விழிநிறைக்கும் கலை

பிரம்மாண்டமான காட்சியமைப்பு கொண்ட படங்களை எதிர்மறையாகப் பார்க்கும் மனநிலையை திரைப்படச் சங்கங்கள் எழுபது எண்பதுகளில் அன்றைய ’தீவிரசினிமா’ ரசிகர்களான எங்களிடம் உருவாக்கின. பெரிய படங்களை ஆடம்பரக் கொண்டாட்டம் [bash] என்றும் அவற்றின் அழகியலை பரோக் பாணி [Baroque] என்றும் சொன்னார்கள். அன்றைய சொல்லாட்சி ‘ஆபாசமான பிரம்மாண்டம்.’

1987-ல் பெர்னடோ பெர்ட்லுச்சியின் The Last Emperor திருவனந்தபுரம் திரைவிழாவில் வெளியானபோது கடுமையான எதிர்விமர்சனங்கள் உருவானதை நினைவுகூர்கிறேன். திரைவிழாவின் ‘புனிதம்’ கெட்டுவிட்டது என்ற கண்டனம். ‘திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டு விழாவை ஒளிப்பதிவு செய்தால் இதை விடப் பிரம்மாண்டமாக இருக்கும். இதை எதற்கு சினிமா அரங்கிலே காட்டவேண்டும்?” என்று ஓர் சினிமா விமர்சகர் எழுதினார்.  ‘இப்படியே போனால் கோலாட்டம் கரகாட்டமெல்லாம் சினிமாவாக வரத்தொடங்கும்.’

அப்படத்தை நான் திரைவிழாவில் தவறவிட்டேன். ஆனால் உடனே திரையரங்குகளில் வெளியாகி நூறுநாட்கள் ஓடியது. இருமுறை திரையரங்கில் அதைப் பார்த்தேன். எனக்கு என் அகத்தில் நிறைந்திருந்த கனவை விரித்த படமாக அது இருந்தது.

அகன்ற காட்சியமைப்பு கொண்ட பெரிய படங்களைப் பற்றிய அன்றைய விமர்சனங்கள் இவை.

அ. அந்தப் படங்கள் கண்களை காட்சிகளால் நிறைத்து கற்பனைவிரிவுக்கு இடமில்லாமல் செய்துவிடுகின்றன. சிந்திப்பதற்கு வாய்ப்பளிக்காமல் வியப்பு, திகைப்பு, விழிநிறைவிலேயே பார்வையாளனை வைத்திருக்கின்றன.

ஆ. சினிமா என்பது காட்சிப் படிமங்களால் பேசும் ஒரு கலை. காட்சிகள் படிமங்கள் ஆவதற்கு சினிமாவில் அவகாசம் அளிக்கப்படவேண்டும். அந்தப் படிமங்கள் சினிமாவின் ஆசிரியரான இயக்குநரால் பொருளேற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும். பிரம்மாண்டப் படங்களில் காட்சிகள் உள்ளீடற்றவை, அவை படிமங்கள் அல்ல.

இ. பிரம்மாண்டமான படங்கள் பெரும் பொருட்செலவில் எடுக்கப்படுகின்றன. அவை பெரும்பொருள் ஈட்டியாகவேண்டும். ஆகவே அவை சராசரியான ரசிகனுக்காக தங்களை சமைத்துக்கொள்கின்றன. ஆகவே சராசரிப் படங்களாகவே நீடிக்கின்றன.

ஈ.பிரம்மாண்டப் படங்களில் ’ஆசிரியன்’ என ஒருவன் இல்லை. அங்கே இயக்குநர் ஒரு தொகுப்பாளர் அல்லது நிகழ்த்துநர் மட்டும்தான். அவரால் சினிமாவை தன் அகவெளிப்பாடாக கையாளமுடியாது. பிரம்மாண்டப் படங்கள் எவருடைய அகவெளிப்பாடும் அல்ல. கலை என்பது கலைஞனின் ஆன்மாவாகவே இருக்கமுடியும்.

இந்த குற்றச்சாட்டுக்களை அன்று நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் சினிமா அன்றும் இன்றும் என் ஊடகம் அல்ல. அதில் நான் ஏற்பவர் சொல்லும் கருத்துக்களை நான் ஆழமாக ஆராய்ந்து பார்க்கவில்லை.

ஆனால் நான் ‘அகன்ற’ சினிமாக்களை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அவை அளித்த கனவுநிகர்த்த அனுபவம் மிகத்தேவையாக இருந்தது. அன்றெல்லாம் அத்தகைய படங்களை பெரிய ஊர்களில், பெரிய திரைகளிலேயே பார்க்கமுடியும். அப்படி பெரிய படங்களைப் பார்ப்பதற்காக நான் மங்களூர், திருவனந்தபுரம், பெங்களூர் என்று சென்றுகொண்டிருந்தேன்.

பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அன்றைய கிழக்கு ஐரோப்பிய ‘அரசியல் சினிமா’ சலிப்பூட்டத் தொடங்கியது. மைக்கேலாஞ்சலோ அண்டோனியோனியெல்லாம் நம்மூர் மேலாண்மைப் பொன்னுச்சாமிகள்தான் என்று தோன்ற ஆரம்பித்தது. இன்று ஒரு காலத்தில் ஒரு தொன்மவடிவாக கொண்டாடப்பட்ட அவர் பெயரை நான் சொன்னால் இளைய சினிமா ரசிகர்கள் என்னை கிழவன் என்பார்கள்.

அதன் பின் ‘சிந்தனை பொதிந்த’ படங்களை பார்ப்பது சலிப்பூட்டியது. மிகச்சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் அவை. மிக மெல்ல நகர்பவை. ஆசிரியனே ‘பார், நன்றாகப் பார்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பதுபோலிருக்கும். ஆனாலும் இன்று யோசிக்கும்போது அன்று நான் பார்த்த  ‘கிளாசிக்’ கலைப்படங்களில் குறைவான படங்களில்தான் என் கனவிலும் நினைவிலும் நீடிக்கும் காட்சிப்படிமங்கள் வந்துள்ளன என்று தோன்றுகிறது.

இன்று இப்படித் தோன்றுகிறது. உச்சகட்ட பிரச்சாரம் வழியாக அன்றைய கலைப்படங்கள் ஒரு சிறு சராராரால் ஒரு சிறுவட்டத்தில் மிகமிகக் கூர்ந்து  பார்க்கவைக்கப்பட்டன. அப்படிக் கூர்ந்து பார்த்தமையால்தான் அப்படிமங்கள் உள்ளே சென்றன. ஆனால் இயல்பாக பார்த்து கடந்துவந்த பல பெரிய படங்களின் காட்சிப்படிமங்கள் இன்றும் ஆழமாக நீடித்து வளர்ந்துகொண்டிருக்கின்றன.

இன்று, ஒரு சினிமா விமர்சகனாக அல்லாமல் ரசிகனாக, அகன்ற படங்களைப் பற்றிய என் எண்ணம் மாறிவிட்டிருக்கிறது. அந்தப்படங்கள் அன்றிருந்த தீவிரத் திரைவிமர்சகர்கள் சொன்னதுபோல உதிர்பவை [ephemeral] அல்ல. அவை புதிய தொழில்நுட்பத்தை எதிர்கொண்டு இன்றும் அதே பெருங்கனவுத்தன்மையுடன் நீடிக்கின்றன.

மாறாக அன்று கொண்டாடப்பட்ட அரசியல் சினிமாக்கள், அதிர்ச்சி சினிமாக்கள், சோதனை சினிமாக்கள், சமூகச்சித்தரிப்பு சினிமாக்கள், இருத்தலிய சினிமாக்கள், துளிச்சித்தரிப்பு மட்டும் கொண்ட சினிமாக்கள் முப்பதாண்டுகளுக்குள் பொதுப்பேச்சிலிருந்து மறைந்துவிட்டிருக்கின்றன. இன்றைய சினிமா ரசிகர்களால் நிராகரிக்கவும் படுகின்றன.

இன்று நான் அகன்ற சினிமாக்களைப் பற்றி மேலே சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களை எப்படி எதிர்கொள்வேன்?

அ.அகன்ற சினிமா கண்களை நிறைக்கிறது. அதன் வழியாக திரையரங்கில் அமர்ந்திருக்கும் நேரத்தை ஒரு கனவுநிகர் நிலைமையாக ஆக்குகிறது. அதன் வழியாக நம்முள் ஆழ்ந்துசெல்கிறது. நம் கனவை, ஆழுள்ளத்தை நேரடியாகச் சென்றடைகிறது. சிந்திக்க வாய்ப்பளிக்காமையே அவற்றின் பலம். அவை சிந்தனையால் தடுக்கப்படுவதில்லை. அவை தூய அகவய அனுபவமாக ஆகின்றன. நடுவே ஊடாடும் சிந்தனை கலையனுபவத்தை கலைப்பது. ஏனென்றால் உண்மையில் அது சிந்தனை அல்ல- நமக்கு ஏற்கனவே தெரிந்ததை புதிய அனுபவத்தின்மேல் போட்டுப்பார்ப்பதுதான்.

ஆ. அகன்ற சினிமா காட்டும் காட்சிப்படிமங்கள் தன்னியல்பானவை. ஆசிரியனால் சமைக்கப்பட்டு முன்வைக்கப்படுபவை அல்ல.  அவை காட்டும் பிரம்மாண்டமான காட்சிச்சட்டகத்தை பார்வையாளன் தன் ஆழுள்ளத்தால் எதிர்கொள்ளும்போது அவை இயல்பாகவே படிமங்களாக ஆகின்றன. கிளியோபாட்ரா படத்தில் கிளியோபாட்ரா தோன்றும் இடத்தில் அந்த மாபெரும் ஊர்தி வெறும் ஆடம்பரம் அல்ல, பார்வையாளனுக்கு அது எகிப்துக்கே படிமமாக ஆகக்கூடும்.

இ. பிரம்மாண்டமான படங்கள் பெரும்பொருட்செலவில் எடுக்கப்படுவதனாலேயே, அவை பொதுவான ரசிகனை உத்தேசிப்பதனாலேயே, அவை பொதுவான ஆழுள்ளம் நோக்கி பேசவேண்டியிருக்கிறது. சமூகத்தின் கூட்டுநனவிலியை நோக்கிப் பேசுவனவாக, அவற்றை வெளிப்படுத்துவனவாக அவை எளிதில் தங்களை மாற்றிக்கொள்கின்றன. அவை சிந்திப்பவனுக்கு சமூகப்பொதுவான உணர்வுகள், கனவுகளுக்குச் செல்ல உதவுகின்றன. கூட்டுநனவிலியை அடைய வழியாகின்றன.

அறிவுஜீவி ரசிகனுக்காக திட்டமிட்டு எடுக்கப்படும் சினிமாக்கள் அவனை நோக்கி பேசுவதனாலேயே ஒரு நேரடித்தன்மை கொள்கின்றன. தொடர்ந்து அவற்றை அவன் பார்க்கையில் அந்த நேரடித்தன்மை சலிப்பூட்டும். அவன் ‘தற்செயலாக’ விரியும் கனவுகளை சினிமாவில் எதிர்பார்ப்பான். அவை அந்தவகை படங்களில் இருக்காது. அவன் அகன்ற படங்களிலேயே அந்த இயல்பான விரிதலை அடையமுடியும்.

பெரிய படங்களை சோதனை முயற்சியாக எடுக்க முடியாது. அவை ஏற்கனவே வெற்றிபெற்ற படங்களை கூர்ந்து கவனித்து அவற்றின் வளர்ச்சியாக தங்களை அமைத்துக் கொள்கின்றன. ஆகவே அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு பெரிய கதையாடலாக ஆகின்றன. அது ஒற்றைப்பெருங்காப்பியம்போல. அது ஒரு சமகாலப் பெருநிகழ்வு. ஆகவே ரசிகனுக்கு முக்கியமானது.

ஈ. பிரம்மாண்டப் படங்களில் ‘ஒரு’ ஆசிரியன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து ஒற்றை ஆளுமையாக அதன்பின் உள்ளனர். அதை ‘கூட்டு ஆசிரியர்’ [Collective Author] என்று சொல்லலாம். பெரிய செவ்விலக்கியங்களில் அவ்வண்ணம் கூட்டு ஆசிரியர் நிகழ்வதுண்டு. ஒரு கல்வியமைப்பு, ஓர் ஆசிரியர் மரபு இணைந்து ஒரு படைப்பை உருவாக்கலாம்.அப்படி பல நூல்கள் உள்ளன.

உதாரணமாக, நம் பேராலயங்கள் கூட்டு ஆசிரியரால் உருவாக்கப்பட்ட கலைப்படைப்புக்கள். அவற்றுக்குப் பின் ஒரு மனிதனின் அகம் இல்லை, மாறாக ஒரு தொழிற்குழுவின் அகம் உள்ளது. அது பலநூற்றாண்டுகளாக உருவாகித் திரண்டு வருவது. இந்தப் படங்களை ஒரு கூட்டுப் படைப்பூக்க வெளிப்பாடாக கொள்ளலாம்

The Battle of Alexander at Issus (-1529) – Albrecht Altdorfer 

இந்தப்படங்களின் முதன்மையான கொடை என்ன? நம்முடைய வரலாற்று அகச்சித்திரம் வெறும் சொற்களாலானது. அதை காட்சிப்படுத்தியாக வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நமது சொந்த வாழ்க்கையையே நாம் காட்சியாக ஆக்கவேண்டியிருக்கிறது. அந்த காட்சிப்படுத்தலை சென்ற ஐம்பதாண்டுகளில் நிகழ்த்தியவை இந்தப் படங்களே. நாம் நம் வாழ்க்கையை நம்முள் அகவயச் சித்திரமாக ஆக்க இப்படங்களே வழிவகுத்தன.

அகன்ற படங்களை ‘ஒருவர்’ எடுக்கவில்லை என்பதே அவற்றை கலைப்படைப்பாக ஆக்குகிறது.அங்கே நிகழ்வது ஒரு கலைப்பரிமாற்றம்.ஒரு கூட்டுப்படைப்பியக்கம். அங்கே எழுத்தாளர்கள், சிற்பிகள், ஓவியர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசைக்கலைஞர்கள் என பலருடைய பங்களிப்பு நிகழ்கிறது. அவை ஒரு புள்ளியில் ஒன்றாக ஆகின்றன. ஒவ்வொருவரும் அவரிடம் இருந்ததை விட மேலான ஒரு கலைப்படைப்பு நிகழ்ந்து விட்டிருப்பதை காண்கிறார்கள்.

வின்சென்ட் வான்கோ

இந்த அபூர்வமான அனுபவம் நிகழ்வதனால்தான் பெரும் திரைக்கலைஞர்கள் அகன்ற படம் மேல் மாளாத மோகம் கொண்டிருக்கிறார்கள். கனவை நிகழ்த்துவதே கலைஞனின் விழைவாக எப்போதும் இருந்துகொண்டிருக்கிறது. அதன் சுவையை அறிந்தவன் எளிய அரசியல், எளிய உளவியல், எளிய சமூக உண்மைகளை பொருட்டாக நினைக்க மாட்டான்.

இன்று எவரானாலும் நிலம், வரலாறு, போர் முதலிய வாழ்க்கைக்களங்கள் ஆகியவற்றை இந்தவகை அகன்றவகைப் படங்கள் வழியாகவே தங்கள் அகத்துள் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதை அந்தரங்கமாகப் பார்த்தால் உணரலாம். இந்த அகன்ற சினிமாக்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு மாபெரும் கனவு வெளியாக மாறி நம் கனவை, நம் கற்பனைப்பரப்பைச் சமைத்துள்ளன. இந்த நூற்றாண்டின் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று இது.

The Death of Major Peirson, 1783 .John Singleton Copley.  

இதற்கிணையான சென்றகால நிகழ்வுகள் உண்டா? இப்படி காலத்தை காட்சியாக சமைத்துக்கொண்ட கலை இயக்கங்கள் என்னென்ன?

முதலில் தோன்றுவது ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவியமரபுதான். மைக்கேலாஞ்சலோ முதல் ரெம்பிராண்ட் வரை. தொன்ம நிகழ்வுகள், தொன்மநிலங்கள், தொன்ம மனிதர்கள் அவர்களால்தான் காட்சியாக ஆக்கப் பட்டன. மாபெரும் போர்க்களங்கள், கடற்கொந்தளிப்புக்கள், கட்டிடங்கள், நகர்ச்சதுக்கங்கள், பனிப்புயல்கள், வசந்தகாலப் பொலிவுகள், அலங்காரத் தோற்றங்கள் என வரைந்து குவித்திருக்கிறார்கள். அதனூடாக ஐரோப்பிய பண்பாடே  ‘கண்ணுக்குத்தெரியும்’ ஒன்றாக ஆகியது.

ஐரோப்பிய இலக்கியம் செழுமையுற அந்த ஓவியமரபு அளித்த கொடை மிகப்பெரியது. சொல்லில் எழும் சித்தரிப்புகளை மிக எளிதாக கனவாக, காட்சியாக ஆக்கிக்கொள்ள ஐரோப்பியர்களுக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தன அவை. உலகமே ஐரோப்பிய இலக்கியம் மீது நின்றுதான் தன் நவீன இலக்கியத்தை, நவீனக்கலையை உருவாக்கிக் கொண்டது. உலகமரபின் மாபெரும் கலைப்பேரியக்கம் ஐரோப்பிய நவீனச்செவ்விய ஓவிய மரபுதான் என்றுகூடச் சொல்லிவிடலாம்.

ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபின் நீட்சிதான் இன்றைய சினிமா. இன்றுகூட திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பெரும் பித்துடன் ரெம்ப்ராண்டை பார்த்துக்கொண்டே இருப்பதை கவனித்திருக்கிறேன். ஐரோப்பிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபுக்கு அடுத்தபடியாக ஜப்பானிய நவீனச் செவ்வியல் ஓவிய மரபைச் சொல்லலாம்.

அந்த அளவுக்கு இல்லையென்றாலும் உலகில் பல காட்சிப்படுத்தல் இயக்கங்கள் வரலாற்றில் உள்ளன என்பதைக் காணலாம். சொல்லப்போனால் ஒரு பேரரசு தனக்கான காட்சிப்படுத்தல் முறை ஒன்றையும் உருவாக்கிக் கொண்டிருக்கும். ஏனென்றால் அது தனக்கான வரலாற்றை உருவாக்க முயல்கிறது. தனக்கு முன்னோடியாக ஒரு வரலாற்றை கட்டமைக்கிறது, தன் வரலாற்றை எதிர்காலத்துக்காகப் பதிவுசெய்கிறது.

தமிழ்வரலாற்றின் பேரரசுக்காலம் என்பது சோழர்களின் முந்நூறாண்டுகள். அவர்கள் இந்த ‘அகன்ற சினிமாவை’ கல்லில் உருவாக்கியிருப்பதை கோயில்கள் தோறும் காணலாம். ஆலயச்சுவர்களின் புடைப்புச்சிற்பங்கள் ஒருவகை கல்ஓவியங்கள். எத்தனை பிரம்மாண்டமானவை அவை. பெரும் போர்க்களங்கள், திருவிழாக்கள், அரச ஊர்வலங்கள் என எத்தனை பெரிய படச்சட்டகங்கள். கம்பராமாயணத்தின் யுத்தகாண்டத்தையும், கலிங்கத்துப் பரணியையும் அந்த காட்சிச்சட்டகங்கள் வழியாகவே பொருள்கொள்ள முடியும்.

முந்தைய கட்டுரைஅருண்மொழியின் தொடக்கம்
அடுத்த கட்டுரைஅஞ்சலி-பெ.சு.மணி