கதாநாயகி – குறுநாவல் : 1

இது ஒரு பழையகதை. பழைய கதைகள் நமக்குள் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. நாம் கற்பனைசெய்து வளர்த்துக் கொள்கிறோம். பிறரிடம் சொல்லும்போது வளர்கிறது. நம் கனவுகளில் வளர்ந்து நினைவுகளுடன் கலந்துவிடுகிறது. ஒருமுறை இறங்கிய ஆற்றில் இன்னொரு முறை இறங்க முடியாது என்று சொல்வார்கள். ஒருமுறை சொன்ன கதையை திரும்பச் சொல்ல முடியாது.

ஆகவே நான் சொல்லும்போது கதை வளர்ந்து கொண்டே இருக்கும். அது எங்கே போய் நிற்குமென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இது நடந்த கதை. இதன் மையச்சம்பவங்கள் எவையும் பொய்யல்ல. இதன் நுட்பங்கள்தான் வளர்கின்றன. இதன் தகவல்கள் மேலும் துல்லியமாகின்றன. கதைகளை தீ என்று சொல்லலாம். வளராத தீ அணைய ஆரம்பிக்கிறது.

சரி, கதைக்கு வருகிறேன். இது நான் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக வேலைக்குச் சென்றபோது நடைபெற்றது. சரியாகச் சொன்னால் 1981 ஜூன் 28ஆம் தேதி. நான் தென்தாமரைக்குளத்தில் ஒரு சின்னக் குடும்பத்தில் பிறந்தவன். பெயர் மெய்யன் பிள்ளை. என் அப்பா குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்துவந்தவர். இரண்டுவேளை சோறும் கஞ்சியுமாக ஒப்பேற்றிக் கொண்டிருந்த குடும்பம். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி.

நான் பூதப்பாண்டி சி.பி.ராமசாமி அய்யர் மாடல் ஸ்கூலில் பழைய எஸ்.எஸ்.எல்.சி. படித்தவன். மேலே படிக்க வசதியில்லை. அப்படியே டீச்சர் டிரெயினிங் போனேன். அதற்கும் பணமில்லைதான். ஆனால் அப்பா எஞ்சிய ஒரே நகையாகிய அம்மாவின் தாலிக்குண்டுகளை விற்று என்னை பாளையங்கோட்டைக்கு படிக்க அனுப்பினார். அங்கே ஒரு துணிக்கடையில் பகுதிநேர வேலைசெய்து கொண்டு, சொந்தக்காரர் ஒருவர் வீட்டு திண்ணையில் அந்தியுறங்கியபடி, படித்து முடித்தேன். படித்துவிட்டு வந்த ஏழாம் மாதத்திலேயே வேலை கிடைத்துவிட்டது. அன்றெல்லாம் மலைப்பகுதிகளில் ஆரம்பப்பள்ளிகளை திறந்துகொண்டே இருந்தார்கள். ஆசிரியர்களுக்கான தேவை ஆண்டுதோறும் கூடிக்கூடி வந்தது.

வேலைக்கான உத்தரவு வந்த அன்று அப்பா தலைசுற்றி திண்ணையில் படுத்துவிட்டார். உப்புபோட்ட கஞ்சிநீர் கொடுத்தபோது எழுந்து அமர்ந்து கண்ணீருடன் குடித்தார். நான் காலைத் தொட்டு கும்பிட்டேன். ”நல்லா இருடே, நல்லா இருடே மக்கா” என்று சொன்னவர் குரல் உடைந்து தேம்பி அழத் தொடங்கினார்.

இரண்டுநாட்கள் வீடே திருவிழாக்களையுடன் இருந்தது. என் தங்கைகள் முகங்கள் அத்தனை பொலிவுடன் பார்த்ததில்லை. என் அம்மா குரல் அத்தனை எழுந்து நான் கேட்டதில்லை. அப்பா திண்ணையில் நிமிர்ந்து அமர்ந்ததை கண்டதே இல்லை. பக்கத்து ஊரிலிருந்தெல்லாம் நலம் விசாரிக்க வந்துகொண்டிருந்தனர். சொந்தக்காரர்கள், தெரிந்தவர்கள். பாதிப்பேர் வயதுக்குவந்த பெண் வைத்திருந்தவர்கள். அம்மா இரண்டு குமருகளையும் கரையேற்றிய பிறகுதான் எல்லாம் என்று சொல்லிவிட்டார்.

எனக்கு அப்போது இருபது வயதுதான். பட்டுமீசை, ஒல்லியான உடல், குரல்வளை பெரிதாக இருக்கும். அக்கால வழக்கப்படி காதுமறைய தலைமுடி வளர்த்திருந்தேன். ஆசிரியர் பயிற்சிக்குச் சென்றபோது பட்டாளக் கிராப் வெட்டச் சொல்லிவிட்டார்கள். அதன்பின் முடிவளர்ப்பதற்குள் வேலை கிடைத்துவிட்டது.

உள்ளூரில் சிங்கப்பூரிலிருந்து கடத்தலில் வரும் பாலிஸ்டர் துணிகளை விற்கும் டெய்லர் கண்ணப்பனிடமிருந்து துணிவாங்கி ஆட்டுக்காது காலர் வைத்த, பட்டைமடிப்பில் பட்டன் வரிசை கொண்ட, நான்கு சட்டைகள் தைத்துக்கொண்டேன். சந்தன நிறம், மரநிறம், இளஞ்சிவப்பில் பட்டை.  நீலம், தவிட்டு நிறங்களில் இரண்டு பாண்ட். அவை காலடியில் சிறிய பாவாடை போல காற்றாடும் அளவுக்கு பெரிய பெல்பாட்டம் கொண்டவை. சட்டை இடுப்பை இறுக்கிப் பிடிக்கும். கையை முழங்கையளவுக்கு பெரிய பட்டையாக மடித்துவிட்டுக் கொள்ளவேண்டும்.

மீசை தடித்திருந்தால் தலைகீழ் ப வடிவில் வைத்திருக்கலாம், வாய்ப்பில்லை. கிருதாவும் இறங்கவில்லை. முகவாயில் மட்டும் கொஞ்சம் முடி இருந்தது அப்போது. பிளாட்ஃபார்ம் செருப்பு என்று சொல்லப்பட்ட உள்ளே மரக்கட்டை வைத்து வெளியெ ரெக்சின் தைத்த கருப்பு செருப்புகள் வாங்கிக்கொண்டேன். இதெல்லாம் என் நெடுங்காலக் கனவுகள். ஒரு புதிய வாட்ச் வாங்கவேண்டுமென்ற கனவை ரகசியமாக வைத்துக்கொண்டேன். என்னிடமிருந்தது இரண்டாம்விலைக்கு வாங்கப்பட்ட பழைய எச்.எம்.டி வாட்ச்.

பழுப்பு ரெக்ஸின் பையில் சட்டைகளையும் பாண்ட்களையும் அடுக்கிக்கொண்டேன். போர்வை, துண்டு, சோப்பு டப்பா, பௌடர் டப்பா, டூத் பிரஷ், கோல்கேட் டூத் பவுடர் [டூத் பேஸ்ட் விலைகூடுதல் என ஒரு கணக்கு] ஆகியவற்றுடன் எனக்கு வேலை அளிக்கப்பட்டிருந்த கொன்னமேடு என்ற ஊருக்குக் கிளம்பினேன். அங்கே போவதெப்படி என்று விசாரித்திருந்தேன். அதனால் மேலும் குழப்பம் அடைந்திருந்தேன். குலசேகரம் வழியாக கோதையாறு லோயர்காம்ப் போகவேண்டும். அங்கிருந்து அக்கரைப் பங்களா என்ற இடத்திற்குச் சென்றால் அதற்கப்பால் விசாரித்துக்  கொள்ளலாம்.

நாகர்கோயில் சி.இ.ஓ ஆபீஸிலேயே ஜாயினிங் ரிப்போர்ட் எழுதிக்கொடுக்கச் சொன்னார்கள். அங்கே சென்றபின் இன்னொரு வர்க்கிங் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். நான் ஒருநாள் முன்னரே கிளம்பினேன். அதிகாலை நாகர்கோயில் வந்து பஸ் பிடித்து கோதையாறு சென்று சேரவே மதியம் ஆகிவிட்டது.

கோதையாறு நான் நினைத்ததை விட ஜனநடமாட்டத்துடன் இருந்தது. அங்கே அத்தனை பெரிய நீர்மின்சக்தி திட்டம் இருக்குமென்றும், கூடவே ஊழியர் குடியிருப்பு ஒரு சிறு கிராமம் அளவுக்கு இருக்குமென்றும் நான் அறிந்திருக்கவில்லை. மலைமேல் தண்டவாளம் போல ஏறிச்சென்ற விஞ்ச் ரயிலை வியந்து பார்த்து நின்றுவிட்டேன்.

கோதையாறு எஞ்சீனியர் அலுவலகத்திற்குச் சென்று அக்கரை பங்களா பற்றி கேட்டேன். நான் ஆசிரியர் என்றதும்  “வாத்யாரா? ஏலே அதுக்கு அங்க ஸ்கூல் இருக்காலே?” என்றார் எஞ்சீனியர் நமச்சிவாயம் பிள்ளை. ”கோரனை விளி. அவன்கிட்டே கேப்போம்…”

கோரன் குள்ளமான இறுக்கமான கரிய உடல்கொண்ட மலைக்காணி. அவனிடம் “ஏலே, அக்கரை பங்களாவிலே ஸ்கூல் உண்டாலே? ஸ்கூலு நடத்துகதுக்கு அங்க ஊரு ஏது?” என்றார் நமச்சிவாயம் பிள்ளை.

கோரன் “ஏமானே, அக்கரைப் பங்களாவுக்க அந்தாலே மலையிருக்குல்லா? கொந்நமேடு… அவ்விடம் ஊரு உண்டு. ஸ்கூலும் உண்டு… ” என்றான்.

“ஆமா, கொன்னமலைக்கு அந்தாலே வேற காட்டு வழி உண்டு… அதுக்கு எதுக்கு இங்க வந்தீக?” என்றார் நமச்சிவாயம் பிள்ளை.

“தெரியாதுல்லா? நான் எங்கூர்லே ஒரு ஆளிட்டே கேட்டேன்” என்றேன்.

“ஏலே அங்க முன்ன இருந்த வாத்தியாரு ஆருலே?” என்றார் நமச்சிவாயம் பிள்ளை.

“ஞானகுணம் சாரு… அவரை ஆனை சவிட்டிப்போட்டுதுல்லா?” என்றான் கோரன்.

நான் திகைத்து “ஆனையா?” என்றேன்.

“ஓம், அதினு முன்பே இருந்ந வாத்தியாரு ஏசுவடியான். அவரை பாம்பு கடிச்சுபோட்டு…அவருக்கு முன்பே…”

”போரும்” என்றேன். எனக்கு கொஞ்சம் மூச்சுத்திணறியது.

“அதொண்ணும் இல்லை… மக்க மனுசங்க உள்ள ஊருதான். ஒரு வருசம் பிடிச்சு இருந்துபோடும். அதுக்குமேலே சாதியிலே வல்ல அரசியல்வாதியையும் பிடிச்சு டிரான்ஸ்பர் வாங்கிப்போடலாம்” என்றார் நமச்சிவாயம் பிள்ளை. “சர்க்காரு காசாக்கும். வேண்டாம்னு சொன்னா பின்ன துபாய்க்கு போகணும்.”

நான் கோரனுடன் அக்கரைப் பங்களாவுக்கு கிளம்பினேன். கோரன் வழியெல்லாம் பேசிக்கொண்டே வந்தான். கொஞ்சம் மூக்குக்குரல். அரைமணிநேரம் கேட்டால் தமிழ்போலவே தோன்றும்.

முந்தைய ஆசிரியர் மறுபக்கம் மலைப்பாதை வழியாக கீழே இறங்கியிருக்கிறார். அது குறுக்குவழி, சாயங்கால நேரம். யானை அடித்துவிட்டது. “இங்கே யானை  வருமா?” என்றேன், நம்பிக்கையுடன்.

“எந்நும் வருமே” என்றான் கோரன். “போய ஆழ்ச்சையாக்கும் குமாரன் நாயை வாலுமுறுக்கன் அடிச்சு கொன்னது.”

“வாலுமுறுக்கன் ஆரு?”

”ஆனை… வலிய ஆனை… கொம்பு தோணி மாதிரி இரிக்கும்.”

நான் அக்கரை பங்களாவை அடைந்தபோது மழை கறுத்து காடு இருண்டுவிட்டிருந்தது. காட்டுக்குள் இருந்து உரத்த ஓலம் போல சீவிடுகளின் ஓசை எழுந்தது.

“மழைவருமா?” என்றேன்

“ஏமானே, காட்டில் எந்நும் வைகுந்நேரம் மழை உண்டு.”

தினமும் மழை. நான் பெருமூச்சுவிட்டேன்.

அக்கரைப் பங்களா காப்டன் பீட்டர் டார்னெல் என்ற பிரிட்டிஷ் பிளாண்டரால் 1890 வாக்கில் கட்டப்பட்டது. பங்களா என்று பெயர், ஆனால் இரண்டே அறைகள்தான். ஒரு பெரிய கூடம் போன்ற அறை, அதையொட்டி இன்னொரு சிறிய அறை பொருட்கள் வைத்துக்கொள்ள. மேலே ஓட்டுக்கூரை. ஆனால் மிக உயரமாக இருந்தது. தடிமனான கருங்கல்கட்டுச் சுவர்கள். மண்ணாலான தரையோடுகள் வேய்ந்த தரை. ஆளுயரமான சன்னல்கள், அவற்றில் சிறிய சிறிய சதுரங்களாக கண்ணாடி. படிகள் வெட்டி எடுக்கப்பட்ட கருங்கல்லால் ஆனவை.

நாங்கள் உள்ளே நுழைந்ததுமே மழை ஓங்கி அறைந்தபடி பெய்தது. அது உடைந்து தலைமேல் விழத்தொடங்கிய பின்னரே அதற்கு முன் அருவி போல கேட்ட ஓலம் மழை அணுகும் ஒலி என புரிந்துகொண்டேன். உள்ளே சென்று நின்றுகொண்டு மழையை திகைப்புடன் பார்த்தேன். அதுபோல ஒரு மழையை பார்த்ததில்லை. அது மழைதானா அல்லது வேறேதும் இயற்கை நிகழ்வா என்று தோன்றியது. மழைத்துளிகளே இல்லை. செங்குத்தான ஒரே பெருக்கு. தரையில் செந்நிற நீர்க்கொந்தளிப்பு. இலைகள் அறைவாங்கி துள்ளித் துடித்தன. அருகே இருந்த மரத்தின் இலைகளின் ஈர ஒளி மட்டுமே தெரியுமளவுக்கு இருட்டு.

கோரன் கையை தோளில் வைத்தபடி அமர்ந்துவிட்டான். நான் அங்கிருந்த உயரமான நாற்காலியில் அமர்ந்தேன். அக்கரை பங்களா என்பது ஓர் ஊர் அல்ல, அது மெய்யாகவே ஒரு பங்களா. ஆனால் அதைச்சுற்றி காடுதான் இருந்தது. அதுவும் பச்சைநுரை போல அடர்ந்து செறிந்த காடு. காடு அப்படியிருக்கும் என்பதை நினைத்தே பார்க்கமுடியவில்லை.

“கொன்னமேடு எங்கயாக்கும்?” என்றேன்.

அவன் கைகாட்டி “அங்க” என்றான்.

“பள்ளிக்கூடம் அங்கயா இருக்கு?”

“ஓம்.”

“அப்ப நாம அங்க போக வேண்டாமா?” என்றேன்.

“ஏமானே, அங்க இனி போக முடியாது. இனி போனா ஆனை வந்நு கொல்லும்” என்றான். “வெளுப்பான் காலத்து போகாம்.”

“அதுவரை இங்கயா இருக்கணும்?”

“இவிடம்தான் வாத்யாரு இரிக்கும்… இதாக்கும் வீடு…”

“இங்கயா?”

“ஓ” என்றான்.

“நான் கொன்னமேட்டிலே ஸ்கூலிலே இருந்துகிடுதேன்… இந்த எடம் வேண்டாம். இங்க யாருமே இல்லியே” என்றேன்.  “இங்க யானை வந்தா என்ன செய்ய?”

“ஏமானே. கொந்நமேட்டிலே வீடு இல்ல. கொந்நமேட்டில் எல்லாம் மாடமாக்கும். மரத்துக்குமேலே கெட்டின மாடம்… அங்கே நாட்டாளு இரிக்க முடியாது…”

நான் “அப்ப ஸ்கூல்?” என்றேன்.

”ஸ்கூல் முளை நிறுத்தி ஓலைக்கூரை மாத்திரமாக்குமே. ராத்திரி ஆனை வருமே.”

ஆக ஒருமாதிரி நிலைமை புரிந்தது. ஒருவகையில் நல்லது. அந்த பங்களா உறுதியானது. உள்ளே இருந்தால் யானையை பயப்படவேண்டியதில்லை. அந்த மழையில்கூட அது ஒழுகவில்லை.

நான் அந்த பங்களாவை சுற்றி வந்து பார்த்தேன். அகலமும் நீளமும் கொண்ட ஒரு கட்டில் இருந்தது. ஆனால் கடைசல்கள் ஏதுமில்லாத மோட்டாவான மரச்சாமான் அது. அருகே ஓர் எழுதுமேஜை. ஆனால் பழையபாணியிலானது. சைன்போர்டு மேஜை என்பார்கள். கீழே இரண்டு அடுக்காக டிராயர்கள். கீழிருந்து இழுத்து மடியில் சாய்த்துக்கொள்ளத்தக்க எழுது பலகை கொண்டது. அதன்மேல் காகிதம், பேனாக்கள், குண்டூசிகள் வைப்பதற்குரிய மரத்தாலான பேழை, மைக்கூடு வைப்பதற்கான வளையங்களுடன். இரண்டு நாற்காலிகள். மேஜையும் நாற்காலியும் உயரமானவை, வெள்ளையர்களுக்குரியவை. மேஜையையும் கட்டிலையும் நகர்த்தி பல ஆண்டுகளாகியிருக்கும். நாலைந்துபேர் மெனக்கெடாமல் அசைக்க முடியாது.

சிறிய அறையில் ஒரு பழைய அலமாராவில் நான்கு கம்பிளிகளும் நாலைந்து போர்வைகளும் இருந்தன. ஒரு அரிக்கேன் விளக்கு, கூஜாவடிவ கண்ணாடி கொண்ட மண்ணெண்ணை விளக்குகள் இரண்டு. ஒரு தகரடின்னில் ஒரு லிட்டர் மண்ணெண்ணையும் இருந்தது. இன்னொரு கள்ளிப்பெட்டிக்குள் அலுமினியப் பாத்திரங்கள், அரிசி, பருப்பு, சீனி டீத்தூள், பலசரக்குப் பொருட்கள். கரண்டிகள், அகப்பைகள் எல்லாம் இருந்தன.

நான் ஸ்டவ் இருக்கிறதா என்று பார்த்தேன். அதற்குள் கோரன் “சாயை இடாம் ஏமானே” என்றான்.

அந்த பங்களாவை ஒட்டி பின்னால் ஒர் ஓடுபோட்ட சாய்ப்பு இருப்பதை அப்போதுதான் கண்டேன். அங்கே விறகடுப்பு இருந்தது. காட்டில் வெட்டிக்கொண்டுவந்த விறகு அடுப்புக்கு அருகே அடுக்கப்பட்டிருந்தது. ஒரு பழைய தகர பீப்பாய், ஒரு மண்குடம்.

கோரன் அலுமினிய பாத்திரத்தை கூரைமடிப்பில் இருந்து அருவி போல கொட்டிய நீரில் கழுவினான். அந்த மழைநீரை பிடித்து கொண்டு சென்று அடுப்பு பற்றவைத்து டீ போட்டான்.

நான் அரிக்கேனை கொளுத்தி அதற்கென்றிருந்த கம்பிக்கொக்கியில் மாட்டினேன். அறைக்குள் பரவிய சிவப்பு வெளிச்சம் கொஞ்சம் கதகதப்பை அளிப்பது போலிருந்தது. காற்றில் ஒளி ஆட நிழல்கள் சுழன்றாடின.

அதற்குள் நன்றாக குளிர ஆரம்பித்திருந்தது. நான் ஒரு கம்பிளியை போர்த்திக்கொண்டு மழையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன். கோரன் அலுமினிய டம்ளரில் டீ கொண்டு வந்தான். பாலில்லாத சூடான டீ அத்தனை ருசியானது என்று எண்ணியிருக்கவே இல்லை. நான் வயிற்றுப்போக்கின்போது மட்டும்தான் பாலில்லாத டீ குடித்திருந்தேன்.

“கஞ்ஞி வைக்கட்டே?” என்றான்.

“வை” என்றேன்.

அவன் அலுமினியப் பாத்திரத்தை கழுவி தண்ணீர் எடுத்துக் கொண்டு சென்றான். மழை எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே பெய்துகொண்டிருந்தது. ஏற்ற இறக்கமே இல்லாத முழக்கம். கூர்ந்து கேட்டால் அந்த ஓசை அலையலையாக இருப்பதுபோலத் தோன்றியது. கொஞ்சநேரத்தில் அரிசி கொதிக்கும் இனிய மணம் எழுந்தது.

கொதிக்கும் சிவப்பரிசிக் கஞ்சி. அதற்கு தொட்டுக்கொள்ள உப்பு, புளி, வற்றல் மிளகாய், வெங்காயம் சேர்த்து நசுக்கி கொஞ்சம் தேங்காயெண்ணை ஊற்றிக் குழைத்த ஒருமாதிரியான சட்டினி. ஆனால் எனக்கு மூக்கு முட்ட குடிக்கவேண்டும் போலிருந்தது. கோதையாறிலிருந்து அக்கரைப் பங்களாவுக்கு ஏழெட்டு கிலோமீட்டர் தொலைவு இருக்கும். மேலேறும் பாதை  வேறு. நடப்பதற்குள் நாக்கு தள்ளிவிட்டது.

சாப்பிட்டுவிட்டு மழைநீரிலேயே கைகழுவினேன். கட்டிலில் பனையோலைப் பாயை விரித்து, அதன்மேல் கம்பிளியை பரப்பி, அதன்மேல் போர்வையை விரித்து இன்னொரு கம்பிளியால் போர்த்தியபடி படுத்துக்கொண்டேன்.

கோரன் கதவுகளை மூடி, அரிக்கேன் திரியை தாழ்த்திவிட்டு, ஒரு கம்பிளியை போர்த்திக்கொண்டு சுவர் மூலையில் சாய்ந்து அமர்ந்தான். “பாய் இல்லையா?” என்றேன்.

“இல்லை ஏமானே.நான் இருந்நே உறங்குவேன்.”

“ஏன்?”

“மாடத்தில் இருந்நல்லோ உறக்கம்?”

அவர்கள் அனைவருமே இரவில் சுருண்டு அமர்ந்துதான் தூங்கினார்கள். அதை நான் அதன் பிறகுதான் உணர்ந்தேன். குரங்குகள் போல. பழகிவிட்டால் எளிதுதான் போல. உண்மையில் அது அவர்கள் உடலின் வெப்பத்தை தக்கவைக்க உதவியது. கமுகுப்பாளையை சேர்த்து தைத்த தோல்போர்வை போன்ற ஒன்றை வைத்திருப்பார்கள். அதைப் போர்த்திக்கொண்டு கொட்டும் மழையிலேயே அமர்ந்து இரவு தூங்கிவிடுவார்கள்.

நான் தூங்குவதற்கு முன் பொழுதைப் பார்த்தேன். மாலை ஆறுதான் ஆகியிருந்தது. ஆனால் வெளியே கண்ணே இல்லையென்றாக்கும் இருட்டு. அதில் அதே ஓசையுடன் அதே பெருக்குடன் அப்படியே நின்றிருந்த மழை. ஏதோ ஒரு வெறிகொண்ட தெய்வம்போல.

நான் மிக விரைவிலேயே நன்றாகத் தூங்கிவிட்டேன். அந்த மழையோசை, காட்டின் அலறல் எல்லாமே எனக்கு அன்னியமானவை. தூக்கம் வராமல் தடுப்பவை. ஆனால் நம்மை நன்றாகத் தூங்கவைக்கும் ஓர் உணர்வு உண்டு, அதை ஒருவகையான பாதுகாப்புணர்வு என்பேன். பதுங்கியிருக்கும் உணர்வு. கதகதப்புணர்வு என எதுவேண்டுமென்றாலும் சொல்லலாம். நம்மை கருக்குழந்தை போல உணரச்செய்வது. மலைக்குளிரில் கம்பிளிக்குள் மட்டுமே அதை உணர முடியும்.

நான் எவரோ என் அருகே நிற்பதுபோல உணர்ந்தேன். என்னைக் கூர்ந்து பார்க்கிறார்கள். கதவை திறந்து வெளியே பெய்யும் மழையைப் பார்க்கிறார்கள். அறைக்குள் நடமாடுகிறார்கள். மீண்டும் என்னருகே வந்து என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் விழித்துக்கொண்டேன். அரிக்கேன் விளக்கின் ஒளி இன்னும் துல்லியமாக இருப்பது போலிருந்தது. அறை மூடியிருந்தது. கோரன் ஓரமாக அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.

அந்தக் கனவை எண்ணியபடி எழுந்து சோம்பல் முறித்தேன். சிறுநீர் கழிக்கவேண்டும். கதவைத் திறந்து வெளியே செல்வதா? கதவு மிகக்கனமானது. யானை முட்டினாலும் எளிதில் உடையாதது. இரும்பலான கீல்கள் ஓசையே எழுப்பாதவை. கதவை திறப்பது ஆபத்து, அறியாத காடு வெளியே. கோரனை எழுப்பலாம். அதற்கு முன் பின்பக்கச் சமையலறையை ஒரு முறை பார்த்துவிடலாம்.

சமையலறையின் ஒரு மூலையில் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு கழுவுமிடம் இருந்தது. வெளியே இருந்து பாம்பு ஏதும் வராமலிருக்க மரக்கட்டை வைத்து மடையை மூடியிருந்தனர். அதை இழுத்து திறந்தபின் அதன் அருகே சிறுநீர் கழித்தேன்.

திரும்பி வந்தபோது மீண்டும் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. உள்ளம் புத்துணர்ச்சியுடன் இருந்தது. மேஜைக்கு அடியில் தள்ளப்பட்டிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன். நெடுநேரம் கதவும் சன்னல்களும் மூடியிருந்தமையால் அறைக்குள் மென்மையான கதகதப்பு இருந்தது. போர்வை தேவைப்படவில்லை.

மழை அப்படியே நின்றிருந்தது. அது அப்படியே பலநாட்கள் பல வாரங்கள் பல மாதங்கள் பெய்யக்கூடும் என்று தோன்றியது. மழையின் ஓசையை கேட்டுக்கொண்டிருந்தேன். அதிலிருந்த அச்சுறுத்தும் தன்மை மறைந்து ஒரு இணக்கமான உணர்வு தோன்ற ஆரம்பித்திருந்தது.

அந்த பேப்பர் பெட்டியை எடுத்துப் பார்த்தேன். அதில் ஒன்றுமில்லை. டிராயர்களை இழுத்தேன். இரண்டு டிராயர்களுமே காலியாக இருந்தன. நெடுங்காலமாக அவற்றை எவரும் திறந்திருக்கவில்லை. புழுதியில்லை, ஆனால் புழுதிபோல ஒரு வாசனை.

டிராயரை மூடிவிட்டு எழுந்தேன். படுக்கையை நோக்கி நடந்தபோது எனக்கு ஓர் உணர்வு ஏற்பட்டது. அந்த டிராயர்களுக்குள் நான் எதையோ பார்த்துவிட்டிருந்தேன். எதை? திரும்பி வந்து அமர்ந்தேன். டிராயர்களை திறந்து பார்த்தேன். ஒன்றுமில்லை. கையால் துழாவியும் பார்த்தேன்.

பின்னர் மூடிவிட்டு கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். மழையின் ஓசை ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த மாற்றமில்லா ஓசை தூங்கவைப்பது. நான் மெல்ல தூங்கிவிட்டேன். ஆனால் நான் தூங்குவதை நானே உணர்ந்திருந்தேன். அப்படியென்றால் அது தூக்கமில்லை. என் பிரக்ஞை கட்டில்லாத ஒழுக்காகச் சென்றுகொண்டிருந்தது.

நான் ஒரு ஆங்கிலப்படத்தைப் பார்த்தேன். கறுப்புவெள்ளை படம். நாகர்கோயில் பயோனியர் சரஸ்வதி தியேட்டரில். அதில் ஒரு பெண் ஒரு பழைய மாளிகையில் ஒரு மேஜையின் கீழிருந்த டிராயரை திறக்கிறாள். அதன் கீழே இருந்த பலகையை கையால் அழுத்தி பின்னால் நகர்த்துகிறாள். அதற்கு அடியில் ஒரு ரகசிய அறை இருக்கிறது. அதில் ஒரு டைரி இருந்தது.

நான் விழித்துக்கொண்டேன். என் குறட்டையின் கடைசித்துளியை நான் கேட்டேன். எச்சில் வழிந்திருந்தது. வாயை துடைத்தபடி அந்த டிராயரைப் பார்த்தேன். அது கனவுதான். ஆனால் அந்த மேஜை இதைப்போன்றது.

நான் டிராயர்களை திறந்தேன். மேலிருந்த டிராயரின் அடிப்பலகையை பலவாறாக அழுத்திப் பார்த்தேன். ஒன்றுமில்லை. இரண்டாவது டிராயரின் அடிப்பலகையை அழுத்தினேன். ஒன்றுமில்லை. இரண்டாம் முறை முயன்றபோது அது நகர்ந்தது. உந்தியபோது விலகிக்கொண்டது. அங்கே ரகசிய அறை இருந்தது.

உள்ளே டைரி இருக்கவில்லை. ஒரு பழைய புத்தகம் இருந்தது. மிகப்பழையது. நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பைண்டிங். நாகர்கோயில் முனிசிப்பல் லைப்ரரியில் ஒரு பீரோ முழுக்க அப்படிப்பட்ட பழைய நூல்கள் உண்டு. அவையெல்லாம் பழைய பிரிட்டிஷ் கிளப்பில் இருந்தவை. அக்கால வெள்ளைக்காரர்கள் படித்தவை. பின்னர் நூலகத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன. தோலுறையிடப்பட்ட அட்டைமேல் எழுத்துக்கள் பொன்னிறத்தில் அழுத்தி அச்சிடப்பட்டிருக்கும். உள்ளங்கை அகலம்தான் இருக்கும். அன்றைய பிரிட்டிஷார் அவர்களின் கோட்டுக்குள் அவற்றை போட்டுக்கொள்ள முடியும்.

அந்த வினோதமான சூழலால் ஏற்கனவே என் மனம் ஒருவகையாக ’மெஸ்மரைஸ்’ ஆகியிருக்கலாம். இல்லாவிட்டால் அந்தச் சூழலில் எனக்கு படபடப்பும் நடுக்கமும் வந்திருக்கவேண்டும்.  இன்னும் சரியாகச் சொல்லவேண்டும் என்றால் நான் அப்போது என்னை வேறொருவனாக பார்த்துக் கொண்டிருந்தேன். மெய்யன் பிள்ளை என்ற நான் என் ஊரில் இருந்தேன். என் கற்பனையில் அங்கே அந்த முன்பின் அறியாத இடத்திலிருக்கும் காட்டு பங்களாவில், ஆங்கிலப்படங்களில் வருவதுபோன்ற சூழலில் ஒரு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த கற்பனை அளித்த விலக்கம் என்னை நிதானமாக இருக்கச் செய்தது.

அந்த புத்தகத்தை கையிலெடுத்தேன். மென்மையாக தூசி படிந்திருந்தது. அதை ஊதி பறக்கவைத்தேன். மூக்குப்பொடி போட்டதுபோல தும்மல் வந்தது. அதை காற்றில் வீசியும் உதறியும் தூசியை அகற்றினேன். மேஜைமேல் வைத்து என்ன புத்தகம் என்று பார்த்தேன். Evelina: Or the History of a Young Lady’s Entrance into the World. நாவல்தான். பதினெட்டாம் நூற்றாண்டு நாவல் என்று தோன்றியது.  Fanny Burney எழுதியது.

நான் அந்த புத்தகத்தை புரட்டிப் பார்த்தேன். பழங்காலத்தைய கெட்டியான தாள். ஆனால் உறுதியானது. பனையோலைச் சுவடி போலவே ஆகிவிட்டிருந்தது. 1782-ல் Thomas Lowndes பதிப்பித்தது. அப்படியென்றால் இருநூறாண்டுகள் கடந்த புத்தகம். தாள்களில் பூச்சிகளின் துளைகள் இருந்தன. சில இடங்களில் புழுக்கள் வெட்டிய பள்ளங்கள் ரகசிய அறைகள் போல் இருந்தன. நீர் ஊறியதுபோல பலவகையான வடிவங்களில் செந்நிறக் கறைகள் படிந்திருந்தன.

ஐநூற்றி எண்பது பக்க புத்தகம். பழையபாணி ஈயவெட்டு எழுத்துக்கள். மரவெட்டு ஓவியமாக ஆசிரியை ஃபான்னி பர்னியின் படம். பதிப்பாளர் முன்னுரை சற்றுப் பெரிய எழுத்துருவில் இருந்தது. கைக்கடக்கமான புத்தகம். எளிதாகக் கொண்டு செல்லவும் ஒற்றைக்கையிலேயே வைத்துப் படிக்கவும் உகந்தது. அதன் பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தேன். நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று எனக்கு கொஞ்சம் பிந்தித்தான் தெரிந்தது. அதில் ஏதோ ஒரு மர்மத்தை அல்லது ஒரு கதையைத் தேடுகிறேன். மடித்து வைக்கப்பட்ட ஒரு கடிதம். ஓரு குறிப்பு. ஏதேனும் அடையாளங்கள்.

ஆனால் ஒன்றுமே இல்லை. வெறும் புத்தகம்தான். அதன் பழுப்புநிறமான தோல் அட்டையை நெம்பி அதன் இடைவெளிக்குள் ஏதாவது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தேன். ஏதுமில்லை. ஏமாற்றத்துடன் அதை மேஜையில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். பின்னர் எழுந்து சென்று சமையலறையில் கோரன் பிடித்து வைத்திருந்த நீரில் கைகளை கழுவிக்கொண்டேன்.

அங்கே நின்று அந்த புத்தகத்தைப் பார்த்தேன். அதில் ஏதோ ஒன்று நிகழும் என்பதுபோல. திரும்பி வந்து அமர்ந்து அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். தூக்கம் வரவில்லை. மணி விடியற்காலை மூன்று. எட்டு மணிநேரம் தூங்கிவிட்டேன். மீண்டும் தூங்க முடியாது. என்னிடம் வேறு புத்தகம் ஏதுமில்லை. இப்படி ஓர் இடம் இது என்று நினைக்கவே இல்லை. இதையே படித்தால் என்ன?

நான் அந்த புத்தகத்தை எடுத்து புரட்டிப் பார்த்தேன். அறைக்குள் சென்று குவளைவடிவ மண்ணெண்ணை விளக்கை எடுத்து பற்றவைத்து மேஜையில் வைத்துக்கொண்டு அதைப் படிக்க ஆரம்பித்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைஇடுக்கண் வருங்கால்…
அடுத்த கட்டுரைவெண்முரசு ஆவணப்படம்- கடிதம்