குமரித்துறைவி நாவலில் சில திருத்தங்களை நானே செய்தேன். அது முழுமையாகவே மங்கலநாவல். ஆகவே அதன் தொடக்கப்பகுதிகளில் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றிய போரைப்பற்றி வரும் பகுதிகளிலுள்ள கடுமையான விவரிப்புகளை மாற்றிவிட்டேன். அவை ஒற்றைவரிகளாகவே இருந்தாலும் எதற்கு என்று நினைத்தேன்.
தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் ஓர் இடத்தில் படைத்தலைவன் ஒருவனை கடுமையாக சொல்லும் வரி இருந்தது. அவ்வளவு கடுமை அல்ல, பதற்றத்தில் சொன்னது. ஆனாலும் சிறு அமங்கலமே. ஆகவே மாற்றிவிட்டேன்.
இரு குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன. ஒன்று வியாசராஜ மடம் பற்றி. அந்த மடத்தின் முதல்பெயர் தக்ஷிணாதி மடம். அக்காலச் சித்தரிப்பில் அப்பெயர் இடம் பெற்றிருக்கவேண்டும். ஆனால் நூல்களில் முதலில் அதுவே மடத்தின் முதல்பெயர் என்று சொல்லிவிட்டு தொடர்ந்து வியாசராஜ மடம் என்றே சொல்கிறார்கள். நூல்களை தேவைக்கு புரட்டி நடுவே குறிப்பு எடுக்கும்போது வரும் குளறுபடி இது. வியாசராஜர் இக்கதை நடந்ததற்கு பிறகு பிறந்தவர். ஆகவே தக்ஷிணாதி மடம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடைசியாக குறை, நாஞ்சில்நாட்டு சீர்களில் அரிவாள்மணை, திருவலக்கட்டை அல்லது துருவி அளிக்கப்படுவதில்லை. அது நன்கு தெரிந்தும்கூட சீர்வரிசைப் பொருட்களில் அவை இருந்தன என்று எப்படி எழுதினேன் என தெரியவில்லை. உலகளந்த அம்மைக்கு அமங்கலமும் மங்கலமும் என பேதமில்லை என்று கொள்ளலாம்தான். ஆனால் வாசிப்பவர் நாம். ஆகவே பேதம் உண்டு. அதையும் மாற்றிவிட்டேன்
சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி
ஜெ