பி.ஏ.கிருஷ்ணனின் ‘மேற்கத்திய ஓவியங்கள்’
இனிய ஜெயம்
நேற்று வழமை போல நள்ளிரவு 12.30 கு அன்றைய நாளின் உங்கள் தளம் முழுதும் வாசித்துவிட்டு அதன் பிறகு அந்த பக்கம் போகவில்லை. ஆகவே உங்களின் பௌர்ணமி இரவு உரையாடல் அழைப்பை நான் பார்க்க வில்லை.
மேலை ஓவியங்கள் சார்ந்து வாசித்துக் கொண்டிருக்கிறேன். மூன்று முக்கியமான அறிமுக நூல்கள் கடந்த சில வருடங்களில் வெளியாகி இருக்கிறது.
அ. யாவரும் வெளியீடாக ஓவியர் கணபதி சுப்ரமணியம் எழுதிய ஓவியங்கள் : தேடுதல்கள், புரிதல்கள் முதல் பாகம். வெளியான போது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் பரிசளித்தது. இப்போதுதான் வாசித்தேன். கோட்டோவியங்களில் அதற்கும் முதலாக வெறும் கோடுகளில் துவங்கி, இன்றைய அரூப ஓவியங்கள் வரை, இலக்கியத்துக்கான மீமொழியை பயில்வது எவ்வளவு அவசியமோ அப்படி, நவீன ஓவியம் என்பதன் மீமொழியை அறிமுகம் செய்யும் நூல். முழு வண்ணத்தில் 1500 ரூபாயில் மிக அழகிய கலக்டர்ஸ் எடிஷன் னும் இந்த நூலுக்கு உண்டு.
போதிவனம் வெளியீடாக, சி. மோகன் எழுதிய நவீன ஓவியம்: புரிதலுக்கான பாதைகள் எனும் நூல். தடம் இதழில் தொடராக வந்து, இப்போது வண்ணப் பதிப்பாக முழு நூலும் வந்திருக்கிறது. போஸ்ட் இம்ப்ரஷனிசம் துவங்கி நவீன ஓவியங்களை அதன் கொள்கைகள் அலக்கியல்கள் வழியே அறிமுகம் செய்யும் நூல்.\
காலச்சுவடு வெளியீடாக பி. ஏ. கிருஷ்ணன் அவர்கள் எழுதிய இரு பாகங்கள் கொண்ட நூலான மேற்கத்திய ஓவியங்கள் நூல். லக்சாஸ் குகை ஓவியம் துவங்கி, கிரேக்கம், ரோம், கிறிஸ்துவ எழுச்சி, மறுமலர்ச்சி காலம் வரை மேலை ஓவிய மலர்ச்சி குறித்து பேசும் முதல் பாகத்தை கிண்டியில் வாசித்தேன். இது எனக்கு கட்டுப்படி ஆகாது என்று அறிந்து இரண்டாம் பாகத்தை நூல் வடிவில் கலெக்ட்டர்ஸ் எடிஷன் வாங்கி விட்டேன். வண்ண மயமான அந்த நூல் பிரெஞ்சு புரட்சி காலம் துவங்கி இன்று வரை வந்து நிறைகிறது. அந்த இரண்டாம் பாதியில் பாதி வரை வந்திருக்கிறேன்.
மூன்று நூல்களும் வெவ்வேறு தனித்தன்மைகள் கொண்டவை. முதல் நூல் எழுதியவர் அவரே ஓவியர். ஓவிய உலகுக்குள் நுழையும் சக ரசிகருக்கு தனது பாதை வழியே தேடி அடைந்தவற்றை பகிர்ந்து கொள்ளும் பாங்கில் அமைந்த நூல் அது. இரண்டாம் நூல் எழுதிய சி. மோகன் அவர்களின் ஓவியங்கள் மீதான ஈடுபாடு யாவரும் அறிந்ததே. வாசிப்பவர் மூளையை கிச்சடி கிண்டும் இசங்கள் கோட்பாடுகள் அனைத்தையும் மிக இலகுவான வகையில் அதன் தீவிரம் குன்றாமல் அறியத் தருகிறார். மூன்றாவது நூல் எழுதிய கிருஷ்ணன் அவர்கள் இளம் வயதிலேயே மேலை ஓவியங்கள் மீது ஈடுபாடு அடைந்தவர். தேடித் தேடி அது குறித்து வாசித்தவர். பின்னர் உலகம் சுற்றி தேடித் தேடி பல ஓவியங்களை நேரடியாக தரிசித்தவர். அந்த அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு அறிமுக ரசிகனுக்காக ரசனைப் பகிர்வாக எழுதப்பட்ட நூல் இது.
ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்தையும் குறிப்பிட்ட ஒரு ஓவியம் வழியே அதை ஆக்கிய மேதையின் வாழ்க்கை குறிப்பு வழியே, அவரது வாழ்வு சூழல், சமூக சூழல்,அரசியல் ஆத்மீக பின்புலம் இந்த பகைப்புலத்தில் வைத்து அறிமுகம் செய்கிறார். மேலை ஓவியம் ஒன்றின் நிலக் காட்சியை ஸ்லைடு காட்சி மாற்றுவது போல நெல்லை தாமிரபரணிக் கரைக் காட்சியுடன் இணைத்து விடுகிறார். மோனாலிஸா புன்னகையின் மர்மத்துக்கு இணை சொல்ல கம்பன் கவிதையில் சீதையின் புன்னகை குறித்த கவிதையை தொட்டு எடுக்கிறார். ஆம் எந்த எல்லையில் கலை தனது நிலம் கலாச்சாரம் சார்ந்த எல்லைக் கோடுகளை அழித்து மானுடப் பொதுவாக எழுகிறதோ அந்த எல்லையில் நின்று p.a.k மேலை ஓவியங்களை அறிமுகம் செய்கிறார்.
நூல்களின் பின்னிணைப்பாக மிக்கப் பயனளிக்கும் பெயரடைவுப் பட்டியல் உண்டு. ஒவ்வொரு பெயர் கொண்டும் இணைய வெளியில் ஒரு கடலையை திறக்க முடியும். தொடர் வாசிப்புக்குத் தேடுகயில் மேலை ஓவியங்கள் குறித்த இந்த கலைக்களஞ்சிய தளம் கண்டேன்.
ஐயாயிரம் வருட அறுபடாத வளமான கலைப் பாரம்பரியம் கொண்ட இந்தியாவில், இப்படி ஒரு சொடுக்கில் இலவசமாக நமது கலைச்செல்வங்களை அறிமுகம் செய்யும் ஒரு கலைக்களஞ்சியம் கிடையாது. எங்கள் ஆயா குத்தும் உலக்கைக்கு வயசு ஐநூறு. மோனாலிஸா வயசு வெறும் நானூறு எனும் வகையிலான பெருமிதங்கள் மட்டுமே நம்மிடம் உண்டு.
கடலூர் சீனு