கதாநாயகி – குறுநாவல் : 11

𝟙𝟙

இந்த பெரிய வராந்தாவில் அமர்ந்து, மேலிருந்து பொழியும் வெண்ணிறமான நெருப்பு போன்ற வெயிலில் பச்சை இலைகள் சுடர் என ஒளிவிடுவதைப் பார்த்தபடி இந்த புத்தகத்தைப் பிரித்து மடியில் வைத்திருக்கிறேன். ஆனால் படிக்காமல் வெறுமே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். பகலில் நான் படிப்பது குறைவு. பெரும்பாலும் பகற்கனவு கண்டு சோம்பி அமர்ந்திருப்பதுதான் வழக்கம். ஆனால் மடியில் புத்தகம் இருக்கவேண்டும்.

இது ஒரு நாவல். இந்நாவலை நான் இதற்குமுன் பலமுறை முழுக்கவே படித்துவிட்டேன். கைக்கு வந்த அன்றே முழுமையாக படித்தேன். நான் படிப்பதெல்லாம் இரவில்தான். ஒரு சிறு தூக்கம் முடித்து நான் விழித்துக்கொள்வேன். பெரும்பாலும் அருகே மக்கின்ஸி இருப்பதில்லை. அவர் அலைந்துகொண்டே இருக்கப் பழகியவர். அவருக்கு உள்ளூர்ப்பெண்களிலும் ஆர்வம் மிகுதி. அப்படியே வாசிக்க ஆரம்பித்தால் என்னால் நிறுத்தவே முடியாது. காலையில்தான் வாசிப்பு நிற்கும்.

இந்தப்புத்தகம் கொஞ்சம் பெரியது. ஐநூறு பக்கம் வரை இருக்கும். சென்ற மாதம்தான் இது என் கைக்கு வந்தது. அஞ்சுதெங்கில் நான் புத்தகங்களுக்காக சொல்லிவைத்திருந்த அகஸ்டின் ஜான் என்னும் சிரிய கத்தோலிக்கன் புத்தகக் கட்டுகளுடன் என்னை தேடிவந்தான். புத்தகங்களை என் முன் பரப்பினான்.  நான் முழந்தாளிட்டு அமர்ந்து அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன்.

பெரும்பாலான புத்தகங்கள் லண்டனின் ஈரநைப்புடன் கட்டுகளாக கட்டப்பட்டு கப்பலில் ஏற்றப்பட்டு, நாலைந்து மாதம் அப்படியே இருந்து, இங்கே வந்து சேர்பவை. அவற்றில் பூஞ்சை பூத்திருக்கும். பல பக்கங்கள் நீரிலூறி நிறம் மாறியிருக்கும். அவற்றை முரட்டுத்தனமாகவே அழுத்திக் கட்டுவார்கள். அவற்றை கட்டி அடுக்குபவர்களுக்கு புத்தகமென்றால் என்னவென்றே தெரியாது. ஆகவே அவற்றின் விளிம்புகள் நசுங்கி சிதைந்திருக்கும். மேலே இருக்கும் புத்தகங்களில் கயிறு ஆழமாகப் பதிந்த தடம் இருக்கும்.

புகழ்பெற்ற புத்தகங்கள் எல்லாமே பழையவையாகவே இருக்கும். புதியவையாகத் தோன்றும் புத்தகங்கள் பெரும்பாலும் பயனற்றவை. அவற்றில் கிறிஸ்தவ மதநூல்களே மிகுதி. ஆர்வக்கோளாறால் வயதான பிரபுக்கள் எழுதி வெளியிடும் இசைநாடகங்கள் ஏராளமாக இருக்கும். அவை பெரும்பாலும் பழைய ரோம, கிரேக்க கதைகளை தழுவி உருவாக்கப்பட்டவை.

பெரும்பாலான பிரபுக்கள் கிராமர்ஸ்கூலில் ரைம் எழுத கற்றுக்கொண்டிருப்பார்கள். பிளெயின் பொயட்ரி என எதையும் எழுதலாம். அவர்களைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். இயாம்பிக் பெண்டாமீட்டரில் எல்லாம் எழுதுபவர்கள் கொடூரமானவர்கள். மொழியை அவர்கள் செம்புக்கம்பி போல வளைப்பார்கள். சேறுபோல குழைப்பார்கள். இசைநாடகங்களை எழுதக்கூடாது என்று அரசர் ஓர் ஆணையிட்டால் ஆங்கிலத்தைக் காப்பாற்றலாம் என்று நான் கர்னல் சாப்மானிடம் சொன்னேன். அவர் வெடித்துச் சிரித்தார்.

பழைய புத்தகங்கள் ஒவ்வொன்றாக எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன், புதியவற்றை நோக்கி திரும்பவே இல்லை. ஆனால் ஓரக்கண்ணால் ஒரு பெயரைப் பார்த்துவிட்டேன். ஃபேன்னி பர்னி. நான் அந்தப்புத்தகத்தை பாய்ந்து எடுத்துப் புரட்டினேன். அவள்தானா? இந்தப் பெயரில்தான் எழுதுவதாகச் சொன்னாள். அவளுடைய படம் ஏதும் இல்லை. ஆனால் அது மூன்றாம்பதிப்பு, முதல்பதிப்பு ஆசிரியரின் பெயரில்லாமல் வந்தது என்று தெரிந்தது.

புரட்டிப்புரட்டிப் பார்த்தேன். காப்பிரைட் பக்கத்தில் பெயர் இருந்தது. ஃப்ரான்ஸெஸ் பர்னி எழுதியதுதான். EVELINA or THE HISTORY OF A YOUNG LADY’S ENTRANCE INTO THE WORLD. நாவல்களுக்கு நீளமாக பெயர்கள் வைப்பது வழக்கம். ஆசிரியை பெயரை முன்பக்கம் அச்சிடும் வழக்கம் அமெரிக்காவில் வந்திருந்தது. பிரிட்டனில் உள்ளேதான் Fanny Burney. ஆசிரியை பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பை ஈஸ்டன் ஃபிளெச்சர் என்பவர் எழுதியிருந்தார். அதில் நான் அறியாத ஃப்ரான்ஸெஸ் பர்னியின் வாழ்க்கை வரலாறு இருந்தது.

1778ல் முதல் பதிப்பு வெளியாகியிருக்கிறது. 1782ல் தான் இந்த மூன்றாம் பதிப்பு. முதல்பதிப்பு நன்றாக விற்றிருக்கலாம். அந்த புத்தகம் பெயரில்லாமல் வெளியாகி ஒரு சிறு பரபரப்பை உருவாக்கியிருக்கலாம். இரண்டாம்பதிப்பு ஃபேன்னி பர்னி என்ற பெயரில் வெளியாகி அப்பெயர் காரணமாக கொஞ்சம் பரபரப்பாக விற்கப்பட்டிருக்கலாம். மூன்றாம் பதிப்புக்கு பெரிய எதிர்வினை ஏதும் வந்ததுபோலத் தெரியவில்லை. நாவல் வெளியான அதே ஆண்டே இந்தியாவுக்கு வந்துவிட்டதென்றால் விற்பனையாளர்களுக்கு நஷ்டம் என்றுதான் அர்த்தம்.

நான் அதை எடுத்து மார்புடன் அணைத்துக் கொண்டேன். அகஸ்டின் ஜானுக்கு மகிழ்ச்சி. அந்தப்புத்தகத்தை அவன் சும்மா தள்ளிவிட வேண்டியிருந்திருக்கும். அவன் சொன்ன விலையை கொடுத்து வாங்கிக்கொண்டேன். அப்படியே ஓடிப்போய் அறையில் அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தவள் மறுநாள் விடியற்காலையில்தான் வாசித்து முடித்தேன்.

ஃப்ரான்ஸெஸ், ஈவிலினா இருவரையுமே எனக்குத் தெரியும். ஆசிரியையும் கதாநாயகியும். ஆனால் உண்மையில் இருவர்தானா? ஈவ்லினாவை நான் சந்திக்கவே இல்லையா? அவள் ஃப்ரான்ஸெஸின் ஓர் உருவகம் மட்டும்தானா? அன்று நான் சந்தித்த பெண்ணின் பெயர் ஈவ்லினா அல்லது கரோலினா? அதை எழுதியவள் கூட தன்னை ஃபேன்னி என்றா ஃப்ரான்ஸெஸ் என்றா அறிமுகம் செய்துகொண்டாள்? குழப்பம்தான். அந்த புத்தகத்தை வாசிக்க வாசிக்க அந்தக்குழப்பம் கூடிக்கூடித்தான் வந்தது.

நான் இந்த நாவலை வெறிகொண்டவள் போல வாசித்துக் கொண்டிருப்பதை மக்கின்ஸி கவனிக்கவே கொஞ்சம் பிந்திவிட்டது. இயல்பாக என் மேஜைமேல் இருந்து அந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்தார். “இதென்ன ஒரே மாதிரி ஏகப்பட்ட புத்தகங்கள்? இவையெல்லாமே ஒரே அச்சகத்தில் வெளியானவையா?”என்றார்

நான் “ஒரே புத்தகம்தான்” என்றேன்.

ஒரே புத்தகத்தையா அன்றுமுதல் வாசிக்கிறாய்? இதென்ன செய்யுளா?”என்று புரட்டிப் பார்த்து  “கடிதங்களா?” என்றார்.

இல்லை, நாவல்”என்றேன்.

வாசிக்கவே முடியவில்லையா?”

நான் அதற்குப் பதில் சொல்லவில்லை. அதை வாங்கி உள்ளறைக்குள் அப்படியே வைத்துவிட்டேன்.

மீண்டும் அதை வாசிப்பதை அவர் கண்டபோது “இதென்ன இன்னுமா நீ இதை வாசிக்கவில்லை?”என்று கேட்டார்.

இன்னொரு முறை வாசிக்கிறேன்” என்றேன்.

திரும்பவுமா? உனக்கு புத்தகங்கள் வேண்டுமென்றால் நான் ராணுவ நூலகத்திலிருந்து கொண்டுவரச் சொல்கிறேன்.”

வேண்டாம்… இது நல்ல புத்தகம். அதனால் வாசிக்கிறேன்.”

திரும்ப ஒரு புத்தகத்தை வாசிப்பதா? முதல்முறை வாசிப்பதே கடினம்” என்றார்.

நான் புன்னகை புரிந்தேன்.

அவருக்குத் தெரியவில்லை, நான் அந்தப் புத்தகத்தில் இருந்து எதையோ எழுப்பிவிட்டேன் என்று. என்னால் அந்த புத்தகத்தை வாசிக்காமலிருக்க முடியாது. ஏன், அதை அப்பால் வைக்கக்கூட முடியாது. நான் எங்குசென்றாலும் அந்தப் புத்தக நினைவாகவே இருக்கிறேன். ராணுவ அக்காதமியில் விருந்துக்குப் போனபோதுகூட அதை என் கைப்பைக்குள் வைத்திருந்தேன். நடுவே சலிப்பு வந்தபோது ஒப்பனை அறைக்குப்போய் நாலைந்து பக்கங்கள் வாசித்தேன். எவரோ கதவைத் தட்டியபோது அவசரமாக ஒப்பனையை மீண்டும் செய்துகொண்டு கதவைத்திறந்து வெளியே வந்தேன்.

அதையே படித்துக் கொண்டிருந்தேன். மக்கின்ஸியும் நானும் ஓர் அறையில் தூங்குவதில்லை. அவர் நிறையக் குடித்துவிட்டு தூங்குபவர். நான் கடுமையான மதுவகைகளின் வாசனையை விரும்பாதவள். அது வசதியாக ஆகியது. என் அறையில் நான் எழுந்து அமர்ந்து வாசித்துக் கொண்டே இருந்தேன். மீண்டும் மீண்டும்.

என்ன வியப்பென்றால் வாசிக்க வாசிக்க அந்த நாவல் புதியதாக ஆகிக்கொண்டே இருந்தது. ஒரு முறை வாசித்தவற்றை மீண்டும் வாசிக்கமுடியவில்லை. அதில் புதிய வரிகள் தோன்றுகின்றனவா? குறிசொல்லும் கிழவி போல அந்த புத்தகம் பேச்சினூடாக வளர்கிறதா? நான் சந்தேகத்துடன் அதை கவனித்தேன். அதில் நான் வாசித்தவையாக நினைவிலெழுந்தவற்றை குறித்து வைத்தேன். பின்னர் நாவலை விரித்து வாசித்த பகுதிகளைத் தேடினேன். அவை அங்கே இல்லை.

நெஞ்சு அதிர நான் அந்தப் புத்தகத்தையே புரட்டிக்கொண்டிருந்தேன். அதெப்படி அவ்வாறு இருக்க முடியும்? நான் அதில்தான் வாசித்தேன். அதில் இருந்த வரிகள்தான் ஈவ்லினா எழுதிய கடிதங்கள் .ஆர்வில் பிரபுவுக்கும் ரெவெரென்ட் வில்லருக்கும் அவள் எழுதியவைதான் அந்த வரிகள். ஆனால் அந்த நாவலில் இல்லை. பக்கங்கள் மாறிவிட்டனவா?. நான் பக்கங்களைப் புரட்டிப்புரட்டி படித்தேன். நாவலின் கட்டமைப்பே கடிதங்கள் என்பதாகையால் அந்த வரிகள் எங்கே வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தது.

தேடித்தேடி உழன்று நாவலை மூடிவிட்டு நெற்றிப்பொட்டை அழுத்திக்கொண்டு அமர்ந்திருந்தேன். எனக்குச் சித்தப்பிரமை உருவாகிறதா? இந்த பங்களாவின் தனிமையும் அமைதியும் என்னை நிலையழியச் செய்கின்றன. இங்கே என்னிடம் உரையாட எவருமில்லை. ராஜகுமாரியை கடத்திக்கொண்டு சென்று மலையுச்சியில் குடிவைத்து அவளுக்கு ஏவல் செய்ய பேய்களை நியமித்துச்சென்ற பூதம்போன்றவர் மக்கின்ஸி. இந்த மலையுச்சியில் இருந்து நான் எல்லாவற்றையும் பார்க்கமுடியும், எங்கும் செல்லமுடியாது.

மக்கின்ஸி என்னை ஒரு தேவாலய விருந்தில் பார்த்தார். என் பின்னால் வந்து என் வீட்டை கேட்டு தெரிந்துகொண்டார். அப்போதே எதற்கென்று தெரிந்துவிட்டது. என் தோழிகள் என்னை கேலி செய்ய தொடங்கிவிட்டனர். அவர் வந்த சாரட் வண்டி வெளியே நின்றிருந்தது. கன்னங்கரிய பளபளப்புடன். குதிரைகள் கால்மாற்றி நின்று செருக்கடித்தன. வண்டிக்காரன் சிவப்புக் கம்பிளிச் சீருடையும், குதி உயர்ந்த காலணியும் கூம்புத் தொப்பியுமாக வெளியே இறங்கி நின்றிருந்தான்.

ஃபீட்டன் ரக வண்டி. உள்ளே உயர்தர செங்குருதி நிறமான தோல் பரவிய இருக்கைகள். அவற்றை மொராக்கோ தோல் என்பார்கள். நான் சாரட்டிலேயே ஏறியதில்லை. ஃபீட்டனை அரிதாகவே கண்டிருக்கிறேன். என் தோழிகள் எவரும் ஏறியதில்லை.

அப்போதே பொறாமை உருவாகிவிட்டது. லினன் வணிகரான ஆர்தரின் மகள் ஆஞ்சலினா “இனி ஃபீட்டனில் ரொட்டி கொண்டு சென்று விற்கலாமே” என்றாள். அப்போதே நான் முடிவெடுத்துவிட்டேன். இந்த மனிதனை திருமணம் செய்துகொள்ளவேண்டும். இந்த மனிதனை அல்ல, இந்த சாரட்டை. இந்த மொரோக்கோ தோலிடப்பட்ட சிம்மாசனத்தை. என்னை அவர் கேட்டுவரவேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கலானேன். வேண்டிக்கொண்டேன். நான்குநாட்கள் கடந்ததும் கண்ணீர்விட்டு ஏங்கினேன்.

ஐந்தாம்நாள் அவருடைய செய்தியுடன் சர்ச்சில் இருந்து ரெவெரெண்ட் வில்பர் வந்து அப்பாவிடம் பேசினார். நான் தட்டிக்குப் பின்னால் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். நெஞ்சைப்பற்றிக் கொண்டு விம்மியழுதேன்.

அப்பாவால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவர் கமறிக் கமறி “தேவனுக்கு மகிமை…. வேறென்ன சொல்லவேண்டும் நான்?” என்றார்.

ரெவெரெண்ட் வில்பர் “நீங்கள் நிறைவடையலாம். அவரிடம் நிறையவே பணமிருக்கிறது. உங்கள் பிற பெண்களின் சீதனத்தொகையை அவரே கொடுத்துவிடுவதாகச் சொன்னார். அவருக்கு இங்கே ஒரு பங்களா இருக்கிறது. லண்டனிலும் ஒரு பங்களா இருக்கிறது. இங்கிருக்கும் பங்களாவில் நீங்கள் குடும்பத்துடன் குடியேறலாம்” என்றார்.

அப்பா மௌனமாகக் கண்ணீர்விட்டார். என் தங்கைகள் என் கைகளைப் பற்றிக்கொண்டனர். கேதரின் என் தோள்வளைவில் முகம்புதைத்து கண்ணீர்விட்டாள்.

ஊரில் அன்றே செய்தி பரவியது. அம்மாவைப் பார்க்க ஊரிலிருந்து பெண்கள் வரத்தொடங்கினார்கள். என்னை சந்தித்து கைகளைப் பற்றி முகமன் சொல்லி வாழ்த்திவிட்டுச் சென்றனர். பலருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி. சிலருக்கு பொறாமை.

அப்படியென்ன இருக்கிறது அவளிடம்? இந்த ஆண்களுக்கு கண் என்பதே இல்லை” என்று சலவைக்கார டோரதி சொன்னதாக தங்கை சொன்னாள்.

இளம்பெண்கள் அந்த மனநிலையுடன் வந்து சென்றனர். ஆனால் அவர்கள் அனைவருக்குமே கனவு காண ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது. அவர்களைப்போன்ற ஒருத்த்திக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கிறது. அந்த தேவதை சுற்றிமுற்றிப் பார்க்கும். அந்தன் கண்ணில்பட்டுவிட வாய்ப்பிருக்கிறது.

ஊரில் என்னை சிண்ட்ரெல்லா என்று என்னை அழைக்கத் தொடங்கினார்கள். பாதி கேலியாக பாதி அன்பாக. நான் சாலையில் செல்லும்போது என் செருப்பு அறுந்துவிட்டது.  “எடுத்து வைத்துக்கொள் அந்தச் செருப்பை. ராஜகுமாரன் உன்னுடைய வீட்டுக்கு வந்துவிடுவான்” என்று கருமான் ஆண்ட்ரூஸ் என் தோழியிடம் சொன்னார்.

அந்த மாதமே மெக்கின்ஸி என்னை திருமணம் செய்துகொண்டார். அவருடைய தோழர்கள் என்று சிலர்தான் வந்திருந்தனர். இங்கே அவர் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவரல்ல. அவருடைய சொந்த ஊர் ஸ்காட்லாந்தில் இருந்தது. எங்கள் பக்கமிருந்தும் பெரிய கூட்டம் இல்லை. காலை பத்துமணிக்கு தொடங்கி ஒருமணி நேரத்தில் எல்லாச் சடங்குகளும் முடிந்துவிட்டன. சர்ச்சை ஒட்டிய வெல்லெஸ்லி கூடத்தில் விருந்து. எங்கள் தரத்துக்கு மிகப்பெரிய விருந்துதான்.

அடுத்த ம்மாதமே மெக்கின்ஸி கிளம்பி இந்தியா சென்றுவிட்டார். அவர் ஒரு வருடம் கழித்துத்தான் வருவார். வந்துசேர மூன்றுமாதமாகும்.  அத்தனைகாலம் என்னை மேடம் பியூமாண்ட் என்னும் சீமாட்டியின் வீட்டிலேயே தங்கச்செய்துவிட்டுச் சென்றார். அவளுக்குக் கட்டணம் அளிக்கப்பட்டிருந்தது. அவள் எனக்கு நாகரீகம் கற்றுத் தரவேண்டும்.

அவள் நாகரீகம் என்றால் பிரெஞ்சு என்று நினைத்திருந்தாள். “சொற்களைத் தெரிந்துகொண்டால் நாகரீகத்தின் பாதியை அறிந்துகொண்டதுபோல. உதாரணமாக என்பெயர் ப்யூமாண்ட். அதன்பொருள் அழகான மலை” என்றாள். நிற்க, நடக்க, பேச, சிரிக்க, போலியாக வியப்படைய, கவுனை பற்றிக்கொள்ள, கைக்குட்டையை வைத்துக்கொள்ள, கையுறைகளைக் கழற்ற கற்றுத்தந்தாள். நான் அவளிடம் பேசிக் கற்றதை விட அவள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டதே மிகுதி. அவள் ஒரு நடனக்காரிபோல் இருந்தாள். எப்போதும் நடனத்திலேயே இருந்தாள்.

அவளிடம் லத்தீனும் பிரெஞ்சும் கற்றுக்கொண்டேன். இரண்டையும் சேர்ந்து கற்பது மிக வசதியானது. இரண்டையும் கற்றுக்கொண்டால் நம் ஆங்கிலம் தரமானதாக ஆகிவிடுகிறது. லண்டனின் உயர்குடிகளின் விருந்துகளுக்கு என்னை அவள் அழைத்துச் சென்றாள். அங்கே நான் அறிந்துகொண்டேன், லண்டன் பிரபுக்கள் உயர்ந்த நாகரீகம் என நினைப்பது பிரெஞ்சுப் பண்பாட்டைத்தான். பியூமாண்ட் சீமாட்டி சொன்னது சரிதான்.

இந்தியாவிற்கு நான் வந்திறங்கியபோது சென்னபட்டினத்தில் என்னை வரவேற்க வந்திருந்த பதினேழு சேடிப்பெண்கள் என்னை திகைக்க வைத்தனர். எனக்காக ஓர் அரண்மனையும் ஏவலர்களும் காத்திருந்தனர். பெட்டி பெட்டியாக ஆடைகள், காலணிகள், நகைகள். எனக்கு மட்டுமேயாக ஒரு சாரட் வண்டியும், வண்டியோட்டியும், காவலுக்கு நான்கு குதிரைவீரர்களும், என்னுடைய பூந்தோட்டத்தில் நான் மட்டுமே உலவுவதற்காக ஒரு பாதை. வந்த ஒரு மாதத்திலேயே நான் அரசியென்று என்னை உணர்ந்தேன்.

இங்கே சென்னப்பட்டினத்தின் விருந்துகளில் இயல்பாகவே நான் சீமாட்டியாக கருதப்பட்டேன். இங்குள்ள மாவட்ட நீதிபதிகள், கலெக்டர்கள், பிளாண்டர்கள், ராணுவ அதிகாரிகள் எல்லாருமே லண்டன் சென்று அங்கே ஏழைக்குடும்பத்தின் அழகிய பெண்களை மணம் முடித்து வந்திருந்தனர். ஆனால் பலருக்கு அந்தப்பெண்களுக்கு முறையான பயிற்சி அளிக்கவேண்டும் என்று தெரியவில்லை.

சென்னை கவர்னர் ஜான் மக்கார்ட்டினி அளித்த விருந்தில் அவர் நடனமாட என்னைத்தான் தேர்ந்தெடுத்தார். அதைவிட அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டபோது மெய்யாகவே கைத்தட்டல் எழுந்தது. நான் நடனமாடி முடித்தபோது கைத்தட்டல் மேலும் ஓங்கி ஒலித்தது. ஏனென்றால் அங்கிருந்த பெண்களில் பலர் அவருடன் நடனமாடுவதை தவிர்க்கவே எண்ணினர். அவர் மிகச்சிறந்த நடனக்காரர். ஔச்சன்லெக் பிரபுகுடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடன் நடனமாடி தன்னை பயிலாதவள் என்று வெளிப்படுத்திக்கொள்ள எவரும் தயாராக இல்லை.

மக்கின்ஸி என்னைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தார். நான் சென்னையிலேயே இருந்திருந்தால் ஒருவேளை அவர் என் வழியாகவே உயர்வட்டத்தில் எல்லா அறிமுகங்களையும் பெற்றிருப்பார். ஆனால் நான் வந்ததுமே அவர் டிரிவாங்கூருக்குச் செல்லும்படி ஆகியது. அங்கே அரசருக்கும் கம்பெனிக்கும் மோதலும் பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டிருந்தன. அரசர் போர்ச்சுக்கல்காரர்களாலும் டச்சுக்காரர்களாலும் மாறி மாறி மிரட்டப்பட்டு பிரிட்டிஷ் படைகளை நம்பியிருந்தார்.

மக்கின்ஸி நான் வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். “அதே புத்தகமா? உனக்கென்ன பைத்தியம் ஏதேனும் பிடித்துவிட்டதா?”

நான் புன்னகை செய்தேன்.

நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாகவே நீ சரியாக இல்லை. உன் முகமே மாறிவிட்டது.”

என்னவாக?”என்று நான் கேட்டேன்.

ஏதோ பித்துப்பிடித்தவள் போல. என்னைப் பார்த்தால் ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகே என்னை உன் மனம் அடையாளம் காண்கிறது. நீ உனக்குள் எங்கோ பார்த்துக்கொண்டிருக்கிறாய்”

இல்லையே” என்றேன்.

நீ அந்தப் புத்தகத்தை தூக்கி வீசு… அதில் ஏதோ பேய் குடியிருக்கிறது. மெய்யாகவே புத்தகங்களில் பேய்கள் குடியிருக்கும்… என் அம்மா சொல்வதுண்டு.”

நான் அதற்கும் புன்னகைதான் செய்தேன்.

அன்று கர்னல் சாப்மான் வந்தபோது மெக்கின்ஸி சொன்னார். “இவள் ஏதோ புத்தகத்தில் சிக்கியிருக்கிறாள்… அதை படித்துக்கொண்டே இருக்கிறாள்.”

என்ன புத்தகம் அப்படி?”என்று கர்னல் சாப்மான் கேட்டார்.

நான் “ஒன்றுமில்லை, ஒரு நாவல்” என்றேன்.

என்ன நாவல்? நான் படிக்கக்கூடாதா?” என்று அவர் சிரித்தார்.

ஒன்றுமில்லை, சும்மா சொல்கிறார்” என்றேன்.

மெக்கின்ஸி “சும்மா சொல்லவில்லை. திரும்பத் திரும்ப படிக்கிறாள். புத்தகங்களில் இருந்து பேய்கள் எழுந்து நம்மை பிடிக்கக்கூடும். அதைச் சொல்லி இவளை எச்சரித்தேன்”என்றார்.

என்ன நாவல் அது? காட்டு” என்றார் கர்னல் சாப்மான்.

நான் உள்ளே சென்று ஏறத்தாழ அதே அட்டைகொண்ட ஒரு நாவலை எடுத்து கொண்டுவந்து காட்டினேன்.

இதுவா? வேறு மாதிரி இருந்ததே”என்று மெக்கின்ஸி சொன்னார்.

உங்களுக்கு என்ன புத்தகத்தைப் பற்றித் தெரியும்?”என்று நான் சொன்னேன். “கர்னல் சாப்மான், இவர் படையெடுத்துச் சென்றால் முசல்மான்கள் எதிரில் வந்து ஒரு புத்தகத்தைக் காட்டினால் போதும், மிரண்டுபோய் அப்படியே திரும்பி ஓடிவந்துவிடுவார்.”

கர்னல் சாப்மான் எப்போதுமே நான் மெக்கின்ஸி பற்றிச் சொல்லும் வேடிக்கைகளுக்கு வெடித்துச் சிரிப்பார். அவர் சிரித்தபடி நாவலை புரட்டிப் பார்த்து மேடையில் வைத்துவிட்டு “இந்த நாவலில் இருந்து வரும் பேய்களை சமாளிக்கலாம். இவை எல்லாமே பிரெஞ்சுப் பேய்கள்”என்றார்.

நான் புன்னகைத்து “நாம் பிரெஞ்சுக்காரர்களை வென்ற வரலாறு கொண்டவர்கள்… நீங்கள் கூட பிரெஞ்சுப்போரில் இருந்தீர்களே?”என்றேன்.

அவர் தன்னுடைய புதுச்சேரி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். வெற்றிகரமாக அந்தப்பேச்சை திசைதிருப்பிக் கொண்டுபோனேன்.

அதன்பின் நேராக மது. கர்னல் சாப்மான் மதுவருந்தியதுமே இசை கேட்க விரும்புவார். என்னிடம் “நாம் பியானோ அருகே செல்வோம்” என்றார்.

ஆனால் நான் உண்மையிலேயே அந்த நாவலில் சிக்கியிருந்தேன். அந்த நாவலில் நான் வாசிப்பவை மெய்யாக அதில் இல்லை. அவை என் நினைவில் இருந்தன. நான் வாசிக்கும்போது நாவலில் தோன்றின. நாவலில் இருந்து நான் வேறெங்கோ சென்றுகொண்டிருந்தேன்.

மறுநாள் காலையில் பகலொளியில் யோசித்தால் ஒன்றும் புரியவில்லை. தர்க்கபூர்வமாகச் சில காரணங்கள் தோன்றும். நான் அரைத்தூக்கத்தில் இரவில் வாசிக்கிறேன். தூக்கத்தில் என் கற்பனைகளும் முன்பு வாசித்த நூல்களின் வரிகளும் ஊடுகலந்துவிடுகின்றன. இசைநாடகங்களில் சற்று தூங்கினால் வேறுநாடகங்களின் நினைவுகள் கலந்துவிடும். மாக்பெத் ஹாம்லெட்டின் வசனங்களைச் சொல்லிக் கொண்டிருப்பான். அதைப்போலத்தான்.

ஆனால் அதைப்போல அல்ல என்று நான்  உள்ளூர அறிந்துகொண்டும் இருந்தேன். உண்மையில் ஏதோ சிக்கலாகிக் கொண்டிருக்கிறது. சித்தப்பிரமையின் படிகள்தான் இவை. எங்களூரில் ஒரு போதகருக்கு பித்துப்பிடித்தது. பைபிளும் பிரார்த்தனைப் புத்தகங்களும் ஒன்று கலந்தன. பின்னர் அவர் வாசித்த சில ஆபாசநாவல்களும் கலக்க ஆரம்பித்தபோது அவரை கைகளைக் கட்டி கொண்டு சென்றுவிட்டார்கள்.

என் பேச்சிலோ நடத்தையிலோ எந்த மாற்றமும் இல்லை. எவரும் எதையும் கவனிக்கவில்லை. மெக்கின்ஸி அவருடைய உலகில் இருந்தார். நான் உள்ளூர மாறிக்கொண்டே இருந்தேன். அந்த நாவலில் இருந்து எழுந்துவந்துகொண்டே இருந்தன ஈவ்லினாவின் கசப்பும் நக்கலும் நிறைந்த சொற்கள். அல்லது ஃப்ரான்ஸெஸ் பர்னியின் சொற்கள். அல்லது அவர்கள் ஒன்றேதானா?

இன்று நான் வாசித்துக் கொண்டிருந்தபோது திடுக்கிட்டேன். அதில் வரிகள் விரைந்தோடிக் கொண்டிருந்தன. ஈவ்லினா எழுதியிருந்தாள். ‘இந்த கோடைநாட்டின் வானம் போல நம்மை வெறுமையில் தள்ளுவது வேறொன்றில்லை. நம் நிலத்தில் அவ்வப்போது வானம் நீலமாக வெறிச்சிடும். அது ஒரு கொண்டாட்டம். அத்தனைபேரும் தெருவிலிறங்கிவிடுவோம். வெயிலில் நீராடித் திளைப்போம். ஆனால் இங்கே வானம் எப்போதுமே ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. நம் ஊரில் வானம் ஒளிர்வது ஒரு தெய்வீகப் புன்னகை. அரிதானது. இங்கே வானின் ஒளி கிறுக்கனின் சிரிப்பு போல, நீங்காதது, பொருளற்றது”

யார் எழுதியது அதை? ஈவ்லினா எப்போது இந்தியா வந்தாள்? அவள் எழுதியிருக்கும் இந்த வரிகளை நானே எப்போதாவது என் டைரியிலோ கடிதங்களிலோ எழுதியிருக்கிறேனா?

ஈவ்லினா எழுதியிருந்தாள். ”இந்த பங்களாக்கள் மிகப்பெரியவை. சிவந்த ஓடு வேயப்பட்ட உயரமான சரிந்த கூரைகள். செங்குத்தான வெண்சுவர்கள். தரையில் சிவப்புக் கம்பளங்கள். சிவப்புப்பட்டு உறையிடப்பட்ட நாற்காலிகள். திரைச்சீலைகள் இளஞ்சிவப்பானவை. வெண்மையான மேஜைவிரிப்புகள். பெரிய ஓவியங்கள். பொன்பூசி அலங்கரிக்கப்பட்ட வெள்ளிச் சிலைகள்.

இங்கே என்னை அச்சுறுத்துவது சுவர்களில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய, பாடம் செய்யப்பட்ட தலைகள். மான்கள், கரடிகள், காட்டெருதுகள். அவற்றின் கண்களுக்குக் கண்ணாடிக்குண்டுகள் அமைக்கப்பட்டு மெய்யான பார்வையே வரவழைக்கப்பட்டிருக்கும். அவை தலைக்குமேல் இருந்து அவர்களை கொன்றவர்களை பார்த்துக் கொண்டிருக்கும். அவற்றை கொன்ற துப்பாக்கிகள் சுவர்களில் மாட்டப்பட்டிருக்கும்.

அவற்றின் கண்களைப் பார்க்க என்னால் முடியாது. ஆனால் பார்த்துவிடுவேன். ஒருமுறை பார்த்தபோது ஒருமானின் விழிகள் அசைவதையே பார்த்தேன். திடுக்கிட்டு மயங்கி விழுந்துவிட்டேன். ஏன் என்று சொல்லவில்லை. கோடையின் வெப்பத்தால் மயங்கியிருப்பேன் என்று அவர்களே முடிவுசெய்துவிட்டனர். அதன்பின் இந்த மாளிகையில் அந்தப்பகுதிக்கு மட்டும் நான் போவதே இல்லை”.

நானே உணர்ந்தது இது. இது ஈவ்லினா எழுதியது அல்ல. அவள் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. வீடுகளில் பாடம்செய்யப்பட்ட தலைகளை வைக்கும் வழக்கம் லண்டனில் இல்லை. அது ஒரு கீழைநாட்டு வழக்கம். கீழைநாடுகள்மேல் பெற்ற வெற்றியை ஐரோப்பா கொண்டாடும் ஒரு முறை அது. இங்குள்ள மகாராஜாக்களையும் முசல்மான்களையும் கொன்று அவர்களின் தலைகளையும் இப்படி பாடம் செய்து வைக்க இவர்கள் தயங்க மாட்டார்கள்.

இந்த வரிகள் எப்படி இந்நாவலுக்குள் சென்றன. ஈவ்லினா எப்படி இதை எழுதினாள். நான் என் தலையை ஓங்கி ஓங்கி தட்டிக்கொண்டேன். ஏதோ ஆகிக்கொண்டிருக்கிறது. என் தலையை உடைத்துக்கொண்டு தெருவிலிறங்கி ஓடப்போகிறேன். இங்கே அப்படி ஒரு பெண்ணைப் பார்த்தேன். அழுக்கானவள், பரட்டைத்தலை, பற்கள் கறைபடிந்தவை, ஆனால் வெள்ளைக்காரி. துறைமுகப்பகுதியில் அலைந்துகொண்டிருந்தாள் யாரோ காப்டனின் மனைவி என்றார்கள். அவளை காப்டன் என்றே அழைத்தார்கள்.

நாற்காலி பின்னால் நகர்ந்து ஓசையிட, எழுந்துவிட்டேன். அந்த புத்தகத்தை தூக்கி பெட்டிக்குள் போட்டு மூடிவிட்டு சென்று படுத்துக் கொண்டேன். என் கண்களுக்குள் எழுத்துக்கள் நீர்ப்பிம்பம் போல அலைபாய்ந்து கொண்டிருந்தன. ஆடைகளை மாற்றாமலேயே மெத்தைமேல் படுத்தேன்.

கண்களை மூடிக்கொண்டாலும் உள்ளே விழிகள் உருண்டு கொண்டிருப்பதை உணர்ந்தேன். பெருமூச்சுகள் விட்டுக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். அப்போது அந்த அறையில் இன்னொருவரை உணர்ந்தேன். ஆனால் அச்சமில்லை. நான் வெறுமே உணர்ந்து கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்தவர்தான். பெண்

அவள் அருகே வந்து என் முகத்தை கூர்ந்து பார்த்தாள். நான் அவள் யார் என்று உணர்ந்தேன். ஈவ்லினா. “நீயா? நீ இறந்துவிட்டாயா?”என்றேன்.

ஏன்?”என்று அவள் கேட்டாள்.

இல்லாமல் நீ எப்படி இங்கே வரமுடியும்?” என்றேன்.

நான் சாகவேண்டியதில்லை” என்று அவள் சொன்னாள்.

பிறகெப்படி நீ இங்கே வந்தாய்?”

அந்தப்புத்தகம் வழியாக வந்தேன். அது எப்படி வந்தது?”

ஆனால் அது புத்தகம்.”

நான் அதற்குள் புகுந்து என்னை வைத்து மூடிக்கொண்டேன்.”

அதெப்படி?”

முடியும். மனிதர்களால் புத்தகங்களுக்குள் நுழைந்துகொள்ள முடியும். வெளிவரவும் முடியும்.”

நான் விழித்துக்கொண்டேன். அறைக்குள் எவருமில்லை. மேலே பிரம்பால் பின்னப்பட்ட சிவப்புநிறமான பங்கா அசைந்து கொண்டிருந்தது. அதன் நாடாவை வெளியே இருந்து இழுக்கும் இந்திய ஊழியனை நான் கண்டேன். என் மனதின் சரடு லண்டனில் எவர் கையிலோ இருக்கிறது. அசட்டுத்தனமான உவமை. நான் புன்னகைத்தேன்.

அந்த புத்தகம் மேஜைமேல் இருந்தது. எப்படி அங்கே வந்தது? திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். எப்படி  அது மேலே வரமுடியும்? அதை நான் உள்ளே தூக்கிப்போட்டு மூடியது நன்றாகவே நினைவிருக்கிறது. அதை நான் வெளியே எடுக்கவே இல்லை.

என் உடம்பு வியர்த்துவிட்டது. கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன. எவரோ இங்கே இருக்கிறார்கள். கனவில் அல்ல, மெய்யாகவே. ஒரு பருப்பொருளை ஒரு பருவடிவ விசையால்தான் அசைக்க முடியும்.

எழுந்து வெளியே ஓடி கூடத்தில் சென்று நின்றேன். அங்கே அத்தனை பாடம் செய்யப்பட்ட விலங்குகளின் கண்களும் என்னை பார்த்தன. அவ்விழிகள் அனைத்துமே அசைந்தன.

திரும்பி மீண்டும் என் அறைக்கு வந்து படுக்கையில் அமர்ந்துகொண்டேன். நானே அந்த புத்தகத்தை எடுத்து மேலே வைத்திருக்கலாம். ஏனென்றால் நான் எழுந்து சென்று அதை படிப்பதுபோல ஒரு கனவு வந்தது. அது கனவல்ல, மெய்யாகவே நான் சென்றிருக்கலாம். ஆம், அவ்வாறுதான் நடந்தது.

பெருமூச்சுடன் படுத்துக்கொண்டேன். அந்தப் புத்தகம் அங்கே மேஜைமேல் இருந்தது. அதற்குள் அடைபட்டிருக்கும் ஆவிகளை நினைத்துக்கொண்டேன்.

நான் புத்தகத்தை மூடிவிட்டு எழுந்து வந்து இரவைப் பார்த்தபடி நின்றேன். அன்று அபூர்வமாக மழை இல்லை. காற்றுமட்டும் விசையுடன் ஒழுகிக்கொண்டிருந்தது. மேற்குச்சரிவில் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. நட்சத்திரமா விண்கோளா தெரியவில்லை. ஒளியுடன் இருந்தது. பின்னர் அது மறைந்தது. ஓசையே இல்லாமல் அங்கே முகில்கள் ஓடிக்கொண்டிருக்கலாம்.

நான் கண்களை கைகளால் அழுத்தி மூடிக்கொண்டேன். பின்னர் கசக்கிக் கசக்கி விடுவித்தேன். இந்த அறையில் இப்போது இருப்பவள் ஹெலெனாதான். என்றோ இங்கே வந்த வெள்ளைக்காரப்பெண். போலந்து நாட்டைச் சேர்ந்த முன்னோருக்கு பிறந்து பிரிட்டனில் குடியேறிய ரொட்டிக்காரனின் மகள். சீமாட்டியாக நடித்துச் சலித்தவள். அவளுடைய சொற்களால்தான் இப்போது நாவல் நிறைந்திருக்கிறது.

சட்டென்று மீண்டும் ஒரு மின்னல். போலந்துக்காரியா அவள்? எப்படி எனக்குத் தெரியும்? அதை எங்கே படித்தேன்? படித்த நினைவே இல்லை. ஆனால் அப்படி ஏன் தோன்றியது? தோன்றவில்லை, தெரிந்திருக்கிறது. ஒருவேளை இப்போது படித்த பகுதிகளில் அது இருந்ததா?

நான் அந்த புத்தகத்தை எடுத்துப் பிரித்தேன். ஹெலெனாவின் சொற்களாக அதிலுள்ள பகுதிகளைத் தேடினேன். அப்படி எந்த சொற்களும் இல்லை. அதன்பின் புன்னகை செய்தேன். அங்கே அவை இருக்குமென எப்படி எதிர்பார்த்தேன்?

மெல்லிய சலிப்புடன் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்தேன். ஈவ்லினாவுக்கு ரெவெரெண்ட் வில்லர்ஸ் எழுதிய கடிதம். Yes, my child, thy happiness is engraved in golden characters upon the tablets of my heart; and their impression is indelible: for, should the rude and deep-searching hand of Misfortune attempt to pluck them from their repository, the fleeting fabric of life would give way; and in tearing from my vitals the nourishment by which they are supported, she would but grasp at a shadow insensible to her touch.

உண்மையில் இங்கே தோன்றவேண்டிய பேய்வடிவம் இந்தப் போதகர்தான். இத்தனை நேர்த்தியான மொழியில், இத்தனை சீரான சொற்களுடன் பேசுபவர் எங்கோ சிடுக்குகள் கொண்டவர். உனது மகிழ்ச்சி என் உள்ளத்தின் பலகையில் பொன்னெழுத்துக்களால் செதுக்கப்பட்டிருக்கிறது. நான் புன்னகை செய்தேன். ஈவ்லினா அதே மொழியில் அவருக்கு பதிலளித்திருந்தாள். ALL is over, my dearest Sir; and the fate of your Evelina is decided! This morning, with fearful joy and trembling gratitude, she united herself for ever with the object of her dearest, her eternal affection.I have time for no more; the chaise now waits which is to conduct me to dear Berry Hill, and to the arms of the best of men.

நாவலின் முடிவு அது. நான் புத்தகத்தை மூடிவைத்தேன். இந்தப் புத்தகத்தை எத்தனை முறை மூடிவைத்திருப்பேன், எத்தனை முறை திறந்திருப்பேன். என் அருகே ஒர் இருப்பை உணர்ந்தேன். மென்மையான லவண்டரின் மணம். பட்டுத்துணி உரசும் ஓசை. நான் கண்களை மூடி அவற்றை தெளிவாக உணர்ந்தேன்.

பின்னர் கண்களை திறந்தேன். அறையின் ஒளியும், நிழலும் அப்படியேதான் இருந்தன. அறைமூலையில் கோரன் தூங்கிக் கொண்டிருந்தான். அமர்ந்து தூங்குபவர்கள் குறட்டை விடுவதில்லை. அவர்களின் மூச்சுக்குழல்கள் மடிவதில்லை. அறைக்குள் ஓசை ஏதுமில்லை. நான் கதவை மூடவில்லை. அதன் வழியாக காட்டின் குளிர்காற்று உள்ளே பெருகிக்கொண்டிருந்தது.

நான் அங்கே ஏதோ மாற்றத்தை உணர்ந்தேன். அதை எதிர்பார்த்திருந்தாலும் கூட, அது எவ்வண்ணம் நிகழுமென அறிந்திருந்தாலும்கூட அதை உணர கொஞ்சநேரம் ஆகியது. அது எனக்கு பின்னால் நின்ற ஒரு பெண்ணின் நிழல்.  நான் அனிச்சையாகப் பின்னால் திரும்பிப் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்கக்கூடாதென்று நன்கு அறிந்திருந்தேன். அங்கே எவருமிருக்க வாய்ப்பில்லை. சன்னல்வழியாக வந்த ஏதாவது நிழலாக அது மாறியிருக்கும்.

அவளே பேசுவதற்காக நான் காத்திருந்தேன். அவள் பேசவில்லை. நான் காத்திருந்தேன்.

நெடுநேரம், அந்த நிழல் அத்தனை துலக்கமாக தெரிந்தது. அது ஒரு சிறுமிப்பருவத்துப் பெண் என்று தெரியும் அளவுக்கு. பின்னர் மெல்லிய குரல் கேட்டது. “அந்த நாவல் முடியவில்லை.”

“அப்படியா?”

“ஆமாம், அது இன்னும் செல்கிறது…”

“ஆனால் அதுதான் கடைசிப்பக்கம்.”

“இல்லை, அந்தப்பக்கம் கடந்தும் செல்கிறது. திரும்ப அதைப்படி.”

நான் புத்தகத்தை நோக்கி கைநீட்டவில்லை. பிறகு “நீ இங்குதான் இருக்கிறாயா?” என்றேன்

“இங்கே இல்லை.”

“பிறகு.”

”இந்தப் புத்தகத்தில்.”

நான் “சரி” என்றேன். ”நீதான் முன்பும் இங்கு வந்ததா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“இங்கே என்ன நடந்தது? இந்த பங்களாவில்… ”

அவள் அங்கிருப்பதாகவே தெரியவில்லை

“இங்கே ஏதோ நடந்திருக்கிறது… இங்கே நடந்தவற்றைப் பற்றி ஒரு பேச்சு இருக்கிறது. நீ இங்கே வந்திருக்கிறாய்”

அதற்கும் எந்த எதிர்வினையும் இல்லை.

நான் திரும்பப்போய் என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். “நீ இந்த இடத்துடன் எப்படியோ பிணைக்கப்பட்டிருக்கிறாய்.”

எந்த எதிர்வினையும் இல்லை. நான் திரும்பிப் பார்த்தேன், நினைத்ததே தான். ஜன்னல்வழியாக ஏதோ மரக்கிளை நிழல் ஆடிக்கொண்டிருந்தது. வெளியே என்ன வெளிச்சம் என்று தெரியவில்லை.

நான் அந்த புத்தகத்தை எடுத்தேன். அதன் கடைசிப்பக்கத்தைப் பார்த்தேன். கதை முடியவில்லை. மேலும் பக்கங்கள் இருந்தன. ஆனால் எவரும் எவரிடமும் சொல்வதுபோல இல்லை. பக்கங்கள் அப்படியே ஆரம்பித்துச் சென்றுகொண்டிருந்தன. ஒரு நீண்ட தன்னுரை போல.

நான் அவர் உள்ளே வந்தபோதே எதிர்பார்த்தேன். அவருடைய கண்கள் மாறிவிட்டிருந்தன. என்னருகே வந்து நின்றபோது அவர் உடல் பதறிக்கொண்டிருந்தது. என்னை பிடிக்கப்போவதுபோல அவருடைய கைகள் முன்னால் சற்று நீண்டிருந்தன. அவர் என்னை கூர்ந்து பார்த்தார். சொற்களுக்காக அவருடைய உதடுகள் தவித்தன.

இங்கே நான் தோற்றுக்கொண்டிருக்கிறேன்” என்று அவர் சொன்னார். “என் சொற்கள் மதிப்பிழக்கின்றன. அவர்களின் வார்த்தைகளை சபை ஏற்றுக்கொள்கிறது.”

நான் அவரை வெறுமே பார்த்துக்கொண்டு நின்றேன்.

இந்த சபையை ரோம் வெறுக்கிறது. இந்த சபைகள் ரோமின் குடியரசை அழிக்கின்றன. நம் நீதியை ரத்தம் உறிஞ்சிக் குடிக்கின்றன. நான் இவற்றுக்கு எதிராக போரிடுவேன். உயிருள்ளவரை போரிடுவேன். விடமாட்டேன்” என்று அவர் சொன்னார் ‘ஆனால்…”

நான் அவரை விட்டு பார்வையை விலக்கவில்லை.

ஆனால். இன்று இந்த அவையில் அவர்கள் வென்றுவிடக்கூடும். உன்னை அவர்களின் அடிமை என்று சொல்கிறார்கள். சபை ஏற்றுக்கொண்டால் நீ அவர்களுடன் செல்லவேண்டும்”

நான் தலையசைத்தேன்.

சதி, அப்பட்டமான சதி… ”என்று அவர் கூவினார். “எல்லாமே சதி. நான் இங்கில்லாதபோது எல்லாவற்றையும் பொய்யாக அமைத்துவிட்டார்கள். ஆனால் இப்போது நான் ஒன்றும் செய்யமுடியாது. எனக்கு நேரமில்லை. உன்னிடம் ஒரு வார்த்தை கேட்டுக்கொள்கிறேன் என்று சொல்லி அனுமதி பெற்று உள்ளே வந்தேன்.”

நான் அவரை பார்த்த பார்வையை தாளாமல் அவர் கண்களை தழைத்தார்.

என்றும் என் அன்புக்குரியவள் நீ. என் மணிமுடியின் வைரம் என உனை வைத்திருந்தேன். என் கோயிலின் சோஃபியாவாக நீ இருந்தாய். உன் கலைத்திறனையும் கல்வித்திறனையும் எண்ணி நான் பெருமிதம் கொள்ளாத நாள் இல்லை. நான் உன்னைப்பற்றி பேசாத சபை இல்லை. ரோமின் தலைசிறந்த அரசகுடியினனின் மகளாக நீ ஆகவேண்டுமென நினைத்தேன்”

அவர் அந்த உணர்ச்சிகளைப் பற்றிக்கொண்டார். அது அவரை இயல்பாக இட்டுச்சென்றது.

உன்னை நான் கோயிலின் தெய்வச்சிலையாகவே பார்க்கிறேன். நீ மண்ணில் விழுந்து கிடப்பதை என்னால் தாளமுடியாது. உன்னை இந்த நாய்கள் தீண்ட அனுமதித்தால் நான் உன்மேல் கொண்ட பெரும் பக்தி பொய் என்றாகும். உன் கௌரவமே என் கௌரவம். நீ என் பதாகை. நீ ஒருகணமும் தழையக்கூடாது.”

அவர் சட்டென்று தன் வாளை உருவினார். அதே விசையில் என் கழுத்தை வெட்டினார். என் மூச்சும் குரலும் சேர்ந்தே வெட்டுபட்டன. ஆனால் அக்கணம் என் தலை துண்டாகி ஒரு தோல்பிடிப்பின் தொங்கி மறுபக்கம் இழுபட என் உடல் கைகால்கள் உதறிக்கொண்டு கீழே விழுந்து துள்ளித்துடிப்பதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் வாளை திருப்பித் திருப்பிப் பார்த்தார். கண்களில் பித்தும் உதடுகளில் ஒரு சுளிப்பும் இருந்தது. அவர் உருவிய வாளுடன் வெளியே சென்றார். என் உடல் அடங்கிக்கொண்டிருந்தது

அவருடைய வாளைக் கண்டு வெளியே நின்றிருந்தவர்கள் கூச்சலிட்டார்கள். முழக்கமென எழுந்த ஓசை வீனஸின் ஆலயத்தின் சுவர்களை முட்டிப் பெருகியது.

ஆம், நான் அவளைக் கொன்றுவிட்டேன். என் குடும்பத்தின் பெருமையை நிலைநாட்டிவிட்டேன்” என்று கூவியபடி என் வாளை உயர்த்தினார். எதிரில் நின்றிருந்தவர்கள் திகைத்துச் சொல்லிழந்தனர்.

அவரைச் சூழ்ந்து ஒலித்தகூச்சல்கள் நடுவே சென்று நான் அவர் காதில் சொன்னேன். ”நீங்கள் எப்போதும் ஆசைப்பட்டு வந்ததுதானே அது?”

அவர் திடுக்கிட்டு “யார்?”என்றார்.

நான்தான்” என்றேன்.

அவர் என்னைநோக்கி வாளை வீசினார். வாள் காற்றில் சுழன்றது. பைத்தியம்போல வாளை நான்குபக்கமும் சுழற்றியபடி “ஆமாம் நான் கொன்றேன் !நான் கொன்றேன்!” என்று அவர் கூச்சலிட்டார். அவருடைய உதவியாளன் அராமஸ் ஓடிவந்து அவரைப் பிடித்து நிறுத்தினான்.

நான் மீண்டும் அருகே அந்த நிழலைப் பார்த்தேன். புத்தகத்தை மூடிவைத்து விட்டு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“இந்தப்பகுதியை எழுதியது யார்?” என்றேன்.

அவள் “நான்”என்றாள்.

 “நீ யார்? ஈவ்லினா?”

அவள் ஒன்றும் சொல்லவில்லை.

“ஃப்ரான்ஸெஸ் பர்னியா?”

அதற்கும் பதில் எழவில்லை.

“இல்லை, ஹெலெனாவா?”

அவள் இல்லாதவள் போலிருந்தாள். நான் நிழலையே பார்த்துக் கொண்டிருந்தேன். சற்று சலிப்படைந்து கால்களை நீட்டிக்கொண்டேன்.

அப்போது அவள் குரல் என் காதில் மிக அருகே ஒலித்தது. “நான் விர்ஜீனியா.”

[மேலும்]

முந்தைய கட்டுரைசோஃபியின் உலகம்- கிறிஸ்டி
அடுத்த கட்டுரைஸாரி டாக்டர்!