முதற்கனல் வாசிப்பு- ஜெகதீஷ்குமார்

முதற்கனல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்புள்ள ஜெ,

நீண்ட ஆண்டுகளுக்குப் பின் கடிதம். பீமனின் குறுக்காக விழுந்த வாலைப்போல் வெண்முரசு விழுந்து கிடந்தது. தினமும் உங்கள் தளத்தில் மேய்ந்தாலும் கட்டுரைகளை மட்டுமே (இலக்கிய, ஆன்மிக) வாசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.வெண்முரசை வாசிக்காமல் உங்களுக்கு கடிதம் எழுத எனக்குத் தகுதியில்லை என்று எண்ணியிருந்தேன். அதை வாசிக்காததனாலேயே விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமெரிக்கா பற்றி தங்கள் தளத்தில் கடிதம் கண்டும் சேரலாமா என்ற தயக்கம் இருந்தது. தயக்கத்தை மீறி சௌந்தர் அண்ணாவுக்கு மின்னஞ்சல் அனுப்பி வட்டத்தில் இணைந்தவுடன் புரிந்தது. இதில் சேர்வதன் மூலமே வெண்முரசை என்னால் வாசித்து முடிக்கக் கூடிய ஊக்கத்தைப் பெற இயலும் என்று.வசந்த காலத்தைத் தாண்டும் துடிப்பே அதை வசந்தமாக்கி விடும் என்று நீங்கள் சொல்வதைப் போல. சேர்ந்து விட்டேன்.

இம்மாதம் 20ம் தேதி முதற்கனல் கலந்துரையாடல் இருந்தது. ஐந்து நாட்களில் முதற்கனலை இரண்டாம் முறையாக வாசித்து (ஏற்கனவே நீலம் வரை வாசித்து விட்டிருந்தேன்.) அதற்கு அத்தியாயக் குறிப்புகளையும் எடுத்துக் கொண்டேன். இக்குறிப்புகள் வாசித்தபின் என் மனைவி அனுவிற்குக் கதையாகச் சொல்ல உதவின.இலக்கிய வட்ட நண்பர்களுக்கும் பகிர்ந்தேன். அவர்களும் குறிப்புகள் வாசித்ததைத் தொகுத்துக் கொள்ள உதவியதாகச் சொன்னார்கள்.

முதற்கனல் அத்தியாயக் குறிப்புகள்.

சந்திப்புக்கு ஐந்து நாட்கள் முன்புதான் விஷ்ணுபுரத்தில் இணைந்தேன். ஆனால் அதற்குள்ளாகவே நண்பர்கள் அதன் ஓர் அங்கமாக என்னை உணரச்செய்து விட்டனர். குழுவில் நிறைய ராஜன்கள் இருப்பதால் வரும் குழப்பத்தைப் பற்றி கொஞ்ச நேரம் கலாட்டா ஓடியது. சிலர் அவர்களுக்கு ராஜாதி ராஜ ராஜகுல திலக…. என்று குலோத்துங்குவை மட்டும் விட்டு விட்டு பராக் பாட ஆரம்பித்து விட்டனர். நான் மன்னர்கள் நிறைய இருப்பதால் இந்த சூதர்களுக்குச் சில பொற்காசுகளை வீசுவார்களா என்றேன். அது சூதர் பாடும் பாடலைப் பொறுத்தது என்றார் ஒருவர். மண்டபத்தில் நமக்கு யாராவது எழுதித்தர மாட்டாங்களா என்றேன் நான். மதுரைத்தமிழ் கலந்து அம்பைகுறித்து ஓர் உணர்ச்சிகரமான உரையாற்றிய ஜமீலா அவர்கள் கூட தன் அற்புதமான உரையை முடித்து விட்டு இது யாரும் மண்டபத்தில் எழுதிக் கொடுத்து எடுத்து வரவில்லை என்றார்.

பழனி அவர்களின் என்ன தவம் செய்தனையுடன் இனிதே துவங்கியது நிகழ்வு. ஜமீலா அவர்கள் அம்பை குறித்தும், கிஷோர் முதற்கனலில் இச்சையின் இடம் குறித்தும், ஷங்கர் சிக்கி முக்கிக் கற்கள் என்ற தலைப்பில் முதற்கனலில் ஆண்பெண் உறவு குறித்தும் உரையாடினர். ஒவ்வோர் உரைக்குப் பின்னரும் அவையோர் தங்கள் கருத்துகளைப் பரிமாற வாய்ப்பு வழங்கப்பட்டது. நண்பர்கள் அனைவருமே நாவலை ஆழ்ந்து வாசித்திருந்தனர். நான் அம்பை ரசிகன், நான் விசித்திர வீரியனின் ரசிகன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டனர். நான் வாசிக்காத பல கோணங்கள்  திறந்து கொண்டு நாவல் என்னுள் விரிந்து கொண்டே சென்றது. நீண்ட காலமாகவே வாசிப்பு, எழுத்து என்று இருந்தாலும் ஒரு இலக்கிய வட்டத்தில் நான் இணைவது இதுவே முதல் முறை. இது என் வாசிப்பையும், எழுத்தையும் முறைப்படுத்தும் என்று திண்ணமாக நம்புகிறேன்.

இரண்டாவது முறை வாசிக்கும்போது முதல் முறை எத்தனை விஷயங்களைத் தவற விட்டிருக்கிறேன் என்று தெரிந்தது. முதல் முறை அம்பையும், பீஷ்மரும், விசித்திரவீரியனும், சிகண்டியும், சத்யவதியும் பேருருவம் கொண்டு எழுந்திருந்தனர். இரண்டாம் முறை ஜெ என்னும் ஆசிரியரின் பேருருவத்தைத் தரிசிக்க வாய்த்தது.

சொல்லித்தீராத உவமைகள் :நீந்தும் யானை போல தன் கரிய பெருங்கால்களை ஓசையின்றித் துழாவி நடக்கும் காலம், இறந்தவளின் தலையிலிருந்து பேன்கள் இறங்கிசெல்வதுபோலத் தாயின் உடலை விட்டுச் செல்லும் குழந்தை, அறுபடாத சில்வண்டு ஒலியில் கோர்க்கப்பட்டிருந்த பிற ஒலிகள்(ஸூத்ரே மணி கனா இவ!), வியர்த்த பளிங்கு மேல் விரலால் இழுத்தது போல் உருவாகி வரும் அமைதியாலான வழி, படைக்குதிரையின் குளம்படிச்சத்தம் ஒலிக்கும் விசித்திர வீரியனின் நாடி, கிழிந்த பறைபோலக் கிடந்த நகரம்…,

ஒவ்வொரு கணத்திலும் முளை விட்டெழும், கிளை விட்டெழும் கேள்விகள்: க்ஷத்ரிய அறமா? பெண்களின் கண்ணீரா என்று பீஷ்மர் திகைத்து நிற்கும் தருணம், தன்னறமா? பொது அறமா என்று நம் மண்ணில் காலகாலமாக எழுப்பப்பட்டு வரும் கேள்வி ஒலிக்கிறது. இந்தக் கேள்வி நாவல் முழுதும் தொடர்ந்த வண்ணமே உள்ளது. என்னுள்ளும் சில கேள்விகள் எழுந்தவண்ணம் இருந்தன. வியாசன் வனத்திற்குள் சென்று சுகனைக் காண்கையில் எல்லாக்கிளிகளும் வேதம் பாடுகின்றன. பாடித்திரியும் ஆயிரம் கிளிகளில் ஊழ்கத்தில் அமர்ந்தது ஒரு கிளிதானே! என்று நினைத்துக் கொண்டேன். சாந்தோக்கிய உபநிஷத்தில் உத்தாலகர் ஸ்வேதகேதுவுக்குச் சொன்ன சொற்றொடரை அக்னிவேசர் சிகண்டிக்குச் சொல்கிறார். வேத வேதாங்கங்கள் கற்றுத் திரும்பிய ஸ்வேதகேதுவுக்கு ஒரு சொல் போதும். குரோதத்தால் கொதித்துக் கொண்டிருக்கும் சிகண்டிக்கு அச்சொல்லே போதுமா? பீஷ்மரின் ஆடியில் ஏன் புரு தெரியவில்லை?

நாவல் முழுக்க நிறைந்துள்ள நுண்தகவல்கள்:  நிலக்காட்சி வர்ணனைகள், மானுடர் புரியும் தொழில்கள், மென்மழை விடாது தூறும் வேளிர்கிராமம், அதன் குழந்தைகளும், பெண்களும், ஆண்களும், முதியோரும், கூரைகளுக்கு மேலாக எழுந்தபடி இருக்கும் இனிய சமையற்புகையும், இருளேயாகி நிறைந்திருக்கும் எருமைகளும், வருவிருந்து கொடுத்தனுப்பும் அவர்தம் தன்மையும்… பீஷ்மர் தனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் அந்தக்கிராமத்திலேயே வாழ்நாள் முழுக்கத் தங்கி விடுவேன் என்று சொன்னதை என் அவாவாகவே உணர முடிந்தது. கள்ளுண்ட சூதன் பீஷ்மரையும், க்ஷத்ரியர்களையும் கலாய்த்துப் பாடும் அத்தியாயம், எளிய மக்கள் பார்வையில் அரசுகள் எப்படிப் பொருட்படுகின்றன என்று காட்டியது. சிவையும், அவள் தோழியும் பேசிக்கொள்ளும் அத்தியாயமும் (அதென்ன க்ஷத்ரியர்களுக்கு தவமிருந்தால்தான் குழந்தை பிறக்கிறது. சூதப்பெண்களுக்கு முனிவன் கல்லெறிந்தாலே பிறந்து விடுகிறது.). அவர்கள் இருவரும் குழந்தை பற்றியே பேசிக்கொண்டிருந்தது, பின் சிவையை வியாசனிடம் கருக்கொள்ளத் தேர்ந்தெடுப்பதற்கான அடித்தளமிட்டதைபோல இருந்தது.

இடையனின் குழலோசையில் வனவேங்கை மலர்களை உதிர்ப்பது கண்டு தான் இயற்றிய சம்ஹிதை அதற்கு ஈடாகாது என்று அதை எரியிடத் துணிந்த பராசரரின் கவிமனம், நிலவெழுந்த யமுனையைக் கண்டு கண்ணீர் பெருகும் பராசரரின் மனவெழுச்சி, அம்பையைக் கவர பத்தடி முன்னகர்ந்து பின் சீடர்களை ஆணையிட்டு அதைச் செய்யச்சொன்னதில் அவர் காதலை அறிந்த அம்பையின் அறிவுக்கூர்மை, கங்கைக்கரையில் படகில் நீங்குகையில் தன்னிலை இழந்து பீஷ்மர் என்ற மகாவீரரிடம் காதலில் விழும் அம்பையின் அதிரும் பெண்மை என்று நீங்கள் தொட்டு மட்டும் காட்டிய நான் நெகிழ்ந்த கணங்கள் எண்ணற்றவை. கவர்ந்த கணங்களைப் பட்டியலிட்டால் முழுமுதற்கனலையும் இட வேண்டியிருக்கும். முதற்கனலை மேற்கோள்களின் தொகுப்பாக மாற்றிவிடாமலிருக்க இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

முதற்கனல் என் உள்ளத்தில் விழுந்து விட்டது. இதை எழுதும் கணம் மழைப்பாடலில் இருக்கிறேன். வெண்முரசை முழுதும் வாசிக்க எனக்கும் முனைப்பையும், ஆற்றலையும் அருளுமாறு  நவீன வியாசரிடம் வேண்டுகிறேன். என் போன்ற பலருக்கும் இலக்கியம், ஆன்மிகம், கலை, வரலாறு எனப் பல்துறைகளின் ஞானாசிரியனாக விளங்கி வரும் உங்கள் முன் அகம் பணிகிறேன். எழுத்திலும், வாசிப்பிலும், ஆன்மிகத்திலும் தடையின்றி முன்னேறத் தங்கள் ஆசி வேண்டுகிறேன்.

ஜெகதீஷ் குமார்

முந்தைய கட்டுரைமேகமாலை
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 3