மனம்
குருவும் குறும்பும்
இடுக்கண் வருங்கால்…
ஒன்றை தேடினால் அதைப்போல ஏராளமானவற்றை அளிக்கும் கூகிள் தொழில்நுட்பம் நல்லதுதான். ஒரு பெண்ணை தேடினால் நிறைய பெண்களை பரிந்துரைக்கிறது. இறையியலில் இந்துமதம் ஒரு கூகிள். ஒரு கடவுளை தேடினால் முப்பத்துமுக்கோடி கடவுள்கள் பரிந்துரைப்பட்டியலில் வந்து முண்டியடிக்கிறார்கள். ஆனால் காலை எழுந்து அப்படி கூகிள் அளிக்கும் ஜோக்குகள் வழியாக ஒரு சுற்று வந்தால் ஏற்படும் அற்புதமான சலிப்பு சிரிப்புக்கு உரியது.
மேலைநாட்டு கடவுள் ஜோக்குகளில் 99.9 சதவீதம் ’கடவுளும் கம்ப்யூட்டரும்’ என்ற தலைப்புக்குள் அடக்கப்படவேண்டியவை. கடவுள் லேப்டாப் வைத்திருக்கிறார். கடவுள் பாஸ்வேர்ட் மறந்துவிட்டார். கடவுளுக்கும் ஸ்டீவ்ஜாப்ஸுக்கும் பிரச்சினை. இப்படியே. அவர்களுக்கு கடவுளுக்கு மறுபக்கமாக வைக்கப்படும் தத்துவக்கொள்கை என்பது ஆப்பிள் செல்போன்தான் என்று நினைக்கிறேன். கடவுளே அதை எதிர்பார்த்திருக்க மாட்டார். பாதி அமெரிக்கர்கள் கடவுள் என்பது ஒரு ஆப் என்றுதான் நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது.
தொழில்நுட்பம் எப்படி கடவுளுக்கு எதிராக ஆகும் என்றால் அவர்களின் கடவுள் ஒரு பாலைவனத்து மேய்ச்சலினத்தின் வயதான தந்தை என்பதனால்தான். அவருக்கு புதிய தொழில்நுட்பமெல்லாம் பிடிப்பதில்லை. ஆடுகளை அவர் இப்போதும் தொட்டுத்தொட்டு எண்ணத்தான் விரும்புகிறார்.கால்குலேட்டரையே அவர் சந்தேகத்துடன்தான் பார்க்கிறார். அவருக்கு எல்லாமே வெட்டு ஒன்று துண்டு ரெண்டு. இது பாவம், அது மீட்பு. ஆகவே இது நரகம் அது சொற்கம். இவன் நல்ல பையன் ஆகவே மீட்பர், அவன் சொன்னபேச்சு கேட்காத தறுதலை, ஆகவே சாத்தான்.
வைணவர்களின் கடவுளை அவருக்கு அறிமுகமில்லை என நினைக்கிறேன். அவர் பைனரியை கடந்த பைநாகசயனன் அல்லவா? உளனெனின் உளன் இலனெனின் இலன் என்று அவரைப்பற்றிச் சொல்ல ஆரம்பித்தால் மொத்த கம்ப்யூட்டரிலும் புதிய நிரல் எழுதவேண்டும்.
மிக அரிதாகத்தான் கடவுள் என்ற கொள்கையை அதற்கிணையான கொள்கையால் எதிர்கொள்ளும் நகைச்சுவைகளை மேலைநாடுகளில் காணமுடிகிறது. உண்மையில் கடவுள் என்பதே ஏகப்பட்ட நகைச்சுவைக்கு இடமிருக்கும் ஒரு கருத்துதான். ரொம்ப வயதான ஒருவர் மேலே அமர்ந்துகொண்டு அவரால் பெரிதாக ஒன்றும் செய்யமுடியாத ஒரு எக்கச்சக்கமான சிக்கலை திகைத்துப்போய் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்றால் வேடிக்கைதானே?.
கிறிஸ்தவத்தில் அவரேதான் அதை அழிக்கவும் வேண்டும். இந்து மதம் என்றால் பரவாயில்லை, அழிப்பவர் வேறொருவர். ”அடப்பாவி, கொஞ்சம் கொஞ்சமா உருப்பட்டிரும்னு நினைச்சேனே, அதுக்குள்ள முந்திக்கிட்டியே, ஒருவார்த்தை கேக்கமாட்டியா?“ பிலாக்காணம் வைத்து சமாதானம் ஆகிக்கொள்ளலாம்.
நம் கடவுள் இன்னும் சிக்கலானவர். அவர் ஒரு சாப்ட்வேர். ஹார்ட்வேர் என்பது அந்த சாஃப்ட்வேரின் மாயை. சாஃப்ட்வேர் தன்னையே ஹார்ட்வேராக ஆக்கி- சரி விடுங்கள் அதெல்லாம் மிகச்சிக்கலான விஷயம்.
நமக்கு இதற்கெல்லாம் நல்ல ஓவியர்கள் இல்லை. இருந்திருந்தால் நம் தெய்வங்களைப் பற்றி ஏகப்பட்ட கார்ட்டூன்கள் போட்டிருக்கலாம். எனக்கே நிறைய ஆன்மிகச்சிக்கல்கள் உண்டு. ஆனால் வரையத்தான் ஆளில்லை. சிலையாகச் செய்ய நிறையபேர் இருக்கிறார்கள். நம் சிமிண்ட் கோயில் கோபுரங்களில் எல்லாம் பலவண்ணங்களில் சாமிகளின் கார்ட்டூன்களைத்தானே சிலையாக வைத்திருக்கிறோம்?