கையும் அரிவாளும்!

பொதுவாக எங்கள் பெருங்குடும்பத்தில் ஆண்கள் இடதுசாரிகளாகவும் பெண்கள் காங்கிரஸ்காரர்களாகவும் இருப்பதுதான் தொன்றுதொட்டு வழக்கம். கேரளத்தில் பெரும்பாலான நாயர் குடும்பங்களில் இதுவே நடைமுறை மங்கலம்.

[எங்கள் வீட்டில் நேர்மாறு. அம்மா கம்யூனிஸ்டு ,அப்பா காங்கிரஸ். தன் அண்ணா கம்யூனிஸ்டு என்பதனால் அம்மாவும் கம்யூனிஸ்டு. அம்மா கம்யூனிஸ்டு என்பதனால் அப்பா காங்கிரஸ்.]

இப்போது திடீரென்று ஒரு காங்கிரஸ் அலை. குடும்ப வாட்ஸப் சுற்றத்தில் கிட்டத்தட்ட ஒரு தேசியக்கருத்தியல் வீச்சம். [வீச்சு என்பதன் தொழில்பெயர்] நாள்தோறும் கைச்சின்னங்கள், மூவண்ணங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. எனக்கு கேரளத்தில் வாக்கு இல்லை என்பதை எவரும் கவனிக்கவில்லை. அதையெல்லாம் கவனித்தால் வேலைக்காகுமா என்று நினைப்பார்களாக இருக்கும்.

சிக்கலான பல காரணங்களை யோசித்துப்பார்த்தேன். சமீபத்தைய நோட்டுமாற்ற நடவடிக்கைகளால் சிலபல நாயர்களுக்கு செவிள்பொத்தி அடிவிழுந்திருக்குமோ? ஜி.எஸ்.டியால் இடுப்புக்குக் கீழே உதை விழுந்திருக்குமோ?ஆனால் அதற்காக காங்கிரஸை ஆதரிக்கவேண்டியதில்லையே. இதிலெல்லாம் காங்கிரஸும் கம்யூனிஸ்டும் ’ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு. திருப்பிப்போட்டு கூட்டினாலும் அதேதான்’ என்னும் நம்பூதிரிகணித மனநிலை கொண்டவர்களாயிற்றே?

என்ன சிக்கல்? நெடுமங்காடு, காட்டாக்கடை, ஆரியநாடு வட்டாரங்களில் ஏதாவது பண்பாட்டு அட்டிமறி நடந்திருக்கிறதா? மார்க்ஸிய சித்தாந்தம் தலைகுப்புற கவிழ்கிறது மாதிரி? பொதுவாகக் கேரளத்தில் மார்க்சிய சித்தாந்தம் என்பது ’பிரட் சமூசா’ போல. மாடர்ன் பிரட்டை கடலைமாவில் முக்கி எண்ணையில் பொரித்தெடுப்பதன் அதே தொழில்நுட்பத்துடன் மார்க்ஸ்-எங்கல்ஸ்-லெனின் ஸ்டாலினை ஈ.எம்.எஸ்ஸில் முக்கி பொரித்து எடுக்கிறார்கள். உள்ளே சிலசமயம் கொஞ்சம் சங்கர வேதாந்த மசாலா பொத்தி வைக்கப்பட்டிருப்பதுமுண்டு.

ஆனால் திருவனந்தபுர ‘கொட்டாரம் பண்பாட்டு’ வட்டாரத்தில் இருந்து விலகி மலையடிவாரத்தில் ரப்பர் பயிரிட்டு, மரவள்ளிக்கிழங்கு தின்று வாழும் எம்மவருக்கு அதுவும் வாய்க்கு பிடிக்காது. நமக்கு அந்த ஆகிவந்த பழம்பொரிதான். திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்டிருக்கும் அனந்தபத்மநாபப் பெருமாளேகூட ரகசியமாக பூசாரியிடம் ‘சாயங்காலம் நைவேத்தியத்துக்கு ஒரு ரெண்டு பழம்பொரி கொண்டுவாடே. ஆரும் அறியவேண்டாம்” என்று சொன்னதாக புராணம் உண்டு. காந்தளூர்ச்சாலை மகாதேவர்  “ஒப்பம் ஒரு ஸ்மாலும் ஆய்க்கோட்டே’ என்று சொல்லியிருப்பார்.

என்னதான் நடக்கிறது நாட்டில்? அதிலும் ஸ்ரீமான் பாலசங்கரப் பிள்ளையவர்களின் தேசபக்தி கொஞ்சம் அச்சமூட்டும் எல்லையை தாண்டிச் சென்றுகொண்டிருந்தது. ‘பப்பு இல்லாத எல்லாம் தப்பு’ வகையான கோஷங்கள். யார் செய்த ஊடுருவல்?

கடைசியில் மருமகன் மதுசூதனன் என்கிற ’குங்ஃபு’ மது வாட்ஸப் வழியாக தெளிவை அளித்தான். என் அம்மாவின் அண்ணா, என் தாய்மாமா, அதாவது அம்மாவன், மறைந்த மலையின்கீழ் கேசவ பிள்ளையின் மகன் மலையின்கீழ் வேணுகோபால் இந்திய தேசிய காங்கிரஸின் காட்டாக்கடை தொகுதி வேட்பாளராக தேர்தலில் நிற்கிறார். திக்திக் என காத்திருக்கிறார். கூடவே குடும்ப பரிவாரமும் நகம் கடிக்கிறது.

அவருக்கு எதிரே ஐ.பி.சதீஷ் இடதுசாரி வேட்பாளர். ஓணத்திற்கு ஊடாக புட்டு வியாபாரம் போல  பி.கே.கிருஷ்ணதாஸ் பி.ஜே.பி வேட்பாளராக நிற்கிறார். ஜெயிக்கும் வாய்ப்பே இல்லாததன் மனநிம்மதி அவருக்கு. கூடவே எதிரிகளில் ஒருவர் எப்படியும் தோற்றுவிடுவார் என்பதன் கொண்டாட்டமும். பொதுவாக பி.ஜெ.பி கேரளத்தில் ஒரு ஜாலியான கட்சி.

மலையின்கீழ் வேணுகோபாலின் அம்மாவின் அக்காவின் மகன் ஜி.ஆர்.அனில் இடதுசாரி வேட்பாளராக நெடுமங்காடு தொகுதியில் போட்டியிடுகிறார். அவரும் சொந்தம்தான், சுற்றிவளைத்து. கொஞ்சம் கூடுதலாகவே சுற்றி வளைக்கவேண்டும். அரசியலில் தேவைப்பட்டால் அதெல்லாம் செய்யலாம். உட்கார்ந்து பேசினால் பிணறாயி விஜயனே சொந்தமாக வருவார்.

போகிறபோக்கைப் பார்த்தால் பிணறாயி ஜெயிப்பார் என்றே தெரிகிறது. கூடவே மலையின்கீழ் வேணுகோபாலும் ஜெயிப்பார். ஆனால் கேரளத்தில் எதிர்கட்சி எம்.எல்.ஏக்கு கையில் காசு ஓட்டம் இருக்காது. ஜி.ஆர்.அனிலும் ஜெயிக்கக்கூடும். இடதுசாரி எம்.எல்.ஏ ஜெயித்தாலும் கையில் காசு புழங்காது. வியாபாரம் செய்து சம்பாதித்த காசுதான் செலவாகும்.

ஏனென்றால் அங்கே கோடீஸ்வரர்களுக்குப் பதிலாக நீண்ட கட்சியனுபவம் கொண்டவர்களே இருசாராரிலும் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள். வாக்குக்குப் பணம் கொடுக்கப் படுவதில்லை. தேர்தலுக்கு ஒரு நோட்டுபுக் சைசுக்கு மேல் பெரிதாக போஸ்டர்கள் அடிக்கப்படுவதில்லை. தாராளமாக வினியோகமாவது வேட்பாளரின் அகன்ற புன்னகை மட்டுமே. எங்கள் குடும்பக்காரர்கள் இருவருமே நல்ல புன்னகைக்காரர்கள்.

ஒட்டுமொத்தமாகச் சொல்வதென்றால் கேரளத்தில் தேர்தலில் ஜெயிப்பது ஒன்றும் லாட்டரி அடிப்பதுபோன்ற பெரிய விஷயம் அல்ல. ஆகவே வாய்ப்பு கிடைப்பதும் பெரிய விஷயம் அல்ல. சம்பந்தப்பட்டவரின் ‘கரியர்’ அது. ஆனாலும் கொண்டாடாமல் இருக்க முடியாது. கிரிக்கெட்டில் நம் நாட்டவர் நின்று ஆடினால் சட்டையை அவிழ்த்து தலைக்குமேல் வீசி நடனம் ஆடுகிறோம்.  விளையாட்டுவீரர் நமக்கு என்ன ’குளூர’ நொங்குசர்பத்தா வாங்கித் தருகிறார்?

ஆகவே காங்கிரஸுக்கு ஜே. உங்கள் பொன்னான ஓட்டு கை சின்னத்திற்கே. அதாவது காட்டாக்கடை தொகுதியில். நெடுமங்காடு தொகுதியில் உங்கள் விருப்பப்படி அரிவாள் சுத்தியல் சின்னத்துக்கே போட்டுவிடுங்கள். இதை நான் ஐந்தாம்தேதி சொல்ல நினைத்தேன். பிந்திவிட்டது.

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-12
அடுத்த கட்டுரைமதுரையில் தமிழ்ப்புத்தாண்டு