இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்

இந்து என உணர்தல்

அன்புள்ள ஜெ

கட்டுரைக்கான எதிர்வினைகளில் ஒன்று இது. வாசுதேவன் என்பவர் எழுதியது.

ஒவ்வொரு மதத்திலும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புகள் திரட்டப்பட்டுள்ளன. இதை கற்க/ரசிக்க ஒருவர் தன் மதத்தோடு இணைத்துக்கொண்டு பெருமிததோடு அணுக வேண்டும் என்பது பிழையான வாதம். வாடிக்கன் போப் ஆண்டவர் ஆலய கூரையில் டாவின்சி வரைந்த ஓவியத்தை ரசிப்பதற்கு நான் கிறிஸ்துவனாக அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதில்லை. இஸ்லாமியர்களின் ‘காலிகிராஃபி” சித்திர எழுத்தை புரிந்துகொள்ள நான் முஸ்லீமாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.

கலை,இலக்கியத்திற்கு அடிப்படை ‘சுயம் அழித்தல்’. அடையாளத்தை மறுப்பதில்தான் கலையின் பல பரிமாணங்கள் புலப்படும். பண்டைய இந்து மதத்தின் கலைச்செல்வங்களை அணுகுவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டும் என்ற நியதியெல்லாம் இல்லை.

*

இந்தக்கட்டுரையில் இந்துமதத்தில் பாராட்டபடவேண்டிய அம்சங்களை அவர் எழுதியிருந்தாலும் மேற்கிலிருந்து நாம் கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை என்ற தொனியும், அனைத்தும் இந்திய பூமியில் இருக்கிறது என்ற சாராம்சமும் மிக ஆபத்தானது

*

உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன். ஏனென்றால் இது எனக்கும் உண்மை என்று தோன்றியது.

என். ராஜ்குமார்

 

அன்புள்ள ராஜ்குமார்,

நம்மவர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் ஒரு விவாதத்தில் தொடர்புடனோ இல்லாமலோ பத்துப்பதினைந்து ஆங்கில அதிபாண்டித்திய நூல்களை மேற்கோள் காட்டுவார்கள். ஆனால் ஓர் எளிய கருத்தை நேரடியாக்ப் புரிந்துகொள்ளாமல் மொண்ணையாக முழக்கிக் கொண்டுமிருப்பார்கள்.என்னதான் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அந்த ஆங்கில அதிபாண்டித்திய ஆசிரியர்களுக்கு இதைவிடப்பெரிய அவமதிப்பு வேறில்லை.

முந்தைய கட்டுரையில் இந்துமதத்தை புரிந்துகொள்ள இந்துவாக இருக்கவேண்டும் என எங்கே சொல்லியிருக்கிறேன்? இந்துவாக இருக்கும் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளவேண்டும் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்? நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் என்கிறேன். ஒருவர் பெருமிதம் கொள்ள வேண்டுமென்றால் எதன்பொருட்டு பெருமிதம்கொள்ளலாம் என்கிறேன். அவ்வளவுதான்.

இந்து மதமென்பது சாதி மட்டுமே என ஒருவர் சொல்லும்போது ஒரு சிந்திக்கும் மனிதனுக்கு, கற்பனைகொண்ட படைப்பாளிக்கு, ஆன்மிகத்தேடல் கொண்டவனுக்கு சாதி போன்ற சமூக ஆசாரங்களுக்கு அப்பால் இந்துமதம் எவ்வகையில் பொருள்படுகிறது என்கிறேன். அதை அவர் ஏற்கவில்லை, அவருக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லை என்றால் அவர் இந்து எதிர்ப்பாளராகவோ மறுப்பாளராகவோ நீடிக்கலாம். மதம்கூட மாறலாம்.

*

இன்னொரு கடிதம். பழங்குடிகளை இந்துக்கள் என்கிறேன் என ஒருவர் எகிறிக் குதிக்கிறார். கிறித்தவர் அவர். சரி, பழங்குடிகளை எவரும் மதமாற்றம் செய்யக்கூடாது என சொல்ல உங்களால் முடியுமா என்று கேட்டேன். அதற்கு மேலும் வசைகள்.

பழங்குடிகள் எல்லாம் இந்துக்கள் என எங்கே சொல்லியிருக்கிறேன்? அவர்கள் தங்களை இந்துக்கள் என்று சொன்னால் இந்துக்களே. நான் சொல்லியிருப்பது இந்துமதத்தின் அடிப்படைக் குறியீடுகளுக்கு பழங்குடிப் பண்பாட்டில், வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கும் வேர்களைப் பற்றி மட்டுமே.

*

நான் ஐரோப்பிய அல்லது வெளிநாட்டு சிந்தனைகளை எங்கே நிராகரிக்கிறேன்? இந்து அல்லது இந்திய சிந்தனைமுறை மட்டும் போதும் என்று எங்கே சொல்லியிருக்கிறேன்? எழுதியதை படிக்கமாட்டார்கள், எழுதாதவற்றை படிப்பார்கள். அவற்றுக்கு பதில்சொல்லுவார்கள்.

நான் ஐரோப்பிய சிந்தனை மரபை- இலக்கியக் கலைமரபை என் வேர்நிலமாக ஒவ்வொரு கட்டுரையிலும் குறிப்பிடுபவன். அதைப்பற்றிய நிராகரிப்புகள் எதையும் எந்நிலையிலும் ஏற்காதவன். என் ஞானாசிரியர்கள் பலர் ஐரோப்பிய அறிவொளிக்காலத்தில் தோன்றியவர்கள். இந்து மெய்யியலைக் கற்கவேகூட அவர்களில் சிலரையே வழிகாட்டியாகக் கொள்கிறேன்.

அந்தக் குறிப்பிட்ட கட்டுரையிலேயே ஐரோப்பியச் சிந்தனைமரபு – பண்பாட்டு மரபு எந்நிலையிலும் நமக்கு அன்னியமானதாக ஆகக்கூடாது என்று சொல்லியிருக்கிறேன். அது நம்மைச் சுரண்டிய ஐரோப்பாவின் சிந்தனையும் பண்பாடும்தான் என ஒருவர் சொல்வார் என்றால்கூட அதை ஏற்கமுடியாது என்று சொல்லியிருக்கிறேன்.

அச்சிந்தனைகளை , அப்பண்பாட்டை ஐரோப்பாவின் இலட்சியவாதமாகக் கண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும், ஐரோப்பாவின் நடைமுறை அரசியல் நாம் அவற்றை அணுகுவதற்கான நிபந்தனையாக அமையலாகாது என்றே எப்போதும் சொல்லியிருக்கிறேன். உண்மையில் என் கட்டுரையின் மையப்பேசுபொருளே அதுதான்.

ஓர் இந்து ஏசுவைக்கூட மறுக்கவியலாது என்பதே என் எண்ணம். எதன்பொருட்டும் கிறிஸ்தவ ஆன்மிகத்தை மறுக்கலாகாது என்று அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். எப்போதும் சொல்லியும் வருகிறேன்.

கவனியுங்கள், இதையெல்லாம் இன்னொரு கட்டுரையில் சொல்லவில்லை, அதே கட்டுரையிலேயே சொல்லியிருக்கிறேன். என் கட்டுரைகளை நீளமாக எழுதுவது இதனால்தான். அக்கட்டுரையிலேயே வரப்போகும் எல்லாவகையான திரிபுகளையும் முன்னரே கண்டு விளக்கம் அளித்திருப்பேன். ஆனாலும் விளக்கம் அளித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பது தமிழ்நெறி.

ஒரு மிகச்சிறிய விஷயம் நான் சொன்னது. அதை திரும்பத் திரும்ப திரிக்கவே நம் அறிவுச்சூழல் பயிற்றுவிக்கிறது. எதையுமே விவாதித்துப் புரிந்துகொள்ளும் சூழல் இங்கில்லை. ஆகவே நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டு அமைதியடைந்து விடுவது என் வழக்கம்.

*

மதம் பற்றிய விவாதங்களில் எப்போதும் நான் சொல்லிவருவது இது. பலமுறை சொன்னதை இங்கு மீண்டும் சொல்கிறேன். ஓர் இந்து இந்துமதத்தின் பெயரால் இழைக்கப்பட்ட சாதிக்கொடுமைகளுக்காக, ஒரு கிறித்தவன் பைபிளின் பெயரால் ஆசிய ஆப்ரிக்க தென்னமேரிக்க நாட்டுக் குடிகள் ஒழிக்கப்பட்டமைக்காக, அதன் மதமாற்ற வெறியின் உலகளாவிய பண்பாட்டு அழிப்புக்காக, ஓர் இஸ்லாமியன் இஸ்லாமின் பெயரால் நடந்த பண்பாட்டு அழிப்பு மற்றும் போர்களுக்காக வெட்கப்படவேண்டும். அந்நிலையிலேயே அவன் அந்த மரபை ஏற்றுப்பேச தகுதி கொண்டவன் ஆகிறான். நான் பேசுவது அதற்கப்பால் மதங்கள் அளிக்கும் பண்பாட்டுத் தொடர்ச்சி பற்றி மட்டுமே.

*

இத்தகைய எந்த விவாதத்திலும் மையத்தை மழுப்பும் பேச்சுக்கள் உடனடியாக எழுகின்றன. அதிலொன்றுதான் இந்த ’அடையாளப்படுத்திக் கொள்ளுதல்’ பற்றியது.

’இந்துப்பண்பாடு என்பது சாதியை உருவாக்கி நிலைநிறுத்துவது மட்டுமே’ என்ற பிரச்சாரத்திற்குப் பதிலாக, அது அழியவேண்டும் என்ற கூச்சலுக்கு எதிர்வினையாக அதன் தத்துவ- பண்பாட்டு கொடைகளைப் பற்றிப் பேசுகிறேன். இந்துப் பண்பாடு அழியவேண்டும் என்று சொல்பவர்களின் அறிவின்மை அல்லது உள்நோக்கம் பற்றிய விளக்கம் அது.

இதில் விவாதிக்க வருபவர் முதலில் இதற்குப் பதில் சொல்லவேண்டும். இந்துப் பண்பாடு மானுடச்செல்வம் என ஏற்கிறீர்களா, அது அழியலாகாது என ஒப்புக்கொள்கிறீர்களா?

ஆனால் அதை அப்படியே கடந்து, அந்தப் பதிலை ‘ இந்துவாக அடையாளப்படுத்திக் கொள்ளுதல்’ என்பதாக மாற்றிக்கொண்டு, அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டிய தேவையில்லை என விவாதத்தை எடுத்துக் கொண்டுசெல்வது ஒரு ஜாலம். இப்படித்தான் இது எப்போதும் நடைபெறுகிறது.

இந்துப் பண்பாட்டின் கொடையை, மானுடத்திற்கு அதன் தேவையை உணர்ந்த ஒருவர் அது அழியவேண்டும் என்று சொல்ல மாட்டார். அழியவேண்டுமெனச் சொல்பவர் அதிலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவும் முடியாது. அது அவருடைய பெரும் அறிவுத்தள வறுமையையே காட்டுகிறது. இந்தத் தரப்பு இப்போதைக்கு மறுக்கப்படவில்லை அல்லவா? சரி, மேலே செல்வோம்.

இந்துப்பண்பாடு மானுடச்செல்வம், அது நீடித்து வாழவேண்டிய ஒரு மரபு என ஒருவர் ஏற்றுக்கொண்டபின், அதை ஆழ்ந்தறிய முயலும்போது, அவர் அம்மரபின் உள்ளிருந்து அதைப் பார்க்கிறாரா வெளியே நின்று பார்க்கிறாரா என்பது முற்றிலும் வேறு விவாதம். நான் உள்ளிருந்து அணுகுகிறேன் என்று மட்டுமே நான் சொல்கிறேன்

’கற்க’ முனையும் ஓர் ஆய்வாளர் வெளியே நின்று பார்க்கமுடியும். வெளியே நின்று பார்ப்பது மேலும் உகந்ததும் கூட. ஆகவேதான் நான் எப்போதும் வெளியே நின்று பார்க்கும் ஐரோப்பிய ஆய்வாளர்களை தகவல்களுக்கு முதன்மையாக நம்புகிறேன்.‘ரசிப்பதற்கு’ம் ஒருவர் வெளியே நிற்பது தடை அல்ல.

ஆனால் படைப்பாளி, சிந்தனையாளர் அவ்வண்ணம் ‘வெளியே’ நின்று பார்த்தால் அவருக்கு பொருட்படுத்தும்படி ஒன்றும் கிடைக்காது. மதத்தில் பண்பாட்டில் மட்டுமல்ல எதிலும் வெளியே நின்று பார்ப்பவரால் பொருட்படுத்தும்படி எதையும் எழுத முடியாது, உருவாக்க முடியாது. இதுதான் வேறுபாடு.

ஏனென்றால் தத்துவம், கலை, இலக்கியம் மூன்றும் ‘அறிதல்நிலை’யில் இருந்து வருவன அல்ல. ‘உணர்தல்நிலை’யில் இருந்து வருபவை. குறிப்பாகச் சொல்லப்போனால் ஆழ்படிமங்கள் மற்றும் அவற்றிலிருந்து உருவாகும் படிமங்களைச் சார்ந்து இயங்குபவை. அச்செயல்பாடுகளுக்கு அந்த ஆழ்படிமங்களை, படிமங்களை ‘அறிந்தால்’ மட்டும் போதாது. ’ரசிப்பது’ மட்டும் போதாது. அவற்றை ஆழுள்ளம் உள்வாங்கிக் கொள்ளவேண்டியிருக்கிறது. அதற்கு நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. எவ்வகையிலேனும்.

ஒரு பண்பாட்டின் கொடைகளை முற்றாக உள்வாங்கிக் கொள்ள, அவற்றினூடாக உளம் வளர அதன் பகுதியாக ஆகவேண்டியிருக்கிறது. அந்த அடையாளப்படுத்திக் கொள்ளலால்தான் நாம் மிகச்சாதாரணமாக இருந்தாலும் ஒரு வரலாற்றுச்சிறப்பு மிக்க இடத்தில் நின்று மெய்சிலிர்க்கிறோம். ஒரு குறியீட்டால் உளம் உந்தப்படுகிறோம். அந்த உணர்வை அடைந்த எவரும் நான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடியும்.

நம் பிரச்சினை என்னவென்றால் ஒருவர் தன் மொழி சார்ந்து அந்தச் சிலிர்ப்பை அடைந்தால் அது ஏற்றுக்கொள்ளப்படும். அந்த அடையாளம் போற்றப்படும். அங்கே எவரும் போய் அடையாளமின்மையின் புனிதம் பற்றி பேசுவதில்லை. மதம் சார்ந்து அதை அடைந்தால் மட்டுமே இங்கே முத்திரைகுத்தி வசைபாடப்படும்.

‘தன்னேரில்லா தமிழ்’ என்ற வரி எனக்கு அளிக்கும் அதே பேருணர்வை ‘அசதோமா சத்கமய:”வும் அளிக்கலாம் என்பதே நான் சொல்ல வருவது. அது ஒரு முழுமையுணர்வு, நாம் நமக்கென அடையும் ஒரு தன்னிலை.

*

அடையாளங்கள் தனக்குத் தேவையில்லை என ஒருவர் சொல்கிறார் என்றே கொள்வோம். அதை நான் எங்கே அய்யா மறுக்கிறேன்? அடையாளங்களை மறுப்பதோ அடையாளமில்லாதவராக இருப்பதோ அவருடைய தெரிவு. இந்து மெய்ஞான மரபிலேயே அனைத்து அடையாளங்களையும் துறப்பவர்கள் பல்லாயிரவர் உண்டு.

ஒருவர் மானுடப் பண்பாட்டுச் செல்வம் ஒன்றை அழிக்கவேண்டும் என்று சொல்லும்போது அது எத்தகைய முக்கியத்துவம் கொண்டது என்று சொல்கிறேன். உடனே அடையாளத்தை முன்வைக்கிறேன் என்கிறார். அடையாளத்தை வலியுறுத்துகிறேன் என்கிறார். என்ன மோசடி வாதம் இது!

*

’கலை, இலக்கியத்திற்கு அடிப்படை சுயம் அழித்தல், அடையாளத்தை மறுத்தல்’ போன்ற மகாவாக்கியங்களெல்லாம் எங்கிருந்து வருகின்றன, எந்த இலக்கியமேதையால் சொல்லப்படுகின்றன என்று தெரியவில்லை. உண்மையிலேயே அவற்றைச் சொன்னவர் படைப்பிலக்கியச் சாதனைகள் செய்த ஒருவர் என்றால் அவருடைய தரப்பாக மட்டும் அதை கருத்தில்கொள்ளலாம், அவ்வளவுதான்.

கலையிலக்கியங்களுக்கு அப்படி மாறாநெறிகளென ஏதுமில்லை. பொதுவாக, நாம் உலகக் கலையிலக்கியத் தளத்தில் பார்க்கும் அத்தனை பெரும்படைப்பாளிகளும் தங்களை குறிப்பிட்ட பண்பாடுகளுடன் ஆழமாக பிணைத்துக் கொண்டவர்களே. ’ஒற்றைமொழியுடன், ஒற்றைப் பண்பாட்டுடன் தன்னை ஆழமாக பிணைத்துக்கொள்ளாத பெரும்படைப்பாளிகள் இல்லை’ என்றே விமர்சன மரபு மீளமீள குறிப்பிடுகிறது.

அத்தனை பெரும்படைப்பாளிகளும்  தங்கள் மரபில் இருந்து தங்கள் கனவுகளை உருவாக்கிக் கொண்டவர்களே. அவர்கள் தொழிற்படும் மொழியே அந்த முதற் தன்னிலையை அவர்களுக்கு அளித்துவிடுகிறது. அவர்கள் அதற்குமேல் தங்கள் பண்பாடுகளை ஆழ்ந்தறிந்து, அவற்றை தங்கள் அகமெனக்கொண்டு , தங்கள் கனவுகளினூடாக முன்செல்பவர்கள். தங்கள் தன்னிலைகளை உருவாக்கி அழித்து வளர்பவர்கள்.

அப்படைப்பாளிகளின் வழியாகவே அப்பண்பாடு முன்னகர்கிறது. அவர்களையே அது தன் அடையாளமாகக் கொண்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் இங்கிலாந்து என எப்படிச் சொல்கிறோமோ அப்படியே ஹெமிங்வேயின் அமெரிக்கா என்றும் சொல்லமுடியும்.  அவர்களை அப்பண்பாடுகளில் இருந்து பிரித்தறிய இயலாது. அப்பண்பாடுகளைக் கருத்தில்கொள்ளாமல் அவர்களை அறியவும் இயலாது.

ஆனால் அரிதாகச் சிலர் அடையாளங்களை மறுப்பவர்களாக, சுயமற்றவர்களாக இருக்கவும் கூடும். அது விதியல்ல, விதிவிலக்கே. ஆனால் மறுப்பதும் கடப்பதும்கூட அப்பண்பாட்டின்மீதான எதிர்வினைகள்தான். பலசமயம் அவர்களின் மறுப்புக்கள் ஒருவகை பண்பாட்டு எதிர்வடிவங்களாக இருக்கும். அவர்களின் இன்மைகள் இருத்தலின் தலைகீழ் வடிவங்களாக இருக்கும். அவர்களை அப்பண்பாட்டிலேயே இருக்கும் விதிமீறலின் தொடர்ச்சிகள் என்று எளிதில் வரையறை செய்துவிடமுடியும்.

தனித்த பண்பாட்டு அடையாளம், பண்பாட்டுப் பின்னணி இல்லாத இலக்கியப் படைப்பாளி, கலைஞர் என எவரும் இன்றுவரை இந்த புவியில் செயல்படவில்லை. படைப்பிலக்கியம் தனக்கான பொருளுற்பத்தியை அந்த பெரும் பகைப்புலத்தில் இருந்தே உருவாக்குகிறது. அது இல்லையேல் படைப்பிலக்கியம் வெறும் சொற்கள் அன்றி வேறல்ல.

*

இந்த ‘சுயமழித்தல்’ போன்றவை எல்லாம் பொத்தாம்பொதுவான சொற்கள். இலக்கியவாதிகள் அவற்றை கவனமில்லாமல் பயன்படுத்தலாகாது. நவீனத்துவத்தின் தொடக்க காலகட்டத்தில், இருத்தலியலாளர் சிலரால் சொல்லப்பட்டவை இச்சொற்கள்.

மொழியே ஒரு பண்பாட்டுவெளி எனும்போது பண்பாடற்ற நிலை என ஒன்றில்லை. மரபற்ற நிலை என்றும் ஒன்றில்லை. ஆகவே சுயத்தை அழிக்க எவராலும் இயலாது. அவ்வாறு சுயம் அழிய ஒருவர் சித்தராக, பரமஹம்சராக நிர்விகல்ப சமாதியில் இருக்கவேண்டும். அல்லது மூளைச்சிதைவுநோயிலும் இருக்கலாம்.

சுயம் [Self] போன்ற சொற்களை இந்தவகை விவாதத்தளத்தில் நான் பயன்படுத்துவதில்லை. என் சொல் தன்னிலை. [subjectivity]. அது ஒரு காலப்புள்ளியில் ஒரு சொற்களனில் திரண்டுவரும் ஒரு தன்னுணர்வுநிலை. அதை இந்திய மரபின் அஹம் என்னும் சொல்லுக்குச் சமானமானதாகக் கொள்ளலாம்.

தன்னிலை இல்லாத நிலை என ஏதுமில்லை. பல தன்னிலைகள் உள்ளன. மொழி உருவாக்கி அளிக்கும் தன்னிலைகள் முதல் பற்பல தன்னிலைகள் மனிதர்களில் திகழ்கின்றன. அந்த தன்னிலைகளுக்கு இடையேயான மோதலும் இயைபுமே ஒருவரில் வெளிப்படும் படைப்பு வெளிப்பாடு என்று சொல்லலாம்.

மரபுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அது உருவாக்கி அளிக்கும் தன்னிலையை அப்படியே எடுத்து தலைமேல் சூடிக்கொள்வது அல்ல. எந்த சிந்திக்கும் மனிதனும் அதைச் செய்வதில்லை. என் கட்டுரை இறுதியில் மிகத்தெளிவாகவே அதை சொல்கிறது. வழிகளை, நூல்களை, படிமங்களை மட்டுமே மரபு அளிக்கிறது என.தனக்கான தன்னிலையை உருவாக்கிக் கொள்வதற்கான மூலப்பொருட்களான கருத்துக்களையும் படிமங்களையும் தேடியே சிந்திப்பவன் மரபை அணுகுகிறான், அதனுடன் இணைந்துகொள்கிறான்.

தன்னிலை என்பது நாம் ஏற்று அணிந்துகொள்ளும் அடையாளம் அல்ல. நம்மில் உருவாகிக்கொண்டே இருப்பது. அழிந்து அழிந்து உருவாவது. [அத்வைத மரபின்படி ஒருவன் முதல்முழுமையின் பகுதியாக தன்னை அறுதியாக உணர்வதே முழுத்தன்னிலை. அதைக் கடந்து சென்று தன்னிலையழிவது வீடுபேறு]

*

’கிறிஸ்துவைத் தெரிந்துகொள்ள ஒருவன் கிறிஸ்தவனாக இருக்கவேண்டும் என்பதில்லை’ என்பதுபோன்ற வரிளை விவாதங்களில் எதிர்கொள்வது மிகக்கடினம். கிறிஸ்தவம் ஒரு நிறுவன மதம். அதில் உறுப்பினரானால் மட்டுமே கிறிஸ்துவை புரிந்துகொள்ள முடியும் என்று சிந்திக்கும் எவரும் சொல்ல மாட்டார்கள்.

ஆனால் கிறிஸ்து என்னும் ஆன்மிகப் பெருநிலையை உணர்ந்தவர், அகத்தே கிறிஸ்துவை எண்ணி உளமுருகும் வாய்ப்புள்ளவர், கிறிஸ்துவுடன் இணைந்துள்ள ஆழ்படிமங்களால் தன் கனவுகளை நிறைக்கக் கற்றவர் மட்டுமே கிறிஸ்துவை உண்மையாக உணரமுடியும்.

அப்படி உளமுருகும் ஒருவரை கிறிஸ்தவர் என்று சொல்லலாம் என்றால் அவர் கிறிஸ்தவரே. அவ்வகையில் நானும் என்னை கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்ள தயங்குவதில்லை. எந்தமேடையிலும். கீதையுரைகளில்கூட அதைச் சொல்லாமல் இருந்ததும் இல்லை.

இந்து என்று சொல்வதும் அந்த வகையான ஓர் உணர்வுநிலைதான்.  இந்துமதத்தின் ஏதேனும் அமைப்பில் உறுப்பினராவது அல்ல. இந்து மரபின் கனவுகளுடன் தன்னைப் பிணைத்துக்கொள்வது, தன் ஆழுள்ளத்தை அதன் படிமங்களாலும் உணர்வுகளாலும் நிரப்பிக்கொள்வது, அதனூடாக தன்னை கண்டடைந்து உருவாக்கி முன்னேறுவது.

இந்து என உணர்தல் என நான் சொல்வது ஒருவர் அறுதியாக நான் ஓர் இந்து என உணர்வதை அல்ல. நான் ஓர் இந்து மட்டுமே என உணர்வதை அல்ல. இந்து என்னும் கண்வழியாகவே அனைத்தையும் பார்ப்பதை அல்ல. என் தன்னிலைகளில் ஒன்று என இந்து என்று உணர்வதை. அதனூடாக எனக்குக் கிடைக்கும் மாபெரும் சிந்தனைப்பரப்பை, உள்ளுணர்வுப் பெருவெளியை அடைவதை.

*

மிக உறுதியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நவீன இலக்கிய- சமூக சிந்தனையின் வெற்றுத்தர்க்கப் பரப்பில் இதற்கு ஏற்பு குறைவாகவே இருக்குமென நான் அறிவேன். ஆனால் தான் உணர்ந்த தர்க்கமற்ற ஒன்றைச் சொல்வதற்கு இருக்கும் துணிவே எழுத்தாளனின் அடிப்படை.

மிக இளம்வயதிலேயே உள்ளத்துள் நுழையும் ஆழ்படிமங்கள் ஒருவரின் கற்பனைப் பெருக்கு, உள்ளுணர்வுப் பயணம் ஆகிய இரண்டுக்கும் மிக மிக உதவியான கருவிகள். அவற்றை அவன் தனக்கே உரியமுறையில் உருமாற்றிக் கொள்வதனூடாகவே தனக்கான படிமங்களை அடைகிறான். அது இலக்கியம் கலை ஆகியவற்றுக்கு மிக அடிப்படையானது.

அதைவிட அவை ஊழ்க [தியான] மரபில் மிக முக்கியமானவை. மிகமிக எளிதாக பேருணர்வுகளை முழுமைநிலையை நோக்கிக் கொண்டுசெல்லக் கூடியவை. அவை அறுதியானவை என்று சொல்லவரவில்லை. அவை மிகமிக முக்கியமான கருவிகள் என்று சொல்ல வந்தேன்.

ஒருவன் இந்துவாகப் பிறந்து இளமையில் இந்துச்சூழலில் வாழ்வான் என்றால் அவன் அடையும் ஆழ்படிமங்கள் அவனை கடைசிநாள் வரை உள்ளிருந்து வழிகாட்டுவதைக் காண்பான். அவற்றில் மேல்கீழ் என ஏதுமில்லை. எல்லாமே நிகரானவையே. எனக்கு விஷ்ணுவோ புத்தரோ எவ்வளவு ஆழத்தில் இருப்பவர்களோ அதைவிட நீலி ஆழத்திலிருப்பவள் என்பதை என் வாசகர் உணர்வார்கள். நீலியே என் வழித்தேவதை என அமைந்தாள்.

இதை புரிந்துகொள்ளாதவர்கள் விட்டுவிடுங்கள். உங்களுக்குரியதல்ல இந்த கருத்து. இந்த இடத்தில் ஏற்கனவே கொஞ்சம் குழம்பியிருப்பவர்களுக்காக மட்டும் இதைச் சொல்கிறேன்.

*

இதற்குமேல் இதை விவாதிக்கமுடியாதென நினைக்கிறேன். இதற்குமேலும் புரியாதவர்களுக்கு எதையுமே சொல்லிவிடமுடியாது.

ஜெ

 

முந்தைய கட்டுரைஅநீதிகளின் மேல் கலாச்சார கேரளம்
அடுத்த கட்டுரைதிரை, அறமென்ப – கடிதங்கள்