அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 10

அன்புநிறை ஜெ,

விமானப் பயணங்களின் போது மணிக்கணக்காக மேகங்களைப் பார்த்தபடி பயணிப்பது மிகவும் விருப்பமான ஒன்று. அமெரிக்கப் பயணம் போன்ற பல மணி நேரங்கள் நீளும் பயணங்களில் கூட விமானமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் மேகங்களைப் பார்த்துக் கொண்டே வந்து பக்கத்து இருக்கையினரின் முணுமுணுப்புக்கு ஆளானதுண்டு. பல பயணங்கள் அதனோடு தொடர்புடைய மேகக் காட்சிகளாகவே மனதில் பதிந்திருக்கின்றன.

விரிகடலைத் தாண்டும் போது காற்றின் திசையில் திசை தொட்டு நீளும் நெடுஞ்சாலை போல மேகங்கள் அணிவகுத்திருப்பதை  காணலாம். பாலை நிலங்களைக் கடக்கும் போது அனேகமாக மேகங்களே இருப்பதில்லை. அதிகாலை வேளைகளில் மொத்தமும் கண்ணுக்கெட்டும் தொலைவு வரை பஞ்சுப் பொதிகளாய் வானம் இருக்கும். நிலவு கனிந்த இரவுகளில் மண்ணுலகு அறியாத  மிக ரகசியமான பயணம் போல ஒளிபெற்ற மேகங்களுக்கு மேலே பறந்த இரவுகள் சில.

கைகளால் அள்ளிப் பற்ற முடியாதது, கணத்துக்கு கணம் மாறிக் கொண்டே இருப்பது,பார்ப்பவரின் கண்களுக்கு ஏற்ப  தோற்றம் கொள்வது, ஒளிமிக்க வானை இருண்டு விட்டதாய் பூமிக்கு நடிப்பது, நிறமற்ற வெளியில் பல வண்ணங்கள் கொண்டு மிதந்தலைவது,   பலகாதம் சுற்றி மூலத்திலேயே சென்று சேர்வது, இயற்கையின் விசைகளால் சமைக்கப்படுவது, எங்கிருந்தோ வந்து ஒன்று பலவாகி மீண்டும் ஒன்றாகி மறைவது, முன் கணமும் மறுகணமும் இல்லாதது – இவை மேகங்கள் மட்டுமா? மனித மனதுக்கும் அதன் அத்தனை நாடகங்களையும் உணர்வுக் கொந்தளிப்புகளையும் சேதியாய் சுமந்து செல்ல முகில்கள் போல வேறொன்றில்லை என்றே தோன்றுகிறது.

‘அந்த முகில், இந்த முகில்’ குறுநாவலில் இரண்டு தளங்களில் கதை நகர்கிறது. எத்தனையோ கைகள் இணைந்து உருவாக்கும் திரைப்படத்துறையின் உள் இயக்கங்கள், அது குறித்த நுண்தகவல்கள், ஆளுமைகள், அவர்களின் அனுபவங்கள் ஒரு புறம்.

மற்றொன்று கலை நிகழும் கணம்.  முப்பரிமாண செட்டில் பின்னால் இரட்டைப் பரிமாண சித்திரம் ஒன்றிணைந்து புடைப்புருவமாகி விடுவது, மெல்லி இரானி கறுப்பு வெள்ளையில் வண்ண மாறுபாடுகளைக் காட்டுவதற்கான முயற்சிகள், வரலாற்று எச்சங்களோடு புதியவற்றை இணைத்து ஒன்றாக்கி நேற்றின் உலகை மீளுருவாக்கம் செய்வது, என எல்லாரும் காணும் வெளியிலிருந்து கலையைப் பிரித்து எடுக்கும் கலைஞனின் கண்கள் வழி வரும் காட்சிகள்.

அதே போல ஸ்ரீபாலாவுக்கும் மோட்டூரி ராமராவுக்கும் இடையிலான கதையும் இரண்டு தளங்களில் நிகழ்கிறது. ஒன்று ரத்தமும் கண்ணீருமாக ஸ்ரீபாலாவின் வாழ்வு, அதன் சிறுமைகளின் ஒரு தாளவியலாத தருணத்தில் திசைமாறி ராமராவோடு அவள் இருக்க நேரும் சில நாட்கள், அவளைத் தேடும் படலத்தின் பதட்டம், அந்த நீண்ட அழகிய பயணத்துக்குப் பிறகு இருவரும் சொல்லிக் கொள்ளாத சொற்களோடு பிரிந்து செல்வதும்,  சந்திப்பதுமான சம்பவங்கள்.

இன்னொரு புறம் ராமராவின் முதல் காதல் அனுபவம், அதன் பிறகான கனவும் பரவசமும், எதிர்பாராது அவர் கைகளிலேயே அவள் அடைக்கலம் புகுந்த பின்னான மன எழுச்சியும், அனைத்துக்கும் உச்சமான அந்த நிலவெரியும் இரவும், அதைத் தொடரும் பயணத்தின் பாவனைகளும், மீள்சந்திப்பின் நினைவு மீட்டல்களும் – முற்றிலும் அகத்தில் நிகழ்பவை.

அடுத்ததாக கதையின் நில வர்ணனைகள். இக்குறுநாவலின் ஐந்தாம் பகுதியில் வரும் ஹம்பியின் காட்சிகள் அனைத்தும் அருமை. அந்த ஒரு அத்தியாயம் கதையை மேலே வேறொரு தளத்துக்கு கொண்டு செல்கிறது. மேகங்களே அற்ற துல்லிய வானம் கொண்ட மையநிலம் ஹம்பி. அங்கு எப்போதாவது வழிதவறி அலையும் மேகங்கள் வெகு அழகாகிவிடுகின்றன. இது போன்ற மேகங்களே அற்ற நீல வானம் இனி ‘வான் பொட்டல்’ என்றே எப்போதும் நினைவில் எழும்.

புனரமைப்பு வேலைகள் நிறைவடைந்திறாத பழைய சரிந்த ஹம்பி. 2002-ல் முதல் முறை ஹம்பி சென்று வந்த எனது அனுபவத்தை எண்ண வைத்தது. அதன் பின்னர் சில முறை சென்றுவிட்டாலும், முதல் முறை பார்த்த அனுபவம், திசையெங்கும் கற்குவியல்களாலான வெளியும், ஆங்காங்கே சிதிலமான மண்டபங்களும், வெயிலென்றே ஆன நிலமும் நீண்ட நாட்கள் மனதில் நிறைந்திருந்தது. கண்ணை மூடினாலும் அந்தக் காட்சிகள் அறாது கண்ணில் இருந்தது.

கதையில் அங்கு கேட்கும் தேனீக்களின் ரீங்காரத்தை இறந்தகாலத்தில் இருந்து வரும் சாவின் நாதம் என்றது அந்த நகரின் சில இடங்களில் உணரக் கூடிய அமானுடத் தன்மையை உடனே நினைவுறுத்துகிறது. தெய்வமொழிந்த கருவறைகளில் ஒரு அழுத்தமான இருப்பு குடிகொள்கிறது. உருவத்தை அருவமாக்கி உணர்வது போல. அதன் இல்லாமையே அதன் இருப்பை மேலும் உணர்த்துகிறது போலும். இழந்தவை நின்ற பீடங்களில் வேறொன்று அதனினும் பெரிதாக குடியேறிவிடுகிறது. கதைசொல்லியின் அகவாழ்வு போல.

சரிந்த நகருக்கருகே நில்லாத நதி குறித்த வரிகள். மொத்த ஹம்பியே அசைவிழந்து கிடக்க நதி ஓடிக்கொண்டிருக்கும். அவர்கள் இரு வரும் அந்த ஒற்றைத் திரைப்படத்தில் நின்றுவிட, ஓட்டத்தை நிறுத்த இயலாத வாழ்வு போல.

பார்க்கப் பார்க்க நிழல்கள் மாறிக்கொண்டே இருந்தன. காட்சியை எவரோ மாற்றிக்கொண்டே இருப்பதுபோல. மெல்ல ஓடும் ஒரு சினிமா அது என நினைத்தேன்– ஒரு டைம் லேப்ஸ் வீடியோவை பார்ப்பது போல ஆனால் அதிநிதானமாக, எப்படி அந்தக் காட்சியை ஓரிரு வரிகளில் கொண்டுவர முடிகிறது!

ஹம்பி விருபாஷர் ஆலயத்துக்கு முன் நீளும் தெருவில் கல்மண்டபங்களில் சாக்குப் படுதாவை கட்டி குடித்தனம் நடத்தும் மக்கள், வாசற்படிகளாகக் கிடக்கும் சிற்பங்கள் என உன்னதமாக்கப்பட்டவற்றை எல்லாம் உடைத்து சராசரியாக்கி விடும் காட்சிகள் எதுவும் ஒரு கலை மனதை அதிரச் செய்துவிடுபவை. ஆனால் எத்தனை உடைந்தாலும் சிற்பம் மீண்டும் கல்லாவதில்லை என்ற வரி, அதுதானே இத்தனை கலை மனங்களின் நம்பிக்கை. காலத்தின் முன்நின்று கல்நிற்றலுக்கு மானுடன் காணும் இடையறாத கனவும் இதைத்தானே பற்றிக் கொள்ள முடியும்.

மோட்டூரி ராமராவ் கலைகளுக்கான கண் கொண்டவன். ஹம்பியை வெளியுலகம் அறிந்திராத நாட்களில் சூரி ரங்காராவை வாசித்து அதைக் காணும் விழைவோடு செல்பவன். அனைவருக்கும் வெறும் பாழடைந்த நகரமாய் இருக்கும் அந்த சரிந்த நகரம் அவனுக்குப் பெரும் மன அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. ஒவ்வொன்றையும் அழகாக்கிவிட  கனவு காணும் உள்ளம் மண்ணின் அழுக்கான நிதர்சனங்களிலிருந்து தூயவற்றைப் பிரித்தெடுத்துக் கொண்டு உன்னதமாக்கிக் கொள்கிறது.

அவனுக்கு வண்ணத் திரைப்படங்கள் மீதிருக்கும் ஒவ்வாமை குறித்த வரிகளில் இதை அறியலாம். “கறுப்பு வெள்ளை என்பது பூடகமானது. உண்மையில் அது எங்குமில்லாத ஓர் உலகம். ஒரு கனவு அது.”

எங்குமில்லாத ஒன்றை, ஒரு நிகர் உலகை படைத்து அதில் நிறைவு காணத்தானே இத்தனை கலைகளால், படைப்புகளால் முயற்சி செய்து கொண்டே இருக்கிறது மானுடம். மெல்லி இரானி அத்திரைப்படத்திற்காக ஃபில்டர்களை மாற்றி மாற்றி அமைத்து கறுப்புவெள்ளையில் செக்கச்சிவப்பையும் பொன்வண்ணத்தையும் கண்டுபிடிக்க முயற்சிப்பது போலத்தான், அவனது முயற்சியும்.  எந்த ஒரு குறிப்பிட்ட நபருக்குமல்லாத பெயரற்றவர்களுக்கான உடை தைக்கும் தையல் வேலையும், இயக்குனராகி விடும் கனவில் அத்தனை அவமானங்களையும்  சூடிக் கொள்ளும் உதவி இயக்குனர்களும், நடிகையாகிவிடும் கனவில் தங்கள் ஆன்மாவையே சிதைத்து விடும் எல்லை வரை செல்லும் துணை நடிகைகளும் சூழ்ந்த வாழ்விலிருந்து அந்தத் தூய பிரேமையினால் சிறகு கொண்டு மேலெழ அவன் முயற்சிக்கிறான். முதற்காதலின் பேரனுபவம் குறித்த எண்ணங்களில் கூட அவன் எண்ணிக் கொள்வது அதையே – “காதலென்பது ஒரு பெண்மேல் வருவது. பிரேமை என்பது அப்பெண்ணின் வடிவில் வந்த பெண்மை என்னும் தெய்வீகமான ஒன்றின்மேல் வருவது. அதிலிருந்து அவனுக்கு விடுதலையே இல்லை”. அவன் விழைவது திரைப்பட வாழ்வில் உழலும் விஜயலட்சுமியை அல்ல, அழுக்குகளுக்கு அப்பாற்பட்ட ஸ்ரீபாலாவை, ஒரு தேவியை.

அவளைக் குறித்த கனவுகளில்  கீறலும் காயங்களுமான அவளது நிதர்சன உடலில் இருந்து விடுபட்டு மாநிறக் கன்னங்களும் காதோரம் ஆடும் குறுமயிர்களுமாக வண்ணங்களை வடிகட்டிவிட்டு கறுப்பு வெள்ளையின் அப்பழுக்கற்ற அழகாக மாற்றிக் கொள்கிறான். மாபெரும் கோவிலின் நிழலைக் காண துளை அமைத்த அந்த ஹம்பியின் சிற்பி போல.

அவளுக்கு ஒரு ஆபத்து என்றதும் அவனிடம் அடைக்கலம் புகுவது அவனுள் ஒன்றை நிறைவு செய்கிறது, ஒரு பெண் முழுமையாய் அடைக்கலாமாகும் போது ஆண் கொள்ளும் நிறைவு. அதன் பிறகான சம்பவங்கள் அனைத்தையும் கையாள்வதற்கான துணிவையும் தெளிவையும் அது தருகிறது. அந்த இரவு அவளுக்கு நிகழ்ந்தவற்றை கேட்டு அவனுள் ஒரு கசப்பு நிறைகிறது, அவை அவனது கனவுக்கு ஒவ்வாதவை. தலைமுடியைப் பற்றித்தான் அனைவரும் அடிப்பார்கள் எனும் போதும் அவனுள் ஏற்படும் ஒவ்வாமை, அதைக் கேட்கவே வேண்டாம் என அவன் சொல்லிவிடுகிறான்.

அவளுக்கோ அவனுடைய அருகாமை என்பது, முகத்தில் எச்சில் உமிழ்பவர்களுக்கு மத்தியில் அவளை அத்தனை அக்கறையோடு பார்த்த ஒரே உறவு.

“வாழ்க்கையில் எதுவுமே முக்கியம் இல்லை. ஆனால் எதையாவது முக்கியமாக நினைத்துக்கொண்டால்தான் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு” என்று நரசிங்கன் சொல்கிறான். அப்படி முழு வாழ்க்கைக்கும் அர்த்தம் கொடுத்துவிடக் கூடிய ஒரு அனுபவமாக அந்த பிரேமையை வடிகட்டி எடுத்துக் கொள்ளவே அவன் விழைகிறான். அவள் தன்னை அவனுக்கு கொடுக்க முன்வரும்போது அருவருப்பாய் இருக்கிறது என விலக்கிவிடுகிறான். அது முற்றிலும் உண்மையும் அல்ல பொய்யும் அல்ல. அவனது வாழ்வுக்கான தூய்மையான ஒரு பேரனுபவத்தை இல்லாமல் ஆக்கி விடக்கூடிய சிதைவு அது. அதைச் சொன்ன பிறகு உருகுவது இளைஞனாக முதல் காதலில் விழுந்திருக்கும் ராமராவ். அவளே தனக்கானவள் என்பதை அறிந்த ஆண். அந்த தருணத்துக்குப் பிறகான மன ஊசல்களை நடித்தபடி அதிலிருந்து விலகி எழுவது அவனுள் இருக்கும் கலைஞன்.

அவள் தன் வாழ்வு குறித்த தெளிவுள்ளவள். அவனது அக்கறை தரும் மகிழ்வின் தருணங்களை மனதார அனுபவித்து தன்னுள் நிரப்பிக் கொள்கிறாள். வேறு எதிர்பார்ப்புகளை கனவு காணாத கால்களைத் தரையில் ஊன்றிய பெண்.  எனவேதான் கிளம்பும் இரவில் குளிப்பதாக தன்னுடலை அவனுக்கு முழுமையாக முன்வைக்கவும் அந்த நிலவெரியும் இரவின் நெடும் பயணத்தை அவளால் இயன்றவரை அழகாக்கிவிட்டு அதிலேயே அவளுக்கான நிறைவின் தேன்துளிகளை அள்ளி சேகரித்துக் கொள்ளவும் அவளால் முடிகிறது.

சைக்கிளில் அவர்கள் செல்லும் அந்த இரவு நிலவொளியால் வடிகட்டப்பட்டதாக இருக்கிறது. இருவரும் அவர்களது மேலான சுவைகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறார்கள். தங்களுக்கிருப்பது ஒரே இரவு எனும்போது இருவருமே புவ்வுல சூரிபாபு, தேவுலப்பள்ளி எனத் தங்களது மிகச் சிறந்த நுண்சுவைகளை முன்வைக்கிறார்கள். மேகங்களே இல்லாத மையநிலத்தின் வானம், அதில் நிலவொளி பட்டு ஒளிரும் இரு முகில்கள். அந்த இரவுதான் அவர்களது சராசரி வாழ்வின் அதிஉன்னத கணம். அதை இருவருமே அறிந்திருக்கிறார்கள். உரையாடலில் அவனது ஒற்றை ‘ஓ’ என்ற சொல்லில் அவனது சலிப்பை உணர்ந்து கொள்ளும் நுண்ணர்வு கொண்டவள்தான் அவளும்.

அந்தப் பயணத்தின் அத்தனை பாவனைகளும் அதற்காகத்தான்.ஒரு முழுவாழ்வை மூன்று மணிநேரத் திரைப்படமாக்கி விடுவது போல பயணத்தில் இருவரும் நடந்து கொள்கிறார்கள். அதே பாவனைகளை, சிணுங்கல்களை, அணுக்கங்களை வாழ்நாள் முழுவதுக்கும் நீட்டி நடிப்பது வேறொரு வகையான வாழ்வு. நம்முடையதே ஆன வீட்டுக் கிணற்றடியில் நின்று நிதானமாக இறைத்து இறைத்து குளிப்பது போல; ஜானகியுடனான அவனது வாழ்வு போல. அன்றாடங்களில் காண முடியாத பேரருவி ஒன்றின் அடியில் திளைத்து நிற்கக் கிடைக்கும் சில மணித்துளிகளின் வாழ்வு முதல்வகை. அதன் பேருவகை சில நிமிடங்களே, அதில் வாழ்வுக்கும் நிற்க முடியாது. ஆனால் அந்த அனுபவத்தை மேலும் மேலுமென உள்ளே வளர்த்து அதில் திளைக்க முடியும். மொத்த கங்கையே விரிந்து ஓடினாலும் நம் குடத்தளவே அள்ளிக்கொள்வது போல இருவரும் அவ்விரவை அள்ளிக் கொள்கிறார்கள்.

அதன் பிறகான ராமராவ் வாழ்வின் கொந்தளிப்பான ஓர் ஆண்டும், அதைத் தொடர்ந்து குளிரக் குளிர ஓடும் நதி போன்ற மனைவியும் அந்த ஒரு சில நாட்களை அந்த ஒரு இரவை தங்கத்தை நெருப்பிலிட்டு பதங்கமாக்கி அவனுள் நிறுத்திவிடுகிறது.

இருபத்தேழு வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீபாலாவைத் தொலைத்துவிட்ட விஜயலட்சுமியை அவர் சந்திக்கும்போதும் அந்த சிரிப்பில் இருந்த ஸ்ரீபாலாவையே கண்டு கொள்கிறார்.

“செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது” என்பது அவர் குறிப்பிடும் வரி. ஆனால் அந்தப் பயணத்தின் முடிவில் அதைச் சொல்லாது ஏற்படுத்திய அந்தப் பள்ளம்தான் அவருக்குத் தேவையாயிருந்தது. அதை நோக்கியே அந்தப் பயணம் நடந்தது. அதை இட்டு நிரப்பிக் கொள்ளவே அவர் வாழ்வு முழுவதும் செல்கிறது. இது போலத் தாங்கள் நிரப்பிக் கொண்டாக வேண்டிய பள்ளங்களைக் கண்டடையாதவர்கள் அன்றாடத்தில் சிதறிப் பரந்து கரைகிறார்கள்.

அவளது வாழ்வில் நினைத்து அழ எத்தனையோ இருக்கும் போது உன்னதமான ஒன்றின் இழப்பை எண்ணி அழுவது ஒரு நிறைவைத் தருகிறது என அறிந்தவள்.  அந்த ஒரு இரவை அவன் வாழ்நாளுக்கு மறக்கமுடியாது செய்துவிட எண்ணியவள். அது நிகழ்ந்துவிட்டதை அறிந்து கொள்ளும் பேறு பெற்றவள். அவளுக்கு இனி துயரங்கள் இல்லை.

மேகங்கள் இணைந்திருந்தாலும் திசை வெளியில் கரைந்திருக்குமென அவர்கள் இருவருக்குமே தெரியும். பயணத்தின் முடிவில் அவன் அழைத்திருந்தாலோ அவள் திரும்பிப் பார்த்திருந்தாலோ அதற்குப் பின்னான வாழ்வு

பறக்காத போது பார்க்க நேர்ந்து, தாங்கள் விழைந்த பறவையல்ல தங்கள் கைவசப்பட்டது என்று தரையில் உதிர்ந்திருக்கும்.

அவர்கள் தாங்கள் கரைந்த பின்னும் எஞ்சும் வானாகிவிட ஆசைப்பட்டவர்கள் என்பதால் இப்பாதை. கலை என்பதும் அதுதானே.

“கறுப்பு-வெள்ளையை கடவுளின் வண்ணங்கள் என்பேன். இந்த வண்ணங்களெல்லாம் நமது மாயைகள், நம் ஆசாபாசங்கள், நமது அசட்டுத்தனங்கள்.” இந்த வடிகட்டியால் பொங்கும் உணர்வுகளை வடிகட்டிவிட்டு இக்கதையை வாசித்தால் அன்றாடங்களை மேம்பட்டதாக்கி உன்னதமாக்கிக் கொள்ள விழையும் கலைஞனின் யத்தனம் என்றே இக்கதை மனதில் நிற்கிறது.

மிக்க அன்புடன்,

சுபா

***

என் பார்வை  இதில் முக்கியமாக ஜானகி ராமராவை  திருத்தும் விதம் இவ்விதம் அதீத காமம் காமம் பொறுத்து கொண்டு  வழிக்கு கொண்டு வருதல் அருமையாக சொல்லப்படுகிறது.காமம் ஒரு வடிகால்  ஆக்கப்படுதல், வழியாக  கிறுக்கு நீக்கப்படுகிறது. அந்த அம்மா  சொல்வது பொறுத்த்துக்கொள்  முழு விஷமும் இறங்கட்டும். ஜானகிக்கு  அதன் பொருள்  விளங்கிக்கொள்ளப்பட்டு அவனை திருத்த்தும்  பொறுப்பை  சுமையாக  அல்லாமல் சுவையாக  ஏற்று கொள்கிறாள் இது பெரிய விடயம்.

மேலும்  ஏன்  அவளை பாலாவை  எரிந்து விழுகிறான் என்பது உளவியல்  சார்பானது அதாவது காமம்  தடை படும் போதுஎரிசால்  வருகிறது  அதன் மெய் தன்மையே திட்டுவது தனக்கான பொருள்  சில நேரம்  சில போது கிடடவில்லை  எனில் இப்படி நிதரிசன  வெளிப்பாடு ஆகும்

அதாவது இந்த கதை  காதல் காமத்தை  வித்தியாசமாகவிளங்கி கொள்ள  செய்கிறது தி ஜானகிராமனின் மோகமுள்பாபுவை ஜமுனாவை இணையச் செய்ய வைத்தது. ஆனால் இதில் பாலாவோ  ராமராவோ  உடல் இணைப்பை விரும்பினாலும் விலகியே இருந்து வசப்படுகின்றனர் காதல் என்பது இதுவே பலர் காமமானதை காதல் என அர்த்தப்படுத்திக்கொள்ளுவது நடக்கிறது  ஆனால் இதில் அது இல்லைஇதுவே அமரக்காதல்  வாச மலர் வாடும் வாசம் வாடுவதில்லை

அன்புடன்
ஆரா

முந்தைய கட்டுரைஎழுத்தின் இருள்- கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைநற்றுணை’ கலந்துரையாடல் -4