“நம்செயல்பாடுகள் நேர்நிலை இலட்சியங்கள் கொண்டதாகவே இருக்கவேண்டும். அது கடினமானது, ஆனால் இலக்கு அதுவே. எச்செயல்பாடும் மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். சிரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் உரியதாகவே சேவைகளும் இருக்கவேண்டும். நாம் செய்தவற்றால் வெளியே என்ன நிகழ்ந்தது என்பது நம் கேள்வி அல்ல, நாம் என்னவானோம் என்பதே முக்கியம். நாம் நமக்குரிய வாழ்க்கையை தேர்ந்துகொண்டோம் என்றால் நம் தன்னறத்தை ஆற்றினோம் என்றால் நம் வாழ்க்கையை அர்த்தபூர்வமாக, மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கிறோம். அதுவே நம்மளவில் போதுமானது.”
நீங்களெழுதிய தன்மீட்சி வார்த்தைகளை சொல்லிக்கொண்டு, இக்கடித்ததை துவங்குவதற்கு ஒரு காரணமிருக்கிறது.
ஆரம்பந்தொட்டே தொடர்ந்து உங்களது எழுத்துக்களை வாசிக்கக் கூடியவர்களாக நாங்களிருந்தோம். அதுமட்டுமின்றி, நாங்கள் எல்லோரும் வெவ்வேறு துறைசார்ந்த பணிகளில் இயங்கிக் கொண்டிருந்ததால், உங்களது படைப்புகளை வாசிக்கையில் அது எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு விதமான உள்ளுணர்தலைத் தோற்றுவித்தது. அவரவர் அர்த்தத்தில் அவைகளை உள்வாங்குகையில், உங்களுடைய சொற்கள் தொடர்ந்து தன்னாழத்தை விஸ்தரித்தபடியே நீண்டது.
ஆகவே, ஒருமித்த எண்ணமுடைய நண்பர்கள் ஒன்றுகூடி, எங்களின் செயலியக்கத்தில் உங்களுடைய எழுத்தின் அனுபவப் பங்களிப்பு குறித்தும், அதுவுண்டாக்கும் அகமலர்வு குறித்தும் உங்கள் முன்னிலையில் உரையாட விழைந்தோம். அந்த விருப்பத்தின் நிறைவேற்றம்தான், திருப்பரங்குன்றம் சமணர்மலை அடிவாரத்தில் நிகழ்ந்த சந்திப்பு நிகழ்வு. இன்றெண்ணிப் பார்க்கையில் பெரும் செயல்விசைக்கான உளவேகத்தை நாங்களடைந்த ஒரு திருப்புமுனை தினமென்றே நண்பர்கள் எல்லோரும் அதை எங்களுக்குள் மனப்படுத்தியுள்ளோம்.
அந்நிகழ்வு குறித்து உங்கள் தளத்தில் நீங்கள் எழுதிய ‘தன்மீட்சி’ என்னும் கட்டுரை என்றென்றைக்குமான நன்றிப்பெருக்கை எங்களுள் விதைத்தது. அதைத்தொடர்ந்து நாங்கள் எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெரும் பரிவோடு நீங்கள் அனுப்பிய பதில்கள் இச்சமகாலத்தில் எங்களை சமநிலைகுலையாமல் செயல்படவைத்தது. அத்தகையதொரு நற்கணத்தின் நீட்சியில்தான், நீங்கள் வாசகமனதின் தத்தளிப்பு மற்றும் தத்துவக்குழப்பம் புரிந்து எழுதிய நம்பிக்கைக் கட்டுரைகளை ”தன்மீட்சி’ என்னும் தலைப்பில், தன்னறம் நூல்வெளி வாயிலாக தொகுக்கும் எண்ணத்தை ஸ்டாலின் பாலுச்சாமி முன்வைத்தார். இறையாசியால் அது கைகூடியது.
தன்மீட்சி நூல் வெளியாகி ஓராண்டு காலத்திற்குப் பிறகு, அந்நூலை விலையில்லாப் பிரதிகளாக அனுப்பிவைக்கும் தீராவிருப்பம் எங்களுக்குள் பிறக்கவே, அதன்படியே அவ்விருப்பத்தை செயல்படுத்தினோம். உண்மையில், தன்மீட்சியின் உயரெழுகை என்ன என்பதை அப்போதுதான் உணரமுடிந்தது. வெவ்வேறு மட்டங்களிலுள்ள நண்பர்களிடமிருந்து எங்களை வந்தடைந்த கடிதங்களும், தொலைபேசி அழைப்புகளும் இந்நூல் அவர்களுக்குள் உருவாக்கிய திசைவெளிச்சத்தை சாட்சிப்படுத்தின.
ஆகவே, தன்மீட்சி நூல்குறித்த செயலசைவுகளை அறுபடாத ஒரு அனுபவநீட்சியாக ஆக்க விரும்புகிறோம். இனிவரும் ஒவ்வோராண்டும் ‘தன்மீட்சி உரையாடல்கள்’ நிகழ்த்தவும் திட்டமிட்டு வருகிறோம். எனவே, தன்மீட்சி நூல் குறித்தும், அந்நூலில் உள்ள கட்டுரைகள் குறித்துமான நேர்மறையான அக-அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்பிவைக்கும் கோரிக்கையினை வாசக மனங்கள் எல்லோரிடமும் இக்கடிதத்தின் வாயிலாக முன்வைக்கிறோம்.
இதன்படி, தன்னறத்தை வந்தடையும் சிறந்த ‘தன்மீட்சி-அனுபவப்பகிர்வு’ எழுத்தாக்கங்களுக்கும் கடிதங்களுக்கும், வருகிற ஏப்ரல் மாதம் நிகழவுள்ள தன்னறம் நிகழ்வுதனில் உங்கள் முன்னிலையில் உரிய கெளரவிப்பும் நினைவுப்பரிசும் தரவிருக்கிறோம். பக்களவு எல்லைகளோ, எவ்வித நிர்ணயிப்புகளோ இதற்குக் கிடையாது. தன்மீட்சி என்னும் புத்தகம் அவரவர் அகத்தில் உருவாக்கிய அனுபவங்களின் எளிய எழுத்துப்பதிவு என்கிற வகையில், இதன் உள்ளார்ந்த நேர்மறைத்தன்மை ஒன்றுதான் எங்களின் ஒரே வேண்டல்.
எவ்வகையிலும் இந்த முன்னெடுப்பு அடையாளம் சார்ந்ததல்ல. எழுத்தாளர் ஜெயமோகன் என்னும் சமகாலப் படைப்பாளுமை மனிதரை, அவரின் அகத்திற்கு அணுக்கமான ஒரு தோழமைப்புரிதலோடு அவரை கண்டடைவதற்கான சிறுமுயற்சி. தன்னகங்காரம் அல்லாத தன்னெழுகையை நாங்கள் மீளமீள உங்கள் தத்துவப் பேராழத்தின் நீரசைவில் நிழலுணர்கிறோம். தன்மீட்சி எனும் நூல்கொண்டு அதை துலங்கச்செய்தலே இம்முன்னெடுப்பின் ஒற்றைநோக்கம்.
தன்மீட்சி புத்தகம் குறித்த அகமன அனுபவக் கட்டுரைகளை வருகிற ஏப்ரல் 8ம் தேதிக்குள், [email protected] என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டுகிறோம். ஏப்ரல் மாத நிகழ்வுகுறித்த முழுமையான தகவல்களை விரைவில் எல்லோருக்கும் அறிவிக்கிறோம்.
கரங்குவிந்த நன்றிகளுடன்,
தன்னறம் நூல்வெளி
குக்கூ காட்டுப்பள்ளி