்குள் சென்றதில்லை. விடியற்காலையில்தான் காடு மிகமிக ஆபத்தானது. எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. நான் காட்டில் இருந்த நினைவே எனக்கில்லை. என்னை எவரேனும் உருவெளித் தோற்றமென வந்து அழைத்துச் சென்றார்களா? அந்த நகைகளை அதன்பின் பார்க்கவே இல்லை. அவற்றை நான் என்ன செய்தேன்?
நான் அந்த உளச்சிதைவு நாட்களில் நிகழ்ந்தவற்றைப் பற்றி யோசிக்கவேண்டாம் என்று சசிகலா மேனன் சொன்னார். “அவற்றை மறந்துவிடுங்கள், அவற்றைப் பற்றி எண்ணாதிருங்கள், அவை நினைவிலெழுந்தால் உடனே நினைப்பை மாற்றிக்கொள்ளுங்கள், வேறெதையாவது நினையுங்கள், வேறேதாவது செய்யுங்கள். இப்போது அவற்றைப் பற்றி யோசித்தால் நீங்கள் மீண்டும் அந்நிலைக்குச் செல்லக்கூடும்“
அந்த மனநிலைப் பிறழ்வின் காலகட்டத்தில்தான் என் மூளையில் அசிட்டல்கொலைன், டோபோமின், செரட்டோனின் குளுட்டமேட், காபா, நோரோபினஃப்ரின் என எல்லா நியூரோடிரான்ஸ்மிட்டர்களும் மிக அதிகமான அளவில் இருந்திருக்கின்றன. அப்போது என் சிந்தனைத்திறனும் கற்பனைத்திறனும் உச்சத்தில் இருந்திருக்கும்.ஒர் அபாயத்தில் சிக்கிக் கொண்டிருக்கையில், படைப்புத்தன்மையுடன் இருக்கையில், காமம் கொண்டிருக்கையில் இருக்கும் உச்சம் எப்போதுமே இருந்திருக்கும். உளச்சிதைவு என்பது நம் உச்சநிலை. நம் வாழ்வின் அதிதீவிர நிலை.
அதை எங்கோ ஒர் இனிய நினைவாகவே நான் சேமித்திருப்பேன். அதை மீண்டும் அடையவே விரும்புவேன்.உளச்சிதைவு அடைந்து மீண்டவர்களுக்குக் காத்திருக்கும் பொறியே அதுதான். இயல்பான அன்றாடத்தின் தளர்வான தன்மை அவர்களுக்குச் சலிப்பூட்டும். மீண்டும் உளச்சிதைவுக் காலகட்டத்தின் அந்த கொந்தளிப்பையும் கொப்பளிப்பையும் விரும்புவார்கள். ஆனால் உளச்சிதைவை அஞ்சி அதை அவர்கள் தவிர்க்கவும் முயல்வார்கள். அந்தப் போராட்டமே கொந்தளிப்பாக ஆகிவிடும். உள்ளத்தை சீண்டி மீண்டும் உளச்சிதைவு நோக்கிக் கொண்டுசெல்லும்.
“ஐந்தாண்டுகள் திரும்பியே பார்க்காதே” என்று சசிகலா மேனன் சொன்னார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.என் உளச்சிதைவின் காலகட்டத்தில் என் குடும்பமே உடைந்து போயிற்று. என் அம்மாவுக்கே உளச்சிதைவு போல சில அறிகுறிகள் தோன்றின. அப்பா அவ்வப்போது வலிப்பு வந்து விழுந்தார். ஆகவே நான் அதை ஒரு கொடிய நோய் என அஞ்சினேன். என்னை சீரான செயல்கள் வழியாக மீட்டுக்கொண்டேன். வயல்வேலைகள், கைவேலைகள். முழுக்கமுழுக்க வாசிப்பை நிறுத்திக் கொண்டேன். புத்தகங்கள் மட்டுமல்ல நாளிதழேகூட வாசிப்பதில்லை. முழுமையாக மீண்டுவிட்டேன்.
ஓராண்டுக்குப்பிறகு நான் மாவட்டக் கல்வி அலுவலர் மீரான் மைதீன் மரைக்காயரை சென்று பார்த்தேன். என் உளச்சிதைவைச் சொல்லி எனக்கு மீண்டும் வேலை கொடுக்கும்படி கோரினேன். மீண்டுவிட்டமைக்கான சான்றிதழ்களையும் கொண்டுசென்றிருந்தேன். மலையில் நான் தொடங்கிய அந்தப் பள்ளியை மீண்டும் நடத்த விரும்பினேன். “என்னாலே அதை அப்டியே விட்டிர முடியாது சார். இங்கே, சின்ன வேலை எதையாவது செய்யலாம்தான். ஆனா அத்தனை ஆர்வமா தொடங்கினேன். விட்டுட்டேன்னா அது பெரிய குறையாத்தான் இருக்கும்” என்றேன்.
மரைக்காயர் அற்புதமான மனிதர். என் வாழ்நாளில் சந்தித்த தூயஆத்மாக்களில் ஒருவர். “அங்க இப்பமும் வாத்தியார் அமையல்ல. அதனாலே உங்கள ஒரு வருசம் மெடிக்கல் லீவு தந்து திரும்ப எடுத்துக்கிடுதேன். அதிலே ஒண்ணுமில்ல. ஆனா நீங்க அங்க போனா மறுக்கா இந்த பிரச்சினை வராதா?”என்றார்.
“நான் மறுமடியும் அந்த பங்களாவிலே தங்குறதா இல்ல. கோதையாறிலேயே குவார்ட்டர்ஸ் காலியா கெடக்கு. அங்க வாடகைக்கு தங்கிக்கிடுதேன். நாலு மணிநேரம் நடக்கணும், பரவாயில்லை நடந்து போறேன்.” என்றேன்.
“ஆனா, குவார்ட்டர்ஸை வாடகைக்கு விடுறது குற்றமில்லா?” என்றார் மரைக்காயர்
அவர் நேர்மையின் உச்சம் என்று கேள்விப்பட்டிருந்தேன். புன்னகையை அடக்கியபடி “செரி, காபிரியேல் நாடாரோட கடையிலேயே தங்குறேன்”என்றேன்.
அவர் யோசித்து “செரி, ஆனா ஒரு கண்டிசன். அஞ்சுவருசம் டிரான்ஸ்ஃபர் கேக்கமாட்டீங்கன்னு உறுதி சொல்லமுடியுமா?” என்றார்.
“அஞ்சில்ல சார், மிச்ச வாழ்க்கை முழுக்க அங்கேதான் இருப்பேன்” என்று சொன்னேன்
“என்னன்னு சொல்றிய?” என அவர் திகைத்தார்.
”எனக்க தர்மம் அதாக்கும்” என்று நான் சொன்னேன்.
அவர் கொஞ்சநேரம் என்னைப் பார்த்துவிட்டு “இல்ல, அஞ்சுவருசம் போரும்” என்றார்.
‘நீங்க என்னைய டிரான்ஸ்பர் பண்ணினாலும் வரமாட்டேன்” என்றேன். “என் வாழ்க்கையை நான் கண்டுபிடிச்சாச்சு”
“ஏம் வே?”என்று அவர் கெஞ்சலாகக் கேட்டார்.
“சார் நான் இருந்தது ரெண்டு உலகமாக்கும். ஒண்ணுக்கு நான் திரும்பிப் போகவே முடியாது. இன்னொரு உலகமாவது எனக்கு வேணும்… அது எனக்கு ஒரு பெரிய சொத்தாக்கும்” என்றேன்.
“கல்யாணம்?”
“அதை அப்ப பாத்துக்கிடலாம்”
அவர் என்னை கூர்ந்து பார்த்தார். பிறகு “இன்ஷால்லாஹ்!” என்றார்.
நான் மீண்டும் கோதையாறு வந்து இறங்கினேன். காபிரியேல் நாடார் என்னை ஓடிவந்து தழுவிக் கொண்டார். “செரியாப்போயிட்டுது இல்லியா? நான் அப்பமே சொன்னேன், அது ஏதோ மலைவாதை அடிச்சதாக்கும்னு. பலபேரை அப்டி மலைவாதைகள் அடிச்சிட்டுண்டுன்னு… வேளாங்கண்ணியிலே ஒரு நேர்ச்சை நேர்ந்தா செரியாயிரும். மண்டைக்காட்டம்மைன்னாலும் நல்லதாக்கும்” என்றார்.
குவாட்டர்ஸில் பாதிப்பங்கு வீடுகள் காலியாகவே கிடந்தன. நமச்சிவாயம் சார் ஒரு வீட்டை எனக்கு வாடகை இல்லாமலேயே தந்தார். அங்கே தங்கியிருந்தபோது ஒவ்வொருவராக வந்து நலம் விசாரித்துச் சென்றனர். ஏசுவடியான் காலமாகிவிட்டிருந்தார்.
கோரன் வந்து என்னைப் பார்த்தான். காணிக்காரர் வழக்கப்படி, அவன் எந்த உணர்ச்சியையும் காட்டவில்லை. இமைகளை மட்டும் மூடிமூடித் திறந்தான்.
“நாம மலைமேலே போவோம்… பள்ளிக்கூடம் நடத்தணும்லா?”என்று நான் சொன்னேன்.
அவன் உடனே தரையில் அமர்ந்து விரலால் எ எழுதிக் காட்டினான். நான் புன்னகைத்தேன்.
மறுநாளே கோரனுடன் மலையேறிச் சென்றேன். நாங்கள் செல்லும்போது புலிமடையில் புலி இருந்தது. “புலி இருக்கு” என்று கோரன் சொன்னான்.
“என்ன செய்ய?”என்றேன்.
“அந்தாலே போயிருவோம்… நாம ஒண்ணும் செய்யமாட்டம்னு அதுக்கு தெரிஞ்சா பிறவு பயம் வேண்டாமாக்கும்” என்றான் கோரன்.
நாங்கள் அந்த குகையின் அருகே பாதை வழியாக அமைதியாக நடந்தோம். குகைக்குள் இருந்து உறுமல் எழுந்தது. நாங்கள் மெல்ல சென்றுகொண்டே இருந்தோம். இன்னொரு மெல்லிய உறுமல் எங்களைச் செல்ல அனுமதித்தது.
அந்தப்பக்கம் பள்ளிக்கூடக் குடில் இடம் மாறியிருந்தது. ஒரு பெரிய மழைக்காலம் முடிந்து அங்கே ஓடைவழியாக வந்த மண் வந்து மூடியமையால் மேடாகியிருந்தது. அங்கே எனக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. விடாமல் அங்கே பள்ளிக்கூடம் நடந்துகொண்டிருந்தது. அந்த கரும்பலகை தொங்கியது. அதில் சாக்பீஸால் எழுதப்பட்ட எழுத்துக்கள் இருந்தன.
“யாரு எழுதியது?”என்று கோரனிடம் கேட்டேன்.
“துப்பன்… துப்பன் எழுதி”என்று அவன் சொன்னான். உத்வேகத்தில் அவன் உடலே ஊசலாடியது. “துப்பன்.. புக்கு ..புக்கு.. வச்சு படிச்சு… துப்பன்! துப்பன்!:
“துப்பனை கூட்டிட்டுவா”
அதற்குள் துப்பனே மலைச்சரிவில் கூச்சலிட்டபடி என்னை நோக்கிப் பாய்ந்து வந்தான். அவனை தொடர்ந்து உச்சனும் மற்ற குழந்தைகளும் வந்தனர். அவர்கள் கூச்சலிட்டபடி என்னைச் சூழ்ந்துகொண்டனர். அனைவருமே என்னை தொட விரும்பினர். எம்பி எம்பிக் குதித்தனர். நாய்க்குட்டிகள் போல என்னை முத்தமிட்டனர்.
துப்பனின் கையில் பாலிதீன் தாளில் சுற்றிய புத்தகம் இருந்தது. ”புக்கு! புக்கு! காவிரியேல் நாடார் தந்ந புக்கு” என்றான். அதை பிரித்து என்னிடம் காட்டி “கா!” என்றான். மேலே சுட்டிக்காட்டி “காக்கா!”என்றான்.
அவன் மெய்யெழுத்துக்களை தாண்டிவிட்டிருந்தான். ஆவேசத்துடன் தரையில் எழுத்துக்களை எழுதிக்கொண்டே சென்றான். ’ச!’ என்று கூவினான். “மனுசன்!” என்று சொல்லி இரு கைகளையும் மடித்த கால்முட்டுகளின்மேல் நீட்டி வைத்து அமர்ந்து காட்டினான். “சா” என்று கூவி “சாமி சாமி!” என்றான். கால்மடித்து அதன்மேல் கைவைத்து அமர்ந்திருக்கும் சாத்தன் சமையின் முன் நின்றிருக்கும் நாய்தான் அந்த நெடில்.ஞ என்பது அடையிருக்கும் கோழி. ஞா குஞ்சுடன் இருக்கும் கோழி. ட என்பது நாற்காலி. டா என்பது மேஜையுடன் கூடிய நாற்காலி. ண என்பது யானை. ணா என்பது குட்டியுடன் கூடிய யானை. சென்றுகொண்டே இருந்தது அவன் மொழியறிவு.
உச்சன் “துப்பன் கோதையாறு போய் படிக்கும்!”என்றான். அவன் முகத்தில் பெருமிதம் நிறைந்திருந்தது.
பிறகு நான் தெரிந்துகொண்டேன். ஒவ்வொரு நாளும் நான்குமணிநேரம் நடந்து துப்பன் கோதையாறு ஜங்ஷனுக்குப் போய் அங்கே வருபவர்களிடம் கெஞ்சி எழுத்துக்களைக் கற்றுக்கொண்டிருந்தான். காபிரியேல் நாடார் அவனுக்கு அந்த புத்தகத்தை அன்பளிப்பாக அளித்திருந்தார்.
அங்கே அனைத்துக் குழந்தைகளுக்கும் துப்பன் வகுப்பு எடுத்தான். எல்லா குழந்தைகளுமே அவனிடமிருந்து அகரவரிசையை வாசிக்கக் கற்றிருந்தன. உச்சனால் எல்லா எழுத்துக்களையும் வாசிக்க முடிந்தது. துப்பனால் ஓரிரு சொற்களையும் வாசிக்க முடிந்தது. கோரன் எ என்ற ஒற்றை எழுத்துக்குமேல் முன்னகர மறுத்துவிட்டான்.
அன்றே நான் அங்கே பள்ளியை மீண்டும் தொடங்கினேன். பள்ளியை மூன்றாகப் பிரித்தேன். எழுத்துக்களை படித்து முடித்தவர்களுக்கு ஒரு வகுப்பு, எழுத்துக்களை படிப்பவர்களுக்கு ஒன்று, கதைகேட்கும் குழந்தைகளுக்கு ஒன்று.
எட்டுமாதம் நான் கோதையாறிலிருந்து பள்ளிக்கு வந்து சென்றுகொண்டிருந்தேன். பின்னர் நானே அங்கே ஒரு நல்ல குடிலைக் கட்டிக்கொண்டேன். மரம் ஒன்றின் உச்சியில். அதில்தான் நான்காண்டுகள் இருந்தேன். அதற்குள் அங்கே உறுதியான நல்ல பள்ளிக்கட்டிடம் ஒன்றை கொண்டுவந்து விட்டேன். சிமிண்ட்ஷீட் கூரை போட்டதுதான். ஆனால் செங்கல்சுவர் கொண்டது. நாகர்கோயிலில் அலைந்து அந்தக் கட்டிடத்திற்கான நிதியில் பாதியை நன்கொடையாக திரட்டி அளித்தேன். எஞ்சியதை அரசு அளித்தது.
அருகில் நானும் ஒரு வீடு கட்டிக்கொண்டேன். இரண்டு அறைகள் கொண்ட சிறிய வீடு. உறுதியான மரங்க்ளை நட்டு வேலி அமைத்து, அதற்கு வெளியே நெஞ்சளவு ஆழத்தில் அகழி தோண்டி, யானைகள் அணுகாமல் பாதுகாப்பட்டது. அடுத்த ஆண்டு நான் ஞானாம்பாளை மணந்தேன்.
அவளுக்கு ஒரு கால் ஊனம். அவ்வாண்டுதான் அவளுக்கு ஆசிரியர் வேலை கிடைத்தது. மிக ஏழைக்குடும்பம். அவளுக்கு சிபாரிசுக்கு ஆளில்லை, ஆகவே அங்கே வேலைக்குப் போட்டுவிட்டர்கள். மரைக்காயர் சார் ஓய்வுபெற்றுவிட்டார். நான் அவளிடம் அவள் வரவேண்டியதில்லை, சம்பளத்தில் ஐநூறு ரூபாயை அளித்தால்போதும், துப்பனையே ஆசிரியராக அமர்த்திக் கொள்கிறேன் என்றேன்.
ஆனால் அவளுக்கு அது சரியாகப் படவில்லை. “நம்ம ஜோலியைச் செய்யணும்லா? நடந்து போற தூரத்திலே ஒரு எடம் மட்டும் பாத்துக் குடுங்க…ஆனையடிச்சு செத்தாலும் ஒண்ணுமில்லை”என்றாள்.
நான் அவளுக்கு என் வீட்டை அளித்துவிட்டு மீண்டும் துப்பனின் மரத்து மாடத்தில் குடியேறினேன். ஆனால் இரண்டு மாதம்தான். அதற்குள் நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தோம். அவள் நாடார் சாதி. ஆகவே என் அம்மாவுக்கு எதிர்ப்பு இருந்தது. நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அப்பா காலமாகியிருந்தார். என் தங்கைகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டிருந்தேன். எனக்கு எந்த பொறுப்பும் இல்லை.
எனக்கு கடன்கள் இல்லை. ஏனென்றால் என் முழுச்சம்பளமும் சேமிப்புதான். காட்டில் ஒரு பைசாகூட எனக்குச் செலவில்லை. காட்டிலிருந்து காபிரியேல் நாடாரின் கடைக்குச் செல்லும்போது நான் கொண்டுசெல்லும் தேன் முதலியவற்றை விற்றபின் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு பாதிக்காசை அங்கேயே நிலுவையில் வைத்துவிட்டுத்தான் வருவேன்.
எங்கள் திருமணம் கோதையாறிலேயே நடந்தது. ஞானாம்பாளின் அம்மாவும் தம்பியும் வந்திருந்தனர். அவர்களுக்கும் அந்த திருமணத்தில் கசப்புதான். அவள் தம்பி பிஏ முடித்து வேலைக்குச் செல்லும்வரை அவள் குடும்பத்திற்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தாள். அதன்பின் அவர்கள் தொடர்பை துண்டித்துக் கொண்டனர். பிற்பாடு எங்கள் இருவருக்குமே ஊர்களுடன் எந்தத் தொடர்பும் இல்லை. நான் என் அம்மா இறந்தபோது மட்டும் ஒருமுறை ஊருக்குச் சென்றேன். ஞானாம்பாள் அவள் தம்பி திருமணத்தின்போதும் அம்மா இறந்தபோதும் ஊருக்குச் சென்றாள். ஒருநாள் கூட தங்கவில்லை.
மற்றபடி இந்த மலைதான். இங்கே எங்கள் பள்ளி இருந்த பகுதிவரை ஓர் ஒற்றையடிப்பாதையை அமைத்தோம். எங்கள் வீட்டை கொஞ்சம் விரிவாக்கினோம். என் இரு பிள்ளைகளும் இங்கேதான் படித்தார்கள். கோரன் பள்ளியில் சமையற்காரனாக வேலைபார்த்தான். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரு காய்ச்சலில் இறந்தான். நான் அவனுடைய கணக்குகளைச் சரிசெய்தேன். எல்லா ரசீதுகளிலும் அவன் எ என்று நாயை வரைந்திருப்பதைக் கண்டு அன்று கண்ணீருடன் புன்னகை செய்தேன்.
துப்பன் மிகவிரைவாகவே வாசிப்பு எழுத்து என தேறினான். ஆங்கிலமும் மலையாளமும் படித்தான். எங்கள் பள்ளியில் இன்னொரு ஆசிரியராக வேலைபார்த்தான். அவனுக்கு அட்டெண்டர் வேலைபோட்டுச் சம்பளம் அளிக்கப்பட்டது. அவன் பின்னர் அருகே இருந்த இன்னொரு பள்ளியை தன் பொறுப்பில் ஏற்று நடத்தினான். அவன் மிகச்சிறந்த ஆசிரியர். இன்றும் அவனிடம் படித்த ஏராளமான மாணவர்கள் அவனை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்கள்.
துப்பனின் வளர்ச்சியை நான் காட்டில் சில காளான்கள் வளரும் வேகத்துடன்தான் ஒப்பிடுவேன். ஒருமொழியை கற்றுக்கொண்டதும் அதைக்கொண்டே அடுத்த மொழிக்குச் சென்றான். புத்தகங்கள்மேல் பித்துகொண்டிருந்தான். எவர் எந்த புத்தகம் வைத்திருந்தாலும் பின்னால் சென்று கேட்டுவாங்கி பார்ப்பான். ரசீதுபுத்தகங்களைக்கூட.
அவனுடைய வாசிப்பு வெறி வெறி ஏறி ஏறி வந்தது. மூன்றுமொழிகளிலும் அவனுக்கு புத்தகங்கள் தேவைப்பட்டன. என்னிடமிருந்த புத்தகங்கள் தீர்ந்தபின் அவனே குலசேகரம் சென்று நூலகங்களில் இருந்து புத்தகம் எடுத்து வருவான். அவனுடைய வாசிப்புவெறி மனநோயோ என நம்மைத் திகைக்க வைப்பது. வாசிக்கையில் முகம் உறைந்து கண்கள் வெறித்திருக்கும். அசைவே இருக்காது. ஒரு புத்தகம் கிடைத்தால் அது முடிந்த பிறகுதான் உணவு.
துப்பனுக்கு குலசேகரத்தில் ஜே.ஹேமச்சந்திரன் நாயருடன் உறவு ஏற்பட்டது. அவர் அவனை கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்த்தார். கட்சியின் கூட்டங்களுக்கு கோதையாறிலிருந்து சைக்கிளிலேயே சென்றுவருவான். அவன் தலைமையில்தான் கோதையாறு மலைவாழ் தொழிலாளர் யூனியன் உருவாக்கப்பட்டது. காலையில் பள்ளி முடித்து மாலை முழுக்க மலையில் அலைந்து அவன் உருவாக்கிய அந்த அமைப்பு இன்றைக்கு இருநூறு கிளைகள் கொண்ட பெரிய தொழிற்சங்கம்.
கோதையாறு ரிசர்வ் தொகுதியில் போட்டியிட்டு வென்று ஒருமுறை பஞ்சாயத்துத் தலைவாராகவும் துப்பன் இருந்திருக்கிறான். அவன் மேடைகளில் பேசுவதை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆவேசமான பேச்சில்கூட துல்லியமான உச்சரிப்புடன் மிகச்சரியான சொற்கள் வந்து விழும். அந்த வார்த்தைகளையெல்லாம் அவன் எங்கிருந்து கற்றான் என்றே ஆச்சரியமாக இருக்கும்.
துப்பன் கற்ற முதல் மொழி தமிழ்தான், ஆங்கிலமும் மிக நன்றாகத் தெரியும். ஆனால் அவன் எழுதிய நான்கு நூல்களும் மலையாளம்தான். காணிக்காரர்களின் மொழி மலையாளத்துக்கே அணுக்கமானது. அந்த மொழியின்பத்தில் இருந்து அவனால் விடுபடமுடியவில்லை.
“காணி ஜீவிதம்- சம்ஸ்காரமும் சரித்ரவும்’ ‘மலங்காணி தெய்வங்ஙள்’ ‘குறே மலைக்கதகள்’ ‘ஆதிவாசிகளும் கம்யூனிசமும்’ ஆகிய நான்கு புத்தகங்களையும் நான் பார்த்ததுண்டு, உள்ளடக்கம் என்னவென்று தெரியாது. அவ்வப்போது நான் துப்பனைப் பார்ப்பேன். “மாஸ்டர்’ என்று பக்தியுடன் வந்து வணங்குவான்.
துப்பன் என்னைவிட நான்கு வயது மூத்தவன். அவன் என்னிடம் பணிவுடன் பேசும்போது அவனுடன் இருக்கும் பிற தோழர்கள் விசித்திரமாக பார்த்து நிற்பார்கள். அவன் என்னை ஒருமுறை ஜே.ஹேமச்சந்திரன் நாயருக்கு அறிமுகம் செய்யும்போது “என்றே குரு. ஏசுகிறிஸ்து மீனவனை வலையை வீசிட்டு வான்னு கூப்பிட்ட மாதிரி என்னை விளிச்சு எளுப்பினவர்” என்றான். நான் கூசிப்போய் நின்றேன். தோழர் ஹேமச்சந்திரன் என் தோளில் கைபோட்டு உடலுடன் இறுக்கி “வே, நீரு எளுப்பிவிட்டது ஒரு மலைவாதையையாக்கும்” என்றார்.
துப்பன் ஐம்பத்தாறாவது வயதில் மறைந்தார். அதன்பிறகுதான் அவரை நான் அவர் என்று சொல்ல ஆரம்பித்தேன். கோதையாறில் இருக்கும் கட்சியலுவலகம் தோழர் துப்பன் காணி நினைவு கட்டிடம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பஞ்சாயத்து நூலகத்திற்கும் அவர் பெயர்தான். அவர் நாற்பது வயதுக்குமேல் கம்யூனிஸ்டுக் கட்சியில் இருந்தே திருமணம் செய்துகொண்டார். அவருடைய இரு மகன்களும் இன்று திருவனந்தபுரத்தில் வக்கீல்கள்.
என் பிள்ளைகள் குலசேகரத்திலும் பின்பு நாகர்கோயிலிலும் படித்தனர்.இன்று இருவருமே அமெரிக்காவில் வேலைசெய்கிறார்கள். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டார்கள். ஞானாம்பாள் மறைந்து ஆறாண்டுகளாகின்றன. நான் சென்ற ஆண்டு ஓய்வு பெற்றேன். அதுவரை இங்குள்ள பழங்குடிப் பள்ளிகளிலேயே வேலை பார்த்தேன். கூடவே பழங்குடிகளுக்காக நான்கு அமைப்புகளை உருவாக்கினேன். அவர்களின் கைவினைப் பொருட்களை கோவளம், திருவனந்தபுரத்திற்கு கொண்டுசென்று விற்பதற்கான கூட்டுறவு அமைப்புக்கள் அவை. அவை இன்று நாற்பது கிளைகளுடன் செயல்படுகின்றன. சென்ற ஆண்டுவரை நான் தலைமைப்பொறுப்பில் இருந்தேன். இப்போது ஒதுங்கி கௌரவத்தலைவராக நீடிக்கிறேன்.
இன்று தனியாக என் வீட்டில் இருக்கிறேன். ஒருநாள் கண்விழித்து நள்ளிரவில் களைப்படைந்து தூங்குவது வரை என்னைச் சுற்றி காணிக்காரர்கள் நிறைந்திருக்கிறார்கள். பல்வேறு தேவைகளுக்காக வந்தவர்கள். இரண்டாம்தலைமுறை, மூன்றாம் தலைமுறை. கோரன் இல்லை, துப்பன் இல்லை, உச்சன் இப்போது மலையில் இல்லை. அவன் சென்னையில் பிடபிள்யூடி குமாஸ்தாவாக வேலைபார்க்கிறான். மலை மாறிவிட்டது. நான் அன்று கண்ட பலர் இன்றில்லை. மலைக்காணிகள் எவருமே இன்று மரங்களின் மேல் குடியிருக்கவில்லை. அந்நினைவே இளைய தலைமுறையினருக்கு இல்லை.
காபிரியேல் நாடாரின் கடை பெரிதாகிவிட்டது. அவருடைய மகன் ஞான்ஸ்டீபன் அதை நடத்துகிறான். ஒரு நாளுக்கு பன்னிரண்டு பேருந்துகள் வந்துசெல்கின்றன. மலைகளில் சாலைகள் வந்துவிட்டன. கண்ணெதிரே எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்று காணிக்காரர்கள் நல்ல உடைகள் அணிந்து டிவிஎஸ் வண்டிகளில் காட்டுச்சாலைகளில் செல்கிறார்கள். அனேகமாக அனைவருக்குமே கான்கிரீட் வீடுகள் உள்ளன. வீடுகளின்மேல் தட்டுபோன்ற அண்டனாக்கள் நிற்கின்றன. பெரும்பாலானவர்களிடம் ஆண்டிராய்டு செல்போன்கள் இருக்கின்றன.
ஆமாம், குடிப்பழக்கம் வந்திருக்கிறது. அடிதடிகள் நடக்கின்றன. அவ்வப்போது போலீஸ் வந்து செல்கிறது. ஓரிரு கொலைகளும் நடந்திருக்கின்றன. அரசியல் புகுந்து அதில் பூசல்கள் வெடித்துள்ளன. எல்லா வீடுகளிலும் இரவுபகலாக சினிமா. காட்டில் எங்கு நின்றாலும் சினிமாப்பாடல் காதில் விழுகிறது. அத்தனை இளைஞகளுக் சினிமாப்பைத்தியங்கள், ஏதாவது நடிகர்களின் ரசிகர்கள்.
ஆனால் பட்டினி இல்லை. அவர்களின் பிள்ளைகள் படிக்கின்றன, நாகர்கோயிலில் சென்று படித்து வேலைகளுக்குச் செல்கின்றன. எது முன்னேற்றம் எது சரிவு என்றெல்லாம் உங்களைப்போன்றவர்க்ள் பேசலாம். நான் சொல்வேன், பட்டினி இல்லாத வாழ்க்கை, நோய் இல்லாத வாழ்க்கையே முன்னேற்றம். எவராலும் சுரண்டப்படாமல் வாழ்வது முன்னேற்றம். அது நிகழ்ந்திருக்கிறது. அதில் எனக்கு ஒரு பங்கிருக்கிறது. அந்நிறைவுடன் நான் இன்னும் சில ஆண்டுகளில் இங்கேயே உயிர்விடுவேன். என் மண் இது, இங்கே என் சாம்பல் கரைக்கப்படும்.
ஆனால் நான் இன்றும் அந்த வேட்டைபங்களாவுக்கு மீண்டும் செல்வதை தவிர்க்கிறேன். எட்டு ஆண்டுகள் அதை நான் கண்ணாலேயே பார்த்ததில்லை.இப்போதுகூட அந்தப்பக்கமாக செல்லாமல் வளைந்து சுற்றிக்கொண்டு காட்டில் செல்வேன். அந்த பங்களாவைப் பற்றியும் அந்நாட்களைப் பற்றியும் நினைப்பதையே தவிர்ப்பேன். அந்தப் பங்களா அங்குதான் இருக்கிறது. இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. காட்டிலாகாவுக்கு கொடுத்துவிட்டார்கள். அங்கே அதிகாரிகளும் அவர்கள் அனுப்பும் விருந்தினர்களும் தங்குகிறார்கள். நீங்கள் வரும் வழியில் பார்த்திருக்கலாம்.
டாக்டர் சசிகலா மேனன் சொன்னபடி நான் ஐந்தாண்டுகளுக்குப் பின் என் மனச்சிதைவு நாட்களை எழுதவில்லை. எட்டாண்டுகளுக்குப் பின் ஒருநாள் மழை கொட்டிக்கொண்டிருந்த இரவில், தூக்கம் கலைந்து எழுந்து நிலையற்று வீட்டில் அங்குமிங்குமாக அலைந்தபின் ஒரு டீ போட்டுக் குடித்துவிட்டு எழுத ஆரம்பித்தேன். எல்லாவற்றையும் வரிசையாக எழுத்தில் பதிவுசெய்தேன். நான் சொன்னதெல்லாம் அந்தப் பதிவுகளிலிருந்து நினைவுகூர்ந்தவைதான்.
நான் வாசித்த அந்தப் புத்தகம், ஃப்ரான்ஸெஸ் பர்னியின் நாவல், அந்த பங்களாவில் இருக்கவில்லை. நான் அந்தப் புத்தகம் பற்றி உளறியதனால் எஞ்சீனியர் நமச்சிவாயம் வந்து தேடிப்பார்த்திருக்கிறார், காணவில்லை. அதை நான் காட்டுக்குள் போனபோது கொண்டுசென்றிருக்கலாம். அங்கே அது விழுந்து மட்கியிருக்கலாம் என்று அவர்கள் சொன்னார்கள். அல்லது அந்தப் புத்தகமே கூட என் மாயையாக இருக்கலாம். நான் சினிமாவில் கண்ட காட்சியின் விளைவாக இருக்கலாம்.
எனக்கு எதுவுமே நினைவில் தெளிவாக இருக்கவில்லை. ஆனால் தொடர்ந்து எட்டு நாட்களாக இரவெல்லாம் எழுதிக்கொண்டிருந்ந்தேன். எழுத எழுத எல்லாம் அப்போது நிகழ்பவை போல தெரிந்தன. நிகழ்வதையே நிகழும்போதே இன்னொருவனாக அமர்ந்து எழுதிக்கொண்டிருப்பதுபோல இருந்தது.
அன்று அந்த காட்டுப்பங்களாவில் நான் என்னருகே ஹெலெனாவை உணர்ந்தேன். மிக அருகே, மெய்யென, பருவடிவென. நான் அவளிடம் கேட்டேன். “அதன் பிறகு என்ன நடந்தது?”
“வழிகாட்டி கர்னலின் உடையில் ஒரு பகுதியை கண்டுபிடித்திருந்தான். அருகே அவருடைய உடலின் ஒரு துண்டும் ரத்தக்குழம்பும் கிடந்தன. மேலும் காட்டுக்குள் சென்றார்கள், ஆனால் எந்த தடமும் இல்லை. மழை இருண்டு வந்தது. மெக்கின்ஸி திரும்பி அட்கின்ஸன் பங்களாவுக்கு வந்தார். அவர் மிகவும் சோர்ந்திருந்தார். உள்ளம் கலைந்து விசும்பி அழுதுகொண்டிருந்தார். அவர் கதவை தட்டினார். அது மூடியிருக்கவில்லை. திறந்து உள்ளே வந்தார். ஹெலெனா ஹெலெனா என்று அழைத்தார். உள்ளே நான் இல்லை”
ஹெலெனா சொன்னாள். “அவர் திகைப்புடன் என்னைத் தேடி வீடெல்லாம் அலைந்தார். அச்சத்துடனும் பதற்றத்துடனும் வெளியே போய் “ஹெலெனா எங்கே? அவளைத் தேடுங்கள்!” என்று ஆணையிட்டார். அவர்கள் அனைவரும் நான்குபக்கமும் பரவி காட்டுக்குள் என்னை தேடினர். எந்த தடையமும் இல்லை”.
ஹெலெனா நிழலுருவாக அமர்ந்திருந்தாள். ஆனால் முன்பு எப்போதையும் விட அவளுடைய உருவம் தெளிந்துகொண்டே வந்தது.
”அதற்குள் மழை வந்து விழுந்தது. காடு நீரால் மூடியது. சட்டென்று மெக்கின்ஸி பங்களாவுக்குள் நுழைந்தார். கதவை மூடியபின் தன் பிஸ்டலை எடுத்து வாயில் வைத்து சுட்டுக்கொண்டார். நின்ற இடத்திலேயே சரிந்து தரையில் உடல் அறைபட விழுந்தார்” என்று ஹெலெனா சொன்னாள். அவள் குரல் நிதானமாகச் சீராக ஒலித்தது.
”வெளியே நின்றவர்கள் உள்ளே வந்து பார்த்தபோது முகம் சிதைந்து, மண்டை சிதறி மெக்கின்ஸி கிடந்தார். அவர்கள் திகைத்து அங்கே மீண்டும் எங்காவது நான் பதுங்கியிருக்கிறேனா என்று தேடினார்கள். அதன் பின் ஃப்ரேஸருக்காக காத்திருந்தார்கள்.”
”நீ எங்கிருந்தாய்? இதையெல்லாம் எப்படிப் பார்த்தாய்?” என்று நான் அவளிடம் கேட்டேன்.
“நான் என்னை அந்த புத்தகத்திற்குள் வைத்து மூடிக்கொண்டேன். அதன்பின் அதை அந்த ரகசிய அறைக்குள் வைத்தேன்”
நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். மேற்கொண்டு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அந்த அமைதி சற்றுநேரம் நீடித்தது. வெளியே காற்றின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
நான் “சொல்”என்றேன்.
அவள் “அவ்வளவுதான்”என்றாள்.
”இல்லை”என்று நான் சொன்னேன். “அவ்வளவுதான் என்றால் இந்தக் கதை முடியவில்லை”
“என்ன கதை?”என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள்.
“விர்ஜீனியா முதல் தொடங்கிய ஒரு கதை. ஃப்ரான்ஸெஸ் பர்னியின் ஈவ்லினாவின் கதை. உன் கதை…அத்தனை கதைகளும் எங்கோ வந்தமையவேண்டும். இல்லாவிட்டால் ஏன் நான் அவற்றை படிக்கவேண்டும்?”
அவள் பேசாமலிருந்தாள்.
“சொல்”என்றேன்.
அவள் ஒன்றும் சொல்லவில்லை.
“சொல்லவில்லை என்றால் இது முடியாது” என்றேன்.
அவள் “அவ்வளவுதான், வேறென்ன?”என்றேன்.
நான் அந்த பிரெஸ்லெட்டை எடுத்து மேஜைமேல் வைத்தேன். “இது எப்படி கர்னல் சாப்மானிடம் சென்றது? அதை நீ சொல்லவே இல்லை?”என்றேன்.
அவள் அமைதியாக இருந்தாள்.
“சொல்”
“கர்னல் சாப்மான் புலியை சுட்டு விரட்ட முயன்றார். பிஸ்டலை எடுத்தபடி பின்னகர்ந்து வந்தார். சட்டென்று நான் அவருடைய பின்பக்கம் ஓங்கி உதைத்தேன். அவர் தெறிந்து முன்னால் சரிந்து சென்று புலியின் முன் விழுந்தார். அது பெருங்குரலில் உறுமியபடி பாய்ந்து அவரை கவ்விக்கொண்டது”
நான் இமைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன்.
“நான் என் கையிலிருந்த பிரெஸ்லெட்டை உருவி அவர்மேல் விட்டெறிந்தேன்”
அவள் மேலும் சொல்ல நான் காத்திருந்தேன்.
சற்று தயங்கி அவள் சொன்னாள். “அவர் வெறியுடன் அலறிக்கொண்டிருந்தார். அவருடைய கைகால்கள் உதறிக்கொண்டிருந்தன. நான் அதை வீசியெறிந்ததும் ஏதோ உயிர்காக்கும் பொருள் என்பதுபோல பாய்ந்து அவருடைய கை அதைப் பற்றிக்கொண்டது. இதெல்லாமே இரண்டு நிமிடங்கள்தான்… அவ்வளவு கூட இருக்காது. நான் திரும்ப ஓடிவந்துவிட்டேன்”
அவள் முகத்தை முதல்முறையாக தெளிவாகப் பார்த்தேன். அதிலிருந்த சிரிப்பை அருகில் கண்டேன். ஒருகணம்தான்.
அதன்பின் என்ன நிகழ்ந்தது? அதுவரைக்கும்தான் என்னால் எழுத முடிகிறது.
அன்று அப்படி எழுதியதும் ஒரு சிறிய உளச்சிதைவு தாக்குதல்தான். அதன்பின் நான் ஏழெட்டுநாள் கொஞ்சம் சிக்கலான நிலையில் இருந்தேன். ஆனால் மருத்துவமெல்லாம் தேவைப்படவில்லை. ஞானாம்பாளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. தானாகவே சரியாகிவிட்டது. இந்த காட்டில் சுக்குத்தண்ணீர் பெரும்பாலான நோய்களுக்கு மருந்து.
உளச்சிக்கலை எவரும் முழுமையாக வெல்ல முடியாது. அல்லது உளச்சிக்கல் என்று நாம் சொல்வது ஒரு விளக்கம் மட்டுமாக இருக்கவும் வாய்ப்புண்டு. இந்தப் பிரபஞ்சத்தில் நம் தர்க்கபுத்திக்கு அப்பாற்பட்டவை இருக்கக்கூடும். நாம் சென்ற இருநூறாண்டுகளில் உளச்சிக்கல் என்று ஒரு பொதுவான கருத்தை உருவாக்கி அதைச் சொல்லிச் சொல்லி நாமே நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கலாம். இங்கே நம் வழக்கமான அறிதல்களுக்கு அப்பால் ஏதோ உள்ளது. நாம் அதை இப்படி விளக்கிக் கொள்கிறோம்.
மூளை? ஆமாம், மூளையின் நியூரோடிரான்ஸ்மிட்டர்கள் எகிறுகின்றன. ஆனால் அதெல்லாம் எதிர்வினைகள். உண்மையில் மூளை எதிர்கொள்வது எதை? புலன்கள் வழியாகவும், புலன்கடந்த மயக்கம் வழியாகவும் நாம் அறிவது எதை? அப்படி அறியப்படும் சில விஷயங்கள் உண்மையில் இங்கே இல்லை என்று எப்படிச் சொல்லமுடியும்? அறிவியல் நம் எதிர்வினைகளைத் தான் ஆராய்கிறது, நாம் எதற்கு அந்த எதிர்வினைகளை அளிக்கிறோம் என்பது அறிவியலுக்கு அப்பால் உள்ளது.
ஏனென்றால் நான் பத்து முறைக்குமேல் காட்டில் நான் இரு வெள்ளையர்களைக் அடர்ந்த புதர்களுக்குள் கண்டிருக்கிறேன். ஒருவர் முதியவர். வேட்டை உடையும், சட்டித்தொப்பியும் அணிந்தவர். கூரிய வெண்ணிற மீசையும் பச்சைக் கண்களும் சவரம் செய்யப்பட்ட தாமிரக்களிம்புநிற கன்னங்களும் கொண்டவர். இன்னொருவர் கனமான சதுரமுகமும் நீண்டு இறங்கிய கிருதாவும் கனத்த கரிய மீசையும் அடர்ந்த கரிய புருவங்களும் கொண்டவர். அவர்கள் கர்னல் சாப்மானும் காப்டன் மெக்கின்ஸியும்தான். அதில் எனக்கு ஐயமில்லை.
புதர்கள் நடுவே அவர்களை பார்ப்பேன். அவர்கள் என்னைப் பார்ப்பதில்லை. அவர்கள் அங்கே மரங்கள்போல அசைவில்லாமல் நின்றிருப்பார்கள். சிலசமயம் புதர்கள் நடுவே ஊடுருவிச் செல்வார்கள். ஒருமுறை ஓடைக்கரையில் இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டேன். மிகத்தெளிவாகவே கண்டிருக்கிறேன். என்னுடன் வந்த மற்றவர்கள் கண்டதில்லை. நான் அவர்களுக்குக் காட்டியதுமில்லை.
அவர்களை காண்பதற்கு பத்துப்பதினைந்து நாட்களுக்கு முன்னரே நான் உள்ளூர நிலைகுலைய ஆரம்பித்திருப்பேன். எனக்குநானே பேசிக்கொள்வேன். நாளிதழ்களை நீண்டநேரம் படிப்பேன். தூக்கம் மிகக் குறைந்துவிடும். எதையாவது எழுதிக்கொண்டே இருப்பேன். அவர்களைக் கண்டபின் சட்டென்று பெரும் களைப்பு வந்து மூடிவிடும். நாலைந்துநாள் இரவுபகலாகத் தூங்கிக்கொண்டிருப்பேன். அதன்பிறகு முற்றிலும் மீண்டுவிடுவேன்.
ஆனால் நான் ஹெலெனாவை அதன்பிறகு கண்டதே இல்லை. அது ஏன் என்று யோசித்திருக்கிறேன். பின்னர் ஒருமுறை ஒரு கனவு வந்தது. அந்தப் புத்தகம் அந்த சைன்போர்டு மேஜையின் டிராயருக்குள் ரகசிய அறையில் இருப்பதைக் கண்டேன். நானே அதை உள்ளே வைத்து பூட்டியிருக்கிறேன். அது அங்கிருக்கிறது. அந்த பங்களா இன்றுமிருக்கிறது, அந்த மேஜையும் அங்கேதான் இருக்கும்.
[நிறைவு]