சிதம்பரம்- கடிதம்

சிதம்பரம்

அன்புள்ள ஜெ

இணைப்பில் அளிக்கப்பட்டிருந்த சிதம்பரம் படத்தைப் பார்த்தேன். அந்தப்படம் ஒரு அப்ஸ்ட்ராக்ட் கலைக்காக முயல்கிறது. சினிமாவை கதையாக, அல்லது நாடகவெளிப்பாடாக பார்க்காதவர்கள் அந்த சினிமாவின் அழகான தருணங்களை ரசிப்பார்கள்.. அதுதான் சினிமா என்னும் கலை.

நீங்கள் சொல்லியிருந்ததுபோல மிகமெல்ல ஸ்மிதாபாட்டீல் நடிக்கும் தமிழ்ப்பெண்ணாகிய சிவகாமியின் கதாபாத்திரம் மலர்வதுதான் அந்த சினிமாவின் அழகே. அவள் பயந்த பெண்ணாக வருகிறாள். எருமைகள்போல பயந்துகொள்கிறாள். அந்த புகைப்படம் வழியாக இன்னொரு உலகம் அறிமுகமாகிறது. அந்த பூக்களை அவள் பார்க்குமிடத்தில் உருமாறிவிடுகிறாள். ஸ்மிதா பாட்டீலை பார்ப்பதே அழகாக இருக்கிறது. அத்தனை டைட் குளோஸப்பில் அவ்வளவு இயல்பாக வெளிப்படுவது ஒரு பெரிய நடிகையால்தான் முடியும்.

அதேபோல கோபி. அவருடைய வெறுமை முதலில் அவருடைய நடத்தை வழியாகவே வெளிப்படுகிறது. சிவகாமியை கண்டு புகைப்படம் எடுக்கிறார். அது அவருடைய ரகசியக் கண். அதன்பின் தலைசீவும்போதே அவருடைய மனம் கிளர்ச்சிகொண்டிருப்பது தெரியவருகிறது

சங்கரனும் சிவகாமியும். அது ஒரு ஆடல். அது சிதம்பரத்தின் வெட்டவெளியில் சென்று முடிகிறது. சினிமாவிலும் இத்தனை நுட்பமான பூடகமான கலை சாத்தியம்தான், நம்புங்கள் ஜெ

எஸ். அர்விந்த்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சிதம்பரம்  என்கிற உங்கள் கட்டுரை பழைய நினைவுகளைத் தூண்டுகிறது. சிதம்பரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்பது சரியல்ல. ஃப்ர்ண்ட் லைன் பத்திரிக்கையில்  சிதம்பரம் பற்றி படித்துவிட்டு நானும் என் நண்பனும் கோவையிலிருந்து பாலக்காடு சென்றோம். அங்கே கோட்டை மைதானம் என்கிற இடத்தில் இறங்கினோம்.  பாலக்காடு செல்வது அதுதான் முதல் முறை. ஓருவரிடம் அந்த படம் எங்கே ஓடுகிறது என்று கேட்டோம். அந்த படத்தைப் பார்ப்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கிறீர்களா என்று ஆச்சரியமாக கேட்டு விட்டு நீண்ட தூரம் கூடவே தியேட்டர் வரை நடந்து வந்து  வழி காண்பித்தார்.  தியேட்டர் பெயர் சரியாக ஞாபகமில்லை. அரோமா என்று நினைக்கிறேன். படம் பார்த்து விட்டு ஸ்மிதாவைப் போலவே  மூனாறின் அழகில் வீழ்ந்தோம்.  அடுத்த வாரமே மூன்று நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு மூணாறு சென்றோம். மாட்டுப்பட்டியின் புல் தரையில் மணிக்கணக்காய் சிதம்பரத்தை நினைத்துக்கொண்டு கிடந்தோம்.  அது ஒரு வயது….

இன்றும் சிதம்பரம் ஒரு மாஸ்டர்பீஸ் என்று நினைக்கிறேன். அதற்கான ரசிகர்களை அது எப்போதும் கொண்டிருக்கும்.

நன்றி.

அன்புடன்

ராமகிருஷ்ணன்.

***

அன்புள்ள ஜெ.,

அன்றைக்கெல்லாம் அதாவது எண்பதுகளின் மத்தியில்  சிறு நகரங்களில் காலை பதினோரு மணிக்காட்சி மட்டும்தான் மலையாளப் படம் போடுவார்கள். எல்லாமே ‘போர்ன்’ படங்கள். ‘கிளு கிளு’ காட்சிகள் நிறைந்தது என்ற வரி இல்லாத விளம்பரச் சுவரொட்டிகளே இருக்காது.

‘பையனைக் கொஞ்சம் கண்டிச்சு வைங்க, மலையாளப் படத்துக்கெல்லாம் போறானாம்’ போன்ற புகார்கள் சாதாரணம். இதிலே வேடிக்கை என்னவென்றால், மாங்கு மாங்கென்று சைக்கிளை மிதித்துக்கொண்டு பத்து கிலோமீட்டர் தள்ளி பக்கத்து ஊரில் போய்தான் படம் பார்ப்பது. தமிழனுக்கு மானம் முக்கியம் அல்லவா?

அப்பிடியும் தியேட்டரில் அப்பாவும் மகனும், ஆசிரியரும் மாணவனும் நேருக்கு நேராக சந்திக்கும் நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளும் நடந்திருக்கிறது.

பாவம் கொடூரன், பிடிகிட்டாப் புள்ளி, அஞ்சரைக்குள்ள வண்டி, உக்கான் ஓர்மிக்கான், மழு (இதற்கு தமிழக சினிமா வினியோகஸ்தர்கள் வைத்த பெயர் ‘மாமனாரின் இன்பவெறி’) என்று ஒரு பெரும் கலாசாரப்பரிவர்த்தனையே நடந்து கொண்டிருந்தது. படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்யவில்லையென்றால் ரசிகர்களின் ஆரவாரம் அதிகமாக இருக்கும்.

திரையில் பளிச் பளிச் என்று இரண்டு முறை விளக்கு அணைந்து எரியும். ‘பதறாதே திகையாதே நான் உன்னுடனேயே இருக்கிறேன்’ என்று ‘ஆபரேட்டர்’ கொடுக்கும் சமிங்ஞை அது. சரியான ‘பிட்’ டைப் போட்டு அனைவரையும் மலர்ந்த முகத்தோடு அனுப்பி வைப்பார் ‘ஆபரேட்டர்’ என்கிற ‘கிரியேட்டர்’.

‘கேப்டன் ராஜ் இருக்காப்ல. கன்பார்மா இருக்கு?’ என்று அழைத்த நண்பனைப் பொருட்படுத்தாமல் மதுரை சக்தி தியேட்டரில் வழக்கமான ‘எதிர்பார்ப்புகள்’ இல்லாமல் நான் போய்ப் பார்த்த முதல் மலையாளப் படம் ‘சிதம்பரம்’. தியேட்டரில் நானும், ஆறு பேர் கொண்ட மலையாளக் குடும்பம் ஒன்றும். இத்தனை குறைந்த பேர்களுக்கும் சினிமா ஓட்டுவார்கள் என்று அன்றுதான் தெரிந்து கொண்டேன்.

”பதினாறு வயதினிலே’ க்கு அவார்ட் ரொம்ப எதிர்பார்த்தேன். ஆனால் அந்த வருஷம் கோபிக்கு கிடைத்தது. ‘கொடியேட்டம்’ பார்த்தவுடன் அவருக்குக் கொடுத்தது சரிதான் என்று தோன்றியது” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் கமல். இன்றைக்கு இத்தனை வருடம் கழித்து அந்தப் படத்திலிருந்து நினைவில் நிற்பது சீனிவாசன் புல் ‘மப்’பில் பாடும் ‘மார்கழி மாதம் திருவாதிரை நாள் வரப்போகுது ஐயே’ என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் நந்தனார் சரித்திரப் பாடலும், உச்சகட்டக் காட்சி நடக்கும் சிதம்பரம் கோயிலும் தான். முதல் சிதம்பரம் கோயில் தரிசனம் அப்படிதான் கிட்டியது.

அதன்பிறகு அரவிந்தன், பரதன், சிபிமலயில், சத்யன் அந்திக்காடு, ஷாஜி கருண்,ப்ரியதர்ஷன் என்று ஒரு பெரிய அலை எழுந்துவந்து மம்முட்டி, மோகன்லால் துணையோடு மலையாள சினிமாவின் நிறத்தையே மாற்றிக்காட்டியது வரலாறு. உங்கள் கட்டுரை சிறந்த ஒரு மீட்டெடுப்பு. திரும்ப படிக்கவும்,பார்க்கவும் வேண்டும்.

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்    

***

முந்தைய கட்டுரைஆன்மிகமும் சிரிப்பும்
அடுத்த கட்டுரைநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்