மதம், அரசியல், அடையாளங்கள்

மரபைச் சிறுமைசெய்தல்

நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இதை எழுதியிருந்தார். அவர் தெளிவான ஆசாரவாதி. ஆனால் அவருடைய இத்தரப்புத்தான் ஆசாரவாதத்தை எதிர்ப்பவனாகிய என் தரப்பும்.

“அவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் இவர்கள் மத நிறுவனங்களில் செய்கிறார்கள் என்று சொல்லி ஹிந்து கோவில்களில் / மத கூடுகைகளில் தேர்தல் பிரச்சாரம் செய்வது தவறு. நாம் இத்தனைக் காலம் பிழைத்திருக்க காரணமே நமது ஸ்வதந்திர சிந்தனை தான். பிரச்சாரம் செய்ய விருப்பம் உடையவர்கள் களத்திற்கு வாருங்கள் . அதை விட்டு உபன்யாசம் , பஜனையில் எல்லாம் சிலேடை பேசாதீர்கள் .

காஞ்சி பெரியவர் பெயரில் ஒரு பொய். அதற்கு பிறகு கடையநல்லூர் பாகவதரின் வினோத பகவத் கீதை விளக்கம் என்று கடுப்படிக்கும் விஷயங்கள் பல.”

ஒரு மதத்தை அப்படியே அரசியல்தரப்பாக ஆக்குவதென்பது நீண்டகால நோக்கில் அந்த மதத்தை முற்றழிப்பது. மதத்தின் படிமங்களும் குறியீடுகளும் வெறும் அடையாளங்கள் அல்ல. அவை நம் ஆழுளத்தில் நிலைகொள்ள வேண்டியவை. அங்கே வளரவேண்டியவை. நம்மை கற்பனை வழியாக, உள்ளுணர்வு வழியாக முன்னெடுத்துச் செல்லவேண்டியவை. அவை நம் வீடுபேறுக்குரியவையாகவே சொல்லப்பட்டுள்ளன, தெருச்சண்டைக்குரியவையாக அல்ல.

அன்றாட அரசியலுக்காக அவற்றைப் பயன்படுத்தினால் அவை அன்றாடத்துடன் தொடர்புள்ளவையாக ஆகிவிடுகின்றன. அதன்பின் கூட்டுப்பெருங்காய விளம்பரத்திற்கும் அவற்றுக்கும் வேறுபாடில்லை. அதன் வழியாக நாம் இழப்பது பல்லாயிரமாண்டுக் காலம் அகச்செறிவூட்டப்பட்ட அவற்றின் ஆற்றலைத்தான்.

ஆன்மிகம் வேறு, மதம் வேறு. மதம் வேறு, மத அரசியல் வேறு. மத அரசியல் மதத்தை வழிநடத்துமென்றால் அது மதத்தின் மாபெரும் ஞானத் தொகுப்பை வெறும் அடையாள அரசியலின் காய்களாக ஆக்குகிறது. அரசியலின் அத்தனை பிழைகளையும் அன்றாட அயோக்கியத்தனங்களையும் மிகையுணர்ச்சிகளையும் மதத்தின்மேல் ஏற்றுகிறது.

மத நிறுவனங்களை, மதத்தலங்களை, மத அடையாளங்களை அரசியலாக்கினால் பின்னர் அரசியலில் இருந்து அவற்றை மீட்கவே முடியாது. அவற்றிலிருந்து ஆன்மிகம் வெளியேறிவிடும். ஏனென்றால் அவை மிகமிக நுட்பமாக நம் உள்ளத்தில் அமர்ந்துள்ளன. நம் கனவுகளில் நிலைகொள்கின்றன. நம் ஊழ்கத்தில் அவை பொருளேற்றம் செய்யப்பட்டு விரிகின்றன.

தியானம் செய்பவர்களுக்கு தெரியும், தாமரை என்பது சக்திநிலைகளை குறிக்கும் அடையாளம். முடிவிலாத மலர்தலின் குறியீடு. சகஸ்ரபத்மம் நோக்கிய ஊழ்கத்தில் தாமரைக்கு அளிக்கப்பட்டிருக்கும் அன்றாட அரசியல் அடையாளங்களை நம் அகத்தில் இருந்து பிடுங்கி நீக்குவது இன்று பெரும்பாடு. அத்தனை தியான மையங்களிலும் இதைச் சொல்லித்தருவார்கள்.

அத்தனை அடையாளங்களும், அத்தனை தலங்களும், அத்தனை வழிபாட்டுமுறைகளும் அவ்வண்ணம் அரசியல் அர்த்தம் பெற்றுவிட்டால் இந்துவுக்கு எஞ்சுவது என்ன?

நாம் வாக்களிப்பது நம் வரிப்பணத்தை கையாளும் உரிமையை ஒரு கட்சிக்கு அளிப்பதற்காக மட்டுமே. நாம் வீடுபேறு அடையும் வழியைக் காட்ட மரபும் ஆசிரியர்களும் உள்ளனர்.

மதம் அரசியலானால் மதத்தை இழக்கிறோம். உலகவரலாற்றில் மீளமீளக் காணக்கிடைக்கும் இந்த விஷயத்தை மீண்டும் நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-1