புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…
அன்புள்ள ஜெயமோகன் ,
உங்கள் பதிலில் நீங்கள் கூறியது உண்மைதான். நான் என் ஆணவத்தை பாதுகாக்கும் முயற்சியிலேயே இருந்தேன். அது என் ஆணவம் என்று உணரவே எனக்கு இந்த கொரோனா காலமும் உங்கள் தன்மீட்சியும் தேவைப்பட்டது. என் சிக்கல்களும் தேடல்களும் எனக்கு மட்டுமே நிகழும் பெரும் துயரங்கள் என்றும், என்னைப்போல் அதை அனுபவிப்பவர்கள் இந்த உலகில் வேறு எவரும் இல்லை என்றும் நினைக்கும்வரை நான் ஒரு காவியநாயகன் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் தன்மீட்சியை படித்தபோதுதான் அவை அனைத்தும் நம் காலத்தின் பொதுச்சிக்கல்கள்தான் என்ற உணர்வு வந்தது. அதற்கு பிறகு நான் காவியநாயகனாக இருக்க நியாயமில்லை.
தேடல்கொண்ட இன்னொரு இளைஞனாக என்னை உணர்ந்த பிறகுதான் என்னை ஆளுமைகளின் சிந்தனைகள் பாதிக்கத் தொடங்கியது. அதற்கு பிறகுதான் இத்தனை வருடங்களாக உங்களை வாசித்திருந்தாலும் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதவும், உங்களை சந்திக்கவும் துணிவு வந்தது. ஒரு இலக்கிய வட்டத்தில் இணைந்து சகவாசகர்களின் பார்வைகளையும், மூத்த வாசகர்களின் பார்வைகளையும் கேட்கமுடிந்தது. அந்த ஆணவம் முழுவதுமாக தகர்ந்துவிட்டது என்றெல்லாம் நான் மிகைப்படுத்தவில்லை. ஆனால் அதில் இப்போது நல்ல விரிசல் விட்டிருக்கிறது. அந்த விரிசல்களை பெருக்கி, அதை உடைத்துதான் நான் என் ஆளுமையை செதுக்கியாக வேண்டும். உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தையும் துணைகொண்டுதான் நான் அதை செய்தாகவேண்டும். இதில் மேலும் பல ஆளுமைகளை நான் அடையாளம் கண்டுகொள்வேன் என்றால் அவர்களின் வழிகாட்டுதல்களையும் மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். அதற்கு நான் என்னை மேலும் திறக்கவேண்டும். அந்த முயற்சியை நிச்சயம் மேற்கொள்கிறேன்.
ஒரே ஒரு சந்தேகம் மட்டும்தான் Sir. இந்த தேடலில் நிஜ ஆளுமைகளையும் பொய்யான பாசாங்குகளையும் எப்படி பகுத்தறிவது? என்னை திறந்து அவர்கள் என்னை பாதிக்கவிட்டுவிட்டால், அந்த போலி பாசாங்குகளும் சேர்ந்துதானே என்னை வந்தடையும். அவை என்னை திசைதிருப்பவில்லை என்றாலும் என் தேடலில் என்னை சோர்வடையச் செய்துவிடாதா? அதில் இருந்து தற்காத்துக்கொள்ள வேறு வழிகள் உள்ளதா? கேள்விகளற்ற விசுவாசத்தை நாம் யாருக்கும் அவ்வளவு எளிதில் கொடுத்துவிடமாட்டோம். ஆனால் கேள்விகளற்ற விசுவாசம் அளவுக்கே தவறான கேள்விகளுக்கான விவாதங்களும் ஆபத்தானதுதானே?
இலக்கியக் குழுக்களைப் பற்றிய உங்கள் இரண்டாவது பதிலை முழுவதுமாக ஏற்றுக்கொள்கிறேன். அது என் ஆரம்பகால பயம். இப்போது எனக்கே அது ஒரு அர்த்தமற்ற தயக்கம் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் கூறியதுபோல் விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்களால் நேர்மையான சமரசமற்ற இலக்கியக் குழுக்களாக உருவாக்கப்பட்டு வரும் சுக்கிரி, நற்றுணை போன்ற குழுக்களில் இப்போது பங்குபெற்றுக் கொண்டிருக்கிறேன். அவற்றின் வழியே என் வாசிப்பிலும் படைப்பிலும் வளர்ச்சியும் தேர்ச்சியும் பெறுவேன் என்று நம்புகிறேன்.
அன்புடன்
விக்னேஷ் ஹரிஹரன்
அன்புள்ள விக்னேஷ் ஹரிஹரன்
ஒரு விஷயம் நாம் மறந்துவிடுகிறோம். கற்றல் என்ற அளவில் ஒன்றில் நுழைந்து, அதில் நிகழ்வதற்கு இணையானதுதான் அதிலிருந்து வெளியேறுவதும். ஒன்றிலிருந்து வெளியேறுவதனால் நாம் ‘தோற்று’ வெளியேறுவதில்லை. ‘கற்று’ வெளியேறுகிறோம். ஆகவே அது ஓரு வெற்றிதான்.
எங்கும் நம்மை வழிகாட்டிச் செல்வன இரண்டு. ஒன்று நம் அறிவுத்தன்மையும் நம் தேடலும். இன்னொன்று நம் உள்ளுணர்வும் நம் இயல்பும். நானும் பல சிந்தனைகளில், பல அமைப்புகளில் நுழைந்து வெளியேறியிருக்கிறேன். ஆகவே என் நுண்ணுணர்வும் அறிவும் கூர்மையாக மாறின. அவ்வனுபவங்கள் என் அறிதலாகவும் என் அனுபவச்செல்வங்களாகவும் மாறின.
நம் நுண்னுணர்வை நம்பி, நம் அறிவார்ந்த தேடலை நம்பி இயங்கவேண்டியதுதான். அவை நம்மை கைவிடுவதில்லை. நம்மை திசையழியச் செய்பவை, நம் பார்வையை மறைப்பவை நம்முடைய ஆணவமும் நம்முடைய தாழ்வுணர்வும்தான்
ஜெ