ஞாநி- நடுநிலையின் அறம்

நண்பர் சரவணன் விவேகானந்தன் அவர்களின் பதிவு இது. வாட்ஸப்பில் பகிரப்பட்டது. ஞாநி என்ற ஆளுமையின் முகம் இதில் தெரிகிறது. அவருடன் நல்லுறவும் மோதலும் கொண்டவனாகவே எப்போதும் இருந்தேன். அவருக்கு கலைச்செயல்பாடுகள் பிடிகிடைப்பதில்லை, கலைஞர்களையும் என்பது என் கணிப்பு. ஆனால் ஒருவகையான போராட்ட உணர்வுடன் தான் உணர்ந்த அறத்தை முன்வைத்தவர்.
இக்குறிப்பில் கவனிக்கத்தக்கது இன்றைய சமூக ஊடகச்சூழல் உருவாக்கியிருக்கும் ஒரு குறிப்பிட்ட மனநிலை. ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையின் ஆதரவாளராக இருந்தால் அவர் என்ன செய்தாலும் கூடித்திரண்டு அவரை ஆதரிக்கிறார்கள். அது அக்கருத்தியலுக்கான ஆதரவாகவும் உண்மையைச் சொல்பவர் எதிர்தரப்பினராகவும் கட்டமைத்துக்கொள்கிறார்கள். வசைபாடி இழிவுசெய்கிறார்கள்.
இதில் இன்றைய எந்தக் கட்சிசார்புகளும் கருத்துநிலைகளும் விதிவிலக்கு அல்ல. நடுநிலை என்ற சொல்லை அழித்தொழிப்பதையே இன்று எல்லா தரப்பினரும் சேர்ந்து ஒரு பொதுத்திட்டமாகக் கொண்டிருக்கிறார்கள். ஞாநி பொதுவாக திராவிட இயக்க – மார்க்ஸிய இயக்கச் சார்புள்ளவர். ஆனால் தன் உளமறிந்ததைச் சொல்ல தயங்கியவரல்ல. அதற்காக முன்பும் அவர் சார்புகொண்டிருந்த தரப்பினராலெயே சாதி சார்ந்து வசைபாடப்பட்டவர்.
ஞாநியின் குரலை நினைவுறவேண்டிய தருணம் இது.
 
இதை எழுதாமல் கடந்து போகவும் முடியும்…. ஆனால் ஏனோ இதை எழுத வேண்டும் என்று தோணுகிறது. காரணம், ஞாநி இறந்த பின்னும், அவர் வந்து விளக்கம் அளிக்க முடியாது எனும் நிலையிலும் இந்த பிரட்சனையில் அவர் மேல் குற்றம் சுமத்தி சென்ற வருடம் கூட என் நண்பர்கள் எழுதினார்கள். அதற்க்கு பதிலளிக்காமல் கடந்தே வந்தேன். எனவே இதை இன்று எழுத அவர்கள் காரணமாகிறார்கள்.
இது 7 ஆண்டுகளுக்கு முன்பான கதை. 2014 ம் ஆண்டு.அன்று மிக பிரபலமாக இருந்த (இன்றும் பிரபலமா என்று நான் அறியேன்) ஒரு திராவிட மருத்துவரின் கர்பமாக இருந்த மனைவி வீட்டில் கழிவறைக்கு சென்றபோது தவறி விழுந்து இறப்பு என்று முதல் செய்தி வந்தது. சமூக வலைத்தளமே அந்த குறிபிட்ட மருத்துவரின் பிரபலத்தால் பரபரப்பானது…
இரண்டாவது வந்த செய்தி, Ectopic Pregnancy தான் அந்த பெண்ணின் இறப்புக்கு காரணம் என்று சொன்னது. இத்தனைக்கும் கணவன்/மனைவி இருவருமே மருத்துவர்கள்.
அதன்பின்பு சில நாட்கள் கழித்து இறந்தவரின் சகோதரி தம் சகோதரியின் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறையில் புகார் அளித்தார், பேஸ்புக்கில் எழுதினார். பின் அவர் குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகம் வரை சென்று சம்பந்தபட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று புகார் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் ஞாநி இது சார்ந்த செய்தியை தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அவ்வளவுதான், திராவிட ஆதரவாளர்கள் அவர் மேல் பாய்ந்தார்கள், என் நண்பர்களும். இதில் ஞாநி அந்த செய்தியை பகிர்ந்து அதை கவனப்படுத்தியற்க்கு உள்நோக்கம் கற்பித்தார்கள். அந்த மருத்துவர் ஞாநியுடன் ஒரு பிரட்ச்சனை சார்ந்து கடுமையாக விவாதித்ததற்கு பழிவாங்கத்தான் ஞாநி இந்த பிரட்ச்சனையை கவனப்படுத்துகிறார் என்று ஞாநியை திட்டி தீர்த்தார்கள்.
சம்பவம் நடந்து சில வாரங்கள் ஆகிவிட்ட நிலையில் எதோ ஒரு வலுவான காரணமே பாதிக்கபட்டவர்களை கலெக்டர் ஆபீஸ் வரை இந்த விவகாரத்தை கொண்டு செல்ல வைத்திருக்கும். கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்கப்பட்டு, பத்திரிகைகளில் வந்த செய்தியை ஞாநி பகிர்ந்ததில் எந்த தவறும் இல்லை என்று நான் வாதாடினேன். நண்பர்கள் என் மேல் கடும் கோபம் கொண்டார்கள்.
நாம் “கடவுள்” இல்லை. உண்மை எது என்பதை நாம் அறியோம், சந்தேகமற்ற ஒன்றாக இருந்தால், யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இதில் சந்தேகிக்க காரணங்கள் உள்ளன, என்ன என்ன எல்லாம் Prima facie இருக்கிறது என்று சொல்லி எனவே இரு தரப்பு குரல்களும் கேட்கபடவேண்டும்தான். அதைத்தான் இன்று ஞாநி செய்கிறார். எனவே அதை கவனப்படுத்தும் எல்லா உரிமையும் ஞாநிக்கு இருக்கிறது, நமக்கு தெரிந்தவர், நண்பர் என்பதால் ஒருதரப்பு மட்டுமே ஒலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு, இறந்தவரின் சகோதரி சொல்லுவது போல “உண்மை வெல்லட்டும்”, என்று சொன்னேன்.
அதன்பின் போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் எல்லாம் வந்தது. இறப்பு Ligature strangulation, கயிற்றால் கழுத்து நேரிக்கபட்டு, உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்கவிடாமல் செய்து,உடல் இயக்கம் முடக்கப்பட்டு இறப்பு நடக்க பெற்றதாக, உடல் காயங்கள் இறப்பிற்கு முன் போராட்டம் நடந்ததை குறிக்கிறது என்று கூறப்பட்டது.
ஆனால் அப்போதும் நண்பர்களுக்கு ஞாநி மேல் இருந்த கோபம் குறையவில்லை, ஞாநியை தற்காத்ததற்காக என் மீதும் கோபம் கொண்டார்கள். இன்பாக்ஸில் வந்து “உள்வட்ட தகவல்”களை சொல்லி மருத்துவர் குற்றமற்றவர், ஞாநி வன்மத்தில்தான் இதை செய்கிறார் ஞாநியை நான் தற்காத்தது மிகவும் தவறு என்றார்கள். அவர்கள் சொன்ன ஒவ்வொரு “உள்வட்ட” தகவலும் எப்படி பிழையானது என்று சொன்னேன். சென்ற வருடம் கூட இதை முன்வைத்து ஞாநி மீது குற்றம் சுமத்தி போஸ்ட் போடடார்கள்.
இன்று, அந்த பெண் மருத்துவர் இறந்த வழக்கில் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டு அந்த டாக்டர் கணவருக்கும், மாமியாருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருக்கிறது.
அவர்களுடனான அந்த விவாதத்தை ஞாநி இப்படி சொல்லி முடித்தார்.
என்னைப் படிக்காமல் போவதால், பொருட்படுத்தாமல் போவதால் உங்களுக்கு பெரிய நஷ்டம் எதுவும் இல்லை. எனக்கும் இதில் ஏதும் நஷ்டம் இல்லை. இதனால் நம் இருவர் வாழ்க்கையிலும் எந்த பாதிப்பும் இல்லை. என் நிலைப்பாட்டிலும் எந்த மாற்றமும் இல்லை. என் மனசாட்சி தெளிவாகவே உள்ளது. காலம் எப்போதும் எது நீதி எது நியாயம் என்பதை நிரூபிக்கும், அப்போது நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும். நன்றி. -ஞாநி
முந்தைய கட்டுரைகேளி, அறமென்ப- கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழில் மெய்யியல் நாவல்கள்