குமரித்துறைவி- ஒரு சொல்

குமரித்துறைவி குறித்து நிறைய கடிதங்கள் வந்தன. ஒவ்வொருநாளும் வந்துகொண்டிருக்கின்றன. இம்முறை கடிதங்களை வெளியிடவேண்டியதில்லை என்று தோன்றியது. பெரும்பாலும் எல்லா கடிதங்களுமே மிக அந்தரங்கமான உணர்ச்சிக்கொந்தளிப்புகளால் ஆனவை. அவ்வுணர்ச்சிகள் தூயவை, அதனாலேயே அவை பொதுவெளி விவாதத்திற்கு உரியவை அல்ல.

அக்கடிதங்களை எல்லாம் படிக்கிறேன். அனைவருக்கும் மறுமொழி அனுப்பியிருக்கிறேன். அவர்கள் என்னுடன் ஆழ்ந்த உரையாடலில் இருக்கிறார்கள். என் உணர்வுகளை, என் ஆழ்நிலைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என் அன்பு.

கடிதங்களை வெளியிடுவதன் நோக்கம் என்பது ஒரு கூட்டுவாசிப்பை உருவாக்குவது. ஒருவர் தவறவிட்ட நுட்பத்தை இன்னொருவர் கண்டடையக்கூடும். ஒருவரின் குறையை இன்னொருவர் நிரப்ப ஒரு பொதுவான முழுவாசிப்பு விவாதங்களினூடாக உருவாகி வரும். வாசிப்புப் பயிற்சி என்பது அவ்வாறு நிகழ்வதே. எல்லா வாசிப்பும் வாசிப்புப் பயிற்சிதான்.

ஆனால் சில கதைகள் அவ்வண்ணம் பொதுவெளி விவாதங்களுக்கு உரியவை அல்ல. அணுக்கமானவர்களுடன் உணர்ச்சிகரமான பகிர்வு நல்லது. ஆனால் பிரித்துப் பிரித்து விவாதித்தால் அவை அழகிழக்கும், ஆழ்ந்த உணர்வுநிலைகளும் மறையக்கூடும். குமரித்துறைவி அத்தகையது.

குமரித்துறைவி போன்ற ஒருகதை, அறிவுத்தளமே இல்லாமல், முற்றிலும் வேறொரு அகநிலையில் நிகழ்ந்து முடியும் ஒரு கதை, எந்த எழுத்தாளனும் கனவுகாணும் ஒரு நிகழ்வு. நிகழ்ந்தால் உண்டு. அவன் அறிந்து மீண்டும் நிகழ்த்திவிட முடியாது. மிக அரிதாகவே இலக்கியத்தில் அத்தகைய ஆக்கங்கள் காணக்கிடைக்கின்றன.

அவ்வகைப் படைப்புகளுக்கு இரண்டு அதீதநிலைகளே உண்டு. உள்ளே சென்றவர் உணரும் உச்சம் ஒன்று. செல்லாதவருக்கு ஒன்றுமே சிக்குவதில்லை. ஏனென்றால் அதில் அறிய, யோசிக்க ஒன்றுமில்லை.

நண்பர்கள் அதன் நூல்வடிவைப் பற்றி கேட்டிருந்தனர். விரைவில் வெளிவரும். இரு நண்பர்கள் திருமணப் பரிசாக விருந்தினர்களுக்கு அளிக்க விரும்புவதாகச் சொல்லியிருந்தனர். ஒருவர் சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு வெளியிடுவதாகச் சொன்னார். அவை நிகழட்டும்.

நான் இனி ஒருபோதும் அதைப் படிக்கப்போவதில்லை. இனி அதைப்பற்றிய விவாதங்களும் இங்கே நிகழாது. அது இங்கிருக்கட்டும். மேற்கொண்டு பேச ஒன்றுமில்லை. அதற்கான வாசகர் சிலரே. அவர்கள் காலந்தோறும் வந்துகொண்டிருப்பார்கள்.

குமரித்துறைவி [குறுநாவல்] – 6

குமரித்துறைவி [குறுநாவல்] – 5

குமரித்துறைவி [குறுநாவல்] – 4

குமரித்துறைவி [குறுநாவல்] – 3

குமரித்துறைவி [குறுநாவல்] – 2

குமரித்துறைவி [குறுநாவல்] – 1

முந்தைய கட்டுரைஅற்ப சகி
அடுத்த கட்டுரைஅறம்- கடிதம்