[ 𝟙𝟘 ]
நான் கோதையாறுக்கு வந்தபோது அந்த சிறிய சாலைச்சந்திப்பே எனக்கு திகைப்பூட்டும்படி பரபரப்பானதாக இருப்பதைக் கண்டேன். அதைச் சாலைச்சந்திப்பு என்று சொல்லக்கூடாது. அன்று குலசேகரம்- கோதையாறு சாலை தார் போடப்படவில்லை. மண்போட்டு ஜல்லி கொட்டப்பட்ட எட்டடி அகலச் சாலைதான். அதிலும் புல்முளைத்து இரண்டு இணைகோடுகள்போல டயர்த்தடங்கள்தான் தெரியும். அந்தச்சாலை வழியாக வரும் பஸ் அங்கு நின்றிருக்கும் பெரிய இலஞ்சி மரத்தை சுற்றிக்கொண்டு திரும்பி நிற்கும். அதுதான் ‘ஜங்ஷன்.’
இலஞ்சிமரத்தைச் சுற்றி ஒரு சைக்கிள் வாடகைக்கு விடும் கடை, காப்ரியேல் நாடாரின் கடை, அருமைநாயகத்தின் டீக்கடை, சின்னச்சாமி நாடாரின் வெற்றிலைபாக்குக் கடை. சுட்டகிழங்கு விற்கும் சில கிழவிகள், காட்டில்பொறுக்கிய பழங்களையும் காய்களையும் விற்கும் காணிக்காரர்கள் என சிலபேர் அமர்ந்திருப்பார்கள். மின்ஊழியர் குவார்ட்டர்ஸில் அவர்களுக்கு மொத்தமாகவே மளிகை மாதிரி பொருட்களை குலசேகரத்திலிருந்து கொண்டு வந்துவிடுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு காப்ரியேல் நாடாரின் கடையில் எந்நேரமும் ஏதாவது வாங்குவதற்கு இருக்கும். குவார்ட்டர்ஸில் வாரம் இரண்டுமுறை டாக்டர் வருவார். அவர்களுக்கு பார்த்தபின் பிறரையும் கவனிப்பார். அன்று ஜங்ஷன் முழுக்க நோயாளிகள் நிறைந்திருப்பார்கள்.
ஆகவே பொதுவாக எந்நேரமும் அங்கே ஆளிருக்கும். பஸ்ஸுக்காக ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரமெல்லாம் முன்னாலேயே வந்து காத்திருப்பார்கள். மலைக்குடிகள் பஸ்ஸில் அபூர்வமாகவே ஏறுவார்கள். மலையில் குடியேறியவர்களுக்கும் அங்கே வந்தபின் நேரப்பிரக்ஞை இல்லாமலாகிவிடும். தோன்றியபோது வந்து பஸ் வரும்வரை நிற்பார்கள், அமர்ந்திருப்பார்கள், படுத்திருப்பார்கள். எல்லா கடைகளுமே காட்டுநிலத்தில்தான். ஆகவே இடம் பிரச்சினை இல்லை. கடைகளுக்கு முன்னால் ஐம்பது ஆள் நிற்கும்படி பெரிய பெரிய கொட்டகைகளாக போட்டிருந்தனர். மரத்தடியை இரண்டாகப் பிளந்து பெஞ்சாகப் போட்டிருந்தனர். அவற்றில் அமர்ந்திருப்பார்கள். கிழவிகள் படுத்திருப்பார்கள். எந்நேரமும் நாலைந்துபேர் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.
நான் முதலில் அங்கே வந்திறங்கியபோது அந்த இடம் ஆள்சந்தடியில்லாமல் கைவிடப்பட்டு கிடப்பதாக நினைத்தேன். ஆனால் மலைமேலேயே தங்கி அவ்வப்போது இறங்கி வரத்தொடங்கியபோது அந்த இடம் பரபரப்பானதாக தோன்றியது. அங்கே வரும்போது தூரத்திலேயே அந்த இடத்தின் ஆளசைவுகளும் குரல்களும் கேட்டு இனிய உணர்வொன்றை அடைவேன். ஒரு டீ குடித்து சில பொருட்களை வாங்கியதுமே ஒரு விடுதலைநிலை ஏற்படும். அங்கே நின்று சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். திரும்பவேண்டும், மழைவந்துவிடும் என்ற எண்ணம் உள்ளிருந்து வந்து உசுப்பும். அதன் பின்னரும் அரைமணிநேரம் ஆகிவிடும்.
ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வு மறைந்து அங்கே நிற்க ஆரம்பித்ததுமே சிறிய பதற்றம் ஏற்படலாயிற்று. ஒலிகள் திடுக்கிட வைத்தன. குறிப்பாக ஆரன் ஒலிகள். கார்கள் செல்லும் ஒலி தலைக்குமேல் என ஒலித்தது. ஒருமுறை குலசேகரம் பஸ் சுற்றித்திரும்பி பின்னாலும் முன்னாலும் அசைந்து ஊர்ந்து இறுதியாக சீறலோசையுடன் நின்றபோது ஓசை தாளமுடியாமல் எனக்கு வாந்தி வந்தது. அதேபோல வண்ணங்கள். காட்டில் எவரும் அடர்வண்ணங்களில் ஆடை அணிவதில்லை. ஒருவன் ரத்தச்சிவப்புச் சட்டையுடன் பஸ்ஸில் இருந்து இறங்கினான். என் கண்ணுக்குள் மின்னலடித்தது போலிருந்தது.
என்னைப் போலவே காணிக்காரர்களும் ஒவ்வொரு ஆரன் ஒலிக்கும் திடுக்கிடுகிறார்கள் என்பதை உணந்தேன். ஒலி என்பது அத்தனை நுட்பமானது அவர்களுக்கு எல்லா ஒலிகளையும் அவர்கள் கவனிக்கிறார்கள். அவர்களை விட அவர்களின் ஆழ்மனம் கவனிக்கிறது. அவர்களின் காதுகள் மட்டுமல்ல உடலின் தோல்பரப்பே கவனிக்கிறது. கண்கள் எல்லா அசைவுகளையும் வண்ணங்களையும் கவனித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாகரீக உலகம் ஓசைகளையும், வண்ணங்களையும் அள்ளி சிதறடிக்கிறது. அங்கே காதுகளும் கண்களும் பதற்றமடைந்துவிடுகின்றன.
நான் காப்ரியேல் நாடாரைப் பார்த்துவிட்டு உடனே திரும்பிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். நான் மலைக்கு வந்து இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள்ளாகவே எனக்கு நானிருக்கும் இடம் என் இயல்பான இடமாக ஆகிவிட்டிருந்தது, பிற எல்லாமே அன்னிய நிலங்கள். என் ஊர், என் வீடு எல்லாம் எங்கோ நினைவின் ஆழத்தில் இருந்தன. காட்டுக்கு வந்தவர்களில் சிலர் உடனே ஓடிவிடுவார்கள், சிலர் திரும்பவே மாட்டார்கள் என்று எஞ்சீனியர் ராஜப்பன் சொன்னார். அது உண்மைதான்.
காப்ரியேல் நாடாரிடம் ஒரு பிளாஸ்டிக் வாளி, ஒரு பிளாஸ்டிக் குடம் ஆகியவற்றுக்குச் சொல்லியிருந்தேன். அவை வந்திருந்தன. மேலும் பல சிறு பொருட்கள். தீப்பெட்டி, மெழுகுவத்தி. மளிகைப் பொருட்கள் இருந்தன, பட்டியல் கொடுத்தால் அவரே கழுதையில் கொடுத்து அனுப்புவார். அவர் ஒரு கரும்பலகை செய்து தருவதாக ஒப்புக்கொண்டிருந்தார். சாதாரணப் பலகையில் கருப்பு தார்ப்பெயிண்ட் அடித்தாலே போதும். மின்னுற்பத்தி நிலையத்தில் பிளைவுட் கிடைக்கும். அங்கே கருப்புப் பெயிண்ட் தாராளமாக பயன்படுத்தப்பட்டது. பெரும்பலான இரும்புப் பொருட்களுக்கு அவர்கள் கருப்பு பெயிண்ட்தான் பூசியிருந்தனர். அப்பொருட்கள் ஓயாத மழையில் துருப்பிடிப்பதை தடுக்கும். அதைவிட யானைகளின் எரிச்சலில் இருந்து அவற்றை பாதுகாக்கும்.
பெயிண்ட் உலர்ந்து கரும்பலகை தயாராக இருந்தது. எடையும் இல்லை. நான் காப்ரியேல் நாடாரிடம் அதற்கான பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லாவற்றுக்கும் ரசீது வாங்கிக் கொண்டேன். அந்த ரசீதுகளை பாலிதீன் தாளில் பொதிந்து சட்டைப்பையில் வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த வயதான காக்கிக் கால்சட்டைக்காரர் என்னிடம் “சார் மேலே வாத்தியாரா?” என்றார்.
“ஆமா” என்றேன்.
“அது என்னது போர்டா?”
“ஆமா” என்றேன் “பிள்ளையளுக்குச் சொல்லிக்குடுக்கணும்லா?”
“அது எதுக்கு அதுகளுக்கு? அதுக பாட்டுக்கு அங்கிண சந்தோசமாத்தானே கிடக்குதுக?”
“தெரியல்ல, நமக்கு இதுக்காக்கும் சம்பளம். நம்ம வேலையை நாம செய்யணும்லா?”
“அது செரியாக்கும்… இங்கிண வாறவனுகளிலே அப்டி வேலை செய்யணும்னு நினைக்கப்பட்டவன் கொஞ்ச பேருதான்…” என்றார்.
நான் புன்னகை செய்தேன்.
“நமக்க பேரு ஏசுவடியான்… இங்கிணதான், மஞ்சமலை” என்றார்.
நான் “சந்தோசம்” என்றேன்.
”அங்க மேலே வங்களாவிலேயா தாமசம்?” என்றார்.
“ஆமா.”
”நல்ல உறப்புள்ள கட்டிடமாக்கும்.”
அவர் ஏதாவது தப்பாகச் சொல்வார் என நான் எதிர்பார்த்தேன். அங்கே பேய் இருப்பதாக. பழைய பங்களாக்கள் அனைத்தைப் பற்றியும் அப்படித்தானே கதைகளில் சொல்லப்படுகிறது.
ஆனால் அவர் “பலபேரு அங்க தங்கினதுண்டு… பண்டு சத்யன் நடிச்ச ஒரு சினிமா எடுத்தப்ப அங்கிணதான் எல்லாரும் தங்கினாக… நல்ல படமாக்கும்… ஆனா நெறமில்லாப் படம்” என்றார். நினைவுகூர்ந்து “படம்பேரு ஞாபகமில்லை. நல்ல படமாக்கும். செத்திருவாரு, நான் கொலசேகரத்திலே பாத்தேன்” என்றார்.
“அத கட்டினது ஆராக்கும்?” என்றேன்.
“அத கெட்டினது வெள்ளக்காரன்லா?”
“ஆமா, அது ஆராக்கும்?”
“அது நமக்கு செரியாத் தெரியாது… நம்ம அப்பன் இங்க தோட்டத்திலே வாச்மேனாட்டு இருந்தாரு. அவருக்க அப்பனுக்க அப்பன், அதாகப்பட்டது நம்ம கொள்ளுத்தாத்தா அதே எஸ்டேட்டிலே இருந்தாரு… அடுக்களைச் சோலி. நாங்க மாடு திங்குத கூட்டம். மாடுதிங்கிறவனைத்தான் வெள்ளக்காரன் அடுக்களைச் சோலிக்கு வச்சுக்கிடுவான். ஆனா துலுக்கனாலே இந்த மலைக்காட்டிலே இருந்துகிட முடியாது. அதனாலே நம்ம ஆளுகதான்…” என்றார்.
“நெறையபேரு வந்திகளோ?” என்றேன்.
“அன்னைக்குள்ள காலமில்லா? மூணுவேளை முட்ட சோறு கிட்டுமானா அதுல்லா நம்மாளுகளுக்கு சொர்க்கம்? ஒருத்தன் வேணும்னு கேட்டா ஒம்பதாளு வந்து நிப்பாங்க… பேச்சிப்பாறை அணைய கெட்டினது முளுக்க எங்காளுகளாக்கும். இந்தா இந்த கோதையாறு சானலு கெட்டினதும் எங்காளுகதான்…” என்றார் ஏசுவடியான். “அதொரு பெரிய கதை… ஆனா எங்க கொள்ளு தாத்தா இங்கிண வந்தப்ப இங்க ஆருமில்லை. கொடுங்காடு. ராப்பகல் மழை. இப்பல்லாம் என்னத்த மழை? இது எல்லாம் மழையா? நான் சின்ன வயசிலே பாத்திருக்கேன் அது மழை. மழை தொடங்கினா ஒரு மாசம் அப்டியே மழையாக்கும்… இப்ப அந்த மழையெல்லாம் இல்ல. வானம் காஞ்சுபோச்சு… என்ன சொல்லிட்டு வந்தேன்?”
”உங்க கொள்ளுத்தாத்தா…”
”ஆமா, அவருக்க பேரு மூக்கன். அவருக்க பதினேளு வயசிலே துரைக்க கூட வந்தாரு. அவருக்க அப்பா திருவனந்தபுரம் பாங்ஙோட்டிலே பட்டாளத்திலே குக்கா இருந்தாரு. அவருக்கு கறுத்தான்னு பேரு. அவரு அப்பமே நல்லா வெள்ளை சட்டைபோட்டு காக்கி கால்சட்டைபோட்டு தோல்பெல்டு கெட்டி கைக்கு உறையும்போட்டு கெம்பீரமாட்டு இருப்பாரு. அவரு துரைகூட நிக்கப்பட்ட ஒரு போட்டோ இருக்கு. கறுத்தானுக்கு எட்டு பிள்ளைக. மூத்தவரு நம்ம கொள்ளுத்தாத்தா மூக்கன்.”
அவர் விரிவாகப்பேசும் ஆர்வம் கொண்டவராகத் தெரிந்தார். “அப்பமாக்கும் இங்க இந்த எஸ்டேட்டை வெட்டி உண்டாக்கிட்டிருந்த வெள்ளக்காரத்துரை பாங்ஙோட்டிலே இருந்த ஒரு வெள்ளைக்காரப் பட்டாளத்துத் துரைகிட்டே சமையலுக்கும் எடுபிடிக்கும் ஆளுவேணும்னு கேட்டிருக்காரு. அவரு கறுத்தானைக் கூப்பிட்டு சொல்ல அவரு தனக்க பையன அனுப்பிப்போட்டாரு. அப்டியாக்கும் நம்ம கொள்ளுத்தாத்தா கறுத்தான் இங்கிண வந்தது. வெள்ளைக்காரன் கிட்ட அரிவைப்பும் மற்றுமா சேந்துகிட்டாரு. ரொட்டி சுடுவாரு, காட்டிலே பழம்பறிச்சு வைச்சு ஒயினு கூட செய்வாரு. அப்டிப்பட்ட கைமணம்” என்றார். “நான் என்ன சொன்னேன்?”
“உங்க கொள்ளுத்தாத்தா துரைகூட வந்தாரு.”
“ஆமா, அந்த துரையாக்கும் மேலே இருக்கப்பட்ட வங்களாவ கெட்டினது. கெட்டி எரநூறு வருசமாச்சு. அதாவது இங்கிலீசு வருசம் ஆயிரத்தி எழுநூற்றி எழுவதிலே கெட்டின பங்களா அது. கொல்ல வருசக்கணக்க இங்கிலீசு கணக்குக்கு மாத்தியாக்கும் நான் சொல்லுறது. கொல்லவருசம் தொள்ளாயிரத்தி நாப்பத்தஞ்சு. தர்மராஜாவாகப்பட்ட கார்த்திகத் திருநாள் ராமவர்ம மகாராஜா பொன்னுதம்புரான் உடையது எழுந்தருளி ராஜ்யபாரம் செய்யுற காலம். இப்ப மாதிரி இல்ல. மகாராஜா கல்பிச்சு வெளியே வந்து வானத்தைப் பாத்து பெய்யுன்னு சொன்னா மழை அப்ப பெய்யும்…. ஸ்ரீபத்மநாபான்னு ஒரு விளி விளிச்சா பத்மநாபனுக்க கருவறையிலே எந்தோன்னு மறுவிளி கேக்கும்…. அந்த காலம் இப்ப இல்ல. அது போட்டு. நான் என்ன சொல்லிட்டிருந்தேன்?”
“அப்ப உண்டுபண்ணின எஸ்டேட்டாக்கும்.”
“ஆமா அப்ப அந்த வெள்ளக்காரத்துரைக்கு இந்த காட்டை மகாராஜா குடுத்தாரு. அவன் நூறு ஆளை ஊரிலே இருந்து ஆளுக்கொரு வெள்ளிச்சக்கரம் முன்பணம் குடுத்து கூட்டிட்டு மேலே வந்தான். அவன் குதிரையிலே வந்தான். கழுதையிலே அவனுக்க பெட்டியும் சாமானும் வந்திச்சு. அவனுக இங்கிண கூடாரம் கெட்டி தங்கி காட்டை திருத்தினானுக” என்றார் ஏசுவடியான். “முதல்ல கெட்டினது எஸ்டேட்டு வங்களா. அது நல்ல இரும்பு மாதிரி உள்ள தேக்குமரங்களை வெட்டி வைச்சு கட்டினது. இப்பமும் உருக்கு மாதிரி நின்னிட்டிருக்கு. பிறவு பத்து வருசம் கழிஞ்சு கெட்டினதாக்கும் அக்கரை பங்களா. அது வேட்டைக்குப் போறப்ப தங்குறதுக்கு கெட்டினது.”
“அங்க ஒரு பாறை இருந்தது. அதை வெட்டி உடைச்சு அங்கிணயே கட்டின வங்களாவாக்கும்” என்று அவர் சொன்னார் “பழைய வெள்ளக்காரன் காலத்திலே அங்க எப்பவும் ஆளிருக்கும். வானம் உடைஞ்சு மழை பெய்யுறப்பக்கூட நனையாச்சட்டை போட்டுக்கிட்டு துப்பாக்கிய தூக்கிட்டு வேட்டைக்கு போவானுக. இறைச்சியை அவனுக கொஞ்சம் திம்பானுக. மிச்சத்த அப்டியே காட்டிலேயே விட்டிட்டுப் போவானுக. கொல்லுறதிலேயாக்கும் அவனுகளுக்க சந்தோசம். அசுரகணம்லா? வேட்டை வங்களான்னாக்கும் அந்தக்கால பேரு. இந்தப்பக்கம் கரண்டாப்பீஸ் வந்தப்ப அது அக்கரை வங்களாவா ஆயாச்சு… செரி, அதுவும் காலத்துக்க கோலம்…”
நான் அவரிடம் “அதை கெட்டின வெள்ளக்காரன் பேரு ஜெரால்ட் அட்கின்ஸன்னாக்குமா?” என்றேன்.
“ஜெரால்டா? அது நம்ம ஜார்ஜுக்க பய பேருல்லா?”
காப்ரியேல் ஆர்வமாக, “ஆமா, அத கெட்டின வெள்ளக்காரன் பேரு அப்டித்தான். இங்க ஆரோ சொல்லி கேட்டிருக்கேன்” என்றார். “ஆமா, யாவுகம் வருது. முன்னாலே இங்க காமராஜ் அப்பச்சி வந்தப்ப ஒருத்தன் பிரசங்கம் பண்ணினான். அப்ப சொன்னான். ஜெரால்டு. ஏன்னா அப்பம் இந்த ஜார்ஜுக்க பய சின்னப்பிள்ளை. அதைக்கேட்டுத்தான் அவனுக்கு பேரு விட்டது.”
நான் “ஜெரால்ட் அட்கின்ஸன்” என்றேன். “அந்த மறுகரை எஸ்டேட்டுக்கு அட்கின்ஸ்டன் எஸ்டேட்டுன்னா பேரு?”
”அது மேக்காலை எஸ்டேட்டுன்னு பேரு இல்ல… இப்பம் அங்க முளுக்க ரெப்பராக்கும்.”
“அட்கின்ஸன் எஸ்டேட்டுன்னு சொல்லுறதுண்டா?”
“இல்ல, நானறிய இல்ல” என்றார்.
காப்ரியெல் நாடார் “அத ஆட்டுக்காரன் எஸ்டேட்டுன்னு சொல்லுகதுண்டு. அதுக்கும் ஆட்டுக்கும் ஒரு எணக்கமும் இல்ல. ஆட்கின்ஸன்னு பேர அப்டி மாத்தியிருப்பானுகளோ?” என்றார்.
நான் மெல்லிய மூச்சுத்திணறலை உணர்ந்தேன். இன்னும் ஒரு கேள்விதான் நான் கேட்கவேண்டும். அதை கூடுமானவரை இயல்பாகக் கேட்க என்னை தயார்ப்படுத்திக் கொண்டேன். மூச்சை இழுத்து விட்டேன். “கொலசேகரம் பஸ் எப்ப வரும்?” என்றேன்.
“பஸ்ஸிலே போறியளா? மலைக்கு போறீகன்னு சொன்னிய?” என்றார் காப்ரியேல் நாடார்.
“மலைக்குத்தான். பஸ் வந்தா லெட்டர் இருக்கான்னு பாக்கலாம்…” என்றேன்
”குலசேகரத்திலே இருந்து குடுத்தனுப்பின லெட்டரா? ரொம்ப அத்தியாவசியமா?” என்றார் நாடார்.
“இல்ல அப்டி ஒண்ணும் அவசியமானது இல்ல” என்றேன். சாதாரணமாக குரலை வைத்துக்கொண்டு, வேறெங்கோ பார்த்தபடி “அங்க பங்களாவிலே சாவு நடந்திட்டுண்டா?” என்று கேட்டேன்.
“சாவா? சாவு பலதும் உண்டு. பழைய வாத்தியாரு ஆனை சவிட்டி செத்தாரு. அதுக்கு முன்ன உள்ளவரு பாம்பு கடிச்சுல்லா செத்தாரு? ஒரு எஞ்சீனியரு நெஞ்சடைச்சு செத்தாரு. மூங்கிலிலே கெட்டித் தூக்கியாக்கும் கொண்டு வந்தாக” என்றார் ஏசுவடியான்.
”முன்ன, வெள்ளக்காரங்க காலத்திலே?” என்றேன்.
“அதும் பல சாவுண்டு… ஆனை சவிட்டி நாலஞ்சு வெள்ளக்காரனுக செத்திருக்கானுக. வெள்ளைக்காரன் கூட வேட்டைக்குப் போறவன் சாவுறது எப்பவுமே உள்ளதாக்கும் ஏன்னா வெள்ளக்காரன் துப்பாக்கியோட போவான், இவன் துப்பாக்கி இல்லாம போவான்… வெள்ளக்காரன் ஒரு நல்ல எடத்திலே நின்னுக்கிட்டு இவன்கிட்டே ஆனையை துரத்திவிடச் சொல்லுவான். ஆனை கலைஞ்சு வெள்ளைக்காரனை பாத்து போறப்ப அவன் சுடுவான். ஒரு யானை விளும். மத்த யானைகள் கலைஞ்சு திரும்பி விரட்டினவனுகளைப் பாத்து வரும். சவிட்டி அரைச்சுக்கிட்டு அந்தாலே போவும்… ஆனைவேட்டை உண்டோ ஆளுபலியும் உண்டு… அது ஒரு வளக்கமாக்கும்” என்றார் ஏசுவடியான்.
“வேட்டைக்கு போனவனுக செத்ததுண்டா?” என்று நான் கேட்டேன். நேரடியாகவே கேட்டுவிடலாமா? ஆனால் அவர்களே சொல்லக்கூடும்.
”பலபேரு… அப்பல்லாம் சாவுக்கு ஒரு மதிப்பில்லே… யுத்தம் நடக்குத காலம். வாளோ தோக்கோ இல்லாத ஆளில்லை. இப்ப நம்ம ஆருக்க கையிலே ஆயுதமிருக்கு? பண்டு இப்டி ஆயுதமில்லாம வருவோமா?” என்றார் ஏசுவடியான்.
நான் மேற்கொண்டு என்ன கேட்பது என்று தெரியாமல் நின்றிருந்தேன். திரும்பி விடலாமென்று தோன்றியது. ஆனால் அதேபோன்ற தருணங்களில் ஏதோ ஒன்று மேலும் வரும் என் நம் அகம் அறிந்திருக்கிறது, அதற்காக எதிர்பார்க்கிறது.
ஆனால் ஒன்றும் நிகழவில்லை. நான் கோரனிடம் போர்டை எடுத்துக்கொள்ளச் சொல்லி கைகாட்டினேன். கோரன் போர்டை எடுத்துக்கொண்டான்.
நான் கிழவரிடம் “பாட்டா என்ன செய்யுதீரு?” என்றேன்.
“அவரு இருக்குற கோலத்தை வச்சு வல்லதும் நினைச்சுக்கிடாதீரு… அவரு எஸ்டேட்டு ஓனராக்கும். எம்பத்தஞ்சு ஏக்கர் ரப்பர் இருக்கு. நாலு லாரி ஓடுது. அவருக்க நாலு மக்களும் இந்த ஏரியாவிலே பெரிய காண்டிராக்டர்மாரு. பேரப்பிள்ளைக குலசேகரத்திலே டாக்டரும் மற்றுமா இருக்காங்க… அவருக்கு இங்க சர்ச்சிலே டீக்கனாரு போஸ்டும் உண்டு” என்றார் காபிரியேல் நாடார்.
“அப்டியா? பாட்டாவுக்கு வயசென்ன ஆச்சு?”
“அதாச்சு பிள்ளே, எம்பத்தேளு…” என்றார் ஏசுவடியான்.
அவர் தொப்பையே இல்லாமல் இறுகிய உடலுடன் இருந்தார். நான் “பாத்தா அறுவது மாதிரி இருக்கீய” என்றேன்.
“அது நம்ம அப்பனம்மைமாருக்க சுகிர்தமில்லா?” என்றார் கிழவர். “அதுக்குமேலே நாம சவைச்சரைச்சு தின்ன கறிக்க சக்தி… பதினெட்டு தடவை சவைச்சு தின்ன கறி நேரா உசிராட்டு மாறி உடம்பிலே நின்னிரும் பாத்துக்கிடுங்க.”
நான் புன்னகைசெய்தேன்.
காப்ரியேல் சட்டென்று “அங்க ரெட்டப்பாறைக்கு அந்தாலேதானே பண்டு ஒரு வெள்ளக்காரக் கிளவனை புலி அடிச்சுப்போட்டுது” என்றார். ”ஒருக்கா சொன்னீருல்லா ஓய்?”
”அது பளைய கதைல்லா?” என்றார் கிழவர்.
“பண்டுன்னா?” என்றேன். என் உள்ளம் பதறிவிட்டது. அது என் கட்டுப்பாட்டை மீறி முகத்திலும் உடலிலும் வெளிப்பட்டது.
“பண்டுன்னா, அது நம்ம கொள்ளுத்தாத்தா காலத்திலேயாக்கும். தாத்தா சொல்லி அப்பன் சொல்லி அறிஞ்ச கதை. நல்ல பெரிய உத்யோகத்திலே இருக்கப்பட்ட கிளவன்… பட்டாளத்துக்காரனாக்கும். வேட்டைக்கு வந்த எடத்திலே புலி கொண்டு போச்சுது. அந்தாளுக்க மிச்சம் மீதி உண்டான்னு தேடி உள்ள காணிக்காரனுகளை எல்லாம் கூட்டிட்டு காட்டுக்குள்ள வலை போட்டு தேடினாங்க. கடைசியிலே அவருக்க சட்டையிலே கொஞ்சமும் தொப்பியும்தான் கிட்டிச்சுது. ஆனால் முத்திரை கிட்டிப்போச்சு. அது போரும், ஆளு செத்தாச்சுன்னு மேலே ரிப்போர்ட் அடிக்கணும்லா? பாவம் துரைக்க நாலஞ்சு நக்கி வெளுப்பிச்ச எலும்பும் கிட்டியிருக்கு. அதையெல்லாம் இங்க கொண்டுவந்து வச்சாங்க. பாங்கோட்டிலே இருந்து பட்டாளம் வந்து சல்யூட்டு அடிச்சு கவாத்து சவிட்டி நடந்து அதை பெட்டியிலே ஆக்கி கொண்டு போனாங்க. பீகிள் ஊத்தும் பறங்கிமுரசும் உண்டு…”
”ஓ” என்றேன்.
“பெரிய உத்தியோகஸ்தனாக்கும்… மகாராஜாவே நேரிலே வந்தாக்கும் அவருக்கு சடங்கு செய்திருக்காரு…”
நான் பெருமூச்சுவிட்டேன். “எப்டி நடந்தது சம்பவம்?” என்றேன்.
”அது நமக்கு தெரியாது… பழைய கதைல்லா? நம்ம தாத்தா சொல்லுகதுண்டு அவரு சின்ன நாளிலே காட்டுக்குள்ளே ஒரு வெள்ளைக்காரக் கிளவர் சிவப்பு கம்பிளி சட்டையும் உசரமான சப்பாத்தும் போட்டு பெல்டு கட்டிக்கிட்டு போறத பாத்ததுண்டுன்னு…. அதை வைச்சாக்கும் நான் சொன்னது”
”அவரையா பாத்திருக்காரு?”
“அதெல்லாம் அந்தக்காலம். அப்ப காட்டிலே பேயும் பிசாசும் நெறைய உண்டு… மலைவாதைகள் உண்டு. புலியடிச்சும் ஆனையடிச்சும் செத்தவனுகளுக்க ஆவிகள் அலைஞ்சுக்கிட்டிருக்கும். அப்பவாக்கும் கரண்டு வந்தது. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவும் வந்தாரு. பிள்ளே இந்த கரண்டுன்னா என்ன? அது ஏசுவுக்க அக்கினியாக்கும். இப்ப கரண்டு கம்பி பக்கத்திலே நில்லுங்க. என்ன கேக்குது? இல்ல, என்ன கேக்குது? ஏசுவுக்க சங்கீதம்லா? நாங்க சர்ச்சிலே பாடுத பாட்டுல்லா கேக்குது? மெய்யான ஆண்டவரு வந்தப்ப பேயும் பிசாசும் மலைவாதையும் எல்லாம் போச்சு… உம்மாணை பிள்ளே, நான் இந்த எம்பது வருசத்திலே ஒரு பேயையும் பாத்ததில்லை, வாதையையும் பாத்ததில்லை. நான் அலையாத மலைமடக்கு இல்லை. உறங்காத குகை இல்லை… செரி, நம்ம களுத்திலே கர்த்தாவாகிய ஏசுவுக்க சிலுவையில்லா கிடக்குது.”
கோரன் அங்கே நின்று அசைந்தான். அவன் தலையில் கரும்பலகை இருந்தது.
“செரி நான் போறேன்” என்றேன். “அந்த வெள்ளைக்காரனைப் பற்றி வேற எதாவது கேட்டதுண்டா?”என்றேன்
“அதைப்பற்றி கேக்கணுமானா இனிமே திருவனந்தபுரத்துக்குத்தான் போகணும்” என்றார் காப்ரியேல் நாடார். ”ஆயிரத்தி தொள்ளாயிரத்தில் இருபத்தாறிலேயே எஸ்டேட்டை திருவிதாங்கூர் சர்க்காரு ஏற்றெடுத்துப் போட்டுது. டாக்குமெண்டெல்லாம் திருவனந்தபுரத்துக்குப் போயிட்டுது… அங்க போனா தெரியும்… பாங்கோட்டிலே பண்டு வெள்ளக்கார பட்டாளம் இருந்தது. இப்ப இந்தியா ராஜ்ஜியத்துக்க பட்டாளமாக்கும் அங்க. அங்க ஒண்ணும் தெரிஞ்சுகிட முடியாது. மகாராஜாவுக்க கொட்டாரத்துக்கு போனா தெரிஞ்சுகிடலாம்” புன்னகைத்து “என்னத்துக்கு கேக்குதிய? பேப்பரிலே கதை எளுதப்போறியளா?”
”இல்ல, சும்மா கேட்டேன்” என்றேன்.
காப்ரியேல் நாடார் “கேட்டா நெறைய கதைகள் இங்க உண்டு. ஒரு உலகம் உண்டாகி வந்திருக்குல்லா? இந்தா இதைச்சுத்தி இப்பம் நாப்பது நாப்பத்தஞ்சு ஊரு ஆயாச்சு. எல்லா ஊரும் இந்த நூறு வருசத்திலே உண்டாகி வந்ததாக்கும்” என்றார்.
“ஆமா” என்று நான் சொன்னேன்.
“ஒண்ணொண்ணா தெரிஞ்சுகிடுங்க. பள்ளி வாத்தியில்லா? நாலஞ்சு கதகளை எளுதி விடுங்க. நம்ம எடம் பேமஸ் ஆகட்டு. நமக்கு நாலஞ்சு ஏவாரம் கிட்டுமே.”
“பாப்போம்” என்று புன்னகை செய்தேன்.
“அந்த ஆப்பீசரு செத்தாருல்லா, அவருகூட பலபேரு செத்திருக்கானுக. அப்ப ஒரு வெள்ளக்காரியும் வந்திருக்கா. அவளும் செத்துட்டான்னும் கதை.”
நான் இம்முறை நடுங்கிவிட்டேன். என் முகமே அதைக் காட்டியது. “செத்துட்டாள்னா?” என்றேன்.
“ஒரு குட்டி வந்தா, செத்துட்டா. சாகல்ல, அப்டியே காட்டுக்குள்ள காணாம போயிட்டாள்னும் கதை உண்டு. அதுக்குமேலே ஆருக்கும் தெரியாது. தெரிஞ்சவனுக ஆரும் இங்க இப்ப இல்ல…” என்றார் காப்ரியேல் நாடார்.
“அவரு சொல்லுகது உள்ளதாக்கும். அந்த வெள்ளக்காரி காட்டுக்குள்ளே போயி மறைஞ்சிட்டா. பிள்ளே, இந்த காடுன்னா என்ன? கரகாணா கடலாக்கும். ஆழம்காணா கயமாக்கும். அப்டி எத்தனபேரு உள்ள போயி மறைஞ்சிருக்காங்க. பண்டு ராஜாக்கமாரு வயசானா ராஜ்யத்தை பிள்ளைக கையிலே குடுத்துட்டு அப்டியே வந்து காட்டிலே முங்கித் தாழ்ந்து போயிருவாங்க… அங்க அவங்களுக்க பூர்விகர்களான ராஜாக்களெல்லாம் வந்து நின்னு கூட்டிட்டு போவாங்க… அதெல்லாம் இப்ப உண்டா? அது புண்ணியபுருசங்க ஆட்சி பண்ணின காலம்லா? காமராஜு செத்ததோட எல்லாம் போச்சு… சல்லிப்பயக்களுக்க காலம் வந்தாச்சு.”
நான் பெருமூச்சுவிட்டேன்.
“சார் பயந்துபோட்டாரு. சார், அப்டி வெள்ளக்காரி வந்திருந்தா அவ எஸ்டேட்டிலே தங்கியிருப்பா. இங்க வேட்டைக்கு எதுக்கு வாறா” என்றார் காபிரியேல் நாடார் “வே, வாய வைச்சுகிட்டு சும்மா இரும்வே. அவரு எளம் வயசாக்கும். பயந்துட்டாருன்னா?”
“பயந்தா ஒரு அருமருந்து உண்டு. கர்த்தாவாகிய ஏசுகிறிஸ்துவுக்கு ஸ்தோத்திரம். அம்பிடுதான். ஒரு பயம் அடுக்காது. அனுபவ மருந்தாக்கும்.”
நான் புன்னகைத்தபின் தலையசைப்பான விடைபெற்றுக்கொண்டேன்.
நாங்கள் மீண்டும் மலை ஏறினோம். கோரன் “ஆனைப்பலகை. ஆனா கனமில்லை” என்றான்.
அவன் என்ன சொல்கிறான் என்று அதன்பிறகுதான் புரிந்தது. கரும்பலகைக்கு யானைப்பலகை என்று பெயர்போட்டுவிட்டான். இனி மலையில் அந்தப்பெயர்தான் புழங்கப்போகிறது.
மழை வருவதற்கான வெக்கை காட்டுக்குள் நிறைந்திருந்தது. இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகளின் அடித்தாடைகள் தவிதவித்தன. அவற்றின் கண்களில் தாகம் தெரிந்தது. பறவைகளின் குரல்களும் அழுந்தி ஒலித்தன.
நான் வியர்வையில் நனைந்தபடி மூச்சுவாங்க நடந்தேன். கோரன் தோளில் ஒரு மூட்டையும் தலையில் பலகையுமாக இயல்பாக வேடிக்கை பார்த்தபடி நடந்தான். அவர்களின் நுரையீரல்கள் பெரியவை. இதயங்கள் ஆற்றல்மிக்கவை.
வீட்டை சற்று தொலைவில் இருந்தே பார்த்தேன். நான் எண்ணியதெல்லாம் சரிதான். அங்கே இருக்கிறவள் அவள்தான். ஹெலெனா. அவளேதான். வீட்டுக்குச் செல்லத்தான் வேண்டுமா?
ஆனால் மறுகணம் தோன்றியது, நானே சொன்ன வார்த்தைகள்தான். இருநூறாண்டுகள் தனிமையில் இருப்பவள். அவளுக்கும் வேறு எவருமில்லை. பிறந்த நாட்டிலிருந்து ஆறாயிரம் மைல்களுக்கு இப்பால் அந்நியநிலம், அறியாத மனிதர்கள்.
நான் பெருமூச்சுடன் நடந்தேன். கோரன் “வீடு உறங்கிட்டிருக்கு” என்றான்.
”ஆமாம்” என்றேன். “இப்ப முழிச்சிரும் பாத்துக்கோ.”
அங்கே துப்பன் ஒரு மரத்தடியில் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவன் என்னைப் பார்த்ததும் பெரிய பற்கள் தெரிய சிரித்தபடி ஓடிவந்து, உடல் துள்ளித்தவிக்க, தரையில் ஒரு குச்சியால் அ வரைந்தான். “அ” என்றான். வாயை அகலத்திறந்து “அ!” என்றான்.
அவன் அந்த எழுத்தை பயின்றிருக்கிறான் என்று தெரிந்தது. அனேகமாக வேட்டைக்கெல்லாம் சென்றிருக்க வாய்ப்பில்லை. இரவுபகலாக பயிற்சி எடுத்திருக்கவேண்டும்.
கோரனுக்கு அவன் எழுதியது பிடிக்கவில்லை. அவன் முகத்தை நொடித்தபடி உள்ளே சென்றான்.
துப்பன் திரும்பத் திரும்ப முற்றத்தில் அ என்று எழுதிக்கொண்டிருந்தான். என்னை பார்த்து ‘அ’ என்றான். பரவசம் தாளாமல் எழுந்து நின்று உடலை ஊசலாட்டினான்.
நான் “நல்லா எழுதறே… அடுத்த எழுத்தை எழுதிப்பாரு” என்றேன்.
அவன் “ஆ” என்றான்.
அந்த எழுத்தும் அவனுக்கு தெரியும் என்கிறான். சட்டென்று எனக்கு சிரிப்பு வந்தது. அவர்கள் உலகை நோக்கிச் சொல்லும் அந்த பதிலை எழுதக் கற்றுக்கொண்டுவிட்டான். இனி அதை அவன் ஊருக்கு வெளியே எழுதி வைத்தால்போதும். “யாருக்குத்தெரியும்!”
நான் உள்ளே சென்றேன். கோரன் டீ போட்டுக் கொண்டு வந்தான். நான் கோரனிடம் “துப்பன் அ எழுதியிருக்கான்” என்றேன்.
கோரன் அதை கேட்கவே விரும்பவில்லை. அவர்கள் விரும்பாததை பார்ப்பதை தவிர்ப்பார்கள். விரும்பாததை கேட்காமலிருக்க வேறுபக்கம் பார்வையை திருப்பிக் கொள்வார்கள்.
நான் “அது வேற அ” என்றேன்.
கோரன் கொஞ்சம் மலர்ந்து, அதிருப்தியுடன் கதவு வழியாக வெளியே தரையில் அ வரைந்துகொண்டிருந்த துப்பனைப் பார்த்துவிட்டு “அந்த அ பற்றூல்ல… அது பணியெடுக்கூல்ல” என்றான். அந்த அ வேலைசெய்யாது என்கிறான்.
“அவனுக்கு வேலைசெய்யும்” என்றேன்.
கோரன் மீண்டும் அதிருப்தி அடைந்து உள்ளே சென்றான்.
நான் டீ குடித்தபின் வெளியே வந்தேன். முற்றம் முழுக்க துப்பன் அ எழுதிப் பரப்பியிருந்தான். நல்ல வேளையாக இந்தக் காட்டில் இதைப்போல அதிக இடம் இல்லை. எல்லா இடத்திலும் புல்லும் புதரும். இருந்திருந்தால் காடே அ என்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கும்.
துப்பன் என்னிடம் “அ குரங்கு எழுதும்” என்றான்.
என்ன சொல்கிறான் என்று எனக்கு தெரியவில்லை. “குரங்கும் எழுதுமா?” என்றேன்.
அவன் ஆ எழுதினான். அதன் நெடிலைச் சுட்டிக்காட்டி “வால்!” என்றான்.
ஆ என்னும் எழுத்து குரங்காக மாறி பின்பக்கம் வாலை வளைத்துப் போட்டிருப்பதை அக்கணமே கண்டேன். குறில் அ வாலில்லா குரங்காகவும் ஆகிவிட்டது.
“நல்ல குரங்கு! நல்ல குரங்கு!” என்றபடி துப்பன் இடைவெளிகளில் ஆ என்ற எழுத்தை எழுதிக் குவித்துக் கொண்டிருந்தான்.
“சரி, அடுத்த எழுத்தை எழுது” என்றேன்.
“அடுத்ததா?” என அவன் திகைத்தான்.
“இ” என்றேன்.
“இ” என அவன் பிரமை பிடித்தவனாகச் சொன்னான்.
“இ எழுது” என்றேன்.
”இ எழுத அறியில்ல.”
“சரி எழுதிப்படி” என்றேன்.
அவன் சோகத்துடன் தலையாட்டிவிட்டு அப்படியே திரும்பி நடந்தான். காணிக்காரர்கள் பொதுவாக விடைபெறுவதில்லை. பார்த்ததும் முகமன் சொல்வதுமில்லை.
அவன் புதர்களுக்குள் மறைந்தான். கோரன் அதுவரை அங்கே மறைந்து நின்று அதை பார்த்துக் கொண்டிருப்பதை நான் கண்டேன். அவன் வந்து “துப்பன் முயலு கொண்டு வந்நு” என்றான்.
“சரி அதை சமை” என்றேன்.
கோரன் உள்ளே சென்றான். நான் முற்றத்தைப் பார்த்துக்கொண்டு நின்றேன். மெல்ல எனக்குள் அங்கிருக்கையில் வரும் அந்த எடைமிக்க தனிமை வந்து அமைந்தது.
மழைத்துளிகள் அ என்ற எழுத்தின்மேல் விழுந்தன. பின்னர் சடசடவென்று விழுந்து மூடின. முற்றத்தின் எழுத்துக்கள் அழிந்தன. காடு கலைந்து மறைய நீர்த்திரை. கூரைவிளிம்பில் இருந்து நீர் பொழியத் தொடங்கியது.
நான் உள்ளே சென்று அந்த புத்தகத்தை எடுத்து வைத்து வெறுமே பார்த்துக் கொண்டிருந்தேன். மூடிய கதவுபோலிருந்தது அது. அதை தட்டி திறக்கவேண்டும். அதை திறந்தால் வருவது வழக்கமான பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கிலம், அக்கால மனிதர்கள். ஆனால் வரிகளுக்கிடையே இருந்து வேறொன்று தோன்றும். அல்லது இது ஒரு கல்லறை. இதை நான் தோண்டவேண்டும். செத்தவர்கள் எழுந்து வரவேண்டும்.
அதை இனிமேல் தொடக்கூடாது என்று நான் உறுதிகொண்டிருந்தேன். ஆனால் இப்படி எத்தனை உறுதிப்பாடுகள். அவற்றை எனக்குநானே சொல்லிக் கொள்ளும்போதே எனக்குத் தெரியும், அவற்றை நான் கடைப்பிடிக்கப் போவதில்லை என்று. இந்த மாதிரி உறுதியெடுத்துக் கொள்வதெல்லாம் இதை நோக்கி வரும் வேகத்தைக் கூட்டிக்கொள்வதற்காகத்தான். இதை மேலும் தீவிரமாக வாசிப்பதற்காகத்தான். இது என்னை விடப்போவதில்லை.
அதைப் பிரித்தேன். நாவல் முடியப்போகிறது. ஆர்வில் பிரபுவுக்கும் ஈவ்லினாவுக்குமான உறவு தெளிவடைந்துகொண்டே வந்தது. ஈவ்லினா ஆர்வில் சீமாட்டியாகும்போது நாவல் முடியலாம் .OH, Sir, what a strange incident have I to recite! what a field of conjecture to open! எனக்குச் சிரிப்பு வந்தது. இந்த பழைய நாவல்களில் ஒன்று செயற்கையான மர்மங்களும் திகில்களும். அல்லது சாதாரண நிகழ்வுகளுக்கே உணர்ச்சிகளை ஏற்றி மிகையாக்கியிருப்பார்கள். அது ஒரு சாதாரண கேளிக்கை நிகழ்ச்சிக்குச் செல்லும் சந்தர்ப்பம், அங்கே ஒரு சின்ன சிக்கல்.
ஈவ்லினா கடிதத்தில் எழுதியிருந்தாள். இந்தப் பெண்கள் எல்லாவற்றையும் பெரிதாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் சிறிய உலகில் எல்லாமே பெரிதானவை. அவ்வாறு பெரியதாக்கிக் கொண்டால்தான் அவர்கள் முக்கியமானவர்களாக ஆக்கமுடியும். அவர்கள் ஆண்களை உதவிக்கு அழைக்கிறார்கள். ஆனால் ஆண்கள் அலட்சியமாகச் சிரித்தபடி அவர்களுக்கு உதவுவதற்காக வந்து அவர்கள் கோருவதைச் செய்யமுயன்று எரிச்சலும் ஏமாற்றமும் அடைவார்கள். அந்தச் சிறிய விஷயத்தை அவர்களால் செய்யமுடியாது. ஒரு மூட்டை கோதுமையில் இருந்து கற்களைப் பொறுக்கச் சொன்னால் செய்ய அவர்களால் முடியுமா என்ன?
அவர்கள் படைகளை நடத்துபவர்களாகக் கூட இருக்கலாம். அவர்களால் கூந்தலில் சிக்கிக் கொண்ட ஒரு கொண்டையூசியைக்கூட எடுக்க முடியாது. அதற்கான கண்ணும் கைகளும் அவர்களுக்கு இருக்காது. பொறுமை இழந்து மூர்க்கம் அடைவார்கள். அதன் வழியாக மேலும் கேலிப்பொருள் ஆவார்கள். பெண்களின் பிரச்சினைகளை பெண்களே தீர்க்கவிட்டு பெண்களுக்கு ஆலோசனை சொல்லாமல் அவர்களுக்கு தெம்பூட்டும்படி நாலைந்து வழக்கமான சொற்றொடர்களைச் சொல்லும் ஆண்களே புத்திசாலிகள். ஆனால் அவர்கள் மிகக்குறைவுதான். அவர்களுக்கும் வயதாகிவிட்டிருக்கும்.
இந்த பெண்களின் உலகில் சிக்காமல் இருக்க நான் வாசிக்க ஆரம்பித்தேன். உண்மையில் அங்கும் பெண்களின் உலகமே அதிகமாக எழுதப்பட்டிருக்கிறது. ஏனென்றால் இங்கே அதிகமாக வாசிப்பவர்கள் பெண்கள். இந்த மாற்றம் உலக இலக்கியத்தில் நிகழ்ந்து கொண்டிருப்பதை எவரேனும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. சென்ற நூற்றாண்டுவரை இலக்கியம் என்றாலே அது ஆண்களுக்குத்தான் சொந்தமானது. ஆண்களின் உணர்வுகள், ஆண்களுக்குரிய சிக்கல்கள், அதில் பெண்கள் இடம்பெற்றிருப்பார்கள். பெண்களின் பார்வையில் எழுதப்பட்ட காவியமென ஏதுமில்லை. ஆனால் இன்றைக்கு எழுதப்படுவனவற்றில் முக்கால்பங்கு பெண்களுக்காகத்தான்.
பெண்களே எழுதுகிறார்கள், பெண்களுக்காக ஆண்கள் எழுதுகிறார்கள். இரண்டுமே பெண்களுக்காகத்தான். வருங்காலத்தில் பெண்கள் எழுதிக்குவிப்பார்கள். விருந்துகளின் பின்கூடத்திலும் சமையலறைகளிலும் பேசப்படுவன அனைத்தும் அச்சில் வந்து குவியும். அவற்றில் எவை எல்லாம் நீடிக்குமெனச் சொல்லமுடியாது. நீடிக்கலாம். எத்தனையோ குப்பைகள் நீடிக்கின்றன. உலக இலக்கியத்தில் பெரும்பகுதி ஆண்கள் ஆண்களுக்காக எழுதிக்கொண்ட வெற்றுப் பெருமிதப்பேச்சுக்கள் அல்லவா?
நான் பெண்களுக்கான எழுத்தைப் படிப்பதில்லை. Foxe’s Book of Martyrs படித்துக்கொண்டிருந்தேன். திருமதி மிர்வின் என்னிடம் “அது என்ன புத்தகம்?”என்றாள்
நான் சொன்னதும் “கேள்விப்பட்டதில்லையே. யார் எழுதியது?”என்றாள்.
நான் “ John Foxe” என்றேன்.
“நன்றாக இருக்கிறதா?”என்று முகத்தை புளிப்பாக வைத்துக்கொண்டு கேட்டாள்.
“ஆர்வமூட்டுகிறது” என்றேன்.
“நான் நேற்று ஒரு புத்தகம் படித்தேன். The Worth of Women: Wherein Is Clearly Revealed Their Nobility and Their Superiority to Men. அற்புதமான புத்தகம். Moderata Fonte எழுதியது, எல்லா பெண்களும் படிக்க வேண்டியது” என்றாள்.
“எனக்கு என்னமோ அது கொஞ்சம் கிண்டலோ என்று சந்தேகம்” என்றேன்.
“இருந்தாலென்ன?”என்று திருமதி மிர்வின் மந்தமாகச் சொன்னாள்.
நான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் அதன் பின்பு அதை தொடர முடியவில்லை. சலிப்புடன் எழுந்து சுற்றிவந்தேன். டிராயரை திறந்தால் கைப்பிரதி இருந்தது ஃப்ரான்ஸெஸ் பர்னி எழுதிய குறிப்புகள்.
அவற்றை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். எல்லா பக்கங்களிலும் கிரிஸ்ப் திருத்தங்கள், வினாக்கள், அடையாளக்குறிகள் போட்டிருந்தார். அதன் பின் இன்னொரு நகல் எடுத்தால் அதிலும் போடுவார். அவ்வாறு அதில் எழுதாமல் அவரால் அந்த கைப்பிரதியை படிக்க விட முடியாது. அவர் இருக்கவேண்டும் அதில், திருத்தமாக அடிக்குறிப்புகளாக. அச்சில் வந்தபின் என்ன செய்வார்? தன் சொந்த பிரதியில் திருத்தங்கள் போட்டு குறிப்புகள் எழுதி தனக்காக வைத்துக்கொள்வாரா?
கிழவர்களுடனிருப்பது சிக்கலானது. கிழவர்கள் தங்களை நோக்கியே மையம்கொண்டவர்கள். ஏனென்றால் அப்படி இளமையிலேயே தன்னை நோக்கி மையம் கொண்டவர்களே கொஞ்சமேனும் முக்கியமானவர்களாக ஆகிறார்கள். அப்படி அல்லாதவர்களுக்கு வாசிப்போ அனுபவமோ ஆளுமையோ இருப்பதில்லை. ஆனால் பெண்களுடன் பேச முன்வரும் கிழவர்கள் முழுமையான வெற்றியை அடைந்த ஆளுமைகளும் அல்ல. அவர்கள் எல்லாம் அமைந்தும் தோற்றவர்களாக இருப்பார்கள்.
எல்லாம் அமைந்தும் தோற்றவர்கள் போல ஏமாற்றமும் கசப்பும் நிறைந்த எதிர்மறை ஆளுமைகளைப் பார்ப்பது அரிது. அவர்களுக்கு எல்லாம் அமைந்திருக்கும், தவிர்க்கமுடியாத ஏதாவது இல்லாமலும் ஆகியிருக்கும். முக்கியமாக வென்றே ஆகவேண்டும் என்ற வெறி. எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளும் வேகம். சந்தர்ப்பங்களை உருவாக்கி கொள்ளும் சாமர்த்தியம். அனைத்தையும் விட நெடுங்காலம் ஒன்றில் குவிந்திருக்கும் தீவிரம். அவை இல்லாதவர்கள் கைகளை அகலவிரித்து பலவற்றை அள்ள முயன்று எல்லாவற்றையும் தவறவிட்டவர்களாகவே இருப்பார்கள்.
அவர்கள் தங்களால் வெல்ல முடியாத உலகை அச்சத்துடன் பார்ப்பவர்கள். ஆகவே வெல்லக்கூடியது என்று உறுதியாகத் தெரியும் ஒரு சிறு உலகை உருவாக்கிக் கொள்கிறார்கள். அது பெரும்பாலும் இளைஞர்களின் உலகம். இளம்பெண்களின் உலகம் என்றால் அப்பெண்கள் இன்னும் காதலுறவுகளுக்குள் நுழையாதவர்கள். பதினெட்டு வயதுக்குள் இருப்பவர்கள். அந்தப்பெண்களை அவர்கள் குழந்தைகளாக நடத்தலாம். மறுபக்கம் அந்தப்பெண்களுக்கும் தந்தையின் அடையாளம் கொண்ட ஒருவர் தேவை, அவர் ஒரு தெப்பம்.
அந்தப் பெண்களுடனான அவர்களின் உறவுகள் மிகச்சிக்கலானவை. அவர்கள் அறிந்திராத ஒன்றுண்டு, இன்னமும் கன்னிப்பெண் வயதை அடையாத சிறுமி ஒரு பெரும் புதிர். தேவதை முகம் கொண்ட அவளுக்குள் இருப்பது மிகப்பெரிய அலட்சியமும் திமிரும். ஏனென்றே தெரியாமல் துளித்துளியாக ஊறி நிறைந்திருக்கும் தன்னுணர்வு அது. அவள் அதைக்கொண்டே அவள்மேல் செலுத்தப்படும் மிதமிஞ்சிய அதிகாரம் கட்டுப்பாடு அனைத்தையும் எதிர்கொள்கிறாள். அந்த ஆணவம் புண்பட்டுவிடக்கூடாதென்று அவள் தன் வாசல்களை சாத்திக்கொண்டு தன்னை ரகசியமானவளாக ஆக்கிக் கொள்கிறாள். அந்தப் பூடகத்தன்மையே முதியவர்களை ஈர்க்கிறது, அந்தப் பூடகத்தன்மையே முதியவர்களை வதைக்கிறது. அந்த முள்ளில் அவர்கள் சிக்கிக்கொண்டு அழிவார்கள்.
ஃப்ரான்ஸெஸின் குறிப்புகள் எவரைப் பற்றிச் சொல்கின்றன? அவள் பேசிக்கொண்டிருந்தது இளமையில் அவள் கண்ட ஒரு பாதிரியாரையும் அப்பாதிரியாரால் வளர்க்கப்பட்ட ஒரு சிறுமியையும் பற்றி. பாதிரியார் நல்லவர், உயர்ந்த நோக்கம் கொண்டவர். அந்தப்பெண் பாதிரியாரின் நல்லெண்ணங்களை மீறி ஒழுக்கநம்பிக்கை குறைவானவளாகவும் துடுக்கானவளாகவும் இருக்கிறாள். அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்பதை ஃப்ரான்ஸெஸ் தன் போக்கில் எழுதியிருக்கிறாள்.
நான் அந்தப் பகுதியை படித்துக் கொண்டிருந்தபோது ஓர் எரிச்சலை அடைந்தேன். வாழ்க்கையைப் புரிந்துகொள்ள இந்த எழுத்தாளர்கள் கையாளும் வழி ஒன்றுண்டு. அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய ஆளுமையாக தங்களை நிறுத்திக் கொள்வார்கள். அந்தக் கதாபாத்திரமாக நடிப்பார்கள். ஆனால் அறியும் கதாபாத்திரமும் அவர்களே. ஆகவே அது ஒரு அகவிளையாட்டே. ஆனால் பிறரைப் புரிந்துகொள்வதாக எண்ணிக்கொள்வார்கள். எழுத்தில் வெளிப்படும் ஆழமென்பது எழுதுபவனின் ஆழம் மட்டுமே.
ஆனால் இந்த எரிச்சல் ஏன் எனக்கு வருகிறது? ஏன் நான் ஒவ்வாமையுடன், பதற்றத்துடன் எல்லா தர்க்கங்களையும் அள்ளி என்மேல் போட்டுக்கொண்டு என்னை மூடிக்கொள்கிறேன். எனக்குள் ஒரு கண் புகுவது என்னை கசப்படையச் செய்கிறதா? ஆய்படுபொருளாக இருப்பதை எவரும் விரும்புவதில்லை. சிறுகுழந்தைகள் கூட எரிச்சலடைகின்றன.
ஆனால் ஆராயப்படுபவர்களாக இருப்பதை விரும்புபவர்கள் உண்டு. அவர்கள் நடிகர்கள். மெய்வாழ்க்கை நடிகர்கள். பெண்கள், குழந்தைகள் நடிக்கிறார்கள். ஆண்கள் நடிக்கிறார்கள். முதியோர் நடித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆராயப்படுகையில் ஒரு போலிப்பிம்பத்தை முன்வைக்க அவர்களை அனுமதித்தால் மட்டும் போதும், அவர்கள் மகிழ்ந்துவிடுவார்கள்.
நான் அன்று ஹெலெனாவிடம் கேட்டேன். “அந்த கர்னல், அவரை உங்களுக்கு எப்போதிலிருந்து தெரியும்?”
அவள் முகம்சுளித்தாள். நான் அவள் கைகளைப் பற்றிக்கொண்டு “நீங்கள் சொல்லுவது எல்லாமே எனக்கு நன்றாகப் புரியும்” என்றேன்.
அவள் கண்கள் மாறுபட்டன. “அவர் நல்லவர்தான். ஆனால் தோற்றுப்போனவர்” என்றாள்.
”அப்படியா?” என்றேன்.
”ஆம். அவருக்கு எல்லா தகுதிகளும் உண்டு. அவர் பிறப்பால் பிரபு. தொன்மையான ஏர்ல் ஆஃப் பிராட்ஃபோர்ட் குடும்பம். அவர் பர்மாவிலும் பிலிப்பைன்ஸிலும் மிக வெற்றிகரமான நான்கு போர்களை நடத்தியிருக்கிறார். ஆனால் அவரால் ஜெனரல் ஆக முடியவில்லை. கர்னலாக ஆனாலும் வெறும் பதவிதான். நிர்வாகப் பொறுப்பு என எதுவுமே இல்லை. எல்லாமே கர்னல் டேவிட் மெக்காலேவிடம்தான். மெக்காலே இவரை நன்றாக நடத்துவதில்லை.”
”ஆமாம், அது இயல்பு. ஏனென்றால் மெக்காலே பிரபு அல்ல. அவர் ஒரு போதகரின் மகன்” என்றேன். “இந்த சாப்மான், உண்மையிலேயே அவர் ஏர்ல் ஆஃப் பிராட்ஃபோர்ட் குடும்பமா?”
”இந்தியாவில் அதெல்லாம் சொல்லிக்கொள்வதுதான்” என்று அவள் புன்னகைத்தாள் “எவரும் அதையெல்லாம் பரிசோதிக்கப் போவதில்லை.”
“பொதுவாக உயர்படிப்பு படித்தவர்கள் கொஞ்சம் சீராக வேலை செய்வார்கள். அந்த டேவிட் மெக்காலே இங்கே நல்ல கல்லூரியில் படித்திருக்கலாம்.”
“ஆமாம். அதோடு கர்னல் டேவிட் மெக்காலே மிக இறுக்கமானவர். ஒருநாளில் பன்னிரண்டு மணிநேரம் அலுவலக வேலை. எஞ்சியநேரத்தில் இரண்டுமணிநேரம் சர்ச்சில் பிரார்த்தனை. செலவு செய்யும் ஒவ்வொரு நாணயத்தையும் எழுதி வைப்பவர். சந்திப்பவர்களின் பெயர்கள், அவர்கள் பேசிய அடிப்படைச் செய்திகள் எல்லாவற்றையும் உடனடியாகக் குறித்து வைத்துக் கொள்வார். ”வாழ்க்கையில் இருந்து நேரடியாக காகிதத்தில் பதிந்துகொண்டிருக்கிறார். சேற்றில் பதிந்து ஃபாஸில் ஆக மாறும் பறவைகளைபோல” என்று கர்னல் சாப்மன் என்னிடம் சொன்னார்.”
நான் புன்னகைத்தேன். “இந்த சாப்மான் கொஞ்சம் நல்ல ரசனை உடையவர் போல.”
“எல்லாமே கொஞ்சம் கொஞ்சம்…” என்று ஹெலெனா சொன்னாள். “இசை, இலக்கியம், தொல்லியல், இயற்கை ஆய்வு எல்லாமே உண்டு. மழைக்காடுகளின் குருவிகளைப் பற்றி ஒரு பதிவேடு வைத்திருக்கிறார். மலேய நாட்டுப்புற இசையை பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார். குருவிகளை பிடித்துக் கொன்று பாடம் செய்து பெரிய சேகரிப்பை வைத்திருக்கிறார்.”
“சரிதான், அவரால் விருந்துகளில் மட்டும்தான் சிறப்புற விளங்க முடியும். நிர்வாகத்தில் அல்ல” என்றேன்.
அவள் சிரித்து “உண்மைதான்… அவர் டெல்லியில் டெபுடி கவர்னர் ஜெனரல் ஜான் மக்ஃபர்ஸன் பிரபுவிடம் ஒரு சந்திப்புக்காக போனபோது குருவிகளைப் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் இந்தியாவில் மிகப்பெரிய தொந்தரவாக நினைத்ததே குருவிகளைத்தான். வாரன் ஹேஸ்டிங்ஸ் காலத்திலேயே கவர்னர் ஜெனரலின் மாளிகையைச் சுற்றி மிகப்பெரிய வலைகட்டி குருவிகள் வராமல் தடுத்திருந்தார்கள். இவர் குருவிகளின் அலகுகளின் வடிவங்கள் பற்றி ஒருமணிநேரம் பேசியிருக்கிறார். நேராக டிரிவாங்கூருக்கு அனுப்பிவிட்டார்கள்” என்றாள்.
“சுவாரசியமான உரையாடல்காரரா?” என்றேன். “குறைந்தது பெண்களிடமாவது?”
“அப்படி அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அது உண்மை அல்ல. அவரால் எதையாவது ஒன்றை கூர்மையாக பேசமுடியாது. நிறைய செய்திகள் தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் எதிலும் சொந்தமான அவதானிப்புகள் கிடையாது. ஆகவே ஒன்றைச் சொல்லத் தொடங்கி தொட்டுத்ன் தொட்டுப் பலவற்றைச் சொல்லி விரிந்து விரிந்து சென்று அப்படியே விட்டுவிடுவார். ஒருவர் பேசும்போது நாம் ஆர்வமாக கவனித்து, பேசி முடித்தபின் சலிப்படைவோம் அல்லவா? அந்தவகையான உரையாடற்காரர்.”
நான் சிரித்துவிட்டேன். அச்சிரிப்பால் மிக அணுக்கமானோம். அல்லது எங்களை அணுக்கமாக்கும் வேறேதோ இருந்தது.
”அவர் மெய்யாகவே உன் கணவருக்கு உதவுவாரா?”
“அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரால் கர்னல் டேவிட் மெக்காலேயை நெருங்க முடியாது. இவரை நெருங்க முடிகிறது. ஆகவே இவர் முக்கியமானவர் என நம்புகிறார். இங்கே டிரிவாங்கூரில் ஒன்றும் நடக்காது. ஆனால் ஒருவேளை கர்னல் சாப்மான் மெட்ராஸுக்கு மாற்றம் பெற்றுச் சென்று இவரும் கூடவே சென்றால் ஏதாவது நடக்கலாம்… ஒரு படைக்கு தலைமை வகித்துச் சென்று ஒரு போரில் வென்றால்தான் அடுத்த கதவு திறக்கும். இங்கே டிரிவாங்கூரில் போர்கள் இல்லை. மதராஸில் போர்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அங்கே முசல்மான்கள் மிகுதி.”
“நீ அதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயா?”
“கொஞ்சம் புரிந்துகொள்ள முயல்வேன்.”
”நீ ஏன் அவற்றை டைரியாக எழுதக்கூடாது?”
“டைரி எழுதினால் புலம்ப ஆரம்பித்துவிடுவேன்.”
“சரி, எனக்கு அவற்றை கடிதங்களாக எழுது. நான் உனக்கு என் விலாசத்தை தருகிறேன்” என்றேன்.
அவள் புன்னகைத்து “பார்க்கிறேன்” என்றாள்
”எப்போது போகிறாய்?” என்று நான் கேட்டேன்
“இன்னும் பத்துநாளில். எங்கள் கப்பல் துறைமுகத்துக்கு வந்துவிட்டது…”
நான் அவள் கைகளைப் பிடித்து அழுத்தி “எரிச்சலடையாமல் இருக்கவேண்டும், அதுதான் பெண்களுக்கு தேவையான ஒரே திறமை” என்றேன்.
அவள் புன்னகைத்தாள்.
[மேலும்]