கல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு

துள்ளுதல் என்பது…

இனிய ஜெயம்

ஒரு சிறிய பயணம். அதிகாலை குளிர் முகத்தை வருடும் வசதி கொண்ட ஜன்னலோர பேருந்து இருக்கை. உங்கள் தளத்தின் இன்றைய பதிவுகள் வழியே கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைகள் வாசித்தேன்.

நீண்ட நாள் கழித்து உங்கள் பரிந்துரை வழியே வாசிக்கப்புகுந்த கவிதைத் தொகுப்பு.  கடந்த சில மாதங்களாக குறிப்பாக கொரானா முடக்க சூழலில் நான் கவனமாக தவிர்த்த பல விஷயங்களில் ஒன்று, வாசிச்சு சொல்லுங்க என்று எனக்கு அளிக்கப்பட்ட புதியவர்களின் கவிதைகள்.சில கவிதை நண்பர்கள் திமிரு புடிச்சவன் என்று கூட உள்ளுக்குள் கருதி இருக்க நியாயம் உண்டு.  என்னளவில் இந்த கவிதை விஷயத்தில் மட்டும் என் அகம் மிகுந்த ஜாக்கிரதை கொண்டு விடுகிறது.

முதல் காரணம் மொழி. மொழி வழியே இலக்கியம் கண்ட உச்ச சாத்தியம் என்றால் அது கவிதைதான். ஆகவே ஒரு சிறந்த கவிதை அது மொழி வழியிலான  வெளிப்பாடு என்ற வகையில் மிகுந்த நேர்மறை தாக்கம் அளிப்பது.

அதே போல முதிர்ச்சி குன்றிய கவிதை அதன் மொழி அளிக்கும்  தாக்கம் வழியே மிகுந்த எதிர்மறை தாக்கத்தையும் அளிக்கும்.

தொடர் வாசிப்பின் வழியே ஒவ்வொரு வாசகனுக்கும் அவனது அக மொழி இயக்கத்தின் லாவகம் ஒன்று அவனுள் செயல்பட்டுக்கொண்டு இருக்கும். ஒரு நல்ல கவிதை அந்த லாவகத்துக்கு கிரியா ஊக்கி ஆக மாறுவதை போல, ஒரு முதிராக் கவிதை அந்த லாவத்தின் இயக்கத்தை இடை முறித்துவிடும் ஒன்றாக மாறி விடும். அடுத்த பாடல் பாட தயாராக இருக்கும் ஒரு பாடகனுக்கு குரல் சுருதி விட்டுப் போவதை போன்றது அது. மீண்டும் அக மொழியின் லாவக இயக்கத்தை மீட்க ஒரு வார கால தொடர் நவீன செவ்வியல் வாசிப்பு தேவையாகும்.

ஆக தொடர் வாசிப்பின் பகுதியாக என்னால் மோகன ரங்கன், இசை, தேவதேவன் போல மொழி திகைந்த ஆளுமைகளின் புதிய தொகுதிக்குள் ஐயமின்றி நுழைய முடியும். புதிய கவிஞரின் தொகுதி எனில் தளராத தயக்கம் ஒன்றே என் முன் நிற்கும்.

இரண்டாவது காரணம் நீங்கள் சொல்வது மாட்ரிக்ஸ் பட ஸ்மித் போல எல்லாமே ஒரே கவிதைகள். எல்லா கவிஞர்களுக்குமே ஒரே பிரச்சனை. இல்லாவிட்டால் மத்திய அரசை மல்லாக்க கவிழ்க்க வேண்டிய தேவைக்கு துணை நிற்கும் கவிதைகள், எதிர் கவிதைகள், பக்கவாட்டு கவிதைகள் என பீதிகளின் வெவ்வேறு வகை மாதிரிகள். இத்தகு நிலையில்தான் பரிந்துரைகளின் முக்கியத்துவம் கூடுகிறது.

அந்த பாதுகாப்பான பரிந்துரை பாதை வழியே நான் சென்றடைந்த நல்ல கவிதைத் தொகுப்பு என்று கல்பனா ஜெய்காந்த் அவர்களின் கவிதைத் தொகுப்பை சொல்வேன். பல வகையிலும் வேணு வெட்றாயன் அவர்களின் அலகில் அலகு கவிதைத் தொகுப்புடன் ஒப்பிட்டு உரையாடி ரசிக்கவேண்டிய நூல். எழுமொழியால், வடிவ கச்சிதத்தால், புதிய புதிய  சொல்லிணைவால், தனித்தன்மை கொண்ட உணர்வுக் களத்தால் இந்த இரு தொகுதிகளையும்  ஒப்பு நோக்கி உரையாடல் ஒன்றை திறக்க முடியும்.

ஒரே ஒரு இழை மட்டும் உடனடியாக சுட்ட தோன்றுகிறது. வேணு அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் ஆண் என்ற (அல்லது சிவம்) தன்னிலையில் காலூன்றி எழுந்து பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறப்பது. அதே போல கல்பனா அவர்களின் கவிதைகளின் ஆத்மீக தளம் பெண்மை எனும் (அல்லது சக்தி) தன்னிலையில் துவங்கி பால் பேதமற்ற வெளியில் எழுந்து பறக்கிறது.

குறிப்பாக கல்பனா அவர்களின் தொகுதியின் முதல் இரண்டு கவிதைகளின் ஆத்மீக ஆழம். 44, மற்றும் 48 தவ நிலை என்பதன் இரு வேறு நிலைகளின் அற்புதக் கவிச் சாட்சியம். அகவயமாக ஆழம் நோக்கி  பயணிக்கும் கவிதைகள் போலவே புற வயமாக முன்செல்லும் கவிதைகளும் அதன் சாரத்தை  மொழியால் கூறு முறையால் சிரமம் ஏதும் இன்றி நிலை கொண்ட கவிஞரின் ஆளுமை கொண்டு சென்று  தொட்டு விடுகிறார்.

அக உலகு, அகமும் புறமும் இணைந்த நிலை புற உலகு என்ற இந்த மூன்று நிலைக்கும் கல்பனா அவர்களின் மொழி ஒரு ஊஞ்சல் போல இயல்பாக அங்கும் இங்கும் சென்று வருகிறது.32,63,20 இந்த மூன்று கவிதைகளை இதே வரிசையில் வாசித்தால் மேற்ச்சொன்னா ஊஞ்சல் அசைவின் அழகை அறிய இயலும். உணர்வின் துல்லியத்தை அதன் வசீகரம் குன்றாமல் கையளிக்கிறது மொழியால் கூறுமுறையால் கச்சிதமான 67 ஆவது கவிதை.

இந்தத் தொகுப்பில் எனது கவிதை என்று இது நானேதான் என்று உளம் பூக்க வைத்த கவிதை 15 ஆவது கவிதை. எல்லா கவிஞர்களும்

கவிதை என்ற தலைப்பில் ஒரு கவிதையேனும் மனதிற்குள் எழுதி அழித்திருப்பார்கள். நான் தனிப்பட்ட முறையில் கவிதை எனத் தலைப்பிட்டு அதன் கற்பனை சாத்தியத்தில் திளைத்த கவிதை 61 ஆவது கவிதை. மொழி வழியே போத மனம் கடந்து , அப்போத மனம் துளைத்து கவிதை சென்று தொடும் அந்த பரம்பொருளின் இணையடி, கவிதை எனும் அந்த கலை வடிவின் செயல் முறை எதுவோ அதுவான கவிதை,

நேராக நுழைந்த

கத்தி

செவி வழி

ஆன்மாவைத் தொட்டு

சொல்லாய்த்

தீயாய்

தலை வணங்கத்

திகழ்வதே

அது

பார்வையோ

வாசனையோ

அற்றவனின்

பாதமே

சென்னியில் அமைவது.

கவிதை

//சொல்லாய்த்

தீயாய்

தலைவணங்கத்

திகழ்வதே அது//

இல்லையா?.

கல்பனா ஜெயகாந்த் அவர்களுக்கு மென் மேலும் கவி சிறக்க வாழ்த்துக்களும் என்றென்றும் என் அன்பும்.

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரைமேகமாலை