அன்பின் நண்பருக்கு,
வணக்கம். நலமா?
கடந்த பல வருடங்களாக எதையும் எழுதாமலிருந்த இலங்கையைச் சேர்ந்த பெண் கவிஞர் ஃபஹீமா ஜஹான் அண்மையில் தனது புதிய கவிதையை எழுதியிருக்கிறார். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தக் கூடியவாறு இலங்கை ராஜபக்ஷ அரசாங்கம் இருபதாவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு ஆதரவு வழங்கி இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலத்தைப் படுகுழிக்குள் தள்ளியுள்ள இலங்கை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் நயவஞ்சகச் செயலைச் சாடி அந்தக் கவிதை எழுதப்பட்டுள்ளது. அந்தக் கவிதையை இத்துடன் இணைத்திருக்கிறேன்
என்றும் அன்புடன்,
எம். ரிஷான் ஷெரீப்
***
ஒரு குருட்டுக் கொக்கிடமாவது ஞானம் தேடு
ஃபஹீமா ஜஹான்
சரத் ருது,
சார்வரிக் கார்த்திகை அந்திப் பொழுது,
சாம்பல் வண்ண முகிலினங்கள்
விண்ணெங்கும் வியாபித்திருக்க
மலைகளைக் குளிர்வித்து
அடிவாரம் மேய்ந்து
நெல் பூத்த வயல்வெளியை மேவி வந்த
காற்றிலே அசைந்த படி
மின் கம்பியில் குந்தியிருந்து
ஓயாத வாயுடன்
புலம்பிக் கொண்டிருந்தது நாகணவாய்ச்சி.
ஆழ்ந்து எதையோ சிந்தையில் இருத்தி
அவ்விடத்தால்
அவசர வேலையெதற்கோ
பறந்து போன குருட்டுக் கொக்கை
அண்ணாந்து பார்த்து நக்கலடித்தது.
அற்பச் சிறு புள்ளை
அலட்சியம் செய்து
கம்பீரமாய்க் கொக்கு
பறந்து மறைந்த பின்னும்
அதன் கூச்சல் தொடந்தது வீணே.
சோடிக் காக்கைகள்
ஒய்யாரமாய் உரசியும் விலகியும்
நங்கிணத்தைக் காணாத பாவனையுடன்
தமதுறைவிடம் பார்த்துப் பறந்தன.
மழைக்குருவிகள்
அரைக்கிறுக்கனின்
அலட்டலைக்
காதில் வாங்காமலே
விசும்பெங்கிலும் சாகசம் நிகழ்த்தின.
சோலை விட்டு வந்த
ஒரு நூறு கிளிகள்
கூட்டாகக் கூச்சலிட்டு
அதன் குரலைப்
பரிகசித்துப் போயின.
பின்னும்
மின்வடத்தில் அமர்ந்திருந்து
நடுத்தெருவில்
எச்சம் விட்டது.
நாற்றிசையும் விழிகளைச்
சுழற்றிப் பார்த்து
வசையே பாடியது.
இறுதியில்
கொழுவிச் சண்டை போடக்
குருவியெதுவும்
கிடைக்காத நாகணவாய்
உந்தியெழுந்து
பறந்து போயிற்று வாய்மூடி.
ஒரு மகானைப் போல
அவ் விண்வழியே
தன் குஞ்சுகளுக்கான இரையைச்
சொண்டிலே காவியபடி
அமைதியாய்ப் பறந்து திரும்பியது
அதே குருட்டுக் கொக்கு.
தனதினத்தின்
அரசியற் தற்கொலையைத்
துணிந்து செய்த விலைமகன்காள்,
முட்டாள்தனத்தை மீள மீளப் புதுப்பிக்கும்
வாய்ச்சொல் வீரர்காள்,
பயனில்லா நெட்டை மரங்காள்,
கோடரிக் கொம்புகாள்,
ஐயகோ !
ஒரு குருட்டுக் கொக்கின்
ஞானம் கூட
வாய்க்காமற் போச்சே !
உமக்கெலாம்
வாய்க்காமற் போச்சே !!