முழங்கும் ஒரு நாள்
அன்புள்ள ஜெ,
‘முழங்கும் ஒரு நாள்’ கதகளி அனுபவத்தை நீங்கள் எழுதியவுடன் என்னுடைய கதகளி சார்ந்த அனுபவங்களை உங்களுக்கு எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. எழுத ஆரம்பித்தவுடன் 2016லிருந்து 2020 வரை பார்த்த கதகளிகளின் இனிய நினைவுகளின் கொப்பளிப்பை சரியான வடிவத்தில் எழுத முடியவில்லை. உங்கள் வழியாக கதகளி எனக்கு அறிமுகமான பின்னணியும் கதகளி மேல் எனக்கிருக்கும் ஈர்ப்பை மட்டும்தான் எழுத முடிந்திருக்கிறது.
எல்லா நண்பர்களையும் போல தளத்தில் இருக்கும் பழைய பதிவுகளை தேடித்தேடிப்படிப்பது எனது வழக்கம். எப்போது திறந்தாலும் நான் படிக்காமல் விட்ட ஏதாவது ஒரு பழைய பதிவு கண்ணில்படும். அப்படி பழைய பதிவுகளில் தற்செயலாகப் படித்த ”கலைக்கணம் கட்டுரை வழியாகத் எனக்கு கதகளி அறிமுகமானது. கதகளியின் நாடகீயம் பற்றியும், கதகளி அறிமுகம் செய்துகொள்வது பற்றியுமான விரிவான நல்ல கட்டுரை. இப்போதும் கதகளி பார்க்க விரும்பும் நம் நண்பர்களுக்கு அந்த கட்டுரையை பரிந்துரை செய்வேன்.
அந்த கட்டுரையை படித்துவிட்டு யூடியூபில் கதகளி பார்க்க ஆரம்பித்தேன். ஆனால், எந்த நிகழ்த்துகலையையும் போல கதகளி நம்மை ஆட்கொள்ள நேரில்தான் பார்க்க வேண்டும். அதுவும் கதகளி ஏற்கனவே அறிமுகமான connoisseur நமக்கு எந்த அம்சங்களை உற்று கவனிக்க வேண்டும் என சொல்லித்தரவும் வேண்டும். 2016 கோவை புதிய வாசகர் சந்திப்பிற்கு அஜிதன் வந்திருந்திருந்தான். அப்போது நிகழ்ந்து முடிந்த கோட்டக்கல் கதகளி உற்சவத்தை 5 நாட்கள் பார்த்துவிட்டு பரவசத்துடன் அவன் பார்த்த கதகளிகளை பற்றி பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு கதகளி கலைஞர் ”கோட்டக்கல் சசீதரன்” நுட்பமான கதகளி முத்திரைகளையும், மனோதர்மங்களை புரிந்துகொள்வது பற்றியும் என்னென்ன சொல்லிக்கொடுத்தார் என விளக்கினான்.(இன்னும் அஜிக்கு அவர் நல்ல நண்பர்)
நீங்கள் கதகளி பார்ப்பதில் புராணங்கள் சார்ந்த அறிமுகம் எவ்வளவு அவசியம் என்பது பற்றியும், இந்து புராணங்கள், காளிதாசன் போன்றவற்றில் கதகளி ஆசான்களின் தேர்ச்சி பற்றியும், கதகளி சங்கீதத்திற்கும் கர்நாடக சங்கீதத்திற்கு இருக்கும் வேறுபாடுகள் பற்றியும் பேசினீர்கள். கதகளி பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக கதகளி திருவிழா ஒன்றை பார்க்க வேண்டும் என்ற அவசியத்தையும் கூறினீர்கள். கதகளி சார்ந்த ஆர்வம் மேலும் அதிகமாகியது.
நானும் பாரியும் கதகளியை நேரில் பார்த்தே தீர்வது என முடிவெடுத்து எர்ணாகுளித்திலிருந்து 25 km தொலைவில் இருக்கும் பனவள்ளி என்ற கிராமத்திற்கு நான்கு, ஐந்து பஸ்கள் மாறி சென்று சேர்ந்தோம். கிட்டத்தட்ட பௌராணிக கேரளத்தில் நுழைந்ததுபோன்ற அனுபவம். நவீன வாழ்க்கையின் எந்த மாலின்யமும் தீண்டாத, செழிப்பான, கிட்டத்தட்ட 1900களிலேயே நின்றுவிட்ட அழகிய கிராமம் பனவள்ளி. அங்கு உள்ள நால்பத்தெண்ணீஸ்வரம் மகாதேவன் கோவிலில் இரவு 10 மணிக்கு கதகளி தொடங்குகிறது. தற்செயலாக அஜிதன் தன் நீண்ட மகாராஷ்ட்ரா பயணத்தை முடித்துவிட்டு அங்கு வந்திருந்தான். நாங்கள் இதை எதிர்பார்க்கவே இல்லை. தன் நீண்ட பயணத்தை முடித்துக்கொண்டு ஊருக்கு திரும்பாமல் அவன் அங்கு வந்து எங்களுக்கு கதகளி ரசிக்க சொல்லிக்கொடுத்தது ஒரு நிமித்தம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.
அன்றைய கதகளி- பாலி விஜயம், கிராதம். கதகளி பார்க்க ஆட்களே இல்லை. கதகளி நடன்மார்க்கு அது பொருட்டே இல்லை என்பதுபோல, உற்சாகமான நீண்ட மேளப்பதத்துடன் கதகளி துவங்கியது. நான், பாரி, அஜிதன் மூவர் மட்டும்தான். மேலும் ஒருவர் இருந்தார். வந்தவுடனேயே தன் துண்டை விரித்து தூங்கிவிட்டார். எனக்கும் பாரிக்கும் 24 அடிப்படை கைமுத்திரைகளும், தாமரை, வண்டு, ராஜா,சிம்மம் போன்ற எளிமையான முத்திரைகள் மட்டும்தான் தெரிந்திருந்தன. ஒரு கதகளியை ரசிக்க அது போதுமானதாக இல்லை. அஜிதன் அந்த ஆட்டத்தில் வெளிப்பட்ட ஒவ்வொரு முத்திரையையும், கதகளியின் நுட்பமான improvisationகள் வெளிப்படும் பகுதிகளை விளக்க ஆரம்பித்தான்.
பாலிவிஜயத்தின் முதல் அங்கம் ராவணன் மண்டோதரியுடன் காதல் சல்லாபத்தில் இருக்கும் புகழ்பெற்ற பதிஞ்ச-பதம்(சிருங்காரப் பகுதி) “அரவிந்த விலோசனே”. அதில், மண்டோதரியை யார் முத்தமிடுவது என ராவணனின் பத்து முகங்களும் தங்களுக்குள் பூசலிட்டுக்கொள்ளும் ஒரே ஒரு வரியை மட்டும் கிட்டத்தட்ட 45 நிமிடம் ஆடுவார்கள். அந்த ஒருவரியை மட்டும் பின்னணியில் பாடகர்கள் பாடுவார்கள். அதை அஜிதன் விளக்கினான். பத்து முகங்களும் ஒன்றை ஒன்று விஞ்ச துடிக்கும், ஒன்று முன்னேற மற்றவை தத்தளிக்கும், ஒரு முகம் தன்னை முன்னேற விடாமல் தடுக்கும் மற்ற முகங்களை கோபம்கொண்டு பழிப்பு காட்டும், வசைபாடும். அஜி விளக்கவில்லை என்றால் கதகளி அறிமுகம் இல்லாதவர்களுக்கு அந்த 45 நிமிடம் முகத்தை இப்படி அஷ்டகோணலாக்கி ராவணன் என்னதான் செய்கிறான் என்றே புரியாது. இப்படி விஸ்தாரமான மனோதர்மங்கள் “பாலிவிஜயம்” கதகளியில் ஏராளமாக இருக்கின்றன.
நடுவில் கடுமையான காற்றுடன் மழை பெய்தது. மின்னிணைப்பு போய்விட்டது. வெளிச்சமோ, மைக்கோ இல்லை. அதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் நிலவிளக்கின் வெளிச்சத்தில் கதகளி கலைஞர்கள் ஆட்டத்தில் கொஞ்சம்கூட தொய்வின்றி தொடர்ந்தனர். பாடகர்கள் மைக்கே இல்லாமலேயே பாடினர். வெறும் நிலவிளக்கின் ஒளியில், வெறும் வாயால் பாடிய பாடல்கள் ஒலிக்க, கிட்டத்தட்ட 1900களில் நடந்த கதகளி ஒன்றை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை அடைந்தோம். கதகளி கலைஞர்களின் வேஷம், சிவந்த கண்கள், புஜகீர்த்திகளின் திளக்கம் போன்றவற்றை எந்த டியூப்-லைட்டும் குறுக்கிடாத வெறும் நிலவிளக்கின் வெளிச்சத்தில் பார்க்கவேண்டும். பார்த்துவிட்டால் கதகளியில் இருந்து நமக்கு மீட்பில்லை. எந்த மைக்கின் குறுக்கீடும் இல்லாத பாடகர்களின் தூய ஆலாபனை போன்ற கதகளி பதங்களும் இணையும்போது நம் வாழ்வின் மறக்கமுடியாத அனுபவம் ஒன்றை அடைந்துவிட்டிருப்போம்.
”குடிலத்திங்களும் ஜடமுடியும்” என்ற தனாசி பாடலுடன் கதகளி அதிகாலை 5:30க்கு முடிந்தது. கோவை திரும்பும்வரை நான் அஜியை விடவில்லை. ஒவ்வொரு கைமுத்திரையையும் மீண்டும் மீண்டும் கேட்டு நினைவில் நிறுத்திக்கொண்டேன். பின்னர் முத்திரைகளை புரிந்துகொள்வதற்காக மட்டும், பதிவுசெய்யப்பட்ட கதகளி ஆட்டங்களின் யூட்யூப் வீடியோக்களை பார்த்தேன். கதகளி கலைஞர் பிஷப்பள்ளி ராஜீவன் கைமுத்திரைகளை, அதன் கலைஅம்சங்களைப் பற்றி புரிந்துகொள்வதற்காக எடுத்த விரிவான வகுப்புகள் youtubeல் இருக்கின்றன. கதகளி அறிய அவை மிக உதவியானவை. ஆனால் அவை மலையாளத்தில்தான் இருக்கின்றன. மலையாளம் அறியாதவர்களுக்கு அஜி பரிந்துரைத்தது david bolland எழுதிய ”A Guide to Kathakali: With the Stories of 35 Plays” மிக உதவியான வழிகாட்டி நூல். கதகளியின் ஒவ்வொரு ஆட்டக்கதையின் சுருக்கப்பட்ட வடிவம் இந்நூலில் ஆங்கிலத்தில் இருக்கும்.
பின்னர் நான்கு வருடங்களாக 2016ல் இருந்து 2020 மார்ச் நோய்த்தொற்றுகாலம் வரை நானும் பாரியும் மாதம் ஒருமுறையாவது நேரில் சென்று விடிய விடிய கதகளி பார்ப்பதுத் திரும்பும் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. கதகளி இவ்வளவுதூரம் ஆட்கொள்ளும் போதையாக மாறும் என யாராவது முன்னர் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்க மாட்டேன். ஏதாவது காரணத்தால் ஒரு மாதம் கதகளி பார்க்க முடியாவிட்டால் வீட்டில் அனாவசியமான பூசல் ஏற்படும். அம்மாவே ஒருகட்டத்தில் பூசலுக்கு காரணம் கதகளி பார்க்காததுதான், சென்று பார்த்துவிட்டு வா என்று சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. அஜி இன்னும் குறுகிய இடைவெளியில், கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு ஒருமுறை கதகளி பார்த்துவந்தான். ஒவ்வொருமுறையும் நாங்கள் பார்த்த கதகளி பற்றி உற்சாகமாக அஜியும் நானும் ஃபோனில் பேசிக்கொள்வோம்.
நம் நண்பர்கள் தாமரைக்கண்ணன், தீபன், செல்வராணி, விக்ரம், அருள் இவர்களுடன் கதகளி பார்த்திருக்கிறோம். சென்னை கலாஷேத்ராவில் நடந்த கதகளியை செந்தில், ராகவ் இருவருடனும் பார்த்திருக்கிறேன். ஈரோட்டிலிருந்து நாங்கள் ஈரோடு கிருஷ்ணன், ராஜமாணிக்கம் என அணியாக கிளம்பி பாலக்காட்டில் கதகளி பார்த்து திரும்பியிருக்கிறோம்.
ஆனால் கதகளி அனுபவம் பற்றி ஒன்று சொல்லவேண்டும். சிலசமயம் நாம் பார்க்கும் கதகளி அவ்வளவு உவப்பான அனுபவத்தை அளிக்காது. அதற்குப் பல காரணங்கள். சிலசமயம் ஆடிட்டோரியங்களில் நடக்கும் கதகளிகளில் நல்ல கூட்டம் இருக்கும். மறைக்காத இடம் கிடைக்காமல் போனால் சரியாக பார்க்க முடியாது.
நல்ல கலைஞர்களே கூட தொடர்ச்சியான நிகழ்ச்சிகள் நடக்கும் காலங்களில் தளர்வு, சோர்வு காரணமாக தங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தமுடியாது போகும். சில சமயம் ஒரே இரவில் நான்கு, ஐந்து capsule கதகளிகள் நடக்கும். அப்படி துண்டுதுண்டான 4 ஆட்டங்களில் எந்த கதகளியும் நம்மை கவராமல் போகும் வாய்ப்பிருக்கிறது.
சில சமயம், சின்ன அரங்குகளில் கதகளி நடக்கும். ஆனால், அந்த அரங்கின் தேவைக்கு மீறிய ஸ்பீக்கர் அமைப்புகள் இருக்கும். அளவுக்கு மீறிய சத்தம் காது ஜவ்வின் அதிகபட்ச சாத்தியத்தை சோதனை செய்யும். இத்தனைக்கும் மேலாக புதிதாக கதகளி பார்ப்பவர்கள் பாலிவிஜயம், ராவணோத்பவம், கீசகவதம் போன்ற எளிதாக உள்ளே நுழைய சாத்தியமான கதகளிகளில் இருந்து தொடங்க வேண்டும். கதகளி பார்க்க ஆரம்பிப்பவர்கள் ’ நளசரிதம் நான்காம் நாள்’ போன்ற மலையாள மொழியை அதன் கவித்துவத்தை அதிகமும் சார்ந்த கதகளிகளை பார்க்கநேர்ந்தால் ”என்ன இது?” என்று தோன்றிவிடும்.
இத்தனைக்கும் பிறகு கதகளி அனுபவம் என்பது கேரளத்தின் அழகிய உள்கிராமங்களை நோக்கிய கிளர்ச்சியூட்டும் பயணம். பொதுப்போக்குவரத்து குறைவான இடங்களுக்கு வயல்கள் வழியாக, ரப்பர் எஸ்டேட்களை கடந்து 3-4 கிலோமீட்டர் நடந்தே அடைவது நல்ல அனுபவம். விடிய விடிய கதகளி பார்த்துவிட்டு டீயும் பழம்பொரியும் சாப்பிட்டுவிட்டு தூக்கக் கலக்கத்தில் ஊருக்குத் திரும்புவது மற்றுமொரு சுவையான அனுபவம். சிலமுறை நள்ளிரவிலேயே 12-1 மணிக்கு கதகளி முடிந்துவிடும். திரும்ப பஸ் இருக்காது. கோயில் திண்ணைகளில் அதிகாலை வரை தூங்கிவிட்டு குளத்தில் குளித்துவிட்டுத் திரும்புவது இன்னும் நல்ல அனுபவம்.
ஒருமுறை தீபாவளிக்கு முந்தைய நாள் கோட்டயம் அருகே அய்மனம் என்ற ஊரில் கதகளி பார்க்க சென்றிருந்தோம். எப்போதுமே கிராமங்களில் நடக்கும் கதகளிகளில் பார்க்க ஆட்கள் இருக்கமாட்டார்கள். சும்மா தலையை காண்பித்துவிட்டு சென்றுவிடுவார்கள். ஆனால், இம்முறை தீபாவளி விடுமுறை என்பதால் பலர் வந்திருந்தனர். ”நளசரிதம் மூன்றாம் நாள்” கதகளியில் நளனை பிரிந்த தமயந்தி வேறொரு சுயம்வரத்திற்கு தயாராகிறாள் என்ற செய்தியை கேட்டவுடன் கையறுநிலையில் நளன் பாடும் ”மரிமான் கண்ணி மௌலி “ என்ற புகழ்பெற்ற உருக்கமான பகுதி வந்தவுடன் சில பார்வையாளர்கள் பாடகர்களுடன் சேர்ந்து மெல்லமாக பாட ஆரம்பித்துவிட்டனர். சிலர் அதற்கு தாள போட ஆரம்பித்தனர். சிலர் கொஞ்சம் கண்கலங்கக்கூட செய்தனர். ஒட்டுமொத்த திரளே நளனாக ஆகி அழுத அந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.
கதகளியை பற்றி நீங்கள் எழுதியிருக்காவிட்டால், அஜிதனுடன் சேர்ந்து கதகளி பார்க்காமல் இருந்திருந்தால் எனக்கு நல்ல கதகளி அனுபவங்களும், கதகளி மீதான குறையாத ஈர்ப்பும் உருவாகியிருக்க சாத்தியமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.
அன்புடன்
மணவாளன்.
ஆட்டக்கதை [சிறுகதை]
கேளி [சிறுகதை]