சொல்வளர்காடு- வாசிப்பு

அன்புள்ள ஜெ,

பன்னிரு படைக்களம் வாசித்து முடித்தவுடன், உள்ளம் சொல்லொண்ணா நிலையழிவை கொண்டிருந்தது. குறிப்பாக அதன் இறுதிக்கட்ட நிகழ்வுகள், அதுவரை இருந்த நம்பிக்கைகள், முடிவுகள், உள்ளத்தின் பாவனைகள் என்றனைத்தையும் ஓர் அசைவிற்கு உள்ளாக்கி இருந்தன. கிட்டத்தட்ட அவை இறந்த சடலங்கள் என்று எங்கோ சித்தத்திற்கு அப்பாற்பட்டு கிடந்தன. அதன் விளைவால் பெரும் உளச்சோர்வை அடைந்தேன். அது அந்த நாள் முழுதும் என்னை ஆக்கிரமித்திருந்தது. அந்த சோர்வை கடப்பதற்கு ஒரே வழியாக நான் கண்டுகொண்டது மேற்கொண்டு தொடர்ந்து வாசிப்பது என்றே. ஆதலால் பன்னிரு படைகளைத்தை தொகுத்து கொள்ளாமல், தொடர்ந்து சொல்வளர்க்காடை வாசிக்க தொடங்கி இருந்தேன். அது ஒரு இனிய கனவாக, இனிய அதிகாலை பயணமாக, ஒரு தோழனாக இரு கைகள் விரித்து என்னை அணைத்துக்கொண்டது.

காடு என்றுமே என் அகத்திற்கு மிக நெருக்கமானது. ஓர் கனவாக, கற்பனையாக என்னுள் நிலைகொண்டது. உங்கள் காடு நாவலில் இருந்தே அந்த கனவை பெற்றுக்கொண்டேன் என்று இப்பொழுது தோன்றுகிறது. ஈரம் சொட்டும் இலைகள், அதன் மேல் விழும் கதிரொளி என்று பல்கிப்பெருகிய பல படிமங்களை என் இனிய கற்பனைகளில் நான் கோர்த்து வைத்திருக்கிறேன். ஆதலால், ஓர் இனிய பயணமாகவே இந்த வாசிப்பை தொடங்கினேன்.

பன்னிரு படைக்களத்தின் இறுதியில் சகுனியுடன் தோற்று கொண்டிருக்கையில், ஒரு கட்டத்தில் தன் உளக்கற்பனையான கானகக்குடிலுக்குள் சென்று தருமர் அமர்ந்து கொள்கிறார். அங்கு அவர் தன் அமைதியை உணர்ந்து, முழுவதுமாக அந்த உச்சகட்ட பதற்றத்தில் இருந்து வெளிவருவதாக ஒரு காட்சி வரும். அதில் இருந்து, அவர் தன்னை காடுகளில் உள்ள வேதம் பயிலும் மாணவனாகவே தன்னை கற்பனை செய்து கொள்கிறார் என்று தோன்றுகிறது. அதுவே, அவரை பொறுத்தவரை பெரும் உவகை தரும் ஒன்றாகவே உள்ளது. ஆதலால் தான், அவரை காடேக சொல்லுகையில் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார். மிக்க களிப்புடன் தன் பயணத்தை மேற்கொள்கிறார்.

வேதம் ஆராயும், பயிற்றுவிக்கும் ஒவ்வொரு காடாக அவர் செல்லும்பொழுது, அவரினுள் சொற்கள் பெருகிக்கொண்டிருக்கின்றன. தன்னை சொற்களினுள் மூழ்கி அமிழ்த்துவதில் பெரும் விருப்பம் கொண்டவராக உள்ளார். ஆனால், ஏதோ ஒரு புள்ளியில் அந்த சொற்களின் பெருக்கு, அதன் ஆழம் தன்னை மூச்சதிரவைக்கும் என்ற உள்ளுணர்வும் அவருள் உள்ளது என்றே நினைக்கிறேன். அதனால் தான், என்னோவோ எங்கும் நிறைவு கொள்ளாமல் ஒவ்வொரு காடாக சென்று கொண்டிருக்கிறார். மெய்மையை நோக்கிய அவரின் பயணம் சொல்லறுத்தலின் வழியாகவே நிறைவடையும் என்ற புரிதலும் அவருள் நிகழ்கிறது. அதை புறந்தள்ள முயற்சிக்கையில், குழப்பம் நிறைந்த, நிலையழிதல் மிக்க ஒரு மானிடனாக மற்றவர் கண் முன் தோன்றுகிறார்.

ஊடாக வந்து செல்லும் அஸ்தினபுரி நிகழ்வுகள், பீமனின் வஞ்சினம் திருதாஷ்டிரின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாண்டவர்கள் மீதான ஒரு விலக்கம், ஒரு அரசர் இயல்பாகவே தந்தை பாசத்திற்குள் கட்டுண்டது போன்றவை மானுட இயல்பின் சாதாரணங்கள்.

தன் குல சண்டைகளால் தன் நாட்டை காப்பாற்ற போராடும் இளைய யாதவர், யாருக்காக தன்னை உணர்ந்தாரோ அவர்களாலேயே காட்டி கொடுக்கப்படுவது, அவற்றில் இருந்து அவர் மீண்டு வந்த விதம், அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் அனைத்தும் ஓர் அரசனின் தன்னறத்தை பறைசாற்றுவது.

தருமர், இளைய யாதவரிடம் உரையாடியபின், தருமரை அவர் மைத்ரேய காட்டிற்கு செல்ல சொல்லுவது சொல்லறுத்தலுக்கான முதல் புள்ளி என்றே கொள்கிறேன். அங்கு சென்ற அவர் அடுமனையில் பணி செய்ய செல்லும்பொழுது, தன் இளையவர்கள் எவ்வித சிரமும் இன்றி பணிசெய்வதை நோக்கும்பொழுது சிறு வியப்பொன்றை தன்னுள் உணர்கிறார். உண்மையில் அவருக்கு அங்கு செய்யப்படும் எந்த பணிகளிலும் பரிச்சயம் இல்லை என்பதை அந்த வியப்பு உணர்த்துகிறது. ஏதோ ஒரு நிகழ்வில் இயல்பாக அந்த வேலையில் அவர் நுழையும் பொழுது, அவற்றில் விரைவின் காரணமாக தன்னுள் ஓயாமல் உள்ளோடி கொண்டிருக்கும் சொற்பெருக்கை இல்லாமல் ஆவதை உணர்கிறார். அங்கிருந்து நீராடி தன்னை கூர்ந்து நோக்கும் பொழுது இதுவரை கற்ற சொற்கள், தானாய் உருவாக்கி வைத்திருந்த சொற்கள் எங்கோ தொட்டறிய முடியாத தொலைவில் இருப்பதாக அவருக்கு தோன்றும். அங்கிருந்தே அவரின் உண்மையான மெய்மைக்கான தேடல் நிகழ்கிறது என்றே கொள்கிறேன்.

இறுதி காடுகளை யாருடைய தூண்டலும் இல்லாமல், தன் அகத்தின் வழியாக ஏற்படும் உள்ளுணர்வின் தொடர்புகொண்டே நிகழ்த்தியது அதற்கான ஒரு தொடக்கம். யட்சவனத்தில் நிகழும் கதைகள் சிறுவயதில் பலவிதமான வெவ்வேறு கதைகளின் வழியாக அறிந்த ஒன்றாகவே இருந்தது. ஆனால், அவை எல்லாம் சிறுவர் கதைகள் என்றமட்டிலும் முக்கியமானது என்று இப்பகுதியை படித்த பின்னரே உணர்ந்தேன். இங்கு நீங்கள் அதை எடுத்து சென்ற விதம் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. அந்த முதுயட்சகர் ஒரே ஒருவனை உயிர்த்தெழச்செய்ய ஓப்புக்கொள்ளும் பொழுது, தருமர் நகுலனை குறிப்பிடும் காட்சி, ஓர் பேரரத்தின் முன்னால் கண்ணீருடன் வழிப்பட்டு நிற்பது போல் உணர்ந்தேன்.

இறுதியாக அவர் தனியாக அனல் கக்கும் எரிமலை நோக்கி செல்லும் அவர் பயணம், இத்தனை வருடங்களாக அவருள் நிகழும் அலைக்கழிப்புகள், அதன் மூலம் அவர் தன்னுள் பெருக்கி வைத்திருந்த சொற்கள் என்றனைத்தையும் எரிய செய்வதற்கான, உயிரை துச்சமென மதிக்கும் ஒரு நேரடியான மெய்மை நோக்கிய பயணம். இந்த பகுதிகளை இரண்டு, மூன்று முறை வாசித்து அகத்தில் அந்த பயணத்தை நிகழ்த்திக்கொள்ள முற்பட்டேன். உண்மையில் நிகரனுபவமாக உணரச்செய்த தருணங்கள் அவை. அதை தொடர்ந்து, அவர் அடையும் மெய்மை, கற்பனை வழியாக நானும் அடைந்ததாக உணர்ந்தேன். அவர் சூரியன் முன் நின்று தண்ணொளியாக தன்னை ஒளிர செய்யும் பகுதியை, அதிகாலை பொழுதில் வாசித்து கொண்டிருந்தேன். அந்நொடியில் விசை ஏற்பட்டு சூரிய உதயத்தை வெளியில் சென்று நோக்கினேன். அங்கு உணர்ந்த சூரிய ஒளியை இதுவரை இவ்வளவு நெருக்கத்துடன் உணர்ந்ததில்லை.

அன்புடன்,

நரேந்திரன்.

முந்தைய கட்டுரைபுறவயத்தர்க்கவாதமும் மெய்மையும்
அடுத்த கட்டுரைஅறம்- கடிதங்கள்