அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 3

அன்புள்ள ஜெ

மல்லீஸ்வரியின் பாடல்காட்சியில் ஸ்ரீபாலாவை கண்டுபிடித்துவிட்டேன். வெட்டி அனுப்பியிருக்கிறேன். இவர்தானே?

ஆர்.ஸ்ரீராம்

***

அன்புள்ள ஸ்ரீராம்,

சரிதான். ஆனால் சில பெட்டிகளை திறக்க, பொதுவில் வைக்க நமக்கு உரிமை இல்லை.

அத்துடன் நமக்கு ஏன் இந்த ஆர்வம் வருகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

அந்த முகில் இந்த முகில் ஒருவகையில் ஒரு மல்டிமீடியா டெக்ஸ்ட். அடுத்த காலகட்ட புனைவுக்கு உதாரணம். ஏற்கனவே பிழை போன்ற சில கதைகள் இதற்கு உதாரணமாக உள்ளன. அந்த சினிமா, அந்தப்பாடல்காட்சிகள், பாடல்கள் இல்லாமல் இந்தக்கதை முழுமை அடையாது.

மூன்றுவகை யதார்த்தங்கள். நடைமுறை வாழ்க்கையிலிருந்து சினிமா ஒன்றை உருவாக்குகிறது. அதிலிருந்து இந்த புனைவு இன்னொன்றை உருவாக்குகிறது. கனவுக்குள் இன்னொரு கனவுபோல.

இந்தக் கதையை ஒரு ரொமாண்டிக் கற்பனைக் கதையாக நான் வாசிக்கவில்லை. இதில் காதல் என்ற அந்த உலகம் சினிமா என்ற இன்னொரு மாய உலகத்துடன் ஊடாடும் விதம்தான் நவீனப் புனைவுக்குரிய முக்கியமான அம்சம் என நினைக்கிறேன்.

சினிமா, அதிலும் கருப்புவெள்ளை சினிமா மனிதக்கண் பார்க்கவே முடியாத ஓரு உலகை உருவாக்குகிறது. அதேபோன்ற ஒரு உலகம்தான் நிலவொளியில் அவர்கள் உருவாக்கிக் கொண்டது. நிலவும் முகிலும் சேர்ந்து உருவாவது

முகில் அவ்வளவு நிலையற்றது. ஆனால் சினிமா அதை கல்லில் செதுக்குவதுபோல நிலைக்கவைத்துவிட்டது. பல்லாயிரம் காதல்கள் அப்படியே மறைந்துவிடும். ஆனால் ராவ்- ஸ்ரீபாலா காதல் அப்படியே நீடிக்கும். ஆகவேதான் அவள் என்ன ஒரு அதிருஷ்டம் என்று அதைச் சொல்கிறாள்

கே.சிவக்குமார்

***

அன்புள்ள சிவக்குமார்,

ஒவ்வொருவருக்கும் அப்படி எஞ்சும் ஒரு துளி இருக்காதா என்ன?

ஜெ

***

அன்புள்ள ஜெ,

எழுத எழுத எழுத்தாளனிடம் ஒரு லோட் வந்து சேர்கிறது. அதுவரை எழுதியவற்றின் நெடி. அந்த எழுத்துக்கள் அளிக்கும் ஒரு ஜாக்ரதை உணர்வு. வழக்கமாக செஞ்சுரி அடிக்கும் பேட்ஸ்மேனின் எச்சரிக்கை உணர்வு. அந்த உணர்வெல்லாம் இல்லாமல் சட்டையை கழற்றுவதுபோல வெண்முரசு எழுதிய ஜெயமோகனை கழற்றிவிட்டு வேறுவேறு உலகங்களில் பயணம் செய்கிறீர்கள்.

அந்த முகில் இந்த முகில் நாவலை உங்கள் வயதில் எழுதுவது ஒரு சாதனைதான். அதில் இருக்கும் ஆழமான போதை இளமைவயதுக்கே உரியது. கனவும் கண்ணீருமாக நாம் தவித்த பிராயம் பிறகு யோசித்தால் அபத்தமாக ஆகிவிடும். அந்த அபத்த உணர்வு கொஞ்சம் பாக்கியிருந்தால்கூட இதை எழுதியிருக்க முடியாது. சரித்திர உணர்வு, அரசியலுணர்வு எதுவுமே இல்லாத ஓர் இளமையில் நின்றுகொண்டு எழுதவேண்டிய படைப்பு இது.

சாரங்கன்

***

அன்புள்ள சாரங்கன்,

நான் இந்தக்கதையை எழுத எண்ணியது 2006ல். அன்று நாகராஜு இருந்தார். எழுதுவது இப்போதுதான்.

தகழி சிவசங்கரப்பிள்ளை பஷீரிடம் அவர் ஒரு காதல்கதை எழுதவிருப்பதாகச் சொல்கிறார். கொஞ்சம் வயது முதிர்ந்தபின் எழுதும்படி பஷீர் சொல்கிறார். நாற்பத்தைந்து வயது கடந்தபின் தகழி செம்மீனை எழுதினார்

கனவு திரண்டு ஒளிகொள்ளவேண்டும் என்றால் கொஞ்சம் வயது ஆகவேண்டும்

ஜெ

***

அன்புள்ள ஜெ,

தெலுங்குப் பண்பாடு பற்றிய பல நுண்செய்திகள் இக்கதையில் உள்ளன. புவ்வுல பாபுவை பற்றி தமிழ் கதை ஒன்றில் வாசிப்பது அதிருஷ்டம்தான். காலி அவர்களின் பாடல் அப்படி ஒரு கார்வை கொண்டது. நாவல்கள் கதைகள் என்று ஏராளமான செய்திகள்.

சத்யநாராயணன் என்.

***

அன்புள்ள சத்யா

தகவல்களை முன்னரே பலவகை வாசிப்பு, இசை ஈடுபாடு வழியாக அறிந்திருந்தேன். இதற்காக தனியாக ஒன்றும் ஆய்வு செய்யவில்லை. தமிழ் சினிமாவின் ஒப்பனை, தையல் கலைஞர்களில் பலர் புவ்வுல பாபுவின் ஆராதகர்கள்.

எழுதியபின் செய்திகளை ஈநாடு தெலுங்கு இதழின் துணையாசிரியரும் நண்பருமான ராஜு சரிபார்த்து உதவினார்

ஜெ

முந்தைய கட்டுரைமுதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்
அடுத்த கட்டுரைமரபு -கடிதங்கள்