கதாநாயகி – குறுநாவல் : 12

𝟙𝟚

காலையில் நான் கிளம்பியபோதுதான் கவனித்தேன், கோரன் களைப்புடன் இருந்தான். நான் அவனிடம் “என்ன?” என்றேன்.

“எந்தா?” என்று அவன் என்னிடம் கேட்டான்.

”ஏன் களைப்பா இருக்கே? காய்ச்சலா?” என்றேன்.

“நான் நாளைக்கு குடிலிலே உறங்கும்” என்றான்.

“எந்தக் குடிலில்?”

அவன் கொஞ்சம் யோசித்து முற்றத்தைக் காட்டி “இந்த மரத்தின்மேல் நான் மாடம் கெட்டுவேன்”  என்றான்.

“ஏன்?” என்று நான் கேட்டேன்.

“அங்கே வங்களாவில் உறக்கம் வரல்லே.”

“ஏன்?” என்று நான் மீண்டும் கேட்டேன்.

“நான் ஆரையோ கண்டேன்.”

”யாரை?” என்றேன்.

அவன் பேசாமல் வந்தான்.

“சொல்லு, யாரை?”

அவன் விசும்பி அழ ஆரம்பித்தான். நான் அவன் தோளைப் பிடித்து “சொல்லு, யாரைப்பாத்தே?” என்றேன்.

“நான் சொப்பனம் கண்டேன்.”

“என்ன சொப்பனம்?”

“ராத்திரி சொப்பனம்” என்றேன். “ஏமான் ஒரு பெண்ணினோடு பேசிக்கொண்டு இருக்குந்ந கண்டு.”

நான் “அது வெறும் சொப்பனம்” என்றேன். “நான் புக்கு வாசிச்சேன். சத்தமா வாசிச்சேன். அதைக்கேட்டு நீ அப்படி நினைச்சிட்டே.”

அவன் அதை பொருட்படுத்தவில்லை. தலையில் கரும்பலகையுடன் மௌனமாக நடந்து வந்தான். நாங்கள் இரட்டைப்பாறை மேல் ஏறியபோது எதிரில் தோளில் ரைஃபிளுடன் காக்கிக் நிஜாரும் சட்டையும் அணிந்த ஒருவர் அங்கே நிற்பதைக் கண்டேன். கரிய தடித்த உடல், பெரிய மீசை.

“வாத்தியாராக்குமா?” என்றார். உரத்த குரல் வெடித்து எழுவதுபோல ஒலித்தது. “இதென்ன பிளாக்போர்டா?”

“ஆமா” என்றேன்.

“நான் ஃபாரஸ்டுகார்டு, ஞானப்பன்னு பேரு” என்றார். “கோதையாறிலே சொன்னாவ, சாரு வந்திட்டுண்டுன்னு… ”

நான் புன்னகைத்தேன்.

“இந்தவழியா போறீக?”

“ஆமா.”

“இது புலிமடையாக்கும்.”

“நான் ஒரு தடவை புலிய பாத்தேன்.”

“எப்பமும் இருக்காது. இப்படி அதுக்க ஏரியாவுக்குள்ள பத்து முப்பது எடம் வச்சிருக்கும். அதுக்கு ஒரு கணக்கு உண்டு. அதுக்கு தோணுத நேரத்திலே வரும். மழை, வெயிலு, குளிருன்னு சீசன் கணக்கு உண்டு அதுக்கு” என்றார்.  “இந்த மடை எல்லாம் தலைமுறை தலைமுறையா புலிகள் பயன்படுத்துறது. நம்மளை மாதிரியே அப்பன் கிட்டே இருந்து புள்ளை எடுத்துக்கிடும்… என்ன, அப்பனை அடிச்சு கொன்னுட்டுத்தான் புள்ளை பட்டத்துக்கு வரும். இந்த ஏரியாவுக்கு ஒண்ணு இப்ப இருக்கு. நாங்க மங்கோல்னு பேரு வச்சிருக்கோம். இருபது வயசு ஆயிருச்சு. ஆளு பாக்க ஜம்னு இருப்பான். நல்ல பெரிய மண்டை, நீளமான மீசை.  ஜூவிலே வளருத புலி மாதிரி தொப்பை கிப்பை கெடையாது. நடந்தா நடை நூல்பிடிச்ச மாதிரி நேரா இருக்கும்… இந்த இந்த மாதிரி சில்லி கிளையிலே நுனிக்கு வந்து அங்கேருந்து அந்த கிளைக்கு தாவிருவான்…”

“ஆளைக் கொன்னதுண்டா?” என்றேன்.

“இவன் இதுவரை ஆளை கொன்னதில்லை… அதுக்கு இங்க வெளியாளு வாறதுமில்லை. காட்டிலே புலியடிச்சு சாகிறவன் ரொம்ப அபூர்வம். ஆனையடிச்சு மாசத்துக்கு ஒண்ணு விளுந்திரும்… ஆனைதான் அபாயம். புலி பெரிசா ஒண்ணுமே பண்ணாது. அதுக்கு நாம ஒரு காரியமில்லை. சல்லிப்பயக்கன்னு நினைக்கும்போல. நான் அம்பது அறுவது தடவை பாத்திருக்கேன். என்னையும் அதுக்கு தெரியும். ஒரு மயிராட்டு கூட வகை வைக்காது… சார், எவ்ளவுநாளு இங்க?”

“நான் இங்கதான் இருப்பேன்.”

“இந்த வங்களாவிலேயா?”

“ஆமா” என்றேன். “இங்க வேற எடமில்லை இல்லியா?”

“இங்க தங்கலாம்தான்… ஆனா இந்த வளியா தனியா போறப்ப கையிலே ஒரு கம்போ மற்றோ வச்சுகிடணும்… ஆனை மாதிரியே இங்க பாம்பும் பெரிய ஆபத்தாக்கும்.”

“பாத்துக்கிடுறேன்.”

“இவனை கூட வச்சுக்கிடுங்க. இவனுகளுக்கு காடு நல்ல வசமாக்கும்” என்றார் ஞானப்பன். “அதானே ஸ்கூலு?”

“ஆமா.”

“நல்ல வசமான எடமாக்கும். நான் நாலஞ்சுதடவை அங்க மளைக்கு ஒதுங்கியிருக்கேன்.”

“இங்க பண்டு ஆரையாவது புலி பிடிச்சிருக்கா?”

“புலியா? இங்கயா? நானறிய இல்ல.”

“இப்ப இல்ல. இருநூறு வருசம் முன்ன.”

“இருநூறு வருசம் முன்ன நம்ம மூத்தப்பனை புலி பிடிச்சிருந்தாலே நமக்கு தெரியாது. என்ன கேக்குறீக?” என்றார். பிறகு “ஆனா இப்ப நீங்க கேக்குறதனாலே ஞாபகம் வருது. பண்டு ஒரு வெள்ளைக்காரத் துரையை புலி பிடிச்சிருக்கு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்.”

“அவரு பேரு கர்னல் சாப்மானா?”

“அப்டியா? தெரியாதே?”

“அவரு கூட ஒரு லேடி இருந்தாளா?”

“ஆரு சொன்னா? நல்ல கதையா இருக்கே” என்றார். பிறகு யோசிச்சு “ஆனா கேட்ட ஞாபகம் இருக்கு. ஒரு லேடி வந்தா. அவ காணாம போயிட்டா. இங்கே இருந்து…”

“இந்த பங்களாவிலே இருந்தா?”

“ஆமான்னு நினைக்கிறேன். அவளையும் புலி பிடிச்சிருக்கலாம்னு சொல்லி கொஞ்சநாள் தேடினாங்களாம். கிடைக்கல்ல.”

நாங்கள் இறங்கி சென்றோம். பள்ளிக்கூடம் அருகே துப்பன் நின்றிருந்தான். என்னைக் கண்டதும் உரத்தகுரலில் “இ!” என்று கூவி தரையில் அமர்ந்து இ என்னும் எழுத்தை வரைந்தான். அதை அவன் என்ன சொல்லப் போகிறான் என்று நான் நினைத்தேன்.

“தலையிலே பாளையிட்ட எளுத்து” என்றான். காணிக்காரர்கள் கமுகுப்பாளையை சேர்த்துத் தைத்து அதை மழைக்கு தலையில் போட்டுக்கொண்டு போவார்கள். அந்த எழுத்து மெய்யாகவே மழைக்கு தலையில் பாளையை வளைத்திருந்தது.

“இவன் ஆரு? நல்ல சூடா இருக்கானே? எளவு, எளுத்து படிச்சு போடுவான் போல இருக்கே” என்றார் ஞானப்பன்.

“படிக்கான்” என்றேன்.

துப்பன் தரையில் இ என்ற எழுத்தை பலமுறை எழுதினான். வெறியுடன் எழுதிக்கொண்டே இருந்தான். கூடவே “இ! இ! இ!” என்ற கூச்சல்.

“சரஸ்வதி தலைக்கு அடிச்சுப்போட்டா. இனிமே வேற வளியில்லை” என்றார் ஞானப்பன் சிரித்தபடி “செரி வாறேன்… நாலு மலை ஏறி எறங்கணும் இனிமே.”

உச்சனிடம் நான் விசிலை கொடுத்தேன். அவன் அங்கே இங்கே கூச்சலிட்டுக் கொண்டிருந்த குழந்தைகளை விசில் ஒலித்து திரட்டி பள்ளிக்கூடத்திற்குள் கொண்டு சென்றான்.

கோரன் பள்ளிக்கூடத்தின் உள்ளிருந்து வந்தான். “ஏமானே, அரியில் முயலு” என்றான்.

“என்னது?” என்றேன்.

அவன் என்னை அழைத்துச் சென்று காட்டினான். அவன் அரிசிச்சாக்கை தோண்டி எடுத்திருந்தான். அதை தரைக்கு அடியிலேயே முயல்வளை வந்து அடைந்திருந்தது. ஆனால் அதிக அரிசியை எடுத்திருக்கவில்லை.

“எடம் மாற்றி வைக்கணும்… மண்பானை வேணும்” என்று உச்சன் சொன்னான்.

“மண்பானையா?” என்று நான் சொன்னேன்.

துப்பன் ஆர்வமாக “கூனை உண்டு… நல்ல கூனை உண்டு” என்றான்.

“கொண்டுவா” என்று நான் சொன்னேன்.

அவன் உடனே வெளியே ஓடினான்.

“மண்பானையை முயல் ஓட்டைபோடாதா?” என்றேன்.

“போடாது” என்று கோரன் சொன்னான். பிறகு குரல்தாழ்த்தி மனக்குறையுடன் “துப்பன் இ படிச்சான்” என்றான்.

”அது வேற இ” என்று நான் சொன்னேன்.

அரிசியுடன் கோரன் வெளியே போனான். அவன் முகத்தில் அதிருப்தி இருந்தது.

புதிய கரும்பலகையில் நான் எழுத்துக்களை சாக்பீஸால் எழுதினேன். அத்தனை குழந்தைகளும் அந்த வெண்ணிற எழுத்துக்களை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தன.

அவர்களிடம் எழுத்துக்களைச் சொல்லி கத்தவைத்தேன்.  துப்பன் ஒரு பெரிய பானையை சுமந்து கொண்டு வந்தான். காணிக்காரர்களே செய்த பானை. நல்ல எடையுடன் கோணலான வட்டம் கொண்ட வாயுடன் இருந்தது. ஆனால் உள்ளே இருபது முப்பது கிலோ அரிசி வைக்கமுடியும். அதற்கு மூடியும் இருந்தது.

“இதிலே போட்டு வை” என்று நான் கோரனிடம் சொன்னேன். பிறகு துப்பனிடம்  “நீ ஒரு குழி வெட்டு” என்றேன்.

துப்பன் உடனே கீழே இருந்த மாடங்களை நோக்கிச் சென்றான். சற்று நேரத்திலேயே சிறிய மண்வெட்டியுடன் வந்து குழிவெட்ட ஆரம்பித்தான்.

நான் கதை சொல்லிக் கொண்டிருந்தபோது துப்பன் வந்து உடலை முழுக்க ஊசலாட்டி கைகளை வீசி ஏதோ சொன்னான். அவன் உச்சகட்ட வேகத்தில் இருந்தமையால் என்ன சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை.

நான் உச்சனிடம் குழந்தைகளுக்கு கதை சொல்லும்படிச் சொன்னேன். ஏற்கனவே நான் சொன்ன கதையை அவன் திரும்பிச் சொல்வான். மற்றபிள்ளைகளிடம் எழுத்து சுட்டிப் படிக்கச் சொல்லிவிட்டு துப்பனுடன் வெளியே சென்றேன்.

வெளியே துப்பன் தரையில் இடையளவு ஆழத்தில் ஒரு குழி எடுத்திருந்தான். அந்த குழிக்குள் இறங்கி அவன் சுட்டிக்காட்டினான். ஒரு ஜோடி சப்பாத்துக்கள் இருந்தன. தோல் சப்பாத்துக்கள். மட்கியிருந்தாலும் உருவழியாமல் இருந்தன.

”வெளியே எடு” என்றேன்.

அவன் கிழங்குபோல மண்ணோடு பிடுங்கி வெளியே எடுத்துப் போட்டான். உள்ளே மண்ணைக் கிண்டியபோது இரும்பாலான ஏதோ கிடைத்தது. துருப்பிடித்து மண்ணுடன் சேர்ந்து ஒரு கட்டியாக இருந்தது. வெளியே எடுத்துப் போட்டபோது மண் உடைந்து விழுந்தது. நான் அதை எடுத்து தரையில் தட்டினேன். அது ஒரு துப்பாக்கி. ஆனால் துருவும் மண்ணும் ஒன்றாகி ஒரு மொத்தையான வடிவில் இருந்தது.

சில எலும்புகள் இருந்தன. ஒன்று பெரியது, தொடையெலும்பு என்று தோன்றியது. நான் அவற்றைப் பார்த்தேன். என்ன செய்வது என்று தெரியவில்லை. அவற்றை மேலே எவருக்குத் தெரிவிப்பது?

“திரும்பப் போட்டு அப்படியே மூடிரு… அந்தப்பக்கம் தோண்டு” என்று துப்பனிடம் சொன்னேன்.

அவன் என்னை புரியாமல் பார்த்தான்.

“வேண்டாம்… இந்த இடம் வேண்டாம்.. அதோ அங்கே தோண்டு” என்றேன்.

அவன் மண்வெட்டியுடன் மேலேறினான். நான் அந்த இடத்தைப் பார்த்தேன். மேலிருந்து மண் சரிந்துவிழுந்து மூடியிருக்கலாம். புலி கொன்ற கர்னல் சாப்மானின் உடலின் பகுதிதான் அது. அவருடைய துப்பாக்கிதான். சந்தேகமே இல்லை. அங்கே கொன்றிருக்கலாம், அல்லது வேறெங்கிருந்தாவது வந்திருக்கலாம். அங்கே மண் சரிந்து வந்து மூடிக்கொண்டிருந்தது.

“இதை உள்ளே போட்டு மூடிட்டு அங்கே போ” என்றேன்.

அவன் சரி என்று தலையை அசைத்தான்.

நான் குழிக்குள் மீண்டும் கூர்ந்து பார்த்தேன். “எல்லா மண்ணையும் அள்ளி மேலே வை” என்றேன்.

அவன் குழிக்குள் இறங்கி அங்கிருந்து மண்ணை அள்ளி மேலே வைத்தான். மட்கிய துணிப்பகுதிகள், பெல்ட் என்று சொல்லத்தக்க சில மட்கிய தோல்பட்டை, களிம்பேறிய வெண்கலக் கொக்கிகள், பித்தான்கள், ஒரு சங்கிலி.

நான் அதை எடுத்துப் பார்த்தேன். தங்கம் என்று தோன்றியது. கடிகாரத்தை கோர்த்து சட்டைப்பைக்குள் வைப்பதற்கான சங்கிலி. அவன் இன்னும் கொஞ்சம் மண்ணை தோண்டி வைத்தான். ஒரு சிறிய சங்கிலி. பூரான் போலிருந்தது. அதை தட்டி மண்ணை நீக்கினேன். அது ஒரு பிரெஸ்லெட். தங்கம்தான்.

அவனிடம் மறுபடியும் கொஞ்சம் மண்ணைத் தோண்டும்படிச் சொன்னேன். அவன் அள்ளிவைத்த மண் சேறாக இருந்தது. இரு சங்கிலிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மீண்டும் உள்ளே போட்டு புதைக்கச் சொல்லிவிட்டேன். அவற்றை என் சட்டைப்பைக்குள் போட்டுக்கொண்டேன்.

அன்று சாப்பாடு முடித்து கிளம்பினோம். கோரன் கரும்பலகையை தூக்கி கூரையோடு ஒட்டியதுபோல சேர்த்துக் கட்டிவைத்து, அண்டாவை மரத்தின் மேல் கட்டி தொங்கவிட்டு, கிளம்புவது வரை நான் அந்தச் சங்கிலியையே பார்த்துக் கொண்டிருந்தேன். கீழிறங்கிச் சென்று ஓடையில் அவற்றை கழுவினேன். தங்கம் என்பது உறுதியாகியது. ப்ரெஸ்லெட் மூன்று பவுன் இருக்கும். சங்கிலியும் இரண்டுபவுன் இருக்கும்.

திரும்பி வரும்போது கோரன் “நான் குடில் கெட்டுவேன்” என்றான்.

நான் அவன் காலையில் விளையாட்டுக்குச் சொல்வதாகவே நினைத்திருந்தேன். ஆனால் அவன் தீவிரமாக இருந்தான். நான் ஒன்றும் சொல்லவில்லை.

பங்களாவுக்குச் சென்றதுமே கோரன் ஒர் அரிவாளுடன் வெளியே கிளம்பிவிட்டான். மூங்கில் வெட்டிக்கொண்டு அவன் போடுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். டீயை நானே போட்டுக் கொண்டேன். அந்த செயினை மேஜை டிராயரில் போட்டுவைத்தேன்.

அவன் காட்டுக்குள் இருந்து மூங்கில்கள் கொண்டுவந்து போடுவதை வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த பெருமழையை தாங்கும்படி அவனால் மாடம் கட்டிவிடமுடியுமா? ஆச்சரியமாக இருந்தது. ஆனால் அவர்கள் பிள்ளை குட்டிகளுடன் மாடங்களில்தான் வாழ்கிறார்கள், தலைமுறைகளாக.

எனக்கு தூக்கம் வந்து அழுத்தியது. உள்ளே சென்று படுத்துக்கொண்டேன். ஆனால் படுத்ததும் தூக்கம் போய்விட்டது. நினைவுகளும் எண்ணங்களும் கலந்து கொப்பளித்தன. கடந்த சிலநாட்களாகவே என் தூக்கம் குறைந்துகொண்டே வந்தது. நேற்றிரவெல்லாம் நான் அரைமணி நேரம் கூட தூங்கியிருக்க மாட்டேன். அமர்ந்தபடியே தூங்க முடியும். படுத்தால் உள்ளம் விழித்தெழுந்து ஓட ஆரம்பிக்கும்.

உள்ளம் என்பதை அப்படி ஒரு தீவிரமான பெருக்காக நான் உணர்ந்ததே இல்லை. அதை ஒரு பருவடிவப் பொருளாக, எடையும் அழுத்தமும் வெப்பமும் வேகமுமாக அறியமுடிந்தது. தொட்டுவிடலாம் என்பது போல. அதன்மேல் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அது முட்டிமோதி பெருகிச்சுழித்து சரிவிறங்கும் காட்டாறுபோலச் சென்றுகொண்டே இருந்தது.

உள்ளத்தின் ஓட்டத்தை நான் முன்பும் கவனித்ததுண்டுதான். ஆனால் ஒரேசமயம் ஒன்றுடனொன்று சம்பந்தப்படாத பல எண்ணச்சரடுகள் என்னுள் ஓடுவதை கவனித்ததில்லை. சரடுகள் என்கிறேன், அர்த்தமுள்ள எண்ணங்களின் கண்ணிகள் அல்ல அவை. ஒன்றையொன்று உந்திவிடும் ஒன்றோடொன்று தொடர்பே அற்ற எண்ணங்கள்.

ஆனால் ஒருகணம் நின்று அவற்றை கவனித்தால் அத்தருணத்தில் நின்று அவை வெற்றுச் சொற்களென தங்களைக் காட்டின. அப்போது உருவாகும் துணுக்குறல் என் உடலை உலுக்கும். என்னவென்றே தெரியாத சொற்கள். வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து நம் வீட்டைத்திறந்து உள்ளே நுழைந்தால் என்னவென்றே தெரியாத பொருட்கள்  நிறைந்திருப்பதைக் கண்டால் எப்படி இருக்கும்?

சொற்கள் எங்காவது பொருந்தாவிட்டால் எத்தனை அபத்தமானவை. ஒன்றுடனொன்று இணைந்து சொற்றொடர் ஆகாத சொற்கள் வெறும் கூழாங்கற்கள். இதோ இக்கணம் என் மனம். நாய், கமுகுப்பாளை, திங்கள்கிழமை, யானை, வீடு, அம்மா, அக்பர், அலக்ஸாண்டர் கிரகாம்பெல், ராமாயணம் என ஒரு சொற்கூட்டம் அங்கே உறைகிறது. ஒரு கணம்   அஞ்சினால் உடனே அச்சொற்களும் பயந்த பறவைகளை போல கலைந்து சுழன்று கொப்பளிக்க ஆரம்பித்துவிடும்.

எத்தனை வேகம், எத்தனை வெறி. அரிதாக கோபவெறி கொள்ளும்போது மட்டும்தான் என் உள்ளம் இத்தனை வேகத்துடன் இருந்து நான் பார்த்திருக்கிறேன். அதுவும் கொஞ்சநேரம். அந்த வேகம் தாளாமல் உடல் மட்டுமல்ல உள்ளமும் களைத்துவிடும். கடுமையான அவமானங்களின்போது இப்படி உள்ளம் வெறிகொண்டிருக்கிறது. விதவிதமாக கற்பனை செய்து வெவ்வேறு வகையாக நடித்து கத்தி கூச்சலிட்டு ஆடி அடங்கியிருக்கிறது. ஆனால் இப்போது விழித்திருக்கும்போது முழுக்க அது கொப்பளித்துக் கொண்டே இருக்கிறது. தூங்கும்போதுகூட தூக்கத்தின் அடியில் கொந்தளித்து பெருக்கெடுக்கிறது. எவரையோ வெறியாவேசத்துடன் வசைபாடுவதுபோல, எவரிடமோ கண்ணீருடன் மன்றாடுவதுபோல, எதையோ கடைசியாகச் சொல்லிக் கொண்டிருப்பதுபோல.

என் முகம் வஞ்சத்துடன் எதையோ எண்ணிக் கொள்பவரின், கடுஞ்சினத்துடன் எவரையோ தாக்கப் போகிறவரின் பாவனை கொண்டிருக்கும் போல. தூங்கும்போதும் அப்படியே என் முகம் உணர்ச்சியலைகளுடன் இருந்து கொண்டிருக்கும். இது தூக்கமே இல்லை. இது மேல்மனம் கொஞ்சம் மயங்குவதுதான். விழித்திருக்கையில் எல்லாம் நான் என்னை மீறி பேசிக்கொண்டிருக்கிறேன். அருகே எவரோ நின்றிருப்பது போல. அப்பேச்சொலியை நானே கேட்கிறேன். அது என்னையே துணுக்குறச் செய்கிறது. அதுதான் கோரனை அச்சுறுத்திவிட்டிருக்கிறது.

என்னருகே அவள் வந்து நின்றாள். நான் “நீயா?” என்றேன். “விர்ஜீனியா?”

”இல்லை, நான் ஃப்ரான்ஸெஸ் பர்னி.”

“இல்லை, நீ விர்ஜீனியா என்றாய்.”

“அப்படி அப்போது இருந்தேன். இப்போது நான் ஃபேன்னி பர்னி” என்று அவள் தன் சட்டையை கழற்றினாள். இரு முலைகளும் சீவி எடுக்கப்பட்டிருந்தன. பளபளப்பான தழும்பு உருகிய மெழுகுத்தடம் போலத் தெரிந்தது. “நான் விடுதலைபெற்றவள்…”

“ஓ” என்றேன். அந்த தழும்புகள் தீயால் பொசுக்கப்பட்டதன் வடுக்கள் என்று தோன்றின.

“உள்ளிருந்த வெம்மையால் உருகிய கலம்” என்று அவள் சொன்னாள்.

நான் “ஆம்” என்றேன்.

“எனக்கும் இப்படித்தான், சொற்கள் உடைந்து பெருகி ஓடிக்கொண்டிருக்கும்.”

“நான் என்ன செய்வது?” என்றேன் “என் உள்ளம் கொந்தளிக்கிறது. நானும் உருகி விடுவேன் என்று நினைக்கிறேன்.”

”அவையே அடங்கட்டும்… நீ தூங்கு.”

நான் “ஆம், தூங்கியாகவேண்டும்” என்றேன். “நேற்று தூங்கவில்லை. நேற்று விர்ஜீனியாவை கண்டேன். ரோமாபுரியின் கன்னிப்பெண்.”

“அவள் ரோமிலிருந்து வரவில்லை.”

“பிறகு?”

“லண்டனில் இருந்துதான்…”

“அப்படியா?”

“ஆமாம், அவளும் அந்த ஈவ்லினாவும் பேசிக்கொண்டிருப்பதை நான் ஒருமுறை பார்த்தேன்.”

“ஓ” என்றேன்.

”தூங்கு…நான் அருகே இருக்கிறேன்.”

“இந்த வார்த்தைப் பெருக்கை கொஞ்சநேரம் நிறுத்த முடியுமா?”

“நானா?”

“ஆம், நீதான் அவற்றை உருவாக்கினாய்.”

”நான் பார்க்கிறேன்” அவள் என் நெற்றிப்பொட்டில் தொட்டாள் சட்டென்று வெப்பம் குளிர்வதுபோல அத்தனை எண்ணங்களும் விரைத்து அசைவிழந்து நின்றன. ஆயிரம் கிலோ எடையை என்மேலிருந்து எடுத்ததுபோல இருந்தது.

நான் விழத்தொடங்கினேன். மிக ஆழமான ஒரு குகைக்குள். இருண்ட, அடியில்லாத குகை. அதில் தலைகீழாகச் சென்று கொண்டிருந்தேன். நன்றாக குளிர்ந்தது. ஓசைகள் மழுங்கிச்சுழல சென்றுகொண்டே இருந்தேன். ஆனால் படுத்திருப்பதையும், என் கைகால்கள் சில்லிட்டிருப்பதையும் உணர்ந்தேன்.

நான் மூன்று மணிநேரம் தூங்கியிருப்பேன். விழித்துக்கொண்டபோது மிகமிக நன்றாக தூங்கியிருப்பது தெரிந்தது. பின்னரும்கூட அத்தகைய ஆழ்ந்த தூக்கத்தை நான் அடைந்ததில்லை. உள்ளம் அதன் உச்சங்களை அடைந்தபின் சட்டென்று திரும்பி ஓய்வெடுக்கையிலேயே அத்தகைய தூக்கம் நிகழ்கிறது. கடும் நெருக்கடிகளுக்குப் பின்புள்ள முறுக்கவிழ்தலில். வலியும் நோயும் சற்று தணியும்போது. சாவு வீட்டில் அப்படி ஒரு தூக்கம் வருவதை பார்த்திருக்கிறேன். சித்தப்பிரமையின் இடைவெளிகளில் அந்த தூக்கம் வரும். ஏனென்றால் சித்தப்பிரமை என்பது நம் மூளை அதன் வேகத்தின் உச்சத்தை அடைந்து உரசிச் சூடாகி உருகித் திரவமாக ஆகிவிடும் நிலை.

என் உள்ளம் தெளிந்திருந்தது. கைகால் புதிதாக பிறந்து வந்தவை போலிருந்தன. எழுந்து வெளியே சென்றேன். கோரன் குடிலைக் கட்டி முடித்து விட்டிருந்தான். கமுகுப்பாளைகளை கண்டடைந்து அவற்றைச் சேர்த்து தைத்து கூரைபோட்டிருந்தான். கவிழ்க்கப்பட்ட கூடைபோன்ற கூரை. மூங்கில்களை வளைத்து, வில்போல தெறிக்கச்செய்து, கூரைச்சட்டகத்தை அமைத்திருந்தான். ஆகவே கூரை நன்றாக இழுபட்டு விரைப்பாக நின்றிருந்தது. மூங்கிலால் ஆன தூண்களின் மேல் கூரை. அதன் தரை பிளக்கப்பட்ட மூங்கில் பரப்பி மேலே கமுகுப்பாளை பரப்பியது. அதைப்பார்த்ததுமே தெரிந்தது, அது எந்த மழையையும் தாங்கும்.

அவன் அதில் நிம்மதியாக இருப்பான் என்று தோன்றியது. அந்த குடிலுக்குள் அவன் படுக்குமளவுக்கே இடமிருந்தது. அது ஒரு கூடுதான். அவன் அதில் அமர்ந்தே தூங்குவான். ஆகவே அதற்குள் அவனுடைய பொருட்களை வைக்கக்கூட இடமிருக்கும். அவன் இத்தனை பெரிய பங்களாவில்கூட ஓர் ஓரத்தில்தான் தூங்கினான், அவன் அவ்வளவு இடத்தை மட்டுமே எடுத்துக்கொண்டான். அவனுக்கு அவ்வளவு போதும். மனிதனுக்கு நிறைய இடம் வேண்டியதேயில்லை.

அவன் என்னை பார்த்து பற்கள் தெரிய புன்னகைத்து “கட்டியாய், மாடம் கட்டியாய்” என்றான்.

“நல்லா இருக்கு” என்றேன்.

“நான் இப்ப வந்நு கஞ்ஞி வைக்கும்” என்றான்.

பொழுதடைந்து கொண்டிருந்தது. காட்டில் வெம்மை இல்லை. மழை வருமா என்று சொல்லத் தெரியவில்லை. காற்றும் இல்லை.

கோரன் வந்து சமைக்க ஆரம்பித்தான். நான் காட்டைப் பார்த்தபடி படியில் அமர்ந்திருந்தேன். காட்டில் என்னென்னவோ நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு கீரி முற்றத்தை கடந்து குறுக்காக ஓடியது. தொடர்ந்து இன்னொன்று ஓடியது. ஒரு மான் முற்றத்தின் விளிம்புவரை வந்துவிட்டுச் சென்றது. காட்டுப்புதர்களுக்குள் மேலும் மான்கள் இருப்பது தெரிந்தது. அப்பால் ஒரு யானையின் பிளிறலோசை கேட்டது.

இன்னொரு மான்கூட்டம் மறு எல்லையில் வந்து நின்றது. தலைமை மான் முற்றத்தை அணுகி காதுகளை கோட்டி என்னைப் பார்த்து ‘நான் இப்ப ஓடிருவேன்’ என்னும் பாவனையில் நின்றது. நான் கைநொடிக்க எண்ணியதுகூட அதற்குத்தெரிந்தது. கைநொடித்ததும் பாய்ந்தோடி மறைந்தது.

இங்கே மான்கள் கூடுதலாகக் கண்ணுக்குப் படுகின்றன என நினைத்தேன். பொதுவாக அவை மனிதர்கள் வாழுமிடங்களை அணுகி வருகின்றன, ஏனென்றால் அங்கே புலியும் சிறுத்தையும் ஓநாயும் வருவதில்லை. இந்த பங்களா இருநூறாண்டுகளாக காட்டில் இருக்கிறது. ஆனால் அது இன்னும்கூட காட்டின் ஒரு பகுதியாக ஆகவில்லை.

இருட்டிவிட்டது. கோரன் சமைத்துவிட்டு வந்து அழைத்தான். நான் சூடான கஞ்சியையும் காணச்சுண்டலையும் சாப்பிட்டேன். கோரன் சாப்பாட்டை கையில் எடுத்துக்கொண்டு மரத்தின்மேல் தொற்றி ஏறி மேலே சென்றுவிட்டான். அங்கே அவன் இருப்பதே தெரியவில்லை.

மழை வருவதுபோல தெரியவில்லை. அந்தக் காட்டில் மழையின் ஓசை ஒரு திரை, அது மற்ற ஓசைகளை மறைத்துவிடுகிறது. அந்த ஓசையை போர்வைபோல போத்திக்கொண்டு தூங்கமுடிகிறது. மழையின் ஓசையில்லாதபோது காட்டின் ஓசைகள் எழுந்துகொண்டே இருந்தன. அவை புலன்களை திடுக்கிட வைததன. ஆடுகளின் இருமல் ஓசை. மான்களின் விம்மல்போன்ற ஓசை. யானைக்குரல். மிக அப்பால் எங்கோ ஓர் இனந்தெரியாத உறுமல்.

நான் படுக்கையில் படுத்துக்கொண்டேன். சற்றுநேரம் நெளிந்துகொண்டிருந்தேன். தூக்கம் வருவதுபோல தெரியவில்லை எழுந்து சென்று நாற்காலியில் அமர்ந்தேன். மீண்டும் வந்து படுத்துக்கொண்டேன். கண்களை மூடினால் மனம் அத்தனை அமைதியாக இருந்தது. ஒரு சொல் எஞ்சியிருக்கவில்லை. துடைத்த கண்ணாடிப் பரப்பு. அதில் வழுக்கி வழுக்கிச் செல்லும் மண்புழு போல ஓர் இருப்புணர்வு.

அறைக்குள் அவளை உணர்ந்தேன். அவளுடைய நிழல். அவளுடைய அசைவுகள். பின்னர் அவளை தெளிவாகவே பார்த்தேன். சிவப்புக்கூந்தல் கொண்ட, இளநீலநிற கவுன் அணிந்த வெள்ளைக்காரப் பெண்.

அவள் மெல்லச் சென்று மேஜையின் டிராயரை திறந்தாள். அந்த இரு தங்கச் சங்கிலிகளையும் எடுத்துப் பார்த்தாள். ப்ரெஸ்லெட்டை எடுத்து இடக்கையில் அணிந்து கையை தூக்கிப் பார்த்தாள். கையை விதவிதமாக அசைத்தாள்.

நான் எழுந்தேன். என் அசைவைக் கண்டு திடுக்கிட்டு நகையை கழற்றி மேஜைமேல் வீசிவிட்டு எழுந்தாள். ஆனால் நான் அதன் பிறகுதான் விழித்துக்கொண்டேன். எழுந்து பார்த்தேன். அறைக்குள் எவருமில்லை. அரிக்கேன் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. நிழல்களும் ஆடின.

நான் மேஜைக்குச் சென்று பார்த்தேன். அந்த ப்ரெஸ்லெட் மேஜைமேல் வீசப்பட்டிருந்தது. அரைவாசி திறந்த டிராயருக்குள் செயின் இருந்தது. நாற்காலியில் அமர்ந்தேன். கைகளை கட்டிக்கொண்டு புத்தகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அத்தனை மனத்தெளிவுடன் நான் அதைப் பார்த்ததில்லை.

அதை எடுத்துப் பிரித்தேன். கைபோனபோக்கில் ஒரு பக்கத்தை எடுத்தேன். I have since been extremely angry with myself for neglecting so excellent an opportunity of apologizing for my behaviour at the ridotto: but, to own the truth, that affair never once occurred to me during the short tete-e-tete which we had together. ஈவ்லினா எழுதினாள். அவளுடைய அந்த பழமையான மொழி. மொழி பழையதாகும்போது உள்ளங்கள் பழையதாகிவிடுகின்றனவா? பிரச்சினைகளும் உணர்ச்சிகளும் கூட பழையனவாகத் தெரிகின்றனவா?

இந்த நாளில் இத்தனை சலிப்பாக, இத்தனை சோர்வாக ஏன் உணர்கிறேன்? பொதுவாகப் பார்த்தால் எனக்கு என்ன சிக்கல்? இந்த அரண்மனை, வேலையாட்கள், செல்வங்கள், இதெல்லாம்தானே என்னைப்போன்ற ஒரு பெண் ஆசைப்படவேண்டியது? ஆமாம், நான் இதைத்தான் இளமை முதல் கனவு கண்டு வந்தேன். முதிரா இளமையிலேயே இந்தக் கனவுக்குள் வந்துவிட்டேன். ஆனால் கனவை அடைந்தபின் ஒருநாள்கூட மகிழ்ச்சியாக இல்லை.

மகிழ்ச்சியாக இருந்ததெல்லாம் மேடம் பியூமாண்டின் வீட்டில் தங்கி சீமாட்டியாவதற்கான பயிற்சியை எடுத்துக்கொண்டிருந்த நாட்களில் மட்டும்தான். எத்தனை எதிர்பார்ப்பு, எத்தனை பதற்றம். ஒவ்வொருநாளும் இன்னும் எத்தனை நாள் என்று கண்விழிக்கும் ஆவல். எல்லா பிரச்சினைகளும் சரியாகிவிட்டன. அப்பா மகிழ்ச்சியானவராக ஆகிவிட்டார். அம்மாவின் முகம் தெளிந்துவிட்டது. தங்கைகளுக்கு உடைகளும் நகைகளும் கிடைத்துவிட்டன. அவர்களும் நல்ல ஆண்களை கண்டடைய முடியும். எல்லாமே ஒரு மாயக்கோலால் தீண்டப்பட்டு இனிமையாக ஆகிவிட்டன.

பயணம்கூட மகிழ்ச்சியானதுதான். என் முதல் கடற்பயணம். முதல் பதினைந்து நாள் உடலில் எதுவுமே தங்கவில்லை. குமட்டி உமிழ்ந்துகொண்டே இருந்தேன். ஆகவே அந்தக் காமமும் பெரிய வதையாக இருந்தது. முன்பே அறிந்திருந்ததுதான், மெக்கின்ஸி ஒரு  மூர்க்கமான விலங்கு. அவருடையது விலங்குக் காமம். அவர் பழகியதே அப்படித்தான். அவருடைய மகிழ்ச்சிகளும் அப்படியானவைதான்.

ஆனால் லண்டனில் அந்த எதிர்பார்ப்பிலும் பரபரப்பிலும் அது இனியதாக இருந்தது. அதில் திளைக்க முடிந்தது. என்னையும் ஒரு மிருகமாக ஆக்கிக்கொண்டேன். ஆனால் அதை நான் காட்டக்கூடாது. என்னைப்போன்ற சீமாட்டிக்கு உடலுறவில் உச்சமே வரக்கூடாது, வந்தால் ஆண் அதை அறியக்கூடாது. ஆங்கிலப்பெண்கள் அதை இன்னொரு பெண்ணிடமே வெளிப்படையாக அடையவேண்டும்.

அது பிழை அல்ல, வழக்கமானதுதான் என்றாள் மேடம் ஃப்யூமாண்ட். மெக்கின்சி சென்றபிறகுதான் நான் என் உடலை அடையாளம் கண்டேன், மேடம் ஃப்யூமாண்ட் அதில் தேர்ந்தவள். கப்பலின் ஆட்டத்திலும் தலைசுற்றலிலும் மெக்கின்ஸியின் மூர்க்கம் இன்னும் கொடிதாக இருந்தது. ஆனாலும் நான் மெல்ல மகிழ்ச்சியானவளாக ஆனேன்.

டான்ஜியர் துறைமுகத்தை கண்டபோது குதித்து கூச்சலிட்டு கைக்குட்டையை காற்றில் வீசி மகிழ்ந்தேன். மசகு எண்ணை நாற்றமடிக்கும் சிறிய ஊர். இடுங்கலான தெருக்கள். தெருக்கள் மேலேயே பால்கனிகள் துருத்தி நிற்கும் மரத்தாலான வீடுகள். தெருவெங்கும் குதிரைச்சாணி. கடல்நீரின் உப்பு உடலில் படிந்தபடியே இருக்கும். முகத்தில் சாயம்பூசி ரத்தச்சிவப்பு ஆடையணிந்த உள்ளூர் விபச்சாரிகள். நோயுற்ற குதிரைகளுடன் கடகடத்துச் செல்லும் வண்டிகள். சவுக்கொலிகள், கூச்சல்கள்.

எங்கேயும் எதையேனும் விற்றுக்கொண்டே இருந்தனர். ”மதாம் உயர்ரகமான வெள்ளிக் காலணிகள்… வெள்ளிப்பூச்சல்ல, தூயவெள்ளியிலேயே செய்யப்பட்டவை”. கூவியபடியே பின்னால் வந்தார்கள். “மேடம், இந்த கற்கள் வைரங்களுக்குச் சமானமானவை. பாலைவனத்தில் மட்டுமே கிடைப்பவை. பாலைவனத்தில் எப்போதாவது விழும் மழைத்துளிகள் இப்படி வைரங்களாக மாறிவிடுகின்றன!”

எதையும் வாங்காதே” என்று மெக்கின்ஸி சொன்னார். ”எல்லாமே போலியானவை. இங்கே போலிப்பொருட்களைச் செய்து விற்பதற்கென்றே ஒரு பெரிய பின்னணி உலகம் இயங்குகிறது.”

ஆனாலும் மலிவாக இருக்கிறதே என்று நான் இரண்டு சந்தனக் காலணிகள் வாங்கிக்கொண்டேன். மரத்தாலான ஒரு இடைச்சரடும் வெள்ளியாலான நான்கு வளையல்களும் வாங்கினேன். பத்துநாட்கள் அந்த வினோதமான நகரத்தில் இருந்தேன். இந்தியா வந்தபிறகுதான் சந்தனத்திற்கும் அந்த காலணிகளுக்கும் சம்பந்தமில்லை என்று தெரிந்துகொண்டேன்.

அங்கே லண்டனை விட மகிழ்ச்சியாக இருந்தேன். லண்டனில் நான் சீமாட்டியாக நடித்துக் கொண்டிருந்தேன். மிகக்கவனமாக, மிகமிக கூர்மையாக அவதானித்தபடி. அங்கே நான் இயல்பாகவே சீமாட்டியாக இருந்தேன். செல்வம் கொண்டவளாக, பெருந்தன்மையும் கருணையும் கொண்டவளாக, இனிய மென்மையான நாசூக்கான பெண்ணாக. தாராளமாகவே பிச்சை அளித்தேன். எல்லாவற்றையும் கண்டு மிகையாக வியந்தேன். நினைத்தால் அந்நகரத்தையே விலைக்கு வாங்கிவிடுபவளாக உணர்ந்தேன்.

மதராஸும் எனக்குப் பிடித்திருந்தது. அங்கும் நான் வெற்றிகளையே கண்டேன். கவர்னருடன் நடனமாடினேன். கர்னல்களின் மனைவியரின் பொறாமைக் கண்களால் சூழப்பட்டிருந்தேன். இங்கே டிரிவாண்டிரத்திலும் நான் வெற்றியைத் தவிர எதையும் காணவில்லை.

இந்த இடம் ராணுவ முகாம். முன்பு ராணுவ முகாம் அஞ்செங்கோவில் இருந்தது. அங்கே இடமில்லை. ஆகவே இந்த விரிந்தகன்ற பகுதியை மகாராஜா அளித்தார். இதன் பெயர் பாங்கோட். இது சுற்றிலும் காடு செறிந்த நிலம். நூற்றுக்கும் மேற்பட்ட ஊர்கள் அணுகும் தொலைவில் இருந்தன. ராணுவத்திற்குத் தேவையான எல்லாமே அந்த ஊர்களில் இருந்துதான் வந்தன.

அந்தியில் இங்கே ராணுவ முகாமுக்கு வெளியே பெரிய சந்தைகள் கூடுகின்றன. காய்கறிகளில் இருந்து குதிரைக்குத் தேவையான பசும்புல் வரை. நான் சந்தையை பலமுறை சென்று பார்த்திருக்கிறேன். மூங்கில்கூடைகள் பின்னுபவர்கள் பின்னியபடியே விற்பார்கள். பெண்கள் மார்புகளை மறைப்பதில்லை. கரிய மார்புகள், கொப்பரையின் பளபளப்பு கொண்டவை. வெண்கூழாங்கல் போன்ற பெரிய கண்கள் கொண்ட குழந்தைகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட கிழங்குகள் போல மண்படிந்தவை.

கீழ்க்குடிகள் அனைவருமே முடியை பெரிய கொண்டையாகக் கட்டியவர்கள். உயர்குடிகள் சந்தைகளுக்கு வருவதில்லை. அவர்கள் சீன ஜாடியின் மூடியின் மேலுள்ள கைப்பிடி போல தலையில் சற்று முடியை முடிச்சுபோட்டு விட்டு எஞ்சியதை மழித்திருப்பார்கள். ஆனால் அவர்களிலும் எந்தப்பெண்ணும் மார்புகளை மறைப்பதில்லை.

முதல்முறை அரண்மனைக்கு ஒரு விருந்துக்காகச் சென்றபோது அரசியை பார்த்தேன். கிழவி. அவள் பட்டுச்சால்வையை போர்த்தியிருந்தார். ஆனால் அத்தனை சேடிப்பெண்களும் திறந்த மார்புகளுடன் இருந்தனர். ஆனால் பட்டு இடையாடை அணிந்திருந்தனர். பொன்னாலான நகைகள் அணிந்திருந்தனர்.அந்த இடையாடை முழங்கால்வரைத்தான். அதன்மேல் பொன்னாலான தடித்த பெரிய இடைநகை. அதை என்னவென்று சொல்வது? பழங்கால கிர்டில் போல.

அவர்கள் நயத்தக்க நாகரீகம் கொண்டவர்கள். மென்மையாக முறைமைச்சொல் பேசினார்கள். அரசி ஆங்கிலம் நன்றாகவே பேசினாள். அவளால் பிரெஞ்சும் பேசமுடியும். உள்ளூர் மொழிகள் நான்கு அவளுக்குத் தெரியும். அவள் அரசரின் மனைவி என நினைத்தேன். அவள் அரசரின் தமக்கை. இங்குள்ள முறைப்படி அரசியே உண்மையான ஆட்சியாளர். அரசர் அவ்வரசியின் பிரதிநிதி மட்டும்தான்.அரசரின் மனைவிகள் அரசி ஆவதில்லை. அரசியின் தங்கையோ அவள் மகளோதான் அடுத்த அரசி.

இப்போதிருக்கும் அரசரை தர்மராஜா என்கிறார்கள். அறம் வழுவாத அரசர் என்று பொருள். வயதானவர். எதிலும் தீவிரம் காட்டுவதில்லை. போரில் ஈடுபாடே இல்லை. வணிகம்பெருக வேண்டுமென விரும்புகிறார். ஆகவே சந்தைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். இந்த மலைநாட்டுக்குத் தேவை சந்தைகளும் அவற்றை இணைக்கும் ஏராளமான சாலைகளும்தான். ஆனால் இங்கே சாலைகளை அமைப்பது கடினம். அதைவிட நீர்வழிகளே செலவுகுறைவான பயணமுறைகள்.

இங்கே ஒவ்வொன்றும் சரியாக இருந்திருக்கவேண்டும். நான் நிறைவை அடைந்திருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு நிகழவில்லை. வந்த சில நாட்களிலேயே ஏதோ அமைதியின்மையை உணரத் தொடங்கினேன். மெக்கின்ஸி இங்கே கருப்புப் பெண்களைத் தேடிச்செல்வதையா? அதை நான் பெரிதாக நினைக்கவில்லை. ஆண்கள் லண்டனிலேயே அப்படித்தான். அது படைவீரனின் இயல்பு என்றே ஏற்கப்பட்டுவிட்டது. ’ஒவ்வொரு சலவைக்காரிக்குப் பின்னாலும் இரண்டு கழுதைகளும் மூன்று பிரபுக்களும் இருப்பார்கள்’ என்று பெண்கள் நையாண்டியாகச் சொல்வதுண்டு.

சலிப்பா? ஆனால் நான் அங்கே என் வீட்டிலும் சலிப்பையே அன்றாடமாக கொண்டிருந்தேன். நடுத்தரவர்க்கப் பெண்களின் வாழ்க்கையே சலிப்புதான். உயர்குடிப் பெண்களுக்கு அவ்வாழ்க்கையின் கீழ்மைகளும் மேன்மைகளும் கொண்டாட்டங்களும் உண்டு. அடித்தட்டு மக்களுக்கு கடும் உழைப்பே எஞ்சிய அனைத்தையும் அரிதாக்கிவிடுகிறது. உயர்குடியாக ஆகிவிடவேண்டும் என்று கனவுகண்டுகொண்டிருக்கும் நடுத்தரவர்க்கத்துக்குத்தான் கனவைத்தவிர மகிழ்ச்சி என்பதே இல்லை.

இங்கே நான் அடைந்தது என்னவென்றே எனக்குத் தெரியவில்லை. ஒவ்வாத ஒன்றை தின்றுவிட்டு செரிக்கமுடியாமல் அவதிப்படுவதுபோல. உள்ளமும் செரிமானக்கோளாறை அடைவதுண்டு. ஆத்மாவும் அடைவதுண்டு. நான் அதை எனக்குநானே விளக்கிக் கொள்ளவேண்டும். எனக்கு நானே வகுத்து அதன்பின் சுருக்கி சுருட்டி எடுத்து அப்பாலிடவேண்டும்.

அதற்காகவே இந்நாவலை படிக்கிறேன். ஃபேன்னியின் இந்நாவல். அதில் ஈவ்லினாவின் உலகம். அவர்கள் இருவரையுமே ஆட்டிப்படைக்கும் விர்ஜீனியாவின் உலகம். நான் இங்கிருந்துகொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் அறைக்குள் உயிர்கொண்டு வந்து நடமாடுபவள் யார்? இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த விர்ஜீனியாவா? வாழ்ந்து கொண்டிருக்கும் ஃப்ரான்ஸெஸா? அல்லது புனைவா உண்மையா என்றறியாத ஈவ்லினாவா?

என் சித்தத்தின் எல்லைகள் மயங்கிக் கொண்டிருக்கின்றன. தூக்கம் அறவே இல்லையென்றாகிவிட்டது. களைத்து வாய் கசந்து உதடுகள் செயலிழக்க இமைகள் சரிய அப்படியே சென்று படுப்பேன். ஒருமணிநேரம். தூக்கம் போய்விடும். அத்தனை குதிரைகளும் கடிவாளத்தை உதறிவிடும். அதன்பின் இந்த ஊரின் பருவமழைபோல கூரையை அறைந்து பெய்யும் எண்ணங்கள்தான்.

எண்ணங்களை என்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாது என்று இப்போதுதான் அறிந்தேன். பீதியூட்டுவது அந்த அறிதல். கட்டுப்படுத்தப்படாத எண்ணங்கள் நம்மை ஆக்ரமித்துவிடுகின்றன. உண்மையில் பேய் என்பது அதுதான். அவை நம்மை ஆட்டிப் படைக்கின்றன. நம்மை தங்கள் கையில் எடுத்து விளையாடுகின்றன. கட்டுப்படுத்தப்படாத எண்ணங்கள் காற்றுபோல வெப்பம் போல பருவடிவமான விசைகள். அவை நம்மை கொன்றுவிடும். அழுத்தி நசுக்கிவிடும்.

ஆனால் எப்படிக் கட்டுப்படுத்துவது? கட்டுப்படுத்தும் முயற்சிகள் எல்லாம் அந்த எண்ணக் கொந்தளிப்பில் ஒரு பகுதியாகச் சென்றிணைந்து கொண்டே இருந்தால் கட்டுப்படுத்த முயல்வதே நம்மை மேலும் பித்தாக்கிவிடுகிறது. நான் தூங்கினால் போதும். ஒயின் வேலை செய்யவில்லை. கடினமான மதுவை எடுத்து அருந்தினேன். குமட்டிக் குமட்டி வாந்தியெடுத்தேன். ஆனால் அது என்னை எந்த வகையிலும் மயங்க வைக்கவில்லை. உடலைத்தான் தளரச்செய்தது.

தூக்கிவீசப்பட்டவள் போல இந்தப் படுக்கையில் கிடக்கிறேன். என் உள்ளம் நுரைநுரையாக எழுந்து கொண்டிருக்கிறது. வெற்றுச் சொற்கள். ஒன்றுடன் ஒன்று இணையாத சொற்களின் குப்பை. ஒருகணம் நான் நோக்கினால் சொற்கள் அப்படியே நின்றுவிடுகின்றன. ஓர் சொற்குவை உடைந்து சிதறிக்கிடப்பதுபோல. நான் பித்தாகிக் கொண்டிருக்கிறேன். அதுதான், அது மட்டும்தான் உண்மை. நான் பைத்தியமாகிவிட்டேன்.

ஆனால் இன்னும் இல்லை. ஏனென்றால் அதை உணரும் ஒரு சிறு மூலை மிஞ்சியிருக்கிறது. ஒரு சிறு கொடி. ஒரு சிறு தன்னுணர்வு. அதைப் பிடித்துக் கொண்டு இந்தப் பெருவெள்ளம் என்னை அடித்துச் செல்லாமல் இருக்க முயல்கிறேன். அது அடிபெயர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நான் என்னருகே அவளை உணர்ந்தேன். அவள் என் அருகே குனிந்து “என்ன செய்கிறது?” என்றாள்.

நான் பைத்தியமாகிக் கொண்டிருக்கிறேன்.”

இல்லை, நீ அதை நடிக்கிறாய். ஏனென்றால் நீ வளைய முயல்கிறாய். ஒடிந்துவிடாமலிருக்க அதைத்தான் நீ செய்தாகவேண்டும்.”

நான் என்ன செய்யவேண்டும்?” என்றேன் “சொல் நான் என்ன செய்யவேண்டும்?”

ஒன்றுசெய்யலாம் நீ அந்த பிரெஸ்லெட்டை கழற்றி வீசிவிடு… அது இங்கே இருக்கக் கூடாது. இந்த வீட்டிலேயே இருக்கக் கூடாது. எவருக்காவது கொடுத்தால்கூட திரும்பி வந்துவிடும். அதை கழிப்பறையில் வீசிவிடு. எடுப்புடன் அதுவும் போகும். எங்கோ மலக்குழியில் விழுந்து மண்ணில் புதையும்.”

அது கர்னல் எனக்கு அளித்த பரிசு… அவர் எனக்கு அளித்த முதல் பரிசு.”

ஆமாம். அதனால்தான் சொல்கிறேன்.”

ஆனால் அவர் என் கையில் அது எப்போதுமிருக்கவேண்டும் என விரும்புகிறார். என் கையை பற்றி அதை ஒவ்வொரு முறையும் திருப்பிப் பார்ப்பார்.”

ஆனால் உனக்கு வேறுவழி இல்லை. நீ செய்தாகவேண்டியது அதை மட்டும்தான்.”

என்னால் அதைச் செய்ய முடியாது. நான் அதை ஆயிரம் முறையாவது மானசீகமாகக் கழற்றி வீசியிருப்பேன்.”

அப்படியென்றால் பித்தாகிவிடு. அது விடுதலை.”

இல்லை. நான் அதை நினைக்கவே அஞ்சுகிறேன்.”

அப்படியென்றால் செத்துவிடு.”

போ, போ.”

செத்துவிடு! செத்துவிடு! செத்துவிடு!”

நான் கூச்சலிட்டபடி எழுந்துவிட்டேன். “போ, போ” என்று அலறிக் கொண்டிருப்பதை நானே கேட்டு திகைத்து நின்றேன்.

வேலைக்காரி மார்த்தா வந்து வாசலில் நின்றாள். அவள் முகத்தில் திகைப்பு தெரிந்தது. அவள் ஆங்கில இந்தியப் பெண். போர்ச்சுக்கல் கலவை கொண்டவள். அது அவள் வண்ணத்திலும் வாயைச் சுற்றிய சுருக்கங்களிலும் மட்டுமே தெரியும். இந்தியர்களுக்குரிய உணர்ச்சிகளைக் காட்டாத கண்கள் கொண்டவள்.

என்ன?” என்றேன்.

கர்னல் வந்துகொண்டிருப்பதாகச் செய்தி வந்தது.”

மாலை ஆகிவிட்டது. அவர் வழக்கமாக வரும் நேரம்தான். “காப்டன் எங்கே?”

மதியமே கிளம்பிச் சென்றுவிட்டார். நெடுமங்காடுக்கு போய்விட்டு ஒருவேளை நாளைதான் வருவார்.”

சரி, நீ போய் நான் குளிப்பதற்கு ஏற்பாடு செய்.”

அவள் போனபின் நான் களைப்புடன் நாற்காலியில் அமர்ந்தேன். அந்த நாவலை எடுத்து கைபோனபோக்கில் புரட்டி வாசிக்க ஆரம்பித்தேன்.

இது தொடக்கம்தான், இனி விழிப்பிலும் குரல்கள் கேட்கும், கண்களுக்குள் ஒளிப்புள்ளிகள் தோன்றும், காதில் அவ்வப்போது நாராசமான ஓசைகளும் மூக்கில் கெட்ட வாசனைகளும் வரும். அதன்பின் காட்சிகள் தெரிய ஆரம்பிக்கும். நேர் உலகம் போலவே தோன்றும் காட்சிகள். அவை நேருலகுடன் ஊடுகலந்துவிடும். எந்த உலகில் இருக்கிறேன் என்றே தெரியாமலாகும். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சீறிக்கொண்டும் இருப்பேன். ஒருநாள் கிளம்பிச் சென்றுவிடுவேன். தெருக்களில் அலைவேன். ஆடைகள் கந்தலாகும். சாக்கடை நீரை அள்ளிக்குடிப்பேன். எச்சில்களை உண்டு தெருவில் அமர்ந்திருப்பேன்.

இது எவர் எழுதியது எவரிடம்? இதை நான் வாசித்துக் கொண்டிருக்கிறேனா? இந்த புத்தகத்தில் இது எப்படி வந்தது? ஈவ்லினா ரெவெரெண்ட் வில்லருக்கு எழுதிய கடிதம். ஆனால் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது இது. இது ஃபேன்னியின் நாவல் அல்ல. இதில் வேறேதோ கலந்துவிட்டது.

நான் தளர்ந்து மீண்டும் நாற்காலியில் அமர்ந்துவிட்டேன். இந்த காட்டில், இந்த ஒழிந்த பங்களாவில் நான் இறந்தாலும் சரி, பைத்தியமாகி இங்கேயே அலைந்தாலும் சரி, என்னால் இந்த ஆசிரியர் வேலையை துறக்க முடியாது. இது பைத்தியத்தின் தொடக்கம்தான். இல்லாதவற்றை காண்பது, இல்லாதவற்றை படிப்பது. பெரும்பாலான பைத்தியங்கள் இதைச் செய்கின்றன.

இந்த வரிகள் வேறெங்கோ இருக்கின்றன. நான் இவற்றை வாசிக்கவில்லை. வேறெவரோ இதை ஒரு காட்டுப் பங்களாவில் அமர்ந்து வாசிக்கிறார்கள். அவர் வாசிப்பதை ஃப்ரான்ஸெஸ் எழுதினாள். அதை நான் வாசிக்கிறேன். அல்லது…

குளியலறை தயாராகிவிட்டது என்று மார்த்தா வந்து நின்று உணர்த்தினாள். நான் எழுந்து சென்று குளித்தேன். இங்கே இந்தக் குளியல் மிக விரிவானது. லண்டனில் மாதம் ஒருமுறைதான் குளியல். பெரும்பாலும் முகத்தையும் கைகளையும் வெந்நீர் டவலால் துடைப்பது மட்டும்தான். ஆனால் இங்கே குளிக்காமலிருக்க முடியாது. ஒருநாளில் இரண்டுமுறை. இங்கே சிலர் மூன்றுமுறைகூட குளிக்கிறார்கள். அத்தனை வியர்வை. எங்களூரில் சலவைசோடா போட்டு கொதிக்க வைக்கப்படும் துணிகளை எடுக்க ஆவியறைக்கு செல்லும்போது மட்டும்தான் அப்படி வியர்க்கும்.

ஆனால் வியர்வை நல்லது. தோல் ஆரோக்கியமாக இருக்கும். பளபளப்பாக இருக்கும். நான் என்னை கண்ணாடியில் பார்க்கிறேன். அங்கே லண்டனில் வெளிறி சுண்ணாம்புக்கல் போலிருந்தேன். இங்கே சிவந்திருக்கிறேன், ஆனால் மெருகுடன் இருக்கிறேன். என் கன்னங்களும் கழுத்தும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கின்றன. என் தோள்கள் பளிங்கு போலிருக்கின்றன. என் மார்புகள் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் வெண்கலக் குமிழ்கள்.

எழுந்து முற்றத்திற்கு வந்தேன். சூழ்ந்து காடு இருட்டிக்கொண்டிருந்தது. மழை இன்னும் வரவில்லை. ஆனால் மழைக்கான எல்லாமே ஒருங்கிவிட்டிருந்தன. மரங்கள் அசைவில்லாத இலைகளுடன் காத்து நின்றிருந்தன. பறவைகள் ஒடுங்கிவிட்டன. தெற்குவானில் இடியோசை யானையின் உறுமல்போல எழுந்தது. வானில் மின்னல்கள் கீறித் துடித்துக்கொண்டே இருந்தன. மெல்லிய காற்றசைவு. அதில் செவிகளில் குளிரை உணர முடிந்தது.

நடுவே ஓடிய அந்த வரிகளை கண்டு திகைத்து சோப்பை நழுவவிட்டுவிட்டேன். யாருடைய எண்ணம் அது? யாரோ எங்கோ எதையோ வாசிக்கிறார்கள். ஆனால் அது எப்படி இங்கே வந்து என் எண்ணங்களுக்குள் கலந்தது. பைத்தியக்காரத்தனம், பொருளே அற்றது. ஆனால் ஏதோ நிகழ்கிறது.

நான் நீராடி வந்தேன். மார்த்தா என் உடலை துடைத்துக்கொள்ள உதவினாள். என் உடல்மேல் மென்மையான டால்கம் பௌடரை பூசினாள். லவண்டரின் மணம் கலந்தது. லண்டனில் டால்க் மிகமிகச் செலவேறியது. ஆனால் இந்தியாவில் கீழைநாட்டில் எங்கிருந்தோ வந்தது. அந்த மணம் என்னை எப்போதுமே விடுவிக்கும். என் உடலை நான் இனிதாக உணர ஆரம்பிக்கும் பொழுது அது.

இளநீல கௌன் அணிந்துகொண்டேன். அதற்குப் பொருந்தும்படி வெள்ளி நகைகளை போட்டுக்கொண்டேன். மார்த்தாவிடம் கர்னல் சாப்மான் வந்தால் சொல்லும்படி ஆணையிட்டுவிட்டு தொங்குவிசிறியின் கீழ் அமர்ந்தேன்.

அப்போதுதான் நன்றாகத் தூக்கம் வந்தது. என்னை அழுத்தி சரித்துவிடும் என்பதுபோல தூக்கம். ஆனால் அறைக்குள் நடமாட்டத்தை கவனித்துக் கொண்டும் இருந்தேன். என் கையில் இருந்த ப்ரெஸ்லெட்டை எவரோ கழற்ற முயன்றனர். நான் கையை உதறியபடி விழித்துக்கொண்டேன்.

எழுந்து முகத்தை கைக்குட்டையால் துடைத்தேன். மார்த்தா சொல் இன்றி வந்து நின்றாள். கர்னல் வந்துவிட்டார்.

நான் வாசலுக்குச் சென்று நின்றேன். அவருடைய சாரட் ஏற்கனவே வாசலில் நின்றிருந்தது. அவர் அதிலிருந்து இறங்கி புன்னகையுடன் படிகளில் மேலேறி வந்தார். நான் அவரை நோக்கி புன்னகைத்தபடி படிகளில் இறங்கிச் சென்றேன். அவர் என் கன்னத்தை வருடியபடி “நீ இன்று மலர்ந்த பூ போல் இருக்கிறாய்” என்றார்.

என் காதுகளில் எவரோ வாசிப்பது ஒலித்துக்கொண்டே இருந்தது. இந்த மழையில் இங்கே நான் செய்வதற்கொன்றுமில்லை. இதை வாசிப்பதைத் தவிர வேறேதும் செய்ய என்னால் முடியாது. இங்கே வேறேதுவும் இல்லை. நான் அஞ்சலாம், தயங்கலாம், நாய் வாய் வைப்பதற்கு முன் சுற்றிச்சுற்றி வருவதுபோல. ஆனால் இதை மட்டுமே என்னால் செய்யமுடியும்.

நான் அதை மீறி அவரிடம் புன்னகையுடன் “நேற்று வருவீர்கள் என்று நினைத்தேன்” என்றேன்.

நேற்று ஒரு சந்திப்பு. ஒரு டச்சுக்காரன்.” என்றபடி கர்னல் தன் பட்டுக்கையுறைகளை கழற்றினார். அவரை தொடர்ந்து அவருடைய வேலைக்காரன் அவருக்கான ஒயின் குப்பிகளுடன் உள்ளே வந்தான்.

 [ மேலும்]

முந்தைய கட்டுரைகி.ரா.அஞ்சலிகள்
அடுத்த கட்டுரைகுப்பைநெருக்கடி