வெண்முரசு ஆவணப்படம் வெளியீடு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வெண்முரசு நிறைவை சிறப்பிக்கும் விதமாக, ‘வெண்முரசு கொண்டாட்டம்’ ஆவணப்படம் வரும் மே 8-ம் தேதி ராலே நகரில் திரையிடப்பட உள்ளது.

ராலேவில் திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்டன. இயல்புவாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.

எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம்,  நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், எம். கோபாலகிருஷ்ணன், லக்ஷ்மி மணிவண்ணன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும், கமல் ஹாசன், இளையராஜா,  வசந்தபாலன் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்களும், வாசகர்களும்  ஒன்றுகூடி, இது தமிழ் இலக்கியத்தில் ஏன் பெருமைப்பட வேண்டிய வரலாற்றுத் தருணம் என்றும், உலக இலக்கியத்தில் வெண்முரசின் இடம் என்ன என்றும், வெண்முரசில் இருந்து அவர்கள் பெற்றதென்ன என்றும்  பேசியிருக்கிறார்கள்.

கமல் ஹாசன், ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் நீலம் நாவலில் இருந்து எடுத்த சில அற்புதமான வரிகளை ராஜன் சோமசுந்தரம் இசையில் அபாரமாக பாடியிருக்கிறார்கள். சித்தார் ரிஷப் ஷர்மா, சாரங்கி மாயங்க் ரத்தோர், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து இந்த இசைத்தொகுப்பை வேறொரு உயரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

மேலும், வெண்முரசு மகாபாரதத்தின் விரிவை உணர்த்தும் படி,  ஜெர்மன் பிராஸ் இசைக்குழுவும், வட கரோலினா சிம்பொனியின் தந்தியிசைக் கலைஞர்களும் சேர்ந்து வாசித்திருக்கும் ஒரு பிரம்மாண்ட இசைத்தொகுப்பும் (Epic Theme)  உண்டு.

சார்லட்டில் இருக்கும் நண்பர்களும் ராலே வருவதாக சொல்லியிருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் நண்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ராலேவில் இருக்கும் தொலைக்காட்சி நிலையங்கள் WRAL மற்றும் CBS TV இந்த ஆவணப்படத்தை பற்றி மேலதிக தகவல்களை கேட்டிருக்கிறார்கள். அடுத்தபடியாக, இந்தியாவிலும் மற்ற பகுதிகளிலும் இருக்கும் நண்பர்கள் ஆவணப்படத்தைக் காண, சூழல் எப்படி இருக்கிறது என்பதற்கேற்ப ஏற்பாடுகளை செய்ய இருக்கிறோம்.

ஆஸ்டின் சௌந்தர்

ராஜன் சோமசுந்தரம்

முந்தைய கட்டுரைஇளமை- கனவும் பயிற்சியும்
அடுத்த கட்டுரை‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்