கதைகளில் இருவகை உண்டு. நேரடியான ஒரு உணர்வுநிலையை அல்லது கருத்துநிலையை அல்லது ஸ்பிரிச்சுவலிட்டியை சொல்லும் கதைகள். வெறும் புறவுலகச்சூழலை மட்டுமே சொல்வதுபோன்ற பாவனையில் அவற்றின் உள்ளுறையாக ஆழ்ந்த கருத்துநிலையையோ உணர்வுநிலையையோ ஸ்பிரிச்சுவாலிட்டியையோ சொல்லும் கதைகள். என் ரசனைக்கு இரண்டாவது கதைகள்தான் மேலும் உவப்பானவையாக உள்ளன. ஏனென்றால் இவற்றில்தான் நாம் நம்பி உண்மையென்றே நினைத்து வாழும் ஓர் உலகம் உள்ளது. இங்கே உள்ளவை எல்லாம் நாமே அனுபவித்து அறிந்தவையாக உள்ளன.
திரை அப்படிப்பட்ட ஒரு கதை. அதிலுள்ள நிகழ்வுகள் வரலாற்றில் நடந்தவை. கண்ணெதிரே அவை நிகழ்பவை போல வாசிப்பில் நம்மை வந்தடைகின்றன. அந்த யதார்த்தமும் நுணுக்கமான சித்தரிப்புக்களும் கதை சொல்லும் ஸ்பிரிச்சுவாலிட்டியை வாழ்க்கையனுபவமாக ஆக்கிவிடுகின்றன. திரை கதையில் ஒருபக்கம் தாயுமானவரின் ஆன்மவிடுதலை மறுபக்கம் ராணிமீனாட்சியின் தூய பிரேமை. எது ஸ்பிரிச்சுவல் என்று என்னால் சொல்ல முடியவில்லை. இரண்டுமே ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
ஜே.சத்யநாராயணன்
***
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
அன்பும், வணக்கமும். நலமறிய ஆவல்.
ஒரு சிறுகதை எத்தனை வரலாற்று மனிதர்களை, அவர்கள் வாழ்க்கையைப் பேசுகிறது. மகாராணியானால் என்ன, அவளும் பெண்தானே. “நாராயணன் என் மனசிலே தேனை ஊறவைச்சா நான் அதை துப்ப முடியாது” – நிறைவேறாக் காதலின் சோகத்தில் உழல்பவர்கள், தான் நேசிக்கிறவரின் நினைவின் இனிமையில் மட்டும்தான் என்றும் மூழ்கி இருப்பார்கள். மகாராணி மீனாட்சி தாயார் ஆசைப்பட்டதனாலேயே நாடும், குடியும் வேண்டாம்னு ராமேஸ்வரம் சென்று விட்டவர் தாயுமானப் பிள்ளை. தான் விரும்பும் மனிதர் எதிரிகளிடம் சிக்காமல் தன் ஆட்சி எல்லைக்குள் உயிரோடு அவரைக் கொண்டு வரவேண்டுமென்று விரும்புகிறார். உயிரோடு இருக்கிறார் என்பதே போதுமானது என்பதற்காகத் தூது அனுப்பும் போது தன் உணர்வுகளை திரை விலக்கி மகா ராணியார் வெளிப்படுத்தும் தருணங்கள் கவித்துவமாக இருக்கிறது.
மீனாட்சித் தாயார் தாயுமானப் பிள்ளை மீது தன் ஆசாபாசங்களை தூதர் பங்காருவிடம் விளக்கிச் சொல்லும்போது, முது தாசி நாடகீய பரவசத்தை வெளிக்காட்டும் இடங்கள் பச்சாதாபம் தான் தோன்றுகிறது அந்த தாசிப் பெண் மீது. தூதர் பங்காரு மதுரைக்கும், ராமேஸ்வரத்துக்கு சென்று தங்கும்போது தாசிகள் வீடுதான் புகலிடம் பாதுகாப்புக்கும், உடல் காம இசைகளுக்கும். தாசியா பிறந்ததால் ஆண்களை மகிழ்விக்க கடமைப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெண்ணுமே திரை போடப் பட்ட பெண்கள் தான். அவர்கள் உணர்வுகள், ஆசாபாசங்கள் எங்கும் பொருட்படுத்தப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.
“போர்னா ஒரு வியாபாரம். எல்லா வியாபாரமும் போர்தான்” – அரசாட்சி எப்போதும் சூழ்ச்சி, தந்திரம், சதிவேலைகள் சூழ்ந்தது. ஒரு பெண்ணாக மீனாட்சித் தாயார் தன் திருமணத்திலிருந்து மரணம் வரை எத்தனை சூழ்ச்சிகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இடைவிடாப் போரினால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்படுகிறது மன்னர்கள் ஆட்சி காலத்தில்.
’மாரியை நம்பலை, மாதேவரை நம்பலை, அந்த மகாராசி பெயரைச் சொல்லி பிள்ளைபெத்தோம்’ இந்த பாட்டுவரிகள் போதும் ராணி மங்கம்மா வின் நல்லாட்சியைப் பறைசாற்ற. மற்ற மன்னர்கள் படையெடுப்பால் நிலையான, நிம்மதியான ஆட்சி சாத்தியமில்லாமல் போகிறது எந்த ஒரு ஆட்சிக்கும்.
“குறையில்லா நீரோட்டம் உள்ள வைரம் வீட்டுக்கும் நாட்டுக்கும் உள்ளதில்லை, அது தெய்வத்துக்கு உள்ளது” என்பற்கேற்ப தாயுமானப்பிள்ளை மருதை, சிராப்பள்ளி ராஜ்யப் பிரவர்த்திகள் விட்டு சைவமும் சித்தாந்தமும் படிச்சு திருமுறை ஓதி சீவனம் செய்து கொண்டிருக்கிறார் ராமேஸ்வரம் தபோவனம் நந்தனத்தில். கல்வியில் மகாப் புலமைப் பெற்றவர். அவர் நந்தனத்தில் குடில் அமைத்து தங்கி இருக்கும் சூழல் ரம்மியமாக இருக்கிறது. தூதர் பங்காரு தாயுமானப் பிள்ளை மீது மகாராணியின் காதலை எடுத்துச் சொல்லி ஊர் திரும்பச் சொல்லும்போது, அவர் மனத் திரை விலகி ராணியை நினைத்து நெகிழுமிடம் அருமை.
“இந்த கான் படைகள் பெருவெள்ளம் போன்றவை. அவர்களுக்கு நாடில்லை, மண்ணில்லை, வாழ்க்கையே போர்தான். பிறந்து சாவதுவரை போர்க்களத்திலேயேதான் இருக்கிறார்கள்”. நவாப்பு கான் பொய்சத்தியம் பண்ணி மீனாட்சி தாயாரைச் சதி செய்து சிறைபிடிக்கும் போது அவன் முகத் திரை விலகுகிறது. திரைகூட இல்லை, சதி வ(வே)லை.
மூன்று திரைகள், அந்த திரைக்குப் பின்னால் இருக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கைகளுமாய் “திரை” சிறுகதை வாசிக்க நெகிழ்ச்சியான அனுபவம்.
என்றும் அன்புடன்,
முத்து காளிமுத்து
அன்புள்ள ஜெ
கந்தர்வன், யட்சன், திரை, எரிசிதை, படையல் ஆகிய கதைகளை தொடர்ச்சியாக வாசித்தேன். நான் கௌபாய் கதைகளை விரும்பி வாசிப்பேன். சாவும் வாழ்வும் பின்னிப்பிணைந்திருப்பதனால் அங்கே எல்லாமே ஆழமானவையாக ஆகிவிடுகின்றன என்று தோன்றியதுண்டு. இந்த காலகட்டத்திலும் அப்படித்தானா என்ற எண்ணம் வந்தது. குறிப்பாக எல்லா கதைகளிலும் சாவு ஒரு பெரிய விஷயமாக இருந்துகொண்டிருக்கிறது.
எம்.சந்திரமோகன்
***
அன்பிற்குரிய ஜெ,
கந்தர்வன் கதையை இப்போதுதான் வாசித்தேன். அதிலிருக்கும் அந்த அதிர்வு கதை என்பதை தாண்டியது. அந்த வாணிய இளைஞனாகிய அணைஞ்சபெருமாளின் கதாபாத்திரமே சாவுநோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக தோன்றியது. அப்படிச் செத்தால்தான் அவனுடைய கதைக்கு முழுமை வரும். அவன் வயதாகி சீக்காகி சாகமுடியாது. ஏனென்றால் அவன் கந்தர்வன். அப்படிப்பட்டவன் ஒரு பெரிய காற்றுபோல. அவன் மற்றவர்களையும் இழுத்துச் செல்வான். அந்த பெண்ணை அவன் கொண்டுபோனதில் ஆச்சரியமே இல்லை
எம்.குமரவேல்