கி.ரா- அரசுமரியாதை, சிலை.

கி.ராஜநாராயணனுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்ட செய்தி நிறைவை அளித்தது. அவருக்குச் சிலை வைக்கப்படும் என்பதும் மகிழ்வூட்டுவதே. எப்போதும் என் ஆதங்கமும் கோரிக்கையுமாக இருந்தது அதுதான். இந்த அரசுக்குக் கலை- கலாச்சார விஷயங்களில் ஆலோசனை சொல்ல நல்ல குழு அமைந்துள்ளது என நினைக்கிறேன்.

நல்ல ஆட்சியாளன் என்பவன் அதீத திறமைசாலி என்பதில்லை. என்னிடம் பொள்ளாச்சி மகாலிங்கம் சொன்னது இந்தவரி. “நல்ல நிர்வாகி என்பவன் நல்ல குழுவை அமைக்கத் தெரிந்தவன். அதன் குரலை கேட்கும் மனம் கொண்டவன்” தமிழிலக்கியவாதி என்ற முறையில் தமிழக, பாண்டிச்சேரி அரசுகளுக்கு நன்றி.

இந்தச் சிலை, அரசுமரியாதை எல்லாம் எதன்பொருட்டு? இதனால் கி.ராவுக்கு ஆகப்போவது ஏதுமில்லை. அத்தனை வாழ்ந்தவர் அவற்றை எல்லாம் எளிதாகக் கடந்திருப்பார். இது நமக்கு நாமே சொல்லிக் கொள்வது. நாம் எந்தெந்த மதிப்பீடுகளை முதன்மையாகக் கருதுகிறோம், எவற்றை நம் வருந்தலைமுறைக்கு முன்னுதாரணமாக நிறுத்துகிறோம் என்பதுதான் இது.

கேரளத்தில் எழுத்தாளர்களுக்கு அரசுமரியாதையுடன் அடக்கம் நடைபெறுகிறது. சிலைகள் வைக்கப்படுகின்றன.நினைவகங்கள் உள்ளன. நூலகங்களுக்கு பெயர்கள் சூட்டப்படுகின்றன. அதன் வழியாகவே அந்த எழுத்தாளர்கள்  கலாச்சார அடையாளங்களாக ஆகிறார்கள். தலைமுறை நினைவுகளில் நீடிக்கிறார்கள். அத்தகைய ஆளுமைகள் வழியாகவே ஒரு பண்பாட்டு மரபு உருவாக்கப்படுகிறது. ஒரு மாபெரும் கோலத்தின் புள்ளிகள் இவர்கள்.

இவர்கள் இல்லை என்றால் வேறெவர் நம் பண்பாட்டின் புள்ளிகளாக அமைய முடியும்? எவரைக்கொண்டு நாம் நம் வழித்தோன்றல்களுக்கு நம் பண்பாட்டை விளக்கமுடியும்? இது நமக்கு நாமே ஓர் அடையாளத்தை அளித்துக் கொள்வது. மரபென்பது அதுதான்,  நாமே தொடுத்துச் சூட்டிக்கொள்ளும் மாலை அது. தகுதியான மலர்களால் அமைந்தால் நமக்கு பெருமை, அழகு.

கி.ராஜநாராயணனின் இடம் தமிழில் வெவ்வேறு விமர்சகர்களால் அழுத்தமாக நிறுவப்பட்டது. அவரை இன்று மதிப்பிடுபவர்கள் அவ்விமர்சகர்களின் விவாதங்கள் மற்றும் கருத்துக்களின் வழியாகவே அவரை அணுகவேண்டும். கொஞ்சமாவது விமர்சனங்களை வாசித்தறியவேண்டும். வெறும் செவிச்செய்திகளிலிருந்து பேசக்கூடாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து மீண்டும் பேச ஆரம்பிக்கலாகாது.

பெரும்பாலும் ஓர் எழுத்தாளரின் மறைவை ஒட்டி மட்டுமே அவரைப் பற்றிப் பேசுபவர்கள் செய்யும் பிழை இது. இன்றைய சமூக ஊடகச்சூழலில் ஒற்றைவரிகள் வழியாக, அரட்டைகள் வழியாக இது பெருகவும்கூடும். இளம் வாசகர்களை அந்த சலசலப்புகள் குழப்பக்கூடும் என்பதனால் இதை எழுதுகிறேன்.

*

கி.ராஜநாராயணனின் இடமென்ன தமிழில்? மிகச்சமீபமாக அவரைப்பற்றி அவருடைய கடைசிநூலான மிச்சக்கதைகளின் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரையில்கூட அதை விரிவாகப் பேசியிருக்கிறேன்.

தமிழ்நவீன இலக்கியத்தில் அதன் தோற்றம் முதலே இல்லாமல் இருந்த அடிப்படையான ஓர் அம்சம் என்பது நாட்டார்கூறு. இங்கல்ல, உலகமெங்கும் எந்தக் கலாச்சாரச் செயல்பாடும், எந்த இலக்கியமும் நாட்டார் அடிப்படைகளில் இருந்து முற்றாக விலகி வெளியெ செல்லமுடியாது.

ஏனென்றால் நாட்டாரிலக்கியத்திலேயே மக்களின் வாழ்க்கை நேரடியாக வெளிப்படுகிறது. அடிப்படையான ஆழ்படிமங்கள், வடிகட்டிக் கட்டுப்படுத்தப்பாத நேரடியான உணர்ச்சிகள், அன்றாட நடைமுறைகள், முன்பிலாத வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள் பதிவாகின்றன.

செவ்வியல் அதன் நுண்மையாக்கம், பெருங்கல்வி ஆகியவற்றினூடாக நாட்டாரியலைக் கடந்து செல்லும். செவ்வியலில் இருக்கும் நாட்டாரியல்கூறு நுண்வடிவை அடைந்திருக்கும். தத்துவப்படுத்தப்பட்டிருக்கும்.

நவீனத்துவம் அதன் விமர்சனத்தன்மை வழியாக, விலக்கம் வழியாக, தத்துவச்சார்பு மற்றும் அரசியல்சார்பு வழியாக நாட்டாரியலைக் கடந்து செல்லும்.

ஆனால் அந்த கடந்துசெல்லல் ஓர் எல்லைவரைக்கும்தான். அந்த எல்லைக்கு அப்பால் செவ்வியல் வெறும் உத்திப்பயிற்சியாகவும் புலமைப்பிரகடனமும் ஆகும். நவீனத்துவம் வெறும் வடிவச்சோதனையாக, மொழிச்சோதனையாகத் தேங்கும்.

நாட்டாரியலில் இருந்து தொடங்கி விலகி மறுதிசைக்குச் செல்லும் அந்த ஊசல் அதன் கடைசி எல்லையை நோக்கி எழுந்தபின் திரும்பி நாட்டாரியலுக்கு வந்தே ஆகவேண்டும். ஐரோப்பாவின் கலை மரபை, இந்தியக் கலையின் வரலாற்றை அறிந்தவர் எவரும் இதைக் காணமுடியும்.

தமிழ் நவீன இலக்கியம் ஒரு கட்டத்தில் ’செம்மையான வடிவத்துக்கான தேடல்’ என்ற இடத்தை வந்தடைந்தது. அதன் வாழ்க்கைப்பார்வை என்பது அதே இருத்தலியல், மார்க்ஸிய, ஃப்ராய்டிய அணுகுமுறைதான். வடிவம் சரியாக வந்தால் நல்ல இலக்கியம் என்னும் கோணம் உறுதிப்பட்டது. நாட்டாரியலின் சுத்தியல் வந்து உடைக்காவிட்டால் மேற்கொண்டு ஒன்றுமே நிகழாதென்ற நிலை.

அத்தருணத்தில் அடித்தளத்தைப் பெயர்க்கும் நாட்டாரியலின் அறைதலாக வந்தவர் கி.ரா. தமிழ் நவீன இலக்கியத்தில் நாட்டார் அழகியலின் ஊடாட்டம் கி.ரா வழியாகவே நடந்தது. அதுவே அவரது முதன்மைப் பங்களிப்பு.

இந்த ‘நாட்டார் அழகியலை நாடுவது’ என்னும் அலை கி.ரா எழுதவந்து மேலும் இருபதாண்டுகள் கழித்து எழுபதுகளில் ஐரோப்பிய கலை,நாடக, இலக்கிய அரங்குகளில் எழுந்து முதன்மைப்பட்டது. அங்கிருந்து எண்பதுகளில் இங்கே வந்தது. கூத்துப்பட்டறை போன்ற அமைப்புகளெல்லாம் அதன் உருவாக்கங்கள்தான்.

இதையெல்லாம் நூறு முறை தெளிவாகவே பேசிவிட்டோம். அதாவது கி.ரா ஒரு நவீன எழுத்தாளர், நாட்டார்கலைஞர் அல்ல. ஆனால் நாட்டார் மரபின் கலைக்கூறுகள் நவீன இலக்கியத்தில் அவர் வழியாகவே வந்தமைந்தன. மொத்த நவீன இலக்கிய மரபையும் மறு ஆக்கம் செய்தன. ஆகவேதான் கோணங்கி அவரை முன்னத்தி ஏர் என்றார்.

நாட்டாரியலின் அழகியல் வேறு, செவ்வியலின் அழகியல் வேறு, நவீனத்துவத்தின் அழகியல் வேறு. பேசுபவர்கள் குறைந்தபட்சம் இந்த வேறுபாட்டையாவது புரிந்துகொள்ளவேண்டும்.

செவ்வியலின் அழகியல் என்பது தொகுப்புத்தன்மை கொண்டது, எழுத்தின் எல்லா வடிவங்களையும் உள்ளடக்குவது, எல்லாவகை உணர்ச்சிகளுக்கும் இடமளிப்பது. மையத்தரிசனம் நோக்கிச் செல்வது, அதற்கு தத்துவத்தை பயன்படுத்துவது.

நவீனத்துவத்தின் அழகியல் என்பது தனக்குரிய வடிவபோதம் கொண்டது. சொல்லவந்ததை மட்டும் சொல்லும் ஒருங்கிணைவுள்ள வடிவம், குறிப்பால் உணர்த்தும் கூறுமுறை, உணர்ச்சிகள் மேலெழாத சமநிலை, பூடகத்தன்மை ஆகியவை கொண்டது.

நாட்டாரியல் நேரடியானது, அப்பட்டமானது, இடக்கரடக்கல்கள் அற்றது. அது உள்ளர்த்தங்கள் குறிப்புணர்த்தல்கள் வழியாக செயல்படுவது அல்ல. அதன் வலிமை இருப்பது அதன் நான்கு அம்சங்களில். ஒன்று, அதன் நுட்பமான,விரிவான நிலச்சித்தரிப்பு. இரண்டு, அதன் நம்பகமான அன்றாடச் சித்தரிப்பு. மூன்று, அதன் நேரடியான உணர்ச்சிவேகம், அறவேகம். நான்கு, அதில் உள்ளுறையும் ஆழ்படிமங்களும் அதன் தொன்மங்களும்.

நாட்டாரியல் அப்படியே வெளிப்படுகையில் அதில் மொழியின்நேரடியான  உச்சம் வெளிப்படும், ஆனால் நுட்பம் அரிதாகவே வெளிப்படும். நுட்பம் என்பது தேர்ந்த ரசிகர் – வாசகர்களுக்காக உருவாக்கப்படுவது. அதற்கு நாட்டாரியலில் இடமில்லை.

ஆனால் நாட்டாரியல் நவீன இலக்கியத்தில் வெளிப்படுகையில் அதில் நுட்பமும் இடம்பெறும். கி.ராவின் பங்களிப்பு அவ்வகையிலேயே. கன்னிமை போன்ற ஒரு கதையில் கன்யாகுமரி இடம்பெறுவதை ஒரு நாட்டார்கதையில் காணமுடியாது.

நாட்டாரியலில் ‘எழுத்தாளன்’ இல்லை. அதில் இருப்பவன் ‘கதைசொல்லி’. கதைசொல்லி என்ற சொல் எழுத்தாளன், நாடக ஆசிரியன், கதைப்பாடகன் என கதையை கையாளும் அனைவரையும் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் தொகுப்பு அடையாளம் கொண்டது. ஓவியத்தில் கதை இருந்தால் அவனும் கதைசொல்லியே என்றுகூட வரையறுக்கப்பட்டதுண்டு.

அதாவது கதைசொல்லியை எழுத்தாளனை விடப் பெரிய ஆளுமையாக, தொல்வரலாற்றுக் காலம் முதல் இருந்துவரும் ஒர் அழியா ஆளுமையாக பின்நவீனத்துவம் உருவகித்தது. இதைப் பற்றியெல்லாம் எத்தனை பக்கங்கள் பேசப்பட்டுள்ளன! நானே பக்கம் பக்கமாக எழுதியிருக்கிறேன்.பேசியிருக்கிறேன். அதன்பின்னரும் இதோ அடிப்படைகளை விளக்கவேண்டியிருக்கிறது.

வரலாறு அறியாதவர்களுக்காக கொஞ்சம் விரிவாக. 1986ல் ஆப்ரிக்க எழுத்தாளர் வோலெ சோயிங்காவுக்கு [Wole Soyinka] நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.  அதையொட்டிய பேட்டி ஒன்றில் அவர் தன்னை ஆப்ரிக்காவின் தொன்மையான கதைசொல்லிகளின் மரபைச் சேர்ந்தவராக உணர்வதாகவும், எழுத்துவழி இலக்கியமென்பது அண்மைக்காலத்தையது ஆகவே ஆழமற்றது என எண்ணுவதாகவும், மேற்கொண்டு ஆப்ரிக்க வாய்மொழி மொழியில் எழுதப்போவதாகவும் சொன்னார்.

அதையொட்டி உலகளாவ உருவான விவாதம் தமிழிலும் விரிவாகவே நிகழ்ந்தது. வாய்மொழி இலக்கியமே இலக்கியத்தின் அடித்தளம் என்றும், கதைசொல்லியே எழுத்தாளனின் தொல்வடிவம் அல்லது பெருவடிவம் என்றும் முன்வைக்கப்பட்டது. பலவகையிலும் அந்த விவாதம் விரிந்து சென்றது. அதன் வழியாகவே கி.ரா ஒரு கதைசொல்லியாக அடையாளம் காணப்பட்டார்.

கி.ராஜநாராயணன் தன்னை கதைசொல்லி என்றே அறிமுகம் செய்தார். எழுதுவது என்பது சொல்லுதலின் ஒரு வழிமுறையே என்று வாதிட்டார். எழுத்துமொழி என்பதற்கே எதிராக நிலைகொண்டார். எழுதப்பட்டவை எல்லாமே அழிந்துபோகும், பண்பாட்டில் நிலைகொள்ளவேண்டும் என்றால் அவை வாய்மொழியில் நிலைகொண்டாகவேண்டும் என்றார். அதாவது வாய்மொழியில் இருந்து வாய்மொழிக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் தற்காலிகமாக மட்டும் கதைகள் நூலாக இருக்கின்றன, அவ்வளவுதான். அவை அதிகம்பேருக்கு சென்றடைவதற்காக எழுதப்படுகின்றன. எழுத்து என்பது கதைசொல்லலின் ஊர்தி மட்டுமே.

[இலக்கியவாசகனுக்கு விசித்திரமாகத் தோன்றும், ஆனால் யோசித்துப் பாருங்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய எந்த புனைகதையை நீங்கள் நேரடியாக வாசித்தீர்கள்? அவை கதையாக, வாய்மொழிக்குள் புகுந்து வேறுவேறு கலைவடிவங்கள் வழியாகவே நீடிக்கின்றன. விக்டர் யூகோவின் ஜீன் வல் ஜீனை அறியாதோர் குறைவு. அந்நாவலை படித்தவர்கள் மிகமிக குறைவு. டிராக்குலாவை அறியாதோர் இல்லை, பிராம் ஸ்டாக்கரின் நூலை வாசித்தவர்களும் இல்லை.]

தொண்ணூறுகளின் பின்நவீனத்துவம் வந்தது. அவர்களும் எழுத்துவடிவம் [logos] என்பதை ஒரு படி குறைவானதாகவே கண்டனர். அதில் அதிகார உருவாக்கம் உள்ளது. எழுத்து உறையவைக்கப்பட்டு பன்முகப்பொருளை அளிக்காததாக உள்ளது. அதில் ‘இடையீடு’ [intervention] என்ற அம்சம் இல்லை. அதாவது பல்வேறு கலைகளின் ஊடாட்டம் இல்லை. அதில் பார்வையாளர், வாசிப்பவர் பங்கெடுக்க வழி இல்லை. பின்நவீனத்துவத்தின் இப்பார்வைக்கு உலகளாவ ஓர் ஏற்பு உண்டு. அதுவே கி.ராவை அதற்கு முன்பிருந்ததைவிட கூடுதலான முக்கியத்துவம் கொண்டவராக ஆக்கியது. மலையாளத்தில் பிற அனைவரை விட பஷீரை முன்னெடுத்தது.

இவ்வாறுதான்  ‘கதைசொல்லி’யாக கி.ராஜநாராயணன் கூறப்ப்பட்டார். அதுவரை எழுதிக்கொண்டிருந்த சுந்தர ராமசாமியின் மரபில் இருந்து அடுத்த தலைமுறை எழுத்து உருவாகவில்லை. சுந்தர ராமசாமியின் அணுக்கமானவனாக இருந்தாலும் கூட நான் அவரிலிருந்து தொடங்கவில்லை. என்னுடைய படுகை போன்ற கதைகளின் மூலம் கி.ராஜநாராயணனே.  கி.ராஜநாராயணனிடமிருந்தே பூமணி முதல் சோ.தர்மன் வரை படைப்பாளிகள் தோன்றினர். சமீபத்தில் வெளிவந்த பூமணியின் கொம்மை கூட கி.ராஜநாராயணனின் மரபின் விளைகனிதான்.

நாட்டாரிலக்கியம் என்பது ஒரு நிலத்துடன் அடையாளம் கொண்டிருக்கும். எந்த நிலத்தைச் சேர்ந்த இலக்கியம் என்ற கேள்வி அதற்கு மிக முக்கியமானது. செவ்வியல், நவீனத்துவம் இரண்டுக்கும் வெளிப்படையான ஓர் உலகளாவிய தன்மை, அனைத்துமானுடத் தன்மை உண்டு. அதற்கு நேர் எதிரானது நாட்டார் அழகியல்.

அந்த அடிப்படையிலேயே கி.ரா கரிசல் எழுத்தாளர் என அடையாளம் செய்யப்பட்டார். நாட்டாரியல் அழகியல்கூறு கொண்ட படைப்பாளியையே அப்படி அடையாளப்படுத்த முடியும், அடையாளப்படுத்த வேண்டும். நவீனத்துவ, செவ்வியல் படைப்பாளிகளை அவ்வாறு அடையாளப்படுத்தக் கூடாது.

அதாவது வண்ணதாசன் நெல்லை எழுத்தாளர் அல்ல. சுந்தர ராமசாமி நாஞ்சில் எழுத்தாளர் அல்ல. ஆனால் கி.ரா கரிசல் எழுத்தாளர். பூமணி கரிசல் எழுத்தாளர். கோணங்கி அம்மரபின் ஒரு பதாகை. ஆனால் கோயில்பட்டிக்காரரான தேவதச்சன் கரிசல் கவிஞர் அல்ல. இதையெல்லாம் மிகமிக விரிவாகப் பேசிவிட்டோம். மீண்டும் சொல்கிறேன்.

அவ்வாறு நிலத்துடன் கிராவை அடையாளப்படுத்துவது அவரை அறிவதற்கு மிக உதவியானது. அது அவரை ‘குறுக்குவது’ அல்ல. அவருடைய அழகியலை அது உருவான மண்ணுடன் ஆழமாகப் பிணைப்பது. அவரை அந்த மண்ணின் மேலும் விரிவான தொன்மையான பண்பாட்டுடன் இணைத்து விரிவாக்குவது.

நவீனத்துவ எழுத்தாளருக்கு அப்படி ஒரு தனித்த நிலம் இல்லை. அவர் நின்று பேசுவதற்கென தனித்துவம் கொண்ட பண்பாடும் இல்லை. அவர் திரும்பத்திரும்ப தன்னைப் பற்றியே பேசுகிறார். வாசகன் அவருடைய சொந்த ஆளுமை நோக்கி மட்டுமே செல்லமுடியும்.

கி.ரா தன்னை கரிசல் படைப்பாளி  என்றே முன்வைத்தார். இன்னொருவகை அடையாளத்தை அவர் ஏற்றுக்கொண்டதே இல்லை. கதைசொல்லி என்ற சொல் தமிழில் நிலைநிற்கவும் அவரே காரணம்.

ஓர் எழுத்தாளனை அவ்வாறு வட்டாரப்படுத்துதல் என்பது குறுக்குதல் அல்ல. சர்வதேசக் கருக்களைப் பேசுபவன் சர்வதேச எழுத்தாளனும் வட்டாரத்தைப் பேசுபவன் வட்டார எழுத்தாளனும் அல்ல.

‘உலகப்பொதுத்தன்மை என்பது பொய்யானது. அது ஒரு கருத்தியல் அதிகாரம் மட்டுமே. உலகம் முழுக்க ஒரு பார்வையை வன்முறையாக திணிப்பது அது. எது வட்டாரத்தன்மை கொண்டதோ அது மட்டுமே உலகத்தன்மைகொண்டதாக இருக்கமுடியும்’ என்பது பின் நவீனத்துவ நிலைபாடு. அதை ஏற்றாகவேண்டும் என்பதில்லை, மறுக்கலாம், ஆனால் அந்த நிலைபாடு உருவாக்கிய தர்க்கங்களை வாசித்து புரிந்துகொண்டு மறுக்கவேண்டும்.

கி.ராவின் புனைவுலகின் அழகியல் என்பது நாட்டாரியலும் மார்க்ஸிய உலகப்பார்வையும் முயங்கிய ஒன்று. அவருடைய வாழ்க்கைத் தரிசனம் என்பது அந்நாட்டார் மரபிலிருந்து எழுந்து உலகுநோக்கிப் பேசுவது. அது வழக்கமான ஒழுக்கநெறிகளை கடந்துசெல்கிறது. எப்போதும் பேசப்படும் தத்துவக் கேள்விகளை பொருட்படுத்துவதில்லை. ஆனால் அது ஒரு மானுடக்கனவை முன்வைக்கிறது. எந்த நவீனத்துவ எழுத்தாளரிடமும் அத்தகைய கனவு கிடையாது.

அக்கனவால்தான் அவர் மாபெரும் படைப்பாளி. இலக்கிய விமர்சனத்தளத்தில் நிறுவப்பட்ட அக்கருத்தை இலக்கியவிமர்சனத்தால் மட்டுமே எதிர்கொள்ளவும் முடியும்

முந்தைய கட்டுரைகி.ரா. உரையாடல்
அடுத்த கட்டுரைபுலிநகக்கொன்றை- கடிதம்