கதை திகழும் புள்ளிகள்- ஒரு விவாதம்

அன்புள்ள ஜெ

தமிழில் திடீரென்று புதிய வீச்சுடன் எழுத வந்திருக்கும் எழுத்தாளர் சுஷீல்குமார். இன்றைய சூழலில் ஒருவர் நன்றாக எழுதினால் மட்டும் போதாது. தொடர்ச்சியாக நிறைய நன்றாக எழுதவேண்டும். அப்போதுதான் அவருடைய எழுத்தின் உலகமும் அவருடைய பார்வையும் வாசகரிடம் தெளிவாக உருவாகி வரும். சுஷீல்குமார் அப்படி நிறைய எழுதுபவரும்கூட.

தமிழ்ச்சூழலில் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட பாலியல்மீறல், அடித்தளமக்களின் வன்முறை என்ற இரண்டு பேசுபொருட்களுக்கு வெளியே சென்று கடந்தகால வரலாறு, தொன்மங்கள், இன்றைய வாழ்க்கையிலுள்ள கலைச்செயல்பாடுகள் என்று பல்வேறு வாழ்க்கைக்களங்களில் இருந்து கதைக்கருக்களை கண்டடைகிறார். பெரும்பாலான கதைகள் கற்பனைநிறைந்தவை.

சென்ற இரண்டுமாதங்களில் சுஷீல் எழுதிய இரு கதைகள் கவனத்திற்குரிய நல்ல படைப்புக்கள். உங்கள் வாசிப்புக்காக

எம்.ராஜேந்திரன்

சப்தாவர்ணம்
தோடுடையாள்

அன்புள்ள ராஜேந்திரன்,

சுஷீல்குமாரின் இரு கதைகளுமே நன்றாக உள்ளன. கதைகள் அன்றாடத்தை கடந்து படிமங்களாக விரியும்போது மட்டுமே ஆழம் பெறுகின்றன. அந்த வகையான விரிவுக்குத் தேவையாக இருப்பது அவற்றின் களமும் முன்வைப்பும். வாசகனுக்கு சற்றே கனவு கலந்த களம் அதிலுள்ள எல்லாவற்றையும் படிமங்களாக ஆக்கி அளிக்கிறது. சுஷீல் அதை திறம்பட சாதித்திருக்கிறார்

பாலியல் மீறலைச் சித்தரிப்பதோ அல்லது வேறொரு பேசுபொருளை முன்வைப்பதோ தன்னளவில் கலைக்கு எதிரானதாக ஆகாது. அதை எழுதும்போது படைப்பாளியின் கையடக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது, அதேசமயம் பறக்கவேண்டிய தருணத்தில் எப்படி எல்லா தன்னுணர்வுகளும் மறைகின்றன என்பதே கலையை தீர்மானிக்கிறது. அவ்வகையில் பா.திருச்செந்தாழை [பெயர் அமைந்தால் இப்படி அமையவேண்டும்] எழுதிய ‘திராட்சை மணம்கொண்ட பூனை’ [காலச்சுவடு] விலாஸம் [தமிழினி] ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழ் வாசிப்புச்சூழல் திராட்சைமணம்கொண்ட பூனை கதையை உடனடியாக ரசிக்கும். ஏனென்றால் அதன் பேசுபொருள் பாலியல் மீறல். ஆனால் திராட்சை மணம்கொண்ட பூனை கதையை விட விலாஸம் கதையையே நான் ஒரு படி மேல் எனச் சொல்வேன். திராட்சைமணம் கொண்ட பூனை நேர்த்தியாகச் சொல்லப்பட்ட நல்ல கதை. பாலுறவுசார்ந்த உளவியலின் ஒரு நுண்புள்ளியை தொடுகிறது. ஆனால் அந்தப் பாணி, அந்த நுண்புள்ளிகூட இலக்கியத்தில் பலமுறை சொல்லப்பட்டுவிட்டது. மாப்பஸான் காலம் முதல். புதுமைப்பித்தனின் கல்யாணி முதலிய கதைகள் வரை இவ்வகை ஆண்பெண் கோணங்கள் அமையும் கதைகள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கினன. ஸ்ரீரங்காவின் முதலில்லாததும் முடிவில்லாததும் அவ்வகையில் கன்னடத்தில் இருந்து வந்த ஒரு நல்ல படைப்பு. ‘ஸ்ரீரங்க’வின் ‘முதலில்லாததும் முடிவில்லாததும்’ ]

ஆனால் விலாஸம் கதையின் களம், அதில் முளைத்தெழும் உணர்ச்சிகள் தமிழ்வாசகனுக்கு மிகப்புதியவை. அக்கதையில் பரவலாக வாசகர்கள் எதிர்பார்க்கும் கிளர்ச்சிக்கூறு சற்றும் இல்லை. வணிகப்போரின், அதனூடாக உருவாகும் ஆளுமைப்போரின், அதன் வெற்றிதோல்விகளில் உருவாகும் வெறுமை மற்றும் கண்டடைதல்களின் உலகம். அனேகமாக இக்களத்தில், இக்கருவில் தமிழில் எழுதப்பட்ட முதல்கதை, ஆகவே முன்னோடிக்கதை என இதைச் சொல்லமுடியும்.

நம்மைச்சுற்றி வாழ்க்கையின் பெரும்பரப்பு இப்படி பலகளங்களில் விரிந்து கிடக்கிறது.பேசித்தீராதது அது. நாமோ இன்னமும் அதைப் பேசவே ஆரம்பிக்கவில்லை. எது நமக்கு கிளர்ச்சியூட்டுகிறதோ எது வாசகர்களுக்கு உடனடியாக பிடிக்கிறதோ அதை எழுத முற்படுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையை தீர்மானித்துக்கொண்டிருப்பவை விலாசம் போன்ற கதைகள் பேசும் உளநிலைகளும் கண்டடைதல்களும்தான். அரசியல், வணிகம்,சமூகவியல் என நம் அன்றாடத்தின் பெரும்பகுதி அதைச் சார்ந்தது. எளிய கிளர்ச்சிகளுக்கு அப்பால் சென்று இவற்றை கவனிப்பதே வாசிப்பின் முதிர்ச்சி எனலாம்.

இத்தகைய கதைகளை வாசிப்பதற்கு ஒரு குறிப்பிட்ட முன்தயாரிப்பு தேவை. பாலியல்கரு கொண்ட கதைகளுடன் நாம் எளிதில் இணைந்துகொள்கிறோம். ஏனென்றால் அவை அகவுலகு சார்ந்தவை. ஆகவே மானுடப்பொதுவானவை. நமக்கு அக்கதையின் கருவுடன் ஏதோ ஒரு பொதுவான அனுபவப்புலம் இருக்கும். எந்த பாலியல் கதையையும் நாம் எளிதில் நம் அனுபவமாக கற்பனை செய்ய முடியும். ஏனென்றால் மானுடன் காணும் பகற்கனவுகளில் பெரும்பகுதி பாலியல் சார்ந்தது. பாலியல்கதைகள் அப்பகற்கனவின் நீட்சிகள். அவை இனிய உளநாடகங்கள்.

ஆனால் விலாஸம் போன்ற கதைகளின் கதைக்களம் நமக்கு அன்னியமானதாக இருக்கலாம். உடனடியாக அவற்றின் பிரச்சினைகளும் உளநிலைகளும் நம்முடன் தொடர்புறக்கூடியவையாக இல்லாமலிருக்கலாம். ஆனால் அவற்றின் மையம் மானுடப்பொதுவானதாகவே இருக்கும். நாம் அதை அணுக சற்று முயன்றாகவேண்டும். நாமறிந்த புறவாழ்க்கைக் களங்களில் எங்கோ அதற்கிணையான ஒன்று இருக்கும். அதை நினைவில் உயிர்பெறச்செய்து அதனூடாக இக்கதைநோக்கிச் செல்லமுடியும்

காட்டில் பெருமரங்கள் வீழ்ந்து கிடக்கும். அவற்றில் முளைத்து, அவற்றை உண்டு, அவற்றின்மேல் ஏறி வளர்ந்து புதிய மரங்கள் நின்றிருக்கும். இயற்கையின் விதி. எல்லா உயிர்களிலும் செயல்படுவது. ஆனால் ஒரு கணத்தில் அது வீழ்ந்த மரத்தின் மறுபிறப்பும் அல்லவா என்றும் உள்ளம் மலைக்கும். அந்த உறவை நம்மால் எளிமையாக வகுத்துக்கொள்ள முடியாது. அதில் ஒரு பிரபஞ்சவிதி உள்ளது. அதன் தீராமர்மத்தைச் சுட்டிக்காட்டும் அரிய கதை இது. நான் தமிழில் இன்று பெருகி எழவேண்டிய கதைகள் எவை என நினைக்கிறேனோ அவ்வகைப்பட்டது.

வணிக உலகில் நிகழும் உரையாடல்களை நான் கூர்ந்து கவனிப்பதுண்டு. அவை மிகமிக வழவழப்பான கூழாங்கற்கள் உரசிக்கொள்வதுபோல மென்மையானவை. ஆனால் அழுத்தமும் வெப்பமும் கொண்டவை. அந்த மொழியை எழுதவேண்டுமென எண்ணுவேன். ஆனால் எனக்கு அது இன்னமும் அன்னியமானதே. அதை திருச்செந்தாழை எழுதியிருக்கிறார்.

ஜெ

விலாஸம்– பா.திருச்செந்தாழை

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 14
அடுத்த கட்டுரைபழையதொரு மாயம்