கதாநாயகி – குறுநாவல் : 13

𝟙𝟛

நான் என்னருகே இருந்த ப்ரெஸ்லெட் மெல்ல அசைவதை பார்க்காமலேயே உணர்ந்தேன். அல்லது என் ஓரவிழி அதைக் கண்டது. என் கழுத்தை இறுக்கிக்கொண்டு அசைவில்லாமல் அமர்ந்திருந்தேன். திரும்பினால் அது நின்றுவிடும் என அறிந்திருந்தேன். ஆனால் திரும்பாமல் இருப்பது அத்தனை எளிதல்ல. நான் பார்ப்பதையே அது அறியக்கூடாது. எது? அந்த ப்ரெஸ்லெட்தான். அதில் செயல்படும் அது.

சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அசைவில்லாமல் இருந்தது. ஒன்று தோன்றியது. எழுந்து சென்று சாக்பீஸ் எடுத்துவந்து அது இருக்கும் இடத்தை அடையாளப்படுத்திக் கொண்டேன். பின்னர் சாக்பீஸை டிராயரில் போட்டேன். உள்ளே அந்த செயின் கிடந்தது. அதை ஏனோ சற்றுநேரம் பார்த்தேன். பின்பு டிராயரை மூடிக்கொண்டு புத்தகத்தை கையிலெடுத்தேன்.

ஈவ்லினாவின் வரிகள். The invitation is accepted, and we expect her every moment. But to me, it is very strange, that a woman who is the uncontrolled mistress of her time, fortune, and actions, should choose to expose herself voluntarily to the rudeness of a man who is openly determined to make her his sport. நான் அந்த முதல் வரியை வாசித்தேன். அழைப்பு ஏற்கப்பட்டது. அவளை எந்நேரத்திலும் எதிர்பார்க்கிறேன். அது தற்செயலா? அல்லது இங்கே எல்லாமே ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டனவா?

கர்னல் சாப்மான் என்னிடம் அவர் வேட்டைக்குச் செல்வதைப் பற்றிச் சொன்னார். வழக்கமாகச் செல்வதுதானே என்று நான் பேசாமலிருந்தேன். “மெக்கின்ஸிதான் ஏற்பாடு செய்கிறான். நீயும் வருகிறாய்என்றார்.

நான் திடுக்கிட்டுநானா?” என்றேன்.

ஆமாம், நீயேதான். உன்னை கூட்டிச்செல்லும்படி லண்டனில் இரு சீமாட்டிகள் சொன்னதாக மெக்கின்ஸி பேசும்போது சொன்னான். உன்னை கட்டாயப்படுத்தியதாகவும் நீ வரவில்லை என்றும் சொன்னான். ஏன் வந்தாலென்ன?”

எனக்கு வேட்டை பிடிக்காது.

நீ எத்தனை வேட்டைக்குப் போயிருக்கிறாய்?”

நான் வேட்டையையே பார்த்ததில்லை.

சரிதான். நாவல்களில் படித்திருப்பாய். ஒருமுறை வந்து பார். விடவே மாட்டாய். வேட்டை என்பது இயற்கைக்கும் நமக்குமான சண்டை. இயற்கையில் மற்ற மிருகங்களில் இருந்து நாம் எப்படி மேம்பட்டவர்கள் என்று நமக்கே காட்டித்தருவது. அதைப்போல தன்னம்பிக்கையும் நிறைவும் அளிக்கும் செயல் வேறு இல்லை.

அவள் தலை திருப்பிக்கொண்டுஅப்படி ஒரு தன்னம்பிக்கை எனக்கு தேவையில்லைஎன்றாள்.

நீ ஏன் இசை மீட்டுகிறாய்? ஏன் நாவல் வாசிக்கிறாய்? ஏன் ஓவியம் வரைகிறாய்?” என்று அவர் கேட்டார். ஆழ்ந்த தத்துவ ஞானியின் பாவனையில் இவற்றைக் கேட்பது அவருடைய வழக்கம். “இதெல்லாமே நம்மால் ஒரே காரணத்துக்காகத்தான் செய்யப்படுகின்றன. நம்மை நாம் மிருகம் அல்ல என நிரூபிக்க விரும்புகிறோம். நம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் மிருகமாகவே இருக்கிறோம். காமம், கோபம் எல்லாவற்றிலும். அப்படி அல்ல என்று நிறுவிக்கொள்கையில் நாம் மேலே செல்கிறோம்.

அவர் சுருட்டை பற்றவைத்து இழுத்து நீலப்புகையை வெளியே விட்டார்.ஆனால், வேட்டையின் போதுதான் நாம் உண்மையில் விலங்கு அல்ல என்று உணர்கிறோம். விலங்குகளின் அரசன் கூட நம் முன் மிகச்சிறிய உயிர்தான். புலியை நீ பார்த்திருக்கிறாயா?”

இல்லை.

புலியை காட்டில் பார்க்க வேண்டும். அந்த நடையின் கம்பீரம், பளிங்குத்துண்டுக் கண்கள், பொன்னிற உடல். ஆணவத்துடன் எழுந்த நீண்ட வால். அலட்சியமாக அசையும் காதுகள். கூர்ந்த மூக்கு. அதுதான் விலங்குகளின் அரசன். ஒரு மகத்தான நடனக்கலைஞனின் அசைவுகள் அதற்கு. நாம் லண்டனில் காணும் பேரரசருக்குக் கூட அத்தகைய முழுமையான ஒத்திசைவு கொண்ட அசைவுகள் இல்லை. அது இங்கே மிக மகத்தான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கணமும், வெறும் இருத்தல் வழியாகவே. ஓர் உடல் கொள்ளும் அழகின் உச்சமென்ன என்று அது கடவுளுக்கு காட்டிக்கொண்டிருக்கிறது.

அவர் சிரித்தபடி மீண்டும் சுருட்டை ஆழமாக இழுத்துஆனால் ஒரு துப்பாக்கி வேட்டின் ஓசை போதும், அக்கணமே அது அஞ்சிய பூனையாக ஆகிவிடும். அது பதறியடித்து ஓடுவதை நீ பார்க்கவேண்டும். நாம் துரத்திச் சென்றால் அது தன் வளையை அடைந்து பதுங்கி அமர்ந்துகொண்டு முகத்தைச் சுளித்து மீசை விடைக்க வெண்பற்களைக் காட்டி சீறும். அது ஒரு அபத்தமான சிரிப்பு போலிருக்கும். அஞ்சியவர்கள் வீராப்பு காட்டும்போது வரும் சிரிப்பு அது. அதைக்காண்கையில் நான் ஒவ்வொரு முறையும் வெடித்துச் சிரித்துவிடுவேன்.

நான் கடுமையான ஒவ்வாமையை அடைந்தேன். ஆகவே ஒன்றும் பேசாமலிருந்தேன்.

நீ வருகிறாய், வேட்டையைப் பார்க்கிறாய். இம்முறை நான் புதிய ரைஃபிள் ஒன்றுக்குச் சொல்லியிருக்கிறேன். ஆர்சிஏ 19, அற்புதமான ரைஃபிள். ஸ்மூத்தி என்று பெயர். ஒரு காமம் கொண்ட பதினெட்டு வயது கன்னி போல நம் கைகளில் குழைவாள் என்று சொன்னான் அதன் வியாபாரிஹஹஹஹா.

நானும் புன்னகைத்தேன். அவர் ஒயின் ஊற்றிக்கொண்டார். “நான் இம்முறை உன்னை கூட்டிக்கொண்டு போவதாகச் சொல்லி ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன். உனக்கு எந்த வசதிக்குறைவும் ஏற்படாது. நீ கூடுமானவரை சாரட்டில் வரலாம். அதன்பின் குதிரைகளில் போகலாம். கடுமையானதாக இருந்தால் உன்னை சப்பரம் கட்டி தூக்கிச் செல்லவும் அங்கே ஆட்கள் உண்டு.

டியர்என்று நான் ஒயிலாகச் சொன்னேன். வேண்டுமென்றே என் கைகளை தூக்கி கூந்தல் முடிச்சை சீரமைத்தேன். “நான் வரமுடியும் என நினைக்கவில்லை. எனக்கு அது மாதத்தின் கடினமான நாட்களாக இருக்கலாம்.

இருக்கட்டும். நீ வருகிறாய்என்று கர்னல் சாப்மான் சொன்னார். அவர் கண்கள் மாறிவிட்டன.

நான் அதன்பின் ஒன்றும் சொல்லவில்லை. அந்த எல்லைக்குமேல் என்னால் அவர் பேச்சை மீறமுடியாது என்று அறிந்திருந்தேன்.

முதலில் காட்டுக்குச் செல்வதும் விலங்குகளைக் கொல்வதும் நினைப்பதற்கே எரிச்சலூட்டுவதாக இருந்தது. ஆனால் மெல்ல மெல்ல எனக்கு ஓர் ஆர்வம் உருவாகியது. காடு, அதிலும் நிலநடுக்கோட்டுப் பகுதி மழைக்காடு, எப்படி இருக்கும்? நான் லண்டனிலேயே காட்டுக்குள் சென்றதில்லை. கதைகளில் காடு என படித்து கற்பனை செய்துகொண்டதெல்லாம் சர்ச்சுக்குப் பின்னாலிருக்கும் சிறிய பிர்ச், பைன் மரத்தோட்டத்தைத்தான்.

நான் காட்டுக்குச் செல்வது அதற்குள் பரவிவிட்டது. ஆஃபீசர்ஸ் கிளப்பில் மரியா என்னிடம்வேட்டைக்கா செல்கிறாய்? உனக்கு துப்பாக்கி பிடிக்க தெரியுமா?” என்றாள்.

அதனாலென்ன, கர்னல் சொல்லிக் கொடுப்பார்என்றாள் எலிஸா.

நான் புன்னகைத்தேன். அப்பேச்சுக்களில் நஞ்சு இருந்தாலும் அதற்கு அடிப்படை வெறும் பொறாமையே என அறிந்திருந்தேன். அதைவிட்டுவிடுவதே என் வழக்கம்.

கிளம்புவதற்கு முந்தையநாள் வரை ஊக்கத்துடன் இருந்தேன். இரவு பதற்றத்தில் நெடுநேரம் தூக்கம் வரவில்லை. வெளியே போய் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தேன். மெக்கின்ஸி வீட்டில் இருந்தார். ஆனால் மது அருந்திவிட்டு எட்டுமணிக்கே தூங்கிவிட்டார்.

நான் நள்ளிரவு கடந்த பிறகுதான் தூங்கினேன். முதல்விடியலிலேயே என்னை மார்த்தா எழுப்பிவிட்டாள். அதற்குள் மெக்கின்ஸி எழுந்து ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார். வீடெங்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. பாரஃபின் எரியும் வாசனை நிறைந்திருந்தது.

நான் எழுந்து சென்று நீராடி வந்தேன். மார்த்தா என் பொருட்களை எடுத்து கட்டிவைத்தாள். என்னென்ன எடுக்கவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அறைக்கும் கூடத்திற்குமாக நடந்தேன். மெக்கின்ஸியிடம்என்னென்ன எடுக்கவேண்டும்?” என்றேன்.

உனக்கு ஒன்றும் தெரியாது. நான் எல்லாவற்றையும் மார்த்தாவிடம் சொல்லிவிட்டேன்என்றார்.நீ வந்து இங்கே பேசாமல் இரு. வண்டிகள் வந்ததும் கிளம்பலாம்.

ஆனால் எனக்கு சேற்றில் நடக்கும் சப்பாத்துக்கள் இல்லை.

எல்லாம் ஏற்கனவே வாங்கி வைக்கப்பட்டிருக்கிறது. நீ நகைகள் ஏதும் போட்டுக் கொள்ள வேண்டியதில்லை. பிற எல்லாமே நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்

சாரட்டா வரப்போகிறது?”

இல்லை, குதிரைவண்டிதான்.

அது எதுவரை போகும்?” என்றேன்.

வழியைச் சொன்னால் உனக்குப் புரியுமா? பேசாமலிரு.

அதன்பிறகு நான் ஒன்றும் சொல்லவில்லை. காலையில் வெளிச்சம் எழுவதற்கு முன்னரே வண்டிகள் வந்துவிட்டன. நான் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டேன். கூட எவருமில்லை. வண்டியின் திரையை விலக்கி வெளியே பார்க்கமுடியும். இன்னொரு வண்டியில் பொருட்கள். அவையெல்லாம் மரப்பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன. தோல்பைகள் ஏழெட்டு.

மெக்கின்ஸியும் எட்டு வீரர்களும் குதிரைகளில் வந்தார்கள். இரண்டு குதிரைகள் முன்னால் போக மற்றவை பின்னால் வந்தன. நாங்கள் கிளம்புவதற்கு மேலும் பொழுதாகியது. ஒவ்வொன்றாகச் சரிபார்க்க வேண்டியிருந்தது. துப்பாக்கிகளும் ரவைகளும் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளை பலமுறை எண்ணிப் பார்த்தார்கள்.

கிளம்பும்போதும் இருட்டு இருந்தது. நீண்ட பயணம்தான் அது. சென்று சேரவே மூன்று நாட்களாகும். நான் ஏற்கனவே வரைபடத்தில் வழியை பார்த்திருந்தேன். டிரிவாண்ட்ரம் பாலராமபுரம் நெய்யாற்றின்கரா வழியாக நாகர்கோயில் செல்லும் சாலை.

பாதை நான் நினைத்தது போல் இல்லை. மாட்டுவண்டிச் சாலை என்று  வரைபடத்தில் போட்டிருந்தது. ஆனால் கல் பரப்பப்பட்டதோ இறுக்கப்பட்ட மண்ணோ அல்ல. வண்டிகள் சென்று சென்று சாலை புழுதிக்குளமாக இருந்தது. வண்டிச்சக்கரங்கள் பல இடங்களில் புதைந்தன. பல இடங்களில் சாலையை அறுத்துக்கொண்டு நீரோடைகள் சென்றன. ஏராளமான மரப்பாலங்கள். அவற்றில் மிகமெல்ல ஒவ்வொரு வண்டியாகத்தான் போகமுடியும். ஒவ்வொரு இடத்திலும் எங்கள் வண்டிகளை படைவீரர்கள் கூச்சலிட்டுக் கொண்டும் பாட்டுபாடிக் கொண்டும் தூக்கிவிட்டார்கள்.

இங்கே வண்டிகள் வழியாகச் சரக்குகள் கொண்டு வரப்படுவது மிகக்குறைவு. பெரும்பாலும் நீர்வழிப்பாதைதான். அஞ்சுதெங்கு முதல் மணக்குடி வரை படகுகள் சென்றன. பூவாறு, குளச்சல், தேங்காய்ப்பட்டினம் போன்ற ஊர்களை படகுகளே இணைத்தன.

கர்னல் சாப்மான் இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்று குழித்துறை அருகே லண்டன் மிஷனுக்கு சொந்தமான ஒரு பங்களாவில் தங்கியிருந்தார். நாங்கள் முழுப்பகலும் பயணம் செய்து இரவில் அங்கே சென்று சேர்ந்தோம். அவரை அன்று சந்திக்கவில்லை. பயணக் களைப்பில் குளிக்கவும் தோன்றாமல் தூங்கிவிட்டோம்.

மறுநாளும் விடியலுக்கு முன்னரே கிளம்பினோம். வண்டிப்பாதை உண்ணாமலைக்கடை வழியாக திருவட்டாறு சென்றது. வழியில் ஒரு மேட்டை ஏறி இறங்குவதற்குள் குதிரைகள் நுரை கக்கிவிட்டன. திருவட்டாறு அருகே ஆற்றைக் கடக்க பெரிய மூங்கில் தெப்பங்கள் இருந்தன. வண்டிகளையும் குதிரைகளையும் தனித்தனியாக ஏற்றிக்கொண்டார்கள் ஆற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட வடத்தில் தெப்பம் பிணைக்கப்பட்டிருந்தது. மூங்கில்கழியாக் உந்தியும் கயிற்றை பிடித்து இழுத்தும் தெப்பத்தைச் செலுத்தினர். குதிரைகள் மறுகரைக்குச் சென்றதும் கால்களை உதறிக்கொண்டு நின்ற இடத்திலேயே நடப்பதுபோல அசைந்தன. செவிகளை பின்னுக்குச் சரித்து ஆற்றில் எழும் ஓசைகளை கூர்ந்தன. ஒவ்வொருவராக மறுகரைக்கு வந்தபின் மீண்டும் பயணம்.

அன்று மாலை குலசேகரம் வந்துசேர்ந்தோம். அது அரசரின் பெயரால் அமைந்த ஒரு சந்தையும்,சுங்கசாவடியும் அதைச்சூழ்ந்த நூறு ஓலைக்குடிசைகளும் ஒரு ஓட்டுக்கட்டிடமும்தான். ஆனால் அங்கே லண்டன் மிஷனின் விருந்தினர் மாளிகை இருந்தது. அங்கேதான் நாங்கள் தங்க ஏற்பாடாகியிருந்தது. நாங்கள் படுத்தபிறகுதான் கர்னல் சாப்மானும் அவருடைய காவலர்களும் வந்தார்கள் என்று தெரிந்தது.

மறுநாள் காலையில் அங்கிருந்து குதிரைகளில் கிளம்பினோம். நான் ஏறிக்கொண்டது பெரிய வெள்ளைக்குதிரை. ஓயாமல் செருக்கடித்துக் கொண்டும் சினைத்துக் கொண்டும் இருந்தது. அதிலிருந்து கிளர்ச்சியூட்டும் வியர்வை வாடை எழுந்தது. விந்தையான ஒரு மாமிசவாடையும். அதன் செவிகள் மிகச்சிறியவையாக இருந்தன. அதன் கழுத்தை தடவி என்னை அதற்கு பழக்கப்படுத்திக் கொண்டே இருந்தேன். கழுதைகளில் எங்கள் பெட்டிகளும் பொதிகளும் சென்றன. துப்பாக்கிகள் மற்றும் பொருட்களை தலையில் ஏற்றிக் கொண்டு சுமையாட்கள் சென்றனர். அதன்பின்னரே நாங்கள் கிளம்பினோம். கர்னலும் அவருடைய கூட்டத்தினரும் கிளம்பவில்லை.

மழைநீர் சிவப்பாக பெருகிச்சென்ற ஒரு காட்டாறை ஒட்டி பாதையை அமைத்திருந்தனர். காட்டுக்குள் செல்ல அது மட்டுமே வழி. காட்டாறு மலைகளை அறுத்து அந்த பாதைக்கான இடைவெளியை உருவாக்கியிருந்தது. மழைக்காலத்தில் ஆற்றில் நீர் பெருகிச்சென்றால் அந்தப்பாதை பயன்படுமா என்று தெரியவில்லை. ஆனால் அது தொடர்ச்சியான சரிவு. ஆகவே நீர் பக்கவாட்டில் மிகவும் மேலேற வாய்ப்பில்லை.

ஆங்காங்கே பாறைகள்மேல் பலகைகளைப் போட்டு பாலங்களை அமைத்திருந்தனர். சில இடங்களில் மரத்தடிகளை நட்டு அதன்மேல் பலகைகளைப் போட்டு உருவாக்கப்பட்ட பாலங்கள். அது கோடைகாலம். ஆனால் அன்று விடியற்காலையில் கூட மழை பெய்திருந்தது. நிலம் ஈரமாக இருந்தது. காட்டுக்குள் இலைகளில் ஈரமில்லை. ஆனால் பசுமையில் நீரின் இருப்பை உணரமுடிந்தது.

சாலையில் மணல் தெறித்துக் கொண்டிருப்பதுபோல் இருந்தது. கீழே குனிந்து கூர்ந்து பார்த்தேன். பல்லாயிரக்கணக்கான தவளைக்குஞ்சுகள். ஒரு சிறு கூழாங்கல் அளவானவை. அவை இடப்பக்கமிருந்து தெறித்து அலையலையாக மேலே சென்று கொண்டிருந்தன. குதிரையின் கால்களில் தவளைக்குஞ்சுகள் உண்ணிகள் போல ஒட்டியிருந்து உதிர்ந்தன.

கோதையாறை நாங்கள் அடைந்தபோது உச்சிப்பொழுது கடந்துவிட்டிருந்தது. அங்கே சற்றுநேரம் காத்திருந்தோம். நான் ஒரு மரத்தடியில் விரிக்கப்பட்ட பனையோலைப் பாயில் படுத்தேன். குதிரைப்பயணம் நடப்பதற்கு சமமாகவே உடலுக்கு அலுப்பூட்டுவது. என் எலும்புகள் இனிய ஓய்வை உணர்ந்தன.

மெக்கின்ஸி பீர் புட்டியுடன் என்னருகே அமர்ந்தார். “பசுமையான காடுஇந்த பசுமை நம்மூர் பசுமை போல அல்ல. இங்கே ஒரு கைச்சுற்று அளவுக்குள் நூறுவகை தாவரங்கள் உண்டு. அதேயளவுக்கு உயிர்களும் உண்டுஎன்றார்.

நான் புன்னகை செய்தேன். உண்மையில் அச்சூழல் என்னை மிகவும் ஈர்த்துவிட்டிருந்தது. அதுவரை இருபுறமும் அடர்ந்த பசுமையாக வந்துகொண்டிருந்தது காடு. பெரிய இலைகள் கொண்ட தாழ்வான மரங்கள். அவற்றுக்குமேல் சிறிய இலைகள் கொண்ட உயரமான மரங்கள். அவற்றுக்கும் மேல் வானைநோக்கி விரிந்த கிளைகளுடன் மிக உயரமான மரங்கள் என மூன்று அடுக்கு. கீழே செடிகளும் அதேபோல மூன்றடுக்கு. தரையில் கடும்பச்சை நிறமான புற்கள், கூம்பிலைப் பூண்டுகள்.

நான் உணர்ந்து கொண்டிருந்தது அதைத்தான். உயிர். அங்கே உயிர் நிறைந்திருந்தது. நம்முள் ஒரு சிறிய நுரைக்குமிழி போலிருக்கும் உயிர் திமிறிப்பெருகி நிறைந்து சூழ்ந்திருந்தது. அதைப் பார்க்கவே நம்முள் இருந்து உயிர் துள்ளுவதை, அது சென்று அப்பெருக்குடன் இணைந்து கொள்வதை, அதுவாகி ஓங்கி நின்று தருக்குவதை உணரமுடிந்தது.

நான் சொற்களை கோத்துக் கொண்டிருந்தேன். அங்கே சென்றதுமே டைரியில் எழுதவேண்டும். டைரியை எடுத்துக் கொண்டேனா? என் ஓவியப் புத்தகத்தையும் வண்ணங்களையும் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இவர்கள் வேட்டைக்குச் செல்வார்கள், குடிப்பார்கள். நான் செய்வதற்கு ஒன்றுமிருக்காது.

ஆனால் இருந்தால்கூட எல்லாம் பெட்டிகளுக்குள்தான் இருக்கும். ஒன்றும் செய்வதற்கில்லை. ஒருக்களித்துப் படுத்து காட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கரிய மெழுகுக்குச்சி நகர்ந்து வருவதைக் கண்டு கூச்சலிட்டபடி எழுந்துவிட்டேன். ஒருவன் வந்து அதை கையால் எடுத்து அப்பாலிட்டான்.

மெக்கின்ஸிஅது அட்டை. இங்கே அவை கொஞ்சம் மிகுதி. எந்த தீங்கும் செய்வதில்லைஎன்றான்.

அந்தப் பகுதியெங்கும் அவை மிகமெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கரிய வளையங்களை அடுக்கி உருவான உடல். கீழே பொன்னிறத்தில் அலையலையாக கால்கள். விந்தையான உயிர். அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

காட்டுக்குள் இருந்து குரங்குகள் கூட்டமாக வந்து மரங்களில் அமர்ந்தபடி எங்களைப் பார்த்தன. அவை எங்களைப் போன்றவர்களை முன்பு பார்த்திருக்கவில்லை என்று தெரிந்தது. கைகளில் குழந்தையுடன் இருந்த தாய்க்குரங்குகள் கீழிறங்கி வந்து தரையில் அமர்ந்து முகம் சுளித்து பார்த்தன. குட்டிகளின் கண்கள் மின்னி மின்னி இமைத்தன. முகம்சிவந்த பெரிய ஆண்குரங்கு இறங்கி கையூன்றி நடந்து அருகே வந்து அமர்ந்து கொண்டு எங்களைப் பார்த்தது. சலிப்புடன் மற்ற குரங்குகளிடம் ஏதோ ஆணையிட்டது.

அவை மனிதர்களைப் போல இருக்கின்றனஎன்று நான் சொன்னேன்.

மெக்கின்ஸிஅவற்றை இங்கே வால்மனிதர்கள் என்றுதான் சொல்கிறார்கள். அவர்களின் தெய்வங்களிலும் குரங்குகள் உண்டுஎன்றார்.

குரங்குகள் எங்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. எங்களை அறிந்துகொள்ளவே முயன்றன. கிளைகளில் காற்று வருவதுபோல இலைகள் ஓசையிட்டன. நிறைய குரங்குகள் வந்திறங்கி வரிசையாக அமர்ந்து எங்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.

குதிரைக் குளம்படிகள் கேட்டன. பாதையில் கர்னல் சாப்மானும் அவருடைய வேலைக்காரர்களும் வந்தனர். சாப்மானின் ஏடிஸியான செகண்ட் லெஃப்டினெண்ட் ஜான் ஃப்ரெஸர் அவருக்கு பின்னால் பிரிட்டிஷ் ராணுவத்தின் அடர்சிவப்புச் சீருடை அணிந்து வந்தான். அந்த கூட்டத்தில் அவன் மட்டும்தான் சீருடை அணிந்திருந்தான்.

குரங்குகள் திரும்பி குதிரைகளை வேடிக்கை பார்த்தன. கர்னல் சாப்மான் காக்கி சட்டையும் காக்கி கால்சட்டையும் அணிந்து உயரமான சப்பாத்துகள் அணிந்திருந்தார். தோள்பட்டைக்கு குறுக்காகச் சென்ற சிவப்பு பெல்டில் உறையில் பிஸ்டல், தோளுக்குப் பின்னால் ரைபிளின் முனை தெரிந்தது.

மெக்கின்ஸி எழுந்து கைவீசினார். நான் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தேன். கர்னல் சாப்மான் வேகத்தை குறைக்காமலேயே வந்தார். அருகே வந்ததும் சட்டென்று பிஸ்டலை எடுத்து அந்த பெரிய ஆண்குரங்கைச் சுட்டார். வெடியோசை காட்டில் பல இடங்களில் எதிரொலித்தது. ஆண்குரங்கு பக்கவாட்டில் சரிந்து விழுந்தது. அப்போதுதான் அதைத்தான் சுட்டிருக்கிறார் என்று தெரிந்தது. நான் அலறியபடி எழுந்துவிட்டேன்.

சிரித்தபடியே கர்னல் சாப்மான் இன்னொரு குரங்கைச் சுட்டார். அது விழுந்த பின்னரும்கூட மற்ற குரங்குகளுக்கு அவற்றை அவர் தாக்குவது புரியவில்லை. அவை கலைந்து ஓசையிட்டபடி அங்கேயே நின்றன. இரு குரங்குகள் விழுந்துகிடந்த குரங்கை அணுகி தூக்க முயன்றன.

கர்னல் சாப்மான் ஒரு தாய்க்குரங்கைச் சுட்டார். அது மரக்கிளையில் இருந்து ஓசையுடன் கீழே விழுந்தது. அதன் குட்டி விழுந்து உருண்டு எழுந்து நின்று கிளிபோல குரலெழுப்பியது.

அப்போதுதான் குரங்குகளுக்குப் புரிந்தது. அவற்றில் மூத்த பெண்குரங்கு உரக்க ஓசையிட்டு அமர்ந்திருந்த கிளையை உலுக்கியது. சாப்மான் அதை குறிவைத்தார். நான் எழுந்து ஓடிப்போய் அவருடைய கைகளை தட்டினேன். அவர் சிரித்துக்கொண்டே மீண்டும் குறிவைத்தார். அதற்குள் குரங்குகள் பாய்ந்து மரங்களுக்குள் சென்று மறைந்தன.

மூன்று குரங்குகள் மட்டும் விழுந்து கிடந்தன. குட்டிக் குரங்கு மட்டும் குழப்பமும் தயக்கமுமாக ஆண்குரங்கை அணுகியது. அதன் வாலைப்பிடித்து இழுத்தது. சாப்மான் அதைச் சுட்டார். ஓசையே இல்லாமல் அது சரிந்து விழுந்தது. அதன் வால் மட்டும் நெளிந்துகொண்டிருந்தது.

அவற்றுக்கு நம் மீது அச்சம் வேண்டும்என்று சாப்மான் சொன்னார். ”ஏனென்றால் இவை காட்டை காவல் காக்கின்றன. நம்மைப் பார்த்தாலே இவை நெடுந்தொலைவு ஓடிப்போய்விட வேண்டும். இல்லாவிட்டால் நாம் காட்டுக்குள் நுழைந்ததுமே இவை ஓசையிட்டு எச்சரிக்கை அளித்துவிடும். அதன்பின் ஒரு வேட்டைவிலங்கு கூட கண்ணுக்குப் படாது

நான் பதறிக்கொண்டிருந்தேன். என் கைகள் நடுங்கவே குடையை இறுகப் பற்றிக்கொண்டேன். என் முகத்தை பிறர் கவனிக்காமலிருக்க தரையை பார்த்தேன். இவர்களின் சூழலில் அஞ்சுவதும் பதறுவதும்கூட தாழ்ந்த குடியின் இயல்புகளாக கருதப்படலாம்.

நாம் மேலே செல்வோம்வேட்டைப் பங்களா அங்கேதான் இருக்கிறது. எல்லா ஏற்பாடுகளும் அங்கே செய்யப்பட்டிருக்கின்றனஎன்றார் மெக்கின்ஸி.

ஆம், செல்வோம்…” என்றபின் என்னை நோக்கி திரும்பிய கர்னல் சாப்மான்உன்னால் நடக்க முடியாது. நீ குதிரையிலேயே வரலாம்என்றார்.

ஆனால் அங்கிருந்த வழிகாட்டியான பழங்குடி இளைஞன் ஏதோ சொல்ல அதை ஓர் இந்திய படைவீரன் “குதிரையில் போக முடியாது. மரக்கிளைகள் தடுக்கும்என்றான்.  

நான் நடக்கிறேன்என்று நான் மெல்லிய குரலில் சொன்னேன்.

கழுதைமேல் ஏறிக்கொள்என்றார் கர்னல்.

இல்லை, வேண்டாம். இந்த சப்பாத்துக்கள் சௌகரியமானவை.

அப்படியென்றால் சரி.

நாங்கள் அந்த காட்டுப் பாதையில் நடந்தோம். என்னிடமிருந்த எல்லா ஆர்வமும் வடிந்துவிட்டது. காடு என்னைச் சூழ்ந்திருந்தது. இருண்ட கொடிய காடு. அது உறுமிக் கொண்டும் ஊளையிட்டுக் கொண்டும் இருந்தது. பகைகொண்ட மாபெரும் விலங்குபோல.

கர்னல் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே வந்தார். “இம்முறை நாம் புலியோடு போகப்போகிறோம்என்று என்னிடம் சொன்னார்.

நான் தலைகுனிந்து நடந்தேன்.

உன்னிடம் புலி கைகுலுக்கும்…. நான் சொல்கிறேன்என்றார். அதன்பின் உரக்கச் சிரித்துஆனால் அதற்குமுன் அதன் உடலுக்குள் நாலைந்து ஈயம் பாய்ந்திருக்கும்என்றார்.

மக்கின்ஸியும் வெடித்துச் சிரித்துஈயம் புலிக்கு மிக நல்லதுஎன்றார். “அது புலியை நாகரீகமானதாக ஆக்குகிறது.

அவர்களின் பேச்சு என் தலைமேல் அடிப்பது போலிருந்தது. என் கண்கள் அவ்வப்போது மங்கலடைந்தன. பலமுறை நின்றேன். அவர்கள் என்ன என்று கேட்டபோதுதண்ணீர்என்றேன்.

இப்படி தண்ணீர் குடிக்கக்கூடாது. காட்டில் தண்ணீர் மிக அரிய பொருள்…” என்று கர்னல் சொன்னார். “சகாரா பாலைவனம் போலவே இந்த மழைக்காட்டிலும் தண்ணீர் அரிதானதுஓடைத்தண்ணீரை குடித்தால் மறுநாளே மலேரியா வந்துவிடும்.

நாங்கள் அந்த வேட்டைப் பங்களாவைச் சென்றடைந்தோம். புத்தம் புதிய பங்களா. காட்டுக்குள் அப்படி ஒன்றை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கருங்கல்லால் ஆன சுவர்கள். சரிந்திறங்கிய ஓட்டுக்கூரை. கருங்கல்லால் ஆன படிகள். முற்றத்தில் ஏற்கனவே நாலைந்து கருப்பு வேலைக்காரர்கள் நின்றிருந்தனர்.

கர்னல்அட்கின்ஸன் பங்களாஅவனுடைய ரசனை எனக்குப் பிடிக்கும்என்றார். “இங்கே தேவையில்லாமல் சுதைத்தூண்களெல்லாம் இல்லை. ஆங்கிலோ சாக்ஸன் பாணி என்று சொல்லி தூண்களாகக் கட்டிவைத்து சலிப்பூட்டுகிறார்கள்என்றார்.

நான் கல்படிகளில் ஏறினேன். அகன்ற கூடம். ஒட்டி ஒரு சிறு அறை. அப்பால் நீளும் ஒரு சமையலறை இருக்கலாம். கூடத்தின் மூலையில் ஒரு சைன்போர்டு மேஜை. அருகே நாற்காலி. அதில் அமர்ந்து ஓர் இளைஞன் ஏதோ படித்துக் கொண்டிருந்தான். அவனை நான் எங்கோ பார்த்திருந்தேன். ஆனால் இந்திய இளைஞன்.

கர்னல் உரக்கச் சிரித்தபடி உள்ளே வந்தார். “இந்தப் பயல்களுக்கு துப்பாக்கியை கையாளத் தெரியாது. கற்றுக்கொடுப்பதும் கஷ்டம். மைசூர் போரில் நான் கண்ணால் பார்த்தேன். போர் தொடங்கியதுமே பாய்ந்துபோய் கட்டையால் எதிரியை அடிக்க ஆரம்பித்துவிட்டனர். சுடுங்கள் சுடுங்கள் என்று நான் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தேன். யார் கேட்கிறார்கள்? ஆனால் நல்லவேளையாக நாங்கள் ஜெயித்தோம். சுடாமல் சண்டை போட்டவர்களை கூப்பிட்டு விசாரித்தேன். ஒவ்வொரு குண்டாக துப்பாக்கியில் போட்டு சுடும் நேரத்தில் பத்துபேரை அடிக்கலாம் என்கிறார்கள். சரிதான், ஜெயித்துவிட்டோமேஎன்றபின் என்னிடம்என்ன இங்கே நிற்கிறாய்? அந்தச் சிறிய அறை உனக்கு ஆடைமாற்றிக்கொள்ளஎன்றார்.

அந்த இளைஞன் யார் என்று பார்க்க நான் திரும்பினேன். அவன் அங்கே இல்லை. அங்கிருந்து செல்ல எந்த வாய்ப்பும் இல்லை. என் தலை எடைகொண்டு வருவதுபோலிருந்தது. என்னதான் நிகழ்கிறது? நான் என்னவாக மாறிக்கொண்டிருக்கிறேன்?

அவன் கையில் இருந்தது ஃபேன்னி பர்னி எழுதிய புத்தகம். ஆம், நான் தெளிவாகவே அதைப் பார்த்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் நாலைந்து நாட்களாகவே அந்த புத்தகத்தை மறந்துவிட்டிருந்தேன். அதை எடுத்துக்கொண்டு வரவுமில்லை.

மேஜைமேல் புத்தகம் ஏதுமில்லை. அவன் அங்கிருந்த தடையமே இல்லை. நான் திரும்பி மெக்கின்சியிடம்என் பெட்டிகளை அங்கே கொண்டு வைக்கச்சொல்லுங்கள்என்றேன்.

அங்கேதான் இருக்கிறதுஎன்று அவர் சொன்னார்.

கர்னல் வேலைக்காரர்களிடம் மதுப்புட்டிகள் அடங்கிய பெட்டிகளை எப்படி பத்திரமாகக் கொண்டு வருவது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

நான் சென்று ஆடைமாற்றிக் கொண்டேன். எளிமையான பருத்தி கவுன் அணிந்தேன். அங்கே நீராவியும் குளிரும் இருந்தது. காற்று அசைவில்லாமலிருக்கும் போது வெக்கை, காற்றில் குளிர். வெளியே மரக்கூட்டங்களின்மேல் இருட்டு கவியத் தொடங்கியது.

பொழுதென்ன ஆகிறது?” என்று நான் கேட்டேன்.

நான்குஎன்றார் மக்கின்ஸி.

அதற்குள் அந்திபோல ஆகிவிட்டதுஎன்றேன்.

இங்கே அப்படித்தான்.

நான் மேஜைமேல் அந்த புத்தகம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்துவிட்டேன்.

நான் அலறியிருக்க வேண்டும். மெக்கின்ஸி திரும்பிஎன்ன? என்ன? பாம்பா?” என்றார்.

இந்தப் புத்தகம்இது எப்படி இங்கே வந்தது?”

அவர்உனக்கென்ன கிறுக்கா? நீதான் கொண்டு போனாய்என்றார்.

இல்லை, நான் கொண்டுவரவில்லைஎன்றேன்.

நீ கையில் அந்தப் புத்தகத்துடன்தான் போனாய். நானே நினைத்துக் கொண்டேன், அந்தப்புத்தகம் உன்னை விடவே விடாது என்று.

நான் நடுங்கியபடி அமர்ந்திருந்தேன். அந்தப் புத்தகத்தை பார்த்தேன். மெய்யாகவே அது என்னை தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறதா?

மெக்கின்ஸிநான் சொல்லியாகவேண்டும். நீ அந்த புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறாய். அதைத் தூக்கி வீசு. இல்லாவிட்டால் அதுதான் உனக்கு கல்லறை.

நான் விம்மி அழுதபடி தலைகுனிந்தேன்.

கர்னல் உள்ளே வந்து மெக்கின்ஸியை பார்த்தார். பிறகு என்னிடம்என்ன?” என்றார்.

நான் பட்டுக்கைக்குட்டையால் கண்ணீரை துடைத்துக் கொண்டேன்.

சட்டென்று கர்னல் கோபம் அடைந்தார். “அவளை இங்கே அழைத்து வந்தவன் நான். அவள் அழுவது எனக்கு இழப்பு…. நான் அதைப் பொறுத்துக் கொள்ள போவதில்லைஎன்றார்.

மன்னிக்கவேண்டும், மன்னிக்கவேண்டும்என்று மெக்கின்ஸி சொன்னார்.

வெளியே போ. அங்கே அவர்கள் கூடாரம் கட்டுகிறார்கள். அவர்களுக்கு உதவுஎன்றார். “ஃப்ரேசர் அங்கிருக்கிறான், அவனுடன் இரு.

எஸ் சர்என்றார் மெக்கின்ஸி.

அங்கேயே நீயும் தங்குஉன் பொருட்களையும் அங்கே கொண்டுபோ. இங்கே நான் அழைத்தால் மட்டும் நீ வந்தால் போதும்.

எஸ் சர்என்று மக்கின்ஸி சொன்னார்.

கர்னல் தணிந்து, என்னைப் பார்த்துஅழாதே அன்பேஇந்த மூடன் களைப்பில் ஏதாவது சொல்லியிருப்பான்என்றார்.

மக்கின்ஸி மௌனமாக சல்யூட் வைத்துவிட்டு வெளியே சென்றார்.

நீ நகைகளைப் போடவேண்டாம் என்று நான்தான் சொன்னேன். ஆனால் அந்த பிரெஸ்லெட்டை போடாமல் வந்துவிடுவாயோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதைப் போட்டுக்கொண்டே வந்திருக்கிறாய். எனக்கு உன் அழகான கைகளைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறதுஎன்று கர்னல் சொன்னார். “தந்தத்தால் செய்யப்படும் பொருட்களுக்கு பொன்னால் பூண் அமைப்பது மிகச்சிறப்பாக பொருந்துகிறது. இந்தியப் பொற்கொல்லர்களுக்கு அது தெரியும்.

நான் அரைக்கண்ணால் அந்த பிரெஸ்லெட்டைப் பார்த்தேன். அது நான் சாக்பீஸால் அடையாளப்படுத்திய அதே இடத்தில்தான் இருந்தது. அதை சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். புத்தகத்தைப் பார்த்தேன். இப்போது நான் வாசித்தவை அதிலுள்ள வரிகள் தானா? நான் வாசித்துக் கொண்டிருந்தது நடுவே உள்ள பக்கம். இந்தப்பக்கங்களை முன்னரே வாசித்துச் சென்றிருந்தேன். அப்போது இந்த வரிகளை வாசிக்கவில்லை.

லண்டனில் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியா என்ற பெயரை மட்டுமே அறிந்திருந்த ஒருபெண் எழுதிய முழுக்க முழுக்க லண்டன் பற்றிய நாவலில் எப்படி இந்தியா, அதுவும் திருவனந்தபுரம் வரமுடியும்? அதைவிட கோதையாறில் இந்த பங்களா எப்படி வரமுடியும்? ஹெலெனா பற்றி மெய்யாக அந்நாவலில் ஒன்றுமே இல்லை. அந்நாவலில் நான் வாசித்த எதுவுமே அதில் இல்லை. அது மிகச்சாதாரணமான ஒரு பெண்ணுகலச் சித்தரிப்பு மட்டுமே.

Once, indeed, I thought there existed another,-who, when time had wintered o’er his locks, would have shone forth among his fellow-creatures with the same brightness of worth which dignifies my honoured Mr. Villars; a brightness how superior in value to that which results from mere quickness of parts, wit, or imagination! a brightness, which, not contented with merely diffusing smiles, and gaining admiration from the sallies of the spirits, reflects a real and a glorious lustre upon all mankind! Oh, how great was my error! how ill did I judge! how cruelly have I been deceived!

மீண்டும் மீண்டும் அந்த நீண்ட வரியையே வாசித்துக் கொண்டிருந்தேன். அது ஒரு சுழல்பாதை போலிருந்தது. அதற்குள் சென்றுவிட்டால் திரும்ப வரவே முடியாது. இந்தப்புத்தகமே ஒரு சுழற்பாதை. இதற்குள் முன்பு சென்று அங்கே சுற்றிக் கொண்டிருப்பவர்களைக்கூட நான் பார்க்கமுடியும். ஹெலெனா அப்படிப்பட்டவள். அவள் என்னை பார்க்கிறாள். நூற்றாண்டுகளைக் கடந்து வந்து என்னை அவள் இந்த அறையில் கண்டாள். How cruelly have I been deceived! How cruelly have I been deceived! How cruelly have I been deceived!

புத்தகத்தை வைத்துவிட்டு எழுந்து சென்று படுத்துக்கொண்டேன். மென்மையான மழை பெய்துகொண்டிருந்தது. அந்த பழைய பங்களாவில் நான் தன்னந்தனிமையில் இருந்தேன். கோரன் வெளியே அவனுக்கு வசதியான குடிலில் இருந்தான். இங்கே அவன் இருந்தபோது அவனால் எந்தப் பயனும் இல்லை என்றாலும் மானசீகமாக ஒரு துணையை உணரமுடிந்தது.

நான் தூங்கிவிட்டேன். விழித்துக் கொண்டபோது மழை நிலையாகப் பெய்துகொண்டிருந்தது. நீரின் திரைவழியாக கோரன் கமுகுப்பாளையைச் சேர்த்துப் பின்னிய தோல் போன்ற ஒரு திரையை தலைக்குப் போட்டுக்கொண்டு குனிந்து வந்து பங்களாவில் நுழைவதைக் கண்டேன். அவன் என்னருகே வந்து நின்றுடீ போடட்டுமா ஏமானே?” என்றான்.

போடுஎன்றேன்.

ஏமானுக்குக் காய்ச்சலா?”

இல்லியே.

அவன் வெறுமே பார்த்துவிட்டு உள்ளே சென்றான். என் உள்ளத்தில் There existed another,-who, when time had wintered o’er his locks, would have shone forth among his fellow-creatures என்ற வரி இருந்தது. யாரோ கொண்டுவந்து வைத்துவிட்டுப் போனதுபோல. எங்கே படித்தது? அல்லது யாராவது சொன்னார்களா? ஆனால் விழிப்பதற்கு முன் அந்த வரியில்தான் நான் அமைந்திருந்தேன். கட்டுண்டு பொறுத்திருந்த ஒருவன், காலம் அமையும்போது தன் துணைகளுடன் எழுவான்.There existed another! There existed another!

ஒரு மர்மமான சாபம் போலிருந்தது அந்த வரி. wintered over. அந்த சொல்லாட்சியை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் லண்டன் போன்ற குளிர்நாட்டில் வாழவேண்டும். முழு குளிர்காலத்தையும் தாங்கிக்கொள்ள ஒரே வழி. ஆழுறக்கம். பனிக்கரடிபோல. அதற்கு என்ன பெயர்? Hibernation. இந்த உலகில் இன்னமும் விழித்துக் கொள்ளாத பல்லாயிரம் கோடி உயிர்கள் ஆழுறக்கத்தில் இருக்கலாம். பாலைவனத்தில் வெட்டுக்கிளிகள், விதைகள். அண்டார்ட்டிகாவிலும் ஆர்ட்டிக்கிலும் பனிப்படலத்திற்கு அடியில் எப்போதோ ஆழுறக்கம் கொண்ட மீன்கள். படிகங்களாக ஆகிவிட்ட பாக்டீரியாக்கள், உப்பாக மாறிவிட்ட வைரஸ்கள்.

அவற்றில் எவை வேண்டுமென்றாலும் ஒரு தொடுகையில் எழுந்துவிடக்கூடும். when time had wintered over his locks.. காலம் பனியுருகச்செய்யும். ஆனால் அத்தனை உயிர்களையும் விட அதிகமான உயிர்கள் புத்தகங்களில் ஆழுறக்கத்தில் இருக்கக்கூடும். கான்ஸ்டாண்டிநோப்பிளிலும் நாளந்தாவிலும் நூல்களை எரித்தார்கள். எரிக்கவேண்டியதுதான். இந்தப் பூமியில் இருக்கும் அத்தனை நூல்களையும் எரித்துவிடவேண்டும். மிகச்சில நூல்களை வைத்திருக்கலாம். அவற்றிலிருந்து எழுவன எவை என நாம் அறிந்திருக்கவேண்டும். அவற்றைக் கையாள நாம் கற்றிருக்கவேண்டும்.

எத்தனை பெரிய அசட்டுத்தனம்! நாம் என்னவென்றே தெரியாத எவையெவையோ அடங்கிய நூல்களை அடுக்கடுக்காக நூலகங்களில் சேமிக்கிறோம். ஒவ்வொன்றும் ஒரு பொறி. அடியிலாத பள்ளம் நோக்கித் திறக்கும் வாசல்கள்.

நான் என் படுக்கையருகே ஏதோ கிடப்பதைப் பார்த்தேன். பூரான் என எண்ணி திடுக்கிட்டு எழுந்தேன். அந்த பிரெஸ்லெட். அங்கே மேஜைமேல் நான் வரைந்த சாக்பீஸ் கோடு அங்கேயே இருந்தது. என் கைகால்கள் நடுங்கின. நான் எழுந்து சென்று அந்தப் புத்தகம் அருகே அமரப்போனேன். பின்னர் வெளியே சென்று படிகளில் அமர்ந்துகொண்டேன்.

கோரன் டீ கொண்டுவந்தான். “சாருக்கு காய்ச்சலா?” என்றான்.

இல்லையேஎன்றேன். ஆனால் அப்போது மெய்யாகவே காய்ச்சல் இருப்பதுபோல் இருந்தது. வாய் கசந்தது, கண்கள் எரிந்தன. உள்ளம் அவ்வப்போது சலித்து மயங்கி சூழலையும் ஒலிகளையும் நழுவவிட்டு உதிரிச்சொற்றொடர்களாக ஆகி எங்கோ உழன்று திகைத்து மீண்டுவந்து புறவுலகுடன் பொருந்திக்கொண்டது.

நானே அந்த பிரெஸ்லெட்டை எடுத்து வந்திருக்கலாம். நான் இரவில் எழுந்து நடமாடியிருக்கலாம். வெளியே சென்றிருந்தால்கூட ஆச்சரியமில்லை. என் உள்ளத்தின் ஒருங்கிணைவு போய்விட்டது. விழிப்பும் கனவும் கலந்துவிட்டன.

நான் அன்று குளிக்கவில்லை. ஆடையை மட்டும் மாற்றிக்கொண்டு கோரனுடன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினேன். பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருந்த மென்மையான மண் முழுக்க துப்பன் ஊ’ என்ற இரண்டு எழுத்துக்களையும் எழுதிப்போட்டிருந்தான். பள்ளிக்கூடத்திற்குள் துப்பன் மட்டும் அமர்ந்து கரும்பலகையில் எழுதிக்கொண்டிருந்தான்.

உச்சன் எங்கே?” என்றேன்.

விளிக்கான் போனான்என்றான் துப்பன். அவன் முழுக்கவனமும் கரும்பலகையில் இருந்தது. “உ!” என்று என்னைப் பார்த்துச் சொன்னான். அதற்கு அவன் உவமையாக என்ன சொல்லப் போகிறான் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

அட்டைஎன்றான். “ஒரு அட்டைஇது அதின்றே ஆண் அட்டைஎன்று ஊவை காட்டினான்.

மேல் ஏறி உறவுகொள்ளும் ஆணை நான் ஊவில் கண்டேன். என் மனம் மலர்ந்துவிட்டது. புன்னகையுடன்சரி போய் ஏதாவது பிடிச்சுக்கொண்டு வாபிள்ளைகளுக்கு சமைக்கணும்ல?” என்றேன்.

அவன்நான் கண்ணி வைச்சிருக்கேன்என்றான்.

துப்பன் காட்டில் கண்ணி வைக்க வழக்கமாகச் சில இடங்களை வைத்திருந்தான். அவன் அவற்றை கண்டுபிடித்து முன்பதிவு செய்துகொண்டதனால் அங்கே பிறர் கண்ணி வைக்க முடியாது. அதில் வழக்கமாகவே முயல்கள் விழுந்துகொண்டிருந்தன. ஆகவே அவன் கிட்டத்தட்ட வேலை ஏதும் செய்யாமலேயே முழு வாழ்க்கையையும் கழித்துவிட்டிருந்தான். என்னைவிட நாலைந்து வயது மூத்தவனாக இருப்பான்.

விசில் ஓசை கேட்டது. என்னுடைய விசில். நான் எழுந்து சென்று பார்த்தேன். உச்சன் குழந்தைகளை திரட்டி கூட்டி வந்துகொண்டிருந்தான். என் கால்சட்டைப் பையைத் தொட்டேன். என் விசில் அங்கேதான் இருந்தது.

உச்சன் வேய்மூங்கிலில் விசில் ஒன்று செய்திருந்தான். என் விசிலின் அதே ஒலியுடன். அதை காது கிழிபடும்படி பலமுறை அடித்தான். பிள்ளைகள் அந்த விசில் ஓசைக்கு இயல்பாகவே கட்டுப்பட்டன.

அவர்கள் வந்து அமர்ந்தனர். அவர்களை இப்போது பிரிக்க வேண்டியதில்லை, இரண்டு வகுப்புகளாக அவர்கள் அமர்ந்து கொண்டார்கள். ஆனால் கதைகேட்கும் கூட்டத்தில் இருந்து ஒரு குழந்தை எழுத்துக்கூட்டத்திற்கு வந்து அமர்வதுண்டு. இங்கிருந்து என் நெஞ்சளவு வளர்ந்த ஒருவன் சென்று அங்கே அமர்வதுமுண்டு. அவர்களை எழுப்பி மாற்றி உட்கார வைக்கவேண்டும். துயரத்துடன் அவர்கள் சென்று தங்களுக்குரிய குழுவில் அமர்வார்கள். இவர்கள் பொதுவாக எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. பிடிக்காததைச் செய்யச் சொன்னால் சோகம்தான். நம்மை கண்ணுக்குக் கண் பார்ப்பதை தவிர்த்து தலைகுனிந்து கொள்வார்கள்.

மதிய உணவு அளித்துக் கொண்டிருந்தபோது துப்பன் என்னிடம்என்றான். தரையில்என்று எழுதி துள்ளி விலகி மீண்டும் எழுந்தினான். வெறிகொண்டு எழுதிக்கொண்டே இருந்தான். எழுத்துக்களிலேயே பேய்கள் வாழ்கின்றனவா என்று எண்ணிக்கொண்டேன்.

நான் பன்னிரண்டு எழுத்துக்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தேன். உச்சன் எல்லா எழுத்துக்களையும் எழுதவும் கற்றிருந்தான். துப்பன்வரை எழுதக் கற்றிருந்தான். இவர்கள் கற்றதை எளிதில் மறந்துவிடுவார்கள். ஆகவே அடிப்படைகளை ஆழமாக நினைவில் நிறுத்திக்கொண்டு மேலே செல்வதுதான் சரி என்று தோன்றியது.

துப்பன் என்று எழுதிக்கொண்டே இருந்தான். “துப்பா அது என்ன?” என்றேன்.

நாயெழுத்துஎன்றான். நாய் போல முன்காலை ஊன்றி பின்காலை கடித்து குந்தி அமர்ந்து காட்டினான். நாயாக மாறியது.

சரி ?”

அவன் ஏவை பார்த்துவிட்டு முன்னங்காலில் ஒரு குச்சியை மிதித்துப் பிடித்த நாயாக நடித்துக் காட்டினான்.

கோரன் வெடித்துச் சிரித்தான். எழுந்து வந்து துப்பன் எழுதுவதைப் பார்த்தபின் என்னிடம் பரவசத்துடன் “நாய்!” என்றான்.

நான் ஆமாம் என்று தலையசைத்தேன்.

கோரன் மீண்டும் சிரித்தான். “நாய் வரையணுநாயி வரையணுஎன்றான். அவன் கண்களில் துப்பன் ஒரு மேதையாக ஆகிவிட்டதை உணர முடிந்தது. அவனால் பரவசத்தை தாளவே முடியவில்லை.

நான் கைகளை கழுவிக்கொண்டு வரும்போது கோரனும் துப்பனும் தலையோடு தலையை ஒட்டவைத்துக்கொண்டு ஆழமாக மூழ்கிப்போய் எழுதிக்கொண்டிருந்தார்கள். எ என்ற எழுத்தைத்தான் கோரன் கற்றுக்கொண்டிருந்தான்.

மீண்டும் பங்களாவுக்குக் கிளம்பும்போது கோரனும் துப்பனும் அன்புடன் தழுவி விடைபெறுவதை கண்டேன். திரும்பி நடக்கையில் கோரன்!” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டே இருந்தான். முகம் மலர்ந்திருந்தது. புலிமடை அருகே வந்தபோது உரக்க!” என்றான். காடு!” என்று திரும்ப முழக்கமிட்டது.

நான் பங்களாவுக்கு வந்ததும் எல்லா கடிதங்களையும் முறையாக தொகுத்தேன். என் வேலைக்குச் சேரும் கடிதம், பதினைந்து நாட்களுக்கான ஆஜர்பட்டியல், அறிக்கைகள், பொருட்களை வாங்கிய ரசீதுகள், கணக்குகள். எல்லாவற்றையும் ஒன்றாக அடுக்கினேன்.

கோரனுக்கான ஊதியத்திற்கு ஒரு ரசீது எழுதினேன். அதில் தொகையையும் முழுமை செய்தபின் கோரனை அழைத்து அதில் கைவிரல் அடையாளம் போடும்படிச் சொன்னேன்.

கோரன் என்னை விழித்துப் பார்த்தான். பிறகு, மாட்டேன் என்று தலையசைத்தான்.

இங்கபாரு, இதிலே ரேகை வைச்சாத்தான் உனக்கு பணம் கிடைக்கும்.

அவன் மாட்டேன் என்று மீண்டும் தலையசைத்தான். கட்டைவிரலை பின்னால் கொண்டு சென்றான்.

உனக்கு பதினஞ்சு ரூவா கிடைக்கும்என்றேன்.

அவன்நான் நான் நான் ஒப்பு வைப்பேன்என்றான்.

என்ன?” என்றேன்.

ஒப்புகரண்ட் ஏமான் மாதிரி ஒப்பு வைப்பேன்.

கையெழுத்தா? நீயா?” என்றேன். பேனாவை நீட்டிமுதல்ல இந்த சாதாரணத் தாளிலே கையெழுத்த போடு பாப்போம்என்றேன்.

அவன் என்னிடமிருந்து பேனாவை வாங்கினான். அவன் கைகள் நடுங்கின. உடலின் அத்தனை தசைகளும் இழுபட்டன, மிகப்பெரிய எடையை தூக்குபவன் போல. தாளை என் கையில் இருந்து வாங்கி அட்டையுடன் தரையில் வைத்து பேனாவை ஐந்து விரல்களாலும் இறுகப்பற்றி தாளில் அழுத்தமாக ஊன்றி, பற்களை இறுகக் கடித்து, கண்களில் நீர்ப்படலம் வர, மிக மெல்ல என்று எழுதினான்.

பின்னர் என்னைப் பார்த்து புன்னகைத்துநாய்!” என்றான்.

எனக்கு சட்டென்று ஒரு சந்தேகம் வந்தது. “உங்க சாமி என்ன?” என்றேன்.

நாக்கூளிமுத்தப்பனுக்க நாயி.

நான் சிரித்துவிட்டேன். அவனுடைய குலஅடையாளத்தை எழுதக்கற்றுக் கொண்டுவிட்டான். அவனுடைய கல்வி நிறைவடைந்துவிட்டது என்று தோன்றியது.

சரி, இந்தா போடு.

அவன் நாக்கைக் கடித்தபடி தன்னம்பிக்கையுடன் அமர்ந்திருக்கும் நாய் போன்ற எழுத்தை எழுதினான். எனக்கே நாய்தான் தெரிந்தது.

அவன் புன்னகைத்து எழுத்தைச் சுட்டிக்காட்டிநாய்!” என்றான்.

நான் பேனாவால் அவனுடைய முழங்கையில் நாயின் அடையாளத்தை வரைந்தேன். அவன் உடல் நடுங்கியது, அவன் முகம் பரவசத்தில் வலிப்பு கொண்டதுபோல் ஆகியது.

இனி பாம்பு கடிக்காதுஎன்று அவன் சொன்னான்.

இதை பச்சைகுத்திக்கோஎன்றேன்.

அவன் தலையசைத்தான்.

நான் கடிதங்களை பாலித்தீன் உறையில் போட்டு அதை மீண்டும் காகித உறையில் போட்டு ஒட்டினேன். விலாசம் எழுதி கோரனிடம் கொடுத்துகாப்ரியேல் நாடாரிட்டே குடுத்திட்டு வாஎன்றேன்.

அவன் கிளம்பிச் சென்றான். முற்றத்தில் நின்று காட்டைப் பார்த்துஎன்றான். காடு திரும்ப முழக்கமிட்டது.

அவன் உடலை ஊசலாட்டியபடிச் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தொலைவில் மீண்டும்என்று அவன் குரல் கேட்டது.

மீண்டும் வந்து அமர்ந்து கொண்டேன். அந்த புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். அதை நான் படிக்காமலிருக்கப் போவதில்லை. அதை உணர்ந்ததும் ஒரு நிம்மதி உருவாகியது.

அதை எடுத்துப் படிக்கலானேன். I could have entrusted him with every thought of my heart, had he deigned to wish my confidence: so steady did I think his honour, so feminine his delicacy, and so amiable his nature… என்னிடமே எவரோ ஆழ்ந்த அந்தரங்க குரலில் சொல்வது போலிருந்தது. என் உள்ளத்தின் ஒவ்வொரு எண்ணத்தையும் அவனிடம் சொல்லலாம் என்று தோன்றுகிறது என்று சொல்பவள் யார்? ஃப்ரான்ஸெஸா? ஈவ்லினாவா? விர்ஜீனியாவா? ஹெலெனாவா? யார்?

அந்தக்குரலை மிகத்தெளிவாகவே காதில் கேட்டேன். “but I will talk,-write,-think of him no more! Adieu, my dear friend!” அது ஹெலெனாவேதான்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇரவு- ஒரு வாசிப்பு
அடுத்த கட்டுரைஉரையாடுதல்