மனம்

“நம்ம பூனை மறுபடியும் நான்குசட்டகத்துக்கு வெளியே வந்து சிந்திச்சிருக்கு”

முன்பு குருகுலத்தில் ஒரு தியான வகுப்பு நடந்தது. அன்று ஒரு வெள்ளைக்காரர் நடத்தினார். ‘Mind Your Business’ என்பது நிகழ்ச்சிக்கு பெயர். செல்லும் வழியெங்கும் அவரே கடுமையாக உழைத்து கார்ட்டூன் பேனர்கள் வைத்திருந்தார். எல்லாமே மனம் என்பதைப் பற்றிய பொதுவான கிண்டல்கள்.

ஆனால் அரங்கு ஆரம்பித்ததுமே ஆளாளுக்குப் பேச ஆரம்பித்துவிட்டனர். பெரும்பாலானவர்களுக்கு நகைச்சுவை புரியவில்லை. ஆகவே அவ்வரிகளை அப்படியே எடுத்துக் கொண்டார்கள். சிலருக்கு அவை புண்படுத்தும் வரிகளாகத் தோன்றின. சிலருக்கு அவை ஆப்தமந்திரங்கள் போல தோன்றின. டைரியில் குறித்து கொண்டார்கள்

மனதை படிப்பவர்: ”மனசையெல்லாம் எந்த மடையனாவது படிக்க முடியுமா? அதானே இப்ப நினைச்சே?”

வெள்ளையரிடம் பேசி அவரையே குழப்பிவிட்டார்கள். மனதை நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளக் கூடாது, அது சீரியஸான விஷயம் என்று ஒருவர் அவருக்கே உபதேசம் செய்தார். வேடிக்கையாக எடுத்துக் கொண்டால் அதன் ஆழத்தை நாம் அடையமுடியாது என்றார். ஒருவருக்கொருவர் கருத்து தெரிவித்துக் கொண்டனர். “மெண்டல் விசயங்களை அப்டி நாம ஈஸியா எடுத்துக்கக்கூடாதுங்க. இல்லேன்னா நம்மள மெண்டல்னு சொல்லிருவாங்க”

ஏன் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று வெள்ளையர் கேட்டார். நம் முன்னோர் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவில்லையே என்றார்கள். நமக்ச்சுவையாக எடுத்துக் கொள்வது பொறுப்பின்மை என்றார்கள். ஒருவர் கடைசியாகச் சொன்னார். “நகைச்சுவை எல்லாம் அதெல்லாம் சின்னவயசில். இப்போது நாம் முதிர்ந்து விட்டோம்.”

கடைசியாக ஒருவர் சொன்னார் “வேடிக்கை, நகைச்சுவை எல்லாம் வேணும்தான். எனக்கேகூட அதெல்லாம் பிடிக்கும். ஆனா நாலுபேரு சிரிக்கிற மாதிரி ஆயிடக்கூடாது”

”நிலைமை கைமீறி போயிட்டிருக்கு. மன அழுத்தத்தை போக்குற பயிற்சிக்கு ஒரு கம்ப்யூட்டர் விண்ணப்பம் அனுப்பியிருக்கு”

கொஞ்சநேரம் கழித்து நித்யா அந்த அரங்கை தொடங்கிவைக்க வந்தார். “தியானத்திற்கு நகைச்சுவை நல்லது. ஏனென்றால் நல்ல நகைச்சுவை என்பது நம்மை நாம் எளிதாக்கிக் கொள்வது. அண்டர்வேரின் முடிச்சை அவிழ்த்துவிட்டு தியானத்தில் அமர்வதுபோல அது.” என்றார். ”ஆப்த மந்திரங்கள் நல்ல நகைச்சுவைகள். தத்வமசி. அது நீதான். எவ்வளவு வேடிக்கையான வரி.”

அரங்கு திகைத்தது. ஒருவர் “குரு அதற்குத்தானே ஆதிசங்கரர் விரிவாக உரையை எழுதினார்?” என்றார்.

“ஆமாம், பாருங்கள். அது இன்னும் பெரிய நகைச்சுவை.”

”இளமைக்காலத்தைப் பத்தி நினைக்கப்போய் ரொம்ப பின்னாடி போய்ட்டார்”

அன்று முதல் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இயல்பாகச் சிரிக்காத தியான வகுப்புகளில் கெட்ட வாயுவை வெளியேற்றும் முகபாவனைகள் திகழ்கின்றன. அவர்களின் ஆசிரியர்கள் வெளியேற்றி மீண்ட புன்னகையை காட்டுகிறார்கள். பாதிப்பேர் தியான பயிற்சி முடிந்தபின் “நல்ல ரிலீஃப் இருக்கு சார்’ என்கிறார்கள். நான் ஒருவரிடம் கேட்டேன். “கொஞ்சம் ரிலீஃப் ஆனபிறகு நீங்க தியானத்தை ஆரம்பிச்சிருக்கலாமோ?” .முறைத்தார்.

மனம் என்ற இந்த ஒன்றை வைத்துக்கொண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தப்பாடு படுகிறோமே, இதைவிட பெரிய நகைச்சுவை இருக்கமுடியுமா என்ன? நாம் எதுவாகப் பார்க்கிறோமோ அதுவாக ஆகிறது. எந்த விடையை விரும்புகிறோமோ அதையே தருகிறது.

”சரி போயி வெளையாடு. ஆனா சாக்கடையிலே விழுந்திரக்கூடாது”

மோகன்லால் ஒரு படத்தில் சொல்வார். “உண்டா என்று கேட்டால் உண்டு. ஆனால் ‘உண்டா’ என்று கேட்டால் அப்படிச் சொல்லமுடியாது.”

இப்படிச் சொல்லிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் மனம் என்பது என்ன? அதை கைவசப்படுத்திக்கொண்டால் உடனே அது சொல்லிவிடுகிறது, கைவசப்படுத்தப்பட்டது அல்ல கைவசப்படுத்தியதுதான் மனம் என்பது. அப்படியென்றால் கைவசப்படுத்தப்பட்டது? அது மனம் என நினைக்கப்படும் ஒன்று. நினைப்பது யார்? மனமேதான்.

சின்னவயசிலே எங்கம்மா என் வாயிலேயே துப்புவாங்க”

மேலைநாட்டு மனம் பற்றிய ஜோக்குகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எல்லாமே உளவியலாய்வு கோணத்தில்தான். நம் மரபில் மனம் என்பது ஆத்மாவின் ஒரு மாயை. தவளை தண்ணீருக்குள் அமர்ந்து விட்டுக்கொண்டிருக்கும் நுரைக்குமிழி.

நித்யாவிடம் ஒரு கேள்வி. “மனதை என்ன செய்யவேண்டும் குரு?”

நித்யா சிரித்து “அடக்கவேண்டும்”

“எப்படி?”

“மனதை வைத்துத்தான். அதற்கு இன்னும் கொஞ்சம் பெரிய மனம் வேண்டும்.”

முந்தைய கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 8
அடுத்த கட்டுரைவீகன் உணவுப்பழக்கம்