‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஆறாவது நாவல் ‘வெண்முகில் நகரம்’. என்னைப் பொறுத்தவரை ‘வெண்முகில் நகரம்’ என்பது, எண்ணற்றோரின் பெருவிழைவுகள் வான்மேகங்களெனத் தனித்தலையும் கனவுவிண்ணகம்.
‘மேகம்’ என்பதுதான் என்ன? வானில் தனித்தனியே பங்கு வைக்கப்பட்ட துண்டு நிலங்கள்தானே! அவை இணைவதும் உதிர்ந்து பிரிவதும் ஊழின் விளையாட்டே! தனித்துக் கிடக்கும் சிறுநிலங்களையும் நல்மனங்களையும் இணைப்பதும் இணைந்திருக்கும் பெருநிலத்தைப் பங்கிட்டுப் பிரிப்பதுமே ‘வெண்முகில் நகரம்’ நாவலின் மையச் சரடு.
‘வெண்முகில் நகரம்’ என்பது, திரௌபதி உருவாக்க உள்ள இந்திரபிரஸ்தமே. ஆனால், பாரதவர்ஷத்தை ஆள நினைக்கும் ஒவ்வொரு சக்கரவர்த்திக்கும் சக்கரவர்த்தினிக்கும் கனவில் உருக்கொண்டுவிட்ட ஒரு பெருநகரமே அது. ஒருவகையில் அது அவர்களின் பெருவிழைவுகளின் ஒட்டுமொத்த சித்திரம்.
முகில்கள் ஒன்றுடன் ஒன்று இணைவதும் பிரிவதும் இயல்பு. அவற்றின் இணைவுக்கும் பிரிவுக்கும் எந்த வரையறைகளையும் நம்மால் வகுத்துவிட முடியாது. இந்த நாவலில், மானுட மனங்கள் ஒன்றுடன் ஒன்றோ அல்லது சிலவற்றுடன் பலவோ இணைவதும் பிரிவதும் மீண்டும் இணைவதுமாகத் தொடர்ந்து ஏதோ ஒரு வகையிலான முறைமையில் அல்லது முறைமையை மீறிய விதங்களில் அல்லது முன்னரே வகுத்துவிட முடியாத ஓர் ஒழுங்கில் செயலாற்றுகின்றன.
அவற்றின் இணைவுகளையும் பிரிவுகளையும் புரிந்துகொள்ள முயல்வது ஊழின் ஆடலைப் புரிந்து பயில்வதற்கு ஒப்பானதே. அதை முற்றறிந்தவர் இந்தப் பெருநாவலுக்குள் ஒருவர்தான் இருக்கிறார். அவர்தான் இளைய யாதவர். இந்த நாவலில் முதன்மையான தருணங்களில் மட்டும் அவர் தன்னை வெளிப்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த கதையொழுக்கை ஊழுக்கு ஏற்ப திசை திருப்பியவாறே இருக்கிறார். ‘மகாபாரதம்’ எனும் மாபெரும் அறக்கப்பலின் ‘சுக்கான்’ அவரின் கையில்தான் இருக்கிறது.
அஸ்தினபுரியை எந்தச் சிக்கலுமின்றி இரண்டாகப் பிரிப்பதும் திருதராஷ்டிரனின் முன்பாகப் பாண்டவர்களையும் கௌரவர்களையும் கைக்கோத்து, இணைந்து நிற்கச் செய்வதும் அவரின் சொல்லாற்றலே! அவற்றுக்குரிய தக்க தருணங்களை முன்னுணர்ந்து, அவற்றின் திசையில் அனைவரையும் இழுத்துச் செல்வதும் அவரே. எல்லாம் ஒழுங்கான பின்னர் அங்கிருந்து யாருமறியாமல் மென்முகில்போல மெல்ல விலகிச் செல்வதும் அவரே.
கொற்றவையின் மானுட வடிவமே திரௌபதி. அவளின் ஆறு கரங்களும் ஆறு பருவங்கள் என்று கொள்ளலாம். தன்னுடைய ஐந்து கணவர்களையும் அவள் தன் கைகளுக்கு ஒருவராகப் பிடித்திருக்கிறாள். ஆறாவது கை முற்றிலும் அவளுக்குரியது. அவள் தன் ஐந்து கைகளில் தன் கணவர்கள் ஐவரையும் ஐந்து படைக்களமாகவே கொண்டுள்ளாள்.
மானுடக் கொற்றவையான திரௌபதியின் படைக்களங்களே அந்த ஐவர். ஐந்துவிதமான தன்மையும் ஆற்றலும் கொண்ட அந்த ஐந்து படைக்களங்களே, ஐந்து விதமான பேராற்றல் உடைய அந்த அதிமானுடர்களே அவளின் வலிமையும் பாதுகாப்புமாகும். ஐம்பூதங்களை அடக்கிய ஆறாம் பூதமான அஸ்தினபுரியை நோக்கி எழுந்துள்ளாள் திரௌபதி.
குந்தி தேவி முன்னாளில் தன் மகன்கள் ஐவரையும் தன் படைக்களமாகத்தான் கொண்டிருந்தார். ஆனால், திரௌபதியின் வருகைக்குப் பின்னர் குந்தி தேவி தன் ஐந்து மகன்களைக் கொண்டு, திரௌபதி எனும் அந்த மானுடக் கொற்றவைக்குப் பலிபூசைகள் பலசெய்து, தெய்வக்கொற்றவையாகவே திரௌபதியை எழச் செய்துவிடுகிறார்.
இந்த நாவலில் இரண்டு முதன்மையான கதைமாந்தர்கள் அறிமுகமாகியுள்ளனர். ஒருவர் சாத்யகி. மற்றொருவர் பூரிசிரவஸ். இருவருமே நம்மைப் போன்ற எளிய மானுடர்களே!. இங்கு ‘நாம்’ என்று நான் குறிப்பிடுவது ஆண், பெண், இருபாலர் ஆகிய முத்தரப்பினரையும்தான். சாத்யகி, பூரிசிரவஸ் ஆகிய இருவரும் ஒருபோதும் தன்னிகரற்ற தலைவர்களாக மிளிரப்போவதில்லை. அதனாலேயே அவர்களை நான் நம்மைப் போன்றவர் என்கிறேன். அந்த இருவரில்தான் நம்மை நாம் முழுதாக அடையாளம் கண்டுணர முடிகிறது.
எந்தப் பயனையும் கருதாது தன்னை இளைய யாதவரிடம் அடிமையாக்கிக்கொள்ளும் சாத்யகி. கொலுக்கொம்பைப் பற்றிக்கொண்டு முன்னேறிவிடுவதற்காகத் தன்னைக் கௌரவர்களிடம் அணுக்கராக்கிக்கொள்ளும் பூரிசிரவஸ்.
நம்முள் சிலர் சாத்யகியாகவும் பலர் பூரிசிரவஸாகவும் இருப்பது இயல்பே. அவர்கள் இருவரும் நமக்காகவே படைக்கப்பட்ட எளிய மானுட நெஞ்சங்கள். அதற்காகவே, அவர்களின் குணநலன்களை நம்மைப் போன்றே படைத்தமைக்காகவே எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களுக்கு நாம் கடமைப்பட்டவர்கள்.
சாத்யகி, பூரிசிரவஸ் ஆகியோரின் செயல்களின் வழியாகவும் அதனால் அவர்கள் அடையும் எதிர்விளைவுகளைக் கண்டும் நாம் உலகியல் பேருண்மைகளின் குறுக்குவெட்டுத் தோற்றங்களை நமது அகக்கண்களால் கண்டுணர்வோம். அவை நம்மை நாமே இந்த உலகியலிலிருந்து கடைத்தேற்றிக்கொள்ள உதவும். ‘சாத்யகி கண்டடைந்துள்ள ‘கர்மயோகமே’ சிறந்த வழி’ என்பது, என் கணிப்பு.
சாத்யகி போல இறைவனிடமே தன்னை முழுதளித்தவர்களும் உண்டு. பூரிசிரவஸ் போல வல்லோரிடமே தன்னை அடகுவைத்துக்கொண்டவர்களும் உண்டு. சாத்யகி கர்மயோகி. பூரிசிரவஸ் செயல்வீரர். சாத்யகி தெய்வங்களால் வாழ்த்தப் பெற்றவர். பூரிசிரவஸ் தெய்வங்களால் விளையாடப்படுபவர். அதனாலேயே சாத்யகியை நாம் நமக்கு முன்னால் உள்ள முகம்பார்க்கும் கண்ணாடியில் தெரியும் நமது பிம்பமாகவும் பூரிசிரவஸை அந்தப் பிம்பத்தின் நிஜ உருவான நாமாகவும் நாம் அறிகிறோம்.
நம்மைப் போன்ற எளிய மானுட உள்ளம் என்றும் தெய்வத்தால் விளையாடப்படும் பூரிசிரவஸ் போன்றோரையே விரும்புகிறது. பூரிசிரவஸின் ஒவ்வொரு வெற்றியின் போதும் நமது உள்ளம் துள்ளுகிறது. அவனின் ஒவ்வொரு தோல்வியின் போதும் நமது உள்ளம் கண்ணீர் வடிக்கிறது. பூரிசிரவஸ் கதைமாந்தர் ஒருவகையில் நாமாகிவந்த நாம். அதனால்தான், அவரின் வெற்றியும் தோல்வியும் நமக்குரியதாகவே நம் மனம் உணரத்தொடங்கிவிடுகிறது.
பூரிசிரவஸின் ஒவ்வொரு விழைவும் நமக்குரியதே! அவன் தோற்றாலும் வென்றாலும் நம்மவனே! நமது பகற்கனவுகளின் ஒட்டுமொத்த உருவமாகவே அவன் இருக்கிறான். அதனாலாலேயே அவன் நம்முடைய கலையாக் கனவாகிவிடுகிறான். நம் ஒவ்வொருவருக்குள்ளும் துள்ளிக்கொண்டிருக்கும் இலட்சிய உருவம் அவன். எளிய மானுடர்களின் உண்மை உருவம் அவன். அவன் அடையும் ஒவ்வொரு தலைக்குனிவும் ஒவ்வொரு அகவெழுச்சியும் நாம் நம் வாழ்வில் விரும்பியும் விரும்பாமலும் அடையக்கூடியதே!. அதனாலேயே அவன் நமக்கு மிகவும் அணுக்கமானவனாகிவிடுகிறான்.
சாத்யகியும் எளிய மானுடர்களால் விரும்பப்படக் கூடியவன்தான். ஆனால், அவனின் நோக்கம் செலுத்தப்பட்ட அம்புக்கு நிகரானது. அதனாலேயே அவன் நோக்கம் பிழைபடுவதில்லை. பூரிசிரவஸின் நோக்கம் அல்லது நோக்கங்கள் ஆவநாழியில் அடுக்கப்பட்ட அம்புகளுக்கு ஒப்பானவை. அவற்றுக்கான தருணம் வாய்க்கும்போது மட்டுமே அவை பூரிசிரவஸால் ‘பதற்றத்துடன்’ பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுக்குரிய இலக்கினை நிறுவுவதில்தான் ஒவ்வொரு முறையும் பூரிசிரவஸ் தடுமாறிவிடுகிறான். அவன் தன் முடிவுகளை எடுப்பதில் ஒவ்வொருமுறையும் காலம்தாழ்த்திவிடுகிறான். உண்மையில், ‘தன் முடிவுகள்’ என்று ஏதுமே அவன் வாழ்வில் இல்லை. இதை அவன் இறுதிவரையில் உணர்வதே இல்லை.
காலத்தின் குதிரைக்கு அவன் ஒரு கடிவாளம் மட்டுமே. குதிரைக்கும் குதிரையோட்டிக்கும் இடையே சில தருணங்களில் தொய்ந்து, சில தருணங்களில் இறுகியும் நிற்கும் கடிவாளம். ஊழே அவனை அசைக்கிறது. அவனறியாமலேயே அவன் அசைகிறான். காலக்குதிரை குதிரைக்காரனுக்கு ஏற்பவும் அவனுக்கு எதிராகவுமே ஒவ்வொரு முறையும் தன் கால்களை எடுத்துவைக்கிறது.
பேரரசி தேவயானி, பேரரசி சத்யவதி, யாதவ அரசி குந்திதேவி, பாஞ்சாலத்து இளவரசி திரௌபதை என்ற இந்த நால்வரிலும் தனிக்குணமான ஒன்று மட்டுமே ஒரே இசைமையுடன் குடிகொண்டுள்ளது. அது சக்கரவர்த்தினிகளுக்குரிய நிமிர்வு.
ஒருவேளை அம்பை அஸ்தினபுரியின் அரசியாகியிருந்தால் மொத்த ஆட்டமும் முன்பே முடிவுக்கு வந்திருக்கும். அது தவறியதால், அவளுருவில் திரௌபதை அஸ்தினபுரிக்குள் நுழைகிறாள்.
பேரரசி சத்யவதி அஸ்தினபுரியை ஆளும்போது அவருக்கு மனத்தளவில் இடையூறு செய்பவர்களாக அம்பிகையும் அம்பாலிகையும் இருந்தார்கள். அவர்களைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் தேவிகையும் விஜயையும். பேரரசி சத்யவதியும் யாதவ அரசி குந்திதேவி இவர்களைப் புறக்கணித்தபடியேதான் தம்முடைய பெரும்பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
காந்தார அரசி காந்தாரிக்குப் பானுமதி அமைந்ததைப் போலவே யாதவ அரசி குந்திதேவிக்குத் திரௌபதை. யாதவ அரசி குந்திதேவிக்கும் காந்தார அரசி காந்தாரிக்கும் இடையே நீறுபூத்த நெருப்பாக அன்பும் வெறுப்பும் இருப்பதைப் போலவே திரௌபதைக்கும் பானுமதிக்கும் இனி இருக்கக் கூடும். காலந்தோறும் ஊழ் காலத்தின் களத்தில் சரியான வகையில்தான் எதிரெதிர்க்காய்களை நிறுவிவிடுகிறது. அவற்றின் வழியாகவே முடிவற்ற களமாடல் நிகழ்கிறது.
அஸ்தினபுரி இரண்டாகப் பங்கிடப்படுவதை விளக்குவதாகவே இந்த நாவல் அமைக்கப்பட்டது என்றாலும்கூட, பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மணப்பெண் தேடும்பொருட்டு நிகழும் அனைத்துத் திட்டங்களும் இறுதியில் ஒட்டுமொத்த பாரதவர்ஷத்தையே பங்கிடுவதாகவே மாறிவிடுகிறது.
மொத்தத்தில் இரண்டே தரப்புகள்தான். ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தரப்பைத் தேர்ந்தெடுப்பதால் அல்லது தேர்ந்தெடுக்க வலியுறுத்தப்படுவதால் ஒட்டுமொத்த பாரதவர்ஷமுமே அவர்களின் மனத்தளவில் இரண்டு தரப்பாகிவிடுகிறது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் மனத்தளவில் ஒற்றுமை ஏற்பட்டதாகத் தெரிந்தாலும் மானுட மனத்தின் ஒட்டுமொத்த வரைபடத்தில் அஸ்தினபுரியும் அதனை மையப்படுத்திய பாரதவர்ஷமும் இரண்டு தரப்பாகவே வேறுபட்டுவிடுகின்றன.
விழைவுகள் இல்லாத மனிதர்களே இல்லை. அவர்கள் கொள்ளும் பெருவிழைவுகளே அவர்களை நிலையிழக்கச் செய்கின்றன. நீர் ஆவியாகி வான்னோக்கிச் சென்று, மேகமாவதைப் போலவே மண்ணில் வாழும் மனிதர்களின் பெருவிழைவுகள் அனைத்தும் ஆழ்மன எண்ணங்களில் கரைந்து, மறைந்து, வான் சென்று மென்மேகமாகின்றன. அவற்றின் தொகுப்புத்தான் ‘வெண்முகில் நகரம்’.
மானுடப் பெருவிழைவுகளின் கூட்டங்கள் இணைந்து இணைந்து பெருந்திரளாகின்றன. அவை தனித்தும் இணைந்தும் பிரிந்தும் அந்தப் பெருந்திரளின் ஒரு பகுதியாகிவிடுகின்றன. பாண்டவர்களும் கௌரவர்களும் இரண்டு பெருந்திரளான முகில்கள். இரண்டு முகில்கள் தற்காலிகமாகவே இணையவும் பிரியவும் முடியும். முகில்களுக்குள் ஒருபோதும் நிரந்தரமான இணைவும் பிரிவும் இருப்பதே இல்லை. ‘வெண்முகில் நகரம்’ நாவல் உணர்த்துவதும் இதைத்தான். இறுதியில் நிலைப்பது ஊழின் ஆதிப் பெருவிழைவு மட்டுமே. அது தனிப்பெருந்திரள்முகில்.
– முனைவர் ப. சரவணன்– முனைவர் ப. சரவணன், மதுரை
– – –