இந்து என உணர்தல்
இந்து என உணர்தல்- ஒரு கடிதம்
வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,
இன்று தளத்தில் “இந்து என உணர்தல்” கட்டுரையைப் படித்து சிறிது புலங்காகிதம் கொண்டு ஒரு மேம்பட்ட உணர்வெழுச்சிக்கு ஆட்பட்டேன். இக் கால சூழ்நிலைக்கு மிகவும் தேவையான ஒரு கட்டுரை. இந்து மதம் என்றால் என்ன என்று புரியாமலேயே மேம்போக்கான ஆதாரமற்ற வாதங்களை அறிவுஜீவி வேடம் புனைந்து பலர் இளைய சமுதாயத்தை குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற தெளிவான அறிவுப்பூர்வமான பகுத்தறிவுக்கு உகந்த அனுபவப் பூர்வமான கட்டுரைகளே இன்றைய தேவை.
அறிவுஜீவி வேடமிட்டு மேலைக் கைக்கூலிகள் ஒரு பக்கம் குழப்புகிறார்கள் என்றால், அதற்கு ஏற்றார் போல சில அடிப்படைவாதிகளும் தங்கள் பிற்போக்குத் தனத்தை கால மாற்றங்களைப் புரிந்து கொள்ளாமல், இன்னமும்கூட குருட்டுப் போக்கில் எதை எதையோ பேசி நிலைமையை மேலும் சிக்கல் ஆக்குகிறார்கள். அது போதாதென்று மதத்தை கையில் எடுத்து சுய அரசியல் லாபத்திற்காக
ஒரு கூட்டம் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மூன்று பேருக்குமே சனாதன தர்மத்தை பற்றி அதன் தரிசனத்தை பற்றி அதன் உன்னதங்களை பற்றி, அதன் விரிந்த தன்மை பற்றி பெரிதாக ஒரு மண்ணும் தெரியாது. உள்ளங்கை நீரை கொண்டு கடலாக்கி காட்டி கும்பி நிறைக்கும் கூட்டம்
இந்துமதம் என்பது ஏதோ பிராமணர்களுக்கும் மேல்தட்டு வர்க்கத்திற்கும் ஆதரவான ஒரு மதம் என்று திட்டமிட்டு பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்து மதம் இந்தியர்களுக்கான மதம். இந்துமதம் என்பதை சனாதன தர்மம் என்று அழைப்பதே சாலச் சிறந்தது. இது ஒரு தொகுப்பு வாழ்வியல் முறை. இந்தியாவில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமான பண்பாட்டு களஞ்சியம். பலநூறு ஞானியர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக திரண்டு வந்த மாபெரும் தத்துவ தரிசனமே, உலகம் முழுமைக்குமான பெரும் கொடையே சனாதன தர்மம். சனாதன தர்மம் என்று சொல்லும் பொழுது, இங்கே நான் இந்தியாவில் தோன்றி கொண்டும் கொடுத்தும் வளர்ந்து இன்றுவரை வந்துள்ள ஒட்டுமொத்த இந்திய வாழ்வியல் முறையை குறிப்பிடுகிறேன். இந்து, பௌத்தம், சமணம், சீக்கிய என்று வேறுவேறாக இன்று அறியப்பட்டாலும் இவை அனைத்தும் உரையாடி திரண்டு வந்துள்ள ஒன்றே இன்றைய சனாதன வாழ்வியல் முறை. இன்றைய இந்திய இந்து மதம் என்பது ஒருவகையில் இந்தியாவில் தோன்றிய அனைத்து மதங்களின் உரையாடலினால் திரண்டு வந்த ஒன்றே.
ஜாதிகள் இல்லாத ஒரு நாள் நிச்சயம் இங்கு வரத்தான் போகிறது. ஜாதிகளை காரணம்காட்டி எவர் ஒருவராலும் சனாதன வாழ்வியல் முறையை இங்கே அழித்துவிட முடியாது. ஜாதிகள் அழிவதற்கான முகாந்திரம் நிறைய இடங்களில் மிகத் தெளிவாகவே தெரிகிறது. எல்லாத் தரப்பு இளைஞர்களும் யுவதிகளும் இதை துணிந்து முன்னெடுத்து கொண்டிருக்கிறார்கள். மிக முக்கியமாக பிராமண இளைஞர்களும் பெண்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள். அந்த சமூகம் தான் கலப்பு மணங்களை அதிதீவிரமாக
ஆதரித்தும் ஏற்றும் புரட்சி செய்து கொண்டிருக்கிறது. இது மெல்ல மெல்ல மற்ற ஜாதிகளிலும் வேகமாக பரவிக் கொண்டு வருகிறது. ஓட்டு வங்கி அரசியல் மட்டும் இல்லையென்றால் ஜாதி என்றோ இன்னும் விரைவாக அழிந்து போயிருக்கும். இவர்கள் அரசியல் நடத்த ஜாதியை வைத்து கொண்டு, சனாதன தர்மத்தின் மீது பழி போடுகிறார்கள். ஆனால் விடியல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
கடந்த 100 ஆண்டுகளாக ஜாதியின் பிடியிலிருந்து இந்து மதம் வெகுவேகமாக விடுபட்டு கொண்டிருப்பதை நாம் கண்கூடாக காணலாம். கால மாற்றங்களுக்கு ஏற்றவாறு இந்து மதம் தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்ளும் வல்லமை கொண்டது.அதன் மெய்யியல் தத்துவங்களும் தரிசனங்களும் உலகம் முழுமைக்கும் ஆனது. ஜாதி, இனம், மொழி, தேசம், ஏன்? மதம் கூட கடந்தது சனாதன தர்மம்.
எனது பிரத்யட்ச அனுபவத்தை கொண்டு திட்டவட்டமாக இதை நான் கூற முடியும். இன்று இந்தியாவில் உள்ள மொத்த சனாதன தர்ம துறவிகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களே. ராமகிருஷ்ண மடமும், சிவானந்த ஆசிரமும், சின்மயா மிஷனும், ஆர்ஷ வித்யா குருகுலமும் என இன்னும் எத்தனையோ பல அமைப்புகள் முறையாக துறவு அளிப்பதற்கு முன்பாக எந்த ஜாதி எனக் கூட கேட்பதில்லை. இவ்வளவு ஏன் சில உபநிடதங்களும் விவேகசூடாமணியும் துறவுக்கான அடிப்படைகளில் ஒன்றாக பிராம்மண குடிப்பிறப்பை சுட்டும் இடங்களை, பல ஆச்சாரியார்கள் வெகு சுலபமாக அவைகள் அந்த பழைய காலகட்டத்திற்கு வேண்டியவைகளாக இருந்திருக்கலாம் ஆனால் இன்றைக்கு அவைகள் தேவையில்லை என இயல்பாக சொல்கிறார்கள். இன்று எல்லாத் தொழில்களையும் எல்லோரும் செய்ய முடியும் என்கின்ற பொழுது வர்ண பிரிவினையே அர்த்தமற்றுப் போகிறது என்று கூடுதல் விளக்கம் அளித்து கடந்து செல்கிறார்கள். ஒரு சில ஆசார மற்றும் பழமை வாதிகளின் மடங்களை தவிர்த்து பெரும்பாலான அமைப்புகள் குடிப்பிறப்பு விஷயத்தில் முற்போக்காகவே செயல்படுகின்றன.
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி எந்த ஒரு ஞானிக்கும் பிறப்பு மூலம் காணததாகவே நமது மரபு இருந்து வந்துள்ளது. தன்னை அறிந்த ஒருவன் எந்த வர்ணமாக இருந்த போதும் துறவு பாதையைத் தேர என்றைக்குமே சனாதன தர்மம் பூரண அனுமதி அளித்திருந்தது. அப்படி உதித்தவர்கள்தான் பலப்பல ஞானியர்கள் இங்கே. மடத்தின் பரம்பரை சொத்துக்களை எவ்வகையிலேனும் காக்க முயன்று கொண்டிருக்கும் சில காவல் பூதங்களை, ஜாதிவாதம் பேசுகின்ற ஆசார வாதிகளை ஞானிகள் என்ற கணக்கில் எடுத்துக் கொள்வது ஏற்புடையதல்ல. ஏனெனில் அத்தகையவர்கள் சனாதன தர்மத்தின் துறவுக்கான அடிப்படை இலக்கணம் கூட அறியாதவர்கள். தன்னலத்தின் பொருட்டு விலை போனவர்கள்.
ஜாதி என்ற ஒன்றை மட்டும் கொண்டு சனாதன தர்மத்தை தாக்குவதை போன்ற முட்டாள்தனம் வேறு இல்லை. உங்கள் கட்டுரை இதை வெகு அழகாக தோலுரித்துக் காட்டியுள்ளது.
சற்று காட்டமாக எதிர்வினை ஆற்றி உள்ளேன் என்பதை அறிவேன். சில பூனைகளை, பல பச்சோந்திகளை இது உறுத்தக் கூடும். எனினும் இதன் தேவை கருதி இது இவ்வண்ணமே அமைவதே நன்று. புத்தரின், விவேகானந்தரின், வள்ளலாரின், ரமணரின் நாராயண குருவின் வழி வந்த எவனும் இதையே சொல்வான். ஆயிரம் கோடி கைகள் மறைத்து நின்றாலும் சனாதன தர்மத்தின் ஞான தரிசனத்தின் ஒளி என்றும் மறைவதே இல்லை. அதன் ஒரு சிறு அங்கமாக உள்ளே இருக்கின்ற, அதைச் சாராத, மற்றும் வெளியிலிருந்து அதை அழிக்க நினைக்கின்ற மூடர்களின் மூச்சுக்காற்றால் அது அணைந்து விடுமா என்ன?
மிக்க அன்புடன்
ஆனந்த் சுவாமி