கதாநாயகி – குறுநாவல் : 8

கோரனுடன் சென்று கொண்டிருக்கையில் நான் அந்த இரட்டைப் பாறையை தொலைவிலேயே பார்த்து ஒரு கணம் நின்றேன். பின்னர் மீண்டும் காலெடுத்து வைத்து நடந்தபடி “அங்கே புலி இருக்கிறது இங்கேயே தெரியுமா கோரா?” என்றேன்.

”வெளியே நின்னா தெரியும்” என்றான்.

சட்டென்று எரிச்சல் வந்தது, உடனே சிரிப்பும் எழுந்தது, அதை அவன் நையாண்டியாகச் சொல்லவில்லை. அவர்களுக்கு நாம் நினைப்பது போன்ற நகைச்சுவை உணர்ச்சி கிடையாது என்று முன்னரே கண்டிருந்தேன். அவர்கள் எவரையும் நையாண்டி செய்வதில்லை, உட்பொருள் வைத்து எதையும் சொல்வதோ ஊகித்துச் சிரிப்பதோ இல்லை. நாம் பேசும் நகைச்சுவை எல்லாமே ஒன்றை மறைத்துச் சொல்லி கண்டுபிடிக்கும் விளையாட்டு. அவர்கள் மொழியை எதையும் மறைக்க பயன்படுத்துவதில்லை.

நேற்று வீட்டுக்கு உள்ளிருந்து கயிறை எடுத்துக்கொண்டு பின்னாலிருந்த கிணற்றுக்குச் சென்றேன். “கயறு எட்டுமாடே கோரா?” என்றேன்.

“நீளம் இருந்தா எட்டும் ஏமானே” என்றான்.

அவன் முகத்தை சீற்றத்துடன் ஏறிட்டுப் பார்த்தேன். அவன் யதார்த்தமாகச் சொல்லியிருக்கிறான் என்று தெரிந்தது. சிரிப்பு வந்துவிட்டது.

அதற்கு முன்பு ஒருமுறை “காப்ரியேல் நாடாரின் கடையில் கருப்பட்டி கிடைக்குமாடா கோரா?” என்று கேட்டேன்.

 “கடையில் இருந்தா கிடைக்கும் ஏமானே” என்று சொன்னான்.

ஆனால் அவர்களுக்கு வேறுவகையான நகைச்சுவை உண்டு. அதைச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்கள். ஒருவன் தடுக்கி விழுந்தால் அவர்கள் சிரிப்பதே இல்லை, அதில் சிரிக்க என்ன இருக்கிறது என்று அவர்களுக்குப் புரிவதில்லை. ஆனால் ஒரு பொருள் என எண்ணி நாம் இன்னொன்றை எடுத்துவிட்டால் சிரித்து சிரித்து குப்புற விழுவார்கள். ஒருமுறை நான் கல் என்று தவளை ஒன்றை எடுக்கப் போனேன். கோரன் மதியம் வரை சிரித்துக் கொண்டிருந்தான். ஒரு பொருள் இன்னொன்றாகத் தெரியும் வேடிக்கையை அவர்கள் ரசித்து முடிப்பதே இல்லை. அதை தெய்வங்களின் விளையாட்டு என்று கோரன் சொன்னான்.

அந்தப் பாறையை கடக்கும்போது நான் உள்ளே பார்த்தேன், பார்க்கவேண்டிய தேவையே இல்லை. அங்கே புலி இல்லை என உள்ளுணர்வே சொல்லியது.

கீழே பள்ளிக்கூடத்தின் முன்னால் குழந்தைகள் நின்றிருந்தனர். என்னை கண்டதும் ஆர்வத்தில் உச்சன் “வாத்யார் வருந்நே! கூஹேய்!” என்று ஓசையிட்டான். மற்ற குழந்தைகளும் சேர்ந்து ஓசையிட்டன.

நான் செல்வதற்குள் ஏழெட்டு குழந்தைகள் ஓடி வந்தன. முதலில் வந்த பெண்குழந்தை “புலி புலி புலி” என்றது.

“எங்கே?” என்று நான் சொன்னேன்.

“இந்நலே புலி வந்நு மாந்தி… புலி” என்றான் இன்னொருவன்.

“சரி எல்லாம் அமைதியா இருங்க. மானிட்டர் சொல்லட்டும்” என்றேன்.

உச்சன் சுருக்கமாக நடந்ததைச் சொன்னான். முந்தையநாள் இரவு புலி வந்து பள்ளிக்கூடத்தில் நாங்கள் புதைத்த இடத்தை முகர்ந்து நகத்தால் கொஞ்சம் பிராண்டிவிட்டு சென்றிருக்கிறது. அங்கே நாலைந்து சொட்டு சிறுநீரும் கழித்திருக்கிறது. “நான் மோந்து பாத்தேன்… மோந்து நோக்கியேன்” என்று அவன் சொன்னான்.

“சரி” என்று நான் சொன்னேன். ஒரு விசிலை அங்கே அலுவலகத்தில் இருந்து கண்டெடுத்திருந்தேன். அதை எடுத்து காட்டி “இதை நான் ஊதினா எல்லாரும் வந்திடணும்… எல்லாம் வந்து வரிசையா நிக்கணும். சத்தம்போடக்கூடாது” என்றேன்.

நாலைந்து குழந்தைகள் விசிலை வாங்கிப் பார்க்க ஆவலோடு வந்தன.

“இது வாத்யார் விசிலு… வேற ஆளு தொடக்கூடாது” என்றேன்.

“வாத்யார் விசிலு” என்று ஓடிவந்த ஒருவன் சொன்னான்.

எல்லாரும் சேர்ந்து “வாத்யார் விசிலு” என்றனர்.

நான் மீண்டும் விசில் அடித்தேன். அனைவரும் அமைதியடைந்தனர்.

“எல்லாரும் வாங்க… கிளாஸுக்கு வாங்க” என்றேன். ”மானிட்டர், கிளாஸை உக்கார வை.”

உச்சன் கிளாஸில் அனைவரையும் உட்காரவைத்தான். அவர்கள் இயல்பாகவே இரண்டு குழுக்களாக அமர்ந்தனர். முந்தையநாள் அமர்ந்துகொண்டதுபோல. அவர்களில் ஒழுங்கு தண்டனை வழியாக நிலைநிறுத்தப்படுவதல்ல. ஆகவே அதை மீறும் எண்ணமே அவர்களிடமில்லை. அதை தங்களுடைய இயல்பாக எடுத்துக்கொண்டனர். சின்னக்குழந்தைகள் ஓசை போடாமல் அமர்ந்திருந்தன.

நான் பெரிய குழந்தைகளுக்கு மீண்டும் ஆனா ஆவன்னா எழுதினேன். ஆறு எழுத்துக்களையும் எழுதியபின் அவற்றை வாசிக்கும்படி அவர்களிடம் சொன்னேன். அப்போது துப்பன் வந்து நின்றான்.

“எனக்கு ஆ ஆ” என்று அவன் சொன்னான்.

“வா வந்து உக்காரு” என்றேன். “ஆனா தனியா அந்த எடத்திலே உக்காரணும்… நீ படிக்கிறது வேற ஆ, சரியா?”

“வேற ஆ” என்றான்.

அவன் ஆர்வத்துடன் அமர்ந்துகொண்டான். மற்றவர்கள் படிப்பதை கூர்ந்து பார்த்து மெல்ல உதடுகளை அசைத்து அ, ஆ, இ, ஈ என்று சொல்லிக்கொண்டான்.

நான் சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொன்னேன். இம்முறை ஊரின் கதை. பஸ்ஸில் எப்படி ஏறுவது, எப்படி இறங்குவது, பஸ் எந்த ஊருக்கெல்லாம் செல்லும். குழந்தைகள் திக்பிரமை பிடித்து அமர்ந்திருந்தன.

அப்போதுதான் ஒன்றைக் கண்டுகொண்டேன். வழக்கமான பாடத்திட்டங்களில் இருக்கும் விஷயங்களை அவர்களுக்குச் சொல்லக்கூடாது. ஊரிலுள்ள குழந்தைகள் காட்டையே பார்த்ததில்லை. அவர்களுக்கு விலங்குகளை தெரியாது. ஆகவே அந்தக்கதைகளை விரும்பிக் கேட்கின்றன. காட்டில் அதைச் சொல்வதில் பொருளில்லை. காட்டிலுள்ள குழந்தைகள் அறிய விரும்புவது பஸ்ஸை, மின்சாரவிளக்கை, ஆகாயவிமானத்தை. ஆனால் அவர்களுக்கு அதைச் சொல்ல பாடத்திட்டத்தில் அனுமதியில்லை.

மதிய உணவுக்குப்பின் நானும் கோரனும் நீராவி நிறைந்திருந்த காற்றை உந்தி உந்தி கிழிப்பவர்கள் போல பங்களா நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நான் வீடு திரும்பியதுமே கோரனிடம் சில பொருட்களை வாங்கிவரச் சொல்லி நாடாருக்கு ஒரு குறிப்பு கொடுத்தனுப்பினேன்.

அதன் பின் சற்றுநேரம் வெறுமே படுத்திருந்தேன். பிறகு எழுந்து அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். You will see, my dear Sir, that I was mistaken in supposing I should write no more from this place, where my residence now seems more uncertain than ever. இந்த மொழி முதலில் சிக்கலான முடிச்சுகளான ஒரு கூடை போல முறுக்கமாக இருக்கிறது. பிறகு எப்படியோ அந்த முடிச்சுகளை அவிழ்க்க நம் அகம் பழகிவிடுகிறது. அதன்பின் நாம் உள்ளே செல்கிறோம். எங்கோ நாம் வாசித்துக் கொண்டிருப்பதை மறந்துவிடுகிறோம்.

அப்படி மறக்கும்போதுதான் புத்தகத்தின் பக்கங்களில் இருந்து மனிதர்கள் மெய்யாக எழுந்து வரத்தொடங்குகிறார்கள். புத்தகங்களில் எழுத்துக்களாக, சொற்களாக அவர்கள் கட்டுண்டிருக்கிறார்கள். அந்த கண்ணிகள் உடைய வேண்டியிருக்கிறது. அதன்பின் அவர்கள் கண்முன் நின்றிருக்கிறார்கள். முழுமையான மனிதர்களாக.

பேய்களும்கூடத்தான் எழுந்து வருகின்றன என்று எண்ணிக் கொண்டேன். புன்னகை வந்தது. அறைக்குள் பார்த்தேன், ஜன்னல்களின் வெளிச்சம் விழுந்து கிடந்தது. காற்றில் ஆடும் மரங்களின் இலைகள் வீழ்த்திய நிழல்கள் தரையில் பரவி அலைகொண்டன. ஆனால் அங்கே நான் ஓர் இருப்பை, துணையை உணர்ந்தேன்.

புத்தகங்களின் பக்கங்களில் கட்டுண்ட பேய்கள். அந்த எண்ணமே ஒரு பரபரப்பை ஊட்டியது. மனிதர்கள் இங்கே வாழ்ந்து மறைகிறார்கள். முற்றாக மறைந்துபோக எவருக்குமே விருப்பம் இல்லை. அது இயல்பானதே. அது இயற்கையின் மிகப்பெரிய முரண்பாடு. ஒவ்வொரு உயிரிலும் இயற்கை தங்கிவாழும் விழைவை நிறைத்து வைத்திருக்கிறது. அதுதான் அந்த உயிரை போராடி வாழச்செய்கிறது. சாவை அஞ்சவைக்கிறது. ஆனால் அதுவே அந்த உயிரை இறுதிமுடிவென்னும் இயற்கையின் நெறியை ஏற்க முடியாமலாக்குகிறது.

எவ்வண்ணமேனும் எஞ்சிவிட விழைகிறார்கள் மனிதர்கள். எதையாவது செய்து, எதையாவது மிச்சம் வைத்து, எவர் நினைவிலாவது நீடித்து. பிள்ளைகள் அதற்கான இயற்கையான வழிகள். வாழ்ந்து முதிர்ந்த கிழடுகள் கூட பேரப்பிள்ளைகளை வருடி வருடி மகிழ்கின்றன. எஞ்சாமல் போய்விடுவோம் என எண்ணி திடுக்கிடாத மனிதர்கள் எவருமில்லை.

எஞ்சவிட்டுச் செல்வதில் மிகச்சிறந்தது கதைதான். அது அழியாமல் நீடிக்கும். எங்களூரில் புலிபிடுங்கி சிதம்பரம்பிள்ளை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாணல் பிடுங்கப் போனபோது புலியின் வாலைப் பிடித்தார். புலி அவரைப் பிடித்தது. அவருடைய கொள்ளுப்பேரன்கள் இன்றைக்கும் அவரால் அறியப்படுகிறார்கள். கதையாக மாறிய முத்துப்பட்டனும் மாயாண்டிச்சாமியும் இன்றும் கோயிலில் அமர்ந்திருக்கிறார்கள்.

கதையை எழுதிவைத்தால் என்றுமிருக்கலாம். ஷேக்ஸ்பியர் அழியவில்லை. அவரால் எழுதப்பட்டவர்களும் அழியவில்லை. காரியும் ஓரியும் அழியவில்லை. கபிலரும் பரணரும் வாழ்கிறார்கள். கதைகளெல்லாம் நினைவுச் சின்னங்கள். எல்லா நூல்களும் கல்லறைகள்தான். அவற்றில் இறந்தவர்கள் அடக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவர் மேல் ஒருவர் என. ஒருவருடன் ஒருவர் பிணைந்து. அடுக்கடுக்காக.

அவர்கள் ஒரு தொடுகைக்காக காத்திருக்கிறார்கள். கண்விழித்து புன்னகைக்கிறார்கள். நீண்டநாள் காத்திருப்பு போல பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்கள் நம்மை எடுத்துக் கொள்கிறார்கள். நம் உலகை ஆக்ரமித்து தங்களை நிறுவிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் அவர்களுக்கேற்ப மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களைத் தொட்டு எழுப்பிவிட்டோம் என்றால் நாம் நம் உலகை எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் அவர்களிடம் ஒப்படைக்கிறோம் என்று பொருள்.

நான் பித்தெழுந்த கண்களுடன் வாசித்துக் கொண்டிருப்பதை நானே தொலைவிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் என்று படுகிறது. ஏனென்றால் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு எனக்கு நினைவில் இருப்பது என்னைத் தொலைவிலிருந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும் கோணம்தான். அப்போது என் முகத்தைப் பார்க்கும் எவரும் எனக்கு பேய் பிடித்திருப்பதாகவே நினைப்பார்கள். ஒருவகையில் அது உண்மை, கதைகளை வாசிப்பவன் பேய்களால் ஆக்ரமிக்கப்பட்டவன்.

கடந்தகாலப் பேய்கள், வரலாற்றுப் பேய்கள். வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, வாழ்ந்தவர்களில் வாழ்ந்தவர்களும்கூட. பேய்களில் அந்த வேறுபாடில்லை. ஃபிரான்ஸெஸ் பர்னிக்கும் ஈவ்லினாவுக்கும் வேறுபாடில்லை. இருவரும் ஒரே பரப்பில், ஒரே இயல்புகளுடன் வாழ்கிறார்கள். இருவருக்கும் சாவில்லை.

சாவு உண்டு, இந்த நூலை எவருமே வாசிக்காமலானால் அவர்கள் அழிந்துவிடுவார்கள். அப்படி எத்தனையோ ஆயிரம் புத்தகங்கள் மறைந்திருக்கும். பாப்பிரஸ் தாள்களில், ஓலைச் சுவடிகளில். அதற்கு முன் களிமண் பலகைகளில். ஆனால் இன்னமும் வாசிக்கப்படாத நூல்கள் உள்ளன. எகிப்தின் சித்திர எழுத்துக்களை வாசித்துவிட்டார்கள். ஆகவே அரசி நெஃப்ரிடிட்டி உயிர்த்து எழுந்து வந்து உலகை நோக்கி புன்னகைக்கிறாள். சிந்துவெளியில் இருந்து இன்னமும் எவரும் எழவில்லை. ஆறாயிரம் ஆண்டுகளாக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த நூலை எவரும் வாசிக்காமலாக வாய்ப்புண்டா? தொழில்நுட்பம் எல்லாவற்றையும் பாதுகாக்கிறது. இது அச்சிடப்பட்டுவிட்டது. எங்கோ ஒரு புத்தகம் எஞ்சியிருக்கும். எங்கோ ஒருவர் அதை வாசிக்க வாய்ப்பிருக்கிறது. அதுவரை இந்தப் பேய்கள் உறங்கும் லோகஸ்டுகள் பாலைவெளியில் மழைகாத்து முட்டைகளின் வடிவில் கிடப்பதைப்போல.

என் உள்ளம் ஒரு பக்கம் பீரிட்டுக் கொண்டிருந்தது. மறுபக்கம் நான் அதைப் படித்துக் கொண்டும் இருந்தேன். ஈவ்லினாவின் கசப்பும் நஞ்சும் தோய்ந்த வரிகள். It was some time ere she could give, or I could hear, the account of her visit; and then she related it in a hasty manner; yet, I believe I can recollect every word. அவள் நிகழ்வுகளினூடாக எண்ணங்களைக் கலப்பதில்லை. ஆனால் கடிதங்களில் அவள் வெளிப்படுகிறாள்.

காப்டன் மக்கின்ஸி இன்று அவர் மனைவியை கூட்டிவந்தார். அந்தப்பெண் இங்கே ஒரு ரொட்டிக் கடைக்காரரின் மகள். இங்கே இருக்கையில் அவளுக்கு மிஞ்சிப்போனால் நான்கு நல்ல ஆடைகள் இருந்திருக்கலாம். வெளியே போகும்போது அணிவதற்காக ஒரு ஜோடி நடுத்தர மதிப்பு கொண்ட ஷூக்கள். நாலைந்து பட்டுக் கையுறைகள், ஒரு சில நகைகள். வைரம் இருந்திருக்க வாய்ப்பே இல்லை. இன்று அவள் அணிந்திருக்கும் நகைகளில் எல்லாமே உயர்தர வைரங்கள் இருந்தன. அவளுடைய ஷூக்களுக்காக இங்குள்ள உயர்குடிக் கன்னியர் ஏங்குவார்கள். அவளுடைய லேஸ்கள் எல்லாமே அசல் சீனப்பட்டுக்கள்.

அவள் பெயர் ஹெலனா. குடும்பப்பெயர் என ஏதுமில்லை. எனக்கு மக்கின்ஸி அவளை அறிமுகம் செய்யும்போது ஹெலனா என்று மட்டும்தான் சொன்னார். அவளை நான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கோடை நாடொன்றில் வாழ்ந்தமையால் அவள் கன்றிப்போய் வாதுமை நிறத்துக்கு வந்திருந்தாள். அவளுடைய பூர்வீகம் போலந்து போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடாக இருக்கலாம். கூரிய, சற்று மேலேந்திய மூக்கு. ஒடுங்கிய கன்னங்களுடன் ஆப்பு வடிவ முகம். பச்சைக்கண்கள். சிவப்புக்கூந்தல்.

அவளை மதிப்பிட எனக்கு நீண்டநேரம் ஆகியது. முதலில் அவள் மென்மையான அசைவுகளுடன் ஒரு வெண்ணிற இறகு மிதந்து பறந்து வருவதுபோல உள்ளே வந்தபோது,கையுறைகளை இயல்பான நளினத்துடன் கழற்றியபோது, பெரிய கோட்டை கழற்ற உதவிய சேவகனிடம் மிதமான புன்னகையுடன் நன்றி சொன்னபோது, எதிர்ப்பட்டு அவளை வரவேற்ற ஆர்வில் பிரபுவிடம் தன் கையை இனிய புன்னகையுடன் அளித்து அவரால் முத்தமிடப்பட்டதும் இடைதாழ்த்தி “எவ்வளவு இனிமை!”என்றபோது பிறவிச் சீமாட்டி போலிருந்தாள். நான் ஏமாந்துவிட்டேன்.

அதன் பின் உள்ளே வந்து அங்கிருந்த பெண்களை அறிமுகம் செய்துகொண்டபோது அவள் செயற்கையான ஒரு மிடுக்கை பாவனை செய்தாள். அது கொஞ்சம் மிகையாக இருந்தது. மிகக்குறைவாகப் பேசினாள். உபச்சாரச் சொற்கள் மட்டும். விருந்துகளில் செய்யவேண்டிய ஒவ்வொரு சிறுசெயலையும் மிகச்சரியாகச் செய்தாள். கணப்பருகே அமர்ந்தபோது கவுனின் கீழ் அலைகளை மிகச்சரியாக எடுத்துவிட்டுக் கொண்டாள். ஒயின் கொண்டுவரப்பட்டபோது கோப்பையை மலர்கொய்வதுபோல எடுத்துக் கொண்டு கையில் உள்ளங்கை சூடு அதில் பரவுவது வரை வைத்திருந்து விட்டு, மூக்கருகே தூக்கி சற்றே முகர்ந்து, பாராட்டும் பாவனையில் தலையை அசைத்தபின் ஒரு சொட்டு அருந்தி, உடனே அதிலிருந்து கவனத்தை விலக்கி அருகே திருமதி மிர்வின் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு “ஆமாம், எவ்வளவு உண்மை!”என்றாள்.

எல்லாமே மிகச்சரியாக இருந்தன. எல்லாமே முற்றிலும் பிழையற்றதாக இருந்தன. அதுவே எனக்கு அவள் எவள் என்று காட்டியது. இவை இவளுடைய இயல்புகள் அல்ல, இவள் இவற்றை பயின்றிருக்கிறாள். இவற்றை நடித்துக் கொண்டிருக்கிறாள். எங்கோ ஒரு பிழை நிகழும், ஒரு விரிசல் விழும். அதை நான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தேன்.

திருமதி மிர்வின் ஏதோ நாவல் பற்றிப் பேசிக்கொண்டிருந்தாள். கிரிஸ்ப் ஒரு செய்திக்கட்டுரை பற்றிச் சொன்னார் பேச்சு ஒன்றையொன்று தொடாத பற்சக்கரங்கள் போல ஓடிக்கொண்டிருந்தது. காப்டன் மக்கின்ஸியும் ஆர்வில் பிரபுவும் உள்ளே சென்றனர். அவர்கள் அங்கே கடினமான மது அருந்தப் போகிறார்கள். அதன்பின் அவர்கள் எதையும் கவலைப்பட மாட்டார்கள். டையை நெகிழ்த்துவிட்டு கோட்டின் பித்தான்களை கழற்றிக்கொண்டு உரக்கச் சிரிக்கலாம். கூச்சலிட்டுப் பேசலாம், எவரிடமும் எதையும் சொல்லலாம். எல்லாம் மதுவின் கணக்குக்குப் போய்விடும்.

ஆண்களுக்குப் பிரச்சினையே இல்லை. மக்கின்ஸி தன்னை ஒரு நிலக்கரித் தொழிலாளியின் மகனாக, கடுமையாக படித்து அடிப்படைத் தேர்ச்சி அடைந்து ராணுவப்பள்ளியில் சேர்ந்து, பர்மாவிலும் மலேயாவிலும் ராணுவப்பணி செய்து, போர்க்களங்களுக்குப் போய் பதவி உயர்வு பெற்று நாற்பது வயதில் காப்டனாக ஆனவராக வெளிப்படையாகவே காட்டிக்கொள்ளலாம். “மன்னிக்கவேண்டும், நான் களத்திலிருந்து வந்த படைவீரன். கொஞ்சம் கரடுமுரடானவன். எனக்கு இதெல்லாம் தெரிவதில்லை, புரிவதுமில்லை.”

அதற்கு இந்த உயர்குடி வரவேற்பறைகளில் ஒரு மதிப்பிருக்கிறது. அதை ஒரு செல்லுபடியாகும் நாணயமாகவே நிறுவி விட்டார்கள். “நாம் இங்கே உயர்தர ஒயினுடன் கணப்பின் முன் அமர்ந்திருக்கையில் நம் வீரர்கள் அங்கே கொட்டும் மழையில் கொடுங்காடுகளிலும் பாலைவனத்தின் எரியும் வெயிலிலும் காட்டுமிராண்டிகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்று எப்போதும் எவரோ ஒரு கிழவர் சொல்வார். அவர் ஓர் ஓய்வுபெற்ற ஜெனரலாக இருப்பார். அல்லது படைப்பணி செய்த பிரபு. அவருக்கு சட்டென்று இந்த போலிச்சொகுசு வாழ்க்கை அளிக்கும் குற்றவுணர்வில் இருந்து தப்ப ஒரு வழி அது.

அந்த வழியை அத்தனை பேரும் பற்றிக்கொள்வார்கள். ”ஆம், நாம் அவர்கள் மேல் அமர்ந்திருக்கிறோம்” என்பார்கள். “அவர்கள் நம் அடித்தளக் கற்கள்” என்பார்கள். அந்த கொடியைப் பற்றிக்கொண்டு ‘படைவீரன்’ மேலேறிவிடுவான். “அதை நான் சொல்லக்கூடாது, ஆனால் நிலைமைகள் உண்மையிலேயே மோசம்தான். இப்படித்தான் சென்ற ஜனவரியில் மலேயாவின் காட்டில்..” என ஆரம்பிக்கவேண்டும். ஒரு மயிர்க்கூச்செறியும் கதையைச் சொல்லவேண்டும். அந்தக்கதை பலசமயம் பலரால் அவர்களின் அனுபவமாகச் சொல்லப்பட்டதாகவும் இருக்கும்.

எப்படியானாலும் அதற்கு இங்கே பெரும் மதிப்பு உண்டு. அந்தக் கதையால் அல்ல, அந்தக் கதைக்குப் பின் ஒவ்வொருவருக்கும் தங்களை வெளிப்படுத்த வாய்ப்பு அமைகிறது என்பதனால். தேசபக்தையாக நடிக்கலாம். வன்முறையே அறியாத உயர்குடி மெல்லியளாக பாவனை செய்யலாம். பட்டுக்கைக்குட்டையால் கண்ணீரை மெல்ல ஒற்றிக்கொள்ளலாம். அரிதாகச் சிலர் போர்க்களத்தில் இருக்கும் உறவினரை நினைத்து கண்ணீர்விடுவதும் உண்டு.

கிரிஸ்ப் ஏதோ சொன்னார். அவருடன் வந்த அந்தச் சிறுபெண் அதை கேட்டும் கேளாதவள் போலிருந்தாள். அவள் பெயர் ஃப்ரான்ஸெஸ். அவள் எழுதும் நாட்குறிப்புகளை அவர் உயர்குடிச்சூழலில் புழக்கத்திற்கு விடுகிறார். அவளை கண்டடைந்தவர் தானே என்று காட்டிக்கொள்கிறார். அவளுடய வரிகளை எவரேனும் பாராட்டினால் அவர் அந்தப்பாராட்டை ஏற்றுக்கொண்டு பெருமிதம் தோன்ற புன்னகை செய்கிறார். அப்போது அவள் வேறு எவரைப் பற்றியோ எவரோ பேசுவதுபோல் இருக்கிறாள்.

அவர் அந்தப் பாவனையை அப்போது ரசிக்கிறார் என்று தோன்றும். ஆனால் அவர் கொஞ்சம் கிழட்டுத்தன்மை கொண்ட ஏதாவது நகைச்சுவையைச் சொல்லும் போதும் அவள் அதே பொருட்டின்மையைக் காட்டுகிறாள். அது அவரை கொந்தளிக்கச் செய்கிறது. அவர் முகத்தில் அது தெரிவதில்லை. கண்களில் மட்டும் கண்ணாடித் துண்டை மெல்லத் திருப்பியதுபோல ஒன்று அசைகிறது. ஒரு வன்மம், ஒரு கொலைவெறி என்றே அதை நான் சொல்வேன். ஆமாம், கொலைவெறியேதான்.

இந்த உலகம் தன்னைவிட்டு அகன்றுவிட்டதென்று கிழவர்களுக்குத் தெரியும். அவர்களே அதை அவ்வப்போது சொல்லிக்காட்டவும் செய்வார்கள். ஆனால் நாம் அதை மறுக்கவேண்டும். அவர்களை நம்முடன் இழுத்துக் கொள்ளவேண்டும். அவர்கள் எதிர்பார்ப்பது அதை. அதில் நாம் சிறு உதாசீனம் காட்டினால்கூட அவர்கள் அதை அவமதிப்பாக எடுத்துக்கொள்வார்கள். கொலைவெறிதான் அடைவார்கள்.

ஆனால் அதை வெளிப்படுத்தாமலிருக்க சிலரால் முடியும். அவர்கள் மிதமிஞ்சிய கர்வம் கொண்டவர்கள். அந்த வெளிப்பாடே ஒரு மன்றாட்டுதான் என நினைத்துக் கொள்பவர்கள். அவர்களுக்குள் அப்போது நுரைக்கும் நஞ்சு இந்த லண்டனையே பொசுக்கிவிடும் சக்தி கொண்டது.

அதை அவர் கண்களில் நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவருக்குத்தெரியும். அவர் என்னை முழுமையாக தவிர்க்கும் பொருட்டு கண்களை என்னிடமிருந்து அப்பால் விலக்கி, கழுத்தை இறுக்கியிருப்பார். ஆனால் அவர் என்னை உடலால் நோக்கிக் கொண்டிருக்கிறார் எனறு எனக்குத் தெரியும். ஆகவே நான் அவரை பார்ப்பேன். அவர் என்னை பார்க்க வேண்டும் என்றால் என் பார்வையை விலக்கிக் கொள்வேன். நான் அவரை பார்க்கவில்லை என்று காட்ட சில அசைவுகளைச் செய்வேன். கோப்பைகளை இடம் மாற்றுவேன். கவுனின் அடுக்குகளைச் சீரமைப்பேன்.

எப்போது என்று அறியாமல் அவர் அறியாமல் திரும்பி என்னைப் பார்ப்பார். அப்போது என் உதடுகளில் நான் ஒரு நச்சுப்புன்னகையை வைத்திருப்பேன். ஏளனம் அல்ல. ஏளனத்தை அவர் எதிர்கொள்வார். கனிந்த முதியவரின் குனிந்து சின்னப்பிள்ளையைப் பார்க்கும் பாவனை போதும் அதற்கு. இது ஒரு பிரியமான புன்னகை. சிறுவர்களுக்கு அன்னை அளிக்கும் புன்னகை. அது அவரை பற்றி எரியச்செய்யும். அவருடைய நரம்புகள் பொசுங்கி சுருங்கும்.

அதை அந்தப்பெண் அறிந்திருந்தாள். ஃப்ரான்ஸெஸ். அவள் தனக்கு ஃபேன்னி என்று பெயரிடவிருப்பதாக கிரிஸ்ப் ஒருமுறை சொன்னார். ஃபேன்னி ஹில் கௌரவமானவர்கள் படிக்காத பழைய பாலியல் நாவல். ஆனால் அத்தனை பேரும் கௌரவமானவர்களாக இல்லாமலிருக்கும் தனியறைகளில் அதைப் படித்திருப்பார்கள். ஃபேன்னி என்ற பெயரில் அவள் எழுதினாளென்றால் மிகப்புகழ்பெற்றுவிடுவாள். விற்பனை மிகுந்து அவளுக்கு நிறையவே பணம் கிடைக்கும்.

அவள் என் மறுபக்கம். அவளுக்கு என் ஆடல் தெரியும். நாங்கள் கண்களால் சந்தித்துக் கொள்வோம். ஆச்சரியமாக என் கண்களும் அவள் கண்களும் ஒரு சொல்லைக்கூட இதுவரை பரிமாறிக் கொண்டதில்லை. அத்தனை சாமர்த்தியமானவளா அவள்? இல்லை, உண்மையில் எங்கள் நடுவே ரகசியமென்பதே இல்லை. எவராவது தங்கள் கண்ணாடிப் பிம்பத்தை ரகசியமாக கண்ணோடு கண் பார்த்துக் கொள்வார்களா என்ன?

கிரிஸ்ப் மீண்டும் ஏதோ சொன்னார். ஹெலெனா “ஆமாம், மனசாட்சி நம்மை கோழைகளாக்குகிறது” என்றாள்.

அந்த ஷேக்ஸ்பியர் மேற்கோள் இங்கே நைந்த காலணிபோல. ஷேக்ஸ்பியரே ஒரு பழைய மேஜைநாற்காலி போல. மரியாதையும் ஏளனமுகாக கணப்பருகே தூக்கி உட்காரவைக்கப்பட்ட கிழவர் அவர். அதை அந்த அவையில் சொல்வதென்பது அந்த அவையில் பழகியவள் அல்ல அவள் என்பதை காட்டுவது. அந்த அவையில் பேசுவதற்காக தயாரித்துக் கொண்டு வந்த ரொட்டிக்காரன் மகள்தான் அவள் என்பதை அறிவிப்பது.

நான் அவள் கண்களைப் பார்த்து புன்னகைத்து “எவ்வளவு உண்மை!” என்றேன். “ஆனால் நாம் மனசாட்சிக்குப் பழகிவிட்டிருக்கிறோம்” என்றேன்.

டோலாவே சீமாட்டி என்னை நோக்கி குறும்பாக உதடுகளை இறுக்கி புன்னகை செய்து “மெய்தான்…. பிரிட்டிஷாரின் மனசாட்சியே அவர்களை சிலசமயம் தோற்கடிக்கிறது” என்றாள்.

ஹெலெனா புரிந்துகொண்டு விட்டாள். அந்த வரி அங்கே சம்பிரதாயமான ஒரு அசட்டுச் சொற்றொடர். அதை எப்படி கடந்து செல்வதென்று அவளுக்கு தெரியவில்லை. அவள் முகம் வியர்த்து சிவந்துவிட்டது.

அவள் அங்கே ஏதாவது செய்து தப்பிவிடுவாள் என்று தோன்றியது. விடக்கூடாது என்று நான் மேலும் ஓர் அடி முன்னால் எடுத்து வைத்தேன். “நாம் இங்கே சொகுசாக அமர்ந்துகொண்டு மனசாட்சி பற்றிப் பேசுகிறோம். நம் நாட்டின் எளிய மக்களிடமே பிரிட்டிஷ் மனசாட்சி உள்ளது. கொல்லர்கள், கசாப்புக்கடைக்காரர்கள், தையற்காரர்கள், ரொட்டிக்காரர்கள், தோல்வேலைக்காரர்கள்…” என்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் சூழலே புரியாமல் உள்ளே வந்த மரியா மிர்வின் “ஆமாம், நானும்கூட அதைச் சொல்வதுண்டு. நம் வேலைக்காரர்களின் நீதியுணர்ச்சிகூட சமயங்களில் நம்மிடம் இருப்பதில்லை” என்றாள்.

அது முட்டாள்தனமான பேச்சு, ஆனால் அங்கே அனைத்தையும் விடக்கூர்மையானதாக ஆகியது.

ஹெலெனாவின் கண்கள் என்னைப் பார்த்தன. அவற்றில் இருந்தது கசப்பும் கடும் சினமும். அக்கணம் அவளிடம் உடைவாள் இருந்தால் என் கழுத்தில் பாய்ச்சியிருப்பாள். நான் அவளிடம் மிக மென்மையான சிரித்து “நீங்கள் இந்தியாவில் எவ்வளவு ஆண்டு இருந்தீர்கள்?”என்று கேட்டேன்.

அவள் உதடுகள் மெல்ல வளைந்தன. மிகமிக ஒவ்வாமை கொண்டால் மட்டுமே பெண்களின் உதடுகள் அப்படி வளையும். அதை அவர்கள் கூடுமானவரை மறைத்துக்கொள்ள முயல்வார்கள். அதை மீறி முகத்தில் வெளிப்படுவது அது.

இரண்டு ஆண்டுகள்” என்று அவள் சொன்னபோது குரல் அடைத்திருந்தது.

டோலாவே சீமாட்டி “அங்கே ஒரு சாதாரண ராணுவ அதிகாரிக்குக் கூட பத்துப் பதினைந்து வேலைக்காரர்கள் கிடைப்பார்கள் என்கிறார்கள். காலணிகளைப் போட்டுவிடுவதற்கே ஒருவன் இருப்பானாம். என் செவிலியின் தம்பி அங்கே தான் வேலைபார்க்கிறான். மாவட்ட நீதிபதியாக இருக்கிறானாம். அவனுக்கு மட்டும் பதினேழு வேலைக்காரர்கள். சமையல்காரர்கள் மட்டும் நான்குபேர்… அங்கே அத்தனை பேரும் பிரபுக்களுக்குரிய வாழ்க்கையை வாழ்கிறார்கள்” என்றாள்.

ஆமாம், அவர்களின் சம்பளம் குறைவுதான். ஆனால் தங்கச்சுரங்கத்தில் வேலைசெய்பவனுக்கு சம்பளம் எதற்கு?”என்றாள் நெவில்ஸ் சீமாட்டி.

அங்கே எல்லாம் சரிதான், ஆனால் அந்த வெயில்நாட்டு நோய்கள்.. என் சமையற்காரியின் நான்கு தம்பிகள் பர்மாவில் அம்மை நோயில் இறந்தார்கள்” என்றாள் மெர்ட்டன் சீமாட்டி.

ஆனால் அத்தனை வேலைக்காரர்கள், பிரம்மாண்டமான பங்களா, அதைச்சுற்றி பெரிய தோட்டம், சாரட் வண்டிகள்… அவர்கள் நாம் இங்கே வாழ்வதை விட ஆடம்பரமாக வாழ்கிறார்கள். இங்கே கிடைப்பதைவிட பட்டு அங்கே பாதிவிலைக்கு கிடைக்கும். ஒரு கவுனை பத்தில் ஒருபங்கு விலையில் அங்கே தைக்கமுடியும்…”

ஆனால் தரமாக இருக்குமா?” என்றாள் செல்மா பிராங்டன்.

இங்கே நாம் பயன்படுத்தும் லேஸ்கள் எல்லாம் அங்கிருந்து வருபவைதான். அங்குள்ள பெண்கள் மிகத்திறமையான கைவேலைக்காரர்கள்.”

எத்தனை வேலையாட்கள் இருந்தாலென்ன? அவர்களெல்லாம் கரிய மனிதர்கள். பழக்கப்படுத்தப்பட்ட இருபது கொரில்லாக் குரங்குகளை வீட்டுவேலைக்கு கொடுக்கிறோம் என்று சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா?”என்று திருமதி மிர்வின் சொன்னாள்.

ஆனால் கொரில்லாக்களுக்கு நாம் லேஸ் பின்னுவதற்கு கற்பிக்க முடியும். அவை கூடவே பகற்கனவுகள் காண்பதோ அரட்டையடிப்பதோ இல்லை. ஆகவே லேஸ்கள் தரமானவையாகவே இருக்கும்” என்றாள் மரியா மிர்வின்.

அத்தனை பேரும் சிரித்தார்கள். அப்போது சிரித்துக் கொண்டிருப்பது ஒன்றே ஹெலெனா செய்யவேண்டியது. ஆனால் அவள் தலைகுனிந்து வெள்ளிக்கரண்டியை விரல்கள் நடுவே வைத்து உருட்டிக் கொண்டிருந்தாள். அதைச் செய்யவே கூடாது. அவள் மறந்துவிட்டாள். அவளுடைய அத்தனை பயிற்சிகளையும் இழந்து அவள் ரொட்டிக்காரன் மகளாக ஆகிவிட்டாள். நான் அவள் கண்களை மீண்டும் சந்திக்க விரும்பினேன்.

காப்டன் மக்கின்ஸியும் , ஆர்வில் பிரபுவும், காப்டன் மிர்வினும் வெளியே வந்தனர். அவர்கள் முழுமையாகவே போதையேறியிருந்தனர். காப்டன் மக்கின்ஸி உரத்த குரலில் “இங்கே என்ன நடக்கிறது? சீமாட்டிகள் நடுவே என் மனைவி எப்படி இருக்கிறாள்?”என்றார்.

மரியா மிர்வின் “அவளைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். அவள் லண்டனின் சீமாட்டிகளை விட ஒரு படி மேலாகவே சீமாட்டியாகத் தெரிகிறாள்” என்றாள்.

நான் அந்தப் பேச்சை அப்போது ரசிக்கவில்லை. நான் எடுத்துப் போட்ட பந்து, ஆனால் அதை அவர்கள் ஆடி வெல்லக்கூடாது.

மெர்ட்டன் சீமாட்டி “அங்கே நிலைமைகள் எப்படி? கடும் வெயிலா?”என்று கேட்டாள்.

நாங்கள் இருக்குமிடத்தில் வெயில் குறைவுதான். ஏப்ரல் மே மாதத்தில் கொஞ்சம் வேயில் இருக்கும். ஆனால் மழைவந்தால் அதுவும் இல்லை… நாங்கள் இருக்குமிடம் மலபார் கடற்கரை. அங்கே மழை மிகுதி… பலநாட்கள் வானம் மூடி மழை கொட்டிக்கொண்டே இருக்கும்” என்றார் காப்டன் மக்கின்ஸி. “மழைக்காலத்தில் மழையால் நோய் வரும், வெயில்காலத்தில் வெயில்கால நோய்கள்…” என்று சொல்லி உரக்கச் சிரித்தார்.

நீங்கள் இருக்கும் இடத்தின் பெயர் என்ன?”என்றாள் ஃப்ரான்ஸெஸ்

டிரிவான்கூர். அவர்கள் கொஞ்சம் வேறுமாதிரி உச்சரிக்கிறார்கள். அது ஒரு கடலோரப்பகுதி. தென்மேற்கே கடல், வடகிழக்காக உயர்ந்த மலைகள், அடர்ந்த காடு… அங்குள்ள முதிய மகாராஜா இப்போதுதான் இறந்தார். இன்னொருவர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஆட்சிக் குழப்பங்கள் நிறைய உள்ளன…”

ஆட்சிக் குழப்பங்கள் நமக்கு நல்லது” என்றார் ஜெனரல் மில்லர். “நாம் எளிதாக ஊடுருவ முடியும்.”

உண்மையில் எங்கள் ராணுவத்தின் தலைவர் கர்னல் டேவிட் மெக்காலே அப்படித்தான் நினைக்கிறார். அவர் இந்த ஆண்டோ அடுத்த ஆண்டோ அந்த நாட்டின்மேல் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிடுவார்.”

அவரை அங்கே ரெசிடெண்ட் என்றுதானே அழைக்கிறார்கள்?”என்று கிரிஸ்ப் கேட்டார்.

ஆமாம்” என்று காப்டன் மக்கின்ஸி சொன்னார். “ஆனால் இன்னும் முறையாக அந்த முறை வரவில்லை. இப்போதைய அரசருக்கு வேறுவழியில்லை. மைசூர் சுல்தான் அவரை மிரட்டிக்கொண்டிருக்கிறான்.”

ரெசிடெண்ட் என்று சாத்தானையும் சொல்வதுண்டு. அவன் நம் ஆத்மாவில் உறைகிறான்” என்று சொன்ன கிரிஸ்ப் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் வழக்கமான உதாசீன முகம் காட்டினாள்.

நாம் அவர்களுக்குச் சாத்தான்கள்!”என்று சொல்லி காப்டன் மக்கின்ஸி சிரித்தார்.

இந்த கர்னல் காலின் மக்காலே, இவனை எனக்கு இங்கிருக்கும்போதே தெரியும். இங்கிருக்கும்போது அவன் சாதாரண செகண்ட் லெஃப்டினெண்ட், அங்கே போனபிறகு காப்டன். இப்போது ஒரு மகாராஜாவை அவன் ஆணையிட்டு கட்டுப்படுத்துகிறான்” என்றார் ஜெனரல்.

கீழைநாடுகளில் அவர்கள் ஏணிகளில் ஏறுவதில்லை. சிறகுடன் பறக்கிறார்கள்”என்று டோலாவே சீமாட்டி சொன்னார்.

கிரிஸ்ப் எரிச்சலடைந்திருந்தார். அவர் “அங்கே தொடர்புகள்தான் முன்னேற்றத்திற்கான வழி. தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதும் எளிது. ஜெனரலும், காப்டனும், செகன்ட் லெப்டினெண்டும் ஒரே இடத்தில் மதுவை பகிர்ந்துகொள்வார்கள். அங்கே இருக்கும் வெள்ளையர்களே குறைவு… ஆகவே அது ஒரு சின்ன கூண்டுபோலத்தான்.”

டோலாவே சீமாட்டி கூரிய நஞ்சு தெரிந்த கண்களுடன் “அதனால்தான் அங்கே வேலை செய்பவர்கள் அழகான பெண்களை இங்கிருந்து மணம் செய்து கொண்டு போகிறார்களா?”என்றாள்.

கிரிஸ்ப் அதைப் பிடித்துக்கொண்டார். ஆனால் வேறெதையோ கேட்பவர் போல “அங்கே உங்களுடைய காவல்தேவன் யார் காப்டன்? நீங்கள் கர்னல் மெக்காலேவுக்கு நெருக்கமா?”என்றார்.

இல்லை, அவர் மிகவும் கண்டிப்பானவர். அவருடைய லண்டன்மிஷன் பற்று அவரை மதவெறியராகவும் ஆக்கியிருக்கிறது” என்று காப்டன் மக்கின்ஸி சொன்னார். அங்கே அவர் தன்னுடைய முன்னேற்றப் பாதையைச் சொல்லியாக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகிவிட்டது. அடுத்தமுறை அவரே ஒரு கர்னலாக அங்கே வர வாய்ப்பிருக்கிறது என்பது மதிப்பு மிக்க ஒரு செய்தி. அதைச்சொல்லும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.

கர்னல் எட்வர்ட் சாப்மான் அங்கேதான் இருக்கிறார். உண்மையில் அவர் கர்னல் டேவிட் மெக்காலேவுக்கு ஒரு படி மேலான பொறுப்பில் இருக்கிறார். ஆனால் அவருக்கு அத்தனை அதிகார வெறி இல்லை. கிறிஸ்தவ வெறியும் இல்லை. மகிழ்ச்சியை விரும்புபவர். ஆகவே அவருக்கும் மெக்காலேவுக்கும் நெருக்கம் குறைவு…. பகை என்றும் சொல்லலாம். ஆனால் அவர் எங்கள் குடும்ப நண்பர். எங்கள் வீட்டு விருந்துகளுக்கு வருவார்” என்றார் காப்டன் மக்கின்ஸி.

அவர்கள் என்ன கேட்க விரும்பினார்களோ அதை காப்டன் மக்கின்ஸி சொல்லிவிட்டார். நான் ஹெலெனாவைப் பார்த்தேன். அவள் வெள்ளிக்கரண்டியை இறுகப்பிடித்திருந்தாள். வெண்ணிறமான புறங்கையில் நீல நரம்புகள் புடைத்திருந்தன.

நான் சட்டென்று அவள்மேல் பெரும் இரக்கமும் பிரியமும் கொண்டேன். அங்கிருந்தவர்கள் கழுகுகள் போல அவளை கொத்திப் பிடுங்குகிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

டோலாவே சீமாட்டி “அங்கே விருந்துகள் எப்படி? அடிக்கடி விருந்துகளை ஏற்பாடு செய்யவேண்டுமா?” என்றாள். அதன் பொருளென்ன என்பது தெளிவாகவே இருந்தது. அத்தனை பேருக்கும் அது புரிந்தது. மடையனும் சரியான நாட்டுப்புறத்தானுமான மக்கின்ஸிக்கும், நேர்மையாளரும் எளியவருமான ஆர்வில் பிரபு பிரபுவுக்கும் தவிர.

மாதம் ஒருமுறை குறைந்தது ஒரு விருந்து” என்றார் மக்கின்ஸி. ”ஆனால் அது செலவுள்ளதல்ல. அச்செலவை நாம் அங்கிருக்கும் பிற இந்திய ஊழியர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். மகாராஜாவும் நம் தயவைநாடும் உள்ளூர் செல்வந்தர்களுமே நமக்கு அச்செலவை கொடுத்துவிடுவார்கள்….”

திருமதி மெக்கின்ஸி திறமையாக விருந்தை நடத்துபவள் என நினைக்கிறேன். நன்கு பயின்ற அரசகுடிப் பாவனைகள் கொண்டவள்” என்றார் கிரிஸ்ப். “அவளை அனைவரும் விரும்புவார்கள். குறிப்பாக உயர்நிலையில் உள்ளவர்கள் அவளை போற்றுவார்கள்.”

ஆமாம், அவளால் பியானோ வாசிக்க முடியும். மிகச்சிறப்பாக நடனம் ஆடமுடியும். நிறைய புத்தகங்கள் வாசிப்பாள். இங்கிருந்து போகும்போது பெட்டி நிறைய புத்தகங்கள்தான் இருக்கும். லத்தீனும் அவளுக்கு தெரியும்” என்றார் மக்கின்ஸி. “நான் ஒரு முரடனாக இருக்கலாம். ஆனால் அவள் உறுதியாக ஒரு சீமாட்டி… கிட்டத்தட்ட ஒரு சீமாட்டி.”

அப்போதுதான் ஆர்வில் பிரபுவுக்கு அங்கே நடப்பதென்ன என்று பிடிகிடைத்தது. “ஆம், மெய்தான். அழகானவள்” என்றார். காப்டன் மக்கின்சியிடம் “நாம் உணவுக்கு செல்லலாமே?” என்றார்.

இந்த கர்னல் சாப்மான் எனக்கு மிக வேண்டியவர். எவ்வளவு வேண்டியவர் என்றால் அவர் வாரமொருமுறை என் வீட்டுக்கு வருவார். அவரே அவருக்குப் பிடித்த உயர்ரக மது கொண்டு வருவார். இசை கேட்டபடி மதுவருந்துவார். இவள் அவருக்கு புத்தகங்கள் படித்துக் காட்டுவாள். அவர் சுருட்டு பிடித்துக் கொண்டு கேட்டுக்கொண்டிருப்பார். மிக நல்ல மனிதர், அவருக்கு கதைகளை கேட்பது பிடிக்கும். எனக்கு இலக்கியமும் இசையும் அவ்வளவாகப் பிடிக்காது. நான் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே செல்வதில்லை” என்றார் மக்கின்ஸி.

நான் என் எல்லையை கடந்தேன் “உண்மையில் திருமதி மக்கின்ஸி அங்கே செய்வது மிக உயர்ந்த விஷயம். அவளைப் போன்றவர்கள்தான் நம் நாகரீகத்தை எடுத்துச் செல்பவர்கள்”என்றேன்.

என் நோக்கம் என்ன என்று பெண்களுக்கு புரியவில்லை. பொதுவாக ஆமாம் என தலையசைத்தனர். நான் சொன்னேன். “இப்படிச் சொல்கிறேனே. ஒரு நாகரீகத்தை தரையில் கொட்டப்பட்ட வண்ணச்சாந்து போல என்று சொல்லலாம். நம் பேரரசின் வரைபடம் அப்படித்தான் இருக்கிறது. அதன் மையம் நாம். ஆனால் நாம் தேங்கிவிட்டிருக்கிறோம். காப்டன் மக்கின்ஸியையும் திருமதி மக்கின்ஸியையும் போன்றவர்கள் விளிம்பு. அவர்கள் விரிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களே உயிருள்ளவர்கள்.”

கிரிஸ்ப் “உண்மைதான்” என்றார். அவர் என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

நாம் இங்கே பைபிளை வெறும் இலக்கியமாகப் பார்க்கிறோம். நாம் பைபிளுக்கு ஒவ்வாத எல்லாவற்றையும் செய்கிறோம். நம்மில் ஆணுக்கு ஆண் கொண்டுள்ள நட்பு எப்போதும் ஆரோக்கியமானது என்று சொல்ல முடியுமா?” என்றேன்.

கிரிஸ்பின் கைகள் நடுங்குவதை திரும்பாமலேயே பார்த்தேன்.

இங்கே நமக்கு தொடர்புகள்தான் செல்வம், ஆற்றல் எல்லாமே. நம் விருந்துகள் எல்லாமே அதற்காகத்தான். அரண்மனையில் ஒரு தொடர்புக்காக நாம் அரண்மனையின் காவலர்தலைவனுக்கு காதல் அழைப்பு கொடுப்போம்.”

முட்டாள்தனமாக மக்கின்ஸி வெடித்துச் சிரித்தார். நான் மரியாவை நோக்கி திரும்பாமலேயே சொன்னேன் “நாம் ஒழுங்காகவே இருக்கிறோம். ஆனால் நாம் கேட்கும் கதைகள் அப்படி. அதைச் சொல்லவந்தேன்…”

மேலும் சொல்லக்கூடாதென்று நான் அறிந்திருந்தேன். அங்கிருந்த ஒவ்வொருவரும் காய்ச்சல் கண்டவர்கள் போல ஆகிவிட்டிருந்தனர். அங்கேயே நிறுத்திக் கொள்ளவேண்டும். அதுதான் பயங்கரமானது. அடுத்து நான் என்ன சொல்வேன் என்ற எதிர்பார்ப்பில் அவர்கள் திகைப்பிலேயே இருப்பார்கள். முழுக்கச் சொல்லிவிட்டால் எதிர்வினை அளிக்க முயல்வார்கள்.

நான் ஹெலெனாவிடம் “சாப்பிடப்போகலாமே?”என்றேன்.

ஆமாம் சாப்பிடவேண்டியதுதான்” என்று அவல் சொன்னாள். அவள் முகத்தில் புன்னகை மீண்டு வந்துவிட்டிருந்தது.

ஆர்வில் பிரபு “சாப்பிடச் செல்லலாம்!” என்று அறிவித்தார். அனைவரும் எழுந்து செல்லும் ஆடைகளின் ஓசையும் நாற்காலிகள் உரசும் ஓசைகளும் மட்டும் கேட்டன.

ஹெலெனா என்னிடம் “நீ என்ன செய்கிறாய்?”என்று கேட்டாள்.

எனக்கு இங்கே லண்டனில் ஒரு வழக்கு நடக்கிறது, அது வென்றால் நான் லண்டனின் சீமாட்டிகளில் ஒருத்தியாக ஆகிவிடுவேன்” என்றேன்.

நாங்கள் பேசிக்கொண்டே சென்றபோது ஃப்ரான்ஸெஸ் வந்து சேர்ந்துகொண்டாள். “அங்கே இந்தியாவில் வைரங்கள் மலிவு என்றார்கள்” என்றாள்.

மலிவு இல்லை, ஆனால் இரண்டாம் விற்பனையில் நிறைய நகைகள் கிடைக்கும். அங்குள்ள பழைய நிலவுடைமையாளர்களும் ஆட்சியாளர்களும் வறுமை அடைந்து கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அங்கே பஞ்சம் தொடங்கியிருக்கிறது. ஆகவே அரிய நகைகளைக்கூட விற்றுக் கொண்டிருக்கிறார்கள். நான் நிறையவே வைரம் சேர்த்திருக்கிறேன்” என்று ஹெலெனா சொன்னாள்.

எனக்கு இந்தியா பற்றி ஒரு நாவல் எழுத வேண்டுமென்ற ஆசை உண்டு” என்றாள் ஃப்ரான்ஸெஸ்.

நீங்கள் கதைகள் எழுதுவீர்களா?”என்று ஹெலெனா ஆர்வத்துடன் கேட்டாள்.

ஆமாம், இப்போது நாட்குறிப்புகளும் கடிதங்களுமே எழுதுகிறேன். அப்பா கிரிஸ்ப் என்னிடம் நாவல் எழுதும்படிச் சொல்கிறார்.”

அதில் நீங்கள்தான் கதாநாயகியா?”என்று ஹெலெனா கேட்டாள்.

ஃப்ரான்ஸெஸ். என்னைச் சுட்டிக்காட்டி “ஏன் இவளாக இருக்கக்கூடாதா?”என்றாள்.

நான் “நானா? எனக்கென்ன கதை?”என்றேன்.

ஒரு கள்ளமற்ற பெண் லண்டனை வெற்றிகொண்ட கதை” என்றாள் ஃப்ரான்ஸெஸ்.

வாழ்த்துக்கு நன்றி. நான் வெல்வேன் என்றே நினைக்கிறேன்” என்று நான் சொன்னேன்.

நீ புலியைப் பார்த்திருக்கிறாயா?” என்று ஃப்ரான்ஸெஸ். ஹெலெனாவிடம் கேட்டாள்.

கட்டிப்போடப்பட்ட ஒரு புள்ளிப்புலியை பார்த்திருக்கிறேன். ஆனால் பெரிய புலி காட்டில் இருக்கிறது என்கிறார்கள். மெக்கின்ஸி ஒரு புலியின் காதுகளைப் பார்த்திருக்கிறார். அதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதை வேட்டையாட கர்னல் விருப்பம் தெரிவித்திருக்கிறார். அனேகமாக நாங்கள் திரும்பிச் சென்றபின் அந்த புலியைத்தேடிச் செல்வார்கள்.”

ஏன் நீயும் போகவேண்டியதுதானே?”

வேட்டைக்கா?”

ஏன் போனாலென்ன?”

பெண்கள் போவதில்லை.”

போகவேண்டும்… போனால்தான் நாம் அடுத்த கட்ட வாழ்க்கைக்கு நகரமுடியும்” என்று ஃப்ரான்ஸெஸ் சொன்னாள். காப்டன் மக்கின்ஸியிடம் “ஏன் காப்டன், நீங்கள் புலிவேட்டைக்குப் போகப்போகிறீர்களா?”என்றாள்.

உண்மையில் எனக்கு அதில் ஆர்வமே இல்லை. எனக்கு மலையில் இருக்கும் அந்த பங்களாவே பிடிக்கவில்லை. அது நல்ல இடம்தான். ஆனால் எனக்கு அது ஓர் ஒவ்வாமையை கொடுக்கிறது. அங்கே எனக்கு ஏதோ தீமை நடக்கப்போகிறது என்பதுபோல. நான் அங்கே சரியாகத் தூங்கியதே இல்லை” என்றார் மக்கின்ஸி. “ஆனால் நானே எல்லாவற்றையும் கர்னல் சாப்மானிடம் உளறிவிட்டேன். அவர் ஒரு வேட்டைப்பிரியர். கிளம்பியே ஆகவேண்டும் என்கிறார். அனேகமாக வரும் கோடையில் நான் அவருடன் அங்கே இருப்பேன்.”

ஏன் நீங்கள் ஹெலெனாவையும் கூட்டிச்செல்லக்கூடாது?”

அது காடு… பெண்கள் அங்கே வாழமுடியாது..”

எங்கும் பெண்கள் வாழமுடியும்… கூட்டிச்செல்லுங்கள்.”

இவளையா? இவள் ஒரு சுகவாசி.”

இவளை கூட்டிச்செல்லுங்கள். நாங்களும் இவளுடன் வருவோம்.”

அதெப்படி?”

ஒரு பெண் போன இடத்துக்கு எல்லா பெண்ணும் போனது போலத்தான்.”

சரி, நீங்கள் சொன்னால் கூட்டிச்செல்கிறேன்” என்றார் மக்கின்ஸி.

நாம் அமரலாமே” என்று ஆர்வில் பிரபு சொன்னார்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇன்று- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமனம்