அந்த நூல்

அன்புள்ள ஜெ,

புத்தகம் வாங்கலாமா வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பிறகு வாங்கிவிட்டேன். இப்போதுதானே கோவிட்டிலிருந்து வெளி வந்து கொண்டிருக்கிறீர்கள். அதற்குள் ஏன் இப்படி என்று நண்பர் கேட்டார். அவரிடம் விளக்கம் கொடுத்தெல்லாம் நேரத்தை வீண்டிக்கவில்லை. புத்தகத்தில் எல்லாமே பொக்கிஷமாக இருக்கும் என்பதால் எதிலிருந்து தொடங்குவது என்று பெருங்குழப்பம். முதலில் கண்ணில் பட்டது  பேஸ்புக் தோழர் ஒருவரின் கட்டுரை. “மனுவை விட ஆபத்தானவர் ஜெயமோகன்”.

ஆஹான் என்று சொல்லிக்கொண்டே படிக்கத் தொடங்கினால் நான்கு பக்க கட்டுரையில் பாதிக்கு மேல் ஜெயமோகன் இப்படி எழுதியிருக்கிறார் என்று நீங்கள் எழுதியவற்றிலிருந்து எடுத்துப் போட்டிருக்கிறார்கள். அதையெல்லாம் விட பயன்பட்ட நூல்கள் என்று மூன்று நூல்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதில் ஒன்று கட்டுரையாளரின் நூலே. செம சிரிப்பாக இருக்கிறது. நன்றாக குறைந்தது ஒரு மாத்த்திற்கேனும் பொழுது போகும் போல. உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும் என்பதால் உடனே எழுதுகிறேன்.

நன்றி,
சங்கர்

ஜமாலன்

அன்புள்ள சங்கர்,

அந்த நூல் ஜெயமோகன் என்று கூகிளில் தேடினால் வரும் கட்டுரைகளை ஒன்றாகத் தொகுத்தது. அவை அங்கேதான் இருக்கின்றன. பெரும்பாலும் என்னிடம் வரும் வாசகர்கள் எல்லாரும் அவற்றை வாசித்து, அவற்றினூடாகவே இங்கே வருகிறார்கள். அவற்றை எழுதியவர்கள் இங்கே சமூகவலைத்தளங்களில் இரவுபகலாகக் களமாடும் ஒரு கருத்தியல் சுயஉதவிக் குழுவினர். இந்த நூல்தான் அவர்கள் எழுதியவற்றிலேயே கவனம் பெறும் நூலாக இருக்கும். இதன் வழியாகவே அவர்களுக்கு இங்கே ஏதேனும் இடமும் கிடைக்கும்.

இந்தவகையான ‘ஆய்வுகள்’ அனைத்துக்கும் சில ‘டெம்ப்ளேட்’ மனநிலைகள் உண்டு. ஒன்று தங்களை ஒரு குறிப்பிட்ட ’கருத்தியல்’ கொண்டவராக வைத்துக் கொள்வது.நான் இன்னார் என அறிவித்துக் கொண்டே இருப்பது. அதனடிப்படையில் எதிரிகளையும் நண்பர்களையும் வகுத்துக்கொள்வது. எதிரிகளை இடைவிடாது அத்தனை கோணத்திலும் தாக்குவது,  வசைபாடுவது. நண்பர்கள் அந்த தாக்குதல்களின்போது ஒரு சொல்கூட மாறுபடாமல் தன்னுடன் இருக்கவேண்டுமென எதிர்பார்ப்பது. இல்லை என்று தோன்றினாலே அவர்களை துரோகிகள் என நினைப்பது. அவர்களையும் வசைபாடுவது.

தன்னுடைய ‘தரப்பு’ முழுமையானது, ‘அறம்’ கொண்டது , ‘முழுக்கமுழுக்க தர்க்கபூர்வமானது’ மற்றும் ‘நவீனமானது’ என்று ஆழமாக நம்புவது, அல்லது அப்படி காட்டிக்கொள்வது. எதிர்த்தரப்பு எல்லாவகையிலும் தவறானது, அறமற்றது, அபத்தமானது மற்றும் பழைமையானது. எதிரி என இருப்பவன் மேல் தனக்குப்பிடிக்காத எல்லா அடையாளங்களையும் சுமத்திவிடுவது. எதிர்தரப்பின் ஒவ்வொரு வரியையும் அவ்வகையில் திரித்துப் பொருள் கொள்வது.

இவர்கள் முற்றாகவே மூடுண்டவர்கள். ஆண்டுக்கணக்கில் ஒரே நிலையில் ஒரே குரலில் பேசியபடி நின்றிருப்பவர்கள். இவர்கள் முற்போக்குப் பாவனைகள் பேசினாலும் பெரும்பாலானவர்கள் அப்பட்டமான ஃபாஸிஸ்டுகள். தமிழகத்தில் ஃபாஸிசமே ஒருவகை முற்போக்கு என்னும் பாவனை உண்டு. நாமறியவேண்டிய ஒரு வரலாற்றுப் பின்னணி உண்டு.ஃபாசிசமும் நாஸிசமும் ஐரோப்பாவில் முன்வைக்கப்பட்டபோது இடதுசாரி சிந்தனைகளாக, முற்போக்கானவையாகவே நிலைநிறுத்தப்பட்டன. அவை எல்லா வகையான பழமைவாதங்களுக்கும் எதிரான குரல்களாகவே தங்களை காட்டிக்கொண்டன.

ஃபாஸிசத்தின் மூன்று அடிப்படைகள் இவை

அ. அது கலாச்சார அடையாளத்தையே அரசியலின் அடிப்படையாகக் கொண்டிருக்கும். இன, மத, மொழி, பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படையில் மக்களைப் பகுத்து நம்மவர்- பகைவர் என அறுதியாக வகுத்து அதன் அடிப்படையில் அரசியலை முன்னெடுக்கும்.

ஆ. அது கருத்துவிவாதத்தில் நம்பிக்கை அற்றது. எதிர்த்தரப்பு எல்லா வகையிலும் எதிரி, அழித்தொழிக்கப்படவேண்டியது என நினைக்கும். எதிர்த்தரப்பு ‘பிறப்பிலேயே’  ‘இயல்பிலேயே’ தனக்கு எதிரி, அது எந்நிலையிலும் மாற முடியாது, அதன் எல்லா சொற்களும் எதிர்க்கவேண்டியவை என நினைக்கும். இந்த ’எதிரியுற்பத்தி’ தான் ஃபாஸிசத்தின் அடிப்படைச் செயல்பாடு. ஃபாசிசம் எதிரிகளை உருவாக்கி, அவர்கள்மேல் உச்சகட்ட வெறுப்பை கொட்டி, அதைப் பரப்பி, அச்சத்தையும் ஒவ்வாமையையும் உருவாக்கி அதன்வழியாக அதிகாரம் வழியாக நகர முயலும்.

இ.ஃபாசிசம் அடிப்படையில் வன்முறையை நம்புவது. அதன் மேலோட்டமான சிந்தனைப்பாவனைகளுக்கு அடியில் சொல்லிலும் எண்ணங்களிலும் வன்முறை வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். வன்முறைகளை அது ஆதரிக்கும்.

ஃபாசிசத்தின் வழிமுறை ஒன்றே. அது எதிரி என அவர்க்ள் கட்டமைத்துக் கொண்டவர்களின் வரிகளுக்கு தாங்களே பொருள் அளிப்பது. அந்தப் பொருளில்தான் எதிரி பேசினார் என வாதிட்டு அதன் பொறுப்பை எதிரிமேலேயே சுமத்தி அவனை தண்டிக்க முற்படுவது. ஹிட்லரும் முசோலினியும் செய்தது அதைத்தான். அச்சு அசலாக இவர்கள் செய்வதும் அதைத்தான். நம் கருத்து அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, நம்மைப் பற்றி அவர்கள் நினைப்பதுதான் அவர்களைப் பொறுத்தவரை நாம்.

இந்நூலில் எழுதியிருப்பவர்களின் கருத்தியல் என்ன என்பதை சிந்தனை செய்பவர்கள் யோசிக்கலாம். இவர்களில் பலர் மதவெறியர்கள், சாதிப்பற்றாளர்கள்– ஆனால் அதை உள்ளே வைத்துக்கொண்டு இனவாதமும் மொழிவாதமும் பண்பாட்டுவாதமும் பேசுபவர்கள். இடதுசாரிகளாக நடிப்பவர்கள். இங்கே ஒருவன் இந்துமதவெறி தவிர எந்த மதவெறி கொண்டிருந்தாலும் முற்போக்கானவன், பிராமணச்சாதிவெறி தவிர எந்தச் சாதிவெறி கொண்டிருந்தாலும் முற்போக்கானவன், இனவாதமும் மொழிவெறியும் பண்பாட்டுக்குறுக்கல்நோக்கும் முற்போக்கானவை. இவர்கள் இந்த அபத்தத்தை கட்டி எழுப்பி பீடமாக்கிக்கொண்டு, அதன்மேல் அமர்ந்திருக்கும் அதிகார வெறிகொண்ட சிறிய மனிதர்கள்.

பொதுவாக உலகமெங்கும் ஃபாஸிஸ்டுகளுக்கு இலக்கியவாதிகள், சிந்தனையாளர்கள், கலைஞர்கள் எதிரிகள். அவர்களின் அதிகாரத்தில் முதலில் பலியாவதும் படைப்பாளிகளும் சிந்தனையாளர்களும்தான். ஏனென்றால் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் தொடர்ந்து சமகாலத்தின் சிந்தனையில் கலைவை உருவாக்குகிறார்கள். புதியவற்றை முன்வைக்கிறார்கள். நேர்மாறாக இவர்களைப் போன்ற ஃபாஸிஸ்டுகள் இனம், மதம், மொழி, பண்பாட்டு அடிப்படையில் ஒரு சமூகத்தை அறுதியாக வகுத்து உறைய வைக்க முயல்பவர்கள். ஆகவே அத்தனை கலையிலக்கியச் செயல்பாடுகளுக்கும் சிந்தனைகளுக்கும் இயல்பாகவே எதிரானவர்கள்.

அந்தந்தக் காலகட்டத்தில் செல்லுபடியாகும் ஒரு எதிர்மறை முத்திரையை எதிரிகளுக்குச் சூட்டுவது இவர்களின் வழக்கம். இன்று உலகமெங்கும் அப்பட்டமான ஃபாஸிச அரசியல் செய்பவர்கள் பிறரை ஃபாஸிஸ்டுகள் என முத்திரை குத்துகிறார்கள். தன் தேசத்தில் மூன்றில் ஒரு பங்கினரை கொன்றொழித்த கம்போடியாவின் போல்பாட் அத்தனை சிந்தனையாளர்களையும் கல்விமான்களையும் கொன்றொழிக்க அவர்களை ஃபாஸிஸ்ட் என்று அடையாளப்படுத்தினான். இது ஓர் எளிய உத்தி. அடிப்படைகளை யோசிக்கும் எந்த எழுத்தாளனையும் இதன்வழியாக தாக்கிச் சீர்குலைக்க முடியும்.

நான் எழுதவந்த காலத்தில் எவரையும் அறுதியாக வகுத்துவிடக்கூடாது என்று எண்ணினேன். இங்கே பேசிக்கொண்டிருந்த அத்தனைபேரிடமும் நானே தொடர்புகொண்டு விவாதிக்க முயன்றேன். பலருக்கும் பல உதவிகளையும் அதன்பொருட்டு செய்திருக்கிறேன், அவர்களில் பலர் இன்று வெறுப்பைக் கக்குவார்கள், அதைச் சொல்லமாட்டார்கள். ஆனால் அவர்களுடன் உரையாடலே இயல்வதல்ல என்று கண்டுகொண்டேன். உரையாடல் என தொடங்கினாலே பதற்றம் கொள்கிறார்கள். வசை இன்றி பேச முடிவதில்லை.

அது ஏன் என்று பின்னர் கண்டுகொண்டேன், அவர்களுக்கு அடிப்படைச் சிந்தனை என்பதே இல்லை. எதிரிகளை கட்டமைக்கும் ஒரு ‘டெம்ப்ளேட்’ சிந்தனை, சில மேற்கோள்கள்- அவ்வளவுதான் இவர்கள். அந்த ஆழமின்மை வெளிப்பட்டுவிடுமோ என்னும் பதற்றமே இவர்களை எடுத்ததற்கெல்லாம் கொப்பளிக்கச் செய்கிறது. அதை அறிந்தபின் ஒரு புன்னகையுடன் கடக்க கற்றுக்கொண்டேன். இன்றும் இவர்கள் எவர்மேலும் எந்த தனிப்பட்ட கசப்பும் இல்லை. இனிமேலும் அப்படித்தான்.

இவர்கள் எளிய மனிதர்கள், இப்படி எத்தனையோ பாவனைகள் மற்றும் அடையாள அரசியல் வழியாகத்தான் அவர்கள் சற்றேனும் வாழ்ந்து கடக்கமுடிகிறது. இவர்களில் ஒருவர் உண்மையிலேயே பொருட்படுத்தத் தக்க படைப்பு ஒன்றை எழுதிவிட்டார் என்றால், ஓர் அசலான சிந்தனையை உருவாக்கிக்கொண்டார் என்றால் அறிவுச்செயல்பாட்டில் உள்ள மெய்யான இன்பம் என்ன, அறிவுச்செயல்பாடு என்பது என்ன என்று கண்டடைந்துவிடுவார். அவர் உடனே அந்த பெருந்திரளில் இருந்து விலகித் தனித்துவிடுவார்.

இலக்கியமும் தத்துவமும் எதிர்கொள்வது இங்கே இயற்கையை மானுடம் எதிர்கொள்ளும்போது உருவாகும் முடிவிலா வினாக்களையும் விடைகளுக்கான சாத்தியக்கூறுகளையும். உள்ளமென்றும் பண்பாடென்றும் தொகுக்கப்படும் அதன் அறிதல்களின் பெருக்கை கலைத்துக் கலைத்து மீண்டும் ஆராய்கின்றன அவை. அறுதிவிடைகள், எளிய தீர்வுகளுக்கு அவை எப்போதுமே எதிரானவை. பாமரப்பெருந்திரள் எப்போதுமே விடைகளுடன் இருக்கிறது. அவற்றால் நிறைவுறாதவனே இலக்கியமும் தத்துவமும் எழுதவும் வாசிக்கவும் வருகிறான். இவர்கள் செயல்படும் தளத்திற்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

ஆனால் இந்த ஃபாஸிஸ்டுகள் உருவாக்கும் உறுதிப்பாடுகள், அதன் அடிப்படையிலான அதிகாரக் கட்டுமானம் ஆகியவற்றுக்கு என்றுமே எதிராக இருப்பது சிறியதாக இருந்தாலும் மெய்யான தத்துவமும் கலையிலக்கியமும்தான். ஆகவே அவர்களால் இவற்றை நோக்கி வெறுப்பை உமிழாமலும் இருக்க முடியாது. விடைகளை நம்பி முஷ்டி சுருட்டி கூச்சலிடும் கும்பல்மனிதனுக்காக இவர்கள் பேசுகிறார்கள். இலக்கியமும் தத்துவமும் ஆழமான வினாக்களுடன் தனித்தமர்ந்து வாசிப்பவனுக்காக, சிந்திப்பவனுக்காகப் பேசுகின்றன.

இந்த வேறுபாடு மிக முக்கியமானது. அந்தரங்கமாக இந்த வேறுபாட்டை உணராத எவரிடமும் நானோ வேறெந்த இலக்கியவாதியோ பேச ஏதுமில்லை. குழப்பங்களுடன் பேசவருபவர் முப்பத்தைந்து வயதுக்குக் கீழானவர் என்றால் நான் நேரம் எடுத்துக்கொண்டு உரையாடுவேன்- அதைக் கடந்தவர் என்றால் அவருக்குச் செலவிட மூச்சோ எழுத்தோ இல்லை.அவர் எல்லா வகையான உலகியல் நுட்பங்களையும் கற்று சுயநலத்துடன் ஆடுபவராகவும் இருப்பார். அவர் மாறமுடியாது, மண்டையில் ஏதேனும் சொந்த அனுபவம் ஓங்கி அறைந்து மாற்றினாலொழிய.

*

அந்தத் தொகுதியில் எழுதியிருப்பவர்களில் இருவர் முக்கியமானவர்கள். சு.வெங்கடேசன் இலக்கியவாதியாக முக்கியமானவர். அவரைப்பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். தனிப்பட்ட முறையிலும் என் அணுக்கமான நண்பர், இன்றுவரை. ஆனால் அதிலுள்ள கட்டுரை அவருடைய கட்சிநிலை வெளிப்பாடு.

அத்தொகுதியில் எழுதியிருக்கும் ஜமாலன் தமிழின் குறிப்பிடத்தக்க இலக்கிய- அரசியல் கோட்பாட்டு எழுத்தாளர்களில் ஒருவர். அவருடைய பார்வை எனக்கு ஏற்புடையது அல்ல. அது வழக்கமான எளிய அரசியலை முன்முடிவாக வைத்து புனைவுகளை ஆராயும் வரட்சியான கோணம்தான். அதில் எப்போதுமே பொருட்படுத்தத் தகாத சல்லிப் படைப்புகளே தேறுகின்றன. ஏனென்றால் பேசப்பட்ட கருத்துக்களால் மட்டுமே படைப்பை அணுகும் அவருடைய இரும்புக்கம்பி போன்ற வாசிப்பில் அவற்றையே புரிந்துகொள்ள முடிகிறது. ஆகவே தமிழின் எந்த நல்ல படைப்பைப் பற்றியும் எந்த நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை- அவரால் இயலாது, அதற்கான அடிப்படை நுண்ணுணர்வோ ரசனையோ வாழ்வனுபவமோ அவருக்கில்லை.

ஆனால் அவருடைய நவீன இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுகள் ஒப்புநோக்க தெளிவானவை. கோட்பாடுகளை அறிய விழையும் வாசகர்களுக்கு பரிந்துரைக்கத் தக்கவை. அக்கோட்பாடுகளிலிருந்து அவர் தெரிவுசெய்து அளிக்கும் கோணங்கள் புதிய வெளிச்சங்களை அளிப்பவை. அவருடைய மொழிநடை ஒப்புநோக்க தெளிவானது. அவ்வகையில் அவர் முக்கியமானவர். அவர் காந்தி பற்றி எழுதிய விமர்சனம் கலந்த ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. தமிழில் தொடர்ச்சியாக நவீன சிந்தனைகளை அறிமுகம் செய்து எழுதிவருபவர் என்றவகையில் அ.மார்க்சுக்கு அடுத்தபடியான இடம் அவருக்கு உண்டு. ஆகவே என் மதிப்புக்குரியவர்.

மற்றபடி அத்தொகுதியில் எழுதியிருப்பவர்கள் பெரும்பாலும் சாரமற்றவர்கள். அங்கீகாரத்துக்காக ஏங்கி, அது கிடைக்காமல் சீற்றம்கொண்டு அங்குமிங்கும் முட்டிக்கொண்டே இருக்கும் சில்லறை எழுத்தாளர்கள். அவர்கள் என்றுமிருப்பார்கள். இந்த விட்டில்கள் உதிர்ந்த பின் அடுத்த தலைமுறை விட்டில்கள் எழுந்து வரும். அவற்றில் எழுதப்பட்டுள்ளவற்றில் பொருட்படுத்த தக்கவற்றுக்கெல்லாம் பெரும்பாலும் திட்டவட்டமான பதில்கள் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டன. ஆனால் அவர்களுக்க் அது பொருட்டல்ல, அதையே திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அந்நூலில் உள்ள ஏதேனும் ஒரு கட்டுரையை வாசித்து அதை ஏற்றுக்கொள்ளத்தக்கது என நினைக்கும் ஒருவன் என் வாசகனாக எப்போதுமே வரப்போவதில்லை. அந்நூல் முன்வைப்பது மிகமிக எளிமையான முச்சந்தி அரசியல், அக்கப்போர் சார்ந்த தர்க்கம். எதையாவது வாசிக்கத் தொடங்கும்போதே அந்நூலை விட ஒரு படி அறிவுத்தளத்தில் மேலானவனாக இருப்பவனே என் வாசகன். அவனே சுந்தர ராமசாமிக்கோ ஜானகிராமனுக்கோ புதுமைப்பித்தனுக்கோ வாசகன். அவனே இலக்கியத்தின் வாசகன்.

இவர்கள் ஒரு குழுவாக எப்படி கூடுகிறார்கள்? கூடி எதை வாசகனுக்கு அளிக்கிறார்கள்? எந்தப் படைப்பை? எந்தச் சிந்தனையை? அந்த முச்சந்தி அரசியலில் நின்றுவிடுபவன் அவர்களுடன் இணையத்தில் போஸ்டர் ஒட்டி கூச்சலிட்டு மகிழ்ந்து வாழ்பவன். அவனை அங்கேயே தடுத்து நிறுத்தி எஞ்சியோரை இங்கே அனுப்பும் அற்புதமான சல்லடை அந்நூல். அதனாலேயே அந்நூலை நான் இத்தனை பிரபலப்படுத்துகிறேன்.

இந்தவகை ‘ஆய்வுகள்’ எல்லாமே எப்போதுமே மெய்யான படைப்பாளிகளுக்கு எதிராக காழ்ப்பைக் கக்குவனவாக, அரைகுறைகளை தூக்கி முன்வைப்பவையாக ஏன் இருக்கின்றன, ஒரு நல்ல படைப்பாளிகூட இவர்களின் அளவுகோலில் ஏன் தேறவில்லை என்று யோசியுங்கள். இவர்கள் எந்த அணி என்று தெரியும்.

இதைப்பற்றி இனிமேல் ஏதும் பேசவேண்டாமென நினைக்கிறேன்.

ஜெ

கடிதங்கள்

ஜெயமோகன் : இந்துத்துவ பாசிசத்தின் இலக்கிய முகம் -தொகைநூல்

நடனம்

முந்தைய கட்டுரைஅரூ அறிவியல் சிறுகதைப்போட்டி முடிவுகள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி: கே.ஆர்.கௌரியம்மா