முழங்கும் ஒரு நாள்

26 அன்று காலைதான் சென்னையிலிருந்து நாகர்கோயில் வந்தேன். மேலும் பணி இருந்தாலும் லக்ஷ்மி மணிவண்ணனின் அப்பாவுக்கான விண்விளக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவருக்கு அது மிக அகவயமான ஒரு நிகழ்வு என உணர்ந்திருந்தேன்.

காலை வந்ததுமே சில கடிதங்களுக்குப் பதில் எழுதினேன். இரவில் ரயில்தூக்கம், மதுரைக்குப் பிறகு ஒரு பெருங்குடும்பம் ஏராளமான பெட்டிகளுடன் ஏறி இறங்கியது. லக்கேஜ் என என்னையும் ரகளைக்கு நடுவே இறக்கி கொண்டு சென்று விடுவார்களோ என்று அஞ்சி சரியாகத் தூங்கவில்லை. ஆனாலும் பகலில் தூங்கவில்லை.

மதியம் இரண்டு மணிக்கு கே.பி.வினோத் வந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். அஜிதனும் ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் அன்றுகாலை வந்தனர். அவர்களுடன் சேர்ந்து தெங்கம்புதூரில் இருக்கும் தாணுமாலைய சாமி ஆலயம் சென்றோம். அங்குதான் மணிவண்ணனின் தந்தைக்கான விண்விளக்குச் சடங்கு.

தெங்கம்புதூர் தாணுமாலைய சாமி ஆலயம் பழையது, சோழர் காலத்தையதாக இருக்க வாய்ப்பு. இப்படி குமரிமாவட்டத்தில் இன்னொரு தாணுமாலையன் ஆலயம் இருப்பது இப்போதுதான் தெரிகிறது. கோயில்களை நன்கறிந்த அனீஷ்கிருஷ்ணன் நாயருக்குக் கூடத் தெரியவில்லை. தெங்கம்புதூர் ஜங்ஷனிலேயே பலருக்கு தெரியவில்லை.

அழகான கோயில். 96க்குப்பின் சீரமைக்கப்படவில்லை. ஆகவே அழகான குளம் கெடுநீர் நிறைந்து கிடக்கிறது. அச்சூழலே இனிதாக இருந்தது. பிரதோஷமானதனால் நல்ல கூட்டம். கோயிலின் அமைப்பே வேறுபட்டது. இரண்டு இணையான நுழைவாயில்கள், இரண்டு இணையான கருவறைகள். ஒன்றில் பெரிய பிள்ளையார் பதிட்டை செய்யப்பட்டிருந்தார். இன்னொன்றில் சிவன். உள்ளே பக்கவாட்டில் முருகன் சன்னிதி.

சிவன் முருகன் பிள்ளையார் மூவரும் மூன்று கருவறைகளில் தனித்தெய்வங்களாக இருக்கும்  இன்னொரு ஆலயம் குமரிமாவட்டத்தில் உண்டா? இது சோழர்காலத்தின் எந்த முறையைச் சேர்ந்த ஆலயம்? அ.கா.பெருமாளைச் சந்திக்கையில் கேட்கவேண்டும்.

கோயிலில் இருக்கும்போது அனீஷ்கிருஷ்ணன் நாயர் அழைத்து திருவட்டார் கோயிலில் அன்று துரியோதனவதம் கதகளி இருக்கிறது போகலாமா என்று கேட்டார். உடனே முடிவுசெய்தேன். தூக்கக் கலக்கம் இருந்தது. இன்னொரு முழு இரவும் விழித்திருக்க முடியுமா என்ற சந்தேகம் வந்தது.

ஆனால் இத்தகைய சந்தர்ப்பங்களில் கொஞ்சம் தயங்கினாலும் நாம் வேண்டாம் என்ற முடிவையே எடுப்போம். அந்த தயக்கம் வயதாக ஆக கூடிக்கொண்டே வரும். ஆகவே நானெல்லாம் அந்த தயக்கம் வருகிறதா என்ற சந்தேகத்தாலேயே உடனே சரி என முடிவெடுத்துவிடுவேன்.

நான், போகன் சங்கர், அனீஷ்கிருஷ்ணன், போகனின் நண்பர் ஆகியோர் இரவு பத்து மணிக்குக் கிளம்பி 11 மணிக்கு திருவட்டாறு சென்றோம். இது கோடைகால ஆறாட்டுவிழா. முறைமைப்படி 10 நாட்கள் கதகளி இருக்கவேண்டும். ஆறாட்டு அன்று வழக்கமாக கிராதவிருத்தம் என்னும் கதகளி. ஒரு காலத்தில் பத்துநாட்களும் கதகளி பார்த்து பகலெல்லாம் அங்கே எங்காவது கிடந்து தூங்கி வாழ்ந்திருக்கிறேன்.

இதழாளர் திருவட்டார் சிந்துகுமார் அங்கே இருந்தார். அவர் வரவேற்றார். அவருடன் அவர் வீட்டுக்குச் சென்று சுக்கு காபியும் பழங்களும் சாப்பிட்டோம். அவர் மனைவி மீனாம்பிகையும் அவ்வப்போது முகநூல்களில் எழுதுபவர். ஆசிரியையாக இருக்கிறார்.

துரியோதன வதம் கதகளி வயக்கரை ஆரியநாராயணன் மூஸது என்பவரால் 1870களில் எழுதப்பட்டது. மலையாள மொழியின் உருவாக்கக் காலகட்டம் அது. ஆகவே சம்ஸ்கிருதக் கலவைமிக்க மொழி. ஆனால் வர்ணனை அல்லாமல் உரையாடல்கள் வருமிடங்களில் மலையாளம் மிகுந்திருக்கும். கதகளி ஆட்டக்கதையை ஒரு ஷேக்ஸ்பியர் நாடகப்பிரதியுடன் ஒப்பிடலாம். பாட்டால் ஆன நாடகம்.

துரியோதன வதம் பற்றி மெல்லிய நினைவு இருந்தது. துரியோதனன் பானுமதியுடன் நந்தவனத்தில் பாடிக்கொண்டிருக்கிறான். இந்திரப்பிரஸ்தத்தில் மயன் அரண்மனை அமைக்கும் செய்தி வருகிறது. அங்கே சென்று சிறுமைப்படுகிறான். வஞ்சினம் உரைத்து மாமனின் துணைகோருகிறான். சூது நிகழ்கிறது. திரௌபதி துகிலுரியப்படுகிறாள். காடுசென்று மீண்ட பாண்டவர்கள் கிருஷ்ணனை தூதனுப்புகிறார்கள். கிருஷ்ணனை பிடித்துக் கட்ட துரியோதனன் முயல அவர் விஸ்வரூபம் காட்டுகிறார்.

போரில் துச்சாதனனை பீமன் நெஞ்சுபிளந்து கொன்று குருதியால் பாஞ்சாலியின் கூந்தலை முடிகிறான். துரியோதனனைக் கொல்கிறான். கொலைக்குப்பின் கடும்சீற்றமும், சகோதரனைக் கொன்ற ஆற்றாமையுமாக நிற்கும் ரௌத்ரபீமனை கிருஷ்ணன் ஆறுதல் சொல்லி தேற்றுமிடத்தில் கதகளி முடிகிறது. அதன்பின் கிருஷ்ணன் பார்வையாளர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

கொல்லம் ராமநாட்யம் கதகளி குழுவின் கதகளி. சற்றே சுருக்கப்பட்டிருந்தாலும், காட்சிகள் சில வேகமாக ஓடிச்சென்றாலும், ஐந்து மணிநேரத்தில் நாடகீயத்தன்மையுடன் கதகளி நடந்தது. [சாதாரணமாக எட்டு மணிநேரம் ஆகும்] வழக்கமான திரைநோட்டம், தோடயம், ரங்ககேளி என்னும் செண்டைத்தாளம் ஆகியவற்றுடன் ஒரு நல்ல கதகளி அனுபவம்.

ஆனால் நான் கதகளி பார்த்து நெடுநாட்களாகிறது. தொடர்பே விட்டுப்போன நிலை. நடுவே திருவனந்தபுரம் சென்று ஒருமுறை நளசரிதம் பார்த்ததுடன் சரி. ஆகவே சென்று அமர்ந்தபோது பொதுவாகவே ஒரு குழப்பம். கதைக்குள் நுழைவதற்கு தடுமாற்றம். முன்பு பார்த்த கதகளியின் அரைகுறை நினைவுகளின் சிக்கல்.

தொடக்கத்திலுள்ள பார்வண சசிவதனே ஒரு காலத்தில் எனக்கு பிடித்தமான பாடல். [முழுநிலவு முகத்தாளே] துரியோதனன் பானுமதியிடம் பாடுவது. அது இல்லை. ஆனால் பெரும்பாலான துரியோதனவதம் கதகளியில் இப்போது இருப்பதில்லை, ஏனென்றால் பானுமதி அதற்குப்பிறகு வரும் கதாபாத்திரம் அல்ல என்று பிறகு அறிந்துகொண்டேன்.

செவ்வியல்கலைகளை பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். அவ்வுலகிலேயே மூழ்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு சிறு தொனிமாறுபாடுகளையும் உணரும்படி அதில் வாழவேண்டும். நான் இழந்திருப்பதென்ன என்றும் கண்டுகொண்டேன்.

[துரியோதனவதம் கதகளி முழுமையாக. இணையத்தில் இருந்து]

கொஞ்சம் கொஞ்சமாக கதகளிக்குள் செல்ல முடிந்தது. முடியும்போது முழுமையாகவே ஆட்கொண்டிருந்தது. நளசரிதம் போன்ற கதகளிகள் மென்மையானவை, இனிமையானவை, காதலையும் கனிவையும் முன்வைப்பவை. துரியோதனவதம், நரகாசுர வதம் போன்றவை மூர்க்கமானவை, நாடகத்தன்மை மிக்கவை.

கதகளியின் இரண்டு மைய உணர்ச்சிகள் சிருங்காரமும் ரௌத்ரமும்தான். பீபத்சம் [அருவருப்பு] ரௌத்ரத்துடன் இணைந்து வெளிப்படும். இந்நாடகம் ரௌத்ரத்தன்மை மிக்கது. ஆனால் மகத்தான கதகளிகள் சிருங்கராச் சுவை கொண்டவை. துரியோதன வதத்தில் தொடக்கம் மட்டுமே மெல்லிய சிருங்காரம் கொண்டது. அதன்பின் முழுக்க சவால்கள், பூசல்கள், போர்கள்.

இதன் நாடகீயத்தன்மையை ஊராரும் அறிவார்கள் போல. நல்ல கூட்டம். படிகளில் எல்லாம் ஆட்கள் இருந்தனர். கதகளிக்கு ஐம்பதுபேரே திரள். இங்கே இருநூறு பேர் இருந்தனர். கதகளிக்காரர்களுக்கு கூட்டம் பிரச்சினையே இல்லை. ரசிகர்களுக்காக அவர்கள் ஆடுவதுமில்லை. ஆட்டம் முழுக்க முழுக்க அவர்களுக்கு நடுவே நிகழ்வதுதான்.

பாஞ்சாலி துகிலுரிதலும் துச்சாதனன் நெஞ்சுபிளத்தலும் உக்கிரமாக இருந்தன. வழக்கமாக திரௌபதியை அரசகுணங்கள் கொண்டவளாக காட்டுவார்கள். பீமன் துச்சாதனனின் குருதியுடன் குழல்முடிய வரும்போது திரௌபதி அருவருப்பும் விலக்கமும் அடைவாள். பீமன் கட்டாயப்படுத்தி குருதிநீவி குழல்முடிந்துவிடுவான். இந்த கதகளி நாடகத்திலும் திரௌபதி கொஞ்சம் அஞ்சி, கொஞ்சம் தயங்கி, மெல்லமெல்ல பீமனின் போர்க்களியாட்டில் கலந்து தானும் ஆடுகிறாள்.

ஆனால் அஜிதன் முன்பு கோட்டக்கல்லில் பார்த்த ஒரு கதகளியில் பீமனைவிட பெரும் களியாட்டுடன், வெறியுடன் குருதி கண்டு கொந்தளித்து ஒரு பேய்த்தெய்வம் போலவே மாறிவிட்ட திரௌபதியை அந்நடிகர் நடித்துக் காட்டினார் என்றான். அது அந்தந்த நடிகர்கள் அங்கே அப்போது உருவாக்கும் உணர்வு மாறுபாடு. அவர்களின் அக்கணக் கற்பனை. கதகளியின் கலையே அதில்தான்.

ஒருவகையில் மிகக்கொடிய காட்சிகள். ஆனால் செவ்வியல் இசையாகவும் நடனமாகவும் உருமாற்றம் அடையும்போது பிறிதொன்றாக ஆகிவிடுகின்றன. கலையின் ஒரு பாவனையாக.

தமிழகத்தில் தெருக்கூத்து ஒரு நாட்டார்கலை. நாட்டார்கலைக்குரிய பண்படா வேகமும் வீச்சும் கொண்டது. கதகளி முழுக்கமுழுக்க செவ்வியல் கலை. ஆனால் நாட்டார்கலையின் பல அம்சங்களை உள்வாங்கிக் கொண்டது. சம்ஸ்கிருத நாடகம், பரதமுனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றுடன் தொன்மையான கேரள [தொல்தமிழ்] ஆட்டக்கலை, ஒப்பனைக்கலை, பண்ணிசை ஆகியவற்றின் கலவை.

இருநூறாண்டுகளுக்கும் மேலாக மேதைகளால் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு மேம்படுத்தப்பட்டது கதகளி. அரசர்களின் ஆதரவால் செழித்தது.  சென்ற நூறாண்டுகளாக வலுவான அமைப்புப்பின்புலமும் அரசாங்க ஆதரவும் கொண்டு வளர்வது. இத்தகைய பின்புல ஆதரவு செவ்வியல் கலைக்கு மிக இன்றியமையாதது. தமிழகத்தில் கர்நாடக சங்கீதத்திற்கும் பரதநாட்டியத்திற்கும் மட்டுமே இப்படி ஓர் ஆதரவுப்புலம் உள்ளது.

கதகளி அறிஞர்களுக்கான கலை. கதை தெரிந்திருக்கவேண்டும். அத்துடன் கதகளி நடிகர் குறிப்பாலுணர்த்தும் புராணநுட்பங்களும் தெரிந்திருக்கவேண்டும். உதாரணமாக கிருஷ்ணனிடம் துரியோதனன் இழைத்த கொடுமைகளைச் சொல்லி  முறையிடுகையில் பாஞ்சாலி கிருஷ்ணன் காளியனை வதம்செய்ததை, புள்வாய் கீண்டதை கைகளால் நடித்து காட்டுகிறாள். அந்நடிப்பை அறிய ஓரளவு கைமுத்திரைகள் தெரிந்திருக்கவேண்டும். அதோடு அந்த கதகளி நாடகமும் தெரிந்திருக்கவேண்டும்.

ஆனால் எந்த அளவுக்கு தெரிந்தாலும் அந்த அளவுக்கு ரசிக்கமுடியுமென்பதே செவ்வியல்கலைகளின் இயல்பு. கதகளி இன்றும் குழந்தைகளுக்கு விருப்பமான கலையாக நீடிப்பதனால்தான் அது நிலைகொள்கிறது.

கதகளியை அறிமுகம் செய்துகொள்ள விரும்பும் நண்பர்கள் பலர் நம் வட்டத்தில் உண்டு. சிலர் துணிந்து கேரளம் சென்று மலையாளம் கற்று கதகளி ரசனையில் தேர்ச்சியே பெற்றிருக்கிறார்கள். உதாரணம் அழகிய மணவாளன். கேரளத்தில் பல கதகளி நிகழ்வுகளில் விஷ்ணுபுரம் வட்டத்தின் ஒருவராவது இருப்பார்கள். என்ன ஆச்சரியமென்றால் பல கதகளி நடிகர்களுக்கே இது தெரியும்.

பிறருக்கு கதகளி அறிமுகம் ஆகும் பொருட்டு ஒரு நல்ல கதகளி குழுவை அழைத்து இரண்டுநாள் கதகளி நிகழ்வு ஒன்றை கோவையில் ஒருங்கமைக்க ஒருமுறை திட்டமிட்டோம். மொத்த ஆட்டக்கதையையும் தமிழாக்கம் செய்து, உரிய உட்குறிப்புகளுடன் முன்னரே நூல்வடிவிலோ மின்வடிவிலோ பங்கேற்பாளர்களுக்கு அளித்துவிடவேண்டும். ஓர் எளிய அறிமுகமும் செய்யவேண்டும். அதன்பின் கதகளி நிகழ்வு.

ஆனால் ஒரு நல்ல கதகளி நிகழ்வுக்கு இரண்டு லட்சம் வரை ஊதியம் தேவை. அரங்கு மற்ற செலவுகள் என்றால் ஐந்தாறு லட்சம் ஆகிவிடும். அப்படியே ஜகா வாங்கிவிட்டோம். நண்பர்கள் இப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். என்றாவது முயலலாம்.

கதகளி கண்டு திரும்பும் அனுபவம் என்பது இரவெல்லாம் ஒலித்த செண்டைமேளம் பகலிலும் தொடர்வது. தூக்கத்திலும் எங்கோ ஒலிப்பது அந்த முழக்கம். நமக்குள் இருந்தே. கேளி அந்த அனுபவத்தைச் சொல்லும் கதை.

இன்று அந்த முழக்கத்தில் இருக்கிறேன்.

ஆட்டக்கதை [சிறுகதை]
கேளி [சிறுகதை]

 

கலைக்கணம்
நிகரற்ற மலர்த்தோட்டம்
அழியா வண்ணங்கள்
கர்ணா தயாளு…
சென்னித்தல செல்லப்பன் நாயர்
கலையில் மடிதல்
வணங்குதல்
செவ்வியல்கலையும் நவீனக்கலையும்

 

முந்தைய கட்டுரை’ஆமென்பது’- அறிவும் உணர்வும் – கடிதம்
அடுத்த கட்டுரைதன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்…