அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 12

அன்புள்ள ஜெ

அந்தமுகில் இந்த முகில் பற்றிய கடிதங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தக்கதை வெளிவந்தபோதே இதற்கு இத்தனை ஆழமான வரவேற்பு இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்படி கடிதங்கள் எழுதாத சில ஆயிரம்பேர் இருப்பார்கள். அவர்கள்தான் இந்தக்கதையின் மெய்யான வாசகர்கள் என்றும் தோன்றியது. நரம்பில் அடிபட்டது போல இந்தக்கதை அவர்களுக்கு கடுமையான வலியை தந்திருக்கும். ஆனால் அவர்களால் வாய் திறந்து ஒரு வார்த்தைகூட எவரிடமும் பேசமுடிந்திருக்காது. முடியாது. அதிலும் என்னைப்போல பெண்கள் ஒன்றுமே சொல்ல முடியாது.

ஆனால் இழப்பின் வலி என்பது மிகப்பெரியது. ஸ்ரீபாலாவின் வலி இந்தக்கதையில் உணர்த்தத்தான் படுகிறதே ஒழிய சொல்லப்படவில்லை. ஒர் ஆழமான உணர்ச்சியை பலகாரணங்களால் சொல்லமுடியாமல் போவது என்பது ஆண்களால் நிறைய முறை எழுதப்பட்டுள்ளது. அவமானம் நடக்குமா என்ற பயம், பொறுப்புகள் பற்றிய பயம் என்று அதற்கு நிறைய தடைகள் உண்டு. ஆனால் பெண்களின் உண்மையான வலி வேறு. எந்தப் பெண்ணுக்கும் அது கொஞ்சமாவது இருக்கும்.

பின்னால் ஓர் அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து காதுகளை முழுக்க தீட்டிக்கொண்டு, மனசை பின்னால் வைத்துக்கொண்டு முன்னால் நடந்து விலகிச்செல்லாத பெண் குறைவாகவே இருந்திருப்பாள். தொண்ணூறு சதமானம் பெண்களின் வாழ்க்கையிலும் அந்த பின்னாலிருந்து வரும் அழைப்பு வந்திருக்காது. அது வரும் என்ற எதிர்பார்ப்பு அவளுடைய பின்பக்கம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கும். அதன்பிறகு அதிலிருந்து அவளுக்கு விடுதலையே இல்லை

எஸ்.என்

ஜெ,

வாழ்நாளில் என்றென்னறக்குமான ஆணை ஒரு பெண் சந்திப்பதும்  இழப்பதும் அல்லது ஒரு பெண்னை ஆண் சந்திப்பதும் இழப்பதும் எத்துனை சுகமானது சோகமானது என்பதை காவியமாக சொல்லியுள்ளீர்கள்.

“நம் எல்லோருக்குள்ளும் நிராசை கொண்ட காதலன் ஒருவன் இருக்கிறான்,  அவனின் அடையாளம் தான் “செம்மீன்” பரிக்குட்டி என்பார் எஸ்.ரா.  நீங்கள் இதைத்தான் இறந்த காலத்தில் உறைந்த போன, நிகழ்காலத்தாலும் எந்த எதிர்காலத்தாலும் நிரப்பமுடியாத பள்ளம் எனறு கொடவட்டிகண்டி குடும்பராவ்  வரிகளால் குறிப்பிடுகிறீர்கள். “செம்மீன்” போன்று,  “அந்த முகில் இந்த முகிலும்” எனக்கு காவியமாக தோன்றுவது இதனாலேயே.

மகா பிரஸ்தானத்தின்போது திரும்பி பார்க்கக் கூடாது என்பது ஏனெனில் அது இவ்வாழ்க்கைச் சுமைகளையெல்லாம் இறக்கிவிட்டு விடைபெறும் நிகழ்வு.  ராஜமந்திரியில் ஶ்ரீபாலா திரும்பிபாராமல் போனது சற்று மாறுபட்ட  மகாபிரஸ்தான நிகழ்வு. எதனையும் இறக்கி வைக்காமல் துளிகூட சிந்தாமல் அவன் நிணவுகளை நெஞ்சில் இருக்கிபிடித்து செல்கிறாள்.  ராஜமந்திரி பேருந்து நிலையத்தை கடந்த பின் அவள் உடல் முழுக்க மறைக்கும் கூந்தல் கொண்ட ஶ்ரீ பாலா அல்ல.  கைபிடியளவு நீளம் குறைந்த கூந்தல் கொண்ட விஜயலட்சுமி என்கிற வேறறெருத்தி. அவள் மறுபடியும் ஶ்ரீ பாலாவாக உயர்த்தெழுவது இருபத்தெழு வருடங்களுக்கு பிறகு ஶ்ரீ வெங்கடேசஸ்வரா திரையரங்கில் – அதுவும் படத்தின் இடைவேளையில்.

ராஜமந்திரி பேருந்து நிலையத்தில் திரும்பி பாராமல் செல்லும் ஶ்ரீ பாலாவை ராமராவ் அழைப்பான் என்பது அவளுக்கு தெரிந்திருப்பது போலவே  எனக்கும் தெரிந்திருந்தது. எனெனில் அவள் மேல் அவன் “பெரும் பித்து கொண்டுருந்தான்”. பின் ஏன் அது குரல் வழி வரவில்லை? ஏனெனில் அந்த பித்தைக்கண்டு அவன் அஞ்சினான்”.  அதானல்.

சென்னை செல்லும் பொழுது வடபழனியை கடக்கும் பொழுது விஜயா ஸ்டுடியோவும் பரணி ஸ்டுடியோவும் இனிமேல் ராமராவையும் ஶ்ரீபாலாவையும் எனக்கு நிணவுபடுத்தும். அந்த நிணவு படுத்தும். ” பறக்காத பொழுது பறவையல்ல”,  படுத்தாத பொழுது நிணவுமல்ல.

icf சந்துரு

பிரஸ்காலனி, கோவை-19

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையை உணர்ச்சிவேகத்துடன் வாசித்தேன். சுருக்கமாக இந்தக்கதையை ஒருவரிடம் சொன்னால் என்னென்ன விடுபடுமோ அதெல்லாம்தான் இந்தக்கதை. அவளுடைய நீளமான கூந்தலும் மயிலின் சாயலும் எப்படி இல்லாமலாகின்றன என்பதில் தொடங்கி அத்தனை நுட்பமான செய்திகளும் குறியீடுகளுமாக இந்தக்கதை நீண்டு செல்கிறது. கருப்புவெள்ளை சினிமாக்கள் மனிதகுலம் ஒரு முப்பது ஆண்டுகள் கண்ட ஒரு விசித்திரமான கனவுகள். அவை அப்படியே எப்போதைக்குமாக இனிமேல் இருந்துகொண்டிருக்கும். ஹம்பியில் உள்ள கல்லால் ஆன சிற்பங்களை மாதிரி. எவரோ கண்ட கனவுகள்.

நாம் பழைய கருப்புவெள்ளை சினிமாக்களை வண்ணத்திலே பார்த்தால் அப்படி ஒரு கசப்பு வருகிறது. அவை அந்த கருப்பு வெள்ளையிலேயே நம் மனசில் ஒரு நிலைகொண்டிருக்கின்றன. அந்தப்பாடல்களில் உள்ள மேகம் கருப்புவெள்ளையில்தான் அழகாக இருக்கிறது. மேகங்களும் பாறைகளும் கருப்புவெள்ளையில் அழகானவை. ராமராவும் ஸ்ரீபாலாவும் அந்த இரவில் பாடிக்கொண்டே செல்லும்போது உருவாகும் ஒரு கனவு கருப்புவெள்ளையில்தான் பதிவாக முடியும்

எம்.கிருஷ்ணன்

முகில்- கடிதங்கள் 10
முகில் கடிதங்கள்-9
முகில்- கடிதம்-8
முகில் கடிதங்கள்-7
முகில் கடிதங்கள்-6
முகில்- கடிதங்கள்-5
முகில்- கடிதங்கள்-4
முகில் -கடிதங்கள்-3
முகில் கடிதங்கள்-2
முகில்- கடிதங்கள்1
முந்தைய கட்டுரைவிசும்பின் மூன்று கதைகள்- கடிதம்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி -திருத்தங்கள்