கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1

அன்புள்ள ஜெ

கதாநாயகி கதை நினைக்க முடியாதபடி வளைந்து வளர்ந்து சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை எழுதிய பிறகும் டெம்ப்ளேட் என எதுவுமே இல்லாமல், உங்கள் தீவிர வாசகர்கள்கூட கொஞ்சம் கூட ஊகிக்க முடியாமல் கதை சென்றுகொண்டிருப்பது ஆச்சரியமானதுதான்.

இப்போது இந்தக்கதையில் இரண்டு ஓடைகள் உள்ளன. ஒன்று, கதைசொல்லியின் கதை. அவன் ஒரு மலைக்குச் சென்று அங்கே ஆதிவாசிகளுக்கு ஒரு பள்ளி அமைப்பது. இன்னொரு கதை ஒரு புத்தகம், அதைப்பற்றிய பிரமைகளின் கதை. அல்லது பேயின் கதை. இரண்டு கதைகளும் இதுவரை சந்திக்காமலேயே சென்றுகொண்டிருக்கின்றன.

புத்தகத்தின் கதை மூன்று அடுக்குகளாக உள்ளது. ஃபேன்னி என்ற கதாசிரியையின் கதை. அவள் வாழ்க்கையிலுள்ள சில மர்மங்கள், அவள் அதை எதிர்கொண்ட விதம். அவள் எழுதிய நாவலில் உள்ள கதாநாயகி ஈவ்லினா. அவளுடைய கதை இன்னொரு அடுக்கு. ஈவ்லினா ஃபேன்னியின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறாள். கூடவே அவள் தன் வாழ்க்கையை பற்றியும் சொல்கிறாள். மூன்றாவது அடுக்கு அதை வாசிப்பவனின் உணர்ச்சிகள்.

இந்த மூன்று அடுக்கும் ஒன்றாகக் கலந்துவிடுகிறது. ஈவ்லினா ஒருபக்கம் ஃபென்னி பற்றி பற்றி பேசுகிறாள். மறுபக்கம் வாசிப்பவன் உலகிலும் அவள் வருகிறாள்

சுவாரசியமான பல கதைகளாக போகிறது.

ஆர்.சரவணன்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

அதிகாலை தளத்தை திறந்ததும் கதாநாயகி 1 என்று கதைத்தலைப்பு  கண்ணில் பட்டதுமே அடைந்த நிம்மதியை எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.  தொற்று குறித்த செய்திகள், வதந்திகள், மரணச்செய்திகள், ஊதிபெரிதாக்கப்பட்ட பொய்கள் என எத்தனை தள்ளியும் ஒதுங்கியும் இருந்தாலும் மேலேவந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது.

முன்னனுபவம் இருப்பதால் அச்சமூட்டும் முழு ஊரடங்கு நாளையிலிருந்து, கதை இன்றிலிருந்து.

உங்கள் கதைகளை இந்த அசாதாரண நாட்களில் வாசிப்பதுஉள்ளத்துக்கு பெரும் விடுதலையாக, சிகிச்சையாக இருக்கிறது.பலமணிநேர மின்தடைக்குப்பின்னர் மின் விசிறி ஓடத்துவங்குவதை போல ,அக்னி நட்சத்திரவெயிலில் முந்தாநாள் திடீரெனகுளிர குளிர பெய்த மழையைப்போல, மூச்சுக்காற்றுக்கு புழுங்கித்தவிக்கையில் கதவும் ஜன்னலும் திறந்து காற்றும் வெளிச்சமும் உள்ளே நிறைந்ததைப்போலவெல்லாம் உணர்கிறேன்.

சாதாரணமாக ஊரில் துவங்கும் கதை தீடீரென காட்சிமாறி காடு, மலை, அமானுஷ்யமென மாறியதில் இனி வேறொன்றையும் நினைக்காமல் அடுத்தென்ன நிகழுமென்று மட்டும் மனதில் நினைத்துக்கொண்டிருக்கலாமென்பதே  ஊரடங்குகாலத்தில் சுவாரஸ்யமான விடுதலை.

கிரியின் காட்டை நினைவூட்டும் சூழல். அந்த பங்களா, காட்டுமழை எல்லாம் விசேஷமென்றாலும் அந்த எழுத்து மேசை ஆர்வமூட்டியது. பஸ்ஸை பிடித்து போய் அதை வாத்தியாரிடம்கேட்டு வாங்கிவரலாமென்று கூட நினைத்துக்கொண்டேன்.அப்படி ஒரு மேசை பலஆண்டுகளாக கனவு எனக்கு.

நான் பார்த்தேயிராத கணக்குப்பிள்ளையாயிருந்த என் அம்மாவின் அப்பா புழங்கிய. ஒருமேசையை குறித்து அச்சு அசலாக இப்படியேதான் அம்மா பலமுறை விவரித்திருக்கிறார்கள். அதனுடன் அவர் உபயோகித்த ஈட்டி மர ரூல்தடி என்னிடம் விநோதமான முறையில் சமீபத்தில் வந்துசேர்ந்தது. இப்போது 80 வயதாகும் அம்மா தன் திருமணத்துக்கு பிறகுபிறந்த வீட்டு வாசற்படியை மிதிக்கவேயில்லை. ஆனாலும் அந்த குளிர்ந்த ரூல்தடி எனக்கு தாத்தாவின் ஆசிகளைப்போல வந்து சேர்ந்திருக்கிறது.

உங்களின் எல்லாக்கதைகளும் எனக்கு எங்கோ பழைய கனலை விசிறிவிடுகிறது.

மழைநீரில் கோரன்  போட் டீ ஏக்கமூட்டுகிறது.மலைக்குளிரில் கம்பளிக்குள் கதைசொல்லி உணரும் பாதுகாப்பையும்  கத கதப்பையும் உங்கள் கதைகள் எனக்கும் அளிக்கின்றன.

கதை தலைப்பிற்கு பின்னிருக்கும் 1 என்னும் எண்  இனி கதை தொடருமென்பதை சொல்லி பெரும் நம்பிக்கை அளிக்கிறது. நெருப்பைப்போல அணையாது வளரும் கதைகளுக்கான நன்றிகளுடன்

லோகமாதேவி

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 15

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 14

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 13

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 12

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 11

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 10

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 9

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 8

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 7

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 6

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 5

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 4

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 3

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 2

கதாநாயகி (குறுநாவல்) – கடிதங்கள் : 1

முந்தைய கட்டுரைபித்தப்பூ- பிரவீன்
அடுத்த கட்டுரைகதாநாயகி – குறுநாவல் : 6