பத்து நாட்களாக வீட்டில் தனியாக இருந்தேன். ஓட்டலுக்குப் போய்ச் சாப்பிட சோம்பல். ஒன்று மொட்டைவெயில் அல்லது மழை. மேலும் பசிப்பதற்கு அரைமணிநேரம் முன்னர்தான் எனக்கு சாப்பாடு நினைவே வருகிறது. உடனே கீழே வந்து அவசரமாக சப்பாத்தி மாவை உருட்டி சுட்டு, அல்லது அவசரச்சோறு பொங்கி கூடவே எதையாவது சேர்த்து சாப்பிட்டுவிட்டு மாடி ஏறிவிட்டேன்.
கோவை நண்பரும், குக்கூ குழுமத்தினருமான குமார் ஷண்முகம் [[email protected]] பலவகை சாப்பாட்டுப் பொடிகள் செய்கிறார். பருப்புப்பொடி, முருங்கைக்கீரைப்பொடி, இட்லிப்பொடி வகையறா. அவற்றில் ஏதாவது ஒன்றை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாகவே இருக்கிறது. சோறு பொங்கினால் கூட அதையும் சேர்த்துப் பிசைந்தால்போதும். ஆந்திராவில் இருக்கும் மெல்லிய நிறைவும் அமைகிறது. மொத்தத்தில் குறையொன்றுமில்லை.
வழக்கம்போல ஆவேசமாக எழுதிக்கொண்டிருந்தேன். கதை ஒன்று, திரைக்கதை ஒன்று. ஆவேசமாக வாசித்துக்கொண்டிருந்தேன். மதுரை நாயக்கர் வரலாறு, பண்டைய திருவிதாங்கூரின் வரலாறு. பண்டைய திருவிதாங்கூர் வரலாறு என்பது ஓர் அற்புதமான புனைவு. எண்ணிபார்த்தால் ஏழெட்டு பெயர்கள் சில கல்வெட்டுகளில் தெரிவதை தவிர சான்றுகளே இல்லை. ஆனால் எழுதிவிட்டார்கள் மன்னன்கள். திருவிதாங்கூர் வரலாற்றாசிரியர்கள் நினைத்தால் எல்லாமே வரலாறுதான். திருவிதாங்கூர் எந்தப் போரிலும் தோற்றதில்லை – தந்திரபூர்வமாக பின்வாங்கியிருக்கிறது, அவ்வளவுதான்.
வீட்டில் அருண்மொழி இருப்பதன் முதன்மையான பயன் என்ன என்பதை அடிக்கடி உணர்வதுண்டு, அவள்தான் காலத்தை உருவாக்குபவள். காலஜனனி, காலிகை, காலாபானி என்னவேண்டுமென்றாலும் சொல்லலாம். அவள் இல்லாமலிருந்தால் காலையுணவை பற்றிய சிந்தனை நமக்கு வரும்போது மதியம் ஆகிவிட்டிருக்கிறது. சரி ,ஒரு மாலைநடை போய் வருவோம் என்று வெளியே வந்தால் நள்ளிரவு. காலையில் கண்விழித்தால் அறைக்குள் வெயில். வழக்கமாக காலையை அறிவிக்கும் காகங்கள், பூனைகள் எவையுமே அவள் இல்லாவிட்டால் வருவதில்லை.
வீட்டை முன்பு சிலமுறை பூட்டாமலேயே இரவு தூங்கிவிட்டேன். ஆகவே சென்ற பல ஆண்டுகளாக பகலும் இரவும் வீட்டை மொத்தமாக பூட்டி சாவிகளை தொங்கவிட்டுக் கொண்டே உள்ளே இருப்பேன். வேண்டுமென்றால் திறக்கலாம். ஆனால் அதற்கு சாவி தேடவேண்டும். அது கையில் கிடைக்க ஒருமணிநேரம் வரை தோராயமாக ஆகும். அதற்குள் சலித்து வெளியே போகவேண்டாம் என்ற மனநிலையை வந்தடைந்து விடுவேன்.
சென்னை கிளம்பவேண்டும். அருண்மொழி வந்ததுமே ‘வீடு கிடக்குற கிடை’ என ஆரம்பிப்பாள். ஆகவே பாத்திரங்களை கழுவி, சமையலறை கூடம் உட்பட எல்லாவற்றையும் துடைத்து ஒருமாதிரி மானுடன் புழங்கிய இடம் போல ஆக்கினேன். நடுவே ஒரு போன். அதைப்பேசி முடித்தபோது ஆட்டோ வந்துவிட்டது.
சென்றமுறை அவசரமாகச் சென்னை கிளம்பியபோது பெல்ட் எடுத்துக் கொள்ளவில்லை. ரயிலில் டிராக்சூட் அணிவது வழக்கம். சென்னை வந்தால் பெல்ட் இல்லை. ஆஸ்பத்திரிக்கும் ஓட்டலுக்குமான அலைச்சலில் பெல்ட் விற்கும் கடைகளும் கண்ணுக்குப் படவில்லை. இடுப்பில் ஒரு கையை வைத்து ஜீன்ஸை அள்ளிப்பிடித்தபடித்தான் அலைந்தேன். எவருக்காவது இரண்டு கையால் கும்பிடு போட்டால் நிர்வாணநிலை கூடியிருக்கும். கடைசிநாள் சண்முகத்திடம் சொல்லி ஒரு பெல்ட் வாங்கிக்கொண்டேன். திருவாரூரில் பலரை கும்பிட வசதியாக இருந்தது.
இந்தமுறை மறக்கக்கூடாது என்று சொல்லிக்கொண்டேன். அவசரவெறியிலும் ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து எடுத்து வைத்தேன். பெல்ட் மறக்காமல் வைத்துவிட்டேன். சென்னை வந்து விடுதியில் பெட்டியை திறந்தேன். பெல்ட் இருந்தது. அப்பாடா!
ஆனால் ஜீன்ஸ் இல்லை. சட்டைகள் மட்டும்தான். நல்லவேளையாக ஒரு வேட்டி இருந்தது. முதல் நாளில் நூற்பு சிவகுரு அளித்த கைத்தறிக்கதர் சட்டையும் வேட்டியுமாக பொன்னான வாக்குகள் நாடும் அரசியல்வாதியின் தோற்றத்தில் இருந்தேன். மறுநாள் சண்முகம் இரண்டு ஜீன்ஸ் வாங்கிக்கொண்டுவந்துவிட்டார்
அருண்மொழி ஊர்திரும்பி விட்டாள். சென்றதுமே சைதன்யா ஒரு படம் அனுப்பியிருந்தாள். ‘அம்மா அதிர்ச்சியில்’. எனக்கே அந்த இடம் என்ன என்பது கொஞ்சம் குழப்பமாகவே இருந்தது. அது அருண்மொழியின் படுக்கையறை. அது ஏன் அப்படி இருக்கிறது? நான் கடைசியாக அங்கேதான் எல்லாவற்றையும் ‘பேக்’ செய்தேன். எஞ்சியவை அறையில் நிறைந்து கிடந்தன.
தத்துவார்த்தமாக இதை நாம் பார்க்கவேண்டும். கலைந்து சிதறிக்கிடப்பதுதான் பொருட்களுக்கு உண்மையில் பிடித்திருக்கிறது. மலைகள் முதல் கூழாங்கற்கள் வரை, மரங்கள் முதல் சருகுகள் வரை எந்த ஒழுங்குமின்றித்தான் இருக்கின்றன. எந்த காட்டிலாவது சருகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனவா? அடுக்கி வைப்பதென்பது மானுட ஒழுங்கு. அதற்கு பின்னாலிருப்பது மானுட விருப்பம்.
பொருட்களை ஏன் அவற்றின் விருப்பத்துக்கு விட்டுவிடக்கூடாது? அவற்றை நாம் எப்படி அடுக்கி வைத்தாலும் அவை திமிறி அவற்றின் விருப்பமான வடிவக்கலைவுக்குச் சென்றுகொண்டுதானே இருக்கின்றன?.
ஆனால் ‘இயற்கையான’ அந்த அறையை பார்க்க எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
காற்று
தோசைக்கல்லை புக் ஷெல்பிலே வச்சது யாரு? இப்ப தெரிஞ்சாகணும்!
பத்தினியின் பத்துமுகங்கள்
சிங்கப்பூரில் அன்று
சுவையாகி வருவது…