சோஃபியின் உலகம்- கிறிஸ்டி

சோஃபியின் உலகம் வாங்க

அன்புள்ள ஆசான் அவர்களுக்கு,

நலமாக இருக்கிறீர்களா? தங்களுக்கு எழுதி நீநாட்கள் ஆகின்றன. புதிய பணிச்சூழலில் எதையும் வாசிக்க இயலாத அளவுக்கு மனம் சோர்வடைந்திருந்தது. தாங்கள் அடிக்கடி சொல்லுவீர்கள், உங்கள் மனம் சோர்வடையாதிருக்க உங்களைச்சுற்றி நல்ல நண்பர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று. ஏற்கெனவே குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பணநெருக்கடி இன்னும் தீராத நிலைமையில் என்னுடைய பணியிட மாறுதல் காரணமாகவும் நானே என் நல்ல நண்பர்களிடமிருந்து விலகித் தனிமையில் உழல  வேண்டுமென்றளவிற்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தது.

மாதக்கணக்கில் எந்தவொரு எண்ணங்களும் சலனங்களுமில்லாமல் வெறுமனே  வீட்டுப்பணியையும் அலுவலகப் பணியையும் செவ்வனே ஆற்றி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தேன். ஆனால் மனத்தின் உள்ளோரத்தில் எங்கிருந்தோ ஒரு சன்னமான குரல் ஒன்று எப்போதும் ஒலித்துக்கொண்டேயிருந்தது. அது  என் அம்மாவின் குரல் போல. எங்கள் அம்மா நாங்கள் எதற்காகவாவது கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தால், “யாராயிருந்தாலும் சோறை சாப்ட்டுட்டு கோவிச்சிகிட்டு போய் மூலைல உட்கார்ந்துக்குங்க. திங்கிற  சோத்து மேல கோவிச்சிகிட்டா கடைசிகாலத்துல வீடு வீடா தட்டை எடுத்துகிட்டு போய் பிச்சைதான் எடுக்கணும்” என்று பொதுவாக எல்லோருக்கும் கேட்கும்படியாகக் கூறிவிட்டு எங்களின் வருகைக்காக காத்திருப்பார்கள்.

அந்தக்குரல்  எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மாதிரியும் இருக்கும். அதில் எங்களை எப்படியாவது சாப்பிடவைத்துவிடவேண்டும் என்ற உறுதியும் இருக்கும். வீட்டில் ஒருவர் கோவித்துக்கொண்டு சாப்பிடாமல் இருந்தாலும் தானும் சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். வீடுவீடாக பிச்சை எடுக்காமல் இருக்கவேண்டும் என்ற எதிர்கால பயத்தைவிட அம்மா சாப்பிடாமல் இப்படி அழிச்சாட்டியம் பண்ணுகிறார்களே என்ற நிகழ்கால கோபமே எனக்கு மேலெழ நான் எழுந்து சாப்பிடச்செல்வேன். என் தங்கைகள் எனக்குப்பின்னால் எங்கள் அப்பாவிடம் முதுகில் இரண்டி அடிகளை வாங்கிக்கொண்டு உள்ளே வருவார்கள். நான் கோபத்தோடே முதல் சோறுடன் முடித்துக்கொண்டு மறுசோறு வாங்கிக்கொள்ளாமல் வேகவேகமாக சாப்பிட்டுவிட்டு வெளியே போய் திண்ணையில் முன்பிருந்தவாறே அமர்ந்துகொள்வேன்.

அனைவரும் சாப்பிட்டு எழுந்தவுடன் எங்கள் அம்மா, “அப்பாடா..ஒரு பெரிய சாப்பாட்டு வேல முடிஞ்சது” என்று ஒரு ஆயாச பெருமூச்சு விட்டபடி மெத்தைக் கட்டிலில் சிறிது நேரம் படுப்பார்கள். ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு சாப்பிட்ட இடத்தை ஒழுங்குபடுத்துவார்கள். நாங்கள் நான்கு பேரும் பெண்கள்தான் என்றாலும் எங்கள் அம்மா ஒரு வேலை கூட எங்களை செய்யச்சொல்லமாட்டார்கள். நாங்கள் படித்தால் போதும் எங்கள் அம்மாவிற்கு. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் நேராநேரத்திற்கு சாப்பாடு தயாராகிவிடும். எங்கள் அப்பாவுடன் சேர்த்து நாங்கள் ஐவரும் என்ன மனநிலைமையிலிருந்தாலும் சாப்பாடு தயாரானதும் சாப்பாட்டு மேஜைக்கு வந்து அமர்ந்து சாப்பிட்டுவிடவேண்டும். எங்கள் அம்மாவும் எங்களுடன் சேர்ந்து சாப்பிடுவார்கள்.

இப்போதுவரை அந்த கண்டிப்பும் உறுதியும் எங்கள் அம்மாவிடம் இருக்கிறது. அந்த சிறுபிராயத்தில் ஊட்டப்பட்ட எச்சரிக்கையுணர்வு எந்தவொரு செயலைச் செய்தாலும் செய்யாமல் விட்டாலும் எனக்கு இருந்தது. அந்த உணர்வானது என் இரத்தத்தில் ஊறிவிட்டதோ என்னவோ, நான் சலனமற்று வாளாவிருந்த காலங்களில் என் உள்ளே ஒலித்துக்கொண்டிருந்த குரல் இவ்வாறாக இருந்தது,” மனிதர்கள் மேலேதானே உனக்குக் கோபம். அதைக் கொண்டுபோய் ஏன் புத்தகங்கள் மீது காட்டுகிறாய், அவை உனக்கு என்ன பாவம் செய்தன, நீ வேறு எதன்மீதாவது கோபப்பட்டுக்கொள், ஆனால் வாசிப்பதை விடாதே, சீக்கிரம் உன் மனதை மாற்றிக்கொள்” என ஓயாமல் நச்சரித்துக்கொண்டேயிருந்தது. அப்படி ஓயாத நச்சரிப்பு இருந்தாலும் வேறு ஏதொவொன்றை மனம் உள்ளூர எதிர்பார்த்தது. பொட்டில் அடித்தாற்போல, செவுளில் அறைந்தாற்போல, ஒரு தீராத கொந்தளிப்பை உருவாக்குவதுபோல, ஒரு சவாலை எதிர்கொள்வதுபோல, எங்கள் அம்மாவின் பயத்தை உண்டுபண்ணும் ஒரு எச்ரிக்கைக்குரல் போல ஏதோ ஒன்றை எதிர்பார்த்திருந்தது. அந்த என் எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

ஏனெனில், 2000 ஆண்டுகளுக்கு முன்பு எப்போதும் ஜீஸஸ் அவரது மலைப்பிரசங்கத்தில் கூறுவார், “பிறர் உங்களுக்குச் செய்யவேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்”-மத்.7:12 என. நானும் விளையாட்டாக இதை அவ்வப்போது சோதித்துப் பார்ப்பதுண்டு. அதில் வெற்றியே எப்போதும் கிடைக்கும் என்று முன்னமே எனக்குத் தெரிந்திருந்தாலும் மற்றவரின் மனநிலை எவ்வாறெல்லாம் என் செயல்களால் மாறுகிறது என்பதைக் கவனித்துப் பார்ப்பதில் உண்டாகும் மகிழ்ச்சிக்காக இதைச் செய்வதுண்டு. இந்த மந்திரத்தையே அல்லது தந்திரத்தையே இப்போது உண்டாகியிருக்கும் என் மனக்குலைவை சீர்செய்துகொள்ள  பயன்படுத்தலாம் என்று முடிவெடுத்தேன்.

“எப்போதும் நான் வாசிக்க வேண்டும்; வாசிப்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்; சோம்பி மூலையில் அமர்ந்து விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது; ‘உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்’ என்ற பொன்விதிக்கேற்ப  எப்போதும் என் முகம் மலர்ந்திருக்கவேண்டும், இதெல்லாம் சாத்தியமாகவேண்டுமென்றால் நான் என் நண்பர்களிடமிருந்து என்னை விலக்கிக்கொண்டிருந்திருக்கக்கூடாது; ஒரு மாபெரும்  தவற்றைச் செய்துவிட்டேன்”  என என் மூளைக்கு அப்போது உறைக்கத் தொடங்கியது. நான் எப்போதும் சந்தோஷமாகவும் உத்வேகமாகவும் இருக்கவேண்டுமென்றால் என்னைச் சுற்றி நண்பர்கள் இருந்தால் மட்டுமே முடியும் என உறுதியாகத் தோன்றிவிட்டது. எனக்கு நானே போட்டுக்கொண்டிருந்த தனிமை வட்டத்தை அழித்தேன். வெளியே வந்தேன். ஒவ்வொருத்தராக இல்லாமல் ஒட்டுமொத்தமாக என் நண்பர்கள் அனைவரையும் புதுப்பித்தேன். அதற்கு முகநூலும் வாட்ஸாப்பும் மிகவும் உதவிகரமாக இருந்தன. எங்கள் அம்மாவுக்கும் உங்களுக்கும் ஜீஸஸுக்கும் மானசீகமாக நன்றி செலுத்தினேன்.

ஆனால் இந்த புதிய உலகம் சோஃபியின் உலகமாக மாறும் என சற்றும் நான் எண்ணிப் பார்த்திருக்கவில்லை. நான் உங்களுக்கு எழுதிய முதல் கடிதத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தமான இரண்டு விஷயங்களைப் பற்றி எழுதியிருப்பேன். அதில் ஒன்று, எனக்கு குருகுலக்கல்வி முறையில் இருந்த ஆழமான பற்று பற்றியது. மற்றொன்று, பள்ளிக்காலம் முதல் பெயரளவில் மட்டுமே தெரிந்துகொண்டிருந்த சாக்ரடீஸ், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகிய தத்துவமேதைகள் வாழ்ந்த காலத்தில் நான் வாழவில்லையே, அவர்களை நேரில் தரிசிக்கும் பேறுபெறாதவளாகிவிட்டேனே என்றெல்லாம் என் பிறவிப்பேற்றை எண்ணி அங்கலாய்த்திருப்பேன்.

அந்த வருத்தத்திற்கான தீ்ர்வு மீண்டு எழுந்திருக்கும் இந்த இரண்டாவது எழுச்சியின் முதல்படியிலேயே கிடைக்கும் என்று உண்மையிலேயே நான் நினைக்கவில்லை. “நாம் கடவுளை நோக்கி ஓரடி எடுத்துவைத்தால் கடவுள் நம்மை நோக்கி ஒன்பது அடி எடுத்துவைப்பார்” என்பதெல்லாம் உண்மைதான் போலும்.

என் வாழ்வின் முதல் விருப்பம், தாங்கள் என் ஆசானாக மானசீக குருவாக கிடைத்ததனால் நிறைவேறியது. என் இரண்டாவது விருப்பம், இதோ இந்த ஏப்ரல் 2021 ன் இறுதி இரண்டு வாரங்களில் சோஃபியின் உலகத்தில் என் பிரியமான தத்துவமேதைகளாகிய சாக்ரடீஸ், பிளாட்டோ, அரிஸ்டாட்டில் முதல் ஹ்யூம், ஹெகல், மார்க்ஸ், லெனின், சார்த்தர், டார்வின், ஃப்ராய்டு என உலகத் தத்துவவாதிகள், கலிலியோ, கோபர்நிகஸ் எனும் வானவியலாளர்கள், நியூட்டன் போன்ற அறிவியல் விஞ்ஞானிகள், ஒற்றைப் பெருவெடிப்பைப்பற்றிப் பேசும் நவீன அறிவியலாளர்கள் வரை அனைவருடனேயும் வாழ்ந்ததனால் நிறைவேறியது. இதில் உச்சம் என்னவென்றால், நான் விரும்பிப் போற்றும் தத்துவமேதை பிளாட்டோ அவர்கள் நேரில் என்னுடன் பேசுவார் என்று கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை. நிறைவேற இயலாத ஆசைகள் என நான் பட்டியலிட்டிருந்த என் ஆசைகள் அனைத்தும் இந்நாவலின் மூலம் நிறைவேறிவிட்டன.

அந்த நார்வே நாட்டு பேராசிரியர் ஒரு மகான் என்றால் அதற்கு சற்றும் குறையாமல் நம் நாட்டுப் பேராசிரியர் திரு. சிவகுமார் அவர்கள் மகாமகானாகத் திகழ்கின்றார். ஒரு மிகப்பெரிய புரிவறிவைக் கோரும் உலகத் தத்துவமேதைகளின் கடினமான தத்துவக் கொள்கைகளையும் மானுட சிந்தனை வளர்ச்சியையும் பற்றி வாசிக்கிறோம் என்று நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரையிலும்  கொஞ்சம்கூட தோன்றவேயில்லை. அந்நாவலில் வரும் சோஃபி என்கிற பதினான்கு வயது சிறுமிக்கு எவ்வளவு எளிதாக விளக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக மிக எளிமையாக கணிதம், அறிவியல், வரலாறு, வான சாஸ்திரம், சுற்றுச்சூழலியல், இருப்பியல், அந்நியமாதல், தர்க்கவியல் என அனைத்தும் வாசிக்கும் யாவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படியாக விளக்கப்பட்டுள்ளன.

தத்துவம் என்று சொல்லிவிட்டு இவள் என்னடா அறிவியலையும் கணிதத்தையும் பற்றிப்பேசுகிறாளே என்று எண்ணவேண்டாம். நான் இதுநாள்வரை தத்துவம் என்றால் எல்லோராலும் புரிந்துகொள்ளமுடியாத ஒரு மர்மமான புதிர் என்றே நினைத்திருந்தேன். முற்றும் துறந்த முனிவர்களின் வாயினின்று அவ்வப்போது உதிரும் மேற்கோள்கள்தான் “தத்துவம்” என்று நினைத்து “அதற்கெல்லாம் நான் சரிப்பட்டு வரமாட்டேன்” என்று ஒதுங்கியிருந்ததை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பு வருகிறது. ஆமாம் சார். உண்மையில் என் மடத்தனத்தை எண்ணி என்னைப் பார்த்து நானே சிரித்துக்கொள்கிறேன்.

நான் தத்துவத்தைப் பற்றி என்ன பூதாகரமாக நினைத்துக்கொண்டிருந்தேனோ அதை சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது இந்நாவல். என்னை ஒரு புதிய மனுஷியாக பிறப்பெடுக்க வைத்திருக்கிறது. இதுவரை நான் வாழ்ந்த அறியாமை என்ற உலகத்திலிருந்து பிய்த்து எடுத்து தெளிந்த நீரோடை போன்ற ஔிமயமான உலகத்திற்கு என்னைத் தூக்கி வீசியிருக்கிறது.

என்னை அன்றாடம் சூழ்ந்திருக்கும் மேலே விண்ணிலிருக்கும் சூரியன் முதல் கீழே என் காலடியில் நசுங்கும் புழு, புல் வரை அனைத்திலும் என்னைச் சுற்றி என்னுடன் வாழும் சக மனிதர்களிடத்திலும் நான் பார்க்கும் பொருட்கள் ஒவ்வொன்றிலும் வெளிப்படையாகத் தெரியாத கண்ணுக்குப் புலப்படாத ஒவ்வொருவர் மனதில் நிறைந்திருக்கும் எண்ணங்களிலும் நீராக, நிலமாக, நெருப்பாக, காற்றாக, ஆகாயமாக தத்துவம் இருந்திருக்கிறது. என் ஊனக்கண்களுக்கு தெரியாமல் அது மறைந்திருக்கிறது. விழியிருந்தும் குருடியைப் போலவே இத்தனை காலமும் இருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் மிகவும் வெட்கமாக இருக்கிறது. இத்தகைய குற்ற உணர்ச்சிக்குக்கூட என்னை இந்நாவல் ஆட்படுத்திவிட்டது என்றும்கூட நான் சொல்வேன்.

இப்போது என் மனம் எதை நினைத்து பரிதவிக்கிறது என்றால், “ஐயோ! இன்னமும் என்னைப் போல எத்தனை பேர் விழியிருந்தும் குருடர்களாக வீண்பெருமை பேசித் திரிகிறார்களோ! எப்போது அவர்கள் கையில் இந்நாவல் கிடைக்குமோ! எப்போது அவர்கள் அவர்களின் இருண்ட உலகிலிருந்து ஔியுலகிற்கு தூக்கிவீசப்படுவார்களோ!” என்றுதான். அரை நூற்றாண்டு வாழ்ந்தவர்களுக்கானது தத்துவம் என்றல்லாது பதினான்கு பதினைந்து வயதாகும் பருவ வயதினரிலிருந்து பழுத்து முதிர்ந்து தள்ளாடி விழும் நிறைமிகு வயதினர் வரை இவ்வுலகுபற்றிய பொறுப்புணர்ச்சியைக் கொண்டுவரும் வல்லமைமிக்க மானுட சிந்தனையே தத்துவம் என்பதை மிக ஆணித்தரமாக வலியுறுத்துகிறது இந்நாவல்.

இந்த பொறுப்புணர்ச்சி மிக்க சிந்தனை நார்வேயின் ஜோஸ்டைன் கார்டெர் அவர்களுக்கு தோன்றியதோடு மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தும் முயற்சியிலும் இறங்கி இப்புகழ்மிக்க நாவலை எழுதியுள்ளார். அவருக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களும் நன்றிகளும் என்றும் உரித்தாகுக! அது அப்படியே நார்வேஜிய மொழியிலேயே இருந்திருந்தால் நான் இன்று இப்போது இத்தனை ஆர்ப்பாட்டத்துடன் தங்களுடன் பேசிக்கொண்டிருக்கமாட்டேன். நம் சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் திரு. சிவகுமார் அவர்கள் இந்நூலின் பெருமையை உணர்ந்து நம் தமிழ்மொழிக்கு அருமையாக மாற்றியிருக்கிறார் பாருங்கள்….! அங்குதான் என்னால் என் பொங்கியெழும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை!

தத்துவத்தின்பால் அவருக்குள்ள ஈடுபாட்டையும் புரிதலையும் தமிழ்மொழிப் புலமையையும் வியந்து ஆராதித்துக்கொண்டிருக்கிறேன்.  நான் வாசிக்கையில் ஒரு கடினமான தத்துவக் கொள்கையை இப்படி ஒரு எளிமையான தமிழில் சொல்லிவிட இவரால் முடிகிறதே என அத்தத்துவத்தைப் புரிந்துகொண்டதில் உண்டான அறிதலின் மகிழ்ச்சியைவிட எளிய தமிழ்மொழிபெயர்ப்பின் அதிசயத்தை வியந்துகொண்டிருந்ததே அதிகமாக இருந்தது. அந்த வியப்பினாலேயே ஒவ்வொரு தத்துவவாதியின் ஒவ்வொரு கொள்கையையும் திரும்பத் திரும்ப வாசித்தேன்.மனனம் செய்யப்பட்டு திரும்ப ஒப்புவிக்கப்படும் திருக்குறளைப் போல; மேடைகளில் ஒரு முறைக்கு இருமுறை வாசித்துக்காண்பிக்கப்படும் சிறந்த கவிதை வரிகளைப் போல; அடுத்தடுத்த தத்துவவாதிகளின் சிந்தனை இருக்குமானால்  நான் என்ன செய்வேன்!

என்னால் அடுத்த தத்துவத்தை நோக்கி உடனடியாக செல்லமுடியவில்லை. அடுத்த தத்துத்திற்கு வந்தபிறகு முந்தைய தத்துவம் அதாவது முந்தைய மானுட சிந்தனை என்னவாக இருந்தது என்பதை மீட்டு வந்து நோக்காமல் இருக்கமுடியவில்லை.

சாக்ரடீஸிலிருந்து அவரின் மாணவர் பிளாட்டோவின் சிந்தனைக்குத் தாவினால் ஒரு நுண்ணிய தளத்தில் பிளாட்டோ அவருடைய ஆசிரியரின் சிந்தனையிலிருந்து சிறிது முன்னேறியிருப்பார். அப்படியே அவருடைய மாணவர் அரிஸ்டாட்டிலுக்கு தாவினால் அரிஸ்டாட்டில் வெளிப்படையாகவே அவரின் ஆசிரியரினின்று மாறுபட்டிருப்பார். கொஞ்சம்கொஞ்சமாக உலகமைய சிந்தனையிலிருந்து மனித மைய சிந்தனைக்கு மானுட சிந்தனை வளர்ச்சி முன்னேறி வந்திருப்பதை இந்நாவலில் கண்கூடாகக்காணலாம். கி.மு. 350 க்கு முந்தைய பண்டைய மேதைகளிலிருந்து இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டுவரை உள்ள அறிஞர்கள் வரை பேசப்படுபவை படைக்கப்படுபவை கண்டுபிடிக்கப்படும் வானவியல் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தத்துவ சிந்தனைகளே!

எனக்கு இந்நாவலை வாசிக்கும்போதுதான் சாக்ரடீஸின் மாணவர் பிளாட்டோ என்பதும் பிளாட்டோவின் மாணவர்தான் அரிஸ்டாட்டில் என்பதும்  தெரியவந்தது.மிகவும் வியப்படைந்தேன். அவர்கள் மூவரும் புகழ்பெற்ற கிரேக்க தத்துவமேதைகள் என்று பள்ளி வகுப்பில் மனப்பாடம் செய்திருந்தேன். இவர்கள் மூவரின் மேல் இப்படி பைத்தியமாயிருந்திருக்கிறேனே இவர்கள் மூவரும் இப்படி வரிசையாக ஆசிரியர்கள் மாணவர்கள் என்ற அவர்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமல் இருந்திருக்கிறேனே என கூசிக்குறுகிப்போனேன். என் மனம் பதட்டமாகிவிட்டது. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சரி இனி சற்றும் தாமதிக்கக்கூடாது என சர்வநாடியும் ஒடுங்கிப்போன என் உளத்தை மீட்டெடுத்து நாவலைத் தொடர்ந்து வாசிக்கலானேன்.

சாக்ரடீஸ் எப்போதும் சொல்வாராம்,”எனக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான், அது என்னவென்றால் ‘ஒன்றுமே எனக்குத் தெரியாது’ என்பதுதான்” என்று. அவர் எல்லாவற்றையும் தெரிந்துவைத்துக்கொண்டு ஒன்றுமே தெரியாததுபோல் இருந்திருக்கிறார். நான் என்னடாவென்றால் ஒன்றுமே தெரியாமல் எல்லாவற்றையும் தெரிந்தவள்போல் ஆட்டம் போட்டுக்கொண்டிருந்திருக்கிறேன் என்று நினைக்கையில் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் ஆறாகப் பெருகியது.

மூன்றாவதாக வந்த அரிஸ்டாட்டில் யாரென்று தெரிந்தவுடனேயே இப்படியாக அதிர்ச்சியுற்று மீண்டும் மெல்ல அடங்கிய என் மனம் அடுத்தடுத்ததாக வந்த பேரதிர்ச்சிகளால் தன் முழுக்கட்டுப்பாட்டையும் இழந்தது. ஏனெனில் நான் சற்றும் எதிர்பார்த்திராவண்ணம், நான் யாரையெல்லாம் தங்கள் இணையதள கட்டுரைகள் விமர்சனங்கள் வாயிலாக தத்துவவாதிகளாக  பெயரளவில் மட்டும் தெரிந்துவைத்திருந்து, “இவர்களையெல்லாம் பற்றி எப்போது தெரிந்துகொள்வேனோ! இவர்கள் எழுதிய நூல்களை எப்போது வாசிப்பேனோ! அப்படியே வாசித்தாலும் அவர்கள் கூறுவதை எல்லாம் என்னால் புரிந்துகொள்ள முடியுமா” என்றெல்லாம் நினைத்து ஒவ்வொரு தடவையும் எவர்களின் பெயர்களை வாசிக்கும்போதெல்லாம் பெருமூச்சு விட்டுக்கொள்வேனோ அவர்களெல்லாம் வரிசையாக என்னிடத்திலே அறிமுகம் செய்துகொண்டு அவர்களின் தத்துவ சிந்தனைகளை என்னுடன் பகிர்ந்துகொண்டால் எனக்கு எப்படி இருக்கும்!

என்னால் என் கைகால்கள் உதறலெடுப்பதை நிறுத்த முடியவில்லை. மனித கொரில்லா ஒன்று தன் பேரானந்தத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக பெருங்குரலெடுத்து ஊளையிட்டு கைகளை விரித்துக்கொண்டு ஓடியும் மரத்திற்கு மரம் தாவியும் கிளைக்குக்கிளைத் தாவித் தொங்கியபடியும் கொண்டாடுமோ அப்படியான உளநிலைக்கு ஆனந்தக்கண்ணீருடன் செல்லத் தொடங்கிவிட்டிருந்தேன். நான் கேள்விப்பட்ட தத்துவவாதிகள் ஒவ்வொருவர் பற்றியும் அவர்களின் சிந்தனைகளைப் பற்றியும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் என்ற எண்ணமே என்னைப்  பரவசத்தில் ஆழ்த்திக்கொண்டிருந்தது. என்னையே நான் நம்பாமல் அவ்வப்போது கிள்ளிப்பார்த்து சுய உலகிற்கு என்னை மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

நாவல் முடியுந்தறுவாயில் என் அன்றாட வாழ்வில் என்கூடவே இருந்துவரும் இத்தனை நெருக்கமான வாழ்க்கைத் தத்துவத்தை மானுட சிந்தனையை இவ்வுலகின்மீது மனிதன் கொண்ட பொறுப்புணர்வை ஏதோ அயலானது என்றெண்ணி ஒதுக்கிவிட்டிருக்கிறேனே என்று என் மனம் மிகுந்த பாரமாவதைத் தடுக்க முடியவில்லை. மானுடராகப் பிறந்த ஒவ்வொருவரும் தான் வாழும் இவ்வுலகத்தைப் பற்றி  அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகத்தை இருத்தி வைத்திருக்கும் பிரபஞ்சத்தைப் பற்றியும் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்த அண்டசராசரம் மனிதன் தோன்றுவதற்குக் காரணமாயிருந்துள்ளது. ஆனால் மனிதன் தன் அறியாமையால் தன் தலைக்கனத்தால்  தனக்கு உயிர் தந்த அந்த ஆதிமூலாதாரத்தாயையே எப்படியெல்லாம் சித்ரவதை செய்து கொன்றழித்துக்கொண்டிருக்கிறான் என்று இந்நாவல் வாசிக்கையில் மனம் பதறுகிறது. மனிதன் ஒன்றும் போய் அந்த பஞ்சபூதங்களையும் கட்டியாள வேண்டிய சக்தியை அந்தக்காலம் போல் காட்டிற்குச் சென்று நெடுங்காலம் தவமிருந்து பெறவேண்டியதில்லை. நான் ஏன் இங்கு இதைச் சொல்கிறேன் என்றால் சிறுவயதில் நிறைய சாமி படங்களைப் பார்த்துவிட்டு  நானும் இந்த முனிவர்களைப் போல காட்டுக்குச் செல்லவேண்டும்; அவர்களைப்போல ஒற்றைக்காலில் நின்று தவம்புரிந்து  என்னென்ன ஆற்றல்கள் வேண்டுமோ அதை என்முன் தோன்றும் தெய்வத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும் ; என்றாவது ஒருநாள் வீட்டைவிட்டுக் கிளம்பி காட்டுக்குச் சென்றுவிடவேண்டும் என்றே எண்ணம் கொண்டிருந்தேன். அந்த மயக்கம் தங்களைக் கண்டுகொள்ளும் வரையில் இருந்தது என்று சொன்னால் தாங்கள் நம்பமாட்டீர்கள்! தங்கள் விஷ்ணுபுர இலக்கிய விருதுவிழாவில் முதன்முறையாக முதல்நாள் கலந்துகொண்ட அன்றுதான் என் மனதிலிருந்த பல கேள்விகளுக்கு விடை கிடைத்தன. சிறுபிள்ளைத்தனமான குழப்பங்கள் தெளிவாயின.

அதன் தொடர்ச்சியாக தங்கள் வெண்முரசுவை வாசிப்பதினின்றும் தங்கள் புனைவுகளை வாசித்ததினின்றும் தங்களின் ” நவீன தமிழிலக்கிய அறிமுகம்” அறிமுகப்படுத்திய இந்திய, ரஷ்ய எழுத்தாளர்களை வாசித்ததினின்றும் நான் என் இருள்மிக்க உலகத்திலிருந்து வெளிச்சத்தை நோக்கி நடைபோடத் தொடங்கினேன். இன்று அந்த வாசிப்பின் தொடர்ச்சியாகத்தான் சோஃபியின் உலகத்தையும் கண்டுகொள்ள முடிந்தது. இதை நான் மட்டும் கண்டுகொண்டால் போதாது. எனக்குத் தெரியவில்லை,

இந்நாவல் எந்த அளவில் நம்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என. அதிலும் நம் கல்விமுறையில் நிச்சயம் இதன் தாக்கம் இருக்கவேண்டும் என விரும்புகிறேன். 1950, 60 களில்தான் தத்துவம் ஒரு கட்டாயக் கல்லூரிப்பாடமாக இருந்துவந்துள்ளதாம். இப்போது தேர்ந்தெடுத்து கற்கப்படும் ஒரு துறையாக இருக்கிறது என்று இந்நூலின் முன்னுரையில் பேராசிரியர் குறிப்பிடுகிறார். இந்நூலை வாசித்ததிலிருந்து, ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளிலிருந்தே கணிதம் அறிவியல் போல தத்துவத்தை ஏன் ஒரு கட்டாயப் பாடமாக வைக்கக்கூடாது என்று எண்ணத் தோன்றுகிறது. நீ எந்த சாதியைச் சேர்ந்தவன்? நீ எந்த அரண்மனை பங்களாவிலிருந்து வருகிறாய்? என்று கேட்பதற்குப் பதிலாக, நீ எந்த நிலத்தைச் சேர்ந்தவன்? நீ வாழும் பூமி எங்கிருந்து வந்தது? நீ உன் சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க என்ன செய்யப்போகிறாய்? என்று இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் மற்றவரைப்பார்த்து என்றைக்கு கேட்க ஆரம்பிக்கிறார்களோ அன்றுதான் மனிதப்பிறவி என்று ஒன்று தோன்றியதற்கான அர்த்தமிருக்கும்! இவ்வுலகில் அன்பும் சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்!

என்னை மேலும் விரிவாக தத்துவ சிந்தனைகளை நாடுவதற்கு தூண்டியிருக்கும் இந்நூலாசிரியருக்கும் அதை மிகச்சிறந்த வகையில் தமிழில் மொழிபெயர்த்திருக்கும் திரு. ஆர். சிவகுமார் பேராசிரியருக்கும் மீண்டும் என் பணிவான வணக்கங்களும் நன்றிகளும்!

நேரடியாக சந்திக்கும் பேறு தற்போது இல்லையென்றாலும் இணையதளம் மூலமாக தினமும் தங்கள் எழுத்துக்களாலும் மேடையுரைகளாலும் என்னை ஆசீர்வதித்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் என் அன்புமிக்க ஆசான் தங்களின் பாதங்களில் பணிந்து என் வணக்கங்களையும் நன்றிகளையும் இந்நேரத்தில் சமர்ப்பித்துக்கொள்கிறேன்!

இப்படிக்கு,

தங்கள் அன்புள்ள,

கிறிஸ்டி.

முந்தைய கட்டுரைஅஞ்சலி:கி.ரா
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 11