அருண்மொழியின் தொடக்கம்

திருமணமாகும் முன்பு அருண்மொழி கொஞ்சம் கொஞ்சம் எழுதிக்கொண்டிருந்தாள். இளமை முதல் தீவிரமான வாசகி. எதையாவது எழுது என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். ஆனால் தீவிரவாசகர்களுக்கு உருவாகும் ஒரு தயக்கம் அவளுக்கு தடையாக இருந்தது.  ‘எழுதினால் ஜானகிராமனில் இருந்து தொடங்கி மேலே செல்வதுபோல எழுதவேண்டும், நான் எழுதியதை நானே வாசித்தால் என்னுள் இருக்கும் ஜானகிராமனின், அசோகமித்திரனின் வாசகி கூச்சப்படக்கூடாது’ என்றாள்.

ஆனால் அப்படி கடந்துசெல்வதென்பது ஒரு கனவாகவே இளமையில் திகழமுடியும். எழுத்து வசப்பட எழுதியாகவேண்டும். அதற்கு எழுத்தின்மேல் மோகம் இருக்கவேண்டும். நம்பிக்கை இருக்கவேண்டும். எழுத்து தன்னளவில் ஒரு கொண்டாட்டமாக ஆகும்போது நாம் எழுதிக் கொண்டே இருக்கிறோம். எழுத்தினூடாக நாம் நம் எல்லைகளை கடந்து செல்கிறோம். நமது சாத்தியங்களைக் கண்டடைகிறோம். நம் மிகச்சிறந்த வெளிப்பாடுகளை நோக்கி செல்ல ஆரம்பிக்கிறோம்.

அதற்கு எழுதுவதை எழுத்தின் இன்பத்தின்பொருட்டு மட்டுமே செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஆணவமும் அங்கீகாரத்தேடலும் ஊடாக வரக்கூடாது. எழுத்தில் மட்டுமே முழுமையாக வாழ்பவர்களே எழுத்தாளர்கள் ஆகிறார்கள். எழுத்தில் புகுந்தால் தனக்கான உலகை உருவாக்கிக் கொள்பவர்கள். அதன்பொருட்டு வேறெதையும் விட்டுவிடுபவர்கள்.

அதை அருண்மொழிக்குச் சொல்லிக் கொண்டே இருந்தேன். அந்தத் தயக்கத்தைக் கடந்து அவள் எழுத கொரோனாக்கால தனிமை தேவைப்பட்டிருக்கிறது. அவளுடைய வலைப்பக்கம். இதில் தன் வாழ்வனுபவக் குறிப்புகளாக எழுத தொடங்கியிருக்கிறாள். வெறும் வாழ்க்கைக் குறிப்பு என்றாலும் புனைகதை எழுத்தாளரின் இரு பண்புகள் அழகுற வெளிப்பட்டுள்ளன. கதாபாத்திரங்களை விரைவான சொற்கோடுகள் வழியாக உருவாக்க முடிந்திருக்கிறது. புறவுலகை படிமங்களாக்கி அகம்நோக்கி கொண்டுசெல்ல முடிந்திருக்கிறது. இக்குறிப்பில் இருக்கும் காவேரி ஓர் ஆறு மட்டும் அல்ல.

அருண்மொழி எழுத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கண்டடைந்தால், அதன்பொருட்டு மட்டுமே எழுதத் தொடங்கினால், அவள் தான் மட்டுமே வாழும் ஒரு பொன்னுலகை சென்றுசேர்வாள். வாழ்த்துக்கள்

மரபிசையும் காவிரியும்
முந்தைய கட்டுரைஓஷோ கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிழிநிறைக்கும் கலை