முதற்கனல் தொடங்கி…

ஓவியம்: ஷண்முகவேல்

குடும்பத்திற்குத் தேவையான மளிகை சாமான்களும், பெரியவர்கள் போட்டுக்கொள்ள வெற்றிலையும் பாக்கும், சுண்ணாம்பும் குழந்தைகளுக்கு நொறுக்குத் தீனியும், நான் வளர்ந்த குக்கிராமத்திலிருந்து, பக்கத்து பெருங்கிராமத்தில் வாரம் ஒருமுறை நடக்கும் சந்தைக்கு சென்றுதான் வாங்கவேண்டும். அப்படி என் தந்தை, வாரச்சந்தையில் வாங்கிவரும் நொறுக்குத் தீனிகளுக்காக காத்திருக்கும் காலங்களில், தை மாதத்தில், கடித்து சுவைக்க முழுக்கரும்பும் கிடைக்கும். கரும்பை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, எனக்கும் என் சகோதரிகளுக்கும் பங்கிட்டு கொடுக்கும் என் தந்தை, ‘அடிக்கரும்பை முதலில் திங்காதே’ என்று சொல்லி வைப்பார். அப்பா பேச்சை கேட்காத மகனாக, அடிக்கரும்பை எடுத்து கடித்து சாரை உறிஞ்ச ஆரம்பித்துவிடுவேன். யாரும் கவனிக்காமல் விட்டுவிட்ட நுனிக்கரும்புத் துண்டை பிறகு தின்பேன். பள்ளிக்குச் சென்றால், பாட்டி ஒருவர் துண்டுகள் போட்டு வைத்து விற்கும் கரும்பை வாங்கித் தின்பேன். நுனிக்கரும்பிலிருந்து , அடிக்கரும்பு வரை திங்க திங்க ஏறி வரும் ருசி தனிதான் என்றாலும், எப்படித் தின்றாலும் கரும்பின் இனிமை இனிமையே.

எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு நாவல் வாசிப்பும் எனக்கு பாகம் பாகங்களெனுவும், பின்னரும் முன்னரும் எனவுமே அமைந்திருக்கிறது. 26 பாகங்கள் கொண்ட இந்த நாவல் வரிசையை நேரம் காலம் கருதி அவரவர் விருப்பங்களின்படி எந்தவொரு அத்தியாயத்தையும், நூலையும் எப்பொழுது வேண்டுமென்றாலும் எடுத்து வாசிக்கலாம், இல்லை முதலிலிருந்து முறையாகவும் வாசிக்கலாம் என்பதே , இப்பெருங்காவியத்தின் வாசகனான எனது அனுபவம்.

ஜெயமோகன் அவர்களின் தளத்தை வாசிக்கும் தவறாத வாசகன் என்று ஆன பிறகு, நான் முதலில் வாசித்தது, கண்ணனின் பிறப்பையும் ராதையின் காதலையும் சொல்லும் நீலம் எனும் நான்காம் நூலின் முதல் அத்தியாயம்தான். ஒரே நாளில், முதல் அத்தியாயத்தை மூன்று முறை வாசித்தேன். அதன் கவிதை மொழியில் மயங்கி பித்தனென்று ஆனேன். முதல் அத்தியாயத்தில், உறங்கும் ராதையின் வீடு நுழைந்த காலைத் தென்றல், அவள் அழகில் மயங்கி அப்படியே நின்று விடும். நானும் அப்படித்தான், ஜெயமோகன் கவிதை நடையில் மயங்கி முதல் அத்தியாயத்தில் நின்றேன். பன்முகத்துடன் வாழும் இந்த வாழ்க்கையில் , நீலம் வாசிக்க வாசிக்க எனது இன்னொரு முகம் கண்டேன். நண்பர்களுக்கு, “உனக்குத் தெரியுமா, முப்பிறவியில் நான்தான் ராதை” என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.

தாமதமாக வந்து அவரை அறிந்துகொண்டு அவர் எழுதிய எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவேண்டும் என்று அகோரப் பசியுடன் இருந்தவனுக்கு, வெண்முரசுவை முதலிலிருந்து வாசிப்பதற்கு, ‘நேரம் இல்லாமை’ எனும் சிக்கல் இருந்தது. அவரை முழுதும் அறிய எண்ணி, ரப்பரில் ஆரம்பித்து, உலோகம், இன்று பெற்றவை, சங்கச் சித்திரங்கள், கொற்றவை, விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், இரவு, கன்னி நிலம் , நினைவின் நதியில், நாவல் கோட்பாடு, என்று எல்லாவற்றையும் கவளம் கவளமாக அள்ளி உண்ணவேண்டியதாக இருந்தது. நாளொரு சிறுகதை பொழுதொரு கட்டுரை என்று நாட்களை பங்கிடவேண்டியிருந்தது. என்ன வாசித்தாலும், வெண்முரசுவை வாசிக்கமுடியவில்லை என்ற அகோரப்பசி இருந்துகொண்டே இருக்கும். ஜெயமோகன் தளத்தில் ‘முந்தையப் பதிவுகள் சில’ என , வெண்முரசுவின் சில பக்கங்களும் வலப் பக்கம் வந்து நிற்கும். முற்றத்தில் சிதறிக் கிடக்கும் பொரியை அள்ளி வாயில் போட்டுக்கொள்ளும் குழந்தையைப் போல, அந்தப் பக்கங்களை வாசித்து அவ்வப்பொழுது என் வெண்முரசு பசியை ஆற்றிக்கொள்வேன்.

ஒவ்வொரு அத்தியாயமும் தனியொரு சிறுகதையென நிற்க அது கொடுக்கும் வாசிப்பனுபவத்திலும் என்னை இழப்பதுண்டு. சதசிருங்கத்தில், குந்திக்கு தருமன் பிறந்திருப்பான். பாண்டு வந்து குழந்தையைக் கையில் எடுப்பார். எங்கே தன் குழந்தையை பாண்டு கொன்றுவிடுவாரோ என குந்தியின் தாயுள்ளம் பதறும். துச்சளை , சிந்து நாட்டிலிருந்து, தனது கணவன் ஜயத்ரதன் மற்றும் குழந்தையுடன் பிறந்த வீட்டிற்கு முதன் முதல் வந்திருப்பாள். அவள் குழந்தைக்கு சீர் செய்து கூட்டி வரவேண்டிய கர்ணன் , இளைய கௌரவக் குழந்தைகளுடன் விட்டுவிட்டு வந்துவிடுவான். கர்ணன், கௌரவர்களின் மனைவிகளின் கேலியிலும், கிண்டலிலும், அன்பிலும் திண்டாடும் சமயம், நான் அறிந்த கர்ணன் அல்ல என்று விழி திறப்பேன். ‘இருட்கனி’-யின் ஒரு பாகத்தில், அர்ஜுனன், தலைகுனிந்து அமர்ந்திருக்க, வந்து கேட்கும் யுதிஷ்டரனிடம், கர்ணனை தான் கொன்றவிதம் அறப்பிழை என்று சொல்வான்.

சொல்வளர் காடு எனும் நூலின் ஒரு அத்தியாயத்தில், தருமரும், தம்பியரும் திரௌபதியும் சாந்தீபனிக் கல்வி நிலையில் இருக்கும் சமயம் இளைய யாதவர் வந்திருப்பார். திரௌபதி, அவை நடுவே தான் சிறுமை கொண்டு நிற்கும் பொழுது நீங்கள் எங்கிருந்தீர்கள் என்று இளைய யாதவரிடம் கோபப்படுவாள். இளைய யாதவர் , ‘சக்ரவர்த்தினியாக ஆவதற்கு நீதானே ஆசைப்பட்டாய் , உன் ஆடலுக்கு கிடைத்த பரிசு’ என்று வாதிடுவார். ‘அட இது புதுசா இருக்கே!’ என்று ஜெயமோகனின் மறுஆக்கப் பார்வையை முழுதும் படித்து உணரும் நாட்களை என்ணி என் மனம் ஏங்கும்.கொலுஞ்சி செடிப் பிடுங்கினாலும் சரி, பிள்ளை ஒன்று பிறந்திருந்தாலும் சரி, எங்கள் வீட்டில், மகாபாரதக் கதை ஒன்றைச் சொல்லியே சொல்வார்கள். தருமன் சொல்வதை மறுகேள்வி கேட்காமல் அடிபணியும் தம்பிகளை சுட்டிக்காட்டி, அண்ணன் தம்பி படிநிலை வீட்டில் எழுதாத சட்டமாக இருந்தது.

எங்கள் பாட்டன், தன் தங்கையைக் கலந்தாலோசிக்காமல் ஒரு மாப்பிள்ளையை நிச்சயத்திவிட, மாப்பிள்ளை ஏதோ முடியாதவர் என்று புரளி கிளம்பி விடுகிறது. என் பாட்டனின் தங்கை, ‘அதனால் என்ன அண்ணா, நளாயினி, தன் கணவனைக் கூடையில் சுமந்து காப்பாற்றவில்லையா? நீ கொடுத்த வாக்கை மீறவேண்டாம்” என்று சொல்லியுள்ளார். இந்தக் கதை கேட்டு வளர்ந்த எனக்கு, நளாயினி பற்றி அறிய ஒரு ஆவல் இருந்துகொண்டே இருக்கும். வெண்முரசில், நான் தேடிப்படித்து அறிந்துகொண்ட முதல் பெண் நளாயினி. நளாயினிதான் திரௌபதியின் முற்பிறவி என்று ஒரு புரிதலும் கிடைத்தது.

மிகச்சரியாக ஒரு வருடத்திற்கு முன்னாள், கோவிட்-19 தீநுண்மிப் பரவல், இன்னொரு இனிய வாய்ப்பைக் கையில் எடுத்துக் கொடுத்தது. வீட்டிலிருந்து வேலை பார்க்க , காலையும் மாலையும் அலுவலகத்திற்கு பயணம் செய்யும் அந்த நாற்பது கூட்டல் நிமிடங்கள் நாளொன்றுக்கு கையில் மிச்சமிருந்தன. வெண்முரசுவை, ஒவ்வொரு மாலையும், முறையாக முதலிலிருந்து வாசிக்க வைத்துக்கொள்ளலாம் என்று படிக்க ஆரம்பித்தேன்.

வீடும் ஊரும் சொல்லிக்கொடுத்த வாய்மொழி மகாபாரதம், ஒன்பதாம் வகுப்பு ஆண்டு இறுதி விடுமுறையில், ஆடு மேய்த்துக்கொண்டே படித்த ராஜாஜியின் மகாபாரதம், ஞாயிறு காலையில், டில்லி தெருக்களில் நின்றுகொண்டு, மின்னனு உபகரணங்கள் விற்கும் கடைகளில் இருக்கும் டிவியில் பார்த்த BR Chopra-வின் மகாபாரதம் எல்லாம் விவரிக்காத நிலங்களையும், சித்தரிக்காத பாத்திரங்களையும் வெண்முரசு எனக்கு காண்பித்து மாயாஜாலம் செய்து அதன் பணியைத் தொடர்ந்தது. ஒரு நாளைக்கு நாற்பது நிமிடம், திட்டம், அட்டவணை, கட்டுப்பாடு என்று எல்லாம் தாண்டி, சில விடுமுறை நாட்களில் தன்னைமறந்த பித்தனாக பதினொரு மணி நேரம் எல்லாம், வெண்முரசுவில் மூழ்கியிருக்கிறேன். இப்பொழுது அதுவே என்னை இட்டுச் செல்கிறது.

ஏற்கனவே தெரிந்த கதை, அதில் ஆழ்ந்து மூழ்கிவிட என்ன இருக்கிறது? பீஷ்மர் , சுயம் வரத்திற்கு சென்று மூன்று காசி இளவரசிகளை வலுக்கட்டாயமாக ஈர்த்து வருவார் என்பது தெரிந்ததுதானே என்று ஒரு கேள்வியை வைத்துக்கொள்வோம். “முதல் இளவரிசியின் பெயர் அம்பை. அனலைக் கழலாக அணிந்த கொற்றவையின் பெயர் கொண்டவர். முக்கணம் ஆறு மதங்களையும் ஆறு தரிசனங்களையும் மூன்று தத்துவங்களையும் குருமுகமாகக் கற்றவர். கலைஞானமும், காவியஞானமும் கொண்டவர்சொல்லுக்கு நிகராக யானைகளையும் கையாளப்பயின்றவர். வில்லையும் வாளையும் பாரதவர்ஷத்தின் பெரும் குதிரைகளையும் ஆளத்தெரிந்தவர். சக்ரவர்த்தினியான அஸிதினபுரியின் தேவயானிக்கு நிகரானவர்” என்று ஜெயமோகனின் வரிகளில் அம்பை, முதல் நூலான முதற்கனலில் அறிமுகமாகிறார். சிந்திக்கும் எந்த ஒரு வாசகனுக்கும், அவளை அறியாத பீஷ்மர் கையைப் பிடித்து இழுத்தால், சும்மா இருப்பாரா என்று கேள்வி எழும்தானே? பீஷ்மரின் ஆணையின்படி அவரது மாணவர்கள் அணுக, அம்பை தனது அருகில் நிற்கும் மன்னன் ஒருவனின் உடைவாளை உருவி தன்னை தொடவந்தவனை வெட்டி வீழ்த்துகிறாள். அவள் வாள் சுழற்றுவதைப் பார்த்து பீஷ்மரே வியந்து நிற்கிறார்.

கண்ணாடி முகத்தைக் காட்டும். வெண்முரசு வாசகனின் அகத்தைக் காட்டும். நான் பிறந்த அன்றே என் உடலமைப்பைச் சுட்டிக்காட்டி அவமானப்படுத்தியிருக்கிறார்கள். அதைக் கேட்ட என் தாயின் மனம் அன்று என்ன அல்லல் பட்டிருக்கும் என நான் நினைக்கும் நாட்களில் விம்மும் என் நெஞ்சின் ஓசை அருகில் இருப்பவர்களுக்கும் கேட்கும். அவமானத்தின் வலியை அனுபவித்தவன் என்பதால், கேட்டு வளர்ந்த மகாபாரதத்தின் மூலம், கர்ணனே எனக்கு அணுக்கமானவன். அவன் கொடையில் மகிழ்ந்தான் என்று கற்று அதையே என் பாதை என்றும் வகுத்துக்கொண்டேன். அது கிடக்கட்டும் கழுதை! வெண்முரசு வாசிப்பிற்கு வருகிறேன்.

வெண்முரசின் மூன்றாம் நூலான, வண்ணக்கடலில், துரோணர், அக்னிவேசரின் குருகுலத்தில் தன்னுடன் கற்கும் சமயம் ராஜ்யத்தில் பாதி கொடுக்கிறேன் என்று வாக்கு கொடுத்த பழைய நண்பன் துருபதனிடம் சென்று யாசிக்கிறார், துருபதன், துரோணரை ஷத்ரியரா, பிராமணரா என்று குலம் கேட்டு அவமானப்படுத்துகிறான். துரோணரும் எனக்கு அணுக்கமானவர்களில், கர்ணனுடன் இணைந்து கொள்கிறார். நான்காம் நூலான ‘பிரயாகை’யில் துரோணர், துருபதனை அவமானப்படுத்தும் பொருட்டு, அர்ஜுனனிடம், குரு காணிக்கையாக அவரைத் தேர்க்காலில் கட்டி இழுத்துவரச் சொல்ல, துரோணர் எனக்கு அணுக்கமானவர்களின் நிலையில் இறங்கிவிடுகிறார்.

அழகு என்று வரும்பொழுது சினிமாக்களும், தொலைக்காட்சி நாடகங்களும் நிறத்திற்கு கொடுக்கும் மதிப்பில் எனக்கு ஒரு கேள்வி உண்டு. அது சமுதாயத்தின் பிரதிபலிப்பு என்பதைவிட, வியாபாரம் என்று அங்கு உள்ளே நுழைந்து விடுகிறது. BR Chopraa-வின் மகாபாரதத்தில் கருமை நிறக்கன்ணா என்ற பாடல் பின்னனியில், இளமைக்கால கண்ணன் சிகப்பாக இருப்பான். ஜெயமோகன், வெண்முரசு பாத்திரப்படைப்புகளில் அதை உடைத்திருக்கிறார். திரௌபதி, கருமை நிறம் கொண்ட , சீரான தோள்கள் கொண்ட, நிமிர்வு நடை நடக்கும் அழகி. யானையை அடக்கும் மொழியையும் கற்றவள். இந்திரப்பிரஸ்தத்தை வடிவைக்கும் கட்டடக்கலை வல்லுனர். 2020 தீபாவளிக்கு FB-யின் பயனர் ஒருவர் , வெண்முரசுவிற்காக ஓவியர் ஷண்முகவேலு வரைந்திருந்த திரௌபதியின் ஓவியத்தை லட்சுமி என்று தனது வாழ்த்துக்களைச் சொல்ல உபயோகித்திருந்தார். மின்னும் கருமை நிற அழகி மக்களின் மனதை நிறைக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எதைச் செய்தாலும், பிரதிபலன் இருக்க வேண்டும் என நினைத்தாலும், வெண்முரசு வாசிப்பதில் கற்றுக்கொள்ளவும் நிறைய இருக்கிறது. நான், சாதாரண வேலையாளாக இருக்கும்பொழுது, என் மேலாளர் சில சந்திப்புகளுக்கு என்னை உடன் அழைத்துச் செல்வார். அந்தச் சந்திப்புகளில் , வேறு துறையினர், அவர்களது அரசியலை உள்ளுக்குள் புதைத்து சில உடன்படாத கேள்விகளை கேட்டு என் மேலாளரை இக்கட்டில் தள்ளுவார்கள். நான் தெரிந்தும் தெரியாமலும், மேலாளரைக் காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று பதில் சொல்வேன். அவர் தெரிந்துதான் என்னை அழைத்துச் செல்கிறார் என்று பிறகு அறிந்துகொண்டேன்.

உண்மை என்னவென்றால், இப்பொழுது நான் செல்லும் சந்திப்புகளுக்கு எடுத்துச்செல்ல பழிகிடாக்கள் வைத்துள்ளேன். அஸ்தினாபுரியின் மணிமுடி துரியோதனனுக்கா, தருமருக்கா என்று விவாதம் நடக்கும் அவைக்கு இளைய யாதவர் பலராமனை உடன் இட்டுச்சென்று காயை பாண்டவர்கள் பக்கம் நகர்த்துவார். வாதம் திசை மாறுவது அரசுசூழ்தல் தெரியாமல் பேசும் பலராமரின் கேள்விகளும் பதிலும்தான் என்பதை இளைய யாதவரின் அணுக்கத் தோழன் சாத்யகி அறிந்துகொள்வான். அவனுடன் வாசகர்களும் கற்றுக்கொள்வார்கள்.

வெண்முரசின் மொழி தனிச்சிறப்பு. எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கும் கீதை, இமைக்கணம் எனும் நூலில் எளிதில் புரியும் தமிழில். எமனே வெவ்வேறு உருவில் , அர்ஜுனனாக, கர்ணனாக, சகுனியாக, திரௌபதியாக, தருமராக வந்து கேள்வி கேட்க இளைய யாதவர் சொல்லும் விளக்கங்கள் கீதையின் சாராம்சம்.

இது எல்லாவற்றையும் காட்சிகளாய்க் கண்டுகளிக்கும் காலம். மகாபாரதக் காலகட்டத்தின் நகரங்களையும், கிராமங்களையும், ஆறுகளையும், பாலை நிலங்களையும், புல்வெளிகளையும் வெண்முரசு விவரிக்கும் விதத்தில் யூடுயூப் காணோளி ரசிகன் தனது அகவெளியில் வடித்தெடுத்துக்கொள்ள எல்லா சாத்தியங்களும் உள்ளன. முதற்கனலுக்கு அப்புறம் வரும் நூல்களில், அஸ்தினாபுரியின் கங்கை படித்துறையில் படகிலிருந்து இறங்குபவர்கள் முதலில் காண்பது அம்பையின் சிலை என அறிவார்கள். அஸ்தினாபுரியிலிருந்து இந்திரப்பிரஸ்தத்திற்கு செல்லும் வழியில் கங்கையும் யமுனையும் இணையும் இடத்தில் படகு திரும்பும் என வழி சொல்வார்கள். பாலை வனத்தில் குதிரைகள் செல்ல அதற்கென்று தனி இலாடம் கட்டவேண்டும் என்று பரிந்துரைக்கலாம்.

ஜெயமோகன், வெண்முரசு நாவல் வரிசையை எழுத 2014, ஜனவரி முதல் 2020, ஜூலை வரை ஏழு வருடங்கள் எடுத்துக்கொண்டார். அந்தக் காவியத்தின் வாசகனாக, அதை குறைந்தது இரண்டு வருடங்களாவது மாதம் ஒரு முறை, தனி நூலொன்றுக்கோ, தனிப்பட்ட அத்தியாயத்திற்கோ வாசிப்பனுபவமாக எழுத இருக்கிறேன். நான் காகிதத்தில் எதை எழுதினாலும், ‘அ’ என்று முதலில் எழுதுவேன். நான் முதலில் கற்றது , ‘அ’, வணங்குவது அம்மாவும் அப்பாவும் எனும் வகையிலும் ‘அ’. வெண்முரசு எனும் காவியத்தில் இதுவரையில் என்னைக் கவர்ந்த தலையாய பாத்திரம் அம்பை. ஆதலால், அன்னை அம்பை மேல் உள்ள பற்றிலும் பக்தியிலும் ஒரு ‘அ’ போட்டு காவியத்தின் வாசிப்பனுபவத்தை தொடங்குகிறேன்.

வெண்முரசு நாவலுக்கு ஓவியர் ஷண்முகவேல் வரைந்த ஓவியங்களையே எனது பதிவுகளுக்கும் பயன்படுத்த இருக்கிறேன். அதில் எந்த விதமான வணிக நோக்கமும் இல்லை.

ஆஸ்டின் செளந்தர்

https://www.facebook.com/katrinnizhal/

முந்தைய கட்டுரைவேதப்பண்பாடு நாட்டார் பண்பாடா?
அடுத்த கட்டுரைமலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்